Tuesday, July 28, 2020

பூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்



குழந்தைகளுக்குப் பூனை வளர்க்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை. ஆனால் அது பெரிய பொறுப்பு என்று தட்டிக் கழித்தோம். அப்படியான அர்ப்பணிப்பு நம்மால் முடியாது என்று சொல்லியும் கேட்காததால், "நிரந்தரமாகத் தத்தெடுக்க வேண்டாம். 'வீட்டிலிருந்து கல்வி' என்ற நிலை முடியும் வரை 3-5 மாதங்கள் மட்டுமே கேட்டு வளர்க்கலாம் (fostering rather than adopting)" என்று மகள் வற்புறத்தவே ஒப்புக் கொண்டோம்.

அதன்படி போன மாதம் 'அக்கிட்டோ' என்ற பூனையை வளர்க்க எடுத்தோம் Red Paw Foundation-ல் இருந்து. கணவரும் நானும் அவனைப் 'பம்சி' என்று அழைத்தோம். மகனும் மகளும் 'யுக்கி' என்று அழைத்தனர்.

'நான்கு மாதமாக அடைபட்டுக் கிடந்தான்' என்றார்கள் பூனையைக் கொடுத்தவர்கள். வந்தவுடன் எங்கள் நான்கு பேருடனும் நன்றாக ஒட்டிக் கொண்டான். வருடு என்பான், கட்டித் தழுவச் செய்வான், 'மியோவ்' என்பதை விதவிதமாகச் சொல்லி தன் வசப்படுத்துவான், அவன் மொழி எங்களுக்கும் எங்கள் மொழி அவனுக்குமாக ஒரு புரிதலோடு இருந்தோம்.

முன்பெல்லாம் நான் அலுவலகத்தில் இருந்து வந்தால், அழைப்பு மணி அடித்ததும் குழந்தைகள் ஓடி வருவார்கள், என் கால்களைக் கட்டிக் கொள்வார்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதுவுமே ஈடு செய்ய இயலாது. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அப்படி ஓடி வருவதெல்லாமில்லை. நாம் போய் நின்றால் 'சலாம்' அல்லது 'ஹாய்' அவ்வளவுதான். அந்த மகிழ்வான தருணத்தை மீண்டும் எனக்கு பம்சி தந்தான்.

நான் அலுவலகத்தில் இருந்து வந்து அழைப்பு மணி அடித்ததும், அடித்துப் புரண்டு ஓடி வருவான். குழந்தைகள் என் கால்களைக் கட்டிக் கொள்ளும் அதே உணர்வை மீண்டும் தந்தான். ஆனால் எங்களுடன் விளையாட மாட்டான்.

மற்ற பூனைகளைப் போல் விளையாடவில்லையே, என்று கேட்டபோதுதான் சொன்னார்கள் அவனுக்கு இருக்கும் வியாதியைப் பற்றி. அவன் மற்ற பூனைகளுடன் சேர்த்து வைக்க முடியாத நோய் தொற்று உள்ளது என்றர்கள். அதன் பிறகு அவன் மீது அன்பு கூடியதே தவிர குறையவில்லை. அவனை நேசிக்கும் யாரோ ஒருவரும் அவனுக்கான உணவெல்லாம் அமேஸான் வழியாக அனுப்பினார்கள். நன்றாகத்தான் சென்றது. ஒரு வாரமாக அவனுக்கு வயிற்றுப் போக்கு. சரி வெவ்வேறு உணவு வேண்டாம் ஒரே உணவாகக் கொடுங்கள் என்றார்கள்.

என் கணவரும் குழந்தைகளும் பேசுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. உட்காரு, அங்கே போகாதே என்றெல்லாம் மிரட்டுவார்கள் கேட்டுக் கொள்வான். தவறு செய்தால் தலை குனிவான். அவன் செய்யும் ஒரே தவறு வயிற்றுப் போக்கால் சமயங்களில அவன் மலம் கழிக்கும் இடத்திற்கு வெளியே தவறுதலாக வயிற்றுப் போக்கின் காரணமாக நேர்ந்துவிட்டால் சங்கடப்படுவான்.

முன் தினம் வயிற்றுப் போக்கு கூடவே வாந்தியும். ஒரு வாரம் நடப்பதையெல்லாம் அந்த நிலையத்திற்குத் தெரிவித்துக் கொண்டேதான் இருந்தேன். சரியாகும். 'Wet' உணவு வேண்டாம், வெறும் 'dry' உணவுபோதும் என்றெல்லாம் வழிநடத்தினார்கள். நேற்று அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் அசந்து தூங்கிவிட்டேன் (25 ஜூலை). நான் தூங்கும் போது என் அருகில் நின்று என்னையே ரொம்ப நேரம் பார்த்ததாக நான் எழுந்தவுடன் சொன்னார்கள். அமைதியாக இருந்தான். அவனுக்குப் பிடித்த உணவை ஒரே ஒரு கரண்டி மட்டும் தந்தேன், அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால். அவன் எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டால் அதுவும் ஒரே ஒரு கரண்டியென்றால் மீண்டும் வந்து மியாவ் என்பான். ஆனால் நேற்று அப்படியெல்லாம் கேட்கவில்லை. நான் போகுமிடமெல்லாம் பின்னால் வந்து உட்கார்ந்து கொண்டான் சமர்த்தாக. இரவு அவன் இடத்தில் படுக்காமல் நாங்கள் படுக்கும் கட்டிலுக்குக் கீழே படுத்திருந்தான்.

குழந்தைகள் அவனுக்கு உணவைக் காட்டி வெளி இழுத்து வந்து 'உன் இடத்திற்குப் போ' என்றதும், மறுப்பில்லாமல் போய் படுத்துக் கொண்டான்.

காலையில் முதலில் அவனை உயிரற்ற உடலாகக் கணவர்தான் பார்த்து என்னை அழைத்தார். நானும் குழந்தைகளும் கதறி அழுதோம். நிறுவனத்திற்கு அழைத்துத் தெரிவித்தோம். என் லவ் பேர்ட்ஸ்களைப் பார்த்தால் அதிலும் ஒன்று இறந்து இருந்தது. இதுவரை நான் வளர்த்த பறவைகளுக்காகவும், மீன்களுக்காகவும் இவ்வளவு அழுததில்லை. இவனுக்கு நோய், இறந்துவிடுவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் போய்ச் சேர்வானென்று நினைத்திருக்கவில்லை.

கால்நடை மருத்துவமனையில் நல்லடக்கம் செய்ய அழைத்து வரச் சொன்னார்கள். கணவர் சென்று பம்சியைக் கொடுத்து வந்தார். இனி என் அழைப்பு மணி கேட்டு ஓடி வர அவன் இல்லாத வெறுமையைச் சூழ்ந்துள்ளது எங்கள் இல்லம். #பூனை

Monday, July 13, 2020

ஒரு சொல் சில மெளனங்கள்

"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன். உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்" இப்படியாக வித்தியாசமான கற்பனையைப் பாடலில் கேட்டதும்தான் அதை எழுதியது யாரென்று அறிந்து, இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். எனக்குப் பிடித்த ஒவ்வொரு பாடலையும் அவரே எழுதியிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவுக்கு அத்தனை நல்ல பாடல்களையும் அவர்தான் எழுதினார். 

'என்  பூக்களின் வேரோ இவன்... 
என் பெண்மையை  வென்றான் இவன் ...
அன்பானவன்....'

'வேறென்ன வேண்டும் உலகத்திலே... இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்'

'ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்'

இதைவிட அதி அற்புதமான வரிகளையெல்லாம் எழுதிவிட்டார். அவருடைய தனித்துவமே அவருடைய எளிமையான வார்த்தை தேர்வு. அருமையான சுலபமான
எளிமையான வார்த்தைகளில் சிம்மாசனத்தையே கட்டினார், ஆண்டு தோறும் தேசிய விருதைக் கைப்பற்றினார். 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது பல இடங்களில் புன்னகை பூக்கச் செய்தார். 'குழந்தைகள் நிறைந்த வீடு' தொகுப்பில் நாம் அன்றாடம் பார்க்கும், படிக்கும், கற்பனை செய்யும் நிகழ்வுகளை... 
 
இறந்த பாட்டியின் மருந்துக் குப்பியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன.

மனதைத் தொடும் ஹைக்கூவாக காட்சிகளைப் பதிய வைத்தார். 

வாழ்வில் ஒருமுறையாவது இவரை சந்திப்பேன் என்று எண்ணி இருக்கும்போது தனது நிறுத்தத்தில் சொல்லாமலே இறங்கிவிட்டார், மனதில் நீங்காத வார்த்தைகளைப் பாடல்களாக நம் உதடுகளில் விட்டுச் சென்றுவிட்டார் நா. முத்துக்குமார். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவர் இருந்திருந்தால் 45 வயது மட்டுமே முடிந்திருக்கும்.

Sunday, July 05, 2020

முரண்பாடு


தூய்மையான காற்று

நாம் முகமூடியில்.

வெறுமையான சாலைகள்

நாம் வீட்டுக்குள்.

சுத்தமான கைகள்

தீண்டாமை அமலில்.

செல்வந்தர்களுக்கு

செலவிட வழி இல்லை.

இல்லாதவர்களுக்கு

சம்பாதிக்க வழி இல்லை.

நேசத்திற்குரியவர் நோயில்

நேரில் நலம் அறியவில்லை.

அன்புக்குரியவர் இறப்பு

அருகில் அழவில்லை.

நேரான எண்ணங்கள்

எதிர்பார்ப்பில் எதிர்மறை.

விசித்திர உலகம்

விந்தை மனிதர்கள்.


-ஜெஸிலா

04 ஜூலை 2020

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி