Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Saturday, April 12, 2025

திரைக்குப் பின்னால்

வாழ்வில் பல சூழல்களைக் கடந்து வந்தாலும், சில சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன. அந்த ஒரு சில சம்பவங்களிலும் மிகச் சொற்பமான தருணங்களை எழுத்தில் வடிக்க விரும்புகிறோம். எழுத்தில் உள்ளதைக் காட்சிப்படுத்த ஆசைப்படும்போது உருவாவதுதான் குறும்படம். சம்பவங்களின் கோவையைக் கதையாக மாற்றி அதனைப் படமாக எடுத்து, எழுத்தில் உள்ளது காட்சியாக விரியும்போது, உள்ளக்கிடக்கையில் இருக்கும் கற்பனைகளை வெளிக் கொண்டு வர அதனைச் சமயங்களில் வார்த்தைகளில் விவரிக்கத் தடுமாறியும் இருக்கிறேன். 

நம் மனதில் உள்ளதை மேம்படுத்தும் விதமாக இதை இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று பலர் பலவற்றை சொன்னாலும், எனக்கு என்ன வேண்டும் என்ற இறுதி முடிவை மட்டும் நான் எடுப்பதாகத் தீர்மானித்துக் கொண்டு, நலன் விரும்பிகளைப் பொறுமையாகக் கையாண்டதில் பிறந்தது ‘திரைக்குப் பின்னால்’. 


ஹரீஸ்- இலக்கியா Sri Hareesh  Elakkiya Thavadurainathan என் அலைவரிசையில் இருப்பதால் நான் நினைப்பதை அப்படியே புரிந்து கொள்ளக் கூடியவர்கள். நீளமாக எழுதியதை எங்கெல்லாம் கத்தரிக்கலாமென்று முதலிலேயே தீர்மானித்துவிட்டதால் சுலபமாகக் குறும்படப் போட்டி விதியின்படி பன்னிரண்டு நிமிடத்திற்குள் அடக்கிவிட முடிந்தது. இதற்கு முழுவதுமாக உதவியவர்களும் இவர்களே.


முழுப் படப்பிடிப்பிலும் மிகப் பெரிய சவாலாக இருந்தது ஒலியும் ஒளியும் மட்டுமல்ல கதாபாத்திரங்கள் நம் எதிர்பார்ப்புக்கு நம் இழுப்புக்கு அந்தச் சட்டகத்திற்குள் பொருந்துவதுதான். கதாநாயகி வித்யாவின் Vithya Damodharan ஆறு மாதக் கைக்குழந்தையின் அழும் குரல்தான் படம் முழுக்க ஒலித்தது ‘டப்பிங்’குக்கு முன். குழந்தை அழுகிறதே என்ற தவிப்பு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிவது சில காட்சிக்கு பலமாகவே அமைந்தது. பெண்கள் எல்லாக் காலக்கட்டங்களிலும் யாரையாவது சார்ந்தே வாழ வேண்டும். அப்படிதான் வித்யாவும், பல சூழல்களைத் தாண்டி, சமாளித்து எப்படியோ வந்து நடித்துக் கொடுத்துவிட்டார்.  சில சமயங்களில் நான் அவரைப் படுத்தி எடுக்கிறேன் என்று எனக்கே தெரிந்தாலும், ‘சாரிம்மா ஐ காண்ட் ஹெல்ப் இட்’ என்பதாகவே நடந்து கொண்டேன். வீண் போகவில்லை அவருக்குத்தான் ‘Best Character Artist Award’ கிடைத்தது. 


கடைசி நேரத்தில் குழுவில் இணைந்த ஸ்ரீஜா தன் பங்கை அற்புதமாகச் செய்தார். கலைவாணியின் அம்சமான பூர்ணி Poorni Balaj  சொல்லவே வேண்டும் கிளிப்பிள்ளை, இதுதான் வேண்டும், என்று ஒரு முறை சொல்லிக் காட்டினால் கற்பூரமாகப் பற்றிக் கொள்வார். 


Nakaj A Alem ஆலம், இவருடைய ‘ரீல்ஸ்’ தந்த பாதிப்பில் உருவான என் கதையில் சொற்பமான வசனங்களைக் கொண்டிருந்த முக்கிய கதாநாயகி. வசனம் இல்லாவிட்டாலும் கண்களிலும், உடல்மொழியிலும் எல்லாக் காட்சிகளிலும் நிரம்பியிருந்தார். மலர், கடைசியில் வந்து ஐக்கியமானவர், இருப்பினும் ‘ஈகோ’ பார்க்காமல் கேட்டதை நடித்துக் கொடுத்துவிட்டார். 


குழந்தை ஆஃபினாவை விட தன்னலமற்ற அர்ப்பணிப்போடு சரியான நேரத்திற்குக் குழந்தையைக் கூட்டி வந்து உடன் இருந்து ஒத்துழைப்பு தந்த அவருடைய தந்தை ஃபைசலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆஃபினா, குழந்தையாக இருந்தாலும் சொன்னதை உள்வாங்கிக் கொண்டதால் காட்சிகள் சிறப்பாகவே விளைந்திருந்தன.


ஒலியைச் சரிப்படுத்த மிகுந்த சிரமப்பட்டாலும் எடுத்த நோக்கில் பின் வாங்காமல் ஒத்துழைப்பு தந்ததோடு, கை வலிக்க வலிக்க ‘ஒன் மோர்’ கேட்கும்போதெல்லாம் ‘இது நல்லாதானே இருக்கு, என்னவாம்’ என்று சலித்துக் கொள்ளாத ஒளிப்பதிவாளர் பூபாலன். 


பல இடங்களில் என்னோடு சண்டையிட்டு, சில காட்சி எடுக்கும் போது பிணக்கால் அவர் உடல்நலமே சரியில்லாமல் போனபோதும் ‘ஆல் ஓகே’ என்று அடிக்கடி அக்கறையோடு என்னை உயிர்ப்போடு வைத்திருந்த இணை இயக்குநர் கலைஞர் நாஷ். டப்பிங்காக தன் நண்பர் கஜாவை அழைத்து வந்து அவர் வீட்டிலேயே தங்க வைத்து ஒரே நாளில் எல்லாவற்றையும் முடிக்க உதவியவரும் நாஷ்தான். Kalaignan Nash 


கஜாவின் குரல் தேவைப்பட்ட போது ‘ஹலோ, சொல்லும்மா’ என்ற ஒரு வரி வசனத்தை நூறு முறை பேசி சாகடித்தவர் சாரி சாதனை புரிந்தவர். உண்மையில் கஜா அன்று பேசிக் கொடுக்காவிட்டால் சரியான நேரத்திற்கு எல்லாம் முடிந்திருக்காது. நன்றி கஜா. 

எல்லாவற்றுக்கும் மேலாக படப்பிடிப்புக்கான இடத்தைத் தந்து உதவியதோடு, இரவு தாமதமானாலும் முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு நல்கிய Balaji Baskaran  & அவர் துணைவியார் தேவர்ஷிணிக்கும் மனமார்ந்த நன்றி.

இசைக்கும், எடிட்டிங்கும், டி.ஐ.க்கும், எஸ்.எஃபெக்ஸ்க்கும் சென்னை குழுவினர் கைகொடுத்தனர். மொத்தத்தில் படம் எடுத்து உரிய நேரத்தில் சமர்ப்பித்துவிட்டோம். குறும்படப் பயணம் சிறப்பானதொரு அனுபவத்தை எனக்குத் தந்தது. டெக்னிக்கல் மட்டுமல்ல பலவிதமானவர்களைச் சமாளிக்கும் கலையையும், பொறுமையையும் பெற்றுத் தந்தது. 


எங்கள் குழந்தையான ‘திரைக்குப் பின்னால்’ வெள்ளித்திரையில் தெய்ரா கேலரியா திரையரங்கில் பார்க்கும்போது பன்னிரண்டு நிமிடம் காணாமல் போனது எனக்கு. ’அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல’ மற்ற படங்கள், பெரும்பாலான படங்களின் பன்னிரண்டு நிமிடம் நீளமாகத் தோன்றியது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. 

போட்டியில் மொத்தம் 25 படங்களின் கதைகளில், 16 படங்களின் கதைகள் மட்டுமே தேர்வானது. அதுதான் எங்களின் முதல் வெற்றி. அதன் பிறகு 16 படங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கும்போது, ’பரவாயில்லையே நம் உழைப்பு வீண் போகவில்லை’ என்பதை உணர்ந்தேன்


மாலை விருது வழங்கும் விழாதான் ‘க்ளைமேக்ஸ்’. மொத்தம் 28 விருதுகள். Early bird Script என்று தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.  என் மகன் குறித்துக் கொண்டே வந்தான். 19 விருதுகள் முடிவடைந்திருந்த நிலையில் அதில் ஒன்றுகூட ‘திரைக்குப் பின்னால்’ வராததைக் கவனித்து என் முகத்தைப் பார்த்து. ”ம்மா பாதிக்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு விருதுகள் கொடுத்தாச்சே, ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் disappoint ஆகிவிடுவீர்களா” என்று வினவினான். நானோ, “இது வரை கொடுத்த பிரிவுகள் எல்லாம் சின்ன விருதுடா – the better is coming for me” என்றேன். என் நம்பிக்கையைப் பார்த்து வாயடைக்கும் முன் ‘Best Character Artist Award’ for Vithya Damodaran for Thiraikku Pinnal என்று அறிவித்த போது, வித்யா வராததால் நானே சென்று பெற்றுக் கொண்டேன். 


தொடர்ந்தது அறிவிப்பு, 25 பிரிவுகளின் முடிவுகள் நிறைவடைந்த நிலையில், மறுபடியும் என் முகத்தை அனுதாபத்தோடு பார்த்து என் மகன், “ம்மா இன்னும் மூன்று விருதுக்கான முடிவுதான்” என்றான். “ஆமாம், மூன்றும் முக்கியமானது அதில் நான் கண்டிப்பாக இருப்பேன்” என்றேன் நம்பிக்கையோடு. 


Best Director Award என்று என் பெயர் அறிவித்தபோது இறைவன் கருணையாளன் என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லியபடி பரிசைப் பெற்று வந்தேன்.


இப்படியான குறும்படத் திருவிழா வேறு எந்த நாட்டிலாவது நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமீரக வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் வேட்கைக்குத் தீனியாகத் தளம் அமைத்துத் தந்துள்ளனர் ரமா மலர் Rama Malar  மற்றும் ஆனந்த் சுப்ரமணியம், இருவருக்கும் மனமார்ந்த நன்றி. அது மட்டுமல்லாது இந்த வருடம் அவர்களின் நடுவர் தேர்வும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான இளவரசு Malaisami Ilavarasu மிக அற்புதமான மனிதர். சொல்ல வேண்டியதை வாழைப்பழத்தில் ஊசியாக தைக்கத் தெரிந்தவர். நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியைக் கொண்டு சென்றதில் அவர் பங்கு அலாதியானது. மஞ்சுளா ராமகிருஷ்ணனும் Manjula Ramakrishnan  நடுவராக இருந்து நிகழ்ச்சிக்கு வலு சேர்த்து இருந்தார்.


நிறைவான பொழுது. அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, March 29, 2023

ஜெஸிலா இணை இயக்குநராக

 அமீரகக் குறும்படப் போட்டியில் ‘பேரு வெக்கல’ நகைச்சுவைப்படத்திற்காக இணை இயக்குநராகப் புதுப் பரிணாமம் எடுத்து அதில் வெற்றியும் கண்டதில் பேரானந்தம். கதைக்கரு வித்தியாசமானதென்று எதுவுமில்லை, ஆனால் நகைச்சுவையில் அடித்துவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ற நடிகர்களையும் இயக்குநர் கெளசர் Kausar Baig சிறப்பாகவே தேர்ந்தெடுத்திருந்தார்.

படப்பிடிப்பின் போது இன்னும் கொஞ்சம் நல்ல செய்யலாம், ’ஒன் மோர் ப்ளீஸ்’ என்று நான் கேட்டபோதெல்லாம் ‘இணை இயக்குநர்’தானே என்ற அலட்சியமில்லாமல் இயக்குநரும் சரி, நடிகர்களும் சரி எனக்குத் திருப்தியாகும் வரை சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்தார்கள். திரையிடப்பட்ட பதினைந்து படங்களில் எங்கள் குறும்படத்தில்தான் நடனக் காட்சி வைத்திருந்தோம். கதாநாயகனான பாலாஜி Balaji Baskaran என் முன்னிலையில் ஆடமாட்டேன் என்று அடம்பிடிக்க, ‘திரையில் அத்தனை பேர் பார்க்கப் போகிறார்களே’ என்ற போது, ’அது பரவாயில்லை நான் அப்போ கண்ண மூடிப்பேன்’ என்றவுடன் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். மனிதர் உடல்மொழியால் கலக்கியிருந்தார். மதுரை வட்டார வழக்கு வராமலிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டார். சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது.
டப்பிங்கின்போது நான் கொஞ்சம் எல்லோரையும் படுத்திதான் எடுத்தேன், இருந்தாலும் குழுவினர் அனைவருமே ஒத்துழைத்தார்கள். பூர்ணியின் Poorni Balaj குரலை ‘இன்னும் கீச், இன்னும் கீச்’ என்று மீண்டும் மீண்டும் பேச வைத்து எடுத்து, அதனை முகம் சுழிக்காமல் இசையமைப்பாளர் Giftlin Shaju கிஃப்ட்லின், மைக்ரோ நொடியும் வித்தியாசமில்லாமல் சரியாகப் பொருத்தி தந்ததெல்லாம் சுவையான அனுபவமாக இருந்தது. பூர்ணிக்கு நடுவரின் சிறப்புப் பரிசும், கிஃப்டினுக்கு இந்தப் படத்திற்கு இல்லையென்றாலும் ‘நடுவில்’ என்ற எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு குறும்படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்தது.
குறும்படம் முழுமையாகச் சிறப்பாக அமைய முழுக் காரணமென்று நான் குறிப்பிட வேண்டியது Mohamed Rasi Deen ரஸிதீனைதான். அபாரமான ஆற்றலும் ஆர்வமும் உடையவர். நாம் சொல்வதற்கு முன்பாகவே அவர் புரிந்து கொள்ளும் அலைவரிசையையுடையவர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று எல்லாத் துறையையுமே ஒற்றை ஆளாகச் சிறப்பாகக் கையாண்டு, உரிய நேரத்திற்கு முடித்துத் தந்தார்.


Noah Nitin Chander Samson வின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த நடனத்திற்கு அந்தப் பாடல் சேர்க்கப்பட்டு 'தூள்' நடனமானது. நோவா நோகாமல் இயல்பாக நடித்து முடித்தார். Lakshmi Priya வும் தனக்கு தந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக தத்ரூபமாக நடித்தார். அவர் வீடு பாபாவின் இருப்பிடமாக சரியாக பொருந்தியது. கலைஞன் நாஷ் கம்மல், பொட்டு, தலைமுடி என்று சின்னச் சின்ன தகவல்களையும் கண்கொத்திப் பாம்பாக இருந்து சரி செய்து சிறப்பு சேர்த்தார்.
குறும்படம் தர வேண்டிய நேரத்தில் கெளசர் ஊருக்கச் செல்ல வேண்டியிருந்ததால், என்னை அவர் இணை இயக்குநராக இருக்க இயலுமா என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று உடனே ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கினோம். ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங்குக்கு ஒருநாள். இரண்டே நாளில் பன்னிரெண்டு நிமிட குறும்படம். போட்டியில் சிறந்த இயக்குநருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. குறும்படத் திரையிடலுக்குச் சென்ற என்னால், விருது விழாவிற்குச் செல்ல முடியாதது சோகமென்றாலும், குறும்படத்திற்கு மூன்று விருது கிடைத்ததை நிறைவாகவே உணர்ந்தேன்.
இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், இந்தப் படத்தில் என் பூனை மினி மிகவும் சிறப்பாக நடித்துள்ளது. ❤
இப்படியான வாய்ப்பை அமீரக மக்களுக்கு வழங்கும் Rama Malar ரமா & ஆனந்த் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
https://youtu.be/5SYzZEzLrV8 குறும்படத்திற்கான சுட்டியை க்ளிக்கவும். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.


Thursday, August 20, 2015

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'.

எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் வராததால் ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு நண்பர் முரளி அதற்கான சுட்டியை அனுப்பியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்திருப்பதன் பின்னணி இயக்குனர் தாமிரா. படம் முழுக்கத் தெளிக்கப்பட்ட வசனங்களும், கலைகளும், ஒப்பனைகளும் அசல் இஸ்லாமிய குடும்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கவே, இது எப்படி சாத்தியம்? தாமிரா என்பவரால் எப்படிச் சிறிய தவறும் நிகழாது முழுநீளப்படத்தை இஸ்லாமை உள்வாங்கி செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை இன்று அவரைப் பற்றிப் படிக்கும் போது கிடைத்தது. தாமிரா ஒர் இஸ்லாமியர் என்று அறிந்ததும், அந்த இயல்பான விஷயத்தில் எந்த ஆச்சர்யமுமில்லை என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. வசனங்கள் எல்லாமே இயக்குனரால் பார்க்கப்பட்ட கேட்கப்பட்ட அல்லது கேட்க விரும்பியவைகளின் பிரதிபலிப்பாகவே வந்ததால் அதன் உஷ்ணத்தை உணர முடிகிறது. பணத்தைக் குறித்துச் சொல்லும் போது 'துரு பிடிக்காதுனு பணம் சேர்க்கிறான், பணம் சேர்ந்ததும் அவன் மனசு துரு பிடிச்சுப்போகுது', 'பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்', 'பணம் இருக்கிறவங்க மனசு இரும்புப் பூட்டால பூட்டியிருக்கு' போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

அதே போல இயக்குனரின் பாத்திரத் தேர்வு மிக அற்புதம். கவிஞர் சல்மாவிற்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'மெஹர்' பேசப்பட்டிருக்காது. தாயாக சரண்யா போன்ற சிறந்த நடிகை நடித்திருந்தாலும் கூடத் தமிழ் முஸ்லிம்களின் வட்டார வழக்கை மிகச் சரியான உச்சரிப்பில், இயல்பாகப் பேசுவதற்கு ஒரு தேர்ந்த நடிகை தேவையில்லையே, மாறாக அந்த இடத்தில் மகள் யாஸ்மீனின் சூழலில் வளர்ந்த சல்மா போன்றவரே சரியென்று அறிந்து, நடிக்க வைத்திருக்கிறார். அவர் கணிப்பை சல்மாவும் உறுதி செய்யும் வகையில் ஒரு கவலை ரேகையோடு தாயின் சாயலில் மிக அமைதியாக பாத்திரப்படைப்பை உள்வாங்கி நிகழ்த்தியுள்ளார். ’ஒது’ செய்யும் முறை, தலையில் சீலை நழுவ விடாமல் தலையை வைத்துக் கொள்ளும் முறை, அதனை ஒதுக்கிவிடும் முறை என்று அமர்க்களப்படுத்தியவர், தொழுகையின்போது தலைமுடி தெரியாமல் முந்தானையைச் சுற்றிக்கட்டாமல் விட்டுவிட்டார். சல்மாவின் மகனாக வரும் ரஷீத் எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அற்புதமாக உலா வந்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது இங்கு பொருந்தாமல் போய்விடும். அவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். கணுக்கால் தெரிய கட்டிய கைலி, தவறு செய்துவிட்டதால் தாயை எதிர்கொள்ள முடியாத திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி, 'அடுத்தவர் பொருளை அபகரிப்பவன் மறுமையில் கைகளை இழப்பான். என் அக்காவின் வாழ்வுக்காக என் கைகளை இழந்தாலும் பரவாயில்லை' என்று கண்களில் காட்டிய உறுதி, அவருடைய தவிப்பு, கலக்கம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா.

கதை சொல்லி கதையை முடிவில் ஆரம்பித்து, பின்னோக்கி சென்று கதையை விவரித்து அதில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் ஒற்றுமையாக தாய்- பிள்ளைகளாக வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தி, 'இல்லாதவன் புலம்பல் எல்லாமே ஒருவிதத்துல கம்பூனிசம்தான்' என்று எள்ளலாக முதலாளி- தொழிலாளி தர்மத்தைத் தொட்டு, அமைதியான மார்க்கத்தை அச்சுறுத்தல் மார்க்கமாகப் பார்ப்பவர்களுக்கு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சரியான முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாதவரை இப்படியான நெறிகள் வெறும் மதக்கோட்பாடுகளாக ஏடுகளில் மட்டுமே இருக்கும் என்பதை மிக நாசூக்காகத் தெளிவுப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு. இச்சித்திரம் மார்க்கத்தை பின்பற்றாமல் ஊர் தப்பாகப் பேசுமென்று ரொக்கமும் நகையும் கேட்பவர்களைப் பார்த்து நகைக்கும்.

பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலநூறு கனவுகளும் ஆசைகளும் இருக்கும், ஆனால் யாஸ்மீன் போன்ற பெண்களுக்கு கனவானது, அவர்கள் சுதந்திரம் என்று விரும்புவது "பட்டபகலுல தெருவுல இறங்கி நடக்கணும், இந்த சந்தத்தாண்டி இருக்கிற உலகத்த நான் பார்க்கணும், மனசு குளிரப் பாட்டுக் கேட்கணும், சத்தமா பாடிப் பார்க்கணும்" என்பது மட்டுமே. ஆனால் அப்படியான ஆசைகள் நிறைவேற அவர்கள் வழியாக நினைப்பது திருமணம் மட்டும்தான். பூப்படைந்த பெண்களை வீட்டிலேயே வைத்து, திருமணம் நடக்கும் வரை நாலு சுவற்றைத் தவிர வேறு எதையுமே பார்க்க அனுமதிக்காமல், யாருடனும் பேச வழி வகுக்காமல், உலக அறிவும் வாசமும் தெரியாமல் முடங்கிப் போக வைக்கும் அவலம் இன்னும் நடந்தேறிக் கொண்டேயுள்ளது. அவர்களை திருமணத்திற்குத் தகுதிப் பெற செய்வது கைத்திருத்தமான சமையலும், அழகும், பிரதானமாகப் பணமும்தான். இதற்குக் காரணம் மதமில்லை, இஸ்லாமிய மார்க்கமில்லை எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்பதில் ஐயமில்லை.

இறுதிக்காட்சியில் 'இஸ்லாத்தைப் பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக இருக்கு' என்பது பெண் விடுதலைக்காகவும் - பெண்களுக்குத் திருமணம் மட்டுமே விடிவு என்றில்லாமல் - அவளுக்குத் தேவையான கல்வி, உலக அறிவு, விசால சிந்தனை எல்லாமும் கிடைக்கப் பெறவும் இந்தத் தலைமுறையினரே உதவிடவும் வழிவகை செய்யத் தலைப்படுமா?

Saturday, January 05, 2008

இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான 'சும்மா', பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய 'இந்த பாரம் தேவையா' போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஒரு உந்துதலாகயிருந்து, அந்த கருந்தரங்கில் பேசப்பட்ட சில படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன். 'மனுஷி', 'தனியொரு மனிதனுக்கு', 'குப்பை', 'இளைஞா', 'ஒரு மரம் நிழலை தேடுகிறது', 'உயிரே உயிரே', 'செருப்பு', இன்னும் பல கிடைத்தது.

குறும்படம் ஏறத்தாழ ஒரு நல்ல கவிதை வடிவம் பொருந்தியது, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு அதனை அழுத்தமாக விளங்கச் செய்து நம்மை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமைக் கொண்டது, சிலது விழிப்புணர்வூட்டும், சிலது மனிதத்தைத் தோண்டும். நான் பார்த்த அந்த தொலைக்காட்சி கருத்தரங்கில் குறும்படம் எடுத்தவர்களின் அனுபவங்களின் பகிர்வு, அவரவர்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றிய விவரிப்பு, விளம்பரப் படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வேறுபாடு, குறும்படத்தைக் கையாளும் யுக்தி என்று சில பிரபலங்களால் விவாதிக்கப்பட்டது. அதில் 'விஷுவல் மீடியா' படிக்கும் ஒரு மாணவரும் அடக்கம். தமது படிப்பிற்கு இத்தகைய படங்கள் எங்ஙனம் உதவுகிறது என்றும் விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவாளர்களுக்காக மலைநாடன் நடத்திய குறும்படப் போட்டியில் எம் வலைப்பதிவர்களும் உற்சாகமாக கலந்துக் கொண்டு பரிசுப் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகப்பட்டது. பாலபாரதி தனது செல்பேசியிலேயே எடுத்து ஒலி சேர்த்திருந்த திறனும் அவர் கையாண்டிருந்த தலைப்பும் பிரமிக்க வைத்தது. அவரைப் போல பல பதிவர்கள். சமீபத்தில் மங்கையின் குறும்படம் பற்றிய பதிவும் மகிழ்ச்சியளித்தது. குறும்படம் பற்றி பேச, ஒரு பதிவாக எழுத துளிர் விடச்செய்தது இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' தான் என்று சொல்லலாம்.


தனது வலைப்பூவை வடிகாலென்று பலர் சொல்லிக் கொண்டாலும் பின்னூட்டத்தின் எண்ணிக்கையில் பதிவின் எடையை நிறுத்திப் பார்க்கும் பலருக்கு மத்தியில் பின்னூட்ட பெட்டியே இல்லாமல் உண்மையிலேயே வலைப்பூவை வடிகாலாக வகுத்துக் கொண்ட இசாக்கை நமக்கெல்லாம் ஒரு சக பதிவராக நல்ல கவிஞராக தெரியும் ஆனால் குறும்படம் எடுக்கக் கூடிய ஆவலை தேக்கி வைத்து ஒரு நல்ல படத்தை தரக்கூடியவர் என்று நேற்று அந்த படத்தை வெளியிட்டு திரையிடும் வரையில் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அமீரகத்தில் வாழும் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்கி வருடம் முழுவதும் உழைக்க, கிடைத்த ஒரு மாத விடுமுறை இடைவேளையையும் இதற்காக பயன்படுத்திய அவரைப் பாராட்டும் முன்பு அதனைப் பொறுத்தருளிய அவர் மனைவிக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும். கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இசாக்குக்கு சேர வேண்டிய பாராட்டை முழுவதுமாக அவர் மனைவிக்கு தந்தமைக்கு காரணமில்லாமலில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும். அந்த வகையில் இசாக் அதிர்ஷ்டசாலிதான்.

பத்து நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதித்திருக்கிறார் - காட்சியாக மட்டுமில்லை நம் மனதிலும். ஒரு குடியின் பயணமென்றதும் பலரும் ஒரு குடிகாரன் குடித்தே தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு படத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படியில்லாமல் ஒரு குடிகாரனால் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பாதிப்பை அழகாக வடித்துள்ளார். குடியைவிட அந்த படத்தில் எனக்கு அதிகம் தென்பட்டது ஒரு பெண்ணின் அறியாமைதான். எப்படி ஒரு பெண் தன் கணவனைச் சார்ந்தவளாக இருப்பின் அவனுடைய குடியையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வின் அர்த்தமாகக் கருதும் தன் குழந்தையையும் இழக்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. குடிகார கணவனால் குழந்தையை இழந்த தருணத்தில் அவனை உதாசீனப்படுத்துவதற்கு பதிலாக, குடி வீட்டில் குடிபுகுந்தவுடன் அவள் அவனை அலட்சியப்படுத்தினாலே குடி எந்தக் குடியையும் கெடுத்துவிட முடியாது. இந்த படத்தைப் பார்க்கும் ஒரு குடிகாரனுக்கு தாக்கம் ஏற்படுமோ இல்லையோ குடிகாரர்களின் மனைவிமார்கள் அந்தப் பெண்மணியின் அழுகையின் ஓலத்தைக் காதில் வாங்கும் போது கண்டிப்பாக தனக்கும் இப்படியொரு கதி ஏற்படுமோ என்று ஈரக்குலை நடுங்கத்தான் செய்வார்கள். அதற்காகவாவது இந்தப் படத்தை அமீரகத்தில் வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் இசாக்.

அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் திரையிடவும் கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அமீரகத்தில் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடிகாரனாக குடியையே மறப்பவர்கள் அமீரகத்தில் சொற்பமென்பதால் அதனை இங்கு திரையிடுவதற்கு மாறாக தமிழகத்திலென்று மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் சமூகவியல், 'விஷுவல் கம்யூனிகேஷன்', 'மாஸ்மீடியா' துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு இயக்குனராக நடித்த கதாபாத்திரத்திலிருந்து தேவையான திருப்தியான உணர்வுப்பூர்வமான நடிப்பை, சரியான முகபாவத்தை கரக்கவில்லையென்ற குறைபாடு இருந்த போதும் கூட அதனைப் பின்னணி குரல்களும் காட்சியமைப்புகளும் ஒவ்வொரு நகர்வுகளும் திருப்தியளித்து ஈடுகட்டுவதாக இருந்தது. அவர் பேசும் போதுதான் ஒரு பத்து நிமிட படத்திலும் இருக்கும் சிரமத்தை, கட்டுப்பாட்டை உணர முடிந்தது. பத்து நிமிட படத்திற்கே இப்படியென்றால் ஒரு முழு நீளப்படத்தையெடுக்க எவ்வளவு மேடு பள்ளங்கள் கடக்க வேண்டியிருக்கும்!?

பலகோடி மணிநேரங்கள், கோடிக் கணக்கில் பணமென்று செலவிடும் வீணாப்போன இயக்குனர்கள் கிடைத்த வாய்ப்பை ஒரு நல்ல படம் தர முயற்சிக்காமல் வியாபார மயமாக்கல் என்று மட்டும் மனதில் விதைத்துக் கொண்டு உருப்படாமல் ஒரு படம் தருவதற்கு பதிலாக இப்படிப்பட்ட நல்ல குறும்பட இயக்குனர்களைக் கொண்டு பல குறும்படங்களை தந்தால்தான் என்ன?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி