Wednesday, February 26, 2014

தவிக்க வைத்த 'நூறு நாற்காலிகள்'

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது.
எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், அப்படியான சூழலை மட்டுமே கடந்து வந்திருக்கிறேன். ஒரு வேளை சென்னையில் வளர்ந்ததால்தான் இப்படியா என்று என் நண்பரிடம் வினவுகையில் 'இல்லை, விபரம் தெரியாமலே வளர்ந்திருப்பாய்' என்றார். இருபது வயது வரை சென்னை காற்றையே சுவாசித்தவளுக்குச் சாதி பாகுபாடு, தீண்டாமை, கீழ் சாதி- மேல் சாதி பிரிவினை, அலட்சியப் பார்வைகள், ஒதுக்கி வைத்தல் போன்ற எதையுமேவா நான் சந்தித்ததில்லை? நான் வளர்ந்த 'பீட்டர்ஸ் காலனி' சூழலில் எல்லோருமே தாய்- பிள்ளை உறவுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தோமென்றால் மிகையில்லை. அஃது அன்றைய 'சொர்க்க பூமி'. அதைப் பற்றி வேறொரு சூழலில் தனிப் பதிவே எழுதியாக வேண்டும்.

இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்களைப் போல் என் வாழ்வில் நான் யாரையுமே சந்தித்ததே இல்லை. 'நாயாடி' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. நல்லவேளையாக அப்படியான ஒரு சூழல் இன்று இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்கிறேன். 'நாயாடி'களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட துயர சூழலை அறிந்ததுண்டா? நாயாடிகளைக் கண்ணால் பார்த்தாலும் தீட்டுப்பட்டுவிடுமென்ற எண்ணம் அப்போது இருந்ததாம். எப்படி ஒரு மனிதரைப் பார்த்தாலே தீட்டு? தீட்டென்றால் என்ன? எனக்குத் தெரிந்து அசுத்தம் என்பதே அதன் பொருள், எப்படி அது பார்வையால் உண்டாகும்? சகமனிதரை எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த முடியும்? இப்படி பற்பல கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. என்னால் இதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்க முடியாத இந்தத் துயரைக் கண் முன் விரியச் செய்து ஒவ்வொரு கதை மாந்தரின் முகத்தையும் என் கண்களில் காட்சியாக்குகிறார் தனது எழுத்தாளுமையால் ஜெ.மோ.

காப்பன் என்ற கதைநாயகன் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவர் வடுக்களைக் கைகளால் நானே தடவிப் பார்த்துவிட்டேன். அவருடைய வலியை என் விரல்கள் தொட்டு வருடி சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறது. இப்படியெல்லாமுமா ஒர் உயிருள்ள ஆத்மாவை வதைப்பது? 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். ஆனால் மனிதப் பிறவியும் இன்ன சாதியில்தான் பிறத்தல் நன்று என்பதாக நம் வாழ்வியல் இருந்துள்ளது. நாமெல்லாம் அதன் சாட்சிகள் என்றெண்ணும் போது பதைபதைக்கிறது மனது.

ஆஸ்கர் நாயகர் இயக்குனர் அஸ்கர் பர்ஹதியின் படத்தில் ஒரு காட்சிப்படுத்தலில் ஏற்படும் வலிமையை, தாக்கத்தை எப்படி இவர் எழுத்தின் மூலம் ஏற்படுத்த முடிகிறது என்று திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்கிறார். காப்பனின் தாயைப் பன்றி என்கிறார், தெருநாய் என்று விளிக்கிறார், முலைகளை அழுக்கு மூட்டை என்கிறார், 'யானை டாக்டரில்' புழுவை கைக்குழந்தையென்றார். இதிலும் 'நகரம் நாயாடிகளைக் குப்பைகளாக ஒதுக்கினாலும் அவர்கள் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்' என்று குறிப்பிடுகிறார். வயதானால் வார்த்தைகளும் சுருங்கிவிடும் என்பதை மிக அழகாக 'சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன்' என்று பிரிக்கிறார். இப்படிக் கதை முழுக்க ஒவ்வொரு வரிகளிலும் வலியோடு பேசியுள்ளார் எழுத்தாளர். இதை எழுதும் போது, அதுவும் பாதிக்கப்பட்ட காப்பனாக தன்னை நினைத்துக் கொண்டு எழுதும் போது மன ஆழத்தில் ஏற்பட்ட உணர்வின் வெடிப்பாக இக்கதை விரிகிறது.

படிக்கும் போது பேசும் ஒவ்வொரு பாத்திரமும் நாமாகிவிடுகிறோம். சாக்கடையிலும் அழுக்கிலும் ஊறிய அந்தத் 'தாய்ப்பன்றி'யின் முகத்தையும் அவரின் புரிந்து கொள்ள முடியாத பதற்றத்தையும் நமக்கு கடத்திவிடுகிறார். தாயைச் சமாதானப்படுத்தும் போது காப்பனாகவும் நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம். விளிம்புநிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோம். கையாலாகாதக் கழிவிரக்கத்தோடு நாமும் அவமானமாய் உணர்கிறோம். ஆனால் அலட்சியப்படுத்தும் மக்களோடு நாமும் ஒர் அங்கமாக இருக்கிறோம் என்பதில் மட்டும் எனக்குப் பெரிய சங்கடம்.

வித்தியாசமான, நான் எங்கேயுமே கேட்காத சொல்வழக்கு இந்தக் கதை முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. அந்தப் புரியாத மொழியையும் நமக்குப் புரிய வைக்கிறார் விளக்காமலே. எப்படி இதெல்லாம் சாத்தியம்? இந்தக் கதையை ஆழமாக வாசித்தால் தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக உணர்ந்து நாற்காலியில் உட்காருவது கூடாது, மேல் அங்கி உனக்கு வேண்டாம், மேல்மட்டத்தாரை பார்த்தாலே ஓடி ஒதுங்குபவரும் கூட ஒரு மேல்மட்ட பெண்ணைப் பார்த்தால் பயப்படாமல் கோபத்தை வெளிப்படுத்துவது, பொருட்களைத் தூக்கி வீசுவதும் சுலபமாகிவிடுகிறாது. "சுபா மீது அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது, எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு" என்று தன் தாயின் கோபத்தை புரிந்துக் கொள்பவராக வரும் சொற்களைப் படிக்கும் போது எந்த சாதியென்றாலும் எல்லாவற்றையும் விட மிகத் தாழ்ந்த சாதி ஒரு பெண் என்ற உண்மை வலிக்கவே செய்கிறது.

பிறப்பையும் அதன் பின்னணியையும் வைத்து ஒதுக்கப்படும் ஒருவர் திக்கித் திணறி நீந்தி மேலே வரும் போது மூச்சடைக்க வைத்து மீண்டும் அழுத்துவதைக் கதையாக 'நூறு நாற்காலிகள்' என்று தலைப்பிட்டுள்ளார். கடைசியில் "அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன்" என்று வாசிக்கும் போது "இல்லை, நீ போராடு உன்னால் முடியுமென்று' 'திக் பிரம்மைப்' பிடித்தவளாக எனக்கு நானே பிதற்றிக்கொண்டிருந்தேன். என்னவோ என் தவிப்புக்காகவே 'நூறு நாற்காலிகளை' வேண்டி நிற்கிறார் என்பது போல் முடிந்தது கதை. அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தக் கதையை வாசித்தாக வேண்டும். எப்படியான சமூதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது இருந்தோம் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காகவாவது.

படித்து முடித்துவிட்டிருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன். ஆசிப்பிடம் இதைப் படித்தீர்களா? இந்தக் கதையே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அறத்தை எடுத்து அவர் கையில் திணித்து இந்தக் கதையைப் படியுங்களேன் என்றேன். எல்லாம் ஒரு சுயபரிசோதனை செய்துக் கொள்வதற்காகத்தான். எனக்கு மட்டும்தான் இப்படிக் கிறுக்கா அல்லது படிக்கும் எல்லாருக்கும் ஏற்படுமாவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஜெ.மோ.வை தொலைபேசியில் அழைத்து இது பற்றிச் சொல்லி கைப்பேசியை என்னிடம் தந்தார். நானும் திடீரென்று தந்துவிட்டாரே என்று திக்கித் திணறாமல் மிகச் சரளமாக மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லி முடித்தேன் அவரைப் பேசவிடாமல். மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தந்த அவதாரமெடுத்து அந்தந்தக் கதையை எழுதியதாகச் சொன்னார். மிகவும் பரிச்சயப்பட்டவர் போல பேசினார். எனக்கும் அப்படியே இருந்தது. நான் எப்போதும் கதையிலும் எழுத்திலும் ஏற்படும் பிரமிப்பை எழுதுபவர் மீது செலுத்துவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்.

Monday, February 17, 2014

விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் '101 சோதியங்களின்' 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.

குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை குறித்துக் கேள்வி எழுப்பினாலோ, அல்லது நம்மையே கேள்விக்குள்ளாக்கினாலோ, அல்லது அவன் தெரிந்து கொள்ளக்
கூடாது என்று நாம் எண்ணும் அந்த விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்டாலோ உடனே நாம் அவர்களை அதட்டி அடக்குகிறோம். 'வயசுக்கு மிஞ்சியப் பேச்சு', 'வாய் நீளம்', 'அதிகப்பிரசங்கி' என்றெல்லாம் சொல்வதும் அதனால்தான். இப்படியான கேள்வியைக் கேட்கும் சிறுவனான அனில் குமார் பொக்காரோவை 101 கேள்விகள் எழுதித்தர கேட்கிறார் அவன் ஆசிரியர். அதில் அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த ஒவ்வொரு கேள்விக்கும் 1 ரூபாய் தருவதாகவும் சொல்கிறார்.

- ஏன் சிலந்தி தன் வலையில் தானே சிக்கிக் கொள்வதில்லை?
- வானத்தின் நிறம் மாற்றத்தின் காரணமென்ன?
- மீன்கள் மூச்சுவிடுவது எப்படி?

இப்படியாக தான் பார்க்கும் விஷயங்களை, தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வின் சந்தேகங்களை தன் முதுகில் கேள்விகளாகச் சுமந்தபடி ஒரு பட்டாம்பூச்சி அமிழ்தத்தைத் தேடி திரிவது போல் அவனும் தேடித் திரிகிறான். அதற்காக எல்லா 'ஃபிரேமிலும்' பட்டாம்பூச்சியைக் காட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், செலவில்லாத சொற்ப கதாபாத்திரங்களைப் படைத்து அதில் ஒவ்வொருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

கேள்விகளைச் சேகரிக்கும் பொக்காரோவின் உடல்மொழி, உணர்ச்சி பொங்கப் பேசும் அவன் கண்கள், அழுத்தத்தை அழகாக காட்டியுள்ள விதம், அவன் அலட்சியப் புன்முறுவல் என்று அந்த கதாபாத்திரத்திற்கு அத்தனை பொருந்தியிருக்கிறார் பொக்காரோவாக வரும் மினோன். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர் என்றாலே மதிப்பும் மரியாதை என்ற சொற்களும் கூடவே வந்து நிற்கும். அந்த மரியாதைக்குரிய இடத்தை சரியாக நிரப்புகிறார் இந்திரஜித். வகுப்பறையில் ஆசிரியரே தெய்வம், அவர் சொல்வதே வேத வாக்கு, அவர் ஏதும் கேட்டுவிட்டால் உடனே தந்து அவருடன் நெருக்கமாக வேண்டுமென்ற பண்பு பொதுவாக எல்லோரிடமும் உண்டு. நான் படிக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். 'தனியொருவருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி போல் இந்த படத்தில் வரும் ஆசிரியர் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவர்களால் முடிந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு மற்றொன்றையும் எடுத்து வர கேட்கிறார். அவர் கேட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக வீட்டில் அடம்பிடிக்கிறான். அவன் பள்ளிக்குத் தயாராகிவிட்டு பொட்டலத்தை எதிர்பார்த்து நிற்கிறான். அம்மா அதனை நீட்டியதும் இயல்பாக கட்டி அணைத்துக் கொள்கிறான். இப்படி எந்தெந்த வயதில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்தால் தான் அந்த தாய்க்கு மகிழ்ச்சி. பசிக்கிறது என்று குழந்தை அழ வேண்டும். கேட்ட பொருள் கிடைக்கும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அடித்தால் அழ வேண்டும் என்ற இயற்கை மரபிலிருந்து சிறிது விலகி நின்றாலும் அந்தத் தாயுள்ளம் பதறும்.

பொக்காரோ கேள்விகளைத் தேடி நேரத்தோடு வீடு திரும்பாததால் அழுகையுடன் உட்கார்ந்திருப்பாள் அவன் தாய். அவன் திரும்பி வந்ததும் "எங்கே சென்றாய்?" என்ற கேள்வியுடன் கம்பெடுத்து விலாசிவிட்டு "என் குழந்தை அழவில்லையே இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று குரலெடுத்து அழும் தாய். வேலையில்லாத தந்தை, நோயுற்றவர் என்று தன்னை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பறிபோன வேலைக்காக போராடும் அன்பான அப்பா. மனவளர்ச்சி குன்றிய தங்கைக்கு வார்த்தைகளை கோர்க்க சொல்லிக் கொடுக்கும் காட்சியில் மினோன் மிகச் சிறப்பாக அழுத்தம் திருத்தமாக உண்மையிலேயே அந்தக் குழந்தைக்கு உச்சரிப்பு சொல்லிக் கொடுப்பது போலவும், அவளை முதுகில் சுமந்துக் கொண்டு 'பரோட்டா' என்ற வார்த்தைகளைச் சொல்லித் தருவதும், அவள் ஏன் மற்ற குழந்தை போல் இல்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையில்லாமல் தவிக்கும் போதும் தெரிந்து கொள்கிறான் சில கேள்விகளுக்கு சரியான விடைகளை இன்னும் கண்டறியவில்லையென்று. இப்படி ஒவ்வொரு பாத்திரப் படைப்புகளும் அபாரம்.

உலகப்பட தரத்தில் மலையாளப் படங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இப்படியான படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கே இடமில்லை. நம் இரசனை அப்படி. நமக்கு வாய்த்தது நமக்கு கிடைக்கவே செய்கிறது. அதனால் ஆதங்கமும் பொறாமையும் பட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். முடிந்தால் '101 சோதியங்களை' கேள்விகள் கேட்காமல் பார்த்துவிடுங்கள்.

Thursday, February 06, 2014

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு உண்டு. ஜெ.மோ.வின் 'யானை டாக்டர்' படித்த பிறகு அந்த அன்பு காதலாகிப் போனதென்றால் மிகையில்லை.

'யானை டாக்டர்' படிக்கும் போது என்னமா எழுதுறாருப்பா என்று பிரம்மிக்க வைக்கும் எழுத்துநடை. நமக்கே தெரியாமல் நம்மை காட்டுக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி, சூழல் புரிய வைத்து, ஒவ்வொன்றையும் வேறு கோணத்தில் இரசிக்கச் செய்து, சராசரி மனிதர்களான நம்மையே சுயம் வெறுக்கச் செய்து, மிருக உலகத்தை படிக்கச் செய்து அசர வைத்திருக்கிறார் ஜெ.மோ. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே வேகத்தில் பயணிக்கிறது. கதையல்ல வாழ்வுதான், நடந்த உண்மைதான், ஆனால் அந்த சம்பவங்கள் ஆழ் மனதில் பதிய வைக்க அவருடைய கதையோட்டமும் சொற்பிரயோகங்களும் கிறங்க வைக்கிறது.

ஒவ்வொரு கதைக்கரு பிறப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா? இந்தக் கதை பிறப்பதற்கான காரணத்தைக் கதையிலேயே கண்டு கொண்டதாக உணர்ந்தேன். மிருக உலகைப் பற்றியோ, அதன் இயல்பைப் பற்றியோ, காட்டின் வாழ்வும் சூழலைப் பற்றியும் பள்ளியிலேயோ கல்லூரிலேயோ படித்திருக்க மாட்டோம். நம் தலைமுறையில் பெரும்பாலோருக்கு லட்சியமெல்லாம் படிப்பதும், வேலைக்குப் போய் சம்பாதிப்பதும்தானே தவிர கனவுகளோ இப்படியான தெய்வீக உலகை அணுகவோ இரசிக்கவோ தெரிந்துக் கொள்ளவோ நேரமில்லாததால் கடந்து செல்கிறோம். அந்த உலகைக் கொஞ்ச நேரமாவது அனுபவிக்கச் செய்திருக்கிறார், ஜெ.மோ. அதைக் குறிப்பிட்டும் உள்ளார்.

குளிர்காலமென்பதால் தோல் உலர்ந்தால் உடனே 'மாய்ஸ்ச்சரைசரை' எடுத்துத் தடவிக் கொள்ளும் நான் 'யானை டாக்டரில்' அவர் வலியை கவனிப்பது நல்ல பழக்கமென்றும் அது ஒரு தியானமென்றும் வலியென்பது சாதாரண நிலையில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிற நிலை என்றும் சுலபமாக சொல்லிச் சென்றது ஆழ் மனதில் பதிந்து ஒவ்வொரு விஷயத்தையும் வேறு விதமாகப் பார்க்கவும் கையாளவும் ஆரம்பித்துவிட்டது மனது. நமக்கு வலி ஏற்படும் போது உடனே அந்த நிலையிலிருந்து மாறத் துடிக்கும் நாம், மாத்திரை மருந்தை உட்கொள்கிறோம். அதுவே தேவையில்லாத பல புதிய நோயை உண்டு பண்ணுகிறது என்ற சிந்தனை எனக்குச் சத்தியமாகப்பட்டது. அந்த சத்தியமான வார்த்தைகளைச் சோதித்தும் பார்த்தேன். என் காது மடலில் வந்த சின்ன பருவை ஒன்றுமே செய்யாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன், அதற்கே வெறுப்பாகிப் போய்விட்டது வடுவில்லாமல்.

எனது பிரசவத்தின் போது 'ஐயோ அம்மா' என்று கூக்குரலிடும் பெண்களுக்கு மத்தியில் நான் மிகவும் அமைதியாக வலியை தாங்கிக் கொண்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு நெளிந்தேன். காரணம் 'புஷ்' செய்வதற்கு மிகுந்த சக்தி வேண்டும் அந்த வகை 'எனர்ஜியை' கத்தி அலறி வீணாக்காமல் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று படித்திருந்ததை மனதில் வைத்து செயல்படுத்தினேன். ஆனால் மிருகங்கள் எதைப் படித்து இதையெல்லாம் தெரிந்து கொண்டது என்ற பிரம்மிப்பு ஏற்பட்டது இந்தக் கதையை வாசிக்கும் போது.

"யானையை கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…" என்பவர் "உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்" என்றும் சொல்கிறார். இந்தக் கதை நம் வாழ்வியலோடு இயைந்து நிற்பதால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடக் காட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கிறது நமக்கு.

பல்லி என்றால் எனக்கு பயம். புழுவைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். இந்த அற்ப ஜந்துகளைப் பற்றி இந்தக் கதையில் சிலாகிக்கிறார். புழுவை கைக்குழந்தை என்கிறார், குழந்தை மீது என்ன அருவருப்பு என்று கேள்வி எழுப்புகிறார், ஒப்பீடாக புழு கைக்குழந்தை போல் நடக்க முடியாது, பறக்க முடியாது, தவழும், சாப்பிடும் என்கிறார். ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்து வர்ணிப்பது எனக்கு அற்புதமாகத் தோன்றியது. இனி இந்த அற்பப் படைப்புகளைப் பார்த்தால் குழந்தையென்று கொஞ்சுவேனா? கண்டிப்பாக முடியாது ஆனால் அருவருக்காது என்று நினைக்கிறேன்.

மனிதனைப் பற்றிச் சொல்லும் போது "உனது அன்பு ஆசை மட்டுமே. உனது நட்போ ஏமாற்று. உனது புன்னகை போலி, உனது சொற்கள் வெறும் மோசடி" என்று சொன்னவர் மற்றொரு இடத்தில்..."அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்?" என்ற கேள்வியில் உண்மையில்லாமலில்லை. எதிர்பார்ப்பில்லாத, ஆசைகள் துறந்த, கருணையும் அன்பையும் மட்டும் சொரியும் மனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டதாலா இந்தக் கதையை மிக நெருக்கமாக உணர்ந்தேன், பரவசமடைந்தேன்...?

நீங்களும் படித்துவிட்டு... நானே மிக தாமதமாகப் படித்துள்ளேன், ஆதலால் நீங்களாவது தாமதிக்காமல் படித்துவிட்டு நான் உணர்ந்ததைப் போல் நீங்களும் உணர்ந்தீர்களா என்று பகிர்ந்து கொள்ளுங்கள். 'யானை டாக்டர்; நன்றாகவே வைத்தியம் பார்த்துள்ளார். இனி யானையைப் பார்க்கும் போது இந்தக் கதை கண்டிப்பாக நினைவுக்கு வரும். அதோடு யானையை பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி