Wednesday, April 11, 2012

கனவான நிஜங்கள்


எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் `இது கனவுதான் கனவுதான்` என்று எனக்குள் நானே சத்தமாகச் சொல்லி இன்றும் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் மனதிற்குத் தெரியும் ஆனால் `பீறிட்டு வரும் அழுகையை அடக்குவது எப்படி?` என்று சிறப்புப் பயிற்சி பெறாதவளாக, அது பற்றி யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று இன்னும் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலர் ஆறுதல் சொல்ல வந்தால் எப்படி என்னுடைய எதிர்வினையிருக்குமென்று எனக்கே தெரிவதில்லை. சமயங்களில் சிரித்தவாறே தலையாட்டி அப்படியே பேச்சை மாற்றிவிடும் நானே, சிலர் என்னிடம் இது பற்றி விசாரிக்கவில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறேன். என் வருத்தத்தில் நியாயமில்லாமல் இல்லையே. எல்லோரிடமும் எல்லாவற்றையும் நாம் எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்ப்பவர்களே அதைப் புரிந்து நடந்து கொள்வதில்லை எனும் போது மனது வலிக்கவே செய்கிறது. மனம் ஒரு குரங்கு என்று எதை வைத்துச் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் என் விஷயத்தில் அது சரிதான், இல்லையென்றால் இப்படி ஒரே விஷயத்திற்கு இப்படி அப்படி என்று மாறி மாறி நினைக்குமா என்ன?

யார் வீட்டில் தான் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை என்று யோசிக்கும் நான், ஏன் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் யோசிக்கின்றேன். என்னை மிகவும் தைரியசாலியானவளாக, மனதிடம் உடையவளாக காட்டிக் கொண்டாலும் இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பலவீனமானவள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். பொங்கி வரும் கண்ணீரைத் தனியாக உதிர்த்துவிட்டு உரத்த குரலில் ஆறுதல் சொல்லும் மடமைமிக்க தைரியசாலி நான். இந்த மனப்போராட்டத்திலிருந்து விடுபட என்னை நானே வெவ்வேறு விஷயங்களில் அதிகமாகவே ஈடுபடுத்திக் கொள்கிறேன். என் தலையில் நானே பணிப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறேன். அளவுக்கு அதிகமாக சிரிக்கிறேன். ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதாக பம்மாத்து புரிகிறேன். எப்படி இப்படி மோசமான சூழ்நிலையிலும் இவ்வளவு கச்சிதமாக யாருக்கும் தெரியாத அளவுக்கு நடிக்கிறேன் என்று எனக்கு நானே சபாஷும் சொல்லிக் கொள்வதுண்டு. மிக மிக நெருக்கமானவர்களுக்குக் கூட புரியாத அளவுக்குத் திறமையாக சூழல்களைக் கையாண்டாலும் சமயங்களில் தனிமையில் அழுது புலம்புவதை அவர்களும் தெரியாதது போலவே என்னைவிட சாமர்த்தியமாக நடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாமலில்லை.

வாழ்க்கையென்றால் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்றும் முடிவுக்கு வரத்தான் செய்யுமென்று பொதுப்படையாகச் சொன்னாலும், ஏன் இப்படியான வாழ்க்கை என்று சலிப்படையவே செய்கிறது மனது. முதல் முதலில் துபாய்க்கு அவர்களை விட்டுப் பிரிந்து வரும் போது வாழ்க்கையில் நான் என்றுமே வடித்திடாத அளவுக்குக் கையில் வைத்திருந்த கைக்குட்டையும் கொள்ள முடியாத அளவுக்கு ஈரம் சொட்டியது. அந்த இருபதாவது வயதில் தற்காலிகப் பிரிவென்றாலும் அது என் முதல் பிரிவு என்பதால் அப்படியிருந்தது. அதன் பிறகு ஊரில் நெருக்கமானவர்கள் இழப்பென்றாலும் அந்த நொடிக்கு வருத்தப்பட்டுவிட்டு, அவர்களுக்கு ஆறுதலாக ஒரு தொலைபேசி செய்துவிட்டு வேலைகளைத் தொடர்வேன்.
என் நெருங்கிய தோழி இழப்புக்குப் பிறகு இதைவிட பெரிய இழப்பு வாழ்க்கையில் நான் சந்திக்கவே கூடாது என்பதாகவே என் எல்லா நேர துவாவும் (பிரார்த்தைனையும்) இருந்தது. என் தாய் மாமா, சாச்சா, கன்மா என்று நிகழ்ந்த இழப்புகளெல்லாம் தவிப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதே தவிர இப்படியான மனதளவு பாதிப்பை நான் சந்தித்ததில்லை. ஊருக்குச் செல்லும் போது அவர்கள் இல்லாத வெறுமையை உணரும் போது அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் எதையும் நேரில் பார்க்காததாலோ என்னவோ அவர்கள் இருப்பதாகவே கருதிக் கொள்வேன். விமான விபத்தில் குடும்பத்துடன் பாக்கியவானாக சென்று விட்ட நண்பனை இன்னும் நினைத்தால் கண்கள் ஈரமாகிவிடும். என் கண்கள் உறுதியான முல்லை பெரியார் அணையில்லை இப்படியான திடீர் இழப்புகள் அதுவும் எதிர்பாராத இழப்புகளை நேரிடும் போது வற்றாத ஊற்று அருவியாக மாறிவிடுகிறது. என் சாச்சி அவள் மகளை இழந்த போது அவளுக்கு யாரும் ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்த போது நான் மட்டும் இறுகியவளாக `எல்லாம் நன்மைக்கே, அவள் உலகில் கஷ்டப்படுவதை விட இந்த முடிவு அவளுக்கு சாந்தியை தரும்` என்று பெரிய மனுஷியாக சமாதானப்படுத்திய நான் எனக்கென்று வரும் போது சமாதானப்படுத்த வருபவர்களிடமிருந்து ஓடி ஒளிகிறேன்.

எல்லோரும் பயந்து கொண்டிருந்த வேளையிலும் கண்டிப்பாக எதுவும் விபரீதம் நடந்துவிடாது என்று உறுதியாக நம்பிக்கை வைத்தேன்... அந்த நம்பிக்கை யார் மீது எதன் மீது என்று இன்னும் புலப்படவில்லை.

இப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வைப் பற்றி யாரும் பேசினால் நகைப்பாகவே உள்ளது. அன்று என் தோழி எனக்கு `இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழிகள்` என்பதாக ஒரு மடல் அனுப்பியிருந்தாள். என்னையும் அறியாமல் அவளை திட்டி `SCAயை எப்படி தடுப்பதாம்? அதற்கு எந்த மருத்துவர்களும் ஒழுங்கான பதில் சொல்ல முடியாது. போகிற உயிர் எப்பவேண்டுமானாலும் போய்விடும் இதெல்லாம் தெரிந்து ஒரு மண்ணாங்கட்டியும் ஆகப்போவதில்லை` என்று பதில் எழுதினேன். அவள் என்னை நேரில் சந்திக்கும் போது `அது ஒரு சாதாரண ஃபார்வேர்ட் மடல்தானே அதற்கேன் இப்படி தெறிக்கிறாய்` என்று முகத்திற்கு நேரே கேட்கும் போது என் கோபத்தைத் தவறான இடத்தில் காட்டியது புரிந்தது. என் கையாலாகாத்தனத்தை யாரிடம்தான் காட்டுவது?

மது அருந்துபவர்கள் அருந்தாதவர்கள், புகைப்பிடிப்பவர்கள் பிடிக்காதவர்கள், நாவை அடக்க முடியாமல் அதிகம் சாப்பிடுபவர்கள் மிகக் கட்டுபாட்டுடன் சாப்பிடுபவர்கள் என்று எந்த பாரபட்சமும் `மரணத்திற்கு`த் தெரிவதில்லை. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டதென்றால் சுலபமாக உயிரை பிடுங்கிக் கொண்டு போய்விடும், கூடவே உயிர் வாழ்பவர்களின் சந்தோஷத்தையும். நான் மரணமில்லாத வாழ்வை விரும்பவில்லை ஆனால் எப்போது நிகழுமென்று தெரியாத மரணம் உறுதியென்ற வாழ்வை விரும்பவில்லை. நான் மிக சுயநலவாதி அதனாலேயே என் மரணத்தைப் பற்றி நான் பயப்படுவதில்லை மற்றவர்கள் அதுவும் மனதிற்கு நெருங்கியவர்கள் இழப்பைக் கண்டு அஞ்சி ஓடுபவள். இப்போதெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்து பிள்ளையை அறுவை சிகிச்சையில் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்தாலும் எப்போது மரணம் வருமென்று யாராலும் சொல்ல முடிவதில்லை. எல்லோரும் 80 வயதை அடையும் போது வழியனுப்பி, பார்க்க நினைப்பவர்களைச் சந்தித்து, அனுபவிப்பதையெல்லாம் அனுபவித்து கடமைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு உறங்கச் செல்லும் வாய்ப்பிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்றே தோன்றிக் கொண்டிருக்கும் ஒரு கிறுக்குத்தனமான - ஆனால் - எல்லோரும் விரும்பக் கூடிய ஆசை எனக்கும் இல்லாமலில்லை.

எப்படி சாப்பாட்டு இலை சாப்பிட்ட உடன் எச்சிலையாகிவிடுகிறதோ அதே போல எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் இறந்த பிறகு வெறும் சடலம். `அவர்கள்` என்ற வார்த்தையும் `அது` என்று மாறிவிடுகிறது. வீட்டுக்கு வந்தவர்களை எல்லோரிடமும் அறிமுகம் செய்து பேச்சுக் கொடுத்து மகிழ்பவரை இறுதியாகப் பார்க்க அவரைச் சுற்றி வரிசையாக. வரிசையில் நிற்கும் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கென்னவோ மரண வரிசையில் நாம் அனைவரும் நிற்பது தெரிந்தது. நினைவு தெரிந்து யார் சடலத்தையும் பார்த்திராத எனக்கு மிகுந்த அதிர்ச்சி கலந்த பாதிப்பு. வாழ்வின் உண்மையை உரக்கக் காதில் சொன்னது. எப்போதும் மருதாணியும் கையுமாக பளிச்சென்ற உடை அணியும் உம்மாவுக்கு வேற உடுப்பு தந்து கையை மறைத்து உட்கார வைத்திருந்தவரை காண வரும் அனைவரும் `எப்போதும் எங்கேயும் ஜோடியாதானே போவீங்க` என்று ஆதங்கத்துடன் எல்லோரும் ஒரே மாதிரியான ஆறுதல் சொன்னது எரிச்சலை வரவழைத்தது. `நீங்களெல்லாம் இப்படி இருந்தால் எனக்கு யாருமா ஆறுதல் சொல்வாங்க` என்று உம்மா அழுதது இன்னும் காதில் ஒலிக்கிறது. `சாதாரண மாதாந்திர வயிற்று வலி வந்தாலும் எனக்காக அவர் துடிக்கும் அந்த உண்மையான அன்பை இனி யார் உருவில் பார்ப்பேன்` என்று குரலெடுத்து அழும் அக்காவை சமாதானப்படுத்த முடியாமலும், `என் மகள் ரொம்ப நல்ல சமைத்திருக்கிறாள்` என்று ம்மாவிடமும் வருபவர்களிடமும் சொல்லி மகிழ்பவரை இனி எப்போது பார்ப்பேன் என்று ஒவ்வொரு சம்பவமாக அக்கா சொல்லி அழும் போது இப்படியான சின்னச் சின்ன சந்தோஷங்களை நான் தொலைவில் இருந்துவிட்டதால் இழந்திருக்கிறேன் என்று புரிந்தாலும், அதே சமயம் இப்பவே இப்படியிருக்கிறேனே, இவ்வளவு பாதிப்பில் மழுங்கிக் கிடக்கிறேனே அவளைப் போலிருந்தால் என் மூச்சும் நின்றிருக்குமோ அப்படி நின்றிருந்தால் இவ்வளவு வருத்தத்தை உணர்ந்திருக்க வேண்டாமோ என்று நினைக்கும் தருணம் என் மகன் அருகில் வந்து `ஏன் ம்மா அழுறீங்க, நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது` என்று என் கண்ணீருக்குக் காரணமறியாத அந்தப் பிஞ்சு உள்ளத்திற்காக அந்த நொடிக்குச் சமாதானம் ஆனவள் போல் நடிக்க ஆரம்பித்து அந்த நடிப்பை இன்றும் தொடர்கிறேன்.

தொலைதூரத்தில் இழப்புகள் கேட்கும் போதெல்லாம் அவர்களுக்காக மனமார பிரார்த்திப்பேன், வருத்தத்துடன் ஒரு சம்பிரதாய வார்த்தையாக `சபூர் செய்யுங்கள்` (பொறுமையுடன் இருங்கள்) என்று தொலைபேசுவேன். அவர்களுடன் நடந்த சிறந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வேன் அவ்வளவுதான். ஆனால் அந்த `சபூர் செய்யுங்கள்` என்ற வார்த்தையின் பலத்தை அந்த நொடியில்தான் உணர்ந்தேன். அதன் ஆழத்தை அப்போதுதான் கிரகித்தேன். மரண விசாரிப்பு என்று வந்தாலே என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியாமல் திணறும் நான். இன்று எப்படிப் பேசுவது என்பதை அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை பாடத்தைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டாலும் எல்லாமும் கனவாகவேதான் எனக்கு இன்னும் தோன்றிக் கொண்டு இருக்கிறது. இது கனவுதான், அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி