Friday, December 28, 2007

'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு


'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, தயக்கம், ஏக்கம், கோபம், வெறுமை என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களிலேயே காட்டிவிடும் அசாத்திய நடிப்பு திறமைப் படைத்தவர். கடைசிக் காட்சியில் ஆசிரியரை மிஞ்சிய மாணவனாக மட்டுமல்ல நடிப்பிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்ட குட்டி கதாநாயகன் - நிஜ நாயகன் தர்ஷீல். படத்தை பார்க்கும் போது என்னுடைய தம்பிதான் என் நினைவுக்கு வந்தான். அப்படி இருப்பதற்கு Dyslexia என்று பெயரென்றெல்லாம் தெரியாமலேயே இருந்து விட்டோம். ஒரு நல்ல ஆசிரியையாக இராம் ஷங்கர் நிக்கும்பாக அவனை மாற்றியெடுத்த பெருமை என் அக்காவையே சேரும்.

ஆமீர் கானின் தயாரிப்பு இயக்கமாக இருந்தாலும் பாராட்டுகள் போய் சேர வேண்டிய இடம் அதன் மூலக் காரணமான அமுல் குப்த்தை. தர்ஷீலை நமக்கு கண்டுபிடித்து தந்த பெருமையும் இவரையே சாரும் என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார் ஆமீர் கான். படத்தில் பாடல் காட்சிகள் வெறும் காட்சிகளாக இல்லாமல் நம் மனதை வாட்டியெடுக்கும் விந்தையாகிறது. விந்தையின் வித்வான்கள் வித்தகர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் ராய்யும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரான பிரசுன் ஜோஷியும். படத்தின் முதல் பாடலான 'தாரே ஜமீன் பர்' மெல்லிய இசையில் ஓங்கி ஒலிக்கும் சங்கர் மகாதேவன் குரல் முதலில் கேட்கும் போது அத்தனை வலுவாக சென்றடையவில்லை, காரணம் காட்சியில் காட்டப்படும் குழந்தைகளின் முகங்களும், அசைவுகளும், சேஷ்ட்டைகளும் இரசிக்க வைத்ததோடு, படத்தை எதிர்நோக்கி உட்கார்ந்திருந்ததாலும் கூட இருக்கலாம். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு மறுபடியும் ஒலிநாடாவில் கேட்கும் போது உலுக்கியெடுக்கவே செய்கிறது பாடலின் வரிகள்.

Dekho inhein yeh hain oss ki boodein
Patto ki good mein aasaman se khude
Angdai le phir karwat badal kar
Nazauk se moti hasde phishal kar
Kho na jaye yehh
Taaare Zaaame per


'வானத்திலிருந்து இலைகளின் மடியில் குதித்த பனித்துளிகள், சோம்பல் முறித்தெழுந்து துயில் கலையும் மிருதுவான முத்துச் சிரிப்பைக் கொண்ட தரைவாழ் நட்சத்திரங்களை கைநழுவவிடாதீர்கள்' என்று நான் பொருள் கொண்டது சரியாயென்று தெரியவில்லை. இப்படி இயற்கையோடு குழந்தையை ஒப்பிட்டு சிலாகிக்கும் அந்த பாடலின் வரிகள் அற்புதம்.

கடைசி பாடலான 'கோலோ கோலோ' ஆசிரியர் மாணவருக்கு தரும் உற்சாகமாக, தன்னம்பிக்கை தரும் சொற்களாக, புது தெம்பாகிறது. அதில் கம்பீரமாக ஒலிக்கும் 'Tu dhoop hai jham se bikhar, tu hai nadee, o bekhabar. Beh chal kahin ud chal kahin, dil khush jahan teri woh manzil he wahin' என்ற வரிகள் நமக்கே புது புத்துணர்வு தருவதாகவுள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு, குழந்தைகளும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பாடல்.

'பம் பம் போலே' என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். சோகமான காட்சிக்கு பிறகு மனதை துள்ள வைக்க ஆமீர் கான் & ஷான் குரலில் இடைவேளையைத் தொடர்ந்து துள்ளிவரும் இந்த பாடல் எல்லா குழந்தையையும் ஆட வைக்கும் .

எல்லா பாடல்களுமே நல்ல பொருட்பட அமைந்து, அதற்கேற்ற காட்சிகள் செறிவாக வந்திருக்கிறது. எல்லா பாடல்களும் நன்றாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'மே கபி பதாத்தா நஹீ' என்ற பாடல். கண்டிப்பாக எல்லோரையும் கலங்க செய்திருக்கும். இந்த கட்டத்தில் அழ ஆரம்பித்ததுதான்... இன்னும் அந்த பாடலை கேட்டாலும் தன்னாலேயே கண்கள் நிறைகிறது காரணமின்றி. 'தாரே ஜமீன் பர்' தாரை தாரையாக கண்ணீர் வடிக்க செய்தது. அதற்காக இது சோகமான அழு மூஞ்சிப்படமென்று ஒதுக்கிவிட வேண்டாம். அப்படியல்ல இது சோகத்தில் ஏற்படும் கண்ணீரல்ல உணர்ச்சியில் வசப்படும் போதும் நெஞ்சை நனைக்கும் கணங்கள் ஏற்படும் போதும் ததும்பிக் கொண்டு நம் மனதை லேசாக்க எழுமே அப்படியான கண்ணீர் அது.

எனக்கு தெரிந்த வகையில் தமிழ்படுத்தியுள்ளேன்.

Main Kabhi Batlata Nahin |நான் எப்போதும் சொன்னதே இல்லை
Par Andhere Se Darta Hoon Main Maa |ஆனால் இருட்டென்றால் பயம்தானேம்மா
Yun To Main,Dikhlata Nahin |நான் எப்போதும் வெளிக்காட்டியதில்லை
Teri Parwaah Karta Hoon Main Maa | உங்கள் மீது எனக்கு அக்கறையுண்டு அம்மா
Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே.. என்னுயிர் அம்மா

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஒரு தாயிக்கு சொல்லாமலே விளங்கும், அதை ஆணித்தரமாக நம்பும் குழந்தை தாயைவிட்டு விலகப் போகிறோம் என்று தவிக்கும் தவிப்பை இந்த ஒரு பாடலே சொல்லி முடிக்கிறது. எந்த ஒரு காட்சியும் ஜவ்வாக நீளமாக இழுக்காமல் கோர்வையாக டக்டகென்று முடித்திருக்கும் அபார யுக்தி அமுல் குப்த்தின் மனைவி தீபா பாட்டியாவுடையது.

Bheed Mein Yun Na Chodo Mujhe |கூட்டத்தில் என்னை விட்டுவிடாதீர்கள்
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa |வீட்டுக்கு திரும்பி வரவும் தெரியாதேம்மா
Bhej Na Itna Door Mujkko Tu |தொலைதூரம் என்னை அனுப்ப வேண்டாமே
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa |என் நினைவுகளும் உங்களுக்கு இல்லாமல் போகும்மா
Kya Itna Bura Hoon Main Maa |நான் அவ்வளவு கெட்ட பையனாம்மா?
Kya Itna Bura Meri Maa |நான் அவ்வளவு கெட்ட பையனா...என்னுயிர் அம்மா?

தாயை பிரிந்து விடுதிக்கு செல்லும் ஒரு குழந்தையின் நிலையை, நிரந்தரமாக தாயை பிரிந்த பிஞ்சுகள் பார்த்து அழும் போது, ஏனோ அந்த பாடல் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபியும் இடது பக்கத்திலிருந்த ஜெஸியும் (ஆசிப்பின் மக்கள்) மறைந்த அவர்களது தாயை நோக்கி 'எங்களை நன்றாக அறிந்த நீங்கள், எங்களை விட்டு தொலைதூரம் சென்றது ஏன்?' என்று கேட்பதாக பட்டது எனக்கு.

Jab Bhi Kabhi Papa Mujhe |எப்போதும் அப்பா என்னை
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa |வேக வேகமாக ஊஞ்சலிலாட்டும் போது அம்மா
Meri Nazar Dhoondhe Tujhe |என் கண்கள் உங்களைதான் தேடுகிறது
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa |என்னை நீங்கள் வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் அம்மா

Unse Main Yeh Kehta Nahin |அவரிடம் இது பற்றி சொல்ல மாட்டேன்
Par Main Seham Jaata Hoon Maa |ஆனால் உள்ளுக்குள் பயம் தானே அம்மா
Chehre Pe Aana Deta Nahin |முகத்தில் அதை காட்டிக் கொள்ளாமலிருந்தேன்
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa |என் மனதிற்குள் நான் பயந்தேன் அம்மா

Tujhe Sab Hain Pata, Hain Na Maa | உங்களுக்கு எல்லாமே தெரியும்தானேம்மா
Tujhe Sab Hain Pata,,Meri Maa| உங்களுக்கு எல்லாமே தெரியும்தானே..என்னுயிர் அம்மா

(Main Kabhi Batlata Nahin)

பாடலை கேட்க இதை கிளிக்கவும்

பாடல் மழையில் நனைந்த நீங்கள் திரையில் குடும்பத்துடன் படத்தையும் பார்த்துவிடுங்கள். இந்த படத்தை பார்க்க குழந்தை பிரியராக, ஒரு தகப்பனாக, தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இது நம் மனதில் ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தை தட்டி எழுப்பும் படம். எந்த படத்தையும் ஒப்பிட முடியாத விதிவிலக்கான அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியப் படம்.

கொசுறு: இது எனது 100வது பதிவு

Tuesday, December 25, 2007

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்


கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

hi jaseela,
even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

idhu kodumailayum kodumaila...

*******************

Hello jazeela,
someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he'll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

How cheap it is????

கல்வி வியாபாரமயமாகி விட்டதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இந்த வகையில் தரம் தாழ்ந்து வருவதை அறியும் போது கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. பெற்றவர்கள் பார்த்து நல்ல கல்லூரியென்று சேர்த்தால், படிக்குமிடத்திலேயே மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பு இருப்பதாக நம்பினால் இப்படியொரு இடியா வந்து விழும்? தனியார் மயமாக்கல், தன்னாட்சி என்று கல்லூரிகளுக்கு ஆதிக்கம் வந்துவிட்டதால் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இது போன்ற கல்லூரிகளுக்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தால்தான் என்ன? ஒரு கல்லூரிக்கு செய்துவிட்டாலே ஒட்டுமொத்த கல்லூரிக்கும் ஒருவித பயமிருக்கத்தான் செய்யும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் யோசிக்கவே செய்வார்கள்.

வேலை வாங்கி தரும் பிரதிநிதி நிறுவனங்கள் (recruitment agencies) கூட தனக்கான ஊதியத்தை நிறுவனங்களிடம்தான் வாங்கிக் கொள்ளுமே தவிர வேலையில் சேரும் நபரிடமிருந்தில்லை. அப்படியிருக்க அற்பத்தனமாக முதல் சம்பளத்தை வேலையில் சேரும் முன்பே மாணவிகளிடம் வாங்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!

என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது. ஊடகங்கள் அரசியல் சார்பாக, சாதி ரீதியாக, வியாபார மயமாகிப் போய்விட்டன, நம்மைப் போன்ற வலைப்பதிவர்களாவது ஒளிந்துக்கிடக்கும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக நம் வலைப்பதிவை அமைத்துக் கொள்வோமே? சேர்ந்து குரல் கொடுங்கள். அதன் மூலம் சேர வேண்டிய காதுகளுக்குச் சென்று சேர வைப்போம்.

Sunday, December 23, 2007

கல்லூரி - நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். 'எவனோ ஒருவன்', 'கல்லூரி'ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி 'கல்லூரி' கிடைச்சுது.


'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது (தமானா, கதின்னு படிச்சி நினனவு). ஒரு முகம் கூட தெரிஞ்ச முகம் கிடையாது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அசாத்திய தைரியம்தான் சொல்லலாம். அதுவும் பார்க்குறா மாதிரியான 'பாய்ஸ்' படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது ஆனா யார் நடிப்புக்கும் பஞ்சமே இல்ல. கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்த உணர்வை ஏற்படுத்திடுறாங்க. படத்தை பார்க்கும் போது 'ஞாபகம் வருதே'ன்னு பாட தோணுது. கதாநாயகன் பாவம் கொஞ்சம் நடிக்க சிரமப்பட்டிருப்பார் போல தெரியுது. இயக்குனருக்கு பெண்ட் கழண்டிருக்கும். கயல் கதாபாத்திரம் தான் கதாநாயகியவிட மனசுல நிற்கிறாப்புல இருக்கு. ரொம்ப யதார்த்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும் நிறைய தேவையில்லாத சொருகுதலும், கூடவே சில ஓட்டைகளும். ஏதோ நிறைய சொல்லவந்ததை அப்படியே விட்டுட்டா மாதிரி இருக்கு படம். ஒவ்வொரும் மாணவருடைய நிலைப்பாடையும் ஆழமா காட்டாம லேசா கொண்டு போயிருக்காங்க. ஒரு மாணவி சலீமாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலின்னு சொன்னதும் மொத்த மாணவர்களும் தம் தகப்பனுக்கு நேர்ந்தது போல முகத்தை வைச்சுக்கிறவங்க, அதே அப்பா இறந்த காட்சிய கனமில்லாம காட்டியிருக்காங்க. அப்பா இறந்தாலும் பரீட்சை எழுத போகிறாள் சரி, அந்த மனநிலையில் பரீட்சை எழுதுவதை சர்வசாதாரண விஷயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கு, அதக்கூட விட்டுடலாம் ஆனா அந்த காட்சிக்கு அடுத்த காட்சியே பரீட்சை அறையிலிருந்து வெளியில் வந்த பிறகு கதாநாயகிக்கு வந்த வாழ்த்து அட்டையை பார்த்து சிரிப்பது போல காட்சியமைப்பு. அப்பா இறந்தது மறுநாளே சொந்த மகள் உட்பட அடுத்த நாளே கல்லூரியில் சிரித்துக் கொண்டிருப்பது ஏதோ நாடகம் போல ஒட்டாம இருக்கு. மெல்லிய நகைச்சுவைக்கு குறைவே இல்லை. 'டாடி'ன்னு ஒவ்வொருத்தர் வீட்டிலையும் அழைப்பதா நினைத்து பார்க்கும் காட்சி அருமை. நகைச்சுவைக்காக இரண்டு மாணவர்கள் தோன்றும் போதெல்லாம் சிரிப்பு தன்னால வந்திடுது. மத்தப்படங்கள் மாதிரி 'டூயட்' கண்றாவியெல்லாமில்ல இசை ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்த படத்துல. பின்னணியோசையில் சில பாடல்கள், காதல் காட்சிகளில் பழகிய இளையராஜாவின் ஒலி கீதங்கள். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் 'உன் பார்வையில் ஓராயிரம்' நல்லவேளையாக 'ரீமிக்ஸ்' சமாச்சாரமெல்லாமில்லாமல் தப்பித்து அப்படியே ஒலிப்பது நேர்த்தியா இருக்கு. கல்லூரியை பின்னணியா வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு ஆனா அதையெல்லாம்விட்டு தனித்துக் காட்டவோ அல்லது பாலாஜி சக்திவேலென்றாலே ஒரு உண்மை சம்பவம் படத்தில் ஒளிந்து கிடக்கும் என்று பெயர் வாங்கவோ அந்த கடைசிக் காட்சி தர்மபுரி தீ விபத்து அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. சர்ச்சைக்குரிய படமாக்கினாலும், அரசியல் வாசனையிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என்பதற்கான யுக்தியாயென தெரியவில்லை ஆனா ஏதோ அவசரகதியா மனசை சஞ்சலப்படுத்தாமல் 'டபக்கென்று' முடிந்து விடுகிறது கடைசிக் காட்சி. அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா பார்க்காம விட்டுடாதீங்க.

அப்புறம், கல்லூரின்னாலே கலகலப்புன்னு படங்களை காட்டி காட்டியே பசங்களை உசுப்பேத்தி விடுறாங்க ஆனா இன்னும் நிறைய கல்லூரி பள்ளிக்கூடத்தை விட மோசமாத்தான்ப்பா நடத்துறாங்க. இங்க துபாயில் 19ம் தேதி ஈத் (தியாகத் திருநாள்) - இங்க ஒரு பெருநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்லாத்துக்கும், சென்னையில 21ந் தேதித்தான் ஈத். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேரம்தான் வித்தியாசம் ஆனா என்ன மாயமோ தெரியல பண்டிகைகள் மட்டும் இரண்டு நாள் வித்தியாசத்துல வருது. வார விடுமுறைய கணக்கிட்டு வருதோ என்னவோ. மழைக் காரணம பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறைன்னு அரசு அறிவிச்சாலும் எம்.ஓ.பி. வைஷ்னவா மகளிர் கல்லூரி (MOP Vaishnava College for Women -Autonomous) மட்டும் அடம்பிடிச்சி கல்லூரிய திறந்து வைக்கிற மர்மம்தான் என்னவோ? அதுவாவது பரவால ஈத் பெருநாளுக்கு அரசு விடுமுறை ஆனா அன்றைக்குதான் பரீட்சை வைப்பேன்னு அடம்பிடிச்சு விடுமுறை தராம பரீட்சை வேற. பாவம் பிள்ளைகளின் கோரிக்கையெல்லாம் நிராகரிச்சிட்டு அப்புறம் போனாப் போகுதுன்னு முஸ்லிம் பிள்ளைகளுக்கு மட்டும் ஈத்துக்கு விடுமுற, அன்றைக்குள்ள பரீட்சைய ஜனவரி 2ந் தேதி தனியா எழுதிக்கிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். என்ன கிறுக்குத்தனம் இது? நானும் கேட்டு வைச்சேன் "எல்லாரும் சேர்ந்து அரசு விடுமுறை அதனால பரீச்டைக்கு வராம 'பங்க்' அடிப்போம்ன்னு சொன்னா என்ன"ன்னு. "அடிச்சா எங்க மதிப்பெண்கள்தானே போகும்"னு பாவம் புலம்புறாங்க பசங்க. "சிறுபான்மையினர்னாலே எளக்காரம்தான்"னு நான் சொல்ல "ம்ஹும் முஸ்லிம்கள்னா மட்டும்தான், ஏன்னா கிருஸ்துமஸ்ஸுக்கு விடுமுறைதானே"ன்னு சொல்றாங்க. "அப்ப இது எளக்காரமில்ல ஏதோ வெறுப்பு, பகைமை"ன்னு நான் சிரிச்சேன். அதுக்கு "பார்ப்பனீயம்"னு முணுமுணுப்பு. 'இதுல பார்ப்பனத்தனம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கிறதா இல்ல சில பார்ப்பனத்தலைகள் ஒளிஞ்சிருக்கிறதான்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஜாலியா இருக்கிற பசங்க வயித்தெறிச்சலையெல்லாம் கொட்டிக்கிறது நல்லதுக்கில்ல.

Saturday, December 15, 2007

மறுபடியும் வந்துட்டோம்ல


கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'.

எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் - அவரும் பதிவர்தாங்க - மிரட்டல் விடுத்திருக்கிறார்னா பார்த்துக்கிடுங்க வதந்தி எப்படிலாம் பரவுதுன்னு. இது என் காதுக்கே எட்ட, ம்ஹும் இனி சும்மா இருக்கக் கூடாது, வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்துட்டேன். 'என்ன கொடும சரவணன்'னு புலம்புறதை நான் காதில் வாங்கிக்கிறதா இல்ல.

சரி உள்ளே வரும்போதே ஒரு நல்ல தமிழ்ப்படத்தின் திரைவிமர்சனம் தரணும்னு நானும் திரையரங்கா ஏறி இறங்குறேன், ஒரு நல்ல படம் மாட்டலையே. 'அழகிய தமிழ் மகன்' அழுகிய தமிழ் மகனாப் போச்சு, 'வேல்' - சுமார் கூர்மை இல்லை. சரின்னு நேத்து 'பில்லா' படத்துக்கு டிக்கெட் வந்தது, குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல என் மகளைத் தவிர. அவளுக்கும் படம் பிடிக்கல போலிருக்கு.

அஜீத்தெல்லாம் கதாநாயகரா நடிக்கிறத கொஞ்சம் நிறுத்திக்கணும். முகத்துல சதையெல்லாம் தொங்கி மனுஷன் பெரிய திரையில் பரிதாபமா இருக்கார். கமல் இந்த வயசில் முகத்தில் வயசு தெரியுறாப்புல இவருக்கு இப்பவே - ரொம்ப குடிப்பாரோன்னு பக்கத்துல யாரோ கிசுகிசுத்தாங்க. கொஞ்சம் 'பேஸ் லிப்ட்' செஞ்சா தேவலைன்னு இன்னொருத்தர் அரங்கில் கத்துறார். பிரபுவுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் ஒட்டவேயில்லை, தொப்பையோடு இருப்பவர்களுக்குதான் டி.எஸ்.பி. பதவின்னு எழுதிக் கொடுத்திட்டாங்க போலிருக்கு. அந்த உயரமான போலீஸ்காரர் பக்கத்தில் பிரபுவின் உயரம் பளிச். தெரிந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா எடுத்திருந்தாத்தான் இன்னும் சுவாரஸ்யமே. இது வெறும் சொதப்பல். 'ச்சே! ரஜினி நடிப்பில் கால் தூசிக் கூட இல்லப்பா'ன்னு தலையில் கை வைக்கத்தான் சொல்லுது.

'நான் அவன் இல்லை' புது வடிவில் வந்த போது நிறைய பேருக்கு அந்த பழையப் படம் நினைவில் இல்லாததாலும் அதைவிட இது பிரமாதமாக சாயம் பூசப்பட்டிருந்ததாலும் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் இந்த பில்லாவில் நவீன மயமாக்கல் என்று சிகப்பு டைரியை 'பென் டிரைவ்'வாக மாற்றி, நிறைய செல்பேசி உபயோகம், பிரமாண்டமென்று ஹெலிக்காப்டர், மலேசியாவில் படப்பிடிப்பு என்று காசை வாரி இறைத்திருப்பது மட்டும்தான் புதுமையோ? படத்தை ஓட்டுபவருக்கே பிடிக்கவில்லையோ என்னவோ பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் வரும் காட்சிகள் பிரகாஷ் ராஜ் வைத்து செய்திருப்பதாகக் கேள்வி அந்தக் காட்சிகள் அப்படியே துண்டிப்பு. கொடுத்த காசுக்கு 'கலேரியா' இப்படியா மோசம் செய்யும்? பில்லாவுக்கு எப்பவுமே ரஜினிதான் பொருத்தமென்று அஜீத் மூலமா நிரூபிக்க வேண்டும்?

நேற்று மதியம் வீட்டில் 'ப்ளைட் ப்ளேன்' என்ற அருமையான ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு மாலையில் 'பில்லா' பார்த்தது நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு, ருசி கெட்டதை அதன் பிறகு வாயில் போட்டு, நாக்கே கெட்டுப் போச்சுன்னு சொல்வோம்ல அந்த மாதிரிதான். ஆனாலும் நமீதாக்காகவும், நயந்தாராக்காகவும் நம்மூரில் படம் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மவர்கள் ரசனையே தனிதானே.

Tuesday, September 18, 2007

பெண்கள் போகப் பொருளா?

ந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்.

நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்பல்லாம் அந்த விளம்பரத்தை கண்டாலே வெறுப்பு வளரும் அளவுக்கு ஊடகம் வளர்ந்திடுச்சு. ஒரு பொருளோட விளம்பரம் தொலைக்காட்சியில் எதுக்கு வருதுன்னு நினைக்கிறீங்க? ஒரு பொருளை மக்கள் மத்தியில் எப்படி அறிமுகப்படுத்துவது, கொண்டு சேர்ப்பது என்பற்கான யோசனை, பல மூளைகளின் வேலை, அதன் மொத்தத் தோற்றம், இது தானே விளம்பரம் என்பது? அதைப் பார்த்து நீங்க அந்த பொருளைப் பத்தி தகவல் தெரிஞ்சக்கணும்னுதானே? பொருளைப் பரவலா அறிமுகம் செஞ்சா அதை நாம் வாங்கணும்னு தானே? விளம்பரம் என்பதன் மூலம் அது நம்மை அடையணும், நம்ம மனசுல அந்தப் பொருள் பதியணும்னுதானே? ஆனா இப்ப உள்ள விளம்பரங்களெல்லாம் அதற்காகப் போடுறா மாதிரியே தெரியலை? 'எதற்கான விளம்பரம் இது' என்று யோசிக்கும் அளவுலதான் விளம்பரப் படங்கள் எடுக்கிறாங்க.

எல்லா விளம்பரங்களிலும் ஒரு குத்தாட்டம் இல்லாம இல்ல. புடவைக்கான விளம்பரமானாலும் சரி சிமிண்ட்டுக்கான விளம்பரமானாலும் சரி அந்த காலகட்டத்து படப்பாடலையொட்டிய ஒரு ஆட்டம் கண்டிப்பா இருக்கணும்கற அளவில் தான் விளம்பரம் தயாரிப்பவர்களுடைய மூளை வேலை செய்யுது. மேலை நாட்டு கலாச்சாரம்னும் சொல்ல முடியாது ஏன்னா அவங்க விளம்பரங்களில் குத்தாட்டமெல்லாமிருக்காதே? விளம்பரப்படுத்த வேண்டிய பொருளைக் காட்டுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஒரு பெண் வலம் வந்துட்டு போய்டுவா. இது என்ன மாதிரியான போக்குன்னே (டிரெண்ட்னே) தெரியலை. விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை ஒரு நொடிதான் காட்டுவாங்க - ஆனா அந்த விளம்பரத்திற்கு வரும் பெண் மாடலை எல்லாக் கோணங்களிலும்.

பெரும்பாலான விளம்பரங்களில் பெண்கள் அதிகம் அழகுக்குத்தான் ஆர்வம் காட்டுவதாகவும், எப்படி ஆண்களை வளைத்துப் போடுவதுன்னு என்பதில்தான் முனைப்புடன் செயல்படுவதாகவும் தான் விளம்பரத்தை அமைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னு ஆகிப்போச்சு. அட்டகாசமான பனியனைத் தடவி பார்க்க விளம்பரத்தில் ஒரு பெண். சரி ஆணை இரசிப்பது பெண்கள் அதனால் அந்தக் கட்டத்தில் பெண்கள் அவசியமென்று சில ஆணாதிக்கவாத மூளை சொல்லலாம். அப்படிப் பார்த்தால் எல்லா தங்க நகை விளம்பரத்திலும் ஒரு ஆண் வேணுமா வேணாமா? ம்ஹும், அங்க ஆண் இருக்க மாட்டார். இதிலிருந்து என்ன தெரியுது? விளம்பரப்படுத்தும் அனைத்துமே ஆண்கள் பார்ப்பதற்காகத் தயாரிக்கப்படுகிறது. அவர்களைக் கவர்வதற்காகவே ஒரு பெண்ணை விளம்பரத்தில் புகுத்துகிறார்கள். பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?

ஊருக்குப் போயிருக்கும் போது பெரிய ஹோர்டிங் போர்டை பார்த்தேன் 'Definitely Catchy' என்று எழுதி ஒரு அழகான பெண்ணின் பிரம்மாண்ட புகைப்படம், என்ன விளம்பரம்னு பார்த்தா - Deccan Chronicle பத்திரிகைக்கான விளம்பரம். விளங்கிடும்னு நினைச்சுக்கிட்டேன். நேற்று பார்த்த விளம்பரம்தான் கொடுமையின் உச்சக்கட்டம் 'ஆக்ஸ்' வாசனைத் திரவியத்தின் விளம்பரம். வாசனைக்கு ஒரு ஆணை நோக்கி ஆயிரம் 'உரித்த கோழிகள்' ஓடி வருவதாகக் காட்சியமைப்பு. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விளம்பரம். 'உரித்த கோழிகள்' என்று குறிப்பிட்டிருப்பது அரை நிர்வாண உடைகளில் இல்லை இல்லை முக்கால் வாசி நிர்வாண உடைகளில் பெண்கள் (உடைகளே இல்லை என்பது தான் பிரச்சனை). இந்த விளம்பரம் அப்பட்டமான ஆணாதிக்க மூளையின் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணுக்கு தேவை மாமிச இச்சை என்பது போலவும், மயக்கும் வாடையில் மயங்கி எவனுடனும் ஒரு பெண் அலைந்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள் என்பது போலவும், கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம். பெண்கள் வெறும் கவர்ச்சி பொம்மைதான்ல? வெறும் காட்சி பொருள்தான்ல? இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?

வீணாப்போனவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் அதற்கு போராட்டம் நடத்தி வீண் என்பதால் சமூக ஆர்வலர்களும், மகளிர் மன்றங்களும் இருந்து விட்டனவா அல்லது பழகிப் போன அறிவுக்கு இதெல்லாம் பழகிப் போய் அறியாமையின் உச்சக்கட்டம் கண்ணில் பட்டும் காணாதவர்களாக இருக்கிறார்களா? கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்? ஒருவேளை கற்பு, கலாச்சாரம், பண்பாடுன்னு பேசுறாங்களே அது இதுதானோ? பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Thursday, September 13, 2007

ஆவியில் வந்த கிறுக்கல்கள்


ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல கிடக்கப் போற'ன்னு பயமுறுத்திட்டுப் போறாங்க. இதுல வேற நேத்து 'மெட்ரோ நியூஸ்'லயும் நம்மள பத்திப் போட்டிருக்காங்கன்னு செய்தியைப் பார்த்தேன். நம்ம இலங்கை நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் தகவலுக்கு நன்றி சொல்லி வந்தேன்.

அப்புறம் பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும், தனி மடலில் தனியா வாழ்த்தியவங்களுக்கும், தொலைபேசி வாழ்த்தியவர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. ஆனந்த விகடனில் நம்ம வலைப்பூ பத்தி வரது அவ்வளவு பெரிய விஷயமான்னு இருந்தேன், என் கவுண்டர் ஓடிய ஓட்டத்தை பார்த்துத்தான் ரொம்பப் பெரிய விஷயம்தான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

எங்க ஊருல ரமதான் இன்று ஆரம்பம் (துபாயை எப்போ உங்களுக்கு எழுதிக் கொடுத்தாங்கன்னு ஆரம்பிச்சுடாதீங்க மக்கா). எல்லா மக்களுக்கும் ரமதான் கரீம்.

Thursday, September 06, 2007

விட்டு விலகி நின்று...


உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய். நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு. உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். 'அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்' என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.

அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்' என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை. இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா. அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது. ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு 'ஆண்கள்', 'காதல்', 'அந்தரங்கம்'. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை - கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய். படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான். விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.

நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார். நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு. அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு. மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.

நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?

Wednesday, September 05, 2007

ஆசிரியர் தின வாழ்த்துதமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?

எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?

முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?

உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?

எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்

உன் நினைவுகளோடு....மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்

Wednesday, August 15, 2007

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா?

எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கிறதே மனது. அவன் மனைவி மக்களுடன் அமெரிக்காவில் சந்தோஷமாக இருக்கிறான் கொடுத்து வைத்தவன் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்ப மட்டும் என்னவாம் எது எப்படியிருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் கொடுத்து வைத்தவன் தான். அவன் எவ்வளவு சுலபமாகத் தன் மனைவிக்கு வேறு ஒருவன் பிடித்திருக்கிறது அதனால் அவளுக்கு அவனையே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் என்கிறான். "எப்படிடா அப்படி முடியும்?" என்றால் 'சிவில்' என்கிறான். குழந்தையைப் பற்றி நான் தயக்கத்துடன் கேட்டால் அவனோ 'மாற்றி மாற்றி எங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கொள்வோம், எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது' என்கிறான் சுலபமாக. புரிதல் இருந்தால் ஏன் பிரிய வேண்டுமாம்? இடம் மாறிவிட்டால் நம் கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை எல்லாமுமா மாறிப் போகும்? ...ஏன் மாறக்கூடாது? இருந்தால் அவனைப் போல் தான் இருக்க வேண்டும். இந்தத் திருமணம், கட்டமைப்பு, ஒழுங்கு, ஒருவனுக்கொருத்தி இதெல்லாம் எப்போது பிறந்தது? மதம் வந்து முளைத்த பிறகுதான் இந்த கருமாந்திரமெல்லாம் வந்திருக்கக் கூடும். பெரியாரை தீவிரமாக வாசிக்கும் போதெல்லாம் அவர் திருமணத்தைக் குறித்து சொல்லியிருப்பதைப் படிக்கும் போதெல்லாம் பெரியார் மீது பழியைப் போட்டு திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதோடு சரி. திருமணம் என்ற ஒன்று வந்தே இருக்கக் கூடாது பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்ந்து, எந்தப் பொறுப்புகளும் சுமந்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அப்படியே நாம் விரும்பியபடி அமைத்துக் கொண்டு நேசித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இந்த சென்னையில் இருந்துக் கொண்டு நானே இப்படியெல்லாம் சிந்திக்கும் போது நான் நினைப்பது போன்ற வாழ்க்கை வாழும் அமெரிக்கர்களை சூழ வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனுக்கு இதற்கு மேலேயும் தோன்றியிருக்குமாக இருக்கும். நான் ஒரு பயிற்சிக்காக சிறிது காலம் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஆங்கிலேயர் அதிசயமாகக் கேட்டது 'உங்க மனைவி நீங்க 1-2 வருடம் கழித்து உங்க நாட்டுக்குச் சென்றாலும் உங்களுக்காகவே காத்து இருப்பார்களா?' என்று மனைவியை இந்தியாவில் விட்டு அமீரகத்தில் வாழும் ஒரு தமிழரைப் பார்த்து பிரம்மிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாரே. அந்த ஆங்கிலேயர் இந்திய திருமண முறையைப் பற்றி எவ்வளவு இரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாழுபவர்களுக்குத் தான் தெரியும் அதிலுள்ள கஷ்டம் என்பதை அவரிடம் சொல்லமலேயே வந்துவிட்டேன். ஐரோப்பாவிற்குச் சென்றேன் என்றுதான் பெயர். போனேன் வந்தேன் என்று இருந்துவிட்டேன் - எதற்கும் நேரமில்லாமல் போனது. அதற்கே சந்தேகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஒரு மாதத்திற்கு மேலானது. இதற்கெல்லாம் பயந்தே என் மேலாளரிடம் நான் ஊரைவிட்டு எங்கும் எதற்காகவும் போவதாக இல்லை. அப்படியே போனால் குடும்பத்தோடுதான் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ச்சீ என்ன ஒரு கேவலம் அதையும் பெரிய பெருமிதமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பக் கட்டமைப்புக்குப் பயந்தே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அல்லவா தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன்.

கையாலாகாத் தனத்தோடு எத்தனை நாட்கள் தான் நான் இப்படி குழந்தையாகவே தலையணையை நனைப்பது? எத்தனை பேர் என்னைக் காதலித்தார்கள், ஏன் தான் நான் தவறான துணையைத் தேர்ந்தெடுத்தேனோ? நானா தேர்ந்தெடுத்தேன்? இணையத்தில் தொடர்ந்து பேச்சாடல் (Chatting) செய்ததில் வந்து விழுந்தது இந்தக் கண்றாவி காதல். அப்போதே யோசித்திருக்க வேண்டும் இவளுக்கு என்னை எதற்காகப் பிடித்தது என்று. காதலை என்னைவிடத் தயக்கமின்றி தெரிவித்தது அவள்தானே? கடல் கடந்த வேலையில், கைநிறைய சம்பளத்தில், கணினியியல் படித்த இந்தத் திறமையான வீசிகரிக்கும் ஆணை யாருக்குத்தான் பிடிக்காது? வாழ்க்கையின் பாதுகாவலுக்கு ஒரு ஆளை தேடியிருக்கிறாள், பெண்களுக்கே உண்டான சுயநலமென்று நன்றாக யோசித்திருந்தால் என் மரமண்டைக்கு அதெல்லாம் புரிந்திருக்கும். அப்போதிருந்த தனிமையில் இவள் பேச்சாடலுக்கு அடிமையாகிப் போய் கைப்பிடிக்கவும் நேர்ந்துவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான வசந்த காலம் தான். நினைத்தால் இன்றும் இந்த நொடியும் இனிக்கிறதே!

காதல் என்ற போதையில் மிதந்துக் கொண்டே கல்யாண நாளை வரவேற்றேன். பிரச்சனையில்லாத காதல் திருமணம் நம்முடையதாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சாடலில் அவள் பேசியதற்கும் இப்போதிருக்கும் பிசாசிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அவளா இவள்? திருமணம் முடிந்து ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று முடிந்துவிடாமல் குறைந்தது 4 வருடம் என் வாழ்நாளிலேயே சந்தோஷமானதாகத் தான் இருந்தது. எப்போது அவளுக்கு என் செயல்களில் நம்பிக்கையின்மை வந்ததோ சந்தேகம் என்ற நோய் வந்ததோ அப்போதே நான் செத்துவிட்டேன். எங்கள் காதல் பேச்சாடலில் நிகழ்ந்ததால் முதலில் நான் கணினியில் பேச்சாடல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாள். 'முடியாதுடி சனியனே, நான் அலுவலகத்தில் பேசினால் உனக்கு தெரியவா போகிறது' என்று அந்த நொடியே பளாரென்று ஒன்று கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. ஒவ்வொரு நாளும் என் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு மட்டும் தானே ஏதேனும் தவறு கண்டுபிடிக்க முடிகிறது. ஏன் இப்படியாகிவிட்டாள்? எதற்காக என்னை வதைப்பதோடு அவளையும் வதைத்துக் கொள்கிறாள்?

என் நண்பனின் மனைவி போல இவளுக்கும் யாராவது பிடித்திருந்தால் 'போய் தொலை' என்று அனுப்பிவிடலாமே, ஆனால் இவளோ அலாதியான பாசப் பிணைப்பு என்று பிதற்றிக் கொண்டு என்னை ஒரு நாய் குட்டிப் போல் கட்டி இழுத்து தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள அல்லவா ஆசைப்படுகிறாள்? நான் என்ன ஜடப் பொருளா அல்லது வீட்டில் இருக்கும் ஒரு மேஜையா அவளுக்காக உபயோகித்துக் கொண்டு உணர்வுகளே இல்லாமல் ஒரு மூளையில் முடங்கி கிடக்க? எனக்கென்ற நட்பு வட்டாரங்கள் கூட இவளால் சுருங்கிவிட்டது. சுருங்கிவிட்டதென்ன சுருங்கிவிட்டது இல்லாமல் போனதென்று சொன்னால் ரொம்பப் பொருத்தம். போதும் போதும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுவதைவிட ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதான். நான் விவாகரத்து பிரிவு என்று நினைத்தாலே குழந்தை தான் என் கண் முன்னால் வந்து நிற்கிறாள். என் ஒரே பிடிப்பான என் மகள் என் கைவிட்டுப் போய்விட்டால்? அப்படி ஒன்றும் நடந்துவிடாது என் குழந்தை என்னிடம் இருந்து வளரவே விரும்புவாள். வருங்காலத்திற்காக இனியும் என் நிகழ்கால சந்தோஷத்தை இழக்க முடியாது. என் குழந்தையின் சந்தோஷத்திற்காக நான் ஏன் திருமணம் என்ற சிறையில் சிக்கிக் கொண்டு சிறகடிக்க முடியாமல் சிலுவையில் அறைந்தாற் போல் திண்டாட வேண்டும்? யோசித்து யோசித்தே தலையில் உள்ள பாதி முடியும் கொட்டிவிட்டது, வாழ்க்கையில் விரக்திதான் மிஞ்சியிருக்கிறது. போதும் போதும் இதற்கு ஒரு முடிவுக் கட்டியாகியே தீர வேண்டும்.

முடிவெடுத்தவனாக "போடி உங்க வீட்டுக்கு போய்விடு, விவாகரத்து நோட்டிஸ் வந்து சேரும்". மகளைப் பார்த்து "கண்ணா, இனி அப்பாதாண்டா உனக்கு எல்லாம். வா செல்லம் நீ தான் என் வாழ்வின் பிடிப்பே". "செல்லம், இனி நீ தான் என் வாழ்க்கையே" என்று அவள் சொல்லும் போதே தலையணையால் யாரோ அடிப்பது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

"எவ அந்த செல்லம் உங்க வாழ்க்கையோட பிடிப்பு? இப்படி கன்னாபின்னான்னு தூக்கத்தில பேசுறது, கேட்டா நான் பிசாசாகி போறேன்ல? என்று 'உர்'ரென்ற முகத்தோடு அவனை உலுக்கிக் கொண்டே கேட்டாள். "உங்க கூட சண்டப் போட நேரமில்ல. இன்றைக்கு சுதந்திர தினம் எங்க பள்ளிக்கூடத்துல விழா, அதுக்கு ஆசிரியர்கள் சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல? சரி நான் கிளம்புறேன், பாப்பாவும் என் கூட வரா... இட்லி வச்சிருக்கேன் அத சாப்பிட்டுட்டு, உங்களுக்கு கட்டி வச்சிருக்கிற டிபன் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போங்க. அப்புறம் நீங்க போகும் போது எல்லா விளக்கும் விசிறியும் அணைச்சிருக்கான்னு பார்த்துட்டு, கதவெல்லாம் ஒழுங்கா மூடியிருக்கான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை செக் பண்ணிடுங்க. உங்க ஷர்ட் இஸ்திரி பண்ணி அங்க மாட்டியிருக்கேன்... சரி நேரமாச்சு நான் வரேன்..." என்று மூச்சு விடாமல் முழங்கிவிட்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்துக் கொண்டிருந்தாள்.

'ச்சே! எப்போ தூங்கிப் போனேன் நான்? அவளை வெளியே 'போ'ன்னு சொன்னது கனவா? அதானே எனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வரும்? அவ்வளவு சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்ன? ஆனா இவ இல்லாட்டி என் பாடு திண்டாட்டம்தான். இனி இப்படியெல்லாம் யோசிக்கக் கூட கூடாதுன்னு இந்த சுதந்திர நாளில் உறுதி மொழி எடுத்திட வேண்டியதுதான்'.

Tuesday, August 07, 2007

யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். தேவைப்பட்டால் ஒரு தொலைபேசி அழைப்புதானே?!. அதுவும் வேலை, அலுவல், குடும்பம் என்ற வரிசையில் நம் நட்பு பின்னால் சென்றுவிட்டது. ஜூலை 2ஆம் தேதி உன் பிறந்தநாளுக்கு நானும் என் மகளும் சேர்ந்து

தொலைபேசியில் உனக்கு பிறந்தநாள் பாடல் பாடும் போது 'happy long life to you' என்று சொல்லும் போது விளையாட்டாக 'long life எல்லாம் வேண்டாம்ப்பா' என்றாயே அது விதியின் காதில் இப்படியா விபரீதமாக விழுந்துத் தொலைய வேண்டும்? நம் நட்பில் உள்ள பலதரப்பட்ட ரகசியங்களை புதைப்பதற்காகவா நீ குழிக்குள் சென்றுவிட்டாய்? உன் பிள்ளைகளைப் பார்த்தாலே உன் தாய்மையின் பிரதிபலிப்பு தெரியுமே! எங்களுக்காக இல்லாவிட்டாலும் அபி- ஜெஸிக்காக உன் உயிரைக் கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்க வேண்டாமா? எப்படி இவ்வளவு சுலபமாக விட்டுவிட்டு சென்றுவிட்டாய்?

அன்று ஃபாத்தின் 'யாஸ்மின் ஆண்ட்டி உங்களை இப்பவே பார்க்க வேண்டுமெ'ன்று அழுதவுடன் இன்ப அதிர்ச்சியாக வீட்டுக்கு வந்து நின்றாயே. இப்போதும் அவள் அழுகிறாள் உன்னைக் கேட்டு நான் என்ன சொல்லிப் புரிய வைக்க? உனது மனதைப் போன்ற மல்லிகைப்பூவை உனக்கு பிடிக்குமென்று ஊரிலிருந்து யார் வாங்கி வந்தாலும் உனக்குத் தரும் போது 'கொஞ்சம் வாடிப் போய்விட்டதே' என்று நான் வருத்தப்பட்டால் நீ முகம் மலர்ந்து 'பரவாயில்லைப்பா' என்று கொடுத்த அன்புக்காக ஆசையாக வாங்கி சூடிக் கொள்வாயே. இப்போது உனக்காக நிறையப் பூ வாங்கி வைத்துள்ளேன் எப்போது வந்து எடுத்துக் கொள்ளப் போகிறாய்? வாடுவதற்குள் சீக்கிரம் வந்துவிடு. உன் வீட்டுக்கு நான் வந்தால் காப்பி, டீ குடிக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு என்னை பால் குடித்தே ஆக வேண்டும் என்று அன்பாகக் கட்டளையிட்டு உபசரிப்பாயே. அந்த அன்புக்காக ஏங்குகிறேன். எப்போது வருவாய்? உன் ஆங்கில புலமையைக் கண்டு வியந்து உனக்கு ஒரு வலைப்பூ பின்ன இருந்தது தெரியுமா உனக்கு? உன்னை வற்புறுத்தியாவது எழுத வைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இறைவன் வேறு விதமாக எழுதிவிட்டானே. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்: நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அறிவேன் அதற்காக இவ்வளவு அவசரமாக நீ அவனிடம் சென்றிருந்திருக்க வேண்டாம் யாஸ்மின்.

என்னிடம் வந்து ஏன் மன்னிப்பு கேட்டாய் யாஸ்மின்? என்னிடம் சொல்லாமல் போனதற்காகவா அல்லது இறுதி மூச்சின் வழக்கமான நியதிக்காக சம்பிரதாயத்திற்காகவா? ஏன் நீ மட்டும் கேட்க வேண்டும் - நானும் கேட்டு விடுகிறேன். என்றேனும் ஏதாவது உன் மனம் காயப்படும் படி பேசியிருந்தால் கண்டிப்பாக அது என் தவறான வார்த்தையின் தேர்வு என்பதைப் புரிந்து என்னை மன்னித்தும், நான் பல விஷயங்களில் சொல்ல மறந்த நன்றியையும் இப்போது ஏற்றுக் கொள்வாயா?

யாஸ்மின், உனக்கு நினைவிருக்கிறதா நம்முடைய துருக்கி சுற்றுலா? அந்த படங்களில் நாம் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை இப்போது எடுத்துப் பார்த்தால் என் கண்களில் முட்டிக் கொண்டு வருகிறது கண்ணீர், ஏன்? நீ என் வளைகாப்பில் அணிவித்த அந்த பிரத்யேக நிற வளையலைத் தேடிப்பிடித்து அணிந்து கொண்டேன். நான் அறிவிழந்து நடக்கிறேன் என்கிறார்கள் என் வீட்டார் - உன்னை இழந்ததால்தான் அப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பாயா யாஸ்மின்? எதற்கும் தளராத நான் சமயங்களில் சோர்வாக இருந்தால் ஆறுதல் சொல்வாயே? இப்போது வாழ்நாளிலே இல்லாத தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, நீ எங்கே போனாய் என்னை தேற்றாமல்? மன உறுதி என்று மார்தட்டிக் கொண்டு திரியும் நான் இப்படி ஆனதைக் கண்டு என் தாயும் 'உன் தோழிக்காக வருந்துவது போல் எனது இறப்பில் வருந்துவாயா' என்று பரிதாபமாக கேட்கும் அளவுக்கு என்னை நொறுக்கிவிட்டாயே நியாயமா யாஸ்மின்? என்னிடம் ஒருவேளை நீ சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் மனதை திடப்படுத்தி இருந்திருப்பேன். உன் கடைசி முகத்தை பார்த்திருந்தால் கூட அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிவிட்டாய் என்று ஆறுதல் பெற்றிருப்பேன். அந்த கொடுப்பினையைக் கூடத் தராமல் சொல்லாமல் சென்றுவிட்டாயே.

உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. நம்முடைய நெருக்கமானவர்களுக்கு முன்பே நாம் சென்று விட்டால் நன்றாக இருக்கும் பிரிவின் துயரைச் சந்திக்கவே வேண்டாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் அந்த அதிர்ஷ்டம் உனக்குத்தான் வாய்த்திருக்கிறது. உன்னை பற்றிய செய்தியை நம்முடைய மற்ற தோழிகளுக்குச் சொல்லும் போதுதான் எங்கள் நட்பை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன். நம் நட்பின் ஆயுள் குறைவு என்று தெரிந்திருந்தால் கிடைத்த அற்ப நேரங்களிலும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.

உனக்கு எழுதிய பிறகுதான் எனக்குக் கொட்டி தீர்த்த மன ஆறுதல் கிடைத்திருக்கிறது யாஸ்மின். இந்த கடிதத்தை உன் ஜிமெயிலுக்குதான் அனுப்ப இருந்தேன். ஆனால் நான் என்றோ என் வலைப்பூவில் எழுதிய என் கதையைப் படித்துக் கிண்டல் செய்தாயே அப்போதுதான் தெரிந்து கொண்டேன் உன் மடல் பெட்டியைத் திறக்கிறாயோ இல்லையோ என் வலைப்பூவை படிக்கிறாயென்று, அதனால் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பாவியின் மடலை படித்துவிட்டு பதில் எழுதுவாய் என காத்திருக்கிறேன் உனக்காக பிராத்தித்தபடி.

Thursday, August 02, 2007

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா இன்று (01/08/07) புதன் இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா 02-08-2007 வியாழன் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.

அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்
ரியாஸ் அகமது & குடும்பத்தினர்

Wednesday, August 01, 2007

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:

இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும் போட்டிக்கு அல்ல.

படம் 1: தாய்மைக்கு வயதில்லை!


படம் 2: அம்மா என்ன தூக்கு...


படம் 3: ராணியை ஆட்டி வைக்கும் இளவரசி!

Monday, July 30, 2007

கணினி ஓவியப் போட்டி! -3

ஓவியப் போட்டிக்கான மற்றுமொரு ஓவியம்.

வாழ்க்கையே ஒரு சதுரங்கம் அதில் நாம் பகடைக்காய்கள்

Sunday, July 29, 2007

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.

என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:

வெட்ட வெளியில் வெக்கையில் அவிய திட்டமிட்டே கரமா பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு. அந்த புல்வெளிக்குள் நான் நுழைந்து "எல்லோருக்கும் வணக்கம்" என்று சொல்ல எல்லோரும் எழுந்து நிற்க. "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் உட்காருங்க" என்று நான் சொல்ல, "இத முன்னாடியே சொல்லியிருந்தா எழுந்து நின்னுருக்க மாட்டோம்ல" என்று தன் பெரிய உடம்பை அசைத்ததற்கான சிரமத்தை தெரிவித்தார் அவர். அதே நபர் "உங்களுக்கு யார் யாருன்னு தெரியுமா, அறிமுகம்.." என்று ஆரம்பிக்க நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். ஆனால் அந்த ஒருவர் மட்டும் யார் என்று யோசித்த போது 'க்ளூ' வேண்டுமா என்று தொடங்கும் முன்பே "பெனாத்தல்..?" என்று சரியாக கேட்டுவிட்டேன். அறிமுகத்திற்கு பிறகு சுடான் புலி உரும தொடங்கியது.

ஆரம்பத்தில் உருமியது மட்டும்தான் அதன்பின் அடித்த குச்சிக் கோலாட்டத்தில் (கும்மி மட்டும்தான் சொல்லனுமா என்ன?) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு "அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேசினார். பெனாத்தலார் என்னிடம் "என் பதிவுகளை படிப்பீங்களா?" என்று கேட்க நான் திருட்டு முழியோடு "ஆரம்பத்துல படிச்சுக்கிட்டு இருந்தேன் - தேன்கூடு போட்டிக்கெல்லாம் எழுதும் போது ஆனா சமீப காலத்தில் படிக்கிறதில்லன்னு" உண்மையை ஒப்புக் கொண்டேன். "ஓஹோ ஆரம்பத்தில் அந்த தப்பெல்லாம் செஞ்சிருக்கீங்க அப்புறம் திருந்திட்டீங்க" என்று எடுத்துக் கொடுத்தார் சுடான் ஹீரோ.

சென்ஷியிடம் டெல்லியில் இருந்த அனுபவத்தை கேட்க, அவர் அங்குள்ள இடம், மொழி, கலாச்சாரம் பற்றி பேசுவார் என்று ஆர்வமானால் அவர் டெல்லி வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக முத்துலெட்சுமி, மங்கை, கார்த்திக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். மாலனை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதென்று சொன்னார் (அதற்காக வருந்தினாரா சந்தோஷப்பட்டாரா என்று அவர் முகபாவம் சொல்லவில்லை). நான் அவரிடம் 'சென்ஷி'யின் பெயர் காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டேன். தன் பெயருடன் தன் நண்பர் பெயரை இணைத்து வைத்துள்ளதாக சொன்னார். ஜாதி, மத பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்களெல்லாம் இப்படி வேறு பெயரில் எழுதுவதாகவும் சொன்னார் (என்னவொரு புத்திசாலித்தனம்). அவரிடம் நான் 'ரிப்பீட்டு' என்ற அவருடைய வழக்கமான பின்னூட்டத்தை தவிர வேறு என்ன உருப்படியாக எழுதுவீர்கள் என்று கேட்டு வைத்தேன். "உருப்படியில்லாத உங்க வலைப்பதிவுக்கெல்லாம் அந்த பின்னூட்டம் கூட கிடையாது உங்க பதிவுகளை படிப்பதே இல்ல, நல்லாவே இருக்காது" என்று சொல்ல. உடனே லொடுக்கு "இல்லப்பா நீ படிப்பதில்லையா நல்லாத்தான் எழுதுவாங்க" என்று எனக்கு ஆதரவாக திருவாய் மலர. "மொக்கையாவும் இருக்காது, ரொம்ப நல்லாவும் இருக்காது, அதனால் நான் படிக்கிறதே இல்லப்பான்னு" சலித்துக் கொண்டார் சென்ஷி.

என் கணவர் பாவம் போல லொடுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்திருந்தார் ஏற்கெனவே அறிமுகமான முகம் என்பதால். லொடுக்கு தன் மனைவி ஜெசிலாவை மகள் மரியமையும் (ஆமாங்க அவர் மனைவி பெயரும் ஜெசிலா) அழைத்து வந்ததால் ஒருவித துணையாக இருந்தது எனக்கு. ரொம்ப காலம் பழகிய நண்பர்களாக உணர்வதால் லொடுக்கு தம்பதியோடு பேசுவது மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருந்தது. இருவரின் மகள்களும் விளையாட அவர்களுக்கு 'சாக்லெட்' வாங்கி குஷிப்படுத்தினார் அனானி தியாகு. (என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்.) தியாகு என்னிடம் "உங்க மகள் ரொம்ப 'கியூட்' காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுட்டாங்க" என்றார் மிகவும் பரிதாபமாக. கோபி அறிவு பசியில் வந்திருப்பாராக இருந்திருக்கும் அய்யனார்- சுரேஷின் தீவிர வாசிப்பனுபவங்களை இரண்டு காதுகளையும் சமர்பித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்ப நல்ல சாந்தமான பையனாக தெரிந்தார் கோபி.

சுடானை பற்றி ஏதாவது சொல்லுங்க என்று சுடான் புலியிடம் கேட்க "இப்போதைக்கு அந்த நாடு அப்படியேதாங்க இருக்கும். எந்த முன்னேற்றத்திற்கான முயற்சியும் தெரியல" என்று சுருங்க முடித்தார். "அபி அப்பா பதிவை படிக்காம பின்னூட்டம் போடுவதை எப்போ நிறுத்த போறீங்க" என்று நான் கேட்க வழக்கம் போல அவர் எழுதுவதை போலவே ஏதோ தெளிவில்லாமல் பதில் அளித்தார். "தான் ஓட்டவாயில்லை ஒளிவுமறைவில்லாமல் இரகசியங்களை 575 பேரிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் சொல்லிவிடுவேன்" என்று ஒப்புதல் வாக்குமூலமளித்தார். அது மட்டுமில்லாமல் சொற்பிழை அதிகம் செய்வதால் அனானியாக பின்னூட்டம் போடமுடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கம் வேறு (ரவிசங்கர், சீக்கிரமா ஒரு தமிழ் பிழை திருத்த மென்பொருளுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா- ரொம்ப அவசியப்படுது). "உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே" என்று நான் கேட்டதற்கு. "இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.

"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா? உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே?" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி "ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் "அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை" என்று சமாளித்தேன். "செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக! குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் "ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா?" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் "நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல "அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்" என்று சிரிக்க. உடனே சுரேஷ் "நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். "உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. "அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது" என்று உண்மை உரைத்தார். "மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு சுட்டிக் கூட அனுப்பினேனே" என்று என்னிடம் அய்யனார் ஆர்வமாக கேட்க "ஆமா படிச்சேன். நல்லா இருந்தது. நிறைய எழுத மாட்றார்" இப்படி நல்ல எழுதுபவர்கள் நிறைய எழுதாததை சோகமாக சொன்னேன். சுரேஷும் "ஆமாம். நானும் சன்னாசி வாசிப்பேன் நல்லா எழுதுவார்" என்றார்.

திடீரென்று சென்ஷி "நட்சத்திர பதிவரை எந்த அடைப்படை தகுதியில் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்று ஆவேசமாக கேட்க நான் விளக்கம் அளித்தும் திருப்திப்படாமல், "அதெப்படிங்க அந்த நிர்மலோ யாரோ நட்சத்திர வாரத்தில் ஒரே ஒரு பதிவு போட்டோ, ஒண்ணுமே எழுதாமலோ ஒரு பிரச்சனை வந்து எல்லாம் கிண்டல் செஞ்சாங்களே ஏன் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நட்சத்திரமாக்கணும்" என்று கேட்க. "தமிழ்மணம் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி செய்யாதது தமிழ்மணத்தின் குற்றமாகாது" என்று சொல்லியும் 'இல்லை இல்லை' என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்ஷி. (அவருக்கு அய்யனார் நட்சத்திரமானதில் கடுப்போ என்னவோ!). "அபிஅப்பா திமுக பற்றிய அரசியல் கட்டுரை எழுத வேண்டாம் கண்டிப்பாக உங்க 'இமேஜுக்கு' யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று லொடுக்கு கருத்து சொல்ல, அந்த மாதிரி கட்டுரைகளை தனிமடலாக வலம் வர செய்கிறேன். அந்த உறவின் தீவிரத்தில்தான் லக்கிலுக் என்னை வந்து சந்தித்தார் என்று சொன்னார்.

என்னை விட மிக குறைவாக பேசியது இரண்டு பேர். 1) கதிர், பாவனா பற்றி பேசும் போது மட்டும் வாய் திறந்தார் (ஜொள்ளு விட இல்லப்பா, பேசுறதுக்கு). அவர் கடைசியாக எழுதிய நிராகரிப்பட்டவர்கள் பற்றி நான் சிலாகிக்கும் போது கொஞ்சம் இலச்சையில் முகம் சிவந்தார். 2) சுல்தான், வந்தவுடன் என்னை எங்கேயோ பார்த்த நினைவு இருப்பதாக சொன்னார். அதன் பிறகு 'எங்கே பார்த்திருக்கிறேன்' என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாரோ என்னவோ வாய் திறந்து பேசி நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் போகும் போது "நீங்க ஆவேசமா பேசி பார்த்த நினைவு எங்கன்னுதான் தெரியலை" என்றார் மறுபடியும். அதுவா ஏதாவது பட்டிமன்றத்தில் பார்த்திருப்பீர்கள் என்று நான் சொல்ல "ஆம்மாம்மாமா, லியோனி பட்டிமன்றத்தில் பேசினீங்கள, அதானே பார்த்தேன்" என்று முகம் மலர்ந்தார். தெளிவுப் பெற்றதால் தலை வெடிக்காமல் கண்டிப்பாக தூங்கியிருப்பார் என்று நம்புகிறேன்.

அப்புறம் இடையிடையே தமிழச்சி- செல்லா பிரச்சனை, லக்ஷ்மி- மோகன்தாஸ் வாதங்கள், எது சரி- எது தவறு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமித்த கருத்தாக எல்லோரும் சொன்னது வலையில் கும்மி கூடிய பிறகு காட்டமான வாக்குவாதங்களும், புழுதி வாறி இறைக்கும் ச(சா)கதி சண்டைகளும் குறைந்துவிட்டதாக பலர் சந்தோஷப்பட்டாலும் சிலர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.

இப்படியே பேசி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை ஓட்டிவிட்டு அபிஅப்பா தயவிலா யாரோட தயவிலென்று தெரியாது (யாராக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர்) 'ஆர்டர்' பண்ணி சாப்பிட்டுவிட்டு பதிவர்களுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.

Saturday, July 28, 2007

சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.

சரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் வரைந்த படங்கள்னு சொல்ல வந்தேன்.

Mr.பீனின் புலம்பல்தேவதாசியின் மனமில்லா அபிநயம்

வாய்ப்புக்கு நன்றி.

Thursday, July 26, 2007

பழக வருகிறார் உங்களுடன்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது வேறு கதை.

யாரெல்லாம் உங்க சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள்?

1. மனைவி (அவ சொல் பேச்சு கேட்டுத்தான் நானே நடக்குறேன்னு சிலர் புலம்புறது கேட்குது - அதுல தப்பே இல்ல கீப் இட் அப்)

2. குழந்தைகள் (அதெல்லாம் அந்தக் காலம், இந்த காலத்து புத்திசாலி குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்டு நடக்க வேண்டி இருக்குன்னு அனுபவபூர்வமா எனக்கும் தெரியும்.)

3. வளர்க்கும் நாய் (நீங்க சொல்றா மாதிரி கேட்குதுன்னு வெளியில சொல்லிடாதீங்க 'ப்ளூ க்ராஸ்' தயாரா நிற்கிறாங்க)

யார் கேட்கிறார்களோ இல்லையோ இவர் கேட்பார். ம்ம் சொல்லுங்க ஆனா இவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் புரியும் அதுவும் ஒற்றை வார்த்தையில் சொன்னால்தான் புரியும். உங்க சொல்பேச்சுக் கேட்கும் 'மவுஸை' கொண்டுப் போய் LAUGH, CRY, DANCE, JUMP, GO TO HELL, F*****F இப்படி ஏதாவது தட்டிப் பாருங்க திட்டிப் பாருங்க உடனே செய்வார், சொல்படி கேட்பார். அதுவும் Internet Explorer 6 உபயோகித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ஆனா நீங்க சொல்வது புரியலைன்னா உடனே உதட்டை பிதுக்கி புரியலைன்னு ஒத்துக்குவார்.

இதை சொடுக்கித்தான் ஆணையை பிறப்பிக்க முடியும். இண்டர்நெட் எஸ்ப்லோரரில் உலவுபவராக இருந்தால் சொடுக்குங்கள் ஆணையிடுங்கள், இதோ உங்கள் அடிமை (பயர்பாக்ஸிலும் வேலை செய்யும் ஆனால் ஆணை பிறப்பித்த பிறகு ஒரு உரல் வரும் அதை க்ளிகினால் தான் அவரை பார்க்க முடிகிறது):இந்த மாதிரி தமிழில் ஆணை பிறப்பித்து விளையாடினால் இன்னும் நல்லா இருக்கும்ல? எங்கே நம் மென்பொருள் வீரர்கள்? (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா!)

Wednesday, July 18, 2007

வலைப்பதிவாளர்கள் தயாரா?

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் மகள் (தற்)கொலையே (?) நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த பதிவாக நான் படித்தது சுபா சுந்தரம் காலமாகிவிட்ட இரண்டு வருட பழையச் செய்தி. இந்த இரண்டு பதிவையும் அடுத்தடுத்து பாடித்தது தற்செயலாக சம்பவித்திருக்கலாம் ஆனால் எப்படி அப்படி என்று இழப்புகளையும் இறப்புகளையும் அசைப்போட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் நான் ஒரு பெரிய 'round-about'ஐ கடந்துக் கொண்டிருந்தேன். நான் நடு 'டிராக்'கில் இருந்தேன் நேராக செல்வதற்காக. நேராக செல்கிறேன் என்று சுட்டிக்காட்டும் கருவியையும் (indicator) தட்டிவிட்டு 'round-about'ன் மத்தியில் கடக்க இருக்கும் போது பெரிய பேருந்து என்னுடைய வலதிலிருந்து இடப்பக்கம் திரும்புகிறது என்னுடைய சின்ன வண்டியை கவனிக்காமலேயே. பேருந்தின் ஒளி கண்சிமிட்டவே நான் கவனித்து 'இறைவா உன்னுடைய காவல்' என்று ஒரு கத்து கத்திவிட்டு அப்படியே இடப்பக்கமாக திரும்பினேன். ஓட்டுனரை திட்டவோ, horn அடிக்கவோ தோன்றவேயில்லை. ஓட்டுனரின் முகத்தைப் பார்த்தேன், என்னைவிட அவர் கண்ணில்தான் பயம் அதிகமாகத் தெரிந்தது. காரணம் இந்த ஊரின் சட்டத்திட்டம் அப்படி. நேற்று அந்த அசம்பா விதம் நடந்திருந்தால் அதே நொடியில் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் விபத்துக்கு காரணமான அந்த ஓட்டுனர் வாழ்நாள் முழுவதும் கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறையில் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மறுபடியும் ஒரு முழு வட்டம் எடுத்து வந்தேன்.

அதன் பிறகு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் 'நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்' என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல?). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு? கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே? இருந்தாலும் இதெல்லாம்தான் முதலில் வந்து நிற்கிறது எனக்கு. 'ச்சே, என்ன ஒரு இயந்திர உலகில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்' என்று யோசித்தேன். சாவைப் பற்றி கண்டிப்பாக நான் பயப்படவில்லை என்பது மட்டும் விளங்கியது. ஆனால் சில ஜீவன்களுக்காக வருத்தப்பட்டேன். முதலில் என் மகள், தாயில்லாதவளாக வளர்வாளே என்று. அதற்கு அடுத்தபடியாக என் பெற்றோர். பெற்றோர்களுக்குப் பெரியக் கொடுமையே தன் குழந்தையை தமக்கு முன் இழப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். அப்படிப்பட்ட தண்டனையை என் பெற்றோருக்கு நான் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

இதே போல் போன வாரம் உடல்நிலை சரியில்லாத போதும் இப்படித்தான் சாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன் (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா?). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது!). அத்தோடு அந்த தருணத்தில் மண்டையில் உதித்த 'சூப்பர்' சிந்தனை என்னவென்றால் எல்லோரும் ஆறு, எட்டு, சுடர் என்று விளையாடுவது போல் என் மறைவுக்காக ஆளாளுக்கு ஒரு சின்ன கட்டுரை எழுத வேண்டும், தலைப்பு 'நாளை உன் மரணம் நேர்ந்தால்' எல்லோரும் கண்டிப்பாக மொக்கை இல்லாத தீவிர பதிவாக ஒவ்வொருவரும் மரணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கடமைகளை எப்படி ஒரே இரவில் முடிப்பீர்கள், எந்த அளவுக்கு தயாராக இருப்பீர்கள் என்று யோசிக்க வைக்க வேண்டுமென்றெல்லாம் கற்பனை. குறிப்பாக என் கடைசி பதிவில் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று இருந்தேன். (என்னத்த பெருசா புதுசா கேட்டுவிட போறேன் - அதே அரைத்த புளித்த மாவுதான்)

1) சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பதிவுகளை பதியாதீர்கள்.
2) தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம். பின்னூட்டம் போடுவது ஊக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
3) அனானி பின்னூட்டங்களை வெளியிடலாம் பதிவுக்கு தொடர்புடையதாக இருப்பின். அனாவசிய சம்பந்தமில்லாத பிரச்சனைகளை வளர்க்கும் ஜல்லியை தவிர்க்கலாம்.

இப்படிலாம் நான் சொன்னா மட்டும் திருந்திவிடவா போகிறார்கள் நம் மக்கள்? இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே? இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா?


இப்படியெல்லாம் அப்போ அதாவது போன வாரம் என்னுடைய காய்ச்சலின் சீதோஷ்ண அளவு (temperature) 39° C இருந்த போது எழுத நினைத்தது. இதெல்லாம் சாக்காக வைத்து கொலை வெறியில் அலையாதீங்கப்பா.

Sunday, July 15, 2007

சுகுணா என் காதலி

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )

இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவள் தானா அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் அவளாக ஒரு காலத்தில் தெரிந்துக் கொண்டிருந்த அதே நோய் மீண்டும் வந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அதே கணம் பாஸ்கரும் 'சுகுணா' என்று விளித்து என் அச்சத்தை தெளிவாக்கிவிட்டான். ஆமாம் அது என் சுகுணாவேதான். எப்படி அடுத்தவன் பொண்டாட்டியை 'என் சுகுணா' என்கிறேன் என்றெல்லாம் கேட்க கூடாது. இப்போது வேண்டுமானால் அவள் பாஸ்கரின் மனைவியாகி போகலாம், என் மனதளவில் இன்றும் அவள் 'என் சுகுணா'தான்.

லேசில் எந்த பெண்ணையும் பிடித்துவிடாது எனக்கு. சின்ன வயதிலிருந்தே அம்மாவை கண்டால் ஒருவகை வெறுப்பு, காரணம் அவள் என்னை பெற்றவள் அல்ல என்பதால் இல்லை அவள் என் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாததால். யாரிடமும் ஒட்டாமலேயே வளர்ந்துவிட்டேன். என் சிந்தனைகளையும் யோசனைகளையும் அவ்வப்போது எழுதுவேன் அதற்கு 'கவிதை' என்று நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் அது எனக்கு மட்டுமே புரிந்தது. அதனால் அதனை இப்போது எவரேனும் வாசித்தால் 'பின் நவீனத்துவத்துடன்' சேர்த்து விடக் கூடும். அந்த வகையான எழுத்துக்கள். எழுதியதை வெறுப்பில் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, இனி எழுதவே போவதில்லை என்று எல்லாவற்றையும் வீசிக் கொண்டிருந்த போது சில பக்கங்கள் சுகுணாவின் காலை சென்றடைய குப்பை என்று ஒதுக்காமல் ஒரு காகிதத்தை மட்டும் கையில் எடுத்தாள். முதலில் என் காகிதத்தை ஒரு பெண் தொட்டாள் என்றதும் கோபம்தான் பிளறியது, பறக்கவிட்டாலும் அந்த குப்பை எனக்கே சொந்தமானது. எடுத்தவள் முகம் மலர்ந்தது. தூரத்திலிருந்து கவனித்தேன். "ஹே சூப்பர் கவிதைடி" என்று தோழியிடம் இரசித்து சொல்லியது அந்த அமைதியான சூழலில் அவள் வார்த்தை மட்டும் என் காதில் எட்டவே அவளை நான் இரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளை அடிக்கடி காணவே முடியாது. என் சுகுணா மிகவும் அடக்கமானவள், அமைதியானவள், அழகானவள். பூமிக்கும் வலிக்காமல் நடப்பவள். பூமியை மட்டுமே பார்த்து நடப்பவள். எத்தனையோ முறை நான் அவளை கடந்து சென்ற போதும் அவள் என்னை கவனித்ததே இல்லை. நான் வசீகரிக்கும் ஆணாக இல்லாமல் போனதால் என்று சொல்லிவிடாதீர்கள். என்னை மட்டுமல்ல அவள் யாரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பாவி பாஸ்கரை மட்டும் எப்படித்தான் கவனித்தாள் என்று இன்னும் எனக்கு புரியவேயில்லை. ஒரே ஒரு முறைதான் அவளை அவனுடன் பார்த்தேன், மனம் ஒப்பவேயில்லை. அதுவும் அவள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில்தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். என்ன உறவு என்று அவசரப்படாமல் தெரிந்துக் கொள்ளும் அவசரத்தில் நான் இருந்தேன். நானே அவள் வீட்டில் உள்ள ஒரு பெரியவரிடம் எதேச்சையாக ஏதோ காட்டுவதாக அவர்களை காட்டி விட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கே தெரியாது. ரொம்ப நாளாக அவளை வெளியில் பார்க்க முடியவில்லை. காட்டிக் கொடுத்ததால் அவளை வீட்டில் அடித்தார்களோ என்று எனக்கு நானே கற்பனை செய்துக் கொண்டு கொஞ்ச காலம் குற்ற உணர்ச்சியில் இருந்தேன்.

நான் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கும் போதுதான் அவள் முதல் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள். அதனால் இன்னும் அவளுக்கு மணமகன் தேட காலமிருக்கிறது என்று கணித்துக் கொண்டு வெளிநாடு வேலை கிடைக்கவே பறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய திருமண பேச்செழவே, அவள் இறுதியாண்டுக்கு இப்போதுதான் வந்திருப்பாள் என்று கணக்கிட்டு அவளை விசாரிக்க சொல்லும் போது தெரிந்துக் கொண்டேன் அவள் பாஸ்கருடன் ஓடிப் போய்விட்டாள் என்று. 'ஓடி போய்விட்டாள்' என்று யாரும் தெரிவிக்கவில்லைதான், ஆனால் வேற்று சாதி பாஸ்கர் என்ற பையனுடன் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்தது. அப்போதுதான் நான் என் வாழ்க்கையின் 'வில்லனின்' பெயரையே தெரிந்துக் கொண்டேன். அவள் தூரத்தில் அவனுடன் இருக்கும் போது அவள் முகம் தனியாக பளிச்சிட்டு தெரிந்தது, அப்போது அவனை நான் கவனிக்காததால் இப்போது அவர்கள் வீட்டிலேயே மேல் தளத்தில் வாடகைக்கு இருக்கிறேன். இருப்பினும் ஓரத்தில் ஒரு வகை ஆசை. அந்த ஆசையில் ஒருவகை வலி. அதனால் என் மனசு எனக்கு சொன்னதெல்லாம் 'இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கடல் கடந்து, அவள் வாழ்க்கையில் உனக்கு இன்னும் இடம் இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கடிவாளமில்லாத மனது கண்டபடி அலைபாயத்தானே செய்யும்? ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். 'உனக்குமா என்னை பிடிக்கவில்லை' என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. பார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன? இருப்பினும் கண்ணுக்குள் கலக்க மாட்டாளா என்ற அற்ப ஆசை இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்காதா என்று நான் பார்க்கும் போதெல்லாம் அவள் முதுகை மட்டுமே காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவர்கள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது 'ஒருவேளை அவள் என்னுடன் இருந்திருந்தாள் இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க முடியாதோ' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும் என் அலைபாயும் மனம் 'இதை விட சந்தோஷமாக இருந்திருப்பாள். பிடிக்காத மனைவியென்பதாலேயே முன்னேற முயற்சிக்காமல் அவளையும் இங்கு அழைத்து வராமல் இருக்கிறாய். இவள் மனைவியாகியிருந்தால் நீ எங்கேயோ போயிருப்பாய்' என்று சொல்லி என்னை கற்பனை உலகிற்கு இழுத்து செல்லும்.

வாழ்க்கையில் எனக்கு காதல் என்று பூத்தது இவளுடன் மட்டும் தான் அதையும் தெரிவிக்காமலேயே என் வாழ்வு முடிந்து விட்டால், என் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே? இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். 'நம் உலகம்' என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். 'உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்' என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு 'நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்' என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக 'கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந்து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா?' என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் 'யார் யார்' என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன்? இது வக்கரமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது என் காதலுக்கு நானே செய்துக் கொள்ளும் ஒரு வகையான சமாதானம். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது இருப்பினும் காலம் கடத்தாமல் எழுதவே தோன்றியது எனக்கு. எழுதிவிட்டேன் அனுப்பியும் விட்டேன்.

என் கடிதம் கைக்கு கிடைத்து விட்டதா அல்லது வேறு சில காரணமா என்று தெரியவில்லை, நான் கடிதம் அனுப்பி இரண்டாவது நாளிலேயே அவர்கள் வீட்டில் ஏதோ பூகம்பம் வெடித்தது போல் பலத்த சண்டை நிகழ்ந்துக் கொண்டிருந்தது, அப்போது தான் நான் அலுவலகம் முடிந்து மாலை வீட்டுக்குள் நுழைகிறேன். உரையாடல்களின் சத்தம் கேட்காதது போல் படி ஏறினேன். சண்டையென்று அந்த சத்தத்தை வைத்து உணர்ந்து கொள்ள முடிந்ததே தவிர சொற்கள் சரியாக காதில் கேட்காததால் சம்பவம் புலப்படவில்லை. இருவர் குரலில் அவன் குரல் தூக்கலாக ஒலிக்கவே சுகுணாவின் குரல் கேட்காமலேயே இருந்தது. அடிக்கடி உரக்க தெளிவாக கேட்டதெல்லாம் 'கத்தாதே' என்ற ஒரே வார்த்தை மட்டும். சலசலப்புக்கு பிறகு பாஸ்கர் வெளிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, மேலிருந்து எட்டிப் பார்த்தேன். கோபத்தில் சிவந்திருந்தது பாஸ்கரின் முகம். எட்டிப் பார்க்கும் என்னையும் கவனிக்காமலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டான். கீழே சென்று அவளிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாமா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. இருப்பினும் பாஸ்கர் மறுபடியும் வந்துவிட்டால் என்ற அச்சத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். வேறேதும் சத்தம் கேட்கிறதா என்று காதை கூர்மைப்படுத்திதான் வைத்திருந்தேன் ஆனாலும் வேலையின் அலுப்பா என்று தெரியவில்லை, என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். கனவிலும் சுகுணாதான் என்னுடன். திடீரென, நடு இரவில் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். சத்தம் கீழிருந்துதான் என்று ஓடி இறங்கி சென்றேன், ஹாலில் பாஸ்கர் கையை தலை மேல் வைத்து அழுதுக் கொண்டிருந்தான். மகள் சோஃபாவில் படுத்திருந்தாள். சுகுணாவை என் கண்கள் தேடியது. அழுகைக்கான காரணமும் புரியவில்லை. அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தேன். என் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அக்கணம் என் மனதை பிசைந்தது, மிகவும் சங்கடமாகிப் போனது. "என்ன ஆச்சுங்க" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அவன் மேலும் குரலுயர்த்தி அழுதான். ஒருவகையான பயம் என் மனதை பிடித்துக் கொண்டது காரணமேயில்லாமல். மறுபடியும் உலுக்கி "சொல்லுங்க" என்றேன். உள் அறையை கைக்காட்டி மறுபடியும் குரல் உயர்த்தி அழுதான். எனக்கு உள் அறைக்கு போக ஏதோ தயக்கமாக இருந்தது. வெளி கதவும் திறந்தே இருந்தது. கீழ் தளம் என்பதால், இவன் அழும் சத்தம் கேட்டிருந்திருக்கும் அந்த வில்லாவின் காவலாளிக்கு, ஓடிவந்தார், "கியா ஹுவா சாப்" என்றான். பிறகு அவனே உள் அறைக்கு தைரியமாக தயக்கமில்லாமல் ஓடிப் பார்த்துவிட்டு ஒரே ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண் விரிந்ததில் உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன்.

வெளியில் ஓடிவிட்டான் காவலாளி. கொஞ்ச நேரத்தில் காவல்துறை படையெடுத்து வந்திருந்தது. வில்லாவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி வீட்டின் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். விடியும் நேரமும் நெருங்கிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள், கூடவே காவலாளி "யஹான் சாப்" என்று உள் அறையை கைக்காட்டினார். பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே பேசிவிட்டு, செல்பேசியில் யார் யாருக்கோ வேற்று பாஷையில் பேசிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் அழுகையை மட்டும் பதிலாக தந்தார். என்னை கேட்டார்கள் 'who are you?' என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு 'நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்' என்றேன். "எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? எனக்கு புரிவதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே மழுங்கல் ராஜாவாக நின்றிருந்தேன். எந்த சம்பவம் என்று கேட்டால் அபத்தமாகி போகுமோ என்று யோசித்துக் கொண்டேன் "பாஸ்கர் அழும் குரல் கேட்டே கீழே வந்தேன், என்ன நடந்தது..." என்று இழுக்கும் முன்பே, பெரிய அதிகாரி மற்றவரிடம் வேற்று பாஷையில் ஏதோ சொல்ல. அது இவர்களிடம் 'ஸ்டேட்மெண்ட்' வாங்கிக் கொள் என்பதாக தொணித்தது, காரணம் 'ஸ்டேட்மெண்ட்' என்ற வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.

மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குனிந்த தலை நிமிராத என் சுகுணா மொத்தமாக பூமி பார்த்தபடியே தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை என்னால். நான் மேலே உறங்கிக் கொண்டிருக்கும் போதா நீ மொத்தமாக உறங்கிவிட்டாய் என்று உலுக்கலாம் போல் இருந்தது. கனவா நிஜமா, என் சுகுணா ஆத்திரத்தில் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கும், இந்த நிகழ்வை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாதா? கணிணியில் இருக்கும் 'undo' போல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. எங்கே அந்த கால இயந்திரம்... எங்கே.. என்று பித்து பிடித்து கத்த இருந்தேன். அப்போது என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு அந்த உள் அறையில் நுழையும் போது நான் மீண்டும் சுதாரித்துக் கொண்டேன். அல்லது அந்த நிமிடமே பித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. என்னை இடித்து தள்ளி உள்நுழைந்தது காவல் துறை அதிகாரிகளோ யாரோ தெரியவில்லை, அந்த உடுப்பில் இல்லை, சுகுணாவை கீழே கிடத்தினார்கள். அதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவள் கையில் இருக்கும் காகிதத்தை எடுத்தார்கள். அதில் 'என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என்ற சுய வாக்குமூலம் இருந்ததாக பேசிக் கொண்டார்கள்.

அதன் பிறகு பாஸ்கரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து "அம்மா, அம்மா" என்று அவள் கண்கள் தேடவே மற்ற அறையிலிருந்து அதை கேட்ட பாஸ்கர் 'ஓ' என்று அழ தொடங்கிவிட்டான். ஒரு குழந்தையின் தவிப்பிற்கு நான் காரணமா என்று குடைய ஆரம்பித்தது மண்டைக்குள்.

அவள் தற்கொலைக்கு எது காரணம் என்று எனக்கு தெரியவேயில்லை. 'ஆனால் நான் தான் காரணமா? என் கடிதம் தான் காரணமா' என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன்? அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. 'எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும்?' என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் 'அப்படித்தான் இருக்கும்' என்று என் கடிவாளம் இல்லாத மனது சொல்லி என் உயிரை உருக்குகிறது, பைத்தியக்காரனாக இன்னும் அலைய வைக்கிறது கால இயந்திரத்தை தேடி.

Tuesday, July 10, 2007

அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!

படம் சொல்லும் கதை:எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் குழந்தையை ஒரு வரப்பிரசாதமென்றும், குட்டி தேவதையென்றும் சிலாகிக்க காரணமுள்ளது, மகன் பாரிஸ் ஆலன் ஜார்ஜ் தாயின் நிலையுணர்ந்து தனது ஐந்தாவது நாளிலிருந்தே தலையை தூக்கி தானே பால் குடித்துக் கொள்ளவும், அணைக்க வரும் தாயை தாமே கட்டிக் கொள்ளவும் தெரிந்த ஆறாம் அறிவுப் பெற்ற புத்திசாலிக் குழந்தை.

'குழந்தையை அரவணைக்க கைகள் இல்லையே' என்ற கவலை தரும் அந்த எண்ணத்தைக்கூட தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை என்று முகம் மலரும் அலிசன் 'கைகள் இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்து விடுமா?' என்று தம்மையேக் கேட்டுக் கொண்ட கேள்விதான் அவருக்கு அவரே தந்துகொள்ளும் ஊட்டச்சத்தும் ஊக்கச்சத்தும்.

தாய்மைக்கு இல்லை ஈடு. ஆச்சரியத்தில் அதிர்ந்ததாள் பகிர்ந்துக் கொண்டேன்.

Friday, July 06, 2007

பழிக்கு பழி

ஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.


மனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா' போகணும்னு படிச்சி தெரிஞ்சுக்குது இந்த புறா. சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத்திடலாமா?நீ மட்டும் தான் ஓட்டப் போட்டு காசு சேமிப்பியா நாங்களும்தான்னு போட்டி போடுதுங்க. முதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.
சொன்ன பேச்சு கேளு மக்கர் பண்ணாதேன்னு உலுக்குது. நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாதவங்கள (மேலாளர்/ மனைவி/ கணவன்/ துரோகி) அந்த இடத்துல வச்சு பாருங்க சிரிப்பா வருது ;-)உன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது.

Tuesday, July 03, 2007

ரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்?

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்?'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து 'இத வாங்கி அனுப்பு'ன்னு சொல்லாம எதையுமே நானா வாங்கி அனுப்புறதில்ல.

அந்த மாதிரி எந்த சுற்றுலா தளம் புதுசா வந்தாலும் போய் பார்க்க வேண்டுமென பெரிசா ஆர்வமே இருக்காது. அந்த மாதிரிதான் 'ஸ்கீ துபாயும்' வந்து இரண்டு வருடமானாலும் போனதேயில்ல. இந்த முறை ஊரிலிருந்து வந்தவங்களை ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டிக்கிருந்த போது உலகின் மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஒன்றான 'மால் ஆப் எமிரேட்ஸுக்கு' (Mall of Emirates) போனோம். அதுக்குள்ள தான் உலகத்தின் மிகப் பெரிய 'ஸ்கீ' வாசஸ்தலமான (Ski resort) 22,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 'ஸ்கீ துபாய்' அமைந்திருக்கு. அதாவது மூன்று கால்பந்து மைதானத்தின் அளவுன்னா பார்த்துக்கிடுங்க. ஒரே நேரத்தில் 1500 மக்கள் கூடி களிக்கலாமாம்.

'ஸ்கீ துபாய்' ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் - கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.

வெளியில 40-45c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி உள்ளே போனதும் குளு குளுன்னு இருந்தது. இதற்குள்ள போவதற்காக அவர்களே பிரத்யேக உடைகளும் தராங்க. 'ஸ்கீ பனிச்சறுக்கம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதற்குள் போக வேணும்னில்ல, பழகிய திறமைசாலிகளுக்குன்னு ஒரு இடம். அனுமதி சீட்டு வாங்கிற இடத்திலேயே தெளிவாப் போட்டிருக்காங்க. 'ஸ்கீ ஸ்லோப்பா' (Ski slope) அல்லது 'ஸ்னோ பார்க்கா' (Snow park). 'ஸ்கீ ஸ்லோப்பில்' போவதற்கு குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும். அதாவது தன்னால் நிறுத்த தெரியணும், chair lift உபயோகிக்க தெரியணும், தன்னாலேயே மேற்பார்வை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தால்தான்..
இல்லாட்டி என்னைப் போன்றவர்கள் 'ஸ்னோ பார்க்' போய் பனியில் சும்மா சறுக்கி விளையாட வித விதமான சறுக்கு மரமிருக்கு. ஸ்விட்சர்லாந்துக்கு போனா மாதிரி பனிக்கட்டிய கையிலெடுத்து ஒருவர் மீது ஒருவர் அடிச்சி விளையாடலாம். பொதுவா ஐரோப்பியர்கள் மட்டுமே இங்க வருவாங்கன்னு இல்ல பலதரப்பட்ட மக்களும் வராங்க. குளிரைத் தாங்க கூடிய எல்லோரும் போகலாம்.

அவங்களே தரக்கூடிய பிரத்யேக உடை அணிஞ்சிருந்தும் என் கூட வந்த மக்கள் 'குளிருதுப்பா உறைஞ்சு போறேன் போலாமா?'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா?'ன்னு வெளியே இழுத்துவந்தேன். இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடிடுச்சு.

அங்க ஒவ்வொருத்தரும் சறுக்குவதப் பார்த்தா நமக்கே ஆசையா இருக்கும். கவலையில்லை அதையும் கத்துத்தரோம்னு சொல்றாங்க. சறுக்கிப் பழகுவதை சொல்லித்தர திறமையான பயற்சியாளர்களும் இருக்காங்க. அதற்கு தனி நேரமும் தனிக் கட்டணமுமிருக்கு. எதையும் படிச்சிக்கிறதுக்கு வயசு தேவையில்லதான் ஆனா நேரம் வேணுமே அது இல்லாததால நீங்க துபாய் வந்தாலும் 'ஸ்கீ பார்க்' பக்கம் மட்டும் போயிருந்து நீங்க 'ஸ்லோப்பில் ஸ்கீ' செய்தால் என்னால் வேடிக்கை பார்க்க முடியும் அவ்வளவுதான். திடீரென என் அக்காவின் மகள் கேட்டாள் "ஸ்கீ துபாய்க்கு' ரஜினி வந்தால் என்ன சொல்வார்" என்று. அவள் ஒரு ரஜினி ரசிகை. "என்ன சொல்வார்? குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா?"ன்னு கேட்டேன். இல்ல "Cool என்பார்" என்று அந்த குளிரிலும் என் வயிரெறியச் செய்தாள். அங்கு வந்திருந்தவர்கள் வாயிலெல்லாம் இதே வார்த்தைதான் ஒலித்தது. 'தாங்க முடியலடா சாமி'ன்னு வெளியில ஓடி வந்துட்டேன்.

துபாய் சுற்றுலா போனா மறந்துவிடக் கூடாத முக்கியமான இடம் இது. அட! கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே? நாங்க போன ஸ்கீ பார்க்குக்கு ஒருவருக்கு திர்ஹம்ஸ் 70 (ரூபாய் 840/-) - (3 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் அனுமதி) குழந்தையானாலும் 70 திர்ஹம்ஸ்தான். பிரத்யேக உடைகளாக ஜாக்கெட் (Jacket), கால்சட்டை (Trouser), சாக்ஸ் (Socks) (சாக்ஸை மட்டும் உபயோகித்து தூக்கிப் போட்டிடலாம் அல்லது எடுத்துட்டு போய்விடலாம்). தொப்பி மற்றும் கைகவசம் அதான் gloves நாம எடுத்துட்டுப் போய்ட்டா குளிர்தாங்க வசதியா இருக்கும். இல்லாட்டி அதை வாங்க தனி கட்டணம். நல்லவேளை நாங்க கொண்டு போயிருந்தோம். அப்புறம் 'ஸ்கீ ஸ்லோப்'க்கு 2 மணி நேரத்திற்கு 150 திர்ஹம்ஸ் (ரூ. 1800), இன்னும் 1 மணி நேரத்திற்கு தொடர இன்னொரு 40 திர்ஹம்ஸ் (ரூ. 480) வைக்கணும். அப்புறம் நான் ரொம்ப இரசிச்ச விஷயம் அந்த லாக்கர்தான் 10 திர்ஹம் கொடுத்து சாவி/ கார்ட் வாங்கி நாம்ம பொருட்களை வைத்து பூட்டிட்டு, திரும்ப வந்த பிறகு ரிமோட் மாதிரி வச்சி திறந்து அப்புறம் அந்த கார்டை ஒரு பெட்டியில் செலுத்தினா 10 திர்ஹம் திருப்பி துப்பிடுதுப்பா. பட்டிக்காட்டான் மொட்டாய் கடையை பார்த்தா மாதிரிதான் பார்த்தேன்.

அப்படியே இதை கிளிக்கிப் பாருங்க:

பிடித்த பெயரை பனிக்கட்டியில் எழுதிப் பாருங்க

Thursday, June 28, 2007

நாலிரெண்டு எட்டு


எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன தனியா அதற்கு ஆளா வைக்க முடியும்னு முணுமுணுக்கிறது புரியுது). அதனாலேயே இந்த எட்டு சமாச்சாரம் வேண்டாமென்று எட்டு பட்டிக்கும் முன் கூட்டியே அறிவிச்சிருக்கணும். ஆனா யார் நம்மளைக் கூப்பிட போறாங்கன்னு அலட்சியமா இருந்துட்டேன். துபாயோரமிருக்கும் அய்யனார் அரிவாளோடு நிற்கிறார் எழுத சொல்லி. நம்ம ப்ரசன்னா அன்போடு அழைச்சிட்டார். அதெல்லாம் போதாதுன்னு நம்ம நிலவு நண்பன் மாட்டிவிட்டுடேன்னு சந்தோஷப்படுகிறார். அதற்காகவேதான் இந்த பதிவு. அப்புறம் எட்டு மணி நேரம் யோசிச்சாலும் ஒண்ணுமே எழுத தோணலை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில்? எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோன்னு சொல்லியிருக்காங்கல? அப்ப எனக்கு 64 வயசாகும் போது கேட்டா ஏதாவது சாதனைன்னு அப்பவாவது செஞ்சிருந்தா சொல்லி வைப்பேன். இப்ப தான் நான் பொறந்து எட்டு பல்லு முளச்சிருக்கு என்கிட்டப் போயி...? அதற்கு பதிலா ஒரு 'விட்டு' சொல்லுங்கன்னா சொல்லியிருந்தா சந்தோஷமா ஒரு பிட்டு போட்டிருப்பேன். 'திட்டு'ன்னு 'குட்டு'ன்னு சொல்லியிருந்தாலும் லட்டு சாப்பிடுவது மாதிரி உடனே செஞ்சிருப்பேன். சரி உங்க ஆசையை கெடுக்க வேணாம்னு என் பெருமைக்குரிய விஷயங்களை சொல்லிடுறேன்.

* நான் பிறந்ததே சாதனைதான். மூன்று பெண்களைப் பெற்ற பிறகு, நாலாவதா ஆணாக பிறப்பேன்னு எதிர்பார்த்து பெண்ணாக பிறந்தது முதல் சாதனை.

* பத்திரிகையாளரின் மகள் என்பதால் சுலபமாக எல்லா பத்திரிகையிலும் சின்ன வயதிலிருந்தே என் முகம் வந்திருந்தாலும் அதனை பெரிய சாதனையாக வெட்டி எடுத்து வைத்துக் கொண்டதுகூட இல்லாத நான், ஓவியப் போட்டிக்காக ஓவியர் ஜெகதீஷ், ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார் உட்பட பலரின் கைகளிலெல்லாம் பரிசுளும் பாராட்டுகளும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நான், சென்னையில் அனைத்துப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடந்த 'கண் தானம்' குறித்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று நடிகர் கமலஹாசன் கையில் விருது வாங்கிய செய்தியோடு கூடிய படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் என் பள்ளியின் பெயர் போட்டு வந்தது, நான் படித்த சாதாரண அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கே பெருமை சேர்த்த விஷயமாக அமைந்ததால் பெருத்த மகிழ்ச்சியளித்தது.

* பதிவு எழுதுவது சாதனைன்னு சொல்லிக்க மாட்டேன், ஏன்னா எல்லா டாம் டிக் & ஹாரி செய்யும் சமாச்சாரமாப் போச்சு. ஆனா பக்கத்து விட்டுல ஞாநியையும், கலைமாமணி கவிஞர் அவினாசிமணியையும், மேல் வீட்டில் கலைமாமணி கவிஞர் மணிமொழியையும், எதிர் வீட்டில் எழுத்தாளர் நாகைதர்மரையும், அதே குடியிருப்பில் மு. மேத்தாவையும், பல பெரிய பத்திரிகையாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் பக்கத்திலிருந்து வளர்ந்த எனக்கு அப்ப எழுதணும், ஏதேனும் அவர்களிடமெல்லாம் கத்துக்கணும், தெரிந்து கொள்ளணும் என்ற ஆர்வம் கூட உதிக்காத எனக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லியிருப்பது போல் 'பள்ளிப் பருவத்திலே எழுத்தில் துளிர்விட்டுடேன்' என்றெல்லாம் சொல்லிக்க முடியாத எனக்கு, சாதாரண கதைப்புத்தகத்தையும் ஜனரஞ்சகப் புத்தகத்தையும் கூட "படிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியவங்க படிக்கிறது"ன்னு ஒடுக்கப்பட்டு, வாசிப்பனுபவமே இல்லாமல் வளர்ந்த எனக்கு, துபாய் வந்த பிறகு தமிழை விட்டு தூரம் போய்விடக் கூடாது என்ற ஞானோதயம் மிளிர்ந்தது போல் பற்றிப்பிடிப்பதற்காகவே திடீரென எழுதத் தோன்றி எழுதி, அதை நாலு பேர் படிக்கிறாங்க என்றால் என்னை நானே மெச்சிக்க வேண்டியதுதான்.

* எட்டுப் போடாமலே ஓட்டுனர் உரிமம் எடுத்தேன். எப்படின்னு கேட்கிறீங்களா உரிமம் எடுத்தது மோட்டார் காருக்கு. அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்த காலகட்டத்தில் முதல் முயற்சியிலேயே உரிமம் பெற்று, போக்குவரத்து நெரிசலை நொந்து கொள்பவர்கள் மத்தியில் சந்தோஷமாக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கும். எத்தனையோ பேருக்கு நடப்பதற்கு செருப்பு கூட இல்லாமல் இருக்கும் போது காரில் பறப்பது பெருமையா இல்லையா?

* துபாயில் நல்ல வேலை கிடைப்பதே கடினம், கிடைத்தாலும் வேலை பிடித்திருக்க வேண்டும், வேலை பிடித்திருந்தாலும் நாளில் முக்கால்வாசி நேரத்தைச் செலவளிக்கும் அலுவலகத்தில் நம்மைச் சுற்றி நல்ல மக்கள் அமைய வேண்டும். இது இரண்டுமிருந்தாலும் தேவையான சம்பளம் கிடைக்க வேண்டும். சம்பளம் நிர்ணயித்தாலும் சொன்னபடி சொன்ன தேதியில் கைக்கு கிடைக்க வேண்டும்- இப்படி பல பிரச்சனைகளோடு இருப்பவர்கள் மத்தியில் எனக்கு நிறைவான வேலை, பிடித்தமான சக ஊழியர்கள் என்பது நம்பிக்கையூட்டும் பெருமிதம்.

* நல்ல குடும்பம், அன்பான கணவர், அழகான குழந்தை. எல்லோரும் துபாயில் - இதுல என்ன பெருமை வேண்டிக்கெடக்குன்னு சொல்வீங்க, ஆனா பலரும் தன்னந்தனியா இந்த பூமியில் நிறையப்பேர் கஷ்டப்படுறாங்களே அப்ப இது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில்லையா எனக்கு? குழந்தையில்லாம எத்தனையோ பேர் இருக்க அந்த வரம் கிடைத்தது பெரிய பாக்கியமில்லையா?

* என்னால் பேச முடியும், கேட்க முடியும், பார்க்க முடியும், நடக்க முடியும் அது இதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். இதெல்லாமும் சந்தோஷப்படும் விஷயம்தானே, எத்தனையோ பேருக்கு அந்த கொடுப்பினைகள் கூட இல்லாத போது? அப்புறம் மற்றவரைப் பற்றி குறை சொல்வதோ, புறம் பேசுவதோ அறவே பிடிக்காத விஷயம் எனக்கு. நாம முதல்ல ஒழுங்கா இருக்க வேண்டாமா மற்றவரை கை காட்டுவதற்கு முன்பு?

* கடைசியா நான் ரொம்ப புளங்காகிதமடையும் விஷயம் இன்னும் நான் உயிருடன் இருப்பது.

தெரியாத்தனமா இவளை எட்டுப் போட அழைச்சிட்டு இப்படி கேவலமா ரம்பம் போட்டிருக்காளே, தேவையான்னு உங்க தலையில நீங்களே அடிச்சிக்கிட்டு சிரமப்படாதீங்க. அடிக்க தோணுச்சுன்னா சொல்லி அனுப்புங்க நான் வந்து இரண்டு குட்டுறேன்.

விதிகளில் ஒன்று என்பதால் விளையாட்டின் விதிகளைப் போட்டாச்சு:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும

தொடர்ந்து எட்டுப் பேரை அழைத்து நட்பு வட்டத்தை எட்டுக்குள் சுருக்க முடியாதுப்பா. அதனால் கண்டிப்பாக இந்த தொடர் பதிவில் பங்கேற்கவே மாட்டார்கள் என்று நான் நினைக்கும் ஒரு எட்டுப் பேரை குறிப்பிடுகிறேன், இவர்கள் எனக்காக எட்டுப் போட்டாலே பெரிய சாதனைதான்.

1. அப்துல் ஜப்பார் ஐயா
2. இராம. கி. ஐயா
3. மாலன்
4. பாமரன்
5. யுகபாரதி
6. பெயரிலி
7. இசாக்
8. கவிமதி
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி