Wednesday, April 12, 2006

குமுறல்

பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்

வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்

வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை

பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்

அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்

எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை

மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக

Monday, April 10, 2006

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்து
மனதில் பாரத்துடன்
அரை வயிற்றுடன்
கண்களில் மகிழ்ச்சியுடன்
தலையில் கற்களை சுமக்கும்
சித்தாளை கண்ட போது
வெட்கப்பட்டேன் எனக்குள்,
அலுவலகத்தில் வேலை பளு எனக்கு
என்று சொல்லிக் கொள்ள.

மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

Sunday, April 09, 2006

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போது
கிடைத்த சங்கை காதில் வைத்தால்
ஓ என்று எழும் சத்தம்
ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்
என்று அறியாது இருந்து விட்டோம்.

வான நிறத்தை எடுத்துக் கொண்டு
நீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்
கொடிய எண்ணத்தை கொண்டதனால்
அது உனக்கு கிடைத்த நிறம்
என்று அறியாது இருந்து விட்டோம்

உன்னிடம் உள்ள கடலினங்களை
நாங்கள் கொன்று தின்றோமென்றால்
உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்
அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

உணர்வுகள் நாங்கள் அறிய
உப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்
நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்
நீ உப்பாக கரிக்கின்றாய்
என்று அறியாது இருந்து விட்டோம்

தாய் மடியாக நினைத்து உன்னுடன்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை நீ

வங்கியாக நினைத்து உன்னிடம்
வாழவை என்று கையேந்தி நின்றவர்களையும்
விட்டுவைக்கவில்லை நீ

மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு
உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு
உடலை ஓரம்கட்டும் வித்தையை
எங்கே கற்றுக் கொண்டாயோ?

ஆழி பேய்க்கடலாய்
ஆட்களை அழித்துவிட்டாய்
பலி தீர்க்கும் பாவத்தை
இனியாவது செய்யாமல் இருப்பாயோ?

http://www.thisaigal.com/jan05/poem_jazeelabanu.html

Saturday, April 08, 2006

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைப்பது - கூண்டு கிளியா?
முடியை மறைப்பது - அநாகரீகமா?
காட்ட மறுப்பது - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

Sunday, April 02, 2006

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறி
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை

கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை

காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை

பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை

பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை

உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி