Saturday, January 23, 2021

தீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து செல்ல இயலவில்லை. “படத்தைப் படமாகப் பாரும்மா” எ ன்று அறிவுரை சொல்பவர்கள் வரிசையாக வந்து தலையில் குட்டோ, என்னிடம் திட்டோதான் வாங்குவீர்கள். ஏனென்றால் இது படமல்ல பல பெண்களின் உண்மையான வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையைப் படமாகப் பார்க்கவும் என் போன்றவர்களுக்குப் பொறுமையுமில்லை, மனதில் தெம்புமில்லை. அப்படி என்ன படம் என்றால் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தைப் பார்க்க சொல்லி நண்பர் பரிந்துரைத்தபோது என்ன கதை, யார் நடித்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். 


40 நிமிடம் முடிந்த பிறகும் ஒரே விதமான காட்சிகள் அலுப்பைத் தந்தாலும்  பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை அவ்வளவு எளிதில் செரிமானமாவதில்லை. 

ஒரு பெண்ணை -  இல்லை வேண்டாம் மனைவியை - அடித்துத் துன்புறுத்துவது, குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, கேட்கக் கூசும் வார்த்தைகளால் வசைபாடுவது, அவள் அனுமதியில்லாமல் தொடுவது அல்லது அவளின் உடல்நிலை, மனநிலை தெரியாமல் நெருங்குவது மட்டுமல்ல பெண்ணுக்கெதிரான வன்கொடுமை. அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவளின் அடிப்படை தேவைகளுக்குச் செவிமடுக்காமல், நியாயமான விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவளுக்கான வன்கொடுமைதானென்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் அல்லது ஆண்களால் புரிந்து கொள்ள முடியும்?

தொப்புள்கொடி உறவைத் துண்டித்து மருமகளாக உருமாறும் மருமகளை, மகளாக வேண்டாம் மனுஷியாகவாவது நடத்துகிறார்களா? இல்லை. அவளை மட்டுமல்ல அந்த வீட்டுப் பெண் அதாவது புதுமணப்பெண்ணின் கணவரின் தாயாருக்கும் அந்த வீட்டில் அதே நிலைதான். 

காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழல்கிறார். உணவருந்த வீற்றிருக்கும் ஆண்மகன்களுக்குச் சுடச்சுட தோசை வார்க்கும் பெண்கள் கடைசியில் உண்பதென்னவோ மீந்து விட்ட, காய்ந்த, கரிந்த தோசைதான் என்று உணரும் ஆண்கள் எத்தனை பேர்?

 ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தோசையோ சமையலோ அல்லது வீட்டு வேலையோ இங்குப் பிரச்சனையில்லை. மாறாக மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் அதிர்வுகளைக் கேட்பாரில்லை. பெற்ற தாயும் ‘நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாய், இதெல்லாம் பிரச்சனையா?’ என்றுதான் கேட்கிறார். பெண் பார்க்க வரும் போது ஆடத் தெரியும் பாடத்தெரியும் என்றால் புளங்காகிதம் அடையும் குடும்பத்தவர்கள், நடன ஆசிரியராகப் பள்ளிக்குச் செல்ல அவள் விரும்பும்போது, 'அதெல்லாம் நம் குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது' என்றும், உன் மாமியார் முதுகலைப் பட்டதாரி அவளை வேலைக்குச் செல்ல வேண்டாமென்று என் தகப்பனார் சொன்னவுடன் நான் கட்டுப்பட்டேன், இன்று அவள் நல்ல மக்களை வளர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சொல்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் மக்கள் சீரழிந்து போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியும் தானே?

குழந்தைகளைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும்தான் மனைவி தேவைப்படுகிறாளென்றால், அதற்குரிய படிப்பை மட்டும் பெண்களுக்குக் கற்பிக்கலாமே?! படித்த பெண்கள் மனைவியாக வேண்டுமென்று விரும்புபவர்கள் தன் குழந்தையை வளர்ப்பதற்காகவா? உங்கள் மகள்களுக்கும் இதற்காகத்தான் ஓர் ஆண் கல்வியைத் தருகிறானா? எப்போது இவர்கள் யோசிக்கப் போகிறார்கள்?

வீட்டிற்கு வரும் விருந்தாளி தேநீரை குறை சொல்லி, நானும் சமைக்கிறேன் பேர்வழியென்று சமையலறையை ஒரு வழி செய்துவிட்டு, அவள் அடுப்படியில் வேலை இருக்கிறது என்று சொல்லும்போது, "அதைத்தான் நான் முடித்துவிட்டேனே இன்னுமென்ன அங்கு மிச்சமிருக்கிறது?" என்று ஏளனமாகச் சிரிக்கும்போது, அந்த மொட்டைத் தலையில் ஆணியடிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

 ’சட்டினியை அம்மியில் அரைக்காமல் மிக்ஸியில் அரைத்தாயா? சரி பரவாயில்லை’ என்று சலுகையைப் போல் சொல்லும் மாமனார், ஆனால் சாப்பாட்டை விறகடுப்பில் வைத்துச் சமைத்தால்தான் சுகமென்றும், துணிகளைக் கைகளில் துவைத்தால்தான் அணிவேனென்றும் புன்முறுவலோடு அன்பொழுகப் பேசுவதும் நமக்குக் கோபத்தை வரவழைத்தாலும், காலையில் எழுந்தவுடன் கையில் 'பிரஸை பேஸ்டோடு' கொண்டு தருவதிலிருந்து, வெளியில் கிளம்பும்போது செருப்பை எடுத்து மாட்டிவிடுவது வரை அவர் மனைவி அவருக்குச் செய்து பழக்கியதாலேயே அந்தக் கலாச்சாரம் அப்படியே தொடர்கிறது. இதெற்கெல்லாம் முழுக்கக் காரணம் வேறு யாருமில்லை -  பெண்களேதான்.

மகனை வளர்க்கும்போது அடுப்படி பெண்ணுக்குரியது, வீட்டு வேலை பெண்ணுக்குரியது என்று காட்சிகளாகப் பதியவைத்து வளர்க்கிறாள். தண்ணீர் வேண்டுமென்றாலும் அவனுக்குக் கையில் கொண்டு தருகிறாளே தவிர ‘உன் தேவைகளை நீயே செய்ய வேண்டுமென்று’ வலியுறுத்துவதில்லை. ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டுமென்ற எழுதாத சட்டம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெண்களின் உள்ளாடையை மறைத்தே காய வைக்க வேண்டுமென்றும் அதை மற்ற ஆண்கள் பார்ப்பதே அசிங்மென்றும் சொல்லியே வளர்க்கப்படும் சமுதாயத்தில், ஏன் ஆண்கள் உள்ளாடையைப் போல்தான் பெண்களுக்கும் என்று புரியவைக்கவோ வாதிடவோ யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் எழுதப்படாத சட்டம், இதுதான் காலம் போற்றும் கலாச்சாரம், பதிய வைத்த பண்பாடு. புல்ஷிட்!!

இந்தப் படம் வெறும் சமையலறைக் கலவரத்தையும் ஆணாதிக்கத்தைப் பற்றியும் மட்டும் பறைசாற்றவில்லை. ஒருபடி மேலே சென்று, அரசியலையும் தொட்டுச் செல்கிறது,  சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தை உலுக்கிய மதப் பிரச்சனையைப் பேசுகிறது. ஆணாதிக்கத்தால் விளைந்த சபரிமலை பிரச்சினையையும் விவரிக்கிறது.

இந்தப் படத்தில் சில மசாலா தூவிய காட்சிகள்:

* விருந்துக்குச் சென்ற இடத்தில் ஒருவர் புதுமணப் பெண்ணிடம் ‘மாட்டுக் கறி சாப்பிடுவாயா?’ என்று கேட்பார்.  "வீட்டிலேயே மாட்டுக் கறி சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றதும், ‘இல்லை, வீட்டுக்கு வெளியில் சமைக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே வீட்டில் அதைப் பரிமாறும் காட்சி.

* “மாதவிடாய் என்பதால் உங்களைச் சமையலறையில் அனுமதிப்பதில்லை, ஆனால் எனக்கு மாதவிடாய் இருந்தாலும் நான் மற்றவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறேன். அவர்களுக்குத் தெரியவா போகிறது? தினமும் வேலைக்குச் சென்றால்தான் என் பொழப்போடும்” என்று வீட்டு வேலை செய்பவர் சொல்லும் காட்சி.

* “கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தம்பி கேட்டதும், “ ஏன் நீயே போய் எடுத்துக் குடிக்க முடியாதா? ” என்று தன் வீட்டுச் சாப்பாடு மேசையிலிருக்கும் கோப்பையைத் தட்டி விட்டு , தன் தம்பியிடம் ஆவேசமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி.

இப்படிப் பல காட்சிகள் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். மற்றொரு காட்சியில், கணவரின் சபரிமலை நோன்பின் நடுவில் மாதவிடாயுடன் இருக்கும் மனைவி தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். அந்த ப் பாவத்தை எப்படித் தொலைப்பது என்று குருவிடம் கேட்கும்போது அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டி, மாதவிடாயுள்ள ஒரு பெண்ணைத் தொட்ட பாவத்தை அல்லது தீட்டை விலக்கி தூய்மையாக்குவதற்கான பரிகாரமாக மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது அல்லது மாட்டின் சிறுநீரைக் குடிப்பது என்று பரிகாரம் சொல்கிறார் . அப்படியானால் பெண்ணின் மாதவிடாயைவிட, அவளுடைய உதிரத்தைவிட, அவள் தாய்மைக்கான மாதவிடாய் சுழற்சியைவிட மாட்டு மலமும் சிறுநீரும் தூய்மையானதா?

அரசியல், மதம், ஆணாதிக்கமென்று பலவற்றைப் பேசுவதால்தானோ என்னவோ இந்தப்படத்தை நெட்பிலிக்ஸுக்கு அனுப்பினால் பதிலே வரவில்லையாம், அமேஸான் பிரைமும் இந்தப் படம் அவர்களின் அளவுகோல்களுக்குப் பொருந்தாது என்று பதில் தந்ததாம், கடைசியில் நீஸ்ட்ரீம் ஏற்றுகொண்டதால் படம் வெளிவந்திருக்கிறது.

பெண்ணைப் பற்றிப் படமெடுத்தாலும் அதைப் பற்றிப் பேசினாலும் பலருக்குப் பிரச்சனையாகிவிடுகிறது என்பதில் வியப்பில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால், சாப்பாடு மேசையின் ஒழுங்கின்மை, வேலைக்குப் போக அனுமதிக்காதது, உடலுறவின் போது கணவன் சொல்லும் சுடு சொல், முகநூலில் தோழியின் பதிவைப் பகிர்ந்ததை நீக்கச் சொல்வது என்று எல்லாமும் சிறிய விஷயங்களாகதான் தெரியும். இப்படியான ஏற்ற இறக்கங்களோடு கூடியதுதான் வாழ்க்கை என்றும் தோன்றும்.

பெண்ணுக்குச் சமையல் வேலையும், வீட்டு வேலையும்தானே பொழுதுபோக்கு என்றும் கூடத் தோன்றும். 

வயதான பிறகு ஆணுக்கான அலுவல் ஓய்வு காலத்திலும், அவர் செய்தித்தாள் வசதியாக உட்கார்ந்து வாசிக்க, அவர் மனைவியான மூதாட்டி தேநீரோடு வந்து நிற்பாள். ஆண்மகன் தினமும் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்துவிட்டு அவருடைய வழக்கமான வாழ்க்கைமுறையைத் திருமணத்திற்குப் பின்பும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர முடியும். ஆனால் பெண்ணுக்கு? 

அலுவலக வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணுக்கு எல்லாத் தேவைகளையும் வீட்டில் இருப்பவர் செய்து தருகிறார். பெண் அலுவலகத்திற்குச் சென்றாலும் வீட்டுக்கும் வந்து அவள் வேலை தொடர்கிறது. ஆணுக்கு வாரத்திற்கு இரு தினமோ ஒருநாளோ விடுமுறை, பெண்ணுக்கு? இதில் என்னைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம், விதிவிலக்கெல்லாம் விதியாகிவிடுவதில்லையே?! நான் சொகுசாக இருக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் பழங்காலத்து கதை 21-ஆம் நூற்றாண்டில் இதெல்லாம் நடப்பதில்லை என்று பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமென்பது போலப் பிதற்றும் கூட்டம் உள்ளது. 

இதற்காகதான் மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் வழங்குவதற்கான திட்டம் பற்றிப் பேசினார். அவர்தான் பல வருடங்களுக்கு முன்பே ‘வேல வேல ஆண்களுக்கும் வேல பெண்களா போனா ஆண்களுக்கும் வேல’ என்று ஓர் ஆண் தன் அலுவலக வேலை முடித்த பிறகு, வீட்டு வேலைகளை மிகக் கச்சிதமாகச் சுலபமாகச் செய்வதைத் தனது ‘அவ்வை சண்முகி’ படத்திலேயே காட்டியவராச்சே. ஆனால் இல்லத்தரசிகளின் வலியோ, அல்லது வீட்டு வேலை பற்றியோ தெரியாத கங்கனா ரணாவத் பணிவிடைகளுக்கு விலையில்லை என்றார். இப்படியான முட்டாள் பெண்களால்தான் இன்னும் பெண்களின் நிலை சாபக்கேடாகவே உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் குடும்பம் என்ற நிறுவனக் கட்டமைப்பின் ஆணாதிக்கத்தை இந்தப் படம் பறைசாற்றுவதால் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் இல்லை. சொற்ப வசனங்கள், எந்தப் பின்னணி இசையுமில்லை, பயன்படுத்திய அத்தனை ஒலிகளும் நம் வீட்டில் அன்றாடம் ஊடுருவும் இசைதான் - தாளிக்கும் ஓசை, காய் நறுக்குதல், வெட்டுதல், வறுப்பது, பாத்திரம் கழுவுதல், வதக்கல், துடைத்தல், துவைத்தல் என்று இதற்குமுன் நாம் செவிமடுக்க மறுத்த அல்லது மறந்த விஷயங்களை இயக்குநர் ஜோ பேபி வேண்டுமென்றே ஒன்றரை மணி நேரப் படமாக்கி மிக நிதானமாக நகரச் செய்து, அடுப்பங்கரையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வைத்துள்ளார். 

கதாபாத்திரத் தேர்வு மிக அருமை. இயக்குநருக்கு நிமிஷா மீது என்ன கோபமோ தெரியவில்லை இப்படி வேலை வாங்கியிருக்கிறார். சூரஜ் மீதும் அவருடைய தந்தையாக வரும் தாத்தா மீதும் நமக்கு வரும் கோபமே அவர்களின் நடிப்புக்குச் சாட்சியாகிறது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உங்கள் பசிக்குத் தீனியோ இல்லையோ உங்கள் சிந்தனைக்கு நிறையவே தீனியளிக்கும்.

Saturday, January 09, 2021

நாளைய பிணங்களின் அழுகை

என்னுடைய தந்தையார் இறந்து அவர்களுடைய சடலத்தைக் கிடத்தியிருந்த போது, இறுதியாக அவருடைய முகத்தைப் பார்த்து நெற்றியில் முத்தமிட உச்சி முகர உரியவர்கள் வரலாம் என்ற போதுதான் நான் கடைசியாக வாப்பாவை எப்போது முத்தமிட்டேன் என்று நினைத்து, அப்படி நிகழ்ந்ததே இல்லை என்று எண்ணியபோது தாங்க முடியாத அழுகை முட்டிக் கொண்டு வந்தது, கண்கள் நிறைந்தது. கண்ணீர் துளி அவர் மீது படக் கூடாது அதனால் அழுபவர்கள் முத்தமிட முடியாது என்றதும் வந்த அழுகை நின்றது. இறுதி முத்தமிட்டு விடையளித்தோம்.

நான் வாப்பா என்றழைக்கும் அப்துல் ஜப்பார் அவர்கள் துபாயிலிருந்து தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் "இனி நான் எங்கிருந்து துபாய் வரப் போகிறேன்" என்ற போது, ”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது. அதே தவறு மற்றுமொரு முறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ விமான நிலையத்தில் பிரியாவிடையளித்து உச்சி முகர்ந்தேன், வாப்பாவும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தார்கள். உச்சி முகர்வதை எப்போதும் நான் பெரியவர்களின் ஆசீர்வாதமாகவே உணர்கிறேன்.
நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் கவிஞர் யுகபாரதி அவர்கள் வாப்பாவை கட்டித் தழுவ ஆசைப்பட்டு அது நிகழலாமலே போனது பற்றிச் சொன்ன போது இந்த இரு சம்பவங்கள் நினைவில் வந்து சென்றது. நினைத்த மாத்திரத்தில் எல்லாமே செய்துவிடுவது நலம்.
'நேற்றைய சடலத்திற்கு முன் நாளைய பிணங்களின் அழுகை' என்று எங்கோ வாசித்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது!!Monday, January 04, 2021

இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம்!

 நான் மிகச் சுலபத்தில் யாரையும் அண்ணன்/ அக்கா என்றெல்லாம் முறையோடு கூப்பிட்டு விட மாட்டேன், அப்படியிருக்க நான் ’வாப்பா’ என்று வாய்நிறைய அழைக்கக் காரணம் யாஸ்மின்தான். நான் வாப்பாவைச் சந்திக்கும் முன்பே அவரைப் பற்றி யாஸ்மின் நிறையவே சொல்லியிருக்கிறார்.

ஆசிப் - யாஸ்மினின் காதலுக்கு மரியாதை கொடுத்து அதைத் திருமணத்தில் முடியவும், யாஸ்மினைக் குடும்பத்தின் அங்கமாகவும் அவளுக்கு எந்தவித நெருடலுமில்லாமல் இருக்குமாறு அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தில் அவரை இணைத்துக் கொண்டவர் என்பதாலேயே நான் அவர்களைப் பார்க்கும் முன்பே அவர்கள் மீதான பிரியமும் அன்பும் நிறைந்திருந்தது.
திரு. பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் வாப்பாவுக்கும் எங்கள் அமைப்பான அமீரகத் தமிழ் மன்றத்தின் (அன்று அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள்) சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவின் முடிவில் ஆசிப் என்னை வாப்பாவிடம் "இதுதான் ஜெஸிலா" என்று அறிமுகம் செய்து வைத்தார். வாப்பா உடனே தன்னுடைய ’காற்று வெளியினிலே’ நூலில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசளித்தார்கள். உடனே நான் ‘மகள்’ என்று அடையாளப்படுத்தி எழுதி இருக்க வேண்டுமென்று முதல் சந்திப்பிலேயே உரிமையுடன் கேட்டேன். அதன்பின்னர் அது, வாப்பா மகள் உறவாக அப்படியே தொடர்ந்தது.
வாப்பாவுடன் நிறையப் பேசியிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்திலிருந்து அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து, தனிப்பட்ட பிரச்சனை, துறைசார்ந்த பிரச்சனைகள், அவர்களுடைய ஆதங்கங்கள், கோபங்கள், பிடித்தவை, பிடிக்காதவை என்று அத்தனையும் பேசி தீர்த்திருக்கிறோம்.
என்னுடைய எழுத்தில் என் குரலே கேட்பதாகவும், அப்படியே எழுதும்படியும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள், நான் பாடிய பாட்டை எங்கேயோ கண்டுவிட்டு அதில் எது சிறப்பு, எது சரிவு என்று என் தவறுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
என் ஜிமெயிலின் உட்பெட்டி அவர்களுடைய குரல் பதிவுகளால் நிரம்பி வழிகிறது. துபாயில் எங்களுடன் தங்கியிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் வெந்நீர் கேட்பார்கள், இன்னின்ன மாத்திரைகளைப் போட வேண்டும், உப்பு அதிகமில்லாத சாப்பாடு வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும், கட்டளைகள் பிறக்கும், ஆனால் அதையெல்லாம் மீறி திருட்டுத்தனமாக நானும் வாப்பாவும் உணவகத்திற்குச் சென்று நாங்கள் இருவர் மட்டும் அவரவர்களுக்குப் பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.
அவர்களுடைய அகவை 80 விழாவில் ‘காற்றின் மொழி’ என்ற நூல் ஆசிப் அவருடைய வாப்பாவுக்குத் தந்த இன்ப அதிர்ச்சிகளில் ஒன்று. அந்த நூல் முழுக்க வாப்பாவைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவத்தின் தொகுப்பு இடம்பிடித்தது . (அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாக்கியமும் எனக்கே கிடைத்தது. )
அந்த நூலில் நானும் ‘அன்புள்ள வாப்பாவுக்கு...’ என்று ஒரு பதிவைக் கடிதம் போல் எழுதியிருந்தேன். அந்த நூலை வாசித்து முடித்த பிறகு, அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டையும் மின்னஞ்சலாகத் தந்திருந்தார்கள்.
வாப்பா அக்பராகவும், நான் பேகம் சாஹிபாவாகவும், ஆசிப் சலீமாகவும் மேடையில் ஒப்பனையில்லாமல், நாடகத்திற்கான எந்த ஒத்திகையுமில்லாமல், குரல் மட்டுமே நடிக்க வேண்டும், மகிழ்ச்சி, துயரம், ஆச்சர்யம், அதிர்ச்சி எல்லாம் குரலில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். ஒரு வானொலி நாடகம் எப்படி இருக்க வேண்டுமென்பதை மேடையில் காட்டப் போகிறோம் என்று அதனை மிக நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த நாடகத்தின் பெயர் ’ஆக்ராவின் கண்ணீர்’.
இதே ‘ஆக்ராவின் கண்ணீர்’ நாடகத்தைச் சவூதி மேடையில் திரு. பி.எச். அவர்களுடனும் வாப்பா செய்திருக்கிறார்கள். அதில் அக்பர் ‘லாஹிலாஹா இல்லல்லாஹ்’ என்று மும்முறை வெவ்வேறு குரல் மாறுபாடுகளோடு சொல்லி அவர் மூச்சு நிற்பதான இறுதிக் காட்சியில் நிறைவாக ‘இல்லல்லாஹ்....’ என்று குரல் கம்மி குழறும்போது நம் கண்களில் கண்ணீர் நிறையும்.
கடந்த பத்து நாட்கள் வாப்பா மருத்துவமனையில் இருந்துவிட்டு முன்தினம்தான் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போதும் அழைத்துப் பேச முயற்சி செய்தேன், அங்கு பணி புரிபவர் "வீடியோ காலில் மட்டுமே பார்க்கலாம் பேச இயலாது" என்று சொல்லிவிட்டார். அவர்களுடைய திருமண நாளுக்கும் அவர்களிடம் வாழ்த்துச் சொல்லவில்லை.
நேற்று காலை 6.30 மணிக்கு ஆசிப் அழைத்த போது, அந்தப் பக்கம் ஆசிப்பின் அழுகைக் குரலை மட்டும் வைத்து செய்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வாப்பா ஓர் அழகான நிறைவான வாழ்க்கையை மிகக் கம்பீரமாக வாழ்ந்துவிட்டார்கள், அவர்கள் படுக்கையில் கிடப்பதையோ துவண்டு போவதையோ நான் விரும்பவில்லை. அதனால் அவர்களின் மறைவு அவர்களுக்கான விடுதலையாகத்தான் நான் பார்க்கிறேன். சென்று வாருங்கள் வாப்பா!! இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்திப்போம்.
நாம் இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம், இந்த உலக வாழ்வை விடச் சிறந்ததைப் பகரமாகத் நமக்குத் தருவானாக. ஆமீன்.!!

Wednesday, December 23, 2020

அன்புள்ள வாப்பாவுக்கு...

அன்புள்ள வாப்பாவுக்கு,

நாம் முதல்முதலாகச் சந்தித்த போது காற்று வெளியினிலேநூலில் அன்புத் தங்கை ஜெஸிலாவுக்குஎன்றுதான் நீங்கள் எழுதித் தந்தீர்கள். நினைவிருக்கிறதாஅதே நிமிடம் உங்களிடம் நான் தங்கையாநான் மகள்என்றேன் அழுத்தமாக. அல்ஹம்துலில்லாஹ்!! அந்த உறவு இன்றும் அவ்விதமே தொடர்கிறது.

எனக்கு உங்களை ஆசிப்பின் தந்தையாகத்தான் அறிமுகம். நாம் சந்திக்கும் முன்பே ஆசிப்பின் வாயிலாக உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். உங்களை நான் சந்திக்கும் முன்பே விண் டிவி நிகழ்ச்சியை நான் நன்றாகச் செய்வதாக, ‘அந்தப் பெண் நல்ல முகவெட்டுநிகழ்ச்சியும் நன்றாகச் செய்கிறாள்என்று விண் டிவி நிறுவனத்தில் சொன்ன செய்தியை ஆசிப் மூலம் என்னிடம் கடத்தியிருந்தீர்கள். இப்படி ஆசிப் மூலம் உங்களிடமிருந்து வரும் செய்திகள் உங்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. எந்தவித பந்தாவும்நான் பெரியவன் அனுபவசாலி என்ற அகந்தையும் இல்லாதுஉனக்கு என்ன தெரியும் என்ற தோரணை அறவே இல்லாது எவ்வித அலட்டல்களுமில்லாததால்தான்பல வருடங்கள் பழகியவள்போல் பார்த்தவுடனே வாப்பாஎன்று மனம் கொண்டாடியது.

உங்களுடைய கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள். நான் ஒருமுறையும் கேட்டதில்லைஎன்று நான் உங்களிடம் ஒருமுறை சொல்ல. அப்படியாகேட்டதில்லையாஅதற்கென்ன என்று மடைத் திறந்த வெள்ளமாக "பந்தின் மையப் பகுதியில் ஒரு தையல் இருக்கிறது. பந்து வீசப்படும்போது இது தரையில் எவ்வாறு படுகிறதோ அதை அனுசரித்து அதன் எழுச்சிதிசைவேகம் எல்லாம் அமையும். மோசமாக அமைந்து விட்டால் அது 'பவுண்டரி'யாகிப் போகும். அது பந்து வீச்சாளருக்கு நஷ்டம். அது நன்றாக அமைந்து விட்டால் 'விக்கட்போகும் அது மட்டையாளருக்கு இழப்பு. ஆக எல்லா வில்லங்கங்களுக்கும் இந்த தையல்தான் காரணம். இதை நான் இந்த மகளிர் தினத்தில் சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆகவே வாழ்த்துச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே தையலைமகளிரோடு இணைத்து ஒரு மார்ச் 8- ஆம் தேதி நீங்கள் பேசிய வர்ணனையை அச்சுப்பிசகாமல் அப்படியே பேசிக் காட்டி என்னைப் பிரமிக்கச் செய்தீர்கள். யாருக்கு கிடைக்கும் இப்படியான பாக்கியம்உலகின் மூத்த பிரபல தமிழ் ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனக்காகஎனக்காக மட்டுமே பேசிக் காட்டியபகிர்ந்த விஷயங்கள் ஆயிரம்.

அமீரகத் தமிழ் மன்ற மேடையில் நீங்கள் அக்பராகவும், நான் பேகம் சாஹிப்பாவாகவும்ஆசிப் சலீமாகவும் ஒப்பனை இல்லாமல்சரித்திர உடைகள் இல்லாமல்வானொலி நாடகம் போல் கையில் பிரதிகளைப் பிடித்துக் கொண்டு நடித்தோம். ஆக்ராவின் கண்ணீர்நாடகத்தில் இறுதிக் காட்சியில் நீங்கள் லாயிலாஹா…” என்று குழறக் குழற ஒலித்து உயிர் பிரியும் சப்தத்தைத் தத்ரூபமாகச் செய்து முடித்து அரங்கம் கைத்தட்டல்களால் நிறையும்போது உண்மையில் அந்தக் காட்சியின் என் பங்கிற்கான விசும்பல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகையாக முடிந்தது. அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

இறைத்தூதர் முஹம்மத்நூலை ஆரம்பக் காலத்தில் நீங்கள் பகுதிப் பகுதியாக ஒலிக்கோப்பாக அனுப்புவதும்அதனை திரு.ஸதக் அவர்கள் தட்டச்சுச் செய்து தருவதும்இடையில் நானும் ஆசிப்பும் கருத்துச் சொல்வதாக ஆரம்பித்த படலம்பின் நாட்களில் உங்களுடைய வேகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு மிக வேகமாக 1000 பக்கங்களுக்கு மேல் செய்து முடித்துஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எப்படி அர்ப்பணிப்போடும்மனமொன்றியும் முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அகத் தூண்டுதலையும் எனக்குக் கற்றுத் தந்தீர்கள். உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவுஎன்ற குறளுக்கேற்ப நான் தூற்றினாலும் போற்றினாலும் ஒரு மகளின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு பொறுமையாகப் பதிலளிக்கும் உங்களின் பண்பு எப்போதுமே என்னைப் வியக்கச் செய்தது. அதே போல் நீங்கள் ஆசிப்பிற்கு தொலைபேசும் போதெல்லாம் மறக்காமல் தவறாமல் “அங்க ஜெஸிலாவும் மக்களும் நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையோடு கேட்பதும் என்னை நெகிழச் செய்தது.

எந்த விஷயத்தை நீங்கள் கேட்கும்போதும் அதில் அவ்வளவு பக்குவப்பட்ட தேர்ந்தெடுத்த வார்த்தைகளையே நான் கண்டிருக்கிறேன். உதாரணமாகத் தண்ணீர் வேண்டுமென்றாலும், ‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ என்று மிகத் தன்மையாகவே பேசிக் கண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வரும் என்பதையும் நீங்கள் சொல்லியே ஆச்சர்யத்துடன் அறிந்துள்ளேன்.

கடந்த முறை நீங்கள் துபாய் வந்திருந்தபோதுஇனி நான் எங்கு இங்கு மறுபடியும் வரப் போகிறேன் என்ற ரீதியிலேயே பேசிக் கொண்டிருந்தீர்கள்அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. உங்களுடைய சிறு வயது அனுபவம்வளர்ந்த விதம்திருமணம்மக்கள்பேரக் குழந்தைகள்தோல்விகள்வெற்றிகள்நண்பர்கள்துரோகிகள் என்று அத்துனை விஷயத்தையும் மனம் திறந்து பகிர்ந்தபோது நான் உணர்ந்த விஷயம்என் தந்தையார் என்னிடம் இப்படியாக எதுவுமே பகிர்ந்ததில்லைநானும் அவர்களுக்கு இவ்வளவு நேரம் கொடுத்ததில்லைஇவ்வகையான நெருக்கமோ அதற்கான வாய்ப்போ எங்களுக்கு அமைந்ததில்லை. இறைவன் அவ்வகையான முழுமையான நிறைவேற்றத்தை உங்கள் மூலம் எனக்குத் தந்திருக்கிறான் என்றே நான் உளமாற நினைக்கிறேன்

பொதுவாகப் பெரியவர்கள் என்னை உச்சி முகர்வதை அவர்களின் ஆசீர்வாதமாகவே நான் உணர்வேன். விமான நிலையத்தில் நீண்ட நேரம் நடக்க வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்க தள்ளுவண்டியில் நீங்கள் உட்கார்ந்தபோது நான் உங்களுக்குப் பிரியாவிடையளிக்க நீங்களும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தது என் கண்களை நிறையச் செய்தது.

நீங்கள் இன்னும் எழுதி முடிக்க வேண்டியமொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்கள் நிறைய உள்ளது. அதற்கான ஆற்றலையும்ஆரோக்கியத்தையும்ஆயுளையும் இறைவன் உங்களுக்குத் தந்தருள எல்லாம் வல்லோனை இறைஞ்சுகிறேன்.

வாஞ்சையுடன் மகள் ,

ஜெஸிலா


Sunday, December 20, 2020

பிறந்த வீடு ‘பீட்டர்ஸ் காலனி’

 நான் பிறந்து வளர்ந்த இல்லத்தை இடிக்கிறார்கள் என்று அறியும் போது மனது பதைபதைக்கிறது. சென்னைக்குச் சென்றாலே பத்திரிகையாளர் குடியிருப்புக்குச் சென்று இறங்கினாலும், நான் பிறந்து வளர்ந்த குடியிருப்பான 'பீட்டர்ஸ் காலனி'யைக் கடக்கும் போதெல்லாம் 'எங்க வீடு' என்று தவறாமல் அனிச்சையாகச் சொல்லி விடுவேன். என் கணவரும் 'எத்தனை முறைதான் சொல்லுவே' என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்குப் பூரிப்புடன் சொல்லி மகிழ்வேன். அந்த வீட்டை விட்டு இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருந்தாலும்  என் கனவுகளில் வீடு என்றால் இன்னும் எனக்கு பீட்டர்ஸ் காலனி வீடே வருகிறது. 

வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தது, ஈசல் பிடித்து அதற்கு ஃபாத்திமா என்று பெயர் வைத்து வளர்த்தது, அஞ்சலி நாய் இறந்தது அறிந்து அதற்குக் குழி வெட்டிப் புதைத்து அழுதது, மதுர அண்ணன் கால்வாய் திறந்து கரப்பான் பிடிப்பதை வேடிக்கைப் பார்ப்பது, வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்தது,  மாடியில் நின்று 'வாட்ச்மேன் காப்பாத்துங்க' என்று விளையாட்டாகக் குரலெழுப்பி எல்லோரையும் பயமுறுத்தியது, 'பைக்' ஓட்டச் சொல்லித் தருகிறேனென்று சாந்தி அக்காவைக் கீழே தள்ளியது, 'மொட்ட மாடி லவ் ஜோடி' என்று கலாய்த்து காதலர்களை மாட்டிக் கொடுத்தது -  இப்படி பல நினைவுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய வளாகம். 

திமுகவின் தற்போதைய தலைவர் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்கு கேட்க வரும்போது வண்டிக்குப் பின்னால் ஓடியது, ஓவியத்திற்காக தொடர்ச்சியாகப் பரிசுகள் வாங்கியது - ஒருமுறை நடிகர் சிவகுமார் வந்து பரிசளித்தார், ஆச்சி மனோரமாவின் முன்பு மாறுவேடப் போட்டியில் குறத்தியாக மணி விற்றேன். வருடா வருடம் காலனி ஆண்டுவிழாவில் வெள்ளித்திரை என்று ஏதாவது படம் எடுத்து ஓட்டுவார்கள் அங்கு கும்பலில் உட்கார்ந்து படம் பார்த்தது - இப்படி பல சுவாரஸ்யமான நினைவலைகளைக் கொண்டு நிறுத்தியது 'பீட்டர்ஸ் காலனி' இடிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசிக்கும்போது. 

எங்கள் வீடு 17/3, பக்கத்து வீடு 17/4-ல் தான் அதிக நேரம் இருப்பேன். அது வாசுகி அக்கா வீடு. அவர்கள் வீட்டில் சில காலம் நான் தேவகியாகி இருந்திருக்கிறேன். வாசுகி அக்காவின் அம்மாவையும் அப்பா அவினாசிமணியையும் நானும் அம்மா அப்பாவென்றே அழைப்பேன். அதனால்தான் இயக்குநர் பாண்டிய ராஜன் எனக்கு மாமா முறையாகினார்.

17/2 ஞாநி அங்கிள் வீடு. என் தம்பியும் மனோஷும் டிகிரி தோஸ்த். இருவரையும் ஒரு 'சீரியலில்' நடிக்க வைக்க அரும்பாடுபட்டு தோற்றார்கள் ஞாநி அங்கிள். ஏதேனும் பேச்சுப் போட்டியென்றால் அவரிடம் எழுதிக் கேட்டு போய் நிற்பேன். அவர், உனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வா அதை திருத்தித் தருகிறேன் என்பார். சில பேச்சுப் போட்டிக்கு மேல் வீட்டு மணிமொழியும், மூன்றாம் மாடி வக்கீல் அப்துல்லாஹ் அங்கிளும் உதவியுள்ளனர். 

ஓவியப் போட்டியென்றால் ஓவியர் ஜெகதீஷ் ஐயாவை அணுகி அவரிடம் என் கற்பனைகளைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். பச்சைக் கலரில் கையெழுத்து வாங்க சில பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்கும் செல்வேன் - அவர்களுடைய பெயர்கள் நினைவில் இல்லை. கவிஞர் மு. மேத்தா அவர்களையும் இப்படித்தான் அடிக்கடி தொந்தரவு செய்வேன்.

17/1 'தினகரன்' முத்துபாண்டியன் அங்கிளின் மகள் ஷீலா அக்காதான் எனக்கு கார்ட்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்கள். 17/4 வித்யா/ நித்யா வீட்டிற்குச் சென்று மாமியிடம் உறை மோர் வாங்கி வருவேன். 17/18 என் தோழி சத்யாவுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 17/12 வெண்ணிலா அக்காவுடனும் முகநூல் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படி காலனி உறவுகளே நிறைய. அங்கிருந்த வரை ஜாதி -மத பேதமோ, இன பேதமோ அனுபவித்ததே இல்லை. 

'பீட்டர்ஸ் காலனி ரவுடி' என்று பெயரெடுக்கும் அளவிற்கு எல்லா பிளாக்கிலும் எல்லாரையும் தெரிந்து வைத்திருப்பேன், பழகுவேன்.

நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து வந்த பிறகு பின் வாசல் பக்கம் இருக்கும் விளையாட்டு திடலே மறைந்து காடாக, புதராக மாறி இருந்ததையே என்னால் சகிக்க முடியவில்லை. தூங்குமூஞ்சி மரத்தில் வளரும் பண்ணி வாகை மலரைக் காண முடியாமல் அவ்வளவு தவித்திருக்கிறேன். இப்போது அந்த இடமே இல்லாமல் போக போகிறது.

நேற்று என் தம்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் நண்பர் எங்கள் பிளாக்கை, எங்கள் வீட்டைப் படம் எடுத்து அனுப்பி இருந்தார். 

போன முறை சென்னை சென்றிருந்தபோதும் 'சத்தியம் தியேட்டர்' சென்ற போது எங்கள் வீட்டருகே சென்று பக்கத்தில் நின்று கண்சிமிட்டிவிட்டே வந்தோம். இனி அந்த கொடுப்பினையுமில்லை.

கடைசியாக ஒருமுறை அங்கு சென்று உட்கார்ந்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அதற்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மரங்கள் மடிந்தாலும் இடம் அழிந்தாலும் குழந்தைகளாக கதைப் பேசி கொஞ்சி மகிழ்ந்த எங்கள் சிரிப்பொலியும் அதன் நினைவுகளும் எங்களுள் என்றும் தங்கி இருக்கும்.
Thursday, August 20, 2020

பெயரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?

நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்க்கும் போது, அது என் முதல் வேலையிடம்.  அங்கு 'சார்வாள்' கலாச்சாரம் அதிகமாக இருந்தது. எனக்கும் அப்படியே பழகி இருந்தது. பார்ப்பவர்களையெல்லாம் 'சார்'தான். 

அதன் பிறகு நான் எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு யாரையாவது 'சார்' என்று அழைத்தால் கோபப்பட்டார்கள், அறிவுரை தந்தார்கள், தெறித்து ஓடினார்கள். பெயரை வைத்து மட்டுமே அழைக்க வேண்டுமென்று கெஞ்சினார்கள், உத்தரவிட்டார்கள், அதட்டவும் செய்தார்கள். என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. "பெரியவர்களைப் பெயர் சொல்லி எப்படி அழைப்பது?" என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தூரத்திலிருந்து அழைப்பதையே தவிர்த்து, அருகில் சென்று பேச வேண்டியதாக இருந்தது.

மேலாளர் அழைத்து 'சார் (SIR) என்றால் 'South Indian Rascal'என்ற பொருளுண்டு தெரியுமா?" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்பர் அழைத்து "'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா?'" என்றார். 

எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இன்னொருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சங்கடமாக இருந்தால் 'திரு'வுடன் அவரது இரண்டாவது பெயரை இணைத்து அழைக்கச் சொல்லி கேட்டார்.

எங்களது பக்கத்து வீடு, நான் சின்ன வயதிலிருந்தே அவர் பார்க்க வளர்ந்தவள், அவரும் அதே அலுவலகம். அவரை 'ஆன்ட்டி' என்றேன், அவ்வளவுதான் இடி விழுந்தது போல் உணர்ந்தவர், என் கையைப் பிடித்துத் 'தரதர'வென்று இழுத்துக் கொண்டு போய் "'ஆன்ட்டி', 'அங்கிள்' என்று அலுவலகத்தில் அழைத்து எங்களை அசிங்கப்படுத்தாதே. இந்த இடத்தில் நீயும் நானும் சக ஊழியர்கள் அவ்வளவுதான்" என்று மிகவும் கண்டிப்பாக,  அழுத்தமாக, மிரட்டலாகச் சொன்னார்கள்.

நிறுவனரையே 'பேராசியர்' என்றும் அவரது மனைவியை 'மிஸஸ் மீனா' என்றுமே எல்லோரும் அழைத்தனர். எனக்கும் அதுவே பழகியிருந்தது. சுலபமாகவும் இருந்தது. அப்படிப் பழகியதால் வயது வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே நண்பர்களாக,  சகஜமாகப் பழக முடிந்தது.

துபாய் வந்த பிறகும் இதுவே தொடர்ந்தது. முதல் முதலில் ஒரு மாதம் மட்டும் பணி புரிந்த 'ஸீனத் ரீ சைக்கிள்' நிறுவனத்தில் 'காக்கா' கலாச்சாரம் மலிந்திருந்தது. கீழக்கரை நிறுவனம். அதனால் எல்லோரும் எல்லோருக்கும் 'காக்கா'தான். எனக்கு அந்த இடமே வித்தியாசமான சூழலாக இருந்தது. நல்லவேளையாக அங்கு எனக்கு நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. காரணம் எனக்கு அப்போது திருமணமாகவில்லை என்பதே. 

"எங்க பயலுங்க உங்க கிட்ட திறமையக் காட்ட நினைப்பாங்களே தவிர, வேலைய எவனும் பார்க்க மாட்டார்கள்" என்று வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதும் நல்லதாகப் போனதால், நான் வெளியேறி வேறு நல்ல இடத்தில் வேறு நல்ல வேலையும் கிடைத்தது.

சேர்ந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கும் பெயர் சொல்லி அழைக்கும் முறையே தொடர்ந்தது, என்னைவிட முப்பது வயது மூத்தவரையும் பெயர் சொல்லியே அழைத்தேன், அவரும் இந்தியர்தான், ஆனால் அவரும் அதைத்தான் விரும்பினார். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதன் பிறகு நான் வேலை செய்த எல்லா நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனமென்பதால் 'சார்' என்ற சொல்லே அந்நியமானது. பெயர் சொல்லி அழைப்பதே எனக்குப் பிடித்திருந்தது. நெருக்கமில்லதவர்களை அல்லது தெரிந்தவர்களாக, அல்லது நண்பர்களாக இருப்பவர்களைப் பெயருக்காக அல்லது மரியாதை என்று நினைத்துக் கொண்டு அண்ணன், சேட்டா, அங்கிள், ஆட்டுக்குட்டி என்று அழைப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலும் அப்படி அழைப்பதைத் தவிர்ப்பேன்.

நண்பர்களின் தாய்- தந்தையர்களை மட்டும் தயக்கமில்லாமல் என்னால் 'அப்பா அம்மா' என்று அழைக்க முடிகிறது. ஆங்கிலப் படத்தில் மற்றும் சிரீஸில் நண்பர்களின் அம்மாவை 'மிஸஸ் ......' என்றே அழைப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் எல்லோரும் எல்லோரையும் முதல் பெயரை வைத்தோ நெருக்கமில்லாதவர்களைத் தலைப்போடு அதாவது திரு/ திருமிகு சேர்த்தே அழைக்கின்றனர். இதனைச் சிறப்பான முறையாகவே நான் பார்க்கிறேன். என்னை மற்றவர்கள் அக்கா, சகோதரி, ஆன்ட்டி, பாட்டி என்று எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பெயர் சொல்லி அழைப்பதே எனக்கு விருப்பம்.  ஆனால் நெருக்கமில்லாதவர்கள் யாரேனும் ஜெஸிலா என்ற பெயரைச் சுருக்கி ஜெஸி என்று அழைத்தால் மட்டும் எரிச்சலாகும் 'யார் அவருக்கு இதற்கு அனுமதி தந்தது?' என்று நினைத்துக் கொள்வேன். ( ஆனாலும் அவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டும் புலம்புவேன்)

சிலர் பெயர் சொல்லி அழைத்தால் திமிர் பிடித்தவளாகப் பார்க்கிறார்கள், நான் அழைப்பது அவர் பெயரை என்று அறியாமலே. பெயர் என்பது அழைப்பதற்குத்தானே?

Tuesday, August 18, 2020

குஞ்சன் சக்சேனா - உயரப் பறக்கத் துடிப்பவள்

 என் தோழி ஒருத்தி சின்ன வயதிலிருந்தே 'மாடலிங்' செய்ய வேண்டுமென்று கனவு கண்டு அதற்கேற்ப தன் உடலைத் தயார் செய்து கொண்டு, வேலைக்குச் செல்ல ஆயுத்தமாகும்போது அவள் சந்தித்த பல துன்பமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள். அதில் அதி முக்கியமானது அவள் நாட்டில் விளம்பர நிறுவனங்கள் 'மாடலிங்' செய்பவர்களை விபச்சாரிகளாகப் பார்ப்பதையும், சாடையாகவும் வெளிப்படையாகவும் 'நீ மாடலிங் செய்பவள்தானே?' என்று அதனைத் தரைகுறைவாகப் பேசுவதையும், உடனுக்குடன் உடை மாற்ற வேண்டிய இடங்களில் 'உங்களுக்கெல்லாம் மறைவான இடம் எதற்கு? அப்படியே நின்று மாற்றிவிட்டுக் கிளம்பு' என்று அசிங்கமாக நடத்தியதையும் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறாள்.

போதுமென்ற அளவிற்குச் சகித்துக் கொண்டு, அவள் நாட்டிலிருந்து துபாய்க்கு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கிய போது 'மொத்தமாக விலை போய் விட்டாயா' என்று கேலி பேசிச் சிரித்தவர்கள் நம் நாட்டவர்கள் அல்ல, அவள் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர்கள். பெண் அடக்குமுறை, கீழ்மை, பேதம் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.
நேற்று 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் பார்க்கும்போது ஏனோ எனக்கு என் தோழியைப் பற்றிய இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அதே மாதிரியான நிலை நம் நாட்டுப் பெண் விமானிக்கு வேறு விதமாக நிகழ்ந்துள்ளது. இந்தப் படம் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இன்றைய தேதியில் 1625 பெண் போர் விமானிகள் இருந்தாலும், கார்கிலில் 1999 ஆம் ஆண்டு ஒரே ஒரு பெண் விமானியாக இருந்தவர் கடந்து வந்த கசப்பான சம்பவங்களையும், நம் நாட்டு ஆடவர்களின் உள்ளுணர்வையும், அடக்குமுறையின் பிரதிபலிப்பையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.
'நான் பைலெட் ஆனால் என்னைப் பைலட் என்றுதான் பார்ப்பார்களே தவிரப் பெண்ணென்று பிரித்துப் பார்க்க மாட்டார்கள் என்று நம்பினேன். இங்கு மல்யுத்தம் செய்துதான் என் திறனை வெளிப்படுத்த வேண்டுமா? நான் விமானத்தை ஓட்ட வந்துள்ளேன், விமானத்தைக் கையில் தூக்க அல்ல. உங்களுக்கெல்லாம் பயம், நான் உயர் அதிகாரியாகிவிட்டால் எல்லோரும் எனக்குச் சல்யூட் செய்ய வேண்டுமென்ற பயம், அதுதானே? அதனால் உங்கள் மரியாதை சத்தியமாகக் குறைந்துவிடாது. உங்கள் குறுகிய எண்ணம், உங்கள் பயம், உங்கள் கூத்து கும்மாளம், ஆணென்ற உங்கள் பொய்யான பெருமை இவை மட்டுமே உங்கள் அதிகாரம்' என்ற வசனம் மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது இந்தப் படம் எனக்குப் பிடித்துப் போக.

விமானியாகவும், அதிகாரியாகவும், காரியதர்சியாகவும் எந்த வேலையைச் செய்தாலும் பெண்ணை இந்தச் சமுதாயம் பார்க்கும், பார்வை கேட்கும் கேள்விகள், நடத்தும் விதம்... சொல்லி மாளாது.
இவைகளையெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், யாருக்கும் அஞ்சாத மனதோடும் இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு வெற்றி நிற்சயம்.
அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள். மகளை நேசிப்பவர்களுக்கு, பெண்ணை மதிப்பவர்களுக்குப் பிடிக்கும்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி