Thursday, July 30, 2009

வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை.

நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் கிண்டலாகவும் கேலியாகவும் மட்டுமே பார்ப்பார்கள். அந்தக் கேலியின் உச்சமாக என்னை எனக்குப் பிடித்தமான அடையார் ‘ஷேக்ஸ் என்ட் கிரீம்ஸுக்கு’ அழைத்துச் சென்று எனக்குப் பிடித்த பனிக்கூழ்களை நான் பார்க்க அவர்கள் சாப்பிட்டு, என் சுய கட்டுப்பாட்டை நான் இழந்து, நோன்பை முறித்துக் கொள்வேனா என்று பரிசோனை செய்வார்கள். எதற்கும் அசராதிருந்த என்னைக் கண்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 'இதெல்லாம் பெரிய கட்டுப்பாடில்லை' என்று விட்டுவிட்டார்கள். உலகத்தில் பல்வேறு பகுதியில் ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கும் போது பட்டினி கிடப்பது மட்டும் எப்படி சுய கட்டுபாடாக இருக்க முடியும் என்பதே இவர்களது கேள்வி.

கட்டுப்பாடு என்பது என்ன? நாயைக் கூடத்தான் உணவில்லாமல் கட்டிப்போடலாம். அது குரைக்கும், சோர்ந்து போகும், கோபப்படும் அருகில் சென்றால் கடிக்கவும் செய்யும். இப்படிக் கட்டிப்போட்டு கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமலான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்த பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாக கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.

’ஒருவர் நபிகள் பெருமானாரிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், தாராளமாக நோன்பு நோற்கலாம். ”நான் பிறந்ததும் ஒரு திங்கள் கிழமை எனக்கு நபித்துவம் கிடைத்ததும் ஒரு திங்கள் கிழமை” என்று கூறினார்கள்’ என்பதைப் படித்ததிலிருந்து திங்கட்கிழமைகளில் நோன்பு வைக்க முற்பட்டேன். இடைப்பட்ட சில காலம் அந்த நோன்புகளை மறந்தே இருந்த வேளையில் இந்த வருடம் ரமலான் வரவிருக்கிறது என்பதால் போன வருடம் விடுபட்ட நோன்பை எல்லோரும் பிடிக்க ஆயத்தமாகும் போது நானும் என் திங்கட்கிழமை நோன்பை ஜூன் மாதக் கடைசியில் ஆரம்பித்தேன். முதல் திங்கள் ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக் திங்கள் தவறியது. இந்த ஜூலை மாத 20 ஆம் தேதி வைத்த நோன்பு என்னை மட்டுமல்ல எங்கள் வீட்டில் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. காரணம் இது கோடையின் உக்கிரமென்பதால் கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஆகாரம் தண்ணீரில்லாமல் மிகவும் தவிப்பாக இருந்தது. பொதுவாக ஒரு மாதம் தொடர்ச்சியாக நோன்பு இருப்போம். முதல் பத்து தவழ்ந்தாலும் அடுத்த பத்து நடக்க ஆரம்பித்து கடைசி பத்து ஓடிவிடும். ஆனால் இப்படி இடைப்பட்ட ஒருநாள் பயிற்சி மிகவும் கடினம் என்பதை உணர்ந்ததோடு ’நோன்பு திறக்கும் வேளையில் ஏற்படும் மகிழ்வு’ என்று படித்திருக்கிறேன், அதில் என்ன மகிழ்வு என்று யோசித்த விஷயம் தவித்த அன்றுதான் புலப்பட்டது.

அலுவலகத்தில் கேட்டார்கள் ’இதில் என்ன பெரிய விஷயம் காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறாய்’ என்று. கேட்பது சுலபம் காலையில் 4 மணிக்கு முன்பாக எழுந்து சாப்பிடுவது என்றால் எவ்வளவு கடினம், அதுவும் தண்ணீரை ஒருநாளுக்கு தேவையான அளவா உடலில் பதுக்கி வைக்க முடியும்? நாங்கள் என்ன ஒட்டகமா? காலையில் எழுந்து சாப்பிடவும் முடியாது. நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்ற உண்மையை அனுபவித்தால் தான் தெரியும். இந்த வருடம் ரமதானும் இனி வரப்போகும் 3-4 வருட ரமதானும் கோடையிலேயே வரவிருப்பதால் அமீரகத்திலிருந்து நோன்பு நோற்பவர்களுக்கு பெரிய சவாலாக இருக்குமென்றே தோன்றுகிறது. ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதை பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

ரமதானை எப்படி சுலபமாக்குவது என்னென்ன சாப்பிடுவது என்ற மடல்கள் வரத் தொடங்கிவிட்டது. நபியவர்கள் ரமலானைப் போன்றே ஷாபானிலும் அதிக நோன்பு வைத்துள்ளார்கள். அதனாலாவது ரமதானுக்கு முன்பே ஷாபானில் நோன்பு வைத்து பழகிக் கொள்வோம்.

Monday, July 27, 2009

தொலைபேசியில் வந்த ஆபத்து: 'Phone Booth'

நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த தகுதிகளெல்லாம் கடவுளுடன் பொருந்திப் போனாலும் அதைப் பரம்பொருளாகப் பார்க்கவும் முடியாமல், குற்றங்களை ஒப்புக் கொள்ளவும் இயலாமல், இருந்த இடத்தை விட்டு நகரவும் முடியாத சூழலில்தான் மாட்டிக் கொள்கிறார் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரல்.ஒரு பொதுத் தொலைபேசியின் மணி அடிக்கிறது, அது யாராகவும் இருக்கலாம் அந்த அழைப்பு யாருக்காகவும் இருக்கலாம். இருப்பினும் அதனை எடுத்து பேசத் தோன்றுகிறது. அப்படித் தோன்றிய தூண்டிலில் தான் மாட்டிக் கொள்கிறான் கதாநாயகன் ஸ்டூ.

கதாநாயகன்? ஒரு திரைப்படத்தில் நல்லவனாக வருபவர் கதாநாயகனா அல்லது அதிக காட்சியில் வருபவர் கதாநாயகனா? நல்லவர் கதாநாயகனென்றால் அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தகாரர் கீஃபர் சுதர்லாண்ட்டை கதாநாயகன் என்று சொல்லலாம். அதிகக் காட்சியில் வருபவர் கதாநாயகனென்றால் ஸ்டூவாக வரும் காலின் ஃபாரலாகவும் இருக்கலாம், அந்தத் தொலைபேசியாகவும் இருக்கலாம்.

குறிபார்த்து சுடுவதில் வல்லுனரான கீஃபரின் தூண்டிலில் மாட்டிக் கொண்டு ஃபாரல் தவிக்கும் தவிப்பே முழுப் படமும். ஆரம்பத்தில் கீஃபரின் மிரட்டலுக்கு அலட்சியம் காட்டும் ஃபாரல் பின்பு ஒவ்வொரு காட்சியிலும் வேறுபடுத்திக் காட்டும் உடல் மொழியும் அவர் முக அசைவுகளும், கண்களில் மட்டுமே நமக்கு காட்டும் பயம், கோபம், தவிப்பு என ஆயிர உணர்வுகளும் நம்மை திரைப்படத்தை விட்டு நகரச் செய்யாமல் இறுக்கிவிடுகிறது. இருக்கையின் நுனியில் அமர்ந்து நகம் கடிக்க வைக்கும் படமாக இல்லாவிட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதையும் காட்சியமைப்புகளும் ஒருவித திகில் உணர்வைக் கிளறிவிடுகிறது. குறிப்பாக கீஃபரின் குரல் வளம் ஃபாரலை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.

’காதலியா? மனைவியா? மனைவியை காதலிக்கிறாயென்றால் காதலியெதற்கு?’ என்று உலுக்கும் கேள்விகளை அடுக்கி ஃபாரலின் உள்ளுணர்வுகளை தோலுரித்து அம்பலமாக்கி சோதனைக்குள்ளாக்கும் போது தன்னிலை உணர்ந்து கூனிக்குறுகி புழுவாகத் துடித்து தன் தவற்றை ஒத்துக் கொண்டு ஃபாரல் அழும் காட்சி நேர்த்தி. எதிர்பார்க்கவே முடியாத காட்சி நகர்வுகள். ’அடுத்து என்ன?’ என்ற போக்கிலேயே நேரம் போவதே அறியாமல் படம் முடிகிறது.

திரைப்படத்தின் கதைக் களம் நியூயார்க் நகரத் தெருவிலுள்ள ஒரு தொலைபேசிக் கூண்டு மட்டும் தான். அதில் ஃபாரல்- கீஃபர் இருவருக்கு இடையிலான சுவாரஸ்ய உரையாடலை அதுவும் இருவரில் ஒருவரின் முகத்தை காட்டாமலேயே படம் முழுக்க அதே தெரு அதே பொதுத் தொலைபேசி கூண்டை மட்டும் வைத்து இப்படியான ஒரு அசாத்திய கதையை வடித்துள்ள லாரி கோஹனுக்கும் அதை அழகாக இயக்கியுள்ள ஜோயல் ஷூமாக்கருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

ஹீரோயிஸம், அரை மணிநேரத்திற்கு ஒரு பாட்டு, வெளிநாட்டு காட்சியமைப்பு, கவர்ச்சி நடிகை, பறந்து அடிக்கு சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் கதையை மட்டும் வலுவாக்கினால் வெற்றி நிச்சயம் என்பதன் சாட்சியே ’ஃபோன் பூத்’ திரைப்படம். இந்த மாதிரியான நல்ல படங்களை பார்த்து முடித்த பிறகு எப்போது தமிழில் இப்படியான படங்கள் வருமென்ற எண்ணமே மேலோங்குகிறது.

Monday, July 20, 2009

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற வார்த்தையை நெல்லை இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள்னு நினைக்கிறேன். ஊரிலிருந்த வரைக்கும் அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியலை. ஆனால் இங்க வந்த பிறகு அது ஒரு அரபி வார்த்தை - பயத்தால் தவிர்ப்பது என்று பொருளென்று தெரிஞ்சிக்கிட்டேன். சரி, இது மொழி ஆராய்ச்சிக்கான பதிவில்லை, வந்த வழியே பயந்து ஓடிடாதீங்க. ஆமா எங்க விட்டேன், ம்ம் உணவகத்தில் சுத்தம் பார்ப்பது, என்னத்த தான் சுத்தம் பார்த்தாலும் சில சமயங்களில் மாட்டுவது நாமளாத்தான் இருக்கும். சென்னைக்கு சென்றிருந்த போது தி.நகர் ‘முருகன் இட்லிக் கடை’க்கு போயிருந்தோம். சாப்பிடும் போது அக்காவுக்கு ஏதோ தென்பட சொல்லாமல் மறைத்துவிட்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு “யாரும் கோபப்படாதீங்க, என் உணவில் இது இருந்தது” என்று காட்டினாள். பார்த்தவுடனே எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. உணவிலிருந்தது நகம் அதுவும் கை நகம் மாதிரி தெரியலைங்க கால் கட்டவிரல் நகம் மாதிரி பெரியதாக. உவ்வே! நினைச்சாலே இன்னும் குமட்டுது. எனக்கு பயங்கர கோபம் என்னை எல்லோரும் பொறுமையாக இருக்க சொல்லிட்டு, உணவகத்தவர்கள் அசிங்கப்பட்டுவிட கூடாதென்றும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் சகூஜப்படக் கூடாதென்றும் மெதுவாக அந்த பணம் செலுத்துமிடத்தில் இருந்தவரிடம் விஷயத்தைச் சொல்ல அவர் மேலாளரை அழைத்தார், வந்தவர் பார்த்துவிட்டு அவர் எந்த உணர்ச்சியுமில்லாதவராக ”ஆமாங்க நகம்தான். சாரி, என்ன செய்ய சொல்றீங்க”ன்னு என்னவோ தினம் நடக்கும் விஷயம் போல சர்வ சாதாரணமாக கேட்டுக் கொண்டார். உடனே அக்கா ”இதுவே துபாயாக இருந்தால் உங்க உணவகத்தை அடைத்து சீல் வைத்திருப்பார்கள். நல்ல உணவகமென்று வந்தோம் இனி யாரையும் இங்கு வர சிபாரிசு செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி: அபுதாபி ’எமிரெட்ஸ் பாலஸ்’ உணவகத்தில் தலைமை சமையற்காரருக்கு ரூ. 1104000/- (US$ 27,000) அபராதமாம். எதற்கு தெரியுமா அபுதாபி நகராட்சியர்கள் உணவகத்தை பரிசோதனை செய்ய செல்லும் போது குளிர் சாதனப்பெட்டியில் காலாவதியான தயிர் இருந்ததாம். இதற்கு விசாரனை, காவல், அபராதமெல்லாமும். இத்தனைக்கும் அந்த தயிரை யாருக்கும் பரிமாறவில்லை வெறும் குளிர் சாதனப்பெட்டியில் இருந்ததற்கு மட்டுமே இந்த அபராதம். போன மாதம் ஒரு சைனீஸ் உணவகத்தின் உணவை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு அமீரகத்தில் எல்லா உணவகத்தையும் சோதனை செய்து நகராட்சியின் கட்டளைகளுக்கும் சுத்த தரத்திற்கும் ஈடில்லாத சுமார் ஆயிரத்திற்கும் மேலான ஷார்ஜாவிலுள்ள உணவகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறை சோதனைக்கு செல்லும் போதும் அவ்வாறே இருந்தால் உணவகத்திற்கு சீல் வைக்கும் அபாயமும் உள்ளதால் எல்லோரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம். எனவே உணவகம் நடத்துபவர்கள் கூடுமானவரை சுத்தமாக உணவக்த்தை வைத்துக் கொள்வதில் முனைப்பாயிருக்கிறார்கள்

போன வருடம் எங்கள் வீட்டுக்கு அருகே வழக்கமாக வாங்குமிடத்தில் ‘பெப்பர் சிக்கன்’ வாங்க விட்டோம். சாப்பிடும் போது அதில் ஒரு இறைச்சி துண்டு இருந்தது. நாங்கள் சிக்கன், இறைச்சி எல்லாமும் சாப்பிடுபவர்கள் தான் இருந்தாலும் சிக்கனில் இறைச்சி வந்தால் அது உணவகத்தின் கவனக்குறைவை குறிப்பதால் உணவகத்தை அழைத்து விஷயத்தை சொல்லி இனி இவ்வாறு நிகழலாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஒரு ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பார்த்தால் உணவகத்திலிருந்து ‘பெப்பர் சிக்கன்’ மற்றும் ‘பட்டர் நான்’ அதுவும் இலவசமாக. வேண்டாம் சாப்பிட்டு முடித்துவிட்டோம் வீணாகிவிடும் எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகு எடுத்து சென்றார்கள். வாடிக்கையாளர் திருப்தி என்பதை விட எங்கே ஏதாவ்து புகார் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் அதன் மூலம் உணவகத்தை மூட வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சமுமே இதற்குக் காரணம் எனலாம். இந்த உணவக்ங்களை நடத்துபவர்களும் இந்தியர்கள்தான்.

சட்டங்கள் எல்லா இடத்திலும் தான் இருக்கிறது. ஆனால் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யும்போதோ அல்லது அதன் கடுமைக்குப் பயந்து மட்டுமோதான் தவறுகள் திருத்தப்படுகிறது.

இங்கே நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் எப்போது தாயகத்திலும் முறையாக செயல்படத் துவங்கும்?

Monday, July 13, 2009

அழகான ‘கையெழுத்து’


They are providing us with the last meal
They would kill when the night is about to end
We shouldn't be there to die with pain when the sun rises
My dear love let's kill each other in this dark

அவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்
அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்க
வலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்
என் பிரியமானவளே இந்த இருளிலேயே நாம் நம்மை முடித்து கொள்வோம்

ஆங்கிலத்தில் கீழே ஓடும் துணையெழுத்துக்களை பிடித்துக் கொண்டே படம் பார்த்து புரிந்துக் கொண்ட மலையாளப் படம் 'கையொப்பு' அதில் நான் புரிந்து கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்புதான் மேலே. இந்த படத்தில் மிக சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்வு. இதில் பாலசந்திரனாக மம்முட்டி, பத்மாவாக குஷ்பு, சிவதாஸனாக முகேஷ்.

பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது நம் உதடுகளுக்கு முன்பே அந்த உற்சாக மொழியை கண்கள் பேசிவிடும். இப்படி விருப்பத்தை விட்டுச் செல்லும் சுவடுகளை மிக நெருக்கமானவர்கள் கவனித்துவிடுவதால் மிகுந்த அடக்கமாக பேசுவது இயல்பென்றாலும் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பேசிவிட்டால் யூகமே வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அப்படித்தான் தனக்கு பிடித்தமான பாலனை குறித்து பத்மா பேசுகையில் அதுவும் பாலன் எழுதிய கவிதை பற்றி பேசுகையில் அவள் காட்டும் ஆர்வத்தை கவனித்த சிவதாஸன் அந்த செய்தியை பாலனிடம் கடத்தி அவரையே உயிர்ப்பிக்கிறார்.

பாலசந்திரன்- மனிதாபிமானி, தலைக்கனமில்லாத மெல்லிய உணர்வுள்ள கூறிய சிந்தனையுள்ள புத்திஜீவி மலையாள எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதில் காதல் கொண்ட கிளிப்பாட்டு பதிப்பகத்தின் உரிமையாளர் சிவதாஸன் அவரை எழுதி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் வெற்று தாளைப் போல மனத்தடையில் இருந்து மீள விரும்பாதவராக ஆர்வம் காட்ட மறுக்கிறார் பாலசந்திரன். இந்த இயல்பு நம் பதிவுலகில் தினம் தென்படும் ஒன்றுதானே. எழுத நேரமின்மை, சோம்பல், நேரமிருந்தும் ஆர்வமிருந்தும் 'எழுதியென்ன' என்ற அலட்சியம் இப்படி ஒவ்வொருவருக்கும் எழுதாமைக்கு ஒவ்வொரு காரணங்கள். அதை போலவே தான் பாலனுக்கும். ஆனால் தொலைத்த காதலி கிடைத்த பிடிமான மகிழ்ச்சியில் முழு மூச்சாக முடிக்கிறார் குறிக்கோள் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த நாவலை.

'நட்பாக இருந்த உறவை தாண்டிவிட்டது எங்கள் உறவு, நீ தான் புரிந்துக் கொண்டு உதவ வேண்டும், விலக வேண்டும்' என்று கணவன் ஸ்ரீ வெளிப்படையாக மனைவி பத்மாவிடம் சொல்லும் சம்பவம், கணவரையும்- அவர் தோழியையும் குறித்து பத்மா ‘made for each other' என்று சொல்வதான காட்சிகள் ஹிந்திப் படத்தில் பார்த்ததுண்டு, மலையாளப் படத்தில் எனக்கு இதுதான் முதல் முறை. தென் இந்தியர்களென்றால் கலாசாரம், ஒழுக்கம், பண்பாடு என்று பேசிக் கொண்டு சமுதாயத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு, கணவர் தவறான பாதையில் செல்ல முழுக்க மனைவிதான் காரணம் போன்ற வகைறாக்களையே படமாக, கதையாக வடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகள் எனக்குப் புதியதுதான்.

முதிர்ந்த மனிதர்களின் கவிதையான விரசமில்லாத மெல்லிய காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ரஞ்சித். விலாசத்தைக் கொடு 'மை லைஃபை' அனுப்பி வைக்கிறேன் என்ற வசனம் பாலச்சந்தரை நினைவுப்படுத்தியது. இங்கு வசனம் அம்பிகாசுதன். பாடல் அதிகமில்லை என்பதற்காக இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு வேலையில்லை என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் பின்னணியில் வரும் ரம்யமான இசைதான் காட்சிகளுக்கான பலமெனலாம். ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ரஞ்சித் கதாபாத்திரங்களை வடித்திருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றால் மிகையாகாது. மிகக் கவனமாக இந்த சுபாவமுள்ளவர் இப்படியான சூழலில் இவ்வாறே நடந்து கொள்வார் என்று அந்த கதாபாத்திரத்தின் நிலையில் நின்றே ஒவ்வொரு காட்சியையும் கதையையும் அமைத்திருக்கிறார் எனலாம். சொல்லாமலேயே விளங்கும் நடிப்பு திறன் கொண்ட மம்மூட்டியைப் பற்றி எழுத அவசியமேயில்லை, அவருக்கு இது 300வது படம். இப்படத்திற்காக குஷ்புவுக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரவே தாமதமாக படத்தைக் குறித்த என் பார்வை .

அமைதியான நல்ல மனநிலையோடு பார்க்க வேண்டிய நல்ல படம். அன்பே சிவம் என்று உணர்த்தும் மற்றொரு படம். இதே படத்தை குறும்படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோவென்று தோன்றியது. சர்வதேச படவிழாவில் திரையிட்ட இரண்டு மலையாளப் படங்களில் ‘கையொப்பும்’ ஒன்று. இந்தப் படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு ஆனால் இதே படம் தமிழில் வந்தால் கண்டிப்பாக ஓடாது என்பது என் யூகம்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி