Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Monday, July 13, 2020

ஒரு சொல் சில மெளனங்கள்

"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன். உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்" இப்படியாக வித்தியாசமான கற்பனையைப் பாடலில் கேட்டதும்தான் அதை எழுதியது யாரென்று அறிந்து, இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்குப் பிடித்த ஒவ்வொரு பாடலையும் அவரே எழுதியிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவுக்கு அத்தனை நல்ல பாடல்களையும் அவர்தான் எழுதினார். 

'என்  பூக்களின் வேரோ இவன்... 
என் பெண்மையை  வென்றான் இவன் ...
அன்பானவன்....'

'வேறென்ன வேண்டும் உலகத்திலே... இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்'

'ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்'

இதைவிட அதி அற்புதமான வரிகளையெல்லாம் எழுதிவிட்டார். அவருடைய தனித்துவமே அவருடைய எளிமையான வார்த்தை தேர்வு. அருமையான சுலபமான
எளிமையான வார்த்தைகளில் சிம்மாசனத்தையே கட்டினார், ஆண்டு தோறும் தேசிய விருதைக் கைப்பற்றினார். 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது பல இடங்களில் புன்னகை பூக்கச் செய்தார். 'குழந்தைகள் நிறைந்த வீடு' தொகுப்பில் நாம் அன்றாடம் பார்க்கும், படிக்கும், கற்பனை செய்யும் நிகழ்வுகளை... 
 
இறந்த பாட்டியின் மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

மனதைத் தொடும் ஹைக்கூவாக காட்சிகளைப் பதிய வைத்தார். 

வாழ்வில் ஒருமுறையாவது இவரை சந்திப்பேன் என்று எண்ணி இருக்கும்போது தனது நிறுத்தத்தில் சொல்லாமலே இறங்கிவிட்டார், மனதில் நீங்காத வார்த்தைகளைப் பாடல்களாக நம் உதடுகளில் விட்டுச் சென்றுவிட்டார் நா. முத்துக்குமார். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவர் இருந்திருந்தால் 45 வயது மட்டுமே முடிந்திருக்கும்.

Thursday, July 26, 2007

பழக வருகிறார் உங்களுடன்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது வேறு கதை.

யாரெல்லாம் உங்க சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள்?

1. மனைவி (அவ சொல் பேச்சு கேட்டுத்தான் நானே நடக்குறேன்னு சிலர் புலம்புறது கேட்குது - அதுல தப்பே இல்ல கீப் இட் அப்)

2. குழந்தைகள் (அதெல்லாம் அந்தக் காலம், இந்த காலத்து புத்திசாலி குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்டு நடக்க வேண்டி இருக்குன்னு அனுபவபூர்வமா எனக்கும் தெரியும்.)

3. வளர்க்கும் நாய் (நீங்க சொல்றா மாதிரி கேட்குதுன்னு வெளியில சொல்லிடாதீங்க 'ப்ளூ க்ராஸ்' தயாரா நிற்கிறாங்க)

யார் கேட்கிறார்களோ இல்லையோ இவர் கேட்பார். ம்ம் சொல்லுங்க ஆனா இவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் புரியும் அதுவும் ஒற்றை வார்த்தையில் சொன்னால்தான் புரியும். உங்க சொல்பேச்சுக் கேட்கும் 'மவுஸை' கொண்டுப் போய் LAUGH, CRY, DANCE, JUMP, GO TO HELL, F*****F இப்படி ஏதாவது தட்டிப் பாருங்க திட்டிப் பாருங்க உடனே செய்வார், சொல்படி கேட்பார். அதுவும் Internet Explorer 6 உபயோகித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ஆனா நீங்க சொல்வது புரியலைன்னா உடனே உதட்டை பிதுக்கி புரியலைன்னு ஒத்துக்குவார்.

இதை சொடுக்கித்தான் ஆணையை பிறப்பிக்க முடியும். இண்டர்நெட் எஸ்ப்லோரரில் உலவுபவராக இருந்தால் சொடுக்குங்கள் ஆணையிடுங்கள், இதோ உங்கள் அடிமை (பயர்பாக்ஸிலும் வேலை செய்யும் ஆனால் ஆணை பிறப்பித்த பிறகு ஒரு உரல் வரும் அதை க்ளிகினால் தான் அவரை பார்க்க முடிகிறது):



இந்த மாதிரி தமிழில் ஆணை பிறப்பித்து விளையாடினால் இன்னும் நல்லா இருக்கும்ல? எங்கே நம் மென்பொருள் வீரர்கள்? (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா!)

Thursday, March 01, 2007

காதல் வாகனம்

காதலுக்கு ஏற்ற வண்டி, உலகில எந்த வண்டி, இப்போதே சொல்லுங்க வலைஞர்களே எவ்வண்டி நல்ல வண்டி?

1. ரெக்கை கட்டி பறக்கும் சைக்கிள் பிடிக்குமா?
2. மோட்டார் பைக் பிடிக்குமா?
3. மோட்டார் கார் பிடிக்குமா?
4. பேருந்து பிடிக்குமா?

வண்டில்லாம் எதுக்குங்க? என்னவளு(னு)டைய கையக்கோர்த்துக்கிட்டு பொடி நடையா நடக்கத்தான் பிடிக்கும்ன்னும் சொல்றவங்களும் இருப்பாங்க. எது யாருக்கு பிடிக்குதோ தெரியாது, எனக்கு பைக்குன்னா ரொம்ப பிடிக்கும். இங்க பைக்ல சுத்த முடியாததாலயோ, கைக்கெட்டாததாலயோ ரொம்பப் பிடிச்சுப் போச்சோ என்னவோ??

ஆனா பைக்ல போகும் போதெல்லாம் நெனைப்பேன் வெயிலடிக்காம இருக்கணும், மண்புழுதி தாக்காமலிருக்கணும், புகை மூச்சடைக்காமல் இருக்கணும்னு. நானே ஒரு விதமான பைக்கை மனசுல கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். அது ஒரு விதமான பைக்- கார் இனக்கலப்பு வாகனம். அதாவது பைக் மாதிரி நுழைஞ்சு, போக்குவரத்து நெரிசல்ல மாட்டாம, வேகமா பறக்கணும் ஆனா கார் மாதிரி மூடி இருக்கனும். ஏன்னா, அப்பதான் உள்ளே பாதுகாப்பா இருக்கலாம். முகமூடி போடத் தேவையில்ல, ஹெல்மெட் தேவையில்ல, பாட்டு கேட்கலாம், செல்பேசியையும் ஒலிபெருக்கியில் பொருத்தி சத்தமா பேசலாம். 'வண்டி ஓட்டும் போது பேசவே கூடாது இதுல இதெல்லாம் தேவையா? உன்ன மாதிரி ஆளுங்களாலதான் விபத்து நடக்குது'ன்னு சொல்வீங்க.. தெரியும். ஆனா ஒழுங்கா கவனமா விதிமுறையோட ஓட்டுனா ஒண்ணுமாகாது. இப்படி பல நல்ல சாராம்சங்கள் இருக்குது என் காதல் வாகனத்திற்கு. கிட்டத்தட்ட என் கற்பனை வாகனம் மாதிரியே நிஜமாவே வந்தாச்சு வந்தாச்சு...

660 சி.சி. கொண்ட கார்வெரா 40000 யூரோ ஆகுமாம் (ரொம்பக் கம்மிதாங்க. இந்திய ரூபாயில் சுமார் இருப்பத்து மூன்றரை லட்சம்தான் ). புதிய கண்டுபிடிப்புன்னு இவ்வளவு விலை. போக போகக் குறையாதா என்ன? அமீரகத்தில் வந்தா 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்ல மாட்டாம தப்பிக்க இவ்வளவு விலைக் கொடுக்கணுமா? ஆனா ஒரு சந்தேகம், இதுக்கு கார் உரிமம் போதுமா? இல்ல பைக் உரிமம் தனியா எடுக்கணுமான்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு சொல்றீங்களா? சரி விட்டுடலாம்.






உங்களுக்கு பிடிச்ச வண்டி எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க.

Wednesday, December 20, 2006

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.

'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! நான் வீட்டிலிருந்து கொண்டு வந்தாச்சு'ன்னு தட்டிக்கழிச்சிட்டேன். ஆனா மத்த வெள்ளக்காரருங்க ('வெள்ளக்காரன்'னா கொஞ்சம் மரியாத கொறவா இருக்கும் அதான்) எல்லாம் 'வேணும் வேணும்'னாங்க. அவளும் 10 திர்ஹம்ஸ் (அதாவது 130 ரூபாய்) ஆகும் என்று எல்லோரிடமும் வசூலித்தாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொடுத்தார்கள் எல்லோரும் அவ ஊருக்காரங்கதான் (வெள்ளக்காரரருங்க), கீழ் கடையில் போயி மூணு ரூபாய்க்கு (ரூபான்னா திர்ஹம் என்று பொருள் கொள்க, அப்படி சொல்லி இருபது வருஷத்திற்கு மேல பழக்கமாயிடுச்சில்ல) ரொட்டி வாங்கி, 5 ரூபாய்க்கு மயூனைஸ் வாங்கி, சில காய்கறிகளும் வாங்கி, மொத்தத்தில் வெறும் 15 திர்ஹம் மட்டும் செலவழிச்சி பொருள் வாங்கி வந்து ரொட்டிய வெட்டி சாண்ட்விச், அதில் மயூ தடவி, காய்களை உள்ளே அடுக்கி போட்டுக் கொடுத்தாள். சாப்பிட ஆரம்பித்தார்கள். அவளும் "எப்படி இருக்கு சுவை" என்று ஸ்டைலாக கேட்க, ஒருவர் "'ம்ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு, எப்படி செஞ்சீங்க" (சமையல் குறிப்பு வேறையான்னு நினச்சிக்கிட்டேன்). இன்னொருவர் "ரொம்ப சிரமமெடுத்து செஞ்சது போலிருக்கு, சுவை நல்லா இருக்கு" (கஷ்டகாலண்டா சாமி! ). இப்படி ஒவ்வொருவரும் 'ஆஹா' 'ஓஹோ' பிரமாதம்ன்னு சாப்பிடுறாங்க (சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி). இவள் பதிலுக்கு "பின்ன சுவையாகத்தானே இருக்கும், அன்போடு பரிமாறியதல்லவா" என்றாள் அடக்கமாக. எனக்கு சிரிப்பு தாங்கல. என்னைப் போலவே வீட்டிலிருந்து கொண்டு வந்தவன் நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று முணுமுணுத்தான்.

இந்த கேண கிறுக்கனுங்க (முட்டாள்கள் ஆகிவிட்ட பின்பு இவர்களுக்கு மரியாதை எதக்கு?) அத சும்மா சாப்பிட்டு போகம என்னைப் பார்த்து 'இந்த இந்தியர்கள் நீங்கள் எப்படித்தான் தினமும் சோறும் கறியும் சாப்பிடுகிறீர்கள் ரொம்ப செலவாகவில்லையா?' என்று கேட்டுவைக்க. நானும் உடனே "நாங்க வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம், இங்க வந்து வாங்குவதில்லை என்று அப்பாவியாக பதில் சொன்னதில் உள்ள சூசகத்தையும் மரமண்டைகளுக்கு புரியவில்லை. இவர்கள் ஏமாந்தார்களா அல்லது அவள் சாமார்த்தியசாலியான்னு நீங்களே சொல்லுங்க.

Sunday, July 16, 2006

திருமணம் - வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.

திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.

திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.

பெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.

நிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.

வேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம்? அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்? யோசித்திருக்கிறீர்களா?

வாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:

  • மன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).
  • தவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)
  • புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)
  • இருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி!)
  • சிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).

கருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்

  • மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா?)
  • மற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க!)
  • மற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)
  • மற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)

திறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.

ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.

சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.

‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.

‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.

அறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).

கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி