Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Monday, August 24, 2026

'நூறு சாமி' – தாய்மை எனும் புனிதக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சக மனுஷியின் விடுதலைப் போராட்டம்!

 தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே தியாகம், பொறுமை, பிள்ளைகளுக்காகவே வாழ்பவர் என்ற ஒரு பிம்பம் காலம் காலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அம்மாவுக்கு என்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கக்கூடாது. கணவனை இழந்துவிட்டால் அவளுடைய வாழ்க்கையும் அத்துடன் முடிந்துவிட வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஒரு பெண் தனக்காக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் இன்னும் தயங்குகிறது.
இந்த எண்ணத்தையே கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் கேள்வி கேட்கிறது இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’ திரைப்படம்.
43 வயதான செல்வி கணவனை இழந்து இரண்டு மகன்களுடன் வாழ்கிறாள். இளம் வயதில் கணவனை இழந்தபோது அவளுக்குத் தேவையான ஆதரவைத் தராத உறவுகளே, பல வருடங்களுக்குப் பிறகு அவள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும்போது எதிரிகளாக மாறுகிறார்கள்.
இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய கேள்வி.
ஒரு பெண் தாயாகிவிட்டால் அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிந்துவிட வேண்டுமா?
சமூகம் தாயை தெய்வமாக உயர்த்திப் பேசுகிறது. ஆனால், சில நேரங்களில் ஒருவரை தெய்வமாக்குவதும் அவருடைய மனிதத் தன்மையை மறுப்பதுதான்.
செல்விக்கு ஆசைகள் இருக்கின்றன. அன்பு தேவைப்படுகிறது. தனிமை வாட்டுகிறது. ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அதற்காக அவள் தவறானவளாகிவிடுவாளா?
இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு என் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
என் 60 வயதைக் கடந்த மாமா மறுமணம் செய்து கொண்டபோது, அவரைச் சுற்றியிருந்த பலரும் விமர்சித்தார்கள். இத்தனைக்கும் அவர் 55 வயதுக்கு மேலான விதவை மணந்தார், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு என்று எதுவும் இல்லை. வாழ்க்கையின் பெரும்பகுதியை கடந்து விட்டவர். அந்த வயதில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அதற்கும் பல விமர்சனங்கள் வந்தன.
எனக்கு அது புரியவே இல்லை.
அந்த வயதில் ஒருவருக்கு ஒரு துணை தேவைப்படுவது ஏன் தவறாகப் பார்க்கப்படுகிறது?
ஒருவருடன் பேசுவதற்கு, தன்னுடைய சந்தோஷத்தையும் கவலையையும் பகிர்ந்து கொள்வதற்கு, வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தை தனிமையில்லாமல் கடப்பதற்கு ஒரு துணை தேவைப்படலாம் அல்லவா?
நான் அவர்களுடைய முடிவை ஆதரித்தேன்.
இந்த விஷயம் ஒரு ஆண் செய்தால் நிறைய கேள்விகள் எழாது. ஒரு ஆண் 60 வயதிலும் மறுமணம் செய்துகொண்டால், “அவருக்கு ஒரு துணை தேவை” என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
அதே வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால், “இந்த வயதில் இதெல்லாம் தேவையா?” என்று கேட்க ஆரம்பிக்கிறோம்.
அவள் விதவை என்றால் இன்னும் அதிகமாக.
அவளுக்கு பிள்ளைகள் இருந்தால் வேறு விதமாக.
அவள் தாயாக இருந்தால், அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யும் உரிமையை இந்தச் சமூகமே வைத்துக்கொள்கிறது.
ஆனால் ஒரு கேள்வியை மட்டும் கேட்க மறந்துவிடுகிறோம்.
அவள் என்ன நினைக்கிறாள்?
நூறு சாமி அந்தக் கேள்வியைத்தான் மிகவும் அழுத்தமாக நம் முன் வைக்கிறது.
செல்வியாக நடித்திருக்கும் சுவாசிகாவின் நடிப்பு இந்தக் கதைக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும் அந்தக் காட்சியில், பேசிக்கொண்டே அவளுடைய உணர்வுகள் அழுகையாக மாறும் தருணம் மிகவும் இயல்பாக இருக்கிறது.


அவள் ஒரு தியாகச் சிலையாக இல்லை. தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டு வாழும் ஒரு பெண். அந்த வலியை சுவாசிகா மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி ஏழுமலையாக வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது.
அவர் செல்விக்கு வாழ்க்கை கொடுக்க வரும் ஹீரோவாக இல்லை. அவளை காப்பாற்றும் மீட்பராகவும் இல்லை. அவளுடைய கடந்த காலத்தையும், அவளுடைய வலியையும் புரிந்து கொண்டு, அவளுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு மனிதராக வருகிறார்.
அதனால்தான் ஏழுமலை கதாபாத்திரம் இன்னும் இயல்பாகத் தெரிகிறது.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, செல்வி வீட்டில் பொட்டு வைக்க முடியாமல், வேலை செய்யும் இடத்தில் மேசைக்கு அடியில் பொட்டை ஒட்டி வைத்துக் கொள்ளும் காட்சி மிகவும் அழகான குறியீடு. சிறிய காட்சி. ஆனால் பெரிய அர்த்தம்.
கணவனை இழந்தவுடன் ஒரு பெண் தன்னுடைய பெண்மையையும் ஆசைகளையும் மறைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்பார்ப்பதை அந்தக் காட்சி அழகாகச் சொல்கிறது.
அதேபோல் கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸின் கதாபாத்திரமும் முக்கியமானது. வாழ்க்கைக்கு சாப்பாடு, தூக்கம் மட்டும் போதாது. ஒரு துணையைத் தேடுவதும் மனிதனின் இயல்பான தேவைகளில் ஒன்று என்ற கருத்தை அவர் பேசும் இடம் மிகவும் அழுத்தமானது.
பெண்ணின் தனிமை பற்றி பேசுவதற்கே நாம் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உண்மையை ஒரு கன்னியாஸ்திரி கதாபாத்திரம் பேசுவது படத்தில் ஒரு நல்ல மாற்றமாகத் தெரிகிறது.
மேலும் செல்வி கேட்கும் அந்த கேள்வி மனதில் நின்றுவிடுகிறது.
’ஒரு செருப்பு அறுந்துவிட்டால் இன்னொரு செருப்பையும் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் நான் செருப்பு இல்லையே சார், என்னை எப்படி தூக்கி எறிவீர்கள்?’
அந்த ஒரு வசனத்தில் செல்வியின் வலி மட்டுமல்ல, ஒரு பெண்ணின் சுயமரியாதைக்காக, அவள் தன்னை ஒரு பொருளாகப் பார்க்கும் சமூகத்திடம் கேட்கும் கேள்வி அது.
படத்தில் சில குறைகளும் இருக்கின்றன.
சில இடங்களில் பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசை காட்சியின் உணர்வை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த உணர்வுக்கு தடையாக இருக்கிறது. சீரியஸ் காட்சியிலிருந்து திடீரென்று காமெடி, அங்கிருந்து ஃபீல் குட் என மாறும் சில பகுதிகள் கொஞ்சம் தடுமாறுகின்றன.
க்ளைமாக்ஸிலும் படத்தின் மைய உணர்வுக்கு சற்று விலகிய சில கமர்ஷியல் காட்சிகளாக ‘டிரோன்’ வருகிறது. அந்தப் பரபரப்பான காட்சியை நகைச்சுவையாக்கி அந்த இடத்தை இலகுவாக்கிவிடுகிறது. ஆனால் அந்தக் குறைகளைத் தாண்டியும், படம் பேசும் விஷயம் முக்கியமானது.
2017ல் கள்ளக்குறிச்சி வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் நெகிழ வைக்கிறது.
நம்முடைய சமூகத்தில் ஒரு ஆணின் தனிமையைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் தயாராகவே இருக்கிறோம். ஆனால் ஒரு பெண்ணின் தனிமையைப் புரிந்து கொள்ள இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு தாய் என்பதற்காக அவளுடைய வாழ்க்கையில் மற்ற எல்லா கதவுகளையும் மூடிவிட முடியாது.
அவளும் ஒரு மனிதர்தான்.
அவளுக்கும் அன்பு தேவைப்படலாம்.
அவளுக்கும் ஒரு துணை தேவைப்படலாம்.
அவளுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யும் உரிமையும் அவளுக்கே இருக்க வேண்டும்.
பெண்களை தெய்வமாக்கி உயரத்தில் வைத்து வணங்குவதைவிட, அவர்களை சக மனிதர்களாகப் பார்த்து, அவர்களின் விருப்பங்களையும் முடிவுகளையும் மதிப்பதுதான் உண்மையான மரியாதை.
'நூறு சாமி' – தாய்மை எனும் புனிதக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சக மனுஷியின் விடுதலைப் போராட்டம்!
நூறு சாமி என்னுள் விட்டுச் சென்ற முக்கியமான எண்ணம் இதுதான்.

Tuesday, October 03, 2023

ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி - என் பார்வையில்

 ஹிந்தி படங்கள் என்று வரும்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்த படங்களையே பார்ப்பேன். அதில் எனக்குச் சொல்லி வைத்தாற்போல்  ‘குச் குச் ஹோத்தா ஹை’, ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’, ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’,  படங்களெல்லாம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. வரிசைப்படுத்திய அத்தனையும் கரண் ஜோஹர் இயக்கிய படங்கள். அவர் இயக்கியதால் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப்பிடித்தப் படங்கள் அவர் இயக்கியவையாக அமைந்துவிட்டன. சமீபத்தில் அவர் இயக்கி வெளிவந்த ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’யின் ட்ரைலர் பெரிய தாக்கத்தைத் தராததால் நான் பார்க்காமலே இருந்தேன். என் மகள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ‘ம்மா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டும், your type movie’ என்றால். ஒரு வழியாக நெட்ஃப்லிக்ஸில் வெளியானதால் பார்த்தேன்…


உண்மையில் இது என் type movie தான். வணிகமயமான மசாலா படத்திலும் அழுத்தமான கருத்தைச் சொல்ல முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சத்திலும் எல்லா லட்சணங்களும் பொருந்தி வந்தாற்போல் தோன்றியது. அதாவது, நகைச்சுவையான ரொமாண்டிக் படத்தில் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, உணர்வுகளையும் உணர்ச்சிவயமான காட்சிகளையும் ஒருங்கே சேர்த்து, வெவ்வேறு பின்னணியின் கலாச்சார இழைகள் பிணையும்போது ஏற்படும் சிக்கல்கள் என்று எல்லாம் சேர்ந்து மிகச் சிறப்பாக வந்துள்ளது. அதுவும் ரன்வீர்சிங் மற்றும் ஆலியா பட்டின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.


ஆலியா பட், படத்திற்குப் படம் தன் திறமையை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார். ரன்வீர் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். இவர்தான் ’83’வில் கபில்தேவாக இருந்தவர் என்று இந்தப் படத்தை பார்த்தால் சொல்லவே முடியாதபடி ஒட்டுமொத்தமாக உருமாறியிருக்கிறார். ஷபானா ஆஸ்மி – தர்மேந்திராவின் காதல் காட்சிகள் உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது. கிழவன் – கிழவிக்கு என்ன காதல் காட்சி என்று குழம்ப வேண்டாம். அந்தக் காட்சிகளை பார்த்தால்தான் நான் சொல்வது புரியும்.


கதை என்னவோ பழைய சரக்குதான் ஆனால் அதைத் தாங்கிப்பிடிக்கும் கொள்கலன் புதியது. ராணியும் அவள் குடும்பத்தினரும் முற்போக்குவாதிகள். ராக்கியின் குடும்பத்தினர் பாரம்பரியத்தில் ஊறியவர்கள். முற்போக்கு மற்றும் பாரம்பரியத்திற்கான மோதலின் காரணமாக ராக்கியும் ராணியும் ஒவ்வொருவரும் மற்றவரின் வீட்டில் மூன்று மாதங்கள் கழிக்க முடிவு செய்து ஒப்புதல் பெற்று மனங்களை வெல்வதே முழுக்கதை. ஆனால் அதில் வரும் திரைக்கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளைக் காக்க உதவும் உணர்வுகளைத் தூவி சுவையைக் கூட்டியுள்ளார் கரண் ஜோஹர்.


பெண்களின் உள்ளாடையை வாங்க ராணியின் தாயாராக வரும் சுர்னி கங்குளி, ராக்கியை அழைத்துச் செல்ல, அவரோ இதையெல்லாம் பார்க்கவும் கூச்சப்படுவதாகச் சொல்ல, முற்போக்குவாதியானவர் ராக்கியிடம் ‘ஏன், இதை உன் பாட்டி, தாயார், சகோதரி எல்லாரும் அணிவார்கள்தானே?’ என்று கேள்வி எழுப்ப. அதற்கு அவர் ‘ஆம், நாங்கள் பெண்களுக்கு மரியாதை தருகிறோம், ஆகையால் அவர்கள் உள்ளாடைகளைத் தொடுவதோ உற்றுநோக்குவதோ இல்லை’ என்று பதிலளிப்பார். உடனே தாயார் ‘ஏன் காலம் காலமாகப் பெண்கள் ஆண்களின் உள்ளாடையைக் கூச்சப்படாமல் தொட்டு அழுக்குப்போகத் துவைக்கிறார்கள் ஆனால் உன்னால் பெண்ணின் 'ப்ரா’வைத் தொட முடியவில்லையா? அதற்கு வெட்கப்பட மாட்டீர்கள் அசிங்கமாக ‘சோலிக்கே பீச்சே கியா ஹே’ என்று பாடித் திரிவீர்கள், ஆனால் பெண்ணின் உள்ளாடையைக் கவர்ச்சிப் பொருளாக, அருவருப்பாக, விலக்கப்பட்டதாக அல்லது கூச்சத்தோடு பார்க்கவும் முடியாமல் போய்விடுகிறதா? பெண்களை ’மரியாதை’ என்ற போர்வையில் அந்நியப்படுத்தி ஒரு பீடத்தில் வைப்பதைவிட அவளும் உன்னைப் போல் சக உயிர்தான், உனக்குச் சமமானவள்தான்’ என்று இயல்பாக பேசிச் செல்லும் காட்சி பலருக்குப் பாடமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் வீட்டிலேயே பொதுவாகப் பெண் உள்ளாடையை மறைத்துக் காயப்போடுவதும், ’காய்ந்துவிட்டது அதனை மறைத்து எடுத்துச் செல்’ என்று சொல்லி வளர்க்கப்படுவதால்தான் இன்னும் ஆண்பிள்ளைகள் பெண்களை இனம்புரியாத வயதில் விசித்திரப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல், சகஜமாக இயல்பாகப் பழகும்போதுதான் பெண்களை பால்பேதமில்லாமல் தவறாக பார்ப்பதிலிருந்து தடுக்க முடியும். பாலியல் பிரச்சனைகளும் குறையும்.


இந்தப் படத்தில் நிறைய ’ஸ்டீரியோ டைப்’ செய்திகளை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் திறமையான இயக்குநர். பாடிஷேமிங்கைப் பற்றியும், ஆங்கிலம் தெரியாததை எள்ளல் செய்வதையும், நம் வீட்டு வேலைகளைப்  பெண்களுக்கு என்று ஒதுக்காமல் இருபாலரும் சாதாரணமாக இயங்குவதையும், பிடித்த வேலையைச் செய்ய அல்லது திறமையை வெளிப்படுத்த பால்பேதம் தடையாக இருக்கக் கூடாது என்பதையும், இப்படிப் பல செய்திகளை உள்நிறுத்தி நகைச்சுவைக் கலந்த பொழுதுபோக்கு அம்சமான படமாக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொருவரும் தனக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளனர். ஜெயபாரதி பாட்டியாக கர்ஜிப்பது, தோட்டா ராய் சௌத்ரியின் கத்தக் நடனம், வசனமே இல்லாத தர்மேந்திரா ‘குடும்பத்தை உடைத்துவிடாதே’ என்று எந்தப் பிரச்சனையானாலும் அனுசரித்துப் போ என்பதை அழுத்தமாகச் சொல்வது,  "நாங்கள் ஸ்டீயரிங் பிடிக்கலாம், ஆனால் எங்கள் குடும்பங்கள் பின்சீட் ஓட்டுனர்கள்" என்று மனதைத் தொடும் காட்சிகள் ஏராளம்.


பொதுவாக ஹிந்திப் படமென்றாலே வண்ணமயமாக இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்தப் படம் மிதமிஞ்சிய வண்ணங்களுடன் ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் (Cinematographer) நான் பார்த்து வளர்ந்த மனுஷ் நந்தன் என்பதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி. காட்சியமைப்புகளும் கச்சிதம் என்பது போலவே இசையும். பிரீதம் சக்கரபர்த்தி பட்டயைத் தீட்டியுள்ளார். ‘ஹாய் ஜும்கா’ பாடல் படம் வரும் முன்பே சூப்பர் ஹிட்டாகி வைரல் ஆனது. மொத்தத்தில் படமொரு பொழுதுக்குப் பெட்டகம். அவசியம் பார்த்துவிட்டு, என்னோடு உடன்படுகிறீர்களா என்று சொல்லுங்கள்.


#raniaurrockykipremkahani #hindimovie

Tuesday, January 31, 2023

டார்லிங்ஸ் - பல பெண்களின் கதை

 அன்பு செலுத்தும் ஒருவரை எப்படித் தகாத வார்த்தையில் பேச முடியும், அடித்துத் துன்புறத்த முடியும்? காயப்படுத்துபவர்களுக்குத் தெரிவதுமில்லை வெளிக் காயத்தை விட உள்காயமாக மன கசப்பும் வெறுப்பும் அதிகரிக்கும் என்று. செய்வதெல்லாம் செய்துவிட்டு மறுநாள் கொஞ்சி கெஞ்சி சமாதனப்படுத்த நினைக்கும் ஆணுடன் எப்படிதான் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழ முடிகிறது? அவள் அந்த வாழ்விலிருந்து வெளியில் வர நினைத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை இருண்ட நகைச்சுவையாக (டார்க் காமெடி) சொல்லப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறது ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்.


தொடக்கக் காட்சிகளில் ஆலியாபட்டாக வரும் பத்ருநிசா மீது நமக்கு அவ்வளவு கோபம் வருகிறது. தினமும் குடித்துவிட்டுக் காரணமில்லாமல் அல்லது ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அடிக்கும் கணவருக்கு மறுநாள் சமைத்து போட்டு அலுவலகத்திற்கு வழி அனுப்பும் ஒரு கதாபாத்திரம்.

மகள் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் இருக்கும் பத்ருநிசாவின் தாயார் ஷம்சுநிசா (ஷெஃபாலி ஷெரிஃப்) மகள்படும் கொடுமைகளைத் தாங்க இயலாமல், கொடுமையான திருமண வாழ்விலிருந்து துன்புறுத்தும் கணவரை விட்டு வந்துவிடும்படி மகளிடம் கேட்கிறார். ஆனால் பத்ரு தன் கணவனின் 'காதலில்' அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், கணவரை அவளால் சரி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் சொல்லிக் கொண்டு தினமும் அடிவாங்குகிறாள்.


நிறையப் பெண்கள் கொடுமையான திருமண வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணம் குழந்தைகள். அந்தக் குழந்தைக்காகச் சகித்துக் கொண்டு இருந்துவிடலாமென்று பிடிக்காத திருமண வாழ்விலும் தொடர்கிறாள். இன்னும் சில பெண்கள், கணவன் தன்னை குழந்தை இல்லாததால் துன்புறுத்துகிறான், பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. குழந்தையென்று வந்துவிட்டால் சரியாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பத்ரு போன்றவர்கள் பிரிந்துவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பிற்காவது குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் கொடுமைகார கணவரின் குழந்தை வேண்டுமென்று வேண்டி ஒட்டிக் கொண்டிருப்பதில் கண் மூடித்தனமான அவளது காதலே காரணமாகிவிடுகிறது. இதில் பெரிய ஆறுதலே பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாகத் தன் தாயாரிடம் எல்லாமும் பேச முடிகிறது. சமூகத்தில் அப்படியான சூழலும் பெரும்பாலான இடத்தில் இல்லை என்பதும் அவலம்.

பிரதான பாத்திரமென்று பார்த்தால் 4-5 பேர்தான். சின்னப் பட்ஜெட்டில் அவ்வளவு சிறப்பான கதையை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்திருக்கிறது பெண் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீனால். இந்த இளம் இயக்குநருக்கு இது முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கனமான கதைக்கருவை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஆனால் அது நகைச்சுவையாக நம்மை வந்து அடையவில்லை. உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்களின் பலவீனத்தை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆண்களைத் திருத்துவதற்காகத் திருமணக் கட்டமைப்பு இல்லையே, கெட்டவன் தரங்கெட்டவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவள் நல்லவளாக ஒதுங்கி வாழ்துவிடலாமே என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆலியாபட்டைவிட ஹெஃபாலி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கொடூர கணவன் ஹம்ஸாவாக வரும் விஜய் வர்மா மீது ஏற்படும் கோபத்திலிருந்தே வெளிபடுகிறது அவருடைய அபார நடிப்பு. ஸுல்ஃபீயாக வரும் ரோஷன் மாத்யூவின் பாத்திர படைப்பும் சிறப்பு. மலையாளத்தில் பார்த்த ரோஷன் இங்கு நன்றாகவே பொருந்தி நடித்திருக்கிறார்.

இறுதி முடிவு நமக்குத் தெரிந்ததாக இருந்தாலும் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. பல ‘டார்லிங்ஸின்’ கதை இது ஆனால் எல்லா முடிவுகளும் இப்படி அமைவதில்லை.

Monday, January 30, 2023

ஃபர்ஹா - உண்மைச் சம்பவம்


 ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’, ’தி டைரி ஆப் ஆன் ஃபிராங்க்’ இந்தப் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கும் போது ஹி__ட்-ல*ர் மீதும் நா-ஸி மீதும் நமக்கு அவ்வளவு வெறுப்புணர்வு எழும். மூன்றில் ஒருவராவது இப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும். ஆனால் ‘ஃபர்ஹா’ என்ற படத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  


‘ஃபர்ஹா’ ஒரு ஜோர்டானியத் திரைப்படம். உலகச் சரித்திரத்தில் நடந்த மாபெரும் நில அபகரிப்பான இஸ்ரேலின் உருவாக்கமும், அதன் பின்னர் 1948-இல் நக்பாவின் போது பாலஸ்தீனத்தின் இனப் பேரழிவைச் சித்தரிக்கும் படம். டெரின் ஜே சலாம் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படம். நிறையத் திரைப்பட விருதுகளைப் பெற்ற படம்.


பல நூறு பாலஸ்தீன கிராமங்களும், சில நகரங்களும் அதிரடியாக ஆக்கிரமிக்கப்பட்டு பல லட்சம் பேர்களை அகதிகளாக்கி, தம் சொந்த ஊரிலிருந்து வெளியேற மறுத்த பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்த இஸ்ரேலிய அரசின் கோர முகத்தைக் காண்பிக்கும் படம் ‘ஃபர்ஹா’. கதையென்று மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை, ஏனென்றால் இது உண்மையை மட்டும் உள்நிறுத்திய கனமான திரைப்படம். 


நகரத்திற்குச் சென்று படிக்க வேண்டுமென்ற கனவைக் கொண்டவள் ஃபர்ஹா.  அவளுடைய தந்தை அக்கிராமத்தின் மேயராக இருக்கிறார். அவர்கள் வாழும் பகுதியில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்புத் தொடங்குகிறது. கிராமவாசிகள் சிதறி ஓடுகிறார்கள். நகரத்திற்குச் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறார் அவள் தந்தை. அவள் போக மறுக்கிறாள், தந்தையைப் பிரிய முடியாது என்கிறாள். அடம்பிடிக்கும் ஃபர்ஹாவை உணவு பொருட்களை வைக்கும் சிறிய அறையில் வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிடுகிறார் தந்தை. பூட்டிய வீட்டின் ஓட்டையில் ஒளிந்து கொண்டு, வெளியில் அவள் பார்க்கும் பயங்கரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் டெரின்.


மகிழ்ச்சி, பயம், கவலை, தவிப்பு, அழுகை என்று எல்லா உணர்வுகளையும் தன் உடல்மொழியில் காட்டி சிறப்பாக நடித்துள்ளார் 'ஃபர்ஹா'வாக வரும்  கரிம் தாஹிர்.


நெட்பிளிக்ஸில் இந்தப்படம் வெளிவந்த பிறகுதான் இஸ்ரேலிய கலாச்சார அமைச்சரும் நிதியமைச்சரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நெட்பிளிக்ஸை பலநூறு வாடிக்கையாளர்கள் unsubscribe செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநருக்கு அச்சுறுத்தலும் சென்று சேர்ந்துள்ளது. இந்த வருட ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்தப் படம் ஆஸ்காரில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ உண்மையை உரக்கச் சொல்லியதற்காக ஏற்கெனவே வாகை சூடிக் கொண்டது.

Thursday, October 13, 2022

சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’


ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.


முதல் காட்சியில் காட்டப்படும் சண்டை மேலோட்டமாகப் பார்த்தால் அவள் அவனைத் தூங்கவிடாமல் செய்கிறாள் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஒரு காட்சி மட்டுமே அவர்களின் பிரிவிற்கான காரணமில்லை. அந்த ஒற்றைக் காட்சியில் இருவரின் உள்ளுணர்வையும் சம அளவில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதையே மற்றொரு காட்சியில் - பல சலசலப்பின் வெடிப்பே எங்கள் மனமுறிவு என்றுணர்த்தியிருப்பார் இனியனாக வரும் காளிதாஸ்.
இப்படி வசனங்களின் மூலமாக மட்டுமே பல விதமான மக்களிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மேடை நாடகத்தின் கலை அமைப்பு, சுவரோவியங்கள் வண்ணங்கள் என்று மிரட்டியிருக்கிறார் ஜெயரகு. பின்னணி இசையைக் கேட்கும்போது அதுவும் பெரும்பாலான இசைஞானியின் இசையை உட்புகுத்தி விளையாடியது யாரென்று தேடிப் பார்த்தால் டென்மா என்கிறது கூகுள்.
அர்ஜுனாக வரும் கலையரசன் தன் காதலை அவள் அங்கீகரிக்கும் முன்பாகவே தன் வீட்டில் சொல்லும்போது, ”அவங்க என்ன ஆளுங்க?” என்று அம்மாவாக வருபவர் குடும்ப எதிர்ப்பை
அருமையாக
வெளிக்காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை அவர் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியொன்றே படத்தின் தரத்தைப் பற்றி சொல்ல போதுமானதாகிறது.
’காதல்’ பற்றிய பலவிதமான புரிதல்களை, அதனுடன் ஒரு தொகுப்பாகவே கூட வரும் சாதி மத பேதங்களை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, ஓரின ஈர்ப்பு, நடைமுறை குடும்பக் கட்டமைப்பின் பிரச்சனை என்று எல்லா வகைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்து அனைத்து சிறுபான்மையினரின் மொத்த குரலாக ஒலிக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’. நம்மையும் மாற்று சிந்தனைக்கு நகரச் செய்கிறது.

Tuesday, May 31, 2022

நெஞ்சுக்கு நிறைவான நீதி

 'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.

‘ஆர்டிகிள் 15’ பார்க்கும்போது மன அழுத்தமே ஏற்பட்டது. தமிழில் அந்தச் சாராம்சத்தைக் கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு கனமான திரைக்கதையை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் கௌரவ் சோலங்கி. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா அலட்டிக்கொள்ளாமல் செய்த அந்தக் கதாபாத்திரம், இவ்வளவு நடித்தால் போதுமானது என்று இருப்பதாலேயே தமிழில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உதயநிதி சரியான தேர்வுதான். தேவையான அளவே நடித்திருக்கிறார் அலட்டாமல். அவருக்குப் போலீஸ் உடை கச்சிதமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாகச் சண்டைக்காட்சிகள் இல்லை.
திரைப்படத்தைத் தூக்கிப் பிடிப்பதே அதன் திரைக்கதையும், வசனங்களும், ஒளிப்பதிவும்தான்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதியை விடுத்து தான்யா, ஷிவானி, அப்துல், சுரேஷ், இளவரசு என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சரியாகச் செதுக்கி அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். ஆனால் வாசிக்கும் பழக்கம் உடையவராகக் காட்டப்படும் கதாநாயகன் உதயநிதிக்கு அதுவும் பெரியார்: ஆகஸ்ட் 15 நூலை வைத்திருப்பவருக்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், ‘தீட்டு’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதது போல் காட்டியிருப்பதெல்லாம் பொருந்தவில்லை. வெளிநாட்டில் படித்தவர் என்பதாலேயே வலிந்து திணித்து ஆங்கிலத்தில் பேசும் வசனங்களும் ஒட்டவில்லை.
பொருந்தாத விஷயங்களையும் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்களால் சரி செய்துள்ளார்.
விஜயராகவன் (உதய்): ‘உங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேணும்ல’
கதாநாயகி: ”ஹீரோ வேண்டாம். ஹீரோ வேணும்னு நினைக்கிற மனநிலை மக்களுக்கு வேண்டாம்”
----
விஜயராகவன் (உதய்): ”எல்லாரும் சமம்ன்னா அப்ப ராஜா யாரு?”
கதாநாயகி: ”அனைவரையும் சமம் என்று நினைப்பவன்தான்.”
--
”சட்டம்தான் எல்லாத்தையும் சரி செய்யும்.”
”சட்டமா? (எள்ளலுடன்) எங்களுக்கும் அதற்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?”
----
”நாயப் பேர் சொல்லி கூப்பிடுற நீங்க, மனுஷங்கள ஏன் இது அதுன்னு சொல்றீங்க?”
----
”ஏய் வா போ’ என்று சொல்லி கூப்பிடுவாரே தவிர என்றைக்காவது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்காரா?”
--
சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்படுவது, கூண்டில் இருக்கும் பெரியார் அம்பேத்கார், ஒதுங்கியே நிற்கும் இளவரசு, எரிச்சலைத் தூண்டும் சுரேஷ் என்று வசனமில்லாமல் காட்சியால் நம்மைக் கலங்கடிக்கும் இடங்களும் உண்டு. ஆனால் இப்படியான காட்சிகளுக்கு இரண்டு பாடல்களைத் தவிர, பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை. அ ஆ ஆ அ என்று பின்னணியில் இழுவையாக யாரோ கத்திக் கொண்டே இருப்பதாக உள்ளது. சத்தியாவைத் தேடும் போது அதற்கான பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவள் கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சி நம்மை வந்தடையவில்லை. இந்தப் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் இசைதான். திபு நினன் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சியென்றால் ‘டாக்டர் அனிதா, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன்’ என்று உறுதியான குரலில் சொல்லும் அந்தக் காட்சி ’நீட்’ தேர்வுக்கான வாக்குறுதியாக எனக்கு ஒலித்தது. உங்களுக்கு?
’நெஞ்சுக்கு நீதி’ மனதிற்குக் கொஞ்சம் நிறைவைத் தந்தது.

Monday, May 16, 2022

ஜன கன மன - தேசியப் படம்

ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.

அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம். 

இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.


ஒரு படத்தில் நான் எப்போதும் எதிர்பாப்பது கதையையும் காட்சியமைப்புகளையும் மட்டுமேயல்ல. மாறாக, அந்தப் படத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, புதுச் சிந்தனைகளை, விரியும் எண்ணங்களை, நமக்கு முன் எழும் சவால்களை இவை எல்லாவற்றையும்தான் 

மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்.. 

வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.

முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால் 

சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.

2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று 

விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது 

என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். 

அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.

படத்தில் பிடித்த வசனங்கள்:

”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”

----------

சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”

அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”

இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான்.  அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல் 

பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு 

என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத் 

தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.


#moviereview #JanaGanaMana

Saturday, January 23, 2021

தீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து செல்ல இயலவில்லை. “படத்தைப் படமாகப் பாரும்மா” எ ன்று அறிவுரை சொல்பவர்கள் வரிசையாக வந்து தலையில் குட்டோ, என்னிடம் திட்டோதான் வாங்குவீர்கள். ஏனென்றால் இது படமல்ல பல பெண்களின் உண்மையான வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையைப் படமாகப் பார்க்கவும் என் போன்றவர்களுக்குப் பொறுமையுமில்லை, மனதில் தெம்புமில்லை. அப்படி என்ன படம் என்றால் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தைப் பார்க்க சொல்லி நண்பர் பரிந்துரைத்தபோது என்ன கதை, யார் நடித்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். 


40 நிமிடம் முடிந்த பிறகும் ஒரே விதமான காட்சிகள் அலுப்பைத் தந்தாலும்  பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை அவ்வளவு எளிதில் செரிமானமாவதில்லை. 

ஒரு பெண்ணை -  இல்லை வேண்டாம் மனைவியை - அடித்துத் துன்புறுத்துவது, குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, கேட்கக் கூசும் வார்த்தைகளால் வசைபாடுவது, அவள் அனுமதியில்லாமல் தொடுவது அல்லது அவளின் உடல்நிலை, மனநிலை தெரியாமல் நெருங்குவது மட்டுமல்ல பெண்ணுக்கெதிரான வன்கொடுமை. அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவளின் அடிப்படை தேவைகளுக்குச் செவிமடுக்காமல், நியாயமான விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவளுக்கான வன்கொடுமைதானென்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் அல்லது ஆண்களால் புரிந்து கொள்ள முடியும்?

தொப்புள்கொடி உறவைத் துண்டித்து மருமகளாக உருமாறும் மருமகளை, மகளாக வேண்டாம் மனுஷியாகவாவது நடத்துகிறார்களா? இல்லை. அவளை மட்டுமல்ல அந்த வீட்டுப் பெண் அதாவது புதுமணப்பெண்ணின் கணவரின் தாயாருக்கும் அந்த வீட்டில் அதே நிலைதான். 

காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழல்கிறார். உணவருந்த வீற்றிருக்கும் ஆண்மகன்களுக்குச் சுடச்சுட தோசை வார்க்கும் பெண்கள் கடைசியில் உண்பதென்னவோ மீந்து விட்ட, காய்ந்த, கரிந்த தோசைதான் என்று உணரும் ஆண்கள் எத்தனை பேர்?

 ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தோசையோ சமையலோ அல்லது வீட்டு வேலையோ இங்குப் பிரச்சனையில்லை. மாறாக மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் அதிர்வுகளைக் கேட்பாரில்லை. பெற்ற தாயும் ‘நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாய், இதெல்லாம் பிரச்சனையா?’ என்றுதான் கேட்கிறார். பெண் பார்க்க வரும் போது ஆடத் தெரியும் பாடத்தெரியும் என்றால் புளங்காகிதம் அடையும் குடும்பத்தவர்கள், நடன ஆசிரியராகப் பள்ளிக்குச் செல்ல அவள் விரும்பும்போது, 'அதெல்லாம் நம் குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது' என்றும், உன் மாமியார் முதுகலைப் பட்டதாரி அவளை வேலைக்குச் செல்ல வேண்டாமென்று என் தகப்பனார் சொன்னவுடன் நான் கட்டுப்பட்டேன், இன்று அவள் நல்ல மக்களை வளர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சொல்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் மக்கள் சீரழிந்து போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியும் தானே?

குழந்தைகளைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும்தான் மனைவி தேவைப்படுகிறாளென்றால், அதற்குரிய படிப்பை மட்டும் பெண்களுக்குக் கற்பிக்கலாமே?! படித்த பெண்கள் மனைவியாக வேண்டுமென்று விரும்புபவர்கள் தன் குழந்தையை வளர்ப்பதற்காகவா? உங்கள் மகள்களுக்கும் இதற்காகத்தான் ஓர் ஆண் கல்வியைத் தருகிறானா? எப்போது இவர்கள் யோசிக்கப் போகிறார்கள்?

வீட்டிற்கு வரும் விருந்தாளி தேநீரை குறை சொல்லி, நானும் சமைக்கிறேன் பேர்வழியென்று சமையலறையை ஒரு வழி செய்துவிட்டு, அவள் அடுப்படியில் வேலை இருக்கிறது என்று சொல்லும்போது, "அதைத்தான் நான் முடித்துவிட்டேனே இன்னுமென்ன அங்கு மிச்சமிருக்கிறது?" என்று ஏளனமாகச் சிரிக்கும்போது, அந்த மொட்டைத் தலையில் ஆணியடிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

 ’சட்டினியை அம்மியில் அரைக்காமல் மிக்ஸியில் அரைத்தாயா? சரி பரவாயில்லை’ என்று சலுகையைப் போல் சொல்லும் மாமனார், ஆனால் சாப்பாட்டை விறகடுப்பில் வைத்துச் சமைத்தால்தான் சுகமென்றும், துணிகளைக் கைகளில் துவைத்தால்தான் அணிவேனென்றும் புன்முறுவலோடு அன்பொழுகப் பேசுவதும் நமக்குக் கோபத்தை வரவழைத்தாலும், காலையில் எழுந்தவுடன் கையில் 'பிரஸை பேஸ்டோடு' கொண்டு தருவதிலிருந்து, வெளியில் கிளம்பும்போது செருப்பை எடுத்து மாட்டிவிடுவது வரை அவர் மனைவி அவருக்குச் செய்து பழக்கியதாலேயே அந்தக் கலாச்சாரம் அப்படியே தொடர்கிறது. இதெற்கெல்லாம் முழுக்கக் காரணம் வேறு யாருமில்லை -  பெண்களேதான்.

மகனை வளர்க்கும்போது அடுப்படி பெண்ணுக்குரியது, வீட்டு வேலை பெண்ணுக்குரியது என்று காட்சிகளாகப் பதியவைத்து வளர்க்கிறாள். தண்ணீர் வேண்டுமென்றாலும் அவனுக்குக் கையில் கொண்டு தருகிறாளே தவிர ‘உன் தேவைகளை நீயே செய்ய வேண்டுமென்று’ வலியுறுத்துவதில்லை. ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டுமென்ற எழுதாத சட்டம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெண்களின் உள்ளாடையை மறைத்தே காய வைக்க வேண்டுமென்றும் அதை மற்ற ஆண்கள் பார்ப்பதே அசிங்மென்றும் சொல்லியே வளர்க்கப்படும் சமுதாயத்தில், ஏன் ஆண்கள் உள்ளாடையைப் போல்தான் பெண்களுக்கும் என்று புரியவைக்கவோ வாதிடவோ யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் எழுதப்படாத சட்டம், இதுதான் காலம் போற்றும் கலாச்சாரம், பதிய வைத்த பண்பாடு. புல்ஷிட்!!

இந்தப் படம் வெறும் சமையலறைக் கலவரத்தையும் ஆணாதிக்கத்தைப் பற்றியும் மட்டும் பறைசாற்றவில்லை. ஒருபடி மேலே சென்று, அரசியலையும் தொட்டுச் செல்கிறது,  சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தை உலுக்கிய மதப் பிரச்சனையைப் பேசுகிறது. ஆணாதிக்கத்தால் விளைந்த சபரிமலை பிரச்சினையையும் விவரிக்கிறது.

இந்தப் படத்தில் சில மசாலா தூவிய காட்சிகள்:

* விருந்துக்குச் சென்ற இடத்தில் ஒருவர் புதுமணப் பெண்ணிடம் ‘மாட்டுக் கறி சாப்பிடுவாயா?’ என்று கேட்பார்.  "வீட்டிலேயே மாட்டுக் கறி சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றதும், ‘இல்லை, வீட்டுக்கு வெளியில் சமைக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே வீட்டில் அதைப் பரிமாறும் காட்சி.

* “மாதவிடாய் என்பதால் உங்களைச் சமையலறையில் அனுமதிப்பதில்லை, ஆனால் எனக்கு மாதவிடாய் இருந்தாலும் நான் மற்றவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறேன். அவர்களுக்குத் தெரியவா போகிறது? தினமும் வேலைக்குச் சென்றால்தான் என் பொழப்போடும்” என்று வீட்டு வேலை செய்பவர் சொல்லும் காட்சி.

* “கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தம்பி கேட்டதும், “ ஏன் நீயே போய் எடுத்துக் குடிக்க முடியாதா? ” என்று தன் வீட்டுச் சாப்பாடு மேசையிலிருக்கும் கோப்பையைத் தட்டி விட்டு , தன் தம்பியிடம் ஆவேசமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி.

இப்படிப் பல காட்சிகள் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். மற்றொரு காட்சியில், கணவரின் சபரிமலை நோன்பின் நடுவில் மாதவிடாயுடன் இருக்கும் மனைவி தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். அந்த ப் பாவத்தை எப்படித் தொலைப்பது என்று குருவிடம் கேட்கும்போது அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டி, மாதவிடாயுள்ள ஒரு பெண்ணைத் தொட்ட பாவத்தை அல்லது தீட்டை விலக்கி தூய்மையாக்குவதற்கான பரிகாரமாக மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது அல்லது மாட்டின் சிறுநீரைக் குடிப்பது என்று பரிகாரம் சொல்கிறார் . அப்படியானால் பெண்ணின் மாதவிடாயைவிட, அவளுடைய உதிரத்தைவிட, அவள் தாய்மைக்கான மாதவிடாய் சுழற்சியைவிட மாட்டு மலமும் சிறுநீரும் தூய்மையானதா?

அரசியல், மதம், ஆணாதிக்கமென்று பலவற்றைப் பேசுவதால்தானோ என்னவோ இந்தப்படத்தை நெட்பிலிக்ஸுக்கு அனுப்பினால் பதிலே வரவில்லையாம், அமேஸான் பிரைமும் இந்தப் படம் அவர்களின் அளவுகோல்களுக்குப் பொருந்தாது என்று பதில் தந்ததாம், கடைசியில் நீஸ்ட்ரீம் ஏற்றுகொண்டதால் படம் வெளிவந்திருக்கிறது.

பெண்ணைப் பற்றிப் படமெடுத்தாலும் அதைப் பற்றிப் பேசினாலும் பலருக்குப் பிரச்சனையாகிவிடுகிறது என்பதில் வியப்பில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால், சாப்பாடு மேசையின் ஒழுங்கின்மை, வேலைக்குப் போக அனுமதிக்காதது, உடலுறவின் போது கணவன் சொல்லும் சுடு சொல், முகநூலில் தோழியின் பதிவைப் பகிர்ந்ததை நீக்கச் சொல்வது என்று எல்லாமும் சிறிய விஷயங்களாகதான் தெரியும். இப்படியான ஏற்ற இறக்கங்களோடு கூடியதுதான் வாழ்க்கை என்றும் தோன்றும்.

பெண்ணுக்குச் சமையல் வேலையும், வீட்டு வேலையும்தானே பொழுதுபோக்கு என்றும் கூடத் தோன்றும். 

வயதான பிறகு ஆணுக்கான அலுவல் ஓய்வு காலத்திலும், அவர் செய்தித்தாள் வசதியாக உட்கார்ந்து வாசிக்க, அவர் மனைவியான மூதாட்டி தேநீரோடு வந்து நிற்பாள். ஆண்மகன் தினமும் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்துவிட்டு அவருடைய வழக்கமான வாழ்க்கைமுறையைத் திருமணத்திற்குப் பின்பும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர முடியும். ஆனால் பெண்ணுக்கு? 

அலுவலக வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணுக்கு எல்லாத் தேவைகளையும் வீட்டில் இருப்பவர் செய்து தருகிறார். பெண் அலுவலகத்திற்குச் சென்றாலும் வீட்டுக்கும் வந்து அவள் வேலை தொடர்கிறது. ஆணுக்கு வாரத்திற்கு இரு தினமோ ஒருநாளோ விடுமுறை, பெண்ணுக்கு? இதில் என்னைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம், விதிவிலக்கெல்லாம் விதியாகிவிடுவதில்லையே?! நான் சொகுசாக இருக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் பழங்காலத்து கதை 21-ஆம் நூற்றாண்டில் இதெல்லாம் நடப்பதில்லை என்று பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமென்பது போலப் பிதற்றும் கூட்டம் உள்ளது. 

இதற்காகதான் மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் வழங்குவதற்கான திட்டம் பற்றிப் பேசினார். அவர்தான் பல வருடங்களுக்கு முன்பே ‘வேல வேல ஆண்களுக்கும் வேல பெண்களா போனா ஆண்களுக்கும் வேல’ என்று ஓர் ஆண் தன் அலுவலக வேலை முடித்த பிறகு, வீட்டு வேலைகளை மிகக் கச்சிதமாகச் சுலபமாகச் செய்வதைத் தனது ‘அவ்வை சண்முகி’ படத்திலேயே காட்டியவராச்சே. ஆனால் இல்லத்தரசிகளின் வலியோ, அல்லது வீட்டு வேலை பற்றியோ தெரியாத கங்கனா ரணாவத் பணிவிடைகளுக்கு விலையில்லை என்றார். இப்படியான முட்டாள் பெண்களால்தான் இன்னும் பெண்களின் நிலை சாபக்கேடாகவே உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் குடும்பம் என்ற நிறுவனக் கட்டமைப்பின் ஆணாதிக்கத்தை இந்தப் படம் பறைசாற்றுவதால் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் இல்லை. சொற்ப வசனங்கள், எந்தப் பின்னணி இசையுமில்லை, பயன்படுத்திய அத்தனை ஒலிகளும் நம் வீட்டில் அன்றாடம் ஊடுருவும் இசைதான் - தாளிக்கும் ஓசை, காய் நறுக்குதல், வெட்டுதல், வறுப்பது, பாத்திரம் கழுவுதல், வதக்கல், துடைத்தல், துவைத்தல் என்று இதற்குமுன் நாம் செவிமடுக்க மறுத்த அல்லது மறந்த விஷயங்களை இயக்குநர் ஜோ பேபி வேண்டுமென்றே ஒன்றரை மணி நேரப் படமாக்கி மிக நிதானமாக நகரச் செய்து, அடுப்பங்கரையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வைத்துள்ளார். 

கதாபாத்திரத் தேர்வு மிக அருமை. இயக்குநருக்கு நிமிஷா மீது என்ன கோபமோ தெரியவில்லை இப்படி வேலை வாங்கியிருக்கிறார். சூரஜ் மீதும் அவருடைய தந்தையாக வரும் தாத்தா மீதும் நமக்கு வரும் கோபமே அவர்களின் நடிப்புக்குச் சாட்சியாகிறது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உங்கள் பசிக்குத் தீனியோ இல்லையோ உங்கள் சிந்தனைக்கு நிறையவே தீனியளிக்கும்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி