Thursday, October 13, 2022

சிறுபான்மையினரின் மொத்த குரல் ‘நட்சத்திரம் நகர்கிறது’


ஒரு பெண் தன் காதலுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள், அதுவே அவன் வேண்டாமென்றான பிறகு, அவன் முன்னாள் காதலனாக ஆனவுடன் எப்படி விலகி நிற்கிறாள், அதே சமயம் அவனுடன் இணைந்து வேலையும் செய்கிறாள். தன்னை விரும்புகிறான் என்று தெரிந்தும் அதைச் சட்டை செய்யாமல் நட்பாக மட்டுமே பழக முடிகிறது அவளால். ஆணென்ற பாலின பேதமில்லாமல் தூய்மையான நட்பை மட்டுமே முன்னிறுத்தி சகஜமாக இருக்க முடிகிறது அவளால். தன்னைக் கடினமானவளாகக் காட்டிக்கொள்ளும் அவள், தன்னை ‘அம்பேத்கரைட்’ என்று வலிமையாக முன்னிறுத்துபவள், அதே சமயம் உள்ளே உருகுகிறாள், எளிதாக உடையக்கூடியவளாக மென்மையானவளாகவும் இருக்கிறாள், எதற்காக யாருக்காக என்று அறியாமலே. தான் ‘சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி’ என்கிறாள் . அவளுக்கு உளவியல் ரீதியாகச் சிக்கல் இருக்கிறது. சிறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளின் தாக்கங்கள் அவளுடைய வாழ்க்கை நெடுகிலும் பயணம் செய்து, எல்லா உறவுகளின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது. இப்படி எல்லாமுமான கலவைதான் ரெனே. அதனை மிகவும் சிறப்பாக உடல்மொழியிலும் கண்களிலுமே பேசியிருந்தார் துஷாரா.


முதல் காட்சியில் காட்டப்படும் சண்டை மேலோட்டமாகப் பார்த்தால் அவள் அவனைத் தூங்கவிடாமல் செய்கிறாள் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஒரு காட்சி மட்டுமே அவர்களின் பிரிவிற்கான காரணமில்லை. அந்த ஒற்றைக் காட்சியில் இருவரின் உள்ளுணர்வையும் சம அளவில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதையே மற்றொரு காட்சியில் - பல சலசலப்பின் வெடிப்பே எங்கள் மனமுறிவு என்றுணர்த்தியிருப்பார் இனியனாக வரும் காளிதாஸ்.
இப்படி வசனங்களின் மூலமாக மட்டுமே பல விதமான மக்களிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைப் பற்றிப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மேடை நாடகத்தின் கலை அமைப்பு, சுவரோவியங்கள் வண்ணங்கள் என்று மிரட்டியிருக்கிறார் ஜெயரகு. பின்னணி இசையைக் கேட்கும்போது அதுவும் பெரும்பாலான இசைஞானியின் இசையை உட்புகுத்தி விளையாடியது யாரென்று தேடிப் பார்த்தால் டென்மா என்கிறது கூகுள்.
அர்ஜுனாக வரும் கலையரசன் தன் காதலை அவள் அங்கீகரிக்கும் முன்பாகவே தன் வீட்டில் சொல்லும்போது, ”அவங்க என்ன ஆளுங்க?” என்று அம்மாவாக வருபவர் குடும்ப எதிர்ப்பை
அருமையாக
வெளிக்காட்டியிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை அவர் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியொன்றே படத்தின் தரத்தைப் பற்றி சொல்ல போதுமானதாகிறது.
’காதல்’ பற்றிய பலவிதமான புரிதல்களை, அதனுடன் ஒரு தொகுப்பாகவே கூட வரும் சாதி மத பேதங்களை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, ஓரின ஈர்ப்பு, நடைமுறை குடும்பக் கட்டமைப்பின் பிரச்சனை என்று எல்லா வகைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்து அனைத்து சிறுபான்மையினரின் மொத்த குரலாக ஒலிக்கிறது ‘நட்சத்திரம் நகர்கிறது’. நம்மையும் மாற்று சிந்தனைக்கு நகரச் செய்கிறது.

Wednesday, October 12, 2022

துபாய் வேலை

 நான் வேலை தேடி துபாய்க்கு மூன்று மாத கால விசாவில் வந்திருந்தபோது, அந்தக் காலத்தில் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலையே எனக்குத் தந்தனர் - ‘திருமணம் முடித்து இங்கு வா அதன் பிறகு வேலைக்கான விசா தருகிறோம்' என்று. பெரிய நிறுவனங்களிலேயே கூட, திருமணம் ஆகாதவர்களுக்கு வேலைக்கான விசா தருவதில் சிக்கல் இருந்தது. விசிட் விசாவே திருமணமாகாதவர்களுக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நான் சொல்வது 1997-இல். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்தேன். அதிலேயே பலவித அனுபவத்தையும் பெற்றிருந்தேன். என் குடும்பத்தைத் தவிர வெளி நபர் என்று என்னை ஆதரித்தது நஸீரா மாமியும் ஹாஜா மாமாவும்தான். ’நல்ல வேலையா கிடைக்கத்தான் தாமதமாகுது, கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்’ என்ற உற்சாக வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய மகள் Sameema Mansoor எனக்கு உற்ற தோழியானாள். வார இறுதிகள் அவர்களுடனான சுற்றுப்பயணங்களென நாட்கள் நகர்ந்தன.

’வேலைக்கான விசா கிடைக்காவிட்டாலும், நீ வந்ததற்கான செலவையாவது பெற்றுவிட்டுப் போவதற்கான வழி செய்யவேண்டு’மென்று தனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் என்னை வேலையில் சேர்த்துவிட்டார்கள் ஹாஜா மாமா. அப்போது அவர்கள் ஈடிஏவில் நல்ல பொறுப்பில் இருந்தார்கள். ஒரு மாத காலம் அங்கு வேலையில் இருந்தேன். அதன்பின் ஜீனத் பேப்பர் நிறுவனத்திலும் ஒரு மாதம் வேலையில் இருந்தேன். அந்த மேலாளரும் ‘நம்ம பையனுவ உன்கிட்ட திறமையக் காட்ட நிக்கிறானுவ, வேலையப் பார்க்க மாட்றானுங்க. உன் நல்லதுக்குதாம்மா சொல்றேன், நீ கல்யாணத்த முடிச்சிட்டு வா, உன் மாப்பிள்ளைக்கும் சேர்த்தே வேலை தரோம்’ என்று வேலை தர இயலாமையை நாசூக்காகச் சொல்லி விட்டார். தற்காலிகப் பணியில் இருக்கும்போது ‘இது நிரந்தரமல்ல’ என்று மனது எனக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தது, நாட்களும் கரைந்து கொண்டே சென்றன.
தொன்னூறு நாட்கள் முடிவதற்கு இரண்டு தினங்களே இருந்த நிலையில். மற்றொரு விசிட் விசா எடுத்து இன்னும் வெவ்வேறு இடங்களில் முயற்சி செய்யலாம்தான். ஆனால் விசா யார் தருவார்கள்? ஹாஜா மாமாவிடம் முறையிட்டேன். அவர்களுக்கும் தெரிந்தே இருந்தது, என் நாட்கள் முடிவு பெறப் போகின்றன என்று. என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் தன் சக்திக்குட்பட்டுத்தானே எதனையும் செய்ய இயலும்?
திருமணமாகாதவருக்கு விசிட் விசா என்பது பிரச்சனையான விஷயம், தனி நபராக விசிட் விசா எடுக்க இயலாது, ஏதேனும் பெரிய நிறுவனத்தால் மட்டுமே விசா தர இயலும். அப்படியான சூழலில் இருக்கும் போது ஒரு நேர்முகத்திற்கான அழைப்பு வந்தது. சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் எனக்கான வேலை உறுதியானது. வேலைக்கான விசாவிற்கும் பிரச்சனையில்லை என்றார்கள். காரணம் அது ஷார்ஜா ஆட்சியாளரின் குழுமம் - அல் காசிமியா குரூப். ஆனால் அவர்கள் வேலைக்கான விசா விண்ணப்பித்து வர ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகும், ஆகையால் மற்றொரு விசிட் விசா எடுத்துவிடு என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள்.
வேலை கிடைத்துவிட்டது என்று சந்தோஷத்தையுமே அனுபவிக்க இயலவில்லை, குழப்பத்தில் இருந்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ‘ச்சீ ச்சீ துபாய்ப் பழம் புளிக்கும்’ என்று ஊருக்குச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன், வேறு வழியில்லாமல். இன்னும் ஓரிரு நாட்களில் வெளியேற வேண்டுமென்ற நிலையில், திடீரென்று ஹாஜா மாமா அவதரித்தார்கள். ஆம், எனக்கு அப்படித்தான் தோன்றியது. இறைவன் உதவி செய்ய நினைத்துவிட்டால், ஒரு சிறந்த கருவியைத் தேர்ந்தெடுப்பானாம், அப்படித் தோன்றியதுதானே அவதாரங்களெல்லாம்? அப்படியான அவதாரமாக அவர் வந்து ஒரு ’கவர்’ தந்து, உடனே டிக்கெட் எடு என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கவரினுள் பார்த்தால் எனக்கான விசிட் விசா. அதிர்ச்சியும் பேரானந்தமும் இணைந்ததில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தேன். கண் மூடி நான் கண்ட கனவெல்லாம் கண் முன்னே நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கிறது, எனக்கு இங்கு ‘ரிஸ்க்’ இருக்கிறது என்று புரிந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்தியவளாகப் பயணத்தைத் திட்டமிட்டேன்.
இப்போது உள்ளது போல் அப்போதெல்லாம் நாட்டிற்கு உள்ளிருந்தே விசாவை மாற்ற இயலாது. ‘கிஷ்’ என்ற நாட்டிற்கோ அல்லது ஓமான் நாட்டிற்கோ சென்று புதிய நுழைமதியில் நாட்டிற்குள் வர வேண்டும். கிஷ்ஷுக்கு செல்வதே விலை குறைவாக இருந்தது. அங்கே சென்று விசா மாற்றி வந்து, அதன்பிறகு சில வாரங்களில் வேலைக்கான விசாவில் மாறினேன். வேலையும் ஓட்டமுமாக நாட்கள் கழிந்தன. இயந்திர வாழ்க்கைக்குப் பழகிப்போனேன். என் கணவரும் துபாய் வர ஹாஜா மாமாதான் காரணம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். இப்படிப் பலரை உயர்த்தி விட்டிருக்கிறார் அவர்.
என் வாழ்க்கையில் இது மிக முக்கியமான அத்தியாயம். அன்று சரியான நேரத்தில் ஹாஜா மாமா விசா பாடுபட்டு வாங்கித் தராமல் இருந்திருந்தால் இன்று நான் துபாயில் இருந்திருக்க முடியாது, துபாயில் நிறுவனம் தொடங்கியிருந்திருக்க முடியாது, அதுவும் பிறருக்கு விசா தரும் டிராவல்ஸ் நிறுவனமே நடத்துவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவையும் மாமியையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே. நானும் சமீமாவும் இன்னும் தோழிகளாக இருப்பதால் இந்தச் சந்திப்பு சாத்தியமானது.


Tuesday, October 11, 2022

நவராத்திரி


 கீரைவிற்கும்

கண்ணமாவின் தலையில்


கொலு பொம்மைகள்

நவராத்தி நாட்களென்று

பொம்மைகள் விற்பதை

வியாபாரமாக்கியிருந்தாள்

சாமிகளை தலையில்

சுமந்தவளாக சப்தத்துடன்
கூவி விற்றாள்
சிவன் இருக்கிறான் என்றாள்
கண்ணன் ராதை உண்டா
என்றனர்
விநாயகரை நம்பிக்கையோடு
வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தால்
தும்பிக்கை சரியில்லையாம்
சிரித்த முகத்துடன் சாமிகள்
இவள் சிரிப்பிற்கு
விலைப் போகவில்லை
விற்காத சாமிகளும்
இவள் வேதனையை
நோக்கவில்லை
’சாமி சாமி’ என்று
பொம்மைகளை விற்றாள்
ஆசாமிகள் யாரும் வாங்கவுமில்லை
இத்தனை சாமிகள்
இருந்தும்
அவள் குழந்தையின்
பசியை யாருமே
போக்கவில்லை.
-ஜெஸிலா பானு

Monday, October 10, 2022

நசீமா ரசாக்கின் ‘மராம்பு’

 


'மராம்பு' தலைப்பைப் பார்த்ததும் அப்படியென்றால் என்னவென்று தேடினேன். வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. முதல் இரண்டு அத்தியாயங்கள் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. வெறும் 100 பக்கங்கள் என்பதால் உடனே முடித்துவிட்டேன். அதனாலேயே கீழேயே வைக்க முடியாத அளவுக்கு இருந்ததென்று சொல்ல முடியாது. நூலாசிரியரின் முந்தைய படைப்பான 'என்னைத் தேடி' யை விடப் பல மடங்கு சிறப்பான படைப்பு இது என்று உறுதியாகச் சொல்ல இயலும். பெண்களை மட்டுமே வைத்துப் படைத்திருக்கும் படைப்பு. இதை ஆண்கள் வாசித்தால் அவர்கள் எப்படி இதனை உள்வாங்குவார்கள் எனத் தெரியவில்லை.

மிக எளிமையான எழுத்து நடை. அடுத்தப் பதிப்பைப் பிழை திருத்தி வெளியிட வேண்டும். மிகவும் சாதாரணமான கதைதான். புதிய விஷயமென்றோ, திருப்பங்கள் என்றோ, எதிர்பாராத நகர்வென்றோ எதுவுமேயில்லை. விக்ரமன் இல்லை இல்லை விசுவின் படம் போல் அல்லது சின்னத்திரை நாடகம் மாதிரி பொழுதுபோக்காக 'அழு மூஞ்சி' கதையாக வயலின் சத்தம் காதைப் பிளக்கிறது.
வள்ளி, ஜானு, மித்ரா, பூஜா, ஆஷியா என்ற பெண்களின் துன்பம் நிறைந்த கதை. வெளிநாட்டில் தனியாக வெவ்வேறு காரணங்களுக்காக வேலைக்கு வந்து கஷ்டப்படும் பெண்களின் கதை.
குறுநாவலில் எதையும் விவரிக்க முடியாவிட்டாலும், அதனைச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் விளங்கும்படியும் கையாண்டுள்ளார் நூலாசிரியர். ஏஜெண்ட்களால் ஏமாற்றப்படுவது பற்றியும் பதிந்திருப்பது சிறப்பு.
கனவு தேசம் அல்ல இவர்களுக்குத் துபாய் கண்ணீர் தேசம் என்பதை ஆழமாக நம் மனதில் பதிய முயன்றிருக்கிறார்.
போகிற போக்கில் வாசிக்கலாம். நல்ல முயற்சி நசீமா ரசாக் Naseema Razak . மனமார்ந்த வாழ்த்துகள்.




Saturday, October 08, 2022

தெரிசை சிவாவின் ருபினி

போன வாரம் நடந்த நிகழ்வாக இருந்தாலும் நேற்று நடந்ததுபோல் இன்னும் பசுமையாக உள்ளது. அஃபீனாவின் Afina Arul பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தெரிசை சிவாவின் Siva Sai ருபினி பற்றி ஒவ்வொருவரும் பேசியதும் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.


சிவாவின் 'சன்னதம்' வாசித்துவிட்டு அதே சாயலில் வரவிருக்கும் ருபினியை ஆவலாக எதிர்நோக்கினேன். வாசிக்கும் முன்பே அதைப் பற்றி பேச வேண்டுமென்று இருந்தேன். காரணம் சிவாவின் எழுத்து மீதான நம்பிக்கை. அவருடைய ‘குட்டிக்கோரா’ பற்றியும் எழுதியிருக்கிறேன். அதில் தென்பட்ட குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அதே போன்று ‘திமில்’ வந்தது. நூலாசிரியரின் பலமே அவருடைய வட்டார வழக்கும், நகைச்சுவையும்தான். அதையெல்லாம் முற்றும் தொலைத்து வேறொரு பரிமாணம் எடுத்திருக்கிறார். மொழிநடை வாசிக்கக் கூடியதாகவும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் முன்னோக்கிச் செல்வதாகவும் இருந்தது. ஆனால் அவர் உருவாக்கிய புதிய உலகத்தில் என்னால் சஞ்சரிக்கவே முடியவில்லை. மாறாக அந்த உலகத்தினால் வரும் பலன்கள் என்னவென்று கேள்வியெழுப்பவே முடிந்தது.
‘ஹாரி பாட்டர்’ வாசிக்கும் போது அலாதியான கற்பனையோடு வாசித்தேன். என் கற்பனையைக் கொஞ்சம் திருப்திப்படுத்தும் வகையில் திரையில் வந்ததைக் கண்டு வியந்தேன். ’ஸ்டிரேஞ்சர்ஸ் திங்’, ‘லாக் & கீ’, ‘பிஹைண்ட் ஹெர் ஐஸ்’ இப்படியான வெப் சீரீஸ் பார்க்கும்போது எப்படி இப்படிலாம் யோசிக்கிறாங்க, இப்படியான உலகம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற கற்பனை விரியும். அதில் அப்படியான வேறு உலகம் இருப்பதாக அல்லது அப்படியெல்லாம் உலகத்தில் ஏதோவொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும் விதத்தில் நம்ப வைத்திருப்பார்கள். கே. என். சிவராமன் சிவராமனின் ‘கர்ணணின் கவசம்’ வாசிக்கும்போதும், இப்படித்தான் கோவில்களைக் கட்டி இருப்பார்களோ, இன்னும் தெரியாத ரகசியங்களை யாரோ ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று அதைச் சுற்றியே மனதில் எண்ணங்கள் தோன்றும்.
அப்படி நம்பும்படியாக, அல்லது இப்படியான காமமில்லா உலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்கும் அளவிற்கு ‘ருபினி’ உலகம் அமையவில்லை. அமானுஷ்யம், அறிவியல் ஆராய்ச்சி, வசியம், கூடுவிட்டு கூடு மாறுதல், நாடி ஜோசியம், புதிய உலகம் என்று ’ருபினி’ புதினத்தை வாசிக்கும்போது இயல்பாகவே மற்றதோடு ஒப்பிடாவிட்டாலும் இப்படியான உலகத்தின் பயனைச் சரியாக விவரிக்கவில்லையோ, அல்லது பிரமிக்க வைக்கும் அவர் கற்பனையை அவருடைய எழுத்து கடத்தவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. அதுமட்டுமல்லாது வலிந்து திரிந்து சேர்த்த உருவகங்கள் - உதாரணமாக, புழுதியில் சிக்கிவிட்ட மீன் வலையைப்போல் ஏராளமான மர்ம முடிச்சுகள். குப்பைத்தொட்டியில் கிடந்துருளும் அழுக்குப் பூனையைப் போல்... மனமெங்கும் பற்பல கேள்விகள் உருண்டெழும்பிய வண்ணமிருந்தன. மீன் தொட்டியில் பரிதவிக்கும் மீன் குஞ்சாய் அங்குமிங்கும் படபடத்துக் கொண்டது, இப்படியான வாக்கியங்கள் ஏதோ ஒட்டாது தனித்து நிற்பதாகத் தோன்றியது. சொன்னதே திரும்பத் திரும்பச் சொல்லி வலியுறுத்துவதான அல்லது பிரச்சாரத் தொனியும் எழுத்து நடையில் உள்ளதால் உள்வாங்கவும் கடினமாக இருந்தது.
ருபினியை வாசிக்கும் உங்களால் இதையே வேறுவிதமாகப் பார்க்கவும் முடியும். வாசியுங்கள். வாசித்து உங்கள் கருத்தையும் பகிருங்கள். வாழ்த்துகள் சிவா. இன்னும் நிறையப் புதினங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

PC: Subhan Peer Mohamed 



இளம் இசைக் குயில்

 நல்ல திறமை எங்கிருந்தாலும் பாராட்டுவதே அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் / கானல் / Kaanal குழுமத்தின் பண்பு. afina_arul அபீனா அருள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8-ல் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டவர். நம்ம அமீரகத்தைச் சேர்ந்தவர் இறுதிச் சுற்று வரை வந்ததே எங்களுக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும். அவருக்குப் பாராட்டு விழா நிகழ்வைச் சிறிய அளவில் எங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து அபுதையில் சிறப்பாக நடத்தினோம். சிறிய கூட்டத்திற்கெல்லாம் வருவார்களா என்று நினைத்தோம். பெரிய மனசுக்காரர்கள் அதெல்லாம் அவர்கள் நினைக்கவே இல்லை. எனக்குத் தெரிந்து வேறு எந்தப் பெரிய அமைப்புகளும் அவரை இன்னும் கெளரவிக்கவில்லை. நாங்கள்தான் தொடக்கமென்று நினைக்கிறேன். எங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் நினைக்கிறேன்.



FJ Tours & Travels நிறுவனம் தொடங்கி இதுநாள் வரை யாருக்கும் நினைவுப் பரிசுத் தர வேண்டுமென்ற எண்ணம் என் கணவர் Riyas Ahamed ரியாஸுக்கு தோன்றியதே இல்லை. இந்தக் குழந்தையின் பாட்டை அவருக்குக் காட்டி, இவருடைய பாராட்டு விழாவிற்குதான் செல்லவிருக்கிறோம் என்றுதும் ’அவருக்கு நினைவுப் பரிசு வழங்குவோமா?’ என்றார் முதல் முறையாக.
அபீனாவின் குரலில் அவ்வளவு வசீகரம், என் மகளிடம் அவள் பாடும் காணொலியைக் காட்டியபோது அவர்தான் பாடுகிறாரா இல்லை ’லிப்சிங்’கா என்றார். அவ்வளவு முதிர்ச்சியான, உச்சரிப்பு சுத்தமான இனிமையான குரல். அவர் முகமும் உடல்மொழியும் அத்தனை கதைகளைப் பேசின. நான் ஓர் அதிசயக் குழந்தையைப் பார்ப்பதுபோல்தான் மிகவும் மரியாதையாகவும் கனிவுடனும் பார்த்தேன், ரசித்தேன், பாராட்டினேன். அந்தக் குழந்தைக்கு அவருடைய பெற்றோர்கள் Jency Satheesh எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து அவருக்கு ஊக்கம் தருவது அவருடைய திறமைக்கு வலிமை சேர்க்கிறது. இன்னும் அவள் பல சிகரங்களைத் தொட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.

Sunday, October 02, 2022

தன்னம்பிக்கை மங்கை

 தங்கமங்கை 23 ஆம் ஆண்டு சிறப்பிதழில் 'மங்கையரின் மறுமலர்ச்சியே மண்ணுலகின் வளர்ச்சி!' என்று ஏழு பெண்களைக் குறித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் அடையாளப்படுத்தியுள்ளனர். 'தன்னம்பிக்கை மங்கை'யாக நானும் மிளிர்கிறேன்.  

ரம்யா ரவிக்குமார் டார்லிங்குக்கு நன்றி. என்னமா எழுதுறாங்க!!

என்னைப் பற்றியான்னு நானே ஷாக்காகிட்டேன். நன்றிம்மா.





Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி