Wednesday, September 09, 2015

அறிவின் ஆரம்ப எழுத்து - அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் போது திணறல் ஏற்பட்டு, அவளை நசுக்கி வாழ்வின் எல்லைக்கு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தாலும், இன்னல்களைத் தாண்டி வாழ தலைப்படுகிறாள் இப்படத்தில் ஃபாத்திமா. இப்படம் பெண்களுக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இங்கு ஆண்களையோ மதத்தையோ குற்றம்பிடிக்கவில்லை மாறாக மதத்தின் பெயரில் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நேரடியாகச் சாடியுள்ளது. ஃபாத்திமா ஒரு கட்டத்தில் 'இன்று என் கணவர் என்னைக் காரணங்கள் காட்டி விவாகரத்துச் செய்கிறான் என்றால் அதற்கு முழுப் பொறுப்பு நீதான்' என்று மதபோதகரைக் கை காட்டுவது - இப்படியாகப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் இருந்த நாய்க்குத் தண்ணீர் கொடுத்து அந்த நாயின் தாகத்தைத் தணித்ததற்காக அவளது பாவக் கறைகளை மன்னித்து இறைவன் சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தது பற்றி ஃபாத்திமா மதபோதகரிடம் கேள்வி எழுப்பும் போது "அது தவறு... பெண்களோட சப்தம் சபையில் எழுந்தால் அது மறுமை நாளின் வரவென்று" தவறாகப் போதிக்கிறார். மார்க்கம் சொல்வதெல்லாம் பிற உயிர்களுக்குக் காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிடச் சிறந்த கருணையைக் காட்டுகிறான் என்பதுதானே? ”பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானில் ’அர்ஷில்’ உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” என்று போதிக்கும் மார்க்கத்தின் உண்மைகளை மறைத்து அவர் அவர்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மதகுருக்கள் முழங்குவதை நிரல்படுத்தியுள்ளது 'அலிஃப்'.

பிரமாதமான இயக்கமென்று சொல்வதை விடத் திரைகதையால், வீரியமான வசனங்களால் கேள்விகளைக் கொண்டு நிரப்பிக் கண்ணாடியை நம் முன் நிறுத்தி, சமீபகாலமாகத் தூய்மைவாதம் என்ற பெயரில் திரிந்து கொண்டு இருக்கும் சூழல்களையும், நமக்கே தெரியாமல் விதைக்கப்பட்ட விஷத்தினால் வார்த்தெடுக்கப்படும் சமுதாயக் கட்டமைப்பையும் கண் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் என்.கே. முகமது கோயா. எவ்வளவு பாகுபட்டுக் கிடந்தாலும் பெண்கள், அவர்களின் ஆடைகள், ஒழுக்கங்கள் என்று வந்துவிட்டால் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு சாடுகின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிடுகிறார். திருமணத்தில் அழைக்கப்படாத விருந்தாளியாக வரும் சிறுவன் அலியை அடித்து விரட்டுபவர்கள், திருமணம் முடிந்து குப்பையில் சாப்பாட்டைக் கொட்டுவது, பெரியவர்கள் பிரச்சனையில் குழந்தைகளின் படிப்பு பாதிப்பு அடைவது, சடலத்தை அடக்கம் செய்யவும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்திருத்தலை எதிர்த்து வீட்டின் பின்புறத்தில் புதைக்க, தன் அயலார் சந்திரனாக வரும் கலாபவன் மணியை அழைக்க, 'மோண்டா கழுவாத இவனா அடக்கம் செய்யப் போறான்?' என்று கேட்பவர் வாயை மூடும் வகையில் 'அவன் மனசு சுத்தமானது அது போதும்' என்று பதிலுரைப்பது என்று மனிதத்திற்காகத்தான் மதமே தவிர, மதத்தைத் தாங்கிப் பிடித்து மனிதத்தைச் சாகடிக்கிறார்கள் என்பதை அழகாகச் சின்னச் சின்னக் காட்சிகளில் நெஞ்சை நிறைக்கிறார்.

தொலைக்காட்சியைத் தன் தோழியோடு இருக்கையில் அமர்ந்து பார்க்கும் குற்றமற்ற சிறுவனை அதட்டி கீழே உட்காரச் சொல்லும் போது கேள்வி கேட்காமல் கீழே நகர்பவனோடு அவன் தோழியும் கீழே உட்கார்ந்து உதிக்கும் புன்னகை, ஃபாத்திமா வேலை கேட்டு உதிர்க்கும் கண்ணீருக்கு, உடன் வேலை தர முயற்சிப்பவருக்கு நன்றியில் உயரும் கை என்று தத்தளிக்கும் குடும்பத்தை மதத்தின் பெயரில் எவ்வளவு அலைக்கழிக்கலாமோ அவ்வாறெல்லாம் சீண்டிப்பார்த்துப் படம் முழுக்க வேதனை நிரம்பிய காட்சிகளாக இருந்தாலும் அதன்னூடே நம்பிக்கை ஒளிக்கீற்றை விட்டுச் செல்லும் இயக்குனர், கம்யூனிசத்தின் அப்பட்டமான ஆதரவை வெளிப்படையாக அதிகப்படியாகச் சொல்வதாகத் தென்பட்டது. கம்யூனிசமிருக்கும் வீட்டில்தான் பெண் போராளிகள் உதிப்பார்களா என்ன?

"பெண் என்பவள் ஒரு பொருள் மட்டும்தானே? யாரும் வாங்கி உபயோகிக்கலாம், அவளுக்கென்று மனசு, ஆசைகள், உணர்வுகள் என்று எதுவுமே இருக்கக்கூடாது அப்படித்தானே? இந்தச் சமுதாயமும் முசலியார்களும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், 'பெண்களுக்கென்று நபிகளார் பல உரிமைகளும் சலுகைகளும் மொழிந்ததுண்டு. மஸ்ஜித்திற்குச் செல்லலாம், தந்தையின் சொத்தில் உரிமை பெறலாம், பொது மேடையில் பேசலாம், யுத்தத்திலும் பங்கெடுக்கலாம்...' ஆண் ஒரு பெண்ணுக்கு விவாகரத்தை (தலாக்) மூன்று முறை சொல்ல வேண்டும் ஆனால் பெண் ஒர் ஆணுக்கு விவாகரத்தை ஒரே முறை சொன்னால் போதுமென்றும் உண்டு" என்று தைரியமாகப் பேச அவள் போராளியாகவோ, கம்யூனிட்டாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மார்கத்தைச் சரியான புரிதல்களுடன் எதிர்கொள்பவளாக இருந்தால் போதும்.

ஃபாத்திமா மூலம் ஒவ்வொரு பெண்களும் வேண்டி நிற்பதெல்லாம் இலகுவான சுவாசம், நிறைவாய் உணவு, உடுத்திக் கொள்ள உடை, மரியாதையான ஒரு வாழ்வு அவ்வளவுதான். அதன் பிறகுதான் மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க முடியுமென்று நேரடியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் முகமது கோயா. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

எல்லாக் கதாமாந்தர்களும் அலட்டிக்கொள்ளாமல் கதையைச் சரியாகப் புரிந்து கொண்டு தம் பங்கை செவ்வனே செய்துள்ளனர் குறிப்பாக ஆட்டாவாக வரும் ஃபாத்திமாவின் தாய் ஜீனத் இயல்பான நடிப்பில் மிளர்கிறார். ஜாய் மாத்தியூ ஹாஜியாராகக் கலக்கியுள்ளார். இரண்டே பாடல்கள் என்றாலும் அதன் வரிகளில் பொதிந்த அர்த்தங்களைத் தன் இசையில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறார் ரமேஷ் நாராயண்.

இப்படத்தில் பிரச்சாரமுமில்லை எந்தத் தீர்வும் தரவில்லை, நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் சிந்திக்கத் தூண்டவுமே இப்படம்.

இறுதி காட்சியில் கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தை அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் இன்னல்களாக சித்தரித்து அவர்களை விடுப்பட்டவளாக வீர நடையும் நேர் கொண்ட பார்வையும் வீசி செல்கிறார் ஃபாத்திமா.

எனது போன பதிவான 'தி ஸ்டோனிங் ஆப் சொரயா'வில் கேள்வி கேட்டவளை கற்களால் எதிர்கொண்டு சாகடித்தார்கள். இந்தப் படத்தில் வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டுகிறாள் ஃபாத்திமா. அலிஃப் பேசப்பட வேண்டிய படம்.

Tuesday, September 01, 2015

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல.

உண்மை சம்பவம், மிகவும் வலி மிகுந்த சம்பவம். அதைப் படமாக விவரித்ததில் எந்தத் தவறும் நிகழாதவாறு சரியான சூழலில், ஒலி- ஒளிகளைக் கச்சிதமாகப் பிடித்து, தேவையான ஒப்பனைகளோடு, பொருத்தமான நடிகர்களோடு ஒரு நிகழ்வை நாம் அருகிலிருந்து சாட்சியாகப் பார்க்க மட்டும் செய்திருக்கிறார் இயக்குனர் சைரஸ் நவ்ராஷ்தே. நான் சொல்வது 'ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்' படத்தைப் பற்றி. அத்தோடு அவர் கடமை நிறைவடைந்து விட்டிருக்கிறது. படத்தின் தலைப்பே முழுக் கதையையும் சொல்லிவிடுகிறது. கல்லெறி தண்டனைகள் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று படம் முடிவில் ஓடவிடும் வரிகள், நம்மைப் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

அந்த நிகழ்வு நடந்தது 1986 ஆம் ஆண்டில், ஈரானில். தன் பயணத்தின் போது அறிந்து கொண்ட உண்மையைப் பிரெஞ்ச் பத்திரிகையாளர் ஃபிரைஜோன் சஹெப்யாம் (Freidoune Sahebjam) புத்தகமாக 1990-ல் வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதின் விளைவு, திரைப்படமாக அப்புத்தகம் 2008 'தி ஸ்டோனிங் ஆஃப் சொரயா எம்.' என்று அதே பெயரில் சைரஸ் நவ்ராஷ்தே (Cyrus Nowrasteh) மற்றும் அவரது துணைவியார் பெட்ஸி கிஃப்ஃபனின் வலிமையான திரைக்கதையுடன் வெளியானது.

ஒரு தனி நபரை ஒழுங்கீனமென்று அடையாளப்படுத்தி அவள் பிறந்து வளர்ந்த மண்ணில், அவளுக்குத் தெரிந்த முகங்கள், பழகிய உறவுகள் சூழ, குழியில் தள்ளி இடுப்புவரை புதைக்கப்பட்டு, கைகளைப் பின்னால் கட்டி, தன் தந்தையும் தன்னிடம் அது குறித்து ஒரு வார்த்தையும் கேட்காமல், அவள் கணவரின் குற்றச்சாட்டை மட்டும் முன்னிறுத்தி 'இவள் ஒழுக்கம் கெட்டவள். இவள் என் மகளே இல்லை' என்று கல்லெறி தண்டனையில் முதல் நபராகக் கல்லெறிய தயாராகும் போதே அப்பெண் மனம் நொறுங்கிச் செத்துவிடுகிறாள். அந்தக் காட்சியிலெல்லாம் கண்களிலேயே பேசி தன் வலியை வெளிப்படுத்துகிறார் சொரயாவாக வரும் மோஸன் மார்னோ (Mozhan Marnò). தன் தந்தை எறியும் கல் அவள் மீது படாதபோது 'அவள் கலங்கமற்றவள் என்று உனக்கு இறைவன் காட்டும் அறிகுறி'யென்று அவையிலிருக்கும் ஒரு பெண் கூக்குரலிடுகிறாள். 'இறைவன்' என்று ஒருவன் இருந்திருந்தால் அவள் குற்றமற்றவளோ இல்லையோ தன் படைப்பை இப்படி அவமானப்படுத்திக் கொடூரமான முறையில் கொலை செய்வதை தடுத்திருப்பான் இல்லையா? அந்த நிமிடத்திலும் இவர்கள் "காத்தருள்வான், உன்னை சொர்க்கத்தில் அவன் வரவேற்பான்" என்று சொல்லும் சொற்கள் இறைநம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

ஈரானில் ஒரு கிராமத்தில் அரசாங்க அதிகாரத்தில் இருக்கும் அலிக்கு பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்யும் ஆசையில், தன் மனைவி சொரயாவையும் நான்கு குழந்தைகளையும் விட்டுவிலக நினைக்கிறான். விவாகரத்து தர மறுக்கும் மனைவி மீது களங்கத்தை ஏற்படுத்துகிறான், அதற்கு அந்த ஊர் முல்லாவும் துணை செல்கிறார். அவள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன தெரியுமா? 'கணவனிடம் மட்டுமே சொல்லக்கூடிய உடல் உபாதையைப் பற்றி அவள் வேறொரு ஆணிடம் சொல்லிவிட்டாள்' என்பது. அது மாதவிடாய் பற்றியதாக இருக்கலாம். அதற்காகக் கல்லெறி தண்டனையா? அதற்கும் அந்தப் பெண் 'அப்படி நான் சொல்வேயில்லை' என்று வாதிடுகிறாள். 'அதற்கு சாட்சியங்கள் இருக்கிறதா?' என்று ஊரின் மேயர் கேட்க, 'குற்றம் சுமத்தியவர்கள் குற்றத்தை நிரூபிக்கட்டும்' என்கிறாள். அதற்குப் பதிலாக வருவது "ஒர் பெண் களங்கமானவள் என்று கணவன் கை நீட்டிவிட்டால், அதை இல்லை என்று அந்தப் பெண்தான் நிரூபிக்க வேண்டும். அதே போல் ஓர் ஆண் தவறானவன் என்று ஒரு பெண் கை நீட்டினாலும் அந்தப் பெண்தான் அதற்கான சாட்சியங்களைத் தர வேண்டும்". இது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை. அவள் விபச்சாரமே செய்திருந்தாலும் அந்தப் பெண் மட்டுமா அங்குத் தண்டனைக்குரியவள்?

'ஆண் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவன் தேவையை நிறைவேற்றுபவள் தான் நல்ல மனைவி' என்ற வசனங்களும் வருகிறது. அதே போல அந்த முல்லா சொரயாவிடம் வந்து 'உன் கணவனுக்கு விவாகரத்து கொடுத்துவிடு... அதன் பிறகு என்னுடன் பேசிப் பழகு, நமக்குள் ஒரு தற்காலிக திருமண ஒப்பந்தம் அதாவது சிகேஹ் செய்து கொள்ளலாம். இது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது' என்பார். ஆண்களுக்குச் சாதகமான எல்லா விஷயங்களையும் ஓட்டைகளையும் தேடிப்பிடித்து நிறைவேற்றிக் கொள்ளும் ஈரானியர்களின் வாழ்க்கை முறையைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இப்படியாக சொரயா மீது களங்கத்தை பகிரங்கப்படுத்த முதலில் அவளைப் பற்றிய வதந்திகளைப் பரப்புரை செய்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கான காரியங்கள் நடந்தேறிவிடுகிறது.

இந்தப் படத்தில் இந்த நிகழ்வைக் கேட்டு அதனை நமக்குக் கடத்தும் அந்தப் பத்திரிகையாளரைத் தவிர மற்ற எல்லா ஆண்களும் மிக மோசமான சுயநலவாதிகளாகக் காட்டப்படுகிறார்கள். இவ்வுலகம் ஆண்களுக்கானது என்று தந்தையால் சொல்லி வளர்க்கப்படும் சொரயாவின் மகன்களும் தன்னைப் பெற்று வளர்த்த தாய் என்று கருதாமல், தனக்குரிய ஆண் செருக்கில், தாய் மீது கல்லெறிகிறார்கள். 'தாயின் காலடியில் சொர்க்கம்' என்று போதிக்கும் மார்க்கத்தில் இப்படியான தண்டனைகளை இவர்கள் எப்படி கண்டறிந்தார்கள்!?

ஆதி காலத்திலிருந்தே பல நாடுகளில் இருந்து வந்தது பெண்ணுக்கு எதிரான கல்லெறி தண்டனை. விபச்சாரியை கல்லெறிந்து கொல்லத் துணியும் மக்களை நோக்கி இயேசு பிரான் உங்களில் பாவம் செய்யாதொருவர் முதல் கல்லை வீசட்டுமென்று வரும் பைபிள் வாசகத்திலிருந்து நாம் தெளிவாக இது பழங்காலத்தில் ஆணாதிக்கவாதிகள் ஏற்படுத்திய கொடூரச் சட்டமென்று அறியலாம். அதை இன்னும் பிடித்துத் தொங்கும் நாடுகளைப் பற்றியும் பெண்கள் மீதான வன்முறை குறித்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு, அந்தச் சமயத்தில் ஈரானில் கல்லெறி தண்டனை பட்டியலில் இருந்தவரின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டதாம். இப்படத்தை ஈரான் அரசாங்கமும் பிறநாடுகளிலும் தடைசெய்திருந்தாலும் உலக மனித உரிமைகளின் கண்டனங்களுக்குச் செவிசாய்த்ததே இப்படத்திற்கான வெற்றி எனலாம்.

சொரயாவின் மீது அபாண்ட பலி சுமத்தி கணவரின் கயமையால் கல்லெறி தண்டனைக்குத் தள்ளப்படும் சொரயாவை காட்டும் அதே கிராமத்தில்தான் அவளுக்காகக் குரலை உயர்த்தி, மேயரிடம் வாதிடும், ஒரு கட்டத்தில் மேயரின் கன்னத்தில் பளீர் அறைவிடும், தான் உயிரிழந்தாலும் பரவாயில்லையென்று சொரயாவிற்கு நடந்த கொடுமைகளை தைரியமாக பிரெஞ்ச் பத்திரிகையாளரை அழைத்துத் தம் குரலை பதியச் சொல்லி அதனை உலகுக்குக் கடத்திய ஸஹ்ராவும் வாழ்கிறாள். ஸஹ்ராவாக உருமாறியது ஷொஹ்ரெஹ் அக்தாஷ்லூ (Shohreh Aghdashloo) என்பவர். தனக்குத் தந்துள்ள கனமான பாத்திரப் படைப்பை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

தண்டனையை தெரிவித்த பிறகு அவள் சொரயாவிற்கு தலைவாரிவிடும் போது இருவரும் பாடுவார்கள். அவர்கள் பாடும் வார்த்தைகளின் பொருள் புரியாமலே அந்தக் காட்சியில் நம் கண்களை நிரம்பச் செய்துவிடுகிறார்கள். இறுதியாக விடைபெறும் தாய், என்ன நிகழவிருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியாத மகள்களை முத்தமிட்டு கட்டியணைக்கும் காட்சி நம்மை உலுக்கியெடுத்துவிடுகிறது. கல்லெறிவதற்காக சின்னப் பொடியன்களும் கற்களைத் தேடி அலைவதும், சரமாரியாகக் கல் மழை பொழிந்து இரத்த வெள்ளத்திலிருக்கும் சொரயாவின் அருகில் அலி சென்று அவள் கண்கள் அசைவதை பார்த்து 'இந்த விபச்சாரி இன்னும் உயிருடன் இருக்கிறாள்' என்று ஓலமிடுவதும் மனதில் அழியா ரனங்களை ஏற்படுத்துகிறது.

அதிகாரத்தை பயன்படுத்தி மதமெனும் போர்வையில் எளிதாக அடுக்குமுறைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு 'The Stoning of Soraya M' ஒரு உதாரணம். இன்னும் பல நாடுகளில் பெண்களுக்கெதிரான கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வலிகளுக்கு எங்கே எப்போது விடை கிடைக்கும்??

மனதிடமுடையவர்கள் படத்தை இங்குப் பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=HEKDnGn9Bw0
திரைப்படத்தின் டிரெய்லரை மட்டும் பார்க்க விரும்பினால்: http://www.thestoning.com/flash.php
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி