Monday, April 01, 2013

எங்கே அவள்?


'Money.. Money... Money' இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர.

கணவன் - மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று இருப்பதால் ரோஷிமாவை பார்த்துக் கொள்ள சாந்தியை சொந்த ஊரிலிருந்து வரவழைத்திருந்தார்கள். ரோஷிமா மூன்று மாதமாக இருக்கும் போது அனிதாவிற்கு திருப்தி தரக்கூடிய, மனதிற்குப் பிடித்த, நம்பிக்கைக்குரிய, இவள் மகளை தன் குழந்தையாக பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்ட போது அவள் சகோதரி வீட்டில் வேலை செய்யும் சாந்திதான் அவள் நினைவுக்கு வந்தாள். பல வருடமாக அங்கு வேலை செய்யும் ஆதரவற்ற சாந்தியைக் கெஞ்சிக் கூத்தாடி தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள் அனிதா. தன் பெயருக்கேற்றாற் போல் சாந்தி அமைதியானவள். முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க களையான முக அமைப்பு கொண்ட பெண். வீட்டு வேலை செய்பவளாக இருந்தாலும் நேர்த்தியாக உடுப்பு உடுத்தி கொஞ்சம் மிடுக்கான தோற்றம் அளிக்கக் கூடியவள். குழந்தைப் பராமரிப்போடு, வீட்டைக் கவனித்துக் கொள்வது, சமையல் என்று எல்லாமும் சாந்திதான். மூச்சுக்கு முண்ணூறு தடவை “சாந்திமா சாந்திமா” என்று ரோஷிமா அவளையே சுற்றி வருவது சமயங்களில் அனிதாவுக்கே பொறாமையைத் தந்திருக்கிறது. அனிதாவும் மிகுந்த நேசத்துடன் ”சாந்தி அக்கா, சாந்தி அக்கா” என்று பழகி வேலை ஏவுவாள். கரனைப் பொருத்தவரை சரியான சம்பளத்திற்கு செம்மையாக வேலை செய்பவள்.

---000---

புது வருடத்திற்கு முன்பே தன் புது வீடு தயாராகிவிட வேண்டுமென்று அதிகம் மெனக்கெட்டு கரனுக்கும் தெரியாமல் பொறியாளருக்கும், மேஸ்தரிக்கும், வேலையாட்களுக்கும் தாராளமாக வழங்கி வீட்டை மிகக் கச்சிதமாக அமைத்த திருப்தியில் இருந்தாள் அனிதா. இது இவர்களுக்கு முதல் வீடல்ல. ஆனாலும் இந்தப் புதிய வீட்டை இவர்கள் தங்கும் இல்லமாக்கி மற்றதை வாடகைக்கு விடும் எண்ணத்துடன் எழுப்பப்பட்டது. அந்த இருபது மாடிக் கட்டடத்தில் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் இரண்டு வீடுகளில் 901-ஆம் வீடு அனிதா கரனுடையது. கரனுக்கு ’அப்பார்ட்மெண்ட் டைப்’ பிடிக்கவில்லை ஆனால் பில்டர்கள் இவர்களுக்குப் பிடித்த வகையில் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னதும் ஒப்புக் கொண்டார்கள். பெரு நகரத்தின் மத்தியில், பரபரப்பான வீதியில், எல்லா வசதிகளும் சூழ்ந்த, உயர்ந்த கட்டடத்தில், பலதரப்பட்ட சவுகரியங்களுடன், விசாலமான வீடு அமைவது அவ்வளவு சுலபமல்ல. எழுபது வீடுகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் இவர்களையும் சேர்த்து குடிவந்திருப்பதென்னவோ முப்பத்தியோர் பேர்தான்.

குடியேறி சில தினங்களே ஆனதால் பக்கத்துவீடு அக்கத்து வீடு என்று யாரையும் இவர்களுக்குப் பரிட்சயமில்லை. சாந்தி மட்டும் குழந்தையின் கைப்பிடித்து லிப்டில் மேலும் கீழும் சென்று எது எங்கே இருக்கிறதென்று அனிதாவிடம் சொல்லிக் கொண்டிருப்பாள். வீட்டில் உள்ளவர்களுடனே பேச அதிகம் நேரமில்லாத கரன் - அனிதாவுக்கு அயலார்கள் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை.

வீட்டில் மிச்ச வேலைகளான தச்சு வேலை, பெய்ண்ட் டச்சப், தரையில் படிந்த கரை துடைப்பு, குழாய் தண்ணீர் அழுத்தமாக வரவில்லை, பைப் கேஸ் தொடர்பு இன்னும் முழுமை பெறவில்லையென்று பல விஷயங்கள் கிடப்பில் இருந்ததால் விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களிலும் வீட்டிற்கு ஆள் வந்து வேலை செய்த வண்ணமிருந்தார்கள். இருநாட்கள் பெய்ண்டர் வந்தால், மூன்று நாட்கள் தச்சு வேலையாள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து போய் கொண்டிருந்தார்கள்.

அன்றும் அப்படித்தான் அனிதா உள்ளே நுழையும் போது கறை படிந்த பற்களுடன் கருத்த ஒருவன் ஸ்விட்ச் போர்டை தின்னர் வைத்து துடைத்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இளித்தான். அனிதா ஒரு புன்முறுவல் தந்துவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். அதிசயமாக ஐந்தரை மணிக்கே வீடு திரும்பிய அனிதா கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு, பின்பு எழுந்து உடை மாற்றி சத்தமே இல்லாத வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் முகப்பில் வந்து ”சாந்தி” என்று குரல் கொடுத்தாள். அவள் குரல் அவளுக்கே எதிரொலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தாள். கழிப்பறையில் யாரோ தண்ணீர் திறப்பது போல் கேட்க உள்ளறை கழிப்பறைக்குச் சென்றாள் அங்கு உயரமான ஒருவன் பளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் இந்த பிரஷர் போதுமா மேடம் என்று தண்ணீரைத் திறந்துவிட்டு கேட்டான். ‘ம்ம்’ என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து மறுபடியும் ‘சாந்தி’ என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தினாள். பதிலில்லை. மீண்டும் உள்ளறைக்குச் சென்று ப்ளம்பரிடம் ”சாந்தி எங்கே” என்றாள்.

உங்க வீட்டாளை என்னிடம் கேட்கிறாயே என்பது போன்ற பார்வை தந்து, தெரியாது என்பது போல் உதட்டைப் பிதுக்கி இடதும் வலதுமாக தலையசைத்தான். இவள் அறைக்கு மீண்டும் வந்து இவளுடைய கைப்பேசியை கைப்பையில் தேடினால் கிடைக்கவில்லை. ‘காரிலேயே வைச்சிட்டேனோ’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, மீண்டும் ப்ளம்பரிடம் சென்று ”வேலை முடிந்ததா?” என்றாள். ”இல்ல ‘ஃபளஷ்’ வேலை செய்யலன்னு..” என்று இழுத்தான்.

கேட்டும் கேட்காதது போல் அவள் அவசரமாக வெளியே வந்து, கீழே காருக்குச் செல்ல லிப்ட் பட்டனை அழுத்திக் காத்திருந்தாள். ரோஷிமா அழும் குரல் எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருந்தது. அது ரோஷிமாவின் குரலேதான் என்று நினைத்துக் கொண்டு எந்தத் திசையென்று தெரியாமல் “ரோஷி ரோஷிமா” என்றாள். “_____” நிசப்தம்.

மீண்டும் வீட்டுக்குள் வந்தாள் தின்னர் அப்படியே மூடி திறந்தபடி அதே இடத்தில் இருப்பதைப் பார்த்து, மீண்டும் வெவ்வேறு அறைகளுக்குச் சென்று தேடினாள். கட்டிலுக்கு அடியில், அலமாரி, அடுப்பறை, தாழ்வாரமென்று எல்லா இடத்திலும் தேடிவிட்டு, மீண்டும் ப்ளம்பர் இருக்கும் இடத்திற்கு வந்து ”உங்க பேரென்ன?” என்றாள் கனிவாக. அவனோ எதிர்பாராதவனாக “என் பேரு ராமு மேடம்” என்றான். “கொஞ்சம் உங்க செல் தரீங்களா? என் ஃபோனை காரில் விட்டுட்டேன் குழந்தை சத்தம் எங்கேயோ கேட்குது...” என்று சொல்லி முடிக்கும் முன் அவன் செல்பேசியை நீட்டினான். “தாங்ஸ்” என்று வாங்கி, வேகமாக சாந்தியின் எண்ணுக்கு அழைத்தாள். “நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது....” என்று ஒலிக்கவே, உடனே கரனுக்கு அழைத்தாள். புதிய எண் என்பதாலோ என்னவோ கரன் அழைப்பிற்கு பதில் தரவில்லை. மறுபடியும் சாந்தியை அழைத்தால் மறுபடியும் அதே போல் ‘not reachable’ என்றே வந்து கொண்டிருக்க... பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

லிப்ட் பட்டனை 8 என்று அழுத்தினாள். எட்டில் வந்து நின்றதும் எட்டிப் பார்த்து ’ரோஷி’ என்று சத்தம் கொடுத்துவிட்டு அங்கே குழந்தையின் குரல் கேட்கிறதா என்று சோதித்துவிட்டு அடுத்து 7 என்று அழுத்தினாள். இப்படி ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி பேஸ்மெண்ட் வரை பார்த்துவிட்டாள். குழந்தையின் சத்தமோ சாந்தியின் குரலோ கேட்கவே இல்லை. மறுபடியும் 9 அழுத்தி வீட்டுக்கு வந்தாள். கீழே சென்றும் மறுபடியும் காரிலிருக்கும் மொபைலை எடுக்க மறந்திருந்தாள்.

லிப்ட் அருகில் மீண்டும் வந்து “சாந்தி, ரோஷீமா” என்று குரல் கொடுத்தாள். பக்கத்து வீட்டிலிருந்து கூட யாரும் வெளியில் வரவில்லை. இவளாகச் சென்று பெல் அடித்தாள் இருட்டாக இருந்தது. யாரும் இருப்பதாக தெரியவில்லை. ’இந்த வீட்டில் குடிவந்துவிட்டதாகச் சொன்னாளே!’ என்று நினைத்துக் கொண்டே திரும்பும் போது கரன் வந்திருந்தான். “கரன், நீ, உனக்கு” என்று குரல் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாள்.

“ரிலாக்ஸ், என்ன ஆச்சு உனக்கு. உன் மொபைல் எங்க? சாந்தி ஃபோன் ஏன் ஆஃப்ல இருக்கு?” என்று எரிச்சலானான்.

“என் ஃபோன் கார்ல இருக்குன்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்கு வரும் போது யாருமே இல்ல... சாந்தி, ரோஷிமா வீட்ல இல்ல. உன் கிட்ட ஏதாவது சொன்னார்களா?” என்று பதட்டமான தொனியில் உளறலாக கேட்டாள்.

ப்ளம்பர் வீட்டிற்குளிலிருந்து வெளியே வந்தான். “சார், எல்லாம் சரி செய்துவிட்டேன்” என்று தலையைச் சொறிந்தான்.

பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்தபடி கரன் “ஆமா, நீ எத்தன மணிக்கு வந்த, நீ வரும் போது வீட்டுல யார் இருந்தாங்க?”

”சார், நான் ஒரு அஞ்சு அஞ்சேகால் மணிக்கு வந்திருப்பேன் அப்போ வீட்டுல ஒருத்தர் இருந்தாரு.” என்று யோசித்தபடி பதில் உரைத்துக் கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

“கருப்பா.... பல்லெல்லாம்...” என்று திடீர் மறதியிலிருந்து நினைவு திரும்பியவள் போல் பேசியவளைத் திரும்பிப் பார்த்தான் கரன். அவள் தொடர்ந்தாள் “பல்லெல்லாம் கறையா இருந்துதே, தின்னர் வைச்சு தொடைச்சிட்டு இருந்தானே... அவன் மட்டுமா இருந்தான்?”

”அவன் என்ன பண்ணிட்டு இருந்தான்னு தெரியாது. வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்தான், வீட்டுல ஆள் இல்லையா மெய்டெனன்ஸ் வெர்க் இருக்குன்னு சொன்னேன். ஆள் இருக்காங்க நீ உள்ள போய் வேலையப் பாருன்னு சொல்லிட்டு ஈரக் கைய அவன் சட்டையில் தொடச்சிட்டு எனக்குக் கதவத் திறந்துவிட்டான்” என்று சொல்லும் போதே அவனுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. “இதோ வந்துட்டேம்மா, கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு “சார் அப்போ நான் கிளம்பட்டா?” என்றான்.

“கொஞ்ச இருங்க. அப்ப நீங்க பார்த்த ஆள் உங்க மெய்ட்டேனன்ஸ் ஆபீஸைச் சேர்ந்தவனில்லையா..?” என்று கரனும் கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான்.

“இல்ல சார். நாங்க பொதுவா நாலு மணிக்கு முன்னாடியே வேலையெல்லாம் முடிச்சிட்டு போயிடுவோம். ஆனா இந்த வீட்டு வேலைய நாலு மணிக்கு மேலதான் பார்க்கணும்னு ஆபீஸ்ல சொன்னாங்க. அதனால வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் லேட்டா அஞ்சரை கிட்டதான் வந்தேன்..” மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்து தனக்கு நேரமாவதை காட்டிக் கொண்டான்.

“புரிஞ்சிக்கோங்க... வீட்டுல எங்க குழந்தையும், வேலை செய்ற அம்மாவும் இருந்தாங்க... இப்படி வீட்டைத் திறந்துப் போட்டுட்டு எங்கேயும் போக மாட்டாங்க. அப்ப நான் கார்ல செல்ஃபோன் எடுக்க லிப்ட் கிட்ட வரும் போது ரோஷிமா அழுகிற சத்தம் கேட்டுது... ஆமா அது ரோஷிமா குரல்தான் எனக்குத் தெரியும்...” என்று அழுகின்ற குரலில் பேசியவளை ப்ளம்பர் விசித்திரமாகப் பார்த்தான். கரன் தொடர்ந்து சாந்தியின் எண்ணுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். கரனுக்கு அனிதாவின் மீதும் கோபம். அவன் கோபத்தை வேறு எங்கு காட்டுவது? “நீ எத்தன மணிக்கு வந்த அப்போ அந்த ஆள பார்த்து நீ ஒண்ணுமே கேட்கலையா? அப்போ சாந்தி, ரோஷினி எங்கன்னு தேடலையா? என்று கடுகடுப்பான குரலில் கேட்டான்.

”நான் வரும் போது ஒருத்தன் தின்னர் வைச்சு ஸ்விட்ச் போர்ட் தொடைச்சிட்டு இருந்தான். நான் உள்ள போய் டிரஸ் மாத்திட்டு வெளியில் வந்தப்ப அவனில்ல. உள்ள ப்ளம்பர் மட்டும் இருந்தாரு...” என்று தெளிவாக்கினாள்.

இதற்கிடையில் கரன் மெய்டெனன்ஸ் ஆபீஸுக்குப் பேசி இன்று வெறும் ப்ளம்பரை மட்டும் தான் 901-க்கு அனுப்பியிருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான். அவர்களுக்கு வேலையாள் பற்றியோ, இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது பற்றியோ தெரியவே தெரியாது என்றார்கள். அதனாலேயே மெய்டெனன்ஸுக்கு ஐந்து மணிக்கு மேல் போனால் போதுமானது என்று சொல்லியிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

என்ன செய்வதென்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் குழந்தையின் அழுகை கேட்டது. “கேட்குதா? அந்து நம்ம ரோஷிமாதானே?” என்று நம்பிக்கை வந்தவளாக அனிதா சொல்ல..

”ஆமா ரோஷி சத்தம் மாதிரிதான் கேட்குது என்று லிப்டில் போகாமல் படிக்கட்டுக்கு போகும் கதவைத் திறந்ததும் சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. சத்தம் மேல் திசையிலிருந்து வந்ததையுணர்ந்து மூன்று பேரும் அதை நோக்கி நடந்தார்கள். பத்தாம் தளத்தில் யாருமே இல்லை. வந்த சத்தமும் நின்றிருந்தது. இன்னும் மேலே ஏறினார்கள், அங்கு ஒரு பாட்டியின் குரல் “அழாதே கண்ணு அம்மா வந்திருவா” என்று சமாதான்ப்படுத்திக் கொண்டு இருந்தது.... பதினொன்றாவது தளத்தில் ரோஷிமா.

ரோஷியைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டாள் அனிதா. பாட்டியின் வீட்டுக்குளிருந்து அனிதாவின் வயதொத்த பெண் வந்து ”இது உங்க குழந்தையா? பாவம் நாலு மணியிலிருந்து படியில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா. படிக்கெட்டில் மேலும் கீழும் போறாளே தவிர வீட்டுக்குள் வர மறுத்துட்டா. எங்களுக்கும் யார் வீட்டு குழந்தைன்னு தெரியல... சாந்திம்மான்னு அழுததால மெய்ட்டெனன்ஸ் ஆபீஸில் சாந்தின்னு இங்க யாராவது இருக்காளான்னு கேட்டோம். அவாளுக்கு தெரியலைன்னா... இன்னும் ஒரு மணி நேரம் பார்க்கலாம் இல்லாட்டி போலீஸில் சொல்லலாம்னு இருந்தோம்” என்று நிலையுணர்த்தியவளிடம் ”உங்களுக்கு சாந்தியை தெரியுமா?” என்று பைத்தியக்காரத்தனமாகக் கேட்டாள் அனிதா.

“யாரு சாந்தி? அச்சச்சோ அப்ப இது உங்க குழந்தை இல்லையா...?” என்று கேட்டு குழப்பிக் கொள்ள..

”இல்ல சாந்தி எங்க வீட்டுல வேலைக்கு.....” என்று அனிதா விளக்குமுன்...

“ரோஷி, சாந்தி எங்கடா?” அனிதாவின் கையிலிருக்கும் ரோஷியின் கண்களைத் துடைத்தபடி கேட்டான் கரன்.

மழலையில் ரோஷி “சாந்திமா சாந்திமா” என்று தெம்பில்லாமல் தேம்பினாள்.

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியிலும், சாந்தி பற்றி விவரம் தெரியாத பதற்றத்திலும் மேல் வீட்டினருக்கு நன்றி கூட சொல்லாமல் கீழே இறங்கி வீட்டுக்கு வந்தார்கள்.

----000----

ஒரு வருடமாகி இருந்தது. சாந்தியின் இடத்தில் இப்போது பார்வதி. சாந்தியை பற்றி இன்னும் எந்த தகவலுமில்லை. சாந்தியை யாரேனும் ஏதேனும் செய்துவிட்டார்களா அல்லது சொல்லாமல் ஓடிப்போய்விட்டாளா? என்று இவர்களால் ஊகிக்க முடியவில்லை. அவளுக்கு உறவில்லாததால் அவளை யாரும் தேடி வரவுமில்லை இவர்களும் தேடிப் போகவில்லை போலீஸிலும் புகார் தரவில்லை.

[நன்றி: அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா மலருக்காக நான் எழுதிய சிறுக்கதை]

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி