Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, April 10, 2018

ஓரிதழ்ப்பூவை ஒரு பெண் எழுதியிருந்தால்?

நூலாசிரியர் அய்யனார் விஸ்வநாத் தெரிந்தவர், நெருக்கமானவர் என்பதற்காகவும், வெளிப்படையான கருத்துக்களை ஏற்க கூடியவர் என்பதாலும், அதுவும் சமீப காலமாக வீரியம் குறைந்து, கோபதாபங்கள் குறைந்து விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டதாலும், இது அவரைப் பற்றிய விமர்சனமல்ல அவர் படைப்பை பற்றியது என்பதால் மிகத் தைரியமாக ஒரு பெண்ணின் பார்வையில், ஒரு தாயின் பார்வையில் இப்புத்தகத்தை அணுக முயற்சித்துள்ளேன்.

குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வொரு பொருளின் பெயரையும் சொல்லித்தருவோம். சில வார்த்தைகளை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் கற்றுவிடுகின்றனர். என் மகள் ஏதாவது செய்வதை மறைத்தால் திரித்தால் ‘பொய்’ சொல்லாதே என்று கடிந்துக் கொள்வேன். “பொய்’ என்றால் என்னம்மா?” என்று மகள் கேட்டாள். “உண்மையை மறைப்பது, நான் திட்டுவேனென்று தவறை மறுப்பது” என்றேன். “எது உண்மை, எது தவறு” என்று திரும்பக் கேட்டாள். “நிஜம்,யதார்த்தம், நிகழ்ந்தது” என்று சொல்லி விவரிக்கப் பார்த்தேன். அதே போல ‘பயப்படாதே. தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். நல்ல விஷயங்களை, சரியானவற்றைச் செய்யும்போது தயக்கம் இருக்கக் கூடாது” என்றேன் மகனிடம். அதற்கு அவன் “நல்லது எது கெட்டது எது? எது சரி, எது தவறு? யார் அதை நிர்ணயிப்பது? எது சரி என்று எனக்கெப்படி தெரியுமென்று” மறு கேள்விகள் கேட்டான். “உன் மனதுக்குச் சரியென்று படுவது நல்லது. இல்லை தவறு, இது செய்தால் அம்மாவுக்குப் பிடிக்காது என்று நீ நினைத்து அதை மறைக்க நினைப்பது கெட்டது” என்றேன். இப்படி நாம் வளரும்போதே நல்லதையும் நல்லது அல்லாததையும் மத ரீதியாகவோ, நமது கலாச்சாரப் பண்பாடு ரீதியாகவோ, சமூகத்திற்கு மட்டும் ஏற்புடையதை வைத்துப் பிரித்துப் பார்த்து ஒரு முன் முடிவோடு இருப்பதால். நாம் சந்திக்கும் நபர்,பழகும் நண்பர், நம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள், ஏன் பார்க்கும் சினிமாவிலிருந்து வாசிக்கும் நூல் வரை நல்லவை என்று நாம் நம்புபவையே அவ்வாறு இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். நமக்கு சகஜமான வார்த்தை மற்றவருக்கு ‘கெட்ட வார்த்தையாக’ இருக்கலாம்.

உதாரணமாக மலையாளிகளை நண்பர்களாகக் கொண்டவர்களுக்குத் தெரியும் அவர்கள் எவ்வளவு சரளமாக ‘தெண்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று. ‘போடி தெண்டி’ என்று சொன்ன நண்பரிடம் பல நாட்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். பிறகு “இல்லை இதை நாங்கள் மிக நெருக்கமானவர்களிடம் அப்படிப் பேசி பழகிவிட்டோம், அந்தச் சொல்லுக்கான பொருளை முன்னிறுத்தி சொல்லப்படும் வார்த்தை இல்லை” என்று விளக்கி மன்னிப்பு கேட்ட பிறகே நான் சமாதானமானேன். அப்படித்தான் ஓரிதழ்ப்பூவில் வெளிப்படையாக மனம் திறந்து யதார்த்தமாக, புனைவாக மிகு புனைவாகப் பேசியுள்ளார் நூலாசிரியர். அதைப் படிக்கும்போது அவருடைய வசீகரிக்கும் எழுத்துநடையும் இடையில் வரும் வட்டார வழக்கும் வாசிக்க விடாமல் நம்மைத் தடுப்பதில்லை.

நூலாசிரியர் உச்சத்தில் (ரொம்ப ‘ஹை’யாக) இருக்கும் போது எழுதியவை அதனாலேயே வாசிக்கும் நமக்கும் அவ்வகையான உணர்வை கடத்தியிருக்கிறார். இவ்வகையான போதையை மனம் ஏற்றாலும் அதை ஏற்கும் நம்மை இச்சமுதாயம் ஏற்குமா என்ற பயம் உள்ளூர ஏற்படாமலில்லை.

‘கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம்’ என்ற பாடலை எழுதியவர் போகரா? கம்பரா?தொல்காப்பியரா? என்று கடைசி வரை நூலாசிரியர் சொல்லவேயில்லை. ஒரு வகையான பித்துப்பிடித்த கதாபாத்திரங்களோடு வாசிக்கும் நம்மையும் மாமுனியோடு சேர்த்து,பொதிகை மலையையே சலித்து அப்பூவைக் கண்டறிய கட்டற்ற நிலையில் அலைந்து திரிந்து நம்மையும் சேர்ந்து கண்டெடுக்க வைக்கிறார். அதற்கான உந்துதலை அவர் எழுத்து நமக்குத் தருகிறது.

வாசிக்க வாசிக்கத் திருவண்ணாமலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டுமென்று ஏற்கத்தை ஏற்படுத்துகிறது அவரது விவரணை. இப்படி இடங்களை மட்டுமல்ல அவர் கதையில் வரும் ஒவ்வொரு பெண்களையும் அவ்வளவு ஆசையோடு அழகாக விவரித்து ரசிக்க வைத்த நூலாசிரியர் வர்ணித்த அந்தப் பெண்களை மட்டும் ஏன் அசிங்கப்படுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை. ஒருவர் இருவரல்ல கதையில் வரும் பிரதானப் பாத்திரங்களான அங்கையற்கன்னி, அமுதாக்கா, துர்கா, மலர்செல்வி என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. மனப்பிறழ்வு மாந்தர்களாகவே இருக்கட்டுமே, தீயாகப் பூத்த துர்கா சாமியுடன் 'இருந்தவுடன்' பெரிய அமைதியைப் பெற்றாராம். அதே துர்கா மாமுனியைப் பார்த்தவுடன் கையோடு அழைத்துச் சென்று, அமுதத்தில் விழ வைத்து அவருக்கு ஆயிரம் வருடப் பிறவி பயனை அடையச் செய்தாராம். அங்கையற்கன்னி  சங்கமேஸ்வரனைப் பார்த்த மாத்திரத்தில் தழுவிக் கொண்டதோடு, அவன் மீது பாய்ந்தாளாம். மலர்விழி,கோலப்பொடியை விட்டுவிட்டு கிடைத்தவனுடன் பைக்கில் ஏறி தொலைந்தாள். அமுதா அக்கா சாவு வீட்டுப் பூ வாசத்துடன் ஆசையோடும் தவிப்போடும் ரவியை ஏந்திக் கொண்டாளாம்.

நான் ஒரு அடிப்படைவாதியோ, கலாச்சாரம் பண்பாடு கற்பு அப்படியென்ற ‘டெம்ப்லேட்டிற்குள்’ சிலரது செயலை வைத்து ஒழுக்க மதீப்பீடு செய்பவள் அல்ல. ஆனால் மனம்பிறழ்ந்த பெண்ணுமே கண்டவுடன் கட்டுடலை அவிழ்ப்பாளா? எத்தனை சதவீதம் இது சாத்தியம்? பல வருடங்கள் சென்றும் பேசக் கூடிய ஒரு படைப்பில் பெண்களை இப்படிச் சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை.

அதே சமயம், காமம் அற்புதமான விஷயம் அதை அற்பமாக்கி விடாமல் ரசனையோடு இப்படிப் பேசியிருக்கிறார்.

“கனிகளை மட்டுமே கொண்டிருந்த பெரும் பழமரமொன்று வெளவாலை இழுத்து அணைத்துக் கொண்டது. கிளை, இலை, வேர் எங்கும் கனிகள். வெளவாலின் குருட்டுக் கண்களால் கனிகளைக் காணமுடியவில்லை. அதன் சிறு வாயால் எத்தனை கனிகளைச் சுவைக்க முடியும்?” என்பதாக விவரணை நீள்கிறது.

வாழ்வில் காமம் ஒரு பகுதிதான், ஆனால் வாழ்வே காமம் என்பதாக இந்நூல் உணர்த்துவதால் அந்த இரசனைக்கும் இறைந்து கிடக்கும் காமநெடிக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால்தான் வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறது நமக்கு கிழக்குப் பதிப்பகம்.

நான் யோசித்துப் பார்க்கிறேன் ‘ஓரிதழ்ப்பூ’வை ஒரு பெண் எழுதியிருந்தால் இவ்வளவு பேர் இங்கு கூடித்தான் இருப்பார்களா? கவிதை தொகுப்புக்கு ‘முலைகள்’னு தலைப்பு வைத்ததற்காகவே பலரது வாயில் அவலானார் குட்டி ரேவதி. ராஜாத்தி சல்மாவை இன்னும் ஏற்காத சமூகம் இது, இந்த நூலை ஒரு பெண் எழுதியிருந்தால் அவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்பது என் கணிப்பு.

ஆனால் ஒரு ஆண் எழுதும்போது படைப்பைப் படைப்பாளியோடு கலக்காமல் பார்க்க முடிகிறது நம்மால். மகிழ்ச்சி!

இந்நூலை வாசிக்கும் பெண்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக “எல்லாப் பொம்பளயும் சாமிதான” என்ற வார்த்தையைப் புகுத்தி நூலாசிரியர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.

அதேபோல லட்சுமி, சாமிநாதனை மாடு மேய்க்கும் கழியால் அடிப்பது கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை அளிக்கிறது. அந்தச் சம்பவத்தைக் காட்சிப்படுத்தும் விதம் அழகு, அங்கு மட்டுமல்ல இந்நூல் இவ்வளவு எதிர்மறையான விஷயத்திற்குப் பிறகும் பிடித்துப் போனதற்கான காரணம் அவரது விவரணை, பிரமிப்பான கனவுகள் நினைவலைகளாக நம்மைப் பின்தொடர செய்த எழுத்தின் சூட்சுமம்.

இப்படியான நல்ல எழுத்துக்குச் சொந்தமான அய்யனார் விஸ்வநாத்தை இனி வரும் படைப்புகளில் பெண்களைத் தூய்மைவாதியாகக் காட்டச் சொல்லவில்லை. இயல்பிற்கு மாறாகப் புனைய வேண்டாமென்ற வேண்டுகோளோடு அமர்கிறேன்.

Thursday, August 20, 2015

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'.

எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் வராததால் ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு நண்பர் முரளி அதற்கான சுட்டியை அனுப்பியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்திருப்பதன் பின்னணி இயக்குனர் தாமிரா. படம் முழுக்கத் தெளிக்கப்பட்ட வசனங்களும், கலைகளும், ஒப்பனைகளும் அசல் இஸ்லாமிய குடும்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கவே, இது எப்படி சாத்தியம்? தாமிரா என்பவரால் எப்படிச் சிறிய தவறும் நிகழாது முழுநீளப்படத்தை இஸ்லாமை உள்வாங்கி செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை இன்று அவரைப் பற்றிப் படிக்கும் போது கிடைத்தது. தாமிரா ஒர் இஸ்லாமியர் என்று அறிந்ததும், அந்த இயல்பான விஷயத்தில் எந்த ஆச்சர்யமுமில்லை என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. வசனங்கள் எல்லாமே இயக்குனரால் பார்க்கப்பட்ட கேட்கப்பட்ட அல்லது கேட்க விரும்பியவைகளின் பிரதிபலிப்பாகவே வந்ததால் அதன் உஷ்ணத்தை உணர முடிகிறது. பணத்தைக் குறித்துச் சொல்லும் போது 'துரு பிடிக்காதுனு பணம் சேர்க்கிறான், பணம் சேர்ந்ததும் அவன் மனசு துரு பிடிச்சுப்போகுது', 'பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்', 'பணம் இருக்கிறவங்க மனசு இரும்புப் பூட்டால பூட்டியிருக்கு' போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

அதே போல இயக்குனரின் பாத்திரத் தேர்வு மிக அற்புதம். கவிஞர் சல்மாவிற்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'மெஹர்' பேசப்பட்டிருக்காது. தாயாக சரண்யா போன்ற சிறந்த நடிகை நடித்திருந்தாலும் கூடத் தமிழ் முஸ்லிம்களின் வட்டார வழக்கை மிகச் சரியான உச்சரிப்பில், இயல்பாகப் பேசுவதற்கு ஒரு தேர்ந்த நடிகை தேவையில்லையே, மாறாக அந்த இடத்தில் மகள் யாஸ்மீனின் சூழலில் வளர்ந்த சல்மா போன்றவரே சரியென்று அறிந்து, நடிக்க வைத்திருக்கிறார். அவர் கணிப்பை சல்மாவும் உறுதி செய்யும் வகையில் ஒரு கவலை ரேகையோடு தாயின் சாயலில் மிக அமைதியாக பாத்திரப்படைப்பை உள்வாங்கி நிகழ்த்தியுள்ளார். ’ஒது’ செய்யும் முறை, தலையில் சீலை நழுவ விடாமல் தலையை வைத்துக் கொள்ளும் முறை, அதனை ஒதுக்கிவிடும் முறை என்று அமர்க்களப்படுத்தியவர், தொழுகையின்போது தலைமுடி தெரியாமல் முந்தானையைச் சுற்றிக்கட்டாமல் விட்டுவிட்டார். சல்மாவின் மகனாக வரும் ரஷீத் எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அற்புதமாக உலா வந்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது இங்கு பொருந்தாமல் போய்விடும். அவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். கணுக்கால் தெரிய கட்டிய கைலி, தவறு செய்துவிட்டதால் தாயை எதிர்கொள்ள முடியாத திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி, 'அடுத்தவர் பொருளை அபகரிப்பவன் மறுமையில் கைகளை இழப்பான். என் அக்காவின் வாழ்வுக்காக என் கைகளை இழந்தாலும் பரவாயில்லை' என்று கண்களில் காட்டிய உறுதி, அவருடைய தவிப்பு, கலக்கம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா.

கதை சொல்லி கதையை முடிவில் ஆரம்பித்து, பின்னோக்கி சென்று கதையை விவரித்து அதில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் ஒற்றுமையாக தாய்- பிள்ளைகளாக வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தி, 'இல்லாதவன் புலம்பல் எல்லாமே ஒருவிதத்துல கம்பூனிசம்தான்' என்று எள்ளலாக முதலாளி- தொழிலாளி தர்மத்தைத் தொட்டு, அமைதியான மார்க்கத்தை அச்சுறுத்தல் மார்க்கமாகப் பார்ப்பவர்களுக்கு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சரியான முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாதவரை இப்படியான நெறிகள் வெறும் மதக்கோட்பாடுகளாக ஏடுகளில் மட்டுமே இருக்கும் என்பதை மிக நாசூக்காகத் தெளிவுப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு. இச்சித்திரம் மார்க்கத்தை பின்பற்றாமல் ஊர் தப்பாகப் பேசுமென்று ரொக்கமும் நகையும் கேட்பவர்களைப் பார்த்து நகைக்கும்.

பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலநூறு கனவுகளும் ஆசைகளும் இருக்கும், ஆனால் யாஸ்மீன் போன்ற பெண்களுக்கு கனவானது, அவர்கள் சுதந்திரம் என்று விரும்புவது "பட்டபகலுல தெருவுல இறங்கி நடக்கணும், இந்த சந்தத்தாண்டி இருக்கிற உலகத்த நான் பார்க்கணும், மனசு குளிரப் பாட்டுக் கேட்கணும், சத்தமா பாடிப் பார்க்கணும்" என்பது மட்டுமே. ஆனால் அப்படியான ஆசைகள் நிறைவேற அவர்கள் வழியாக நினைப்பது திருமணம் மட்டும்தான். பூப்படைந்த பெண்களை வீட்டிலேயே வைத்து, திருமணம் நடக்கும் வரை நாலு சுவற்றைத் தவிர வேறு எதையுமே பார்க்க அனுமதிக்காமல், யாருடனும் பேச வழி வகுக்காமல், உலக அறிவும் வாசமும் தெரியாமல் முடங்கிப் போக வைக்கும் அவலம் இன்னும் நடந்தேறிக் கொண்டேயுள்ளது. அவர்களை திருமணத்திற்குத் தகுதிப் பெற செய்வது கைத்திருத்தமான சமையலும், அழகும், பிரதானமாகப் பணமும்தான். இதற்குக் காரணம் மதமில்லை, இஸ்லாமிய மார்க்கமில்லை எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்பதில் ஐயமில்லை.

இறுதிக்காட்சியில் 'இஸ்லாத்தைப் பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக இருக்கு' என்பது பெண் விடுதலைக்காகவும் - பெண்களுக்குத் திருமணம் மட்டுமே விடிவு என்றில்லாமல் - அவளுக்குத் தேவையான கல்வி, உலக அறிவு, விசால சிந்தனை எல்லாமும் கிடைக்கப் பெறவும் இந்தத் தலைமுறையினரே உதவிடவும் வழிவகை செய்யத் தலைப்படுமா?

Wednesday, February 26, 2014

தவிக்க வைத்த 'நூறு நாற்காலிகள்'

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது.
எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், அப்படியான சூழலை மட்டுமே கடந்து வந்திருக்கிறேன். ஒரு வேளை சென்னையில் வளர்ந்ததால்தான் இப்படியா என்று என் நண்பரிடம் வினவுகையில் 'இல்லை, விபரம் தெரியாமலே வளர்ந்திருப்பாய்' என்றார். இருபது வயது வரை சென்னை காற்றையே சுவாசித்தவளுக்குச் சாதி பாகுபாடு, தீண்டாமை, கீழ் சாதி- மேல் சாதி பிரிவினை, அலட்சியப் பார்வைகள், ஒதுக்கி வைத்தல் போன்ற எதையுமேவா நான் சந்தித்ததில்லை? நான் வளர்ந்த 'பீட்டர்ஸ் காலனி' சூழலில் எல்லோருமே தாய்- பிள்ளை உறவுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தோமென்றால் மிகையில்லை. அஃது அன்றைய 'சொர்க்க பூமி'. அதைப் பற்றி வேறொரு சூழலில் தனிப் பதிவே எழுதியாக வேண்டும்.

இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்களைப் போல் என் வாழ்வில் நான் யாரையுமே சந்தித்ததே இல்லை. 'நாயாடி' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. நல்லவேளையாக அப்படியான ஒரு சூழல் இன்று இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்கிறேன். 'நாயாடி'களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட துயர சூழலை அறிந்ததுண்டா? நாயாடிகளைக் கண்ணால் பார்த்தாலும் தீட்டுப்பட்டுவிடுமென்ற எண்ணம் அப்போது இருந்ததாம். எப்படி ஒரு மனிதரைப் பார்த்தாலே தீட்டு? தீட்டென்றால் என்ன? எனக்குத் தெரிந்து அசுத்தம் என்பதே அதன் பொருள், எப்படி அது பார்வையால் உண்டாகும்? சகமனிதரை எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த முடியும்? இப்படி பற்பல கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. என்னால் இதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்க முடியாத இந்தத் துயரைக் கண் முன் விரியச் செய்து ஒவ்வொரு கதை மாந்தரின் முகத்தையும் என் கண்களில் காட்சியாக்குகிறார் தனது எழுத்தாளுமையால் ஜெ.மோ.

காப்பன் என்ற கதைநாயகன் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவர் வடுக்களைக் கைகளால் நானே தடவிப் பார்த்துவிட்டேன். அவருடைய வலியை என் விரல்கள் தொட்டு வருடி சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கிறது. இப்படியெல்லாமுமா ஒர் உயிருள்ள ஆத்மாவை வதைப்பது? 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். ஆனால் மனிதப் பிறவியும் இன்ன சாதியில்தான் பிறத்தல் நன்று என்பதாக நம் வாழ்வியல் இருந்துள்ளது. நாமெல்லாம் அதன் சாட்சிகள் என்றெண்ணும் போது பதைபதைக்கிறது மனது.

ஆஸ்கர் நாயகர் இயக்குனர் அஸ்கர் பர்ஹதியின் படத்தில் ஒரு காட்சிப்படுத்தலில் ஏற்படும் வலிமையை, தாக்கத்தை எப்படி இவர் எழுத்தின் மூலம் ஏற்படுத்த முடிகிறது என்று திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்கிறார். காப்பனின் தாயைப் பன்றி என்கிறார், தெருநாய் என்று விளிக்கிறார், முலைகளை அழுக்கு மூட்டை என்கிறார், 'யானை டாக்டரில்' புழுவை கைக்குழந்தையென்றார். இதிலும் 'நகரம் நாயாடிகளைக் குப்பைகளாக ஒதுக்கினாலும் அவர்கள் புழுக்களைப்போல குட்டிபோட்டுச் செழித்து வளர்ந்தார்கள்' என்று குறிப்பிடுகிறார். வயதானால் வார்த்தைகளும் சுருங்கிவிடும் என்பதை மிக அழகாக 'சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன்' என்று பிரிக்கிறார். இப்படிக் கதை முழுக்க ஒவ்வொரு வரிகளிலும் வலியோடு பேசியுள்ளார் எழுத்தாளர். இதை எழுதும் போது, அதுவும் பாதிக்கப்பட்ட காப்பனாக தன்னை நினைத்துக் கொண்டு எழுதும் போது மன ஆழத்தில் ஏற்பட்ட உணர்வின் வெடிப்பாக இக்கதை விரிகிறது.

படிக்கும் போது பேசும் ஒவ்வொரு பாத்திரமும் நாமாகிவிடுகிறோம். சாக்கடையிலும் அழுக்கிலும் ஊறிய அந்தத் 'தாய்ப்பன்றி'யின் முகத்தையும் அவரின் புரிந்து கொள்ள முடியாத பதற்றத்தையும் நமக்கு கடத்திவிடுகிறார். தாயைச் சமாதானப்படுத்தும் போது காப்பனாகவும் நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம். விளிம்புநிலைக்கு நாமும் தள்ளப்படுகிறோம். கையாலாகாதக் கழிவிரக்கத்தோடு நாமும் அவமானமாய் உணர்கிறோம். ஆனால் அலட்சியப்படுத்தும் மக்களோடு நாமும் ஒர் அங்கமாக இருக்கிறோம் என்பதில் மட்டும் எனக்குப் பெரிய சங்கடம்.

வித்தியாசமான, நான் எங்கேயுமே கேட்காத சொல்வழக்கு இந்தக் கதை முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. அந்தப் புரியாத மொழியையும் நமக்குப் புரிய வைக்கிறார் விளக்காமலே. எப்படி இதெல்லாம் சாத்தியம்? இந்தக் கதையை ஆழமாக வாசித்தால் தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக உணர்ந்து நாற்காலியில் உட்காருவது கூடாது, மேல் அங்கி உனக்கு வேண்டாம், மேல்மட்டத்தாரை பார்த்தாலே ஓடி ஒதுங்குபவரும் கூட ஒரு மேல்மட்ட பெண்ணைப் பார்த்தால் பயப்படாமல் கோபத்தை வெளிப்படுத்துவது, பொருட்களைத் தூக்கி வீசுவதும் சுலபமாகிவிடுகிறாது. "சுபா மீது அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது, எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு" என்று தன் தாயின் கோபத்தை புரிந்துக் கொள்பவராக வரும் சொற்களைப் படிக்கும் போது எந்த சாதியென்றாலும் எல்லாவற்றையும் விட மிகத் தாழ்ந்த சாதி ஒரு பெண் என்ற உண்மை வலிக்கவே செய்கிறது.

பிறப்பையும் அதன் பின்னணியையும் வைத்து ஒதுக்கப்படும் ஒருவர் திக்கித் திணறி நீந்தி மேலே வரும் போது மூச்சடைக்க வைத்து மீண்டும் அழுத்துவதைக் கதையாக 'நூறு நாற்காலிகள்' என்று தலைப்பிட்டுள்ளார். கடைசியில் "அம்மா நான் காப்பன். நான் களசத்தையும் சட்டையையும் கழற்றிவிடுகிறேன். தம்புரான்களின் நாற்காலியில் அமர மாட்டேன். எழுந்துவிடுகிறேன்" என்று வாசிக்கும் போது "இல்லை, நீ போராடு உன்னால் முடியுமென்று' 'திக் பிரம்மைப்' பிடித்தவளாக எனக்கு நானே பிதற்றிக்கொண்டிருந்தேன். என்னவோ என் தவிப்புக்காகவே 'நூறு நாற்காலிகளை' வேண்டி நிற்கிறார் என்பது போல் முடிந்தது கதை. அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தக் கதையை வாசித்தாக வேண்டும். எப்படியான சமூதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது இருந்தோம் என்பதைத் தெரிந்துக் கொள்வதற்காகவாவது.

படித்து முடித்துவிட்டிருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன். ஆசிப்பிடம் இதைப் படித்தீர்களா? இந்தக் கதையே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அறத்தை எடுத்து அவர் கையில் திணித்து இந்தக் கதையைப் படியுங்களேன் என்றேன். எல்லாம் ஒரு சுயபரிசோதனை செய்துக் கொள்வதற்காகத்தான். எனக்கு மட்டும்தான் இப்படிக் கிறுக்கா அல்லது படிக்கும் எல்லாருக்கும் ஏற்படுமாவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஜெ.மோ.வை தொலைபேசியில் அழைத்து இது பற்றிச் சொல்லி கைப்பேசியை என்னிடம் தந்தார். நானும் திடீரென்று தந்துவிட்டாரே என்று திக்கித் திணறாமல் மிகச் சரளமாக மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லி முடித்தேன் அவரைப் பேசவிடாமல். மிக நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தந்த அவதாரமெடுத்து அந்தந்தக் கதையை எழுதியதாகச் சொன்னார். மிகவும் பரிச்சயப்பட்டவர் போல பேசினார். எனக்கும் அப்படியே இருந்தது. நான் எப்போதும் கதையிலும் எழுத்திலும் ஏற்படும் பிரமிப்பை எழுதுபவர் மீது செலுத்துவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்.

Thursday, February 06, 2014

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு உண்டு. ஜெ.மோ.வின் 'யானை டாக்டர்' படித்த பிறகு அந்த அன்பு காதலாகிப் போனதென்றால் மிகையில்லை.

'யானை டாக்டர்' படிக்கும் போது என்னமா எழுதுறாருப்பா என்று பிரம்மிக்க வைக்கும் எழுத்துநடை. நமக்கே தெரியாமல் நம்மை காட்டுக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி, சூழல் புரிய வைத்து, ஒவ்வொன்றையும் வேறு கோணத்தில் இரசிக்கச் செய்து, சராசரி மனிதர்களான நம்மையே சுயம் வெறுக்கச் செய்து, மிருக உலகத்தை படிக்கச் செய்து அசர வைத்திருக்கிறார் ஜெ.மோ. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே வேகத்தில் பயணிக்கிறது. கதையல்ல வாழ்வுதான், நடந்த உண்மைதான், ஆனால் அந்த சம்பவங்கள் ஆழ் மனதில் பதிய வைக்க அவருடைய கதையோட்டமும் சொற்பிரயோகங்களும் கிறங்க வைக்கிறது.

ஒவ்வொரு கதைக்கரு பிறப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா? இந்தக் கதை பிறப்பதற்கான காரணத்தைக் கதையிலேயே கண்டு கொண்டதாக உணர்ந்தேன். மிருக உலகைப் பற்றியோ, அதன் இயல்பைப் பற்றியோ, காட்டின் வாழ்வும் சூழலைப் பற்றியும் பள்ளியிலேயோ கல்லூரிலேயோ படித்திருக்க மாட்டோம். நம் தலைமுறையில் பெரும்பாலோருக்கு லட்சியமெல்லாம் படிப்பதும், வேலைக்குப் போய் சம்பாதிப்பதும்தானே தவிர கனவுகளோ இப்படியான தெய்வீக உலகை அணுகவோ இரசிக்கவோ தெரிந்துக் கொள்ளவோ நேரமில்லாததால் கடந்து செல்கிறோம். அந்த உலகைக் கொஞ்ச நேரமாவது அனுபவிக்கச் செய்திருக்கிறார், ஜெ.மோ. அதைக் குறிப்பிட்டும் உள்ளார்.

குளிர்காலமென்பதால் தோல் உலர்ந்தால் உடனே 'மாய்ஸ்ச்சரைசரை' எடுத்துத் தடவிக் கொள்ளும் நான் 'யானை டாக்டரில்' அவர் வலியை கவனிப்பது நல்ல பழக்கமென்றும் அது ஒரு தியானமென்றும் வலியென்பது சாதாரண நிலையில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிற நிலை என்றும் சுலபமாக சொல்லிச் சென்றது ஆழ் மனதில் பதிந்து ஒவ்வொரு விஷயத்தையும் வேறு விதமாகப் பார்க்கவும் கையாளவும் ஆரம்பித்துவிட்டது மனது. நமக்கு வலி ஏற்படும் போது உடனே அந்த நிலையிலிருந்து மாறத் துடிக்கும் நாம், மாத்திரை மருந்தை உட்கொள்கிறோம். அதுவே தேவையில்லாத பல புதிய நோயை உண்டு பண்ணுகிறது என்ற சிந்தனை எனக்குச் சத்தியமாகப்பட்டது. அந்த சத்தியமான வார்த்தைகளைச் சோதித்தும் பார்த்தேன். என் காது மடலில் வந்த சின்ன பருவை ஒன்றுமே செய்யாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன், அதற்கே வெறுப்பாகிப் போய்விட்டது வடுவில்லாமல்.

எனது பிரசவத்தின் போது 'ஐயோ அம்மா' என்று கூக்குரலிடும் பெண்களுக்கு மத்தியில் நான் மிகவும் அமைதியாக வலியை தாங்கிக் கொண்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு நெளிந்தேன். காரணம் 'புஷ்' செய்வதற்கு மிகுந்த சக்தி வேண்டும் அந்த வகை 'எனர்ஜியை' கத்தி அலறி வீணாக்காமல் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று படித்திருந்ததை மனதில் வைத்து செயல்படுத்தினேன். ஆனால் மிருகங்கள் எதைப் படித்து இதையெல்லாம் தெரிந்து கொண்டது என்ற பிரம்மிப்பு ஏற்பட்டது இந்தக் கதையை வாசிக்கும் போது.

"யானையை கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…" என்பவர் "உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்" என்றும் சொல்கிறார். இந்தக் கதை நம் வாழ்வியலோடு இயைந்து நிற்பதால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடக் காட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கிறது நமக்கு.

பல்லி என்றால் எனக்கு பயம். புழுவைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். இந்த அற்ப ஜந்துகளைப் பற்றி இந்தக் கதையில் சிலாகிக்கிறார். புழுவை கைக்குழந்தை என்கிறார், குழந்தை மீது என்ன அருவருப்பு என்று கேள்வி எழுப்புகிறார், ஒப்பீடாக புழு கைக்குழந்தை போல் நடக்க முடியாது, பறக்க முடியாது, தவழும், சாப்பிடும் என்கிறார். ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்து வர்ணிப்பது எனக்கு அற்புதமாகத் தோன்றியது. இனி இந்த அற்பப் படைப்புகளைப் பார்த்தால் குழந்தையென்று கொஞ்சுவேனா? கண்டிப்பாக முடியாது ஆனால் அருவருக்காது என்று நினைக்கிறேன்.

மனிதனைப் பற்றிச் சொல்லும் போது "உனது அன்பு ஆசை மட்டுமே. உனது நட்போ ஏமாற்று. உனது புன்னகை போலி, உனது சொற்கள் வெறும் மோசடி" என்று சொன்னவர் மற்றொரு இடத்தில்..."அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்?" என்ற கேள்வியில் உண்மையில்லாமலில்லை. எதிர்பார்ப்பில்லாத, ஆசைகள் துறந்த, கருணையும் அன்பையும் மட்டும் சொரியும் மனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டதாலா இந்தக் கதையை மிக நெருக்கமாக உணர்ந்தேன், பரவசமடைந்தேன்...?

நீங்களும் படித்துவிட்டு... நானே மிக தாமதமாகப் படித்துள்ளேன், ஆதலால் நீங்களாவது தாமதிக்காமல் படித்துவிட்டு நான் உணர்ந்ததைப் போல் நீங்களும் உணர்ந்தீர்களா என்று பகிர்ந்து கொள்ளுங்கள். 'யானை டாக்டர்; நன்றாகவே வைத்தியம் பார்த்துள்ளார். இனி யானையைப் பார்க்கும் போது இந்தக் கதை கண்டிப்பாக நினைவுக்கு வரும். அதோடு யானையை பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.

Tuesday, January 21, 2014

அறம்


பிரபலம் என்றாலே அவருடன் நட்பு பாராட்ட தோன்றும். ஆனால் எந்த வகை பிரபலமென்றாலும் பெரிய அளவில் உறவாடவோ அவர்களுடன் தொடர்பில் இருக்கவோ நான் முற்பட்டதில்லை. அது திரைத் துறையாகட்டும் அல்லது எழுத்துலகாகட்டும். எழுத்தாளர்கள் வருகிறார்களென்றால் அவர்கள் எழுதியதை வாசிக்காமல் புத்தகப் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொண்டு முக தாட்சண்யத்திற்காக இதை வாசித்தேன் அருமையென்று பொய்யாக பேசத் தெரியாது. ஜெமோ அமீரகம் வருகிறார் என்ற போதும் கூட அவருடைய எழுத்துக்களைத் தேடி வாசிக்கத் தோன்றியதில்லை. அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஒருவரை விருந்தினராக அழைக்கும் போது அவரைப் பற்றிய பின்புலன்களை வாசித்துத் தெரிந்து கொள்வேன், அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை நல்லவிதமாகப் பேச வேண்டுமென்பதற்காக. ஜெமோ பற்றியும் அப்படித்தான் தெரிந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசி வரவேற்புரை நிகழ்த்தினேனே தவிர அவர் எழுத்துக்களை அதுவரை பெரிதாக நுகர்ந்ததில்லை. ஜெமோ இங்கு வந்திருந்த போது ஆற்றிய சொற்பொழிவு மிக அற்புதமாக அமைந்தது. சிவன் - பார்வதி தாயம் விளையாடும் ஓவியத்தின் பின் புலத்திலுள்ள கதையை விளக்கியதோடு அவர் பார்த்த, தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அழகாகக் கடத்தத் தெரிந்த தொனியும் உடல்மொழியும் பேச்சுத் திறனும் இன்னும் என் கண் முன்னே நிறைந்திருக்கிறது. அதன் பிறகு அவர் எழுத்தை வாசிக்க முயற்சித்தேன். அவருடைய இணைய தளத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் மண்டையில் எதுவும் ஏறவில்லை. காரணம் மனத்தடையாகக் கூட இருந்திருக்கலாம். தெரியவில்லை. அவர் அண்ணாச்சிக்கு எழுதிய கடிதத்தை வாசித்த போது அவர் மீது மரியாதை சேர்ந்ததே தவிர அப்போதும் கூட அவர் எழுத்தைத் தேடத் தோன்றவில்லை.


கணவர் சென்னைக்குச் சென்றிந்த போது சாகித்ய அகாடமி விருது பெற்ற காரணத்திற்காக ஜோ.டி. குரூஸின் ’கொற்கை’ வாங்கி வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் சென்ற நேரத்தில் பனுவலில் ’கொற்கை’யில்லையென்று அங்கிருந்து என்னை தொலைபேசிய போது அண்ணாச்சி சொன்னதன் பேரில் ஜெமோவின் 'வெள்ளையானை', 'அறம்' மற்றும் சாரு எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடைய புத்தகம் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கி வரச் சொல்லியிருந்தேன். சிவராமன் எழுதிய 'கர்ணனின் கவசம்' படித்துக் கொண்டிருந்ததால் வாங்கி வந்த புத்தகங்களைத் தொட்டும் பார்க்கவில்லை.

அண்ணாச்சி வீட்டுக்கு வரும் போதெல்லாம் 'அறம் வாசிச்சியா?' என்றே கேட்பார். 'பெரிய புத்தகம்ன்னாலே பீதியா இருக்கு, இத முடிச்சிட்டுத்தான் அத வாசிக்கனும்' என்றேன். பிறகு இன்னொரு தருணத்தில் ’அறம் தனித்தனி கதைகள் தானே அதை ஏன் இன்னும் தொடவில்லை?’யென்று கேட்க. 'அட அப்படியா? அதக் கூட பார்க்கலையே' என்றவுடன் கடுப்பாகிவிட்டார் அண்ணாச்சி.

நேற்றுதான் அறம் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதை 'அறம்' வீட்டில் பாதி வாசித்துவிட்டு கீழே வைக்க மனதில்லாமல் அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்று வாசித்து முடித்தேன். அலுவலகத்தில் சுற்றி ஆட்கள் இருந்தும் நிறுத்த முடியாத அளவிற்குத் தேம்புகிறேன் என்னையும் அறியாமல். நெருக்கமான சக ஊழியர் மட்டும் என்னிடத்தில் வந்து 'Is everything fine? Are you ok?' என்று கேட்டார். அதன் பின்னரே தன்னிலைக்குத் திரும்பியவளாக ஒன்றுமில்லையென்று விளக்கிவிட்டு மனதில் 'அறத்தை'யே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

'உண்மை மனிதர்களின் கதைகள்' என்றிருந்தது. அது மேலும் வலியை அதிகரித்தது. இது சாதாரண எழுத்தாகத் தோன்றவில்லை. எடுத்தோம் வாசித்தோம் வைத்தோம் என்றில்லாமல் அது மண்டைக்குள் சென்று தொண்டையை அடைக்க வைப்பது ஒரு சாதாரண எழுத்தால் முடியுமா என்ன? எதையோ யாருக்கோ எப்பவோ சொல்ல வேண்டுவதை தீர்க்கதரிசி போல உருமாறி அல்லது உருவெடுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு. கதையோட்டம் பிரமிக்க வைக்கிறது.

இந்தக் கதையில் சில வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. சூடான அதிகமில்லாத காப்பியை ருசிப்பதை கூட 'பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா? என்ன சொல்றேள்?’ என்று பெரியவர் சிரிக்க ‘குதிரைய ஓடுறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?' என்று எழுதிய அறிவுஜீவி சம்பாஷனைகளும், 'பொஸ்தக ஏவாரம் பன்றதுக்கு பொடலங்கா ஏவாரம் பண்ணலாம்னு சொல்றான். பொடலங்கா அழுகிரும்டா முட்டாள்' என்று 'அவர் கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு' இப்படியான உள்குத்துகளும் மிக எளிமையாக போகிற போக்கில் நம்மை அழுத்திச் செல்கிற கதை.

ஒரு இடத்தில் இப்படி வரும் 'அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை' அதை வாசிக்கும் போது எனக்கும் இத்தனை யதார்த்தம் நிறைந்த கதையை சமீபத்தில் எங்கும் வாசிக்கவில்லையென்றே தோன்றியது. மொத்தம் பன்னிரெண்டே கதைகள், சீக்கிரம் முடித்துவிட்டு மற்ற கதைகளைப் பற்றி எழுதுகிறேன். இனி ஜெமோவைத் தேடித் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.

சமீபகாலமாக 'ராயல்ட்டி' 'அறம்' என்று இணையத்தில் பிரளயமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பதிப்பகத்திற்காகப் பேசுபவர்கள் இந்தக் கதையைக் கண்டிப்பாகப் படித்திருப்பார்கள். எனக்கென்னவோ இந்த வரிகள் -- "கூட்டம் கூடிட்டுது. 'முதலாளி சொல்றதுதானே நியாயம், என்ன இருந்தாலும் ஏழு வருசமா சோறுபோட்ட தெய்வம்ல அவரு?"ங்கிறாங்க என்ற கூட்டமே இணையத்தில் அதிகம் ஒலிப்பதாக தோன்றியது. இந்தக் கதையை நீங்கள் வாசிக்கவில்லையென்றால் வாசித்துவிடுங்கள். என் கருத்தோடு இசைவீர்கள்.

Tuesday, December 25, 2007

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்


கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

hi jaseela,
even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

idhu kodumailayum kodumaila...

*******************

Hello jazeela,
someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he'll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

How cheap it is????

கல்வி வியாபாரமயமாகி விட்டதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இந்த வகையில் தரம் தாழ்ந்து வருவதை அறியும் போது கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. பெற்றவர்கள் பார்த்து நல்ல கல்லூரியென்று சேர்த்தால், படிக்குமிடத்திலேயே மகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்பு இருப்பதாக நம்பினால் இப்படியொரு இடியா வந்து விழும்? தனியார் மயமாக்கல், தன்னாட்சி என்று கல்லூரிகளுக்கு ஆதிக்கம் வந்துவிட்டதால் இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இது போன்ற கல்லூரிகளுக்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தால்தான் என்ன? ஒரு கல்லூரிக்கு செய்துவிட்டாலே ஒட்டுமொத்த கல்லூரிக்கும் ஒருவித பயமிருக்கத்தான் செய்யும். எந்த ஒரு செயலை செய்யும் போதும் யோசிக்கவே செய்வார்கள்.

வேலை வாங்கி தரும் பிரதிநிதி நிறுவனங்கள் (recruitment agencies) கூட தனக்கான ஊதியத்தை நிறுவனங்களிடம்தான் வாங்கிக் கொள்ளுமே தவிர வேலையில் சேரும் நபரிடமிருந்தில்லை. அப்படியிருக்க அற்பத்தனமாக முதல் சம்பளத்தை வேலையில் சேரும் முன்பே மாணவிகளிடம் வாங்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

எங்கேயோ இருக்கும் என் காதுகளுக்கு இது போன்ற விஷயங்கள் எட்டும் போது உள்ளூரிலேயே இருக்கும் ஊடங்கள் ஊமையாக இருக்க காரணமேதும் உண்டா? சின்ன சமாச்சாரங்களையும் 'சிறப்புப் பார்வையாக' ஊதி பெருசாக்குபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது அலசி செய்தி வெளியிடுகிறோம் என்ற விகடகவிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லையா? ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் அல்லவே!

என் முந்தைய பதிவிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தவிர, கல்லூரியின் நிழலிற்கு ( பட விமர்சனத்திற்கு) மட்டுமே பின்னூட்டமிட்ட பதிவர்கள் நிஜத்தைக் கண்டும் காணாமல் போனது ஆச்சர்யமளிப்பதாய் இருந்தது. ஊடகங்கள் அரசியல் சார்பாக, சாதி ரீதியாக, வியாபார மயமாகிப் போய்விட்டன, நம்மைப் போன்ற வலைப்பதிவர்களாவது ஒளிந்துக்கிடக்கும் சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகமாக நம் வலைப்பதிவை அமைத்துக் கொள்வோமே? சேர்ந்து குரல் கொடுங்கள். அதன் மூலம் சேர வேண்டிய காதுகளுக்குச் சென்று சேர வைப்போம்.

Saturday, December 15, 2007

மறுபடியும் வந்துட்டோம்ல


கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'.

எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் - அவரும் பதிவர்தாங்க - மிரட்டல் விடுத்திருக்கிறார்னா பார்த்துக்கிடுங்க வதந்தி எப்படிலாம் பரவுதுன்னு. இது என் காதுக்கே எட்ட, ம்ஹும் இனி சும்மா இருக்கக் கூடாது, வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வந்துட்டேன். 'என்ன கொடும சரவணன்'னு புலம்புறதை நான் காதில் வாங்கிக்கிறதா இல்ல.

சரி உள்ளே வரும்போதே ஒரு நல்ல தமிழ்ப்படத்தின் திரைவிமர்சனம் தரணும்னு நானும் திரையரங்கா ஏறி இறங்குறேன், ஒரு நல்ல படம் மாட்டலையே. 'அழகிய தமிழ் மகன்' அழுகிய தமிழ் மகனாப் போச்சு, 'வேல்' - சுமார் கூர்மை இல்லை. சரின்னு நேத்து 'பில்லா' படத்துக்கு டிக்கெட் வந்தது, குழந்தைகளுக்காக போவோம்னு பார்த்தா கடைசில எந்தக் குழந்தையும் வரல என் மகளைத் தவிர. அவளுக்கும் படம் பிடிக்கல போலிருக்கு.

அஜீத்தெல்லாம் கதாநாயகரா நடிக்கிறத கொஞ்சம் நிறுத்திக்கணும். முகத்துல சதையெல்லாம் தொங்கி மனுஷன் பெரிய திரையில் பரிதாபமா இருக்கார். கமல் இந்த வயசில் முகத்தில் வயசு தெரியுறாப்புல இவருக்கு இப்பவே - ரொம்ப குடிப்பாரோன்னு பக்கத்துல யாரோ கிசுகிசுத்தாங்க. கொஞ்சம் 'பேஸ் லிப்ட்' செஞ்சா தேவலைன்னு இன்னொருத்தர் அரங்கில் கத்துறார். பிரபுவுக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் ஒட்டவேயில்லை, தொப்பையோடு இருப்பவர்களுக்குதான் டி.எஸ்.பி. பதவின்னு எழுதிக் கொடுத்திட்டாங்க போலிருக்கு. அந்த உயரமான போலீஸ்காரர் பக்கத்தில் பிரபுவின் உயரம் பளிச். தெரிந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா எடுத்திருந்தாத்தான் இன்னும் சுவாரஸ்யமே. இது வெறும் சொதப்பல். 'ச்சே! ரஜினி நடிப்பில் கால் தூசிக் கூட இல்லப்பா'ன்னு தலையில் கை வைக்கத்தான் சொல்லுது.

'நான் அவன் இல்லை' புது வடிவில் வந்த போது நிறைய பேருக்கு அந்த பழையப் படம் நினைவில் இல்லாததாலும் அதைவிட இது பிரமாதமாக சாயம் பூசப்பட்டிருந்ததாலும் கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் இந்த பில்லாவில் நவீன மயமாக்கல் என்று சிகப்பு டைரியை 'பென் டிரைவ்'வாக மாற்றி, நிறைய செல்பேசி உபயோகம், பிரமாண்டமென்று ஹெலிக்காப்டர், மலேசியாவில் படப்பிடிப்பு என்று காசை வாரி இறைத்திருப்பது மட்டும்தான் புதுமையோ? படத்தை ஓட்டுபவருக்கே பிடிக்கவில்லையோ என்னவோ பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் வரும் காட்சிகள் பிரகாஷ் ராஜ் வைத்து செய்திருப்பதாகக் கேள்வி அந்தக் காட்சிகள் அப்படியே துண்டிப்பு. கொடுத்த காசுக்கு 'கலேரியா' இப்படியா மோசம் செய்யும்? பில்லாவுக்கு எப்பவுமே ரஜினிதான் பொருத்தமென்று அஜீத் மூலமா நிரூபிக்க வேண்டும்?

நேற்று மதியம் வீட்டில் 'ப்ளைட் ப்ளேன்' என்ற அருமையான ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு மாலையில் 'பில்லா' பார்த்தது நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு, ருசி கெட்டதை அதன் பிறகு வாயில் போட்டு, நாக்கே கெட்டுப் போச்சுன்னு சொல்வோம்ல அந்த மாதிரிதான். ஆனாலும் நமீதாக்காகவும், நயந்தாராக்காகவும் நம்மூரில் படம் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம்மவர்கள் ரசனையே தனிதானே.

Friday, April 13, 2007

கன்னத்தில் முத்தமிட்டால்...

சின்ன வயதில் தாய்மை என்பது பெரிய புதிராக தோன்றும் எனக்கு. என் மூத்த அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அவள் இரசித்து குழந்தையை கொஞ்சுவதைப் பார்த்து எனக்குள்ளே பல கேள்விகள் அதில் ஒன்றே ஒன்றை அவளிடம் உதிர்த்தே விட்டேன் இப்படி "பெத்த குழந்தன்னா பாசம் பொத்துக்கிட்டு தன்னால வந்திடுமோ? நீ பாக்க நானும்தான் பொறந்து வளர்ந்தேன், என்ன இத்தன வருஷமா தெரியும் உனக்கு, ஆனாலும் என்ன விட இப்ப வந்த புள்ள மேலதான் உனக்கு பாசம் அதிகம்" என்று பொறாமையின் வெளிப்பாடு தெரித்தது. அவள் பதிலுக்கு மெளனம் தந்தாள். எனக்கு அதன் பொருள் என்னவென்று அப்போது புரியவில்லை. குழந்தை பருவத்தில் புது புது வார்த்தைகள் அறிய வரும் போது தெரிந்த சில வார்த்தையை வைத்து புது வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்வது பழக்கமாகயிருந்தது, அப்போது திருக்குறளில் வந்த 'வாய்மை' அதிகாரத்தில் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற குறளை 'வாய்மை'க்கு பதில் 'தாய்மை'ப் போட்டுக் கொண்டால் நினைவில் எளிதில் நிற்கும் அதற்கு காரணம் என்னவென்றும் அப்போது புரியவில்லை. விடை 2004-ல் நான் தாய்மை அடைந்த போது தான் கிடைத்தது. அந்த இனம்புரியாத மனநிறைவை வார்த்தையில் வடிக்க இயலாது.

திருமணத்திற்கு முன்பே நான் வைத்த முதல் கோரிக்கை இரு குழந்தை என்றால் ஒரு குழந்தை தத்தெடுத்த பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று. எனது கோரிக்கையை என் கணவரும் ஏற்றுக் கொண்டார். ஆண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரம் பேர் இருப்பார்கள் இல்லையென்றாலும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் பெண் குழந்தைகள் அப்படியில்லை. பெண் என்பதால் கூட அவர்கள் அனாதையாக்கப்பட்டிருக்கலாம் என்பதாலே அப்படியொரு கோரிக்கை. பெற்றெடுக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மற்றுமொரு பெண் குழந்தை தத்தெடுக்க வேண்டாமே என்ற என் கணவரது கோரிக்கையையும் நியாயமென்று நானும் ஏற்றுக் கொண்டேன். 'கன்னத்தில் முத்தமிட்டால்' பார்த்த போது தத்தெடுப்பதிலும் உள்ள சில வகையான சிரமங்கள் புரிந்தது. இருப்பினும் அதற்கு ஆயுத்தமாகத்தான் இருந்தோம். பிறந்தது பெண் என்பதால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் எல்லா பாடல்களும் அற்புதமென்றாலும் என்றுமே ஆனந்த அவஸ்தையாக நான் உணர்வது இந்த பாடலைக் கேட்கும் போதுதான். வைரமுத்துவின் வரிகளை சின்மயியின் வசீகர குரல் உச்சரிக்க ஏ.ஆர். ரகுமான் இசை தவழ்ந்து வந்து காதுக்கு புதுவித இன்பத்தை தந்து மனதை நிரப்பி என்னையும் அறியாமல் கண்களையும் பனித்துவிட செய்யும் இந்த பாடல். முதல் முறை கேட்ட போது மட்டுமல்ல அவ்வகை உணர்வு எந்த மனநிலையில் கேட்டாலும், எத்தனை முறைக் கேட்டாலும் எனக்கு ஏனோ இதே மாதிரியான உணர்வுதான். தன் முதல் பாடலிலேயே தனக்கான ஒரு நல்ல பெயரை தக்கவைத்துக் கொண்டார் சின்மயியும். ஏ.ஆர்.ஆர். எத்தனையோ தமிழ் கொலை செய்யும் பாடகர்களை தமிழ் பாட அழைத்து வந்திருந்தாலும் சில நல்ல பாடகிகளையும் அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டவர். அந்த வகையில் இசையுலகுக்கு சின்மயியின் குரல் ஒரு வரப்பரசாதம்தான். சில பாடல்களை கேட்கும் போது பார்க்க ஆசை தோன்றும். பார்த்த பிறகு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றும். ஆனால் இந்த பாடல் அப்படியல்ல. இந்த பாடல் படத்தில் இருமுறை பெண்- ஆண் குரலில் வெவ்வேறு சூழலில் ஒலிக்கும். இரு பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவும், காட்சியமைப்புகளும், கலை அம்சங்களும், வண்ண தேர்வில் எடுத்துக் கொண்ட சிரமங்களும் அதன் நுனுக்கங்களும் அந்த பாடலை காதலிக்க செய்ய தூண்டும். இரு பாடல்களுமே தண்ணீரிலிருந்துதான் காட்சி விரிவடையும். பெண் என்பதால் என்னவோ தாய் தன் குழந்தையை வர்ணித்து சிலாகிக்கும் அந்த வைர வரிகள் கொண்ட பாடலே எனக்கு மிக பிடித்தமானது.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2)

எத்தனையோ அற்புதமான பாடல்களை பாடிய பி.ஜெயசந்திரன் தான் அந்த ஆண் குரலின் சொந்தக்காரர்.

இசையோடு ஒலிக்கும் ரம்ய குரலுக்கேற்ப வாயசைக்கும் சிம்ரனின் முகபாவமும், குழந்தை கீர்தனாவின் முகபாவமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே (2)


என்று பாடியவுடன் அந்த குழந்தை தன் தாயை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மனதை லேசாக்கி காற்றில் பறப்பாள். அந்த கணம்தான் என் கண்களும் பனிக்கும்.

வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

வானத்தின் ஒரு பகுதியை உடுத்தியதுப் போல் நீல சேலையில் தரையில் படர்ந்து தன் மகளை மார்பில் சாய்த்துக் கொண்டு பாடல் வரிகளுக்கேற்ப தாய் சேய்க்கு உண்டான நெருக்கத்தை உணர்த்தும் காட்சி பரிமாணம் அபாரம்.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)

ஆனந்த கீதம் ஒலிக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் மகளுடன் அலைகள் இல்லாத கடல் நீரின் நடுவே அலைமோதி விளையாடுவது அழகு.

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

குழந்தை கீர்த்தனாவின் விறைத்த பார்வை, சிம்ரன் எறியப்படும் கல்லுக்கா அல்லது 'எனது பகை' என்று விளித்தமையாலா?

காதல் மலரும் நீ, கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ (2)

ஆவலான அணைப்புக்காக கையை அகல விரித்து ஓடும் தாயை விளையாட்டாக ஏமாற்றும் குழந்தை.

பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ (2)
மரணம் மீண்ட ஜனனம் நீ,


அற்புதமான வார்த்தை செறிவு.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


ஆண் குரலில் ஒலிக்கும் சரணம்:

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


குழந்தையை எழுத்துப் பிழை, நான் தூக்கி வளர்த்த துயரம் என்று சொல்லியிருப்பது படச்சூழலுக்கு சரியென்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

பலமுறை சொன்ன விஷயங்களை வெவ்வேறு விதமாக புதிய பாடலாக உருவெடுத்து வந்திருந்தாலும், இந்த பாடலில் வரும் கருத்தும் விஷயமும் வேறு எந்த பாடலிலும் வந்ததாக தெரியவில்லை. நிறையப் பாடல்கள் வார்த்தைகள் தொலைந்தே போகும் அளவுக்கு இசையின் இரைச்சல் மிஞ்சும் ஆனால் அமைதியான திகட்டாத மெல்லிசையோடு உணர்வுபூர்வமான குரல், வலிமை மிகுந்த வரிகள், அழகிய ஒளிப்பதிவு, இயக்கம் என்று
இந்தப் பாடல் என் பார்வையில் வித்தியாசப்பட பல காரணங்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலைக் கேட்கும் போது இல்லாத அமைதியில் மனதை கொண்டு செலுத்துவதாகவும் உணர்வேன்.

புது பாடலாக இருந்தால் பரவாயில்லை ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த பாடலைப் பற்றி என்ன விவரிப்பு என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு என்றும் திகட்டாத எப்போதும் சுவைக்கும் பாடல் இது.

நீங்களும் பார்த்துக் கேட்டு மகிழுங்கள்:

ஒரு தெய்வம் தந்த பூவே...

Tuesday, April 03, 2007

கப்பலுக்குப் போன மச்சான் - வாசிப்பனுபவம்

வெளிநாடு போக எப்படியெல்லாம் அல்லல்பட வேண்டியுள்ளது, எத்தனை சிரமங்களையும் வாழ்வின் கரடுமுரடான பாதைகளையும் கடக்கவிருக்கிறது என்பதைப் புலம்பாமலும், சோகத்தைக் கொட்டிச் சாகடிக்காமலும், தனக்கே உண்டான மெல்லிய நகைச்சுவையோடு வடித்திருக்கிறார் நாகூர் ரூமி. மும்பாய்க்கே அழைத்து சென்று அவருடன் சுற்றச் செய்து கழிப்பறை பிரச்சனையிலிருந்து சாப்பாடு- உறக்கப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் விவரிக்கிறார்.வெளிநாடு சென்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாடு செல்ல கஷ்டப்படுகிறவர்களுக்கும் என்று சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கும் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற இந்தக் குறுநாவல் சந்தியா பதிப்பக வெளியீடு.

படிப்பவருக்கு 'வெளிநாடு கனவே உனக்கு வேண்டாம்' என்று பயம்காட்டியிருந்தாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை. எத்தனையோ படித்த இளைஞர்கள் இன்றும் வெளிநாடு செல்ல பெட்டி கட்டிவிட்டு பெட்டி பெட்டியாக இடைத்தரகரிடம் பணமும் கொடுத்து விட்டு ஏமாற்றப்படுவது மறைக்க முடியாத ஜீரணிக்க முடியாத உண்மை]

இது கதையா அல்லது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவமா அல்லது உண்மைச் சம்பவத்தில் கற்பனை கலந்ததா அல்லது சம்பவங்கள் திணிக்கப்பட்டுள்ள உண்மையா என்று குழம்பவே தேவையில்லை. இது அக்மார்க் உண்மை சம்பவங்கள், உண்மை கதாபாத்திரங்களாகத்தான்
இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

வெளிநாடு போவதற்கு முன் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் விவரிக்காமல் நடுநடுவே சில சுவாரஸ்ய தகவல்களும், தகவல்கள் தகவலாக மட்டும் துண்டாக இல்லாமல் கதையோடு ஒட்டியிருக்கும் இயல்பும் நம்மை அந்த கதைக்குள்ளேயே வைத்திருக்கும் யுக்தியும் ரூமி எழுத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* வயிற்றுக் குணவில்லாதபோது சிறிது இலக்கியச் செவிக்கும் ஈயப்படும்
* எம்மி மிதித்து ஏனென்று கேட்காத வாரணாசியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் தமிழ்நாடு! வாரணாசி புனிதஸ்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புனிதப் பயணிகள்! புனித வளையல்கள்! புனித மிதி!

இப்படி மெல்லிய நகைச்சுவையைப் பட்டியலிட்டால் முழு நாவலையும் எழுதவேண்டிவரும். (இதெல்லாம் நகைச்சுவையாக்கும் என்று நக்கலடிக்கும் நகைச்சுவை உணர்வேயில்லாதவர்கள் கேட்டால் நான் பொறுப்பல்ல)

- 'மம்மி ரிடர்ன்ஸ் மாதிரி மச்சான் ரிடர்ன்ஸ்! போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பார்கள் எங்கள் ஊரில். என்னைப் பொருத்தவரை பூவுமில்லை மணமுமில்லை கொண்டு போன பணமுமில்லை.'

- "பணத்துக்குப் பதிலாக பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்திலிருந்தால் நிறைய பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். திறமையை, நேரத்தை, மரியாதையை, அன்பை, உறவுகளை, வயதை, இளமையை என்று எல்லா உன்னதங்களையும் கொடுத்து பணமென்ற இந்த தாளை வாங்க வேண்டியிருந்திருக்காது"

என்று சோகத்தைக் கூட தனது எழுத்தின் திறமையால் லேசாக்கியிருக்கிறார் ரூமி.

தேனீர் கடையில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்ததை "தனது இருப்பை உணர்த்த மனிதர்களின் செவிப்பறைகளை கற்பழிப்பதுதான் ஒரே வழி என்று அவன் முடிவு செய்துவிட்டான்" என்று அழகாக சத்த மாசு தரும் அவஸ்தையைச் சொல்லியிருக்கிறார்.

சென்னை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பூவாசல் தமிழ், நல்ல தமிழ் என்று பல பேச்சு வழக்குகள் தென்படுகிறது. ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தை தவிர்க்க வேண்டிய இடத்திலாவது தவிர்த்திருக்கலாம். யதார்த்தத்தை ஒட்டி வர சேர்க்க வேண்டியுள்ளது என்று பலரும் சொல்லும் சப்பைக்கட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னால். ஆங்கிலமில்லாத பேச்சு யதார்த்ததையே மாற்றுங்களென்றால் எழுத்திலும் கொண்டுவந்து யதார்த்தம் பதார்த்தம் என்கிறார்கள். நாகூர் ரூமி ஆங்கில பேராசிரியர் என்பதால் மன்னித்து விட்டுவிடலாம். நாம் மன்னிக்கும் அளவுக்கு சின்ன ஆசாமி இல்லை அவர், கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பன்முகத் திறமைக் கொண்ட ரூமியின் படைப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றில்லாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துச் சொல்லி வெளிநாடு செல்ல பணம் தந்து ஏமாறுபவர்களையும், வெளிநாடு கனவு கண்டு அதன் பிறகு அங்கு சென்று கஷ்டப்படுபவர்களையும் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. இவர் அனுபவத்தை படிப்பினையாகக் கொண்டு ஏமாறாமல் நீந்தி கரையேறிவிடுவார்களா நம்மவர்கள்? எனக்கு தோன்றியதெல்லாம் வெளிநாடு செல்லும் எல்லோருமே கஷ்டப்படுவதில்லை. சரியான அனுகுமுறையில் விசாரித்து வந்து சேர்வது புத்திசாலித்தனம். நல்ல வேலையில் நல்ல சம்பாத்தியத்தில் குடும்பத்துடன் வாழ்பவர்களை கேட்டுப் பாருங்கள் அந்த மகிழ்வான அனுபவத்தை. இருப்பினும் 'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா' என்று கேட்டால், அது அவரவர் மனதை பொருத்தது என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.அடடா!! கதையைப் பற்றி சொல்ல வந்து கதை வேறெங்கோ போய்விட்டதல்லவா? சரி, விசயத்துக்கு வரலாம்

"அதிர்ச்சிக்கு மனிதர்கள் பழகிடும்போது அது தன் 'அதிர்ச்சி'யை இழந்துவிடுவதைப் பற்றி நாம் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை! குண்டு மழைக்குப் பழகிவிட்டனர் ஆப்கன் குழந்தைகள்." என்று நடு நடுவே வெவ்வேறு விதமான சமூக அக்கறை.

கரீம், சலீம் பாஷா, கமால் என்று பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படிக்கும் போதே அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உருக்கொடுக்க
முடிகிறது. என்னால் மட்டும்தானா அல்லது படிக்கும் அனைவருக்குமா என்று தெரியவில்லை.

படித்து முடிக்கும் போது எல்லா கதாபாத்திரங்களும் நெருங்கிய நண்பர்களாக சொந்தகளாகவே தோன்றுவதால் ரூமி சவுதி செல்லாமல்
பூவாசலுக்கே திரும்பி செல்வது ஜைனப்புக்கு மட்டும் சந்தோஷமில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தான்.

நாவலின் கடைசிவரை மொத்த நாவலையும் தலையில் ஓடச்செய்து, கதாபாத்திரங்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, கடைசியில் கண்களில் நெறிக்கட்டுவது போல் உதிராமல் அலம்பலுடன் நிற்கிறது நீர். நல்ல புதினம் படித்ததும் மனதில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனையை மனதிற்குள் உலாவரச் செய்து கொண்டேயிருக்கும் - நாகூர் ரூமியின் இந்தப் படைப்பைப் போல.

Thursday, November 30, 2006

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா
படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
வரிகள்: வாலி

படத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும்.

சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு தோன்றும், சில பாடலால் சந்தோஷம், சில பாடலால் பயம், சில பாடலால் மன சஞ்சலம், சில பாடலால் பல பழைய நினைவுகள், சில பாடலை கேட்டவுடன் நம்மை அறியாமல் வார்த்தைகள் நம் உதட்டில் ஒட்டிக் கொண்டு அதையே முணுமுணுத்துக் கொண்டும் இருப்போம். சில பாடல் அதில் வரும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து தரும். ஒரு பாடலை பிடிக்க பல காரணங்கள் பல பேருக்கு இருப்பினும், ஒரு பாடலை பிடித்து போக முதல் காரணம் அதிலுள்ள ரம்யமான இசை இணைந்த எளிமையான கவிதை வரிகள்தான் என்பது என் கருத்து.

ஏ.ஆர்.ஆரின் பாடல் எப்போதுமே கேட்க கேட்கதான் இனிக்கும். கேட்டவுடனே பிடித்து போகாது. பல முறை காதில் ஒலித்த பிறகே உதடுகள் உச்சரிக்க தொடங்கும். அப்படி மெல்ல மெல்ல வந்து மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலில் 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் தற்போதையது. நல்ல மெல்லிசை, ஸ்ரேயா கோஷுக்கு தமிழ் பாடம் எடுத்துப் பாட வைத்த பாடல் என்று தோன்றுமளவுக்கு மிக உணர்ந்து பாடியது போல இருக்கிறது அவரது குரலில் தெரியும் உணர்வுகள். ஆனால் இந்த உணர்வுபூர்வமான விசயத்தை திரையில் பூமிகாவின் முகத்தில் துளியும் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமே.


முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?

தன் தலையை தானே தட்டிக் கொண்டு நானா என்று கேட்டிருப்பது அந்த வரிகளின் அழுத்தம் ஒலிக்கும் அளவுக்கு உணர்வுகள் இல்லாமல் ரொம்ப லேசாக, விளையாட்டாக உச்சரித்திருப்பது போல் உள்ளது பூமிகாவின் நடிப்பு.

நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..

ஷ்ரேயா எந்த கஷ்டமும்படாமல் சுலபமாக பாடியிருப்பதாகவே தோன்றுகிறது பாடலை கேட்கும் போது. ஆனால் குரலில் அந்த நுணுகங்களை கொண்டுவர ரகுமான் எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார், புரியவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரென்று ஷ்ரேயாவையும் ஏ.ஆர்.ஆரையும் கேட்டால்தான் தெரியும்.

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த ஆ.... ஆ... ஹாஹா...


குழுவினர் பாடும் இந்த ரங்கோலி இடம் இனிமை. வானவில் கீழ் வந்து ஒரு சுற்று சுற்றுவதும், பாட்டில் வரும் இயற்கை சூழலும் நன்றாக வந்திருக்கிறது. பூமிகா கால்பந்தாட்ட திடலுக்கு வந்து குலுங்கி ஆடுவது அழகு, டைரி மில்க் விளம்பரத்தை நினைவுப்படுத்துகிறது.

பூவைத்தாய் பூவைத்தாய்
நீ பூவைக்கோர் பூவைத்தாய்
மன பூவைத்து பூவைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஹோ..

தேனீ நீ மழையில் ஆட
நான் மான்தான் நனைந்து வாட
என் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஹோ

வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை..ம்

-இந்த வரிகள் எத்தனை முறைக் கேட்டும் சரியாக விளங்கவில்லை

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..ஆ

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நான் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமாஆஆ

அருமையான உவமை வரிகள். நிலவை வைத்துக் கொண்டு கவிஞர்கள் என்னமா எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணம். இந்த இடத்தில் பூமிகாவின் கண்களை நெருக்கமாக காட்டியிருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.

தேன் மலை தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமோஓஓஒ

இந்த இடத்தில் தவறாமல் சாய்ந்துவிட்டார் பூமிகா சூர்யா தோள் மீது

நீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்திடலாம்..

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த
(2 முறை)


சூர்யா - பூமிகா காதல் ஜோடியின் நெருக்கத்தை இந்த ஒரு பாடலில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் என்.கிருஷ்ணன்.

ஏ.ஆர்.ஆரின் மெல்லிசை, ஷ்ரேயாவின் குரல் வளம், வாலியின் வரிகள், எனக்கு பிடித்த சூர்யா எல்லாம் கலந்து மனதில் நிற்கும் பாடல். பாடலை கேளுங்கள் பார்த்தால் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கு ;-)

பாடலை பார்க்க:


பாடலை கேட்க:
முன்பே வா.. பாடலை இறக்க
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி