Sunday, May 20, 2018

அர்ஷியாவின் "ஸ்டோரீஸ்"

" 'ஸ்டோரீஸ்’ ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகளின் அசை" என்று வாசித்த மாத்திரத்திலேயே இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. 1987 முதல் 1996 வரைக்கும் மதுமலரன்பனாக ‘தராசு’ அரசியல் சமூக வார இதழை சமச்சீராக நிலைநிறுத்திய துலாக்கோலாகவும், ‘கழுகு’ தர்பார் அரசியல் இதழின் சிறகுகளாகவும் இருந்தவர் என்றும், அங்கிருந்த காலத்தைத் தான் தன் வாழ்க்கையில் திரும்பக் கிடைக்காத தன் பொற்காலம் என்றும் சொல்பவரின் அசையை ஒரு பத்திரிகையாளரின் மகளாக வாசிக்கும் ஆர்வம் அதிகரித்தது.
தன் மகள் அர்ஷியாவின் பெயரில் எழுதிய இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சம்பவங்கள். எனக்கென்னவோ என் வாப்பா வீட்டில் வந்து சொல்லக் கூடாத சொல்லத் தயங்கிய விஷயங்களை மென்று முழுங்கியவாறு சொல்லும் விஷயங்களாகப் பல பகுதிகளைக் கடந்தேன். அர்ஷியா அவர்களை இதற்கு முன் வாசித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு விஷயமும் என் வாப்பாவையே எனக்கு நினைவுபடுத்தியது. குறிப்பாக அவருடைய அன்பு, நேர்மை, கட்சி பேதமில்லாமல் எல்லோரும் அவரிடம் பழகியதாலேயே அர்ஷியா அவர்களின் திருமணத்திற்குக் கட்சி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார் அப்படித்தான் எனது திருமணத்திற்கும் என் வாப்பாவிற்காகக் கட்சி பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். தங்கை மகளுக்கு ஓபிசி சான்றிதழ் வாங்க அலைந்தது என் பாஸ்போர்ட் தொலைந்து அதற்காக யாரையெல்லாம் நாங்கள் சென்று பார்த்தது என்று நிறைய ஒற்றுமைகள் இருந்தது இந்நூலுடனுடன் எனக்கு நெருக்கத்தை அதிகரித்தது.

சரளமான எளிமையான மொழிநடையால் சொல்ல வந்த செய்தியைப் புரியும்படி இலகுவாகக் கடத்திவிட அவருக்குக் கைவந்திருக்கிறது. அடுத்தது எதைப் பற்றியது, என்ன சம்பவம் என்று ஒவ்வொரு பகுதியாக மூழ்கி, பக்கங்களைத் திருப்பிக் கொண்டே செல்லச் செய்தது அவருடைய தேர்ந்தெடுத்த சம்பவங்கள். அதில் சிலது இதை ஏன் சேர்த்துள்ளார், இப்படி அரைகுறையாகச் சொல்வதற்குச் சொல்லாமலே இருந்திருக்கலாமென்றும் தோன்றாமலில்லை.
ஒரு பேனாவால் என்ன செய்துவிட முடியும், என்ன கிழித்துவிட முடியும் என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது இந்நூல். பேனாவால் விளைந்த நன்மையை மட்டுமல்ல தீமையையும் சரியாகவே பதிவு செய்துள்ளார். கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்து கட்டுரை வரைந்தால் அது எதிர்மறையாகத் தொழில் முன்னேற்றம் தந்ததை வருத்தத்துடன் பதிந்துள்ளார். செய்தியை நிரப்புவதற்காகப் பாம்பு கடி செய்தி வெளியிட்டு எம்எல்ஏ கண்ணப்பன் அமைச்சரான கதை என்று எல்லாவித துணுக்குகளையும் பதிவு செய்துள்ளார். இந்த நூலுக்கு மிகப் பொருத்தமான நூல் அறிமுகத்தை அதற்கு மிகவும் தகுதி வாய்ந்த கே.என்.சிவராமன் தந்தது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

பிரபல பத்திரிகை மூலமாக அன்று செய்ததை இன்று பலர் புகைப்படச் சாட்சியங்களுடன் சமூக வலைத்தளத்தில் ஏற்றினாலும், அந்தக் காலக்கட்டத்தில் தட்டச்சில்லாமல் ‘கட் & பேஸ்ட்’ செய்யாமல், பிலிம்சுருள் இல்லாமல் மறுபடியும் சென்று படமெடுத்ததையும் பதிவு செய்தவர், தரவுகளைச் சேகரித்து, ஒரு முழுநீள கட்டுரையையும் கவர்ஸ்டோரீஸ்களையும் எழுதித் தயாரித்தது சாதாரண விஷயமாக எனக்குத் தெரியவில்லை. கண் விரியும் சம்பவங்கள் அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

சண்டியர்- கல்வி தந்தையரானதற்குச் சாட்சியானார், மனசாட்சிக்காகக் களவாடிய சைக்கிளை திருப்பித் தந்த ஏட்டையா, ஜெயலலிதாவின் வளர்ச்சி, ஜானகியம்மாவின் ஆண்டிப்பட்டி தோல்வி, ஓ. பன்னீர் செல்வம் பதவி வந்தவுடன் அணுகுமுறை மாறியது, பள்ளத்தூர் கல்லூரிக்கும் மதுரை ஆயுதப்படை வளாகத்திற்கும் விமோசனம் கிடைத்தது, மக்களின் பேராசைகளால் ‘டூன் டிரேடிங் கம்பெனி’கள் உருவாகியவை, ‘பங்களா பாலிடிக்ஸ்’ என்று பல்வேறு விஷயங்களைக் கோர்வையில்லாமல் பதிவு செய்யப்பட்ட ‘அசை’.

ஸ்டோரீஸ் புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பார், “யாரையும் புனிதப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் முயலுவதில்லை. அதே வேளையில் நெஞ்சத்தின் கரைகளைத் தொட்டுவிட்டுத் திரும்பும் எண்ண அலைகளில் சில சிப்பிகளையும், சில முத்துகளையும் கொஞ்சம் கடல் நுரையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வது மட்டுமே என் நோக்கம்” என்று.

இப்படியான மனிதர்களை இனி கடப்பது அரிது.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி