Tuesday, April 30, 2024

மறக்க முடியாத பயணம்

இந்த முறை ஈத் பெருநாள் விடுமுறை சாகசங்களின் தினங்களாக நிறைவடைந்தது. ரமதான் நோன்பை முதல் பத்து நாட்கள் ஓடும், இரண்டாம் பத்து நடக்கும், மூன்றாம் பத்து தவழும் என்பார்கள். எனக்குக் கடைசி ஐந்து நோன்பு நாட்கள் படுத்தே விட்டது. எப்போதும் நான் அவ்வளவு சீக்கிரம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட மாட்டேன். ஆனால் நான் இந்த முறை கடைசி மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். ‘டிரிப்ஸ்’ ஏற்றவும் நேர்ந்தது. ஏதோ சரியில்லை என்ற உள்ளுணர்வு சொல்வதை நான் கேட்கவில்லை.


விடுமுறைக்காக ஒமான் செல்லவிருப்பதை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அப்போது வரவில்லை. எனக்காக மகள் கசாயம் காய்ச்சித் தந்து அதனைக் கண்ணாடி கிளாஸில் ஊற்றும்போது, கண்ணாடிக் குவளை இரண்டாக சம்பந்தமே இல்லாமல் உடைந்ததை வந்து சொல்லும்போது, இது என்ன மூடநம்பிக்கை!? ‘தவக்கல்து அலல்லாஹ்’ என்று இருந்தேன். மறுநாள் காலையில் அதாவது 9-ஆம் தேதி கிளம்பும்போது வாசனைத் திரவியப் பாட்டில் ‘டமாரென்று’ உடைந்து சுக்குநூறானது. பொதுவாக வாசனைத் திரவியக் குப்பிகள் எளிதில் உடைவதில்லை. அறை முழுதும் வாசனையென்று கூட்டி வாரிப் போட்டுவிட்டுக் கிளம்பினோம்.


மொத்தம் நான்கு கார்கள். எல்லையை அடைந்தோம். பாஸ்போர்ட் பையை எடுத்து பாஸ்போர்ட்டை கொடுக்கும்போதுதான் கவனிக்கிறேன் மகனுடைய கடவுச்சீட்டைக் காணோம். இது என்னடா சோதனையென்று வேறு வழியில்லாமல் மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு நாங்கள் மட்டும் பாஸ்போர்ட் எடுக்க வீட்டுக்குத் திரும்பினோம். பார்டரிலிருந்து வீட்டுக்குப் போக ஒன்றரை மணி நேரம், மீண்டும் பார்டர் திரும்பி வர ஒன்றரை மணி நேரம், அதன் பிறகு இரண்டு மணி நேரப் பயணத்தில் இஃப்தாருக்கு முன்பு ஒமானின் ஒரு பகுதியை அடைந்துவிடலாம் என்று விரைந்து ஓட்டி வந்தோம். எல்லோருடைய கடவுச்சீட்டும் சேர்ந்தே இருக்கும், இந்த ஒற்றைப் பாஸ்போர்ட் பள்ளிக்கூடத்திற்கு தேவைப்பட்டதால் எடுத்திருந்ததால் அந்தப் பையில் இல்லாமல் போயிருக்கிறது. அதனை நாங்கள் கவனிக்காமல் விட்டிருக்கிறோம். சரியென்று,  பாஸ்போர்ட்டை எடுத்து கொண்டு மறுபடியும் பார்டரை அடைந்தோம். வழக்கமான சம்பிரதாயங்கள் அனைத்தும் எதிர்பார்த்ததைவிட எல்லாம் சீக்கிரம் முடியவே மகிழ்ச்சியாக எங்கள் வாகனம் 140 கிமி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.


அப்போது எதையோ பார்த்து ஸ்டியரிங்கை திசைமாற்ற அங்கிருந்த இரும்பு தடுப்பில் இடித்து வண்டி குலுங்கி நடுங்கி உராய்ந்து கீறி வண்டியின் ஒரு பக்கம் முழுவதும் நெளிந்து  தூக்கி அடிக்கப்பட்டு முதல் டிராக்கிலிருந்து கடைசி டிராக்கிற்கு வீசப்பட்டு நின்றது. கவிழ்ந்துவிடுமோ என்று நினைப்பதற்குள், கவிழ்ந்துவிட்டது என்று பயந்து குழந்தைகள் கத்தினார்கள். என் காதுகள் அடைத்துக் கொண்டன.  என்ன நிகழ்ந்ததென்றே எனக்கு ஒரு கணம் புரியவில்லை. நல்ல வேளையாக அருகில் எந்த வாகனமுமில்லை. நான் சீட் பெல்ட் போட்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு எந்தப் பாதிப்புமில்லை, என் குழந்தைகள் இங்கும் அங்கும் இடித்துக் கொண்டதால் தலை காரின் ஜன்னல் கண்ணாடியில் முட்டியதில் தலை வீங்கியிருந்தது. உதடும் கொஞ்சமாக வீங்கியிருந்தது. உடனே நான் எல்லா இடத்திலும் தொட்டுப் பார்த்து வீங்கிய இடத்தில் மட்டும் ஐஸ் வைத்து, வலி குறைய உடலை அழுத்திவிட்டு அவர்களை ஆசுவாசப்படுத்தினேன். ஐஸ் பெட்டி எடுத்துப் போனதற்கான காரணமும் என் உள்ளுணர்வுதான்.


என் கணவர்தான் வாய் அடைத்து, நிலை தடுமாறி அதிர்ச்சி அடைந்தவராக அமைதியாக இருந்தார். அந்த அமைதி இன்று வரை நிலவுகிறது. அவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை. விபத்தைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார். மிகவும் பாதுகாப்பாக, தற்காப்பு உணர்வுடன் இருக்கக் கூடியவர். ஏதோ இது நடக்கவேண்டுமென்று நடந்ததா? எனக்கென்னவோ பெரிதாக நடக்க வேண்டியது இத்தோடு முடிந்தது என்று நன்றி சொல்லிக் கொண்டேன்.


அந்த நிமிடத்தில் யாரை அழைப்பது என்று யோசித்தேன். ஒமானில் தெரிந்த நண்பர் சென் பாலன் Sen Balan  அவரும் ஒமானில் இல்லை, தாயகத்திற்குச் சென்றிருந்தார். அவரால் அறிமுகமான Ilango Ramasamy இளங்கோ நினைவுக்கு வர, அவரை அழைத்து விஷயத்தைச் சொல்லி எந்த எண்ணில் போலீஸை அழைப்பது என்று கேட்டேன். அவர் தகவல் தந்ததோடு கவிதா என்பவரின் எண்ணையும் தந்து அவர் அங்கு வருவார் என்றார். இல்லை அதெல்லாம் வேண்டாமென்று எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. கவிதா அருகில் இல்லாததால் அவருக்குத் தெரிந்த சுபாவின் குடும்பத்தினரை அழைக்க, சுபாவின் மகன் நிர்மல் தன்னிடம் பணி புரியும் அரபி பேசும் அய்யனாரை உடன் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். போலீஸும் வந்தடைந்தனர். கார் பதிவு அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை என்று எல்லாவற்றையும் வைத்து போலீஸ் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டுமிருக்க, திடீரென்று அடித்த காற்றில் அட்டைகள் பறந்து சென்றன. இரண்டு போலீஸ்களும், என் கணவரும், அய்யனாரும், நிர்மலும் அதனை நோக்கி ஓடினார்கள். ஒருவழியாகப் புதரில் தஞ்சமடைந்த அட்டைகளைக் கண்டடைந்து எடுத்தனர். அந்தப் பரபரப்பான நேரத்திலும் அந்தக் காட்சி சிரிப்பை வரவழைத்தது.


டயோட்டா பிராடோ வலுவான வண்டி என்பதால் எல்லா அடிகளையும் வண்டியின் உடலில் தாங்கிக் கொண்டதால் பெரிய சேதமில்லை. வண்டி நகரும் நிலையில்தான் இருந்தது. அதனால் அப்படியே வண்டியில் காவல்துறையைப் பின் தொடர்ந்து இப்ரி என்ற ஊரில் உள்ள காவல்நிலையம் வந்தடைந்தோம். வரும் வழியில் ஒரு பள்ளிவாசலில் நிறுத்தி நோன்பையும் திறந்து கொண்டோம். விஷயத்தைக் கேள்விப்பட்டு நிஸ்வாவிற்கு விடுமுறைக்குக் குடும்பத்துடன் வந்திருந்த Balaji Baskaran பாலாஜியும் குடும்பத்துடன் அங்கு வந்தடைந்தார்கள்.


போலீஸ் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு ஏதேனும் ஒமானியின் அடையாள அட்டையை வைத்துவிட்டு, காரை எடுத்துச் செல்லச் சொன்னார்கள். மறுநாள் ஈத் பெருநாள், எல்லாரும் விடுமுறைக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லக் கூடும், யாரிடமும் அடையாள அட்டையைக் கேட்க மனமில்லை. அதனால் காரை போலீஸி்டம் விட்டுவிட்டு டாக்ஸியில் நிஸ்வாவிற்கு சென் பாலன் வீட்டிற்கே கிளம்பினோம். ஏனெனில் நாங்கள் தங்குவதாக இருந்த ரிசார்ட் ஜபல் அல் ஷம்ஸ் என்ற மலையின் மீது இருந்தது. அங்கு அந்த இருட்டில் செல்லப் போக்குமில்லை மனமுமில்லை. நிஸ்வா எங்களை இரண்டு கரம் விரித்து வரவேற்றது.


ஒமானில் எங்களது பயணத் திட்டமாக இருந்தது - இரண்டு இரவுகள் நிஸ்வாவிலும் மற்ற நாட்கள் சூரிலும். வண்டி இல்லாத நிலையில் அதுவும் இப்படியெல்லாம் அசம்பாவிதம் நடக்குமென்று எதிர்பார்க்காததால் மனம் எதிலும் என் கணவருக்கு ஒட்டவில்லை. ”ஏதோ சரியாகப்படவில்லை, நாம் சூர் போக வேண்டாம்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.


இளங்கோவும் கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கக் கவலை ஏன்? உற்சாகமாக இருங்கள் நிஸ்வாவில் நீங்கள் பார்க்காத பல இடங்களுக்குச் செல்வோம் என்று சொல்லி குழந்தைகளை சமாதானப்படுத்தினார். நானும் குழந்தைகளும் சரியென்று இருந்துவிட்டோம்.


சென்பாலன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஹாரிஸ் எங்களை ஈத் தொழுகைக்குப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அழகான முறையில் தொழுதுவிட்டு அவர் வீட்டில் இனிப்பும் தேநீரும் அருந்திவிட்டு நாங்களும் பாலாஜி குடும்பத்தினரும் சேர்ந்து உணவகத்திற்குச் சென்று காலை உணவு சாப்பிட்டுவிட்டு, எங்களுடன் மற்ற மூன்று வண்டிகளும் வந்து சேர – அவர்கள் வேறு யாருமில்லை. ஒரு வண்டி என் அக்கா மகள் Benazir Fathima பெனாசிர்- அபு குடும்பத்தினர், இரண்டாவது வண்டி என் கணவரின் மாமன் மகன் ஹமீத்- நஃபீஸா குடும்பத்தினர், மூன்றாவது வண்டி குடும்ப நண்பர் இம்தியாஸ்- அப்ரீனா குடும்பத்தினர். அனைவரும் ஈத் பெருநாளை ‘வாதி தாம்’ என்ற இடத்தில் நனைத்தோம். இளங்கோதான் எங்களின் வழிகாட்டியாக இருந்தார்.


அதன் பிறகு அவர்களெல்லாம் மறுநாள் சூர்க்கு கிளம்பிவிட நாங்கள் இளங்கோவுடன் மிஸ்ஃபத் அல் அர்தீன் என்ற அழகான இடங்களில் சுற்றித் திரிந்தோம். அன்று இரவு இளங்கோவின் துணைவியார் புவனா அருமையான சுவையான விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். நோன்புக்குப் பிறகு சாப்பிட்ட முதல் நல்ல இரவு உணவு.


மறுநாள் ஜபல் அக்தர் என்ற இடத்திற்கு எங்களை இளங்கோ அழைத்துச் சென்றார். ரோஜா தோட்டத்தில் உள்ள டமாஸ்க் ரோஜாவின் மணம் எங்கும் பரவியிருந்தது. அன்று மதிய உணவை எங்களுக்காக புவனா சமைத்து அனுப்பியிருந்தார். ரோஜாவின் நறுமணத்தை மறக்கடித்தது சீரகச்சம்பா பிரியாணி. பிரியாணியுடன் ரைத்தா, பாயசம் என்று அசத்தியிருந்தார் புவனா. மாலையில் நிஸ்வாவில் உள்ள சந்தைக்குச் சென்றோம். இரவு துருக்கி உணவகத்தில் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.


மறுநாள் அங்கிருந்து இளங்கோவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இப்ரியில் எங்களைக் கொண்டு இறக்கிவிட்டார்கள். மஜித் என்ற ஹோட்டல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகில் இருந்ததால் அங்குதான் தங்கினோம்.


ஒமானில் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே இங்குள்ள மக்கள். உள்ளூர் ஒமானிகளும் சரி, நம்மூர் மக்கள் ஒமானிகளும் சரி அவ்வளவு அன்பானவர்கள், உதவிக்கரம் நீட்டுபவர்கள், ஏதாவது எப்படியாவது உதவியாக அல்லது துணையாகவாவது நிற்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். போன வருடம் ஒமான் பயணத்திலேயே இந்த இடம் எனக்கு இதற்காகவே அவ்வளவு பிடித்துவிட்டது. இந்த வருடம் இது உனக்கான இடமென்று உணர்த்துவதற்காகவே தொடர்ச்சியான சம்பவங்கள் நடப்பதாக உணர வைத்தது.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒமானில் ஈத் விடுமுறைக்குப் பிறகு முதல் வேலை நாள் – போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் அவர்கள் இன்ஷுரன்ஸிலிருந்து வரவேண்டிய ஒப்புதல் படிவம் வந்தால்தான் வண்டியைத் தர முடியும் என்றனர். ஞாயிற்றுக்கிழமை துபாய் இன்ஷுரன்ஸ் அலுவலகத்திற்கு விடுமுறை அதனால் அன்று ஒன்றும் நடக்கவில்லை என்பதால் ஞாயிறும் அங்கேயே தங்கிவிட்டோம். நாங்கள் அங்குத் தனியாக இதைப் பற்றிப் பேசி புலம்பிக் கொண்டிருக்க வேண்டாமென்று முடிவெடுத்து எங்களுக்குப் பேச்சுத் துணைக்காக ராஜ்குமார் என்ற மற்றொரு ஆங்கில ஆசிரியரை அனுப்பி வைத்தார். அவர் நெல்லையைச் சேர்ந்தவர் அதனால் சலம்பலுக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்தது. அவர் எங்களுக்கு இப்ரியைச் சுற்றிக் காட்டினார்.


திங்கட்கிழமை முட்டி மோதி இன்ஷுரன்ஸிடம் பேசி நிலைமையைச் சொன்னோம். அனுப்புகிறோம், இதோ செய்கிறோம், கூப்பிடுகிறோம் என்றே சொல்லிக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருந்தனர். எங்களின் ஆபத்பாந்தவன் பாலாஜியை அழைத்து தகவலைத் தெரிவித்தோம். அவர் துபாயில் இருந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கு நேரிலேயே சென்று உட்கார்ந்துவிட்டார். ஒப்புதல் படிவம் அனுப்பினால்தான் நகர்வேன் என்று அழுத்தம் தந்துவிட்டார். பிறகுதான் அவர்கள் மீது பிழையில்லை என்பதும், நடு நாயகனாக இருந்த மற்றொரு இன்ஷுரன்ஸின் தாமதம்தான் காரணம் என்று அறிந்து விபரங்களைத் தெரிவித்து இறுக்கிப் பிடிக்க எல்லாம் நகர்ந்தது. அவர்கள் மிகவும் தாமதமாக ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்க, ஓமானில் உள்ள இன்ஷுரன்ஸ் உடனடியாக தேவையான படிவங்களை அனுப்பித் தர, அதனை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும்போது மணி மாலை 4.30 ஆகியிருந்தது. எங்கள் வழக்கை முழுவதுமாக அறிந்த மஹ்மூத் என்ற போலீஸ் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று விட்டார். அவரை அழைத்துப் பார்த்தோம் எடுக்கவில்லை. வழியில்லாமல் விடுதியின் அறைக்கு வந்துவிட்டோம். அப்போதுதான் வானிலை அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். போலீஸே மறுபடியும் 6.45க்கு அழைத்தார். ”சொல்லுங்க சகோதரி ஒப்புதல் படிவம் கிடைத்துவிட்டதா” என்றார். ”ஆம், உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், இன்றே வண்டியைத் தர இயலுமா?” என்று கேட்டேன். ”சரி, நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுங்கள், மற்றதை அங்கு இருக்கும் என் நண்பர் பார்த்துக் கொள்வார்” என்று உறுதியளித்தார். அழைப்பைத் துண்டிக்கும் முன் அவர் எங்களிடம் கேட்டுக் கொண்டது ‘உங்களுக்கு இன்று கார் கிடைத்துவிடும், ஆனால் இன்று இரவு செல்ல வேண்டாம். நாளை காலை உங்கள் பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று. மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டோம். அவர் மட்டுமல்ல போலீஸ் ஸ்டேஷனில் ஒவ்வொரு அதிகாரியும் அதே வேண்டுகோளை வைத்தனர். பிறகுதான் ஒமானில் பதினான்கு பேர்கள் விபத்தில் உயிர் இழந்த துயரச் சம்பவத்தைப் படித்தோம். அதற்காக அரசாங்கத்திற்கு விடுமுறையும் அளித்திருந்தார்கள். அதற்காகவென்றால் வானிலைக் காரணமாக. பிறகு வண்டியை எடுத்துச் சென்று ‘வீல் அலைன்மெண்ட்’ செய்து கொண்டோம்.


சரி மழைக்கு முன்பு கிளம்பிவிட வேண்டுமென்று  பஜ்ர் தொழுதவுடன் கிளம்பிவிட்டோம். இருந்தாலும் விடாத கருப்பாக மின்னல் எங்களைத் துரத்திக் கொண்டே வந்தது. எங்கும் நிறுத்த முடியாது, அதன் பிறகு மழை கூடிவிட்டால் என்ன செய்வது, அதனால் துபாய் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். ஓர் இடத்தில் பலத்த இடி மின்னல் மட்டுமல்ல கரிய மேகம் தரை இறங்கிச் சூழ்ந்தது போல் இருண்ட மின்னலுக்குள் ஒளிர்வதுபோல் அமானுஷ்யம் நிரம்பியது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துவிட்டோம். ஓதிக் கொண்டே இருந்தோம். எல்லாப் பக்கமும் கொட்டும் மழைச் சத்தம் மட்டும். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டோம். அருகில் எந்த வண்டியும் இல்லை என்பதால் தைரியமாக ஓரங்கட்ட இயன்றது. மூளை வேலையே செய்யவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஹீட்டரையும் ஏசியையும் இயக்கினோம். முன் பின் கண்ணாடிகள் தெளியத் தொடங்கின. மழையும் குறைந்தது. மீண்டும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றோம். பலவிதமான ’வாதி’களில் (வாதி என்றால் ஆறு என்று பொருள்) நீந்தி கடந்தோம். உயரமான வண்டி என்பதால் ஒத்துழைத்தது. அல் அய்ன் பார்ட்டரை அடைந்துவிட்டோம். அல்ஹம்துலில்லாஹ்.


அல் அய்னில் மழைக்கான சுவடே இல்லாமல் பளிச்சென்று இருந்தது. மலை அரசியின் தலையில் பெரிய மேகம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஏதோ எங்களுக்காகவே காத்திருப்பதுபோல் படுத்திருந்து சிரித்தது. மேகம் மழையாகும் முன்பு கூடு அடைய வேண்டுமென்று வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது. வீற்றிருந்த மேகம் வீதிக்கு வந்திருந்தது. கார்மேகம் காரை நோக்கியே வந்தது. தூரல் மழையாகக் கொட்டியதில் தண்ணீருக்குள் கார் விழுந்துவிட்ட பிரமையில் இருந்தோம். எங்களுக்கு முன்னால் சென்ற வண்டிகளின் வெளிச்சங்கள் காணாமல் போனது. எல்லாப் பக்கமும் வெள்ளையாகப் படிந்து, கண் தெரியாதவர் வண்டியோட்டும் கதியானது. ஆலங்கட்டிமழை கொட்டுகிறது தலையில் இடிவிழுவதாக, கண்ணாடியை உடைத்துக் கொண்டு வந்துவிடுவேன் என்று பயமுறுத்தும் ஒலியாக அலறுகிறது. நாம் இறந்துவிட்டோம் போல இது வேறு உலகு என்றே நினைத்துக் கொண்டேன். வாய் பூட்டிவிட்டது. பீதி தாக்குதலில் உறைந்துவிட்டேன்.


மழையோடு கூடிய பலத்த காற்று வண்டியைத் தள்ளிக் கொண்டே சென்றது. மறுபடியும் அதே இரும்பு தடுப்பின் அருகே கார் சென்றுவிட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை மகள் கவனித்துவிட்டாள். கார் ஓரமாகச் சென்றுவிட்டது என்று கத்தியவுடன் சுதாரித்துக் கொண்டு வண்டியைக் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி கடைசி டிராக்கிற்கு வந்தாகிவிட்டது. ஆனாலும் அது நிறுத்தக் கூடிய இடமாவென்று தெரியவில்லை. நிறுத்தினால் பின்னிருந்து வேறு வண்டி வந்து இடித்துவிட்டால் என்ற பயமும். குருடர்கள்போல் வண்டியைச் செலுத்திக் கொண்டே வந்தபோது ஓர் இடத்தில் கொஞ்சம் பிரேக் லைட் தெரியவே அதன் பின் நாங்களும் பிரேக் அடித்து நிறுத்தினோம். அதன் அருகில் 250மீ பெட்ரோல் என்று வாசித்ததால் எப்படியோ அங்குச் சென்று விடுவோம் என்று ஓட்டி வந்து சேர்ந்தோம். பெட்ரோல் போடும் இரண்டு பம்புகளுக்கு இடையில் வைக்கப்பட்டிருக்கும் மேஜைகளும் எண்ணெய் புட்டிகளும் பறந்து கொண்டிருந்தது. ’என்னடா இது வழக்கத்திற்கு மாறான காட்சியாக இருக்கிறது!?’ என்று பார்த்துக் கொண்டே வண்டியை ஸ்தம்பித்து நிறுத்தினோம். நாங்கள் மட்டுமல்ல அங்கு நின்றிருந்த எல்லா வாகனங்களில் உள்ளவர்களும் பேய்யடித்தாற்போல்தான் இருந்தனர். கொஞ்சம் மழை ஓய்ந்ததும், அடுத்த மழைக்கு முன்பு நீந்தியே வீடு வந்து சேர்ந்தோம்.


ஈத் பெருநாள் விடுமுறை சாகசப் பயணத் தினங்களாக இனிதே முடிந்தது. அல்லாஹு அக்பர். இதனை முழுவதுமாக எழுதியதற்கான காரணங்கள் 1. எழுத்து எனக்கான வடிகால். 2. இந்தச் சம்பவங்கள் உங்களுக்குக் கண்டிப்பாக ஏதாவதொரு பாடத்தைச் சொல்லித் தந்திருக்கும். 3. உள்ளுணர்வின் சொல்படி நடப்பது நல்லது. மீறும்போது அதற்கான விளைவுகளைச் சந்திக்கவும் ஆயுத்தமாக இருக்க வேண்டுமென்று என்பதை நான் மறக்கக் கூடாது என்பதற்காக.


இறைவன் எங்களுக்கு வாழ மற்றொரு வாய்ப்பைத் தந்திருக்கிறான் என்றே நான் நினைத்துக் கொண்டேன். புதிதாய் பிறந்திருக்கிறோம். அல்லாஹ் கரீம். 

எழுதாப் பயணம்

 வலைப்பதிவு காலத்திலிருந்தே அறிமுகமான லக்ஷ்மியின் எழுத்துகளை வாசிக்க மிகவும் பிடிக்கும். அவர் எழுதுவது என்னுடன் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.



அவர் எழுதிய 'எழுதாப் பயணம்' ஆட்டிசம் பற்றியது என்றதும் படிக்க ஆவலானேன், காரணம் என் நெருங்கிய நண்பரின் குழந்தைக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருந்தது. 'இருந்தது' என்று இறந்தகாலப் பதத்தில் எழுதக் காரணம் உள்ளது.


என் நண்பருக்கு இரட்டைக் குழந்தைகள். அதனால் அந்தக் குழந்தையின் தாய் மிக எளிதாக, ஒரு குழந்தை போல் மற்றொரு குழந்தை இல்லை, ஒரு குழந்தை கொஞ்சம் பின் தங்கியிருப்பதைக் கணவரிடம் சொல்ல, அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கடும் மனவுளைச்சலில் இருந்தார். தன் மனைவி தன் குழந்தையைப் பற்றி இப்படிச் சொல்வதாக, புகாராகவே என்னிடம் சொன்னார். அதிக நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவளிக்கும் அவருக்குச் சந்தேகம் இருப்பின் மருத்துவரைக் கலந்தாலோசித்தால் நல்லது என்று நான் சொன்னபோது மனமில்லாலம் மருத்துவரை அணுகினார்கள். அவருடைய மனைவி சந்தேகித்தபடி ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை ஏழாவது மாதத்திலேயே தெரிந்து கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரும் பல பிரச்சனைகளுக்கும் பிணக்குகளுக்கும் உள்ளானார்கள். தேவையற்ற சண்டை, புரிதலின்மை, யார் இதற்குக் காரணம், இருவருக்கும் தங்களுக்கென்று செலவிட நேரமில்லாமல் தவித்தனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் குறைந்தது, இருவரும் வேலைக்குச் செல்வது குழந்தையை மேலும் பாதிக்கும் என்பதால் ஒருவர் வேலையை விடச் சம்மதித்தார். யார் வேலையை விடுவது என்ற விவாதம் வேறு. ஏன் எப்போதும் பெண்தான் தன் தொழில் முனைப்பை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பிளவு. பல பிரச்சனைகளைத் தாண்டி குழந்தையின் நலனை பிரதானமாக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தனர். அந்தக் குழந்தை சில மாதங்கள் மட்டுமே பின்னடைவில் இருப்பதாகத் தெரிந்ததால் அதிகம் கவனம் செலுத்தி இப்போது இரு குழந்தையில் யாருக்கு ஆட்டிசம் என்று தெரியாத வகையில் ஈடுகொடுத்துச் செல்கின்றனர். இப்போது குழந்தைகளுக்கு ஐந்து வயது. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருவரும் படிக்கின்றனர்.


ஆட்டிசம் குறைபாடு என்பது மூளை வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நிலை, இது ஒரு நபர் மற்றவர்களுடன் எவ்வாறு உணர்கிறார் என்பதும், சமூகத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புகளின் சிக்கல்களின் கோளாறாக வரையறுக்கப்படுகிறது. அதுவும் ஆட்டிசம் நோயல்ல குறைபாடு மட்டுமே என்றும் சொல்கின்றனர். அப்படியிருக்க, அதனைச் சரியாக்க முடியாத ஒரு நிலையென்று லக்ஷ்மி எழுதியிருக்கிறார். யாராவது குணப்படுத்த முடியும் என்று பொய் அறிக்கை தந்தால் நம்பாதீர்கள் என்றும் சொல்கிறார். ஆனால் ஆட்டிசம் நோயல்ல தன்முனைப்பு குறைபாடு என்று வரும்போது அதுவும் அதனை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து அதை ஏற்றுக் கொண்டு புரிந்து அதற்கேற்ற பயிற்சியும், முயற்சியும், செய்ய வேண்டியவைகளையும் செய்தால் சரியாகிவிடுவதைக் கண்கூடாகக் கண்டுள்ளேன்.


யார்தான் தனக்குப் பிறந்த குழந்தைக்குக் குறைபாடுள்ளதை ஏற்றுக் கொள்வார்கள்? ஆரம்பக் காலக் கட்டத்திலேயே புரிந்து செயல்படுவார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். அதற்காகவே லக்ஷ்மியின் நூலை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமல்லாது, குழந்தையைப் பெற்ற அல்லது பெறப் போகிற அனைவருமே வாசிக்க வேண்டிய நூல் எனலாம். கருவுற்றபோது 'வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யு ஆர் எக்ஸ்பெக்டிங்' என்ற நூலைப் படிக்கும் பெண்களைப் போல் இந்த நூலை கணவர்- மனைவி இருவருமே வாசித்தல் அவசியம். 


அதிலுள்ள பயிற்சிகள், முக்கியமாகத் தொலைக்காட்சியும் செல்பேசியும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும் என்ற உண்மைகளைப் பலர் அறிந்திருந்தும் "கார்ட்டூன் பார்த்தால்தான் என் புள்ள சாப்பிடுவான்" என்று பெருமைப்படும் தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள்.


லக்ஷ்மி தன் மகன் கனிவமுதனை சிறப்புக் குழந்தை என்று குறிப்பிடுகிறார். எல்லாக் குழந்தைகளுமே ஒரு வகையான சிறப்புக் குழந்தைகள்தான் என்பது என் கருத்து. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகை, அதில் அவர் மகன் கனிவமுதன் ஒரு வகை அவ்வளவுதான். என் மகனும் குழந்தையைப் பார்த்துக் கொள்பவரிடம் நான் அவனை விட்டுவிட்டுச் செல்லும்போது மூச்சில்லாமல் அழுவான், பத்து நிமிடத்திற்கு ஒரு இடத்தில் உட்கார மாட்டான், சுற்றிக் கொண்டே வருவான். நெடும் பயணமல்ல சிறு பயணமென்றாலும் போய்ச் சேரும் வரை போரடிக்குது என்பான், தண்ணீர் வேண்டுமென்பான், தேவையில்லாமல் அழுவான். என் மகன் மட்டுமல்ல பல குழந்தைகளை இப்படிப் பார்க்கிறேன். படிக்க அல்லது எழுத உட்கார வைத்தால் கை வலிக்கிறது என்று முறுக்குவான், கழிப்பறை போக வேண்டும் என்பான், தூக்கம் வருது என்று சோம்பல் முறிப்பான். இதெல்லாம் செய்தால்தானே குழந்தை?. இந்த நூலில் குழந்தைகளுக்கு 'ப்ளாஷ் கார்ட்' வைத்து சொல்லி கொடுக்கும் முறை, பல் துலக்க 28 ஸ்டெப், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்த, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கைவிரலை பலமளிக்கும் வேலைகள் என்று சிறப்புக் குழந்தைக்கு என்று சொல்லப்பட்டவை எல்லாமும் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும், அவசியமும்.


ஆட்டிசக் குழந்தையின் தனிச் சிறப்பே அவர்கள் பல விஷயங்களில் வல்லுனர்களாக மற்ற குழந்தைகளை விட மிக விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறன்மிக்கவர்கள். அதனை ஹைப்பர்லெக்ஸியா என்கின்றனர், அதையும் குறைபாடாகக் கொள்கின்றனர். காரணம் பொருளில்லாமல் எழுத்துருக்களையும் அதன் உச்சரிப்பையும் மட்டுமே கற்றுக் கொண்டு படிக்கக் கூடிய திறன். பொருளைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படுவதை அவர்கள் குறைபாடாகக் கருதுகின்றனர். ஆனால் குர்ஆன் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எழுத்துருக்களையும் உச்சரிப்பையும் மட்டுமே கற்கின்றனர். அதைச் சிறப்பாகச் செய்வதால் சர்வதேச அளவிலும் பரிசும் பெறுகின்றனர். இதை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்தக் குறைபாடு எனக்கு முரண்பாடாகத் தெரிந்தது.


கனியைக் கண்டபோது தூக்கிக் கொஞ்ச வேண்டுமென்று பரபரத்த கைகளைக் கட்டிப்போட்டு புன்முறுவலோடு நகர்ந்தேன். பொதுவாகக் குழந்தைகளைப் பார்த்தாலே கொஞ்சவும், கைக் குலுக்கவும், ஏதேனும் பேச்சு கொடுக்கவும் செய்யும் என் போன்றவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் லக்ஷ்மி சொல்வது 'ஆட்டிச நிலை குழந்தைகள் யாரையும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதனால் தள்ளி நில்லுங்க' என்பது. ஆனால் அதே லக்ஷ்மி அவர்களுக்கு நண்பர்கள் கிடைக்கவும் வழி செய்வதாகச் சொல்வது முரண்.


இயல்பாகவே சின்னக் குழந்தைகள் என்றில்லை பெரிய குழந்தைகளுமே இருட்டைக் கண்டால் பயப்படுவார்கள், அப்படியிருக்கச் சிறப்புக் குழந்தைகள் இன்னும் அதிகமாக எதிர்வினையாற்றுவதில் ஆச்சர்யமில்லை. பொதுச் சமூகம் இதையெல்லாம் புரிந்து கொள்ளாததால் கழிப்பறை அருகே இரவு முழுக்க நிற்க வேண்டிய அவலம் லக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ளது, இதில் குழந்தையின் குறைபாட்டை என்னால் பார்க்க முடியவில்லை, மாறாக இந்தச் சமூகத்தைத்தான் குறைசொல்ல வேண்டும்


'அடி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், 'அடி! அடி!' என்று கூறியபடி தன்னைத் தானே கைகளால் அடித்துக் கொள்ளும் குழந்தை, வலித்தால் வலிக்கிறது என்றும் அடித்தால் அடிக்கிறார்கள் என்றும் சொல்லத் தெரியாத குழந்தையை அடிக்கும் அந்த ஆசிரியரைதான் சாத்தவேண்டும்.


நூல் முழுக்க ஆசிரியர்கள், கற்றறிந்தவர்கள், பராமரிப்பாளர்கள் என்று எல்லாருமே குழந்தையைத் தவறாகக் கையாள்வதைக் காண முடிகிறது. ஆனால் லக்ஷ்மி- பாலா இருவருமே நல்ல பெற்றோர் என்பதால் கனி எதையாவது கற்றுக் கொள்கிறானா இல்லையா என்று கூர்ந்து கவனித்து, எதுவும் கற்கவில்லை அல்லது அங்கு ஏதேனும் தவறு நடக்கிறது எனில் உடனே அந்த இடத்திற்குச் செல்வதைத் தடுத்துவிடுவது சிறப்பு. கனி சிறப்புக் குழந்தையாக இல்லாவிட்டால் இப்படியான தனிக் கவனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.


இந்நூலில் எனக்கு அவருடைய எழுத்துநடை மொழிநடை மட்டுமல்ல, அவர் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்களைப் பயமுறுத்தாமல், அறிவுரைகளை அடுக்காமல், கட்டளைகளிடாமல் தான் அனுபவித்தது, எதையெல்லாம் எதிர்பார்க்கலாம், எப்படித் தவிர்க்கலாம், தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற பொறுப்புணர்வோடு, சமூக அக்கறையோடு தங்களைப் போல் போராடும் பெற்றோருக்காகப் பலவற்றை யோசித்து அவர்களையும் கரை சேர்க்க எழுதப்பட்ட நூலாகக் கருதுகிறேன்.


பொதுவாகப் பெற்றோர்கள் தான் கற்க முடியாததை, பயிலக் கிடைக்காததைத் தன் குழந்தைகள் கற்க வேண்டுமென்று திணிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். ஆனால் குழந்தைக்காகத் தன்னைத் தயாராக்கி கொண்டு, புதியவற்றைக் கற்ற தாய் லக்ஷ்மி சிறப்புக்குரியவர், அவருக்கு உறுதுணையாக ஆட்டிசம் பற்றித் தமிழில் நிறைய வாசிக்க வழி வகை செய்து ஆனந்த விகடன் விருது பெற்ற அவர் கணவர் பாலபாரதிக்கும் வாழ்த்துகள்


சர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டதாம். அதன் அடிப்படையில் எல்லாருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாதாம். சட்டங்களெல்லாம் சரியாக இருந்தும், கனியிடம் குறைபாடிற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டும், கனிவாக இயல்பாக நடந்து கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித் தருவது அல்லது எந்தப் பள்ளியில் இந்த ஆசிரியர்களை சேர்க்க வேண்டுமென்று தெரியவில்லை. குறைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு குழந்தைகளின் குறைபாடு பற்றிப் பேச இங்கு யாருக்கும் தகுதியில்லை.

அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய 'எழுதாப் பயணம்' நம் குழந்தை வளர்ப்பு பயணத்தைச் சீராக்க உதவும்.

Friday, December 22, 2023

ஆட்டிசம் என்னும் ஆற்றல்


 துபாய் 'நம்ம பசங்க' கிரிக்கெட் குழுமத்தின் நான்காம் ஆண்டு விழாவில் என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அந்தக் குழுமத்தினர்க்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததைவிடப் பத்தொன்பது வயது ஃபஹீமை சிறப்பு விருந்தினராக அழைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் ஆற்றல் மிகுந்த ஆட்டிசம் ஆட்கொண்டவர். என்னைப் பொருத்தவரையில் ஆட்டிசம் நோயுமல்ல, குறைபாடுமல்ல, பாதிப்புமல்ல. நம் கண்ணோட்டைத்தைதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. ஃபஹீம் 'சிட்டி ரோபோ' மாதிரி அவருக்குப் பிடித்த விஷயத்தைத் தந்தால் வருடிவிட்டு அதன் உட்பொருள் தருபவர். 


எந்தத் தேதியை சொன்னாலும் அந்த நாளின் கிழமையை 'அசால்டாக'ச் சொல்பவர். ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டில் இப்போது என்ன நேரம் என்று கணினியைவிடச் சரியாகக் கணக்குப் போட்டு உடனே சொல்வார். எல்லா நாட்டின் நாணயங்களைப் பற்றியும் அத்துப்படியாக வைத்திருப்பவர். இதற்காகப் பல விருதுகள் பெற்றவர். குறிப்பாகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் சாதனையாளர் விருது. இவருக்குக் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென்று ஆசை. 


இதுவரை கின்னஸில் ஐந்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமைகளே சாதனையாகி உள்ளதாம். இவருக்கோ பத்தாயிரம் ஆண்டுகளின் தேதி- கிழமை தெரியும். எப்போதும் ஆட்டிசம் ஆற்றலாளர்களை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை மட்டுமே பறைசாற்றுவார்கள். ஆனால் இந்த மேடையில் ஃபஹீமின் கையால் கிரிக்கெட் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவரும் மகிழ்ச்சியாக ஒவ்வொருவருக்கும் அளித்தார், மகிழ்ந்தார். அவருடன் மேடையில் இருப்பதே எனக்குப் பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் மிக்க நன்றி. நிறைவான விழா. அல்ஹம்துலில்லாஹ். விழாவில் நான் பேசிய காணொளியை இன்னொரு நாள் வலையேற்றி சுட்டியைத் தருகிறேன்.


ஃபஹீமின் ஆற்றலைப் பற்றி அவரே பெற்றோர்களிடம் சிறு வயதிலேயே தெரிவித்ததோடு, தன்னைச் சோதித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார். ஃபஹீமின் ஆற்றல் வெளியுலகத்திற்கு தெரிய உறுதுணையாக அவருடைய பெற்றோரும் சகோதரரும் மிகவும் பொறுமையாக, புரிதலுடன் அன்புடனும் ஃபஹீமை கையாளுகிறார்கள்.


ஃபஹீம் கின்னஸ் சாதனை புரிய யாராவது வழிகாட்ட முடியுமா?


 #austism #autismacceptance

Tuesday, October 03, 2023

ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி - என் பார்வையில்

 ஹிந்தி படங்கள் என்று வரும்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்த படங்களையே பார்ப்பேன். அதில் எனக்குச் சொல்லி வைத்தாற்போல்  ‘குச் குச் ஹோத்தா ஹை’, ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’, ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’,  படங்களெல்லாம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. வரிசைப்படுத்திய அத்தனையும் கரண் ஜோஹர் இயக்கிய படங்கள். அவர் இயக்கியதால் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப்பிடித்தப் படங்கள் அவர் இயக்கியவையாக அமைந்துவிட்டன. சமீபத்தில் அவர் இயக்கி வெளிவந்த ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’யின் ட்ரைலர் பெரிய தாக்கத்தைத் தராததால் நான் பார்க்காமலே இருந்தேன். என் மகள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ‘ம்மா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டும், your type movie’ என்றால். ஒரு வழியாக நெட்ஃப்லிக்ஸில் வெளியானதால் பார்த்தேன்…


உண்மையில் இது என் type movie தான். வணிகமயமான மசாலா படத்திலும் அழுத்தமான கருத்தைச் சொல்ல முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சத்திலும் எல்லா லட்சணங்களும் பொருந்தி வந்தாற்போல் தோன்றியது. அதாவது, நகைச்சுவையான ரொமாண்டிக் படத்தில் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, உணர்வுகளையும் உணர்ச்சிவயமான காட்சிகளையும் ஒருங்கே சேர்த்து, வெவ்வேறு பின்னணியின் கலாச்சார இழைகள் பிணையும்போது ஏற்படும் சிக்கல்கள் என்று எல்லாம் சேர்ந்து மிகச் சிறப்பாக வந்துள்ளது. அதுவும் ரன்வீர்சிங் மற்றும் ஆலியா பட்டின் நடிப்பு மிக இயல்பாக இருந்தது.


ஆலியா பட், படத்திற்குப் படம் தன் திறமையை மேம்படுத்திக் கொண்டே செல்கிறார். ரன்வீர் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். இவர்தான் ’83’வில் கபில்தேவாக இருந்தவர் என்று இந்தப் படத்தை பார்த்தால் சொல்லவே முடியாதபடி ஒட்டுமொத்தமாக உருமாறியிருக்கிறார். ஷபானா ஆஸ்மி – தர்மேந்திராவின் காதல் காட்சிகள் உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது. கிழவன் – கிழவிக்கு என்ன காதல் காட்சி என்று குழம்ப வேண்டாம். அந்தக் காட்சிகளை பார்த்தால்தான் நான் சொல்வது புரியும்.


கதை என்னவோ பழைய சரக்குதான் ஆனால் அதைத் தாங்கிப்பிடிக்கும் கொள்கலன் புதியது. ராணியும் அவள் குடும்பத்தினரும் முற்போக்குவாதிகள். ராக்கியின் குடும்பத்தினர் பாரம்பரியத்தில் ஊறியவர்கள். முற்போக்கு மற்றும் பாரம்பரியத்திற்கான மோதலின் காரணமாக ராக்கியும் ராணியும் ஒவ்வொருவரும் மற்றவரின் வீட்டில் மூன்று மாதங்கள் கழிக்க முடிவு செய்து ஒப்புதல் பெற்று மனங்களை வெல்வதே முழுக்கதை. ஆனால் அதில் வரும் திரைக்கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளைக் காக்க உதவும் உணர்வுகளைத் தூவி சுவையைக் கூட்டியுள்ளார் கரண் ஜோஹர்.


பெண்களின் உள்ளாடையை வாங்க ராணியின் தாயாராக வரும் சுர்னி கங்குளி, ராக்கியை அழைத்துச் செல்ல, அவரோ இதையெல்லாம் பார்க்கவும் கூச்சப்படுவதாகச் சொல்ல, முற்போக்குவாதியானவர் ராக்கியிடம் ‘ஏன், இதை உன் பாட்டி, தாயார், சகோதரி எல்லாரும் அணிவார்கள்தானே?’ என்று கேள்வி எழுப்ப. அதற்கு அவர் ‘ஆம், நாங்கள் பெண்களுக்கு மரியாதை தருகிறோம், ஆகையால் அவர்கள் உள்ளாடைகளைத் தொடுவதோ உற்றுநோக்குவதோ இல்லை’ என்று பதிலளிப்பார். உடனே தாயார் ‘ஏன் காலம் காலமாகப் பெண்கள் ஆண்களின் உள்ளாடையைக் கூச்சப்படாமல் தொட்டு அழுக்குப்போகத் துவைக்கிறார்கள் ஆனால் உன்னால் பெண்ணின் 'ப்ரா’வைத் தொட முடியவில்லையா? அதற்கு வெட்கப்பட மாட்டீர்கள் அசிங்கமாக ‘சோலிக்கே பீச்சே கியா ஹே’ என்று பாடித் திரிவீர்கள், ஆனால் பெண்ணின் உள்ளாடையைக் கவர்ச்சிப் பொருளாக, அருவருப்பாக, விலக்கப்பட்டதாக அல்லது கூச்சத்தோடு பார்க்கவும் முடியாமல் போய்விடுகிறதா? பெண்களை ’மரியாதை’ என்ற போர்வையில் அந்நியப்படுத்தி ஒரு பீடத்தில் வைப்பதைவிட அவளும் உன்னைப் போல் சக உயிர்தான், உனக்குச் சமமானவள்தான்’ என்று இயல்பாக பேசிச் செல்லும் காட்சி பலருக்குப் பாடமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். நம் வீட்டிலேயே பொதுவாகப் பெண் உள்ளாடையை மறைத்துக் காயப்போடுவதும், ’காய்ந்துவிட்டது அதனை மறைத்து எடுத்துச் செல்’ என்று சொல்லி வளர்க்கப்படுவதால்தான் இன்னும் ஆண்பிள்ளைகள் பெண்களை இனம்புரியாத வயதில் விசித்திரப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல், சகஜமாக இயல்பாகப் பழகும்போதுதான் பெண்களை பால்பேதமில்லாமல் தவறாக பார்ப்பதிலிருந்து தடுக்க முடியும். பாலியல் பிரச்சனைகளும் குறையும்.


இந்தப் படத்தில் நிறைய ’ஸ்டீரியோ டைப்’ செய்திகளை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் திறமையான இயக்குநர். பாடிஷேமிங்கைப் பற்றியும், ஆங்கிலம் தெரியாததை எள்ளல் செய்வதையும், நம் வீட்டு வேலைகளைப்  பெண்களுக்கு என்று ஒதுக்காமல் இருபாலரும் சாதாரணமாக இயங்குவதையும், பிடித்த வேலையைச் செய்ய அல்லது திறமையை வெளிப்படுத்த பால்பேதம் தடையாக இருக்கக் கூடாது என்பதையும், இப்படிப் பல செய்திகளை உள்நிறுத்தி நகைச்சுவைக் கலந்த பொழுதுபோக்கு அம்சமான படமாக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொருவரும் தனக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளனர். ஜெயபாரதி பாட்டியாக கர்ஜிப்பது, தோட்டா ராய் சௌத்ரியின் கத்தக் நடனம், வசனமே இல்லாத தர்மேந்திரா ‘குடும்பத்தை உடைத்துவிடாதே’ என்று எந்தப் பிரச்சனையானாலும் அனுசரித்துப் போ என்பதை அழுத்தமாகச் சொல்வது,  "நாங்கள் ஸ்டீயரிங் பிடிக்கலாம், ஆனால் எங்கள் குடும்பங்கள் பின்சீட் ஓட்டுனர்கள்" என்று மனதைத் தொடும் காட்சிகள் ஏராளம்.


பொதுவாக ஹிந்திப் படமென்றாலே வண்ணமயமாக இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்தப் படம் மிதமிஞ்சிய வண்ணங்களுடன் ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் (Cinematographer) நான் பார்த்து வளர்ந்த மனுஷ் நந்தன் என்பதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி. காட்சியமைப்புகளும் கச்சிதம் என்பது போலவே இசையும். பிரீதம் சக்கரபர்த்தி பட்டயைத் தீட்டியுள்ளார். ‘ஹாய் ஜும்கா’ பாடல் படம் வரும் முன்பே சூப்பர் ஹிட்டாகி வைரல் ஆனது. மொத்தத்தில் படமொரு பொழுதுக்குப் பெட்டகம். அவசியம் பார்த்துவிட்டு, என்னோடு உடன்படுகிறீர்களா என்று சொல்லுங்கள்.


#raniaurrockykipremkahani #hindimovie

Thursday, March 30, 2023

பாலைவன பரமபதம்

 சமீபத்தில் நான் அபுதாபி சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்மணி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு அவருடைய வணிக அட்டையைத் தந்தார். அதில் அவர் தையற்கல்வி கூடம் வைத்திருப்பதாக இருந்தது. உடனே இவர்தான் ‘பாலைவன பரமபதத்தில்’ வரும் திவ்யாவோ என்று யோசித்தேன். இது என் பிழையல்ல, கதாசிரியர் சிவசங்கரி வசந்த் எழுதிய புதினமான ‘பாலைவன பரமபதத்தில்’ பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையானவை. அதனால் ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தையொத்த வணிகத்தைப் பார்க்கும்போது இவர்தான் அவர் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நானெல்லாம் முகத்திற்கு நேராகப் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என் இயல்பை எதற்காகவும் யாருக்காகவும் மாற்ற இயலாததால் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் மட்டுமே என்னுடன் பயணிக்க முடிகிறது. என்னைவிடச் சிவசங்கரி வசந்த் ஒருபடி மேல் – தான் ஒருவரைப் பற்றி நினைப்பதையெல்லாம் அப்படியே கதையில் கொண்டு வந்திருக்கிறார். இதை வாசிக்கிறவர்கள் தன்னைப் பற்றிதான் எழுதியுள்ளார் என்று அறிந்து தங்களைத் திருத்திக் கொள்வார்களா என்ன?



’பாலைவன பரமபதம்’ இந்தத் தலைப்புக்கு ஏற்றாற்போல்தான் என் வாசிப்பும் இந்த நூல் பற்றிய என் அபிப்ராயமும் இருந்தது. முதலில் வாசிக்கத் தொடங்கும்போது எதையெடுத்தாலும், யாரைப் பற்றிச் சொன்னாலும் புகாராகவோ அங்கலாய்ப்பாகவோ இருந்ததாக உணர்ந்தேன். ’Gossip’ புதினமா என்றும் முதலில் தோன்றியது. அதன் பிறகு மெல்ல மெல்ல கொரோனா பற்றிய விஷயங்கள் உள் வந்த போதே சுவாரஸ்யம் கூடியது. சுவாரஸ்யமென்றால் நூலை கீழேயே வைக்க முடியாத ஆரவமென்றெல்லாமில்லை நிகழ்வுகளின் அடுக்குகளாகச் சம்பவங்களின் கோவையாகச் சிறப்பாக அமைந்துள்ளது இந்தப் புதினம். இந்த நூல் அபுதாபியின் கொரோனா காலத்தை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளது. அதனால் இது ஒரு முக்கியமான படைப்பு எனலாம். இதில் பெரும்பாலானவர்கள் பெயர் மாற்றப்பட்ட உண்மையான கதாபாத்திரங்கள். இதில் நண்பர்கள் கெளசர் மற்றும் பிர்தெளஸ் பாஷா இருவரின் சுயநலமில்லாத தன்னார்வ தொண்டுகளைப் பற்றிப் பறைசாற்றியிருப்பது மகிழ்ச்சியளித்தது. அவர்களின் பெயர் மாற்றாமல் அப்படியே தந்திருப்பது இன்னும் சிறப்பு. இந்த ஒமான் பெண்மணி விஷயத்தைப் பற்றி நான் தான் முதலில் பிர்தெளஸ் பாஷாவிடம் சொன்னேன், எண் தந்தேன். அத்தோடு என் வேலை முடிந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் காய்கள் நகர்த்திச் சாதித்ததெல்லாம் அவர்தான். எவ்வளவு சிரத்தையாக அதனைக் கையாண்டார் என்று முழுவதும் அறிந்து இருந்ததால் அதனைக் கதையாக வாசிக்கும்போது அவ்வளவு சுவையாக இருந்தது.
சிவசங்கரி வசந்த்தின் முதல் நூல் என்று சொல்ல முடியாத வகையில் மிகவும் சரளமாகத் தோய்வில்லாமல் சம்பவங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். முதல் நூலே ஒரு புதினம் என்பதனால் அதில் அவருடைய தன்னம்பிக்கை தெரிந்தாலும், அதனை எங்கள் குழுமத்தில் சொல்ல தயங்கியது முரணாகத் தோன்றியது. அதைப் பற்றியும் அவரிடமே கேட்டுப் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். இவர் இவ்வளவு நன்றாகத் தன் முதல் நூலை கொண்டு வந்திருப்பதற்குக் காரணம் ’புக்பெட்டில்’ அவர் எடுத்துக் கொண்ட எழுத்துப் பயிற்சி எனலாம். எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் எப்படி எழுதி கொண்டிருந்தவர்கள் என்பதை அறிவேன் என்பதால், அவர்களின் எழுத்தில் திடீரென்று தெரிந்த முதிர்ச்சியும், மாற்றமும், ஒருவித ஈர்ப்பும், இதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பயிற்சியினால் மட்டுமல்ல, அதனைச் சிவசங்கரி போன்றவர்களின் சுய முயற்சியினாலும், அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவென்றால் மிகையில்லை.
இன்னும் பல நல்ல படைப்புகளோடு வர
வாழ்த்துகள்
Sivasankari Vasanth.

Wednesday, March 29, 2023

பத்திரிகையில்...

எல்லா புகழும் இறைவனுக்கே

 https://www.facebook.com/photo/?fbid=10158746805342364&set=a.412780932363&__cft__[0]=AZX9jKKg5KqwNP9aNGuEZGYtprm8drx0epy2n_78N3EsrOCSRYuO4p91Vtaasbmd9SYJECzW3Ih-Bmec6bmpZwcLiF4h5sX9ZHiP2r5lqmFu8uOU36TgjeP0ZWEAcn2BYwbm6jcLrEvboYMy2M9Bkk-DN3eqCLvc52QpNg7nGf_Kvy_PcuqEGXGmAELrzOttbT8&__tn__=EH-R


ஜெஸிலா இணை இயக்குநராக

 அமீரகக் குறும்படப் போட்டியில் ‘பேரு வெக்கல’ நகைச்சுவைப்படத்திற்காக இணை இயக்குநராகப் புதுப் பரிணாமம் எடுத்து அதில் வெற்றியும் கண்டதில் பேரானந்தம். கதைக்கரு வித்தியாசமானதென்று எதுவுமில்லை, ஆனால் நகைச்சுவையில் அடித்துவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கேற்ற நடிகர்களையும் இயக்குநர் கெளசர் Kausar Baig சிறப்பாகவே தேர்ந்தெடுத்திருந்தார்.

படப்பிடிப்பின் போது இன்னும் கொஞ்சம் நல்ல செய்யலாம், ’ஒன் மோர் ப்ளீஸ்’ என்று நான் கேட்டபோதெல்லாம் ‘இணை இயக்குநர்’தானே என்ற அலட்சியமில்லாமல் இயக்குநரும் சரி, நடிகர்களும் சரி எனக்குத் திருப்தியாகும் வரை சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்தார்கள். திரையிடப்பட்ட பதினைந்து படங்களில் எங்கள் குறும்படத்தில்தான் நடனக் காட்சி வைத்திருந்தோம். கதாநாயகனான பாலாஜி Balaji Baskaran என் முன்னிலையில் ஆடமாட்டேன் என்று அடம்பிடிக்க, ‘திரையில் அத்தனை பேர் பார்க்கப் போகிறார்களே’ என்ற போது, ’அது பரவாயில்லை நான் அப்போ கண்ண மூடிப்பேன்’ என்றவுடன் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். மனிதர் உடல்மொழியால் கலக்கியிருந்தார். மதுரை வட்டார வழக்கு வராமலிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டார். சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது.
டப்பிங்கின்போது நான் கொஞ்சம் எல்லோரையும் படுத்திதான் எடுத்தேன், இருந்தாலும் குழுவினர் அனைவருமே ஒத்துழைத்தார்கள். பூர்ணியின் Poorni Balaj குரலை ‘இன்னும் கீச், இன்னும் கீச்’ என்று மீண்டும் மீண்டும் பேச வைத்து எடுத்து, அதனை முகம் சுழிக்காமல் இசையமைப்பாளர் Giftlin Shaju கிஃப்ட்லின், மைக்ரோ நொடியும் வித்தியாசமில்லாமல் சரியாகப் பொருத்தி தந்ததெல்லாம் சுவையான அனுபவமாக இருந்தது. பூர்ணிக்கு நடுவரின் சிறப்புப் பரிசும், கிஃப்டினுக்கு இந்தப் படத்திற்கு இல்லையென்றாலும் ‘நடுவில்’ என்ற எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு குறும்படத்திற்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்தது.
குறும்படம் முழுமையாகச் சிறப்பாக அமைய முழுக் காரணமென்று நான் குறிப்பிட வேண்டியது Mohamed Rasi Deen ரஸிதீனைதான். அபாரமான ஆற்றலும் ஆர்வமும் உடையவர். நாம் சொல்வதற்கு முன்பாகவே அவர் புரிந்து கொள்ளும் அலைவரிசையையுடையவர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்று எல்லாத் துறையையுமே ஒற்றை ஆளாகச் சிறப்பாகக் கையாண்டு, உரிய நேரத்திற்கு முடித்துத் தந்தார்.


Noah Nitin Chander Samson வின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த நடனத்திற்கு அந்தப் பாடல் சேர்க்கப்பட்டு 'தூள்' நடனமானது. நோவா நோகாமல் இயல்பாக நடித்து முடித்தார். Lakshmi Priya வும் தனக்கு தந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக தத்ரூபமாக நடித்தார். அவர் வீடு பாபாவின் இருப்பிடமாக சரியாக பொருந்தியது. கலைஞன் நாஷ் கம்மல், பொட்டு, தலைமுடி என்று சின்னச் சின்ன தகவல்களையும் கண்கொத்திப் பாம்பாக இருந்து சரி செய்து சிறப்பு சேர்த்தார்.
குறும்படம் தர வேண்டிய நேரத்தில் கெளசர் ஊருக்கச் செல்ல வேண்டியிருந்ததால், என்னை அவர் இணை இயக்குநராக இருக்க இயலுமா என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று உடனே ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கினோம். ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்தது. டப்பிங்குக்கு ஒருநாள். இரண்டே நாளில் பன்னிரெண்டு நிமிட குறும்படம். போட்டியில் சிறந்த இயக்குநருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. குறும்படத் திரையிடலுக்குச் சென்ற என்னால், விருது விழாவிற்குச் செல்ல முடியாதது சோகமென்றாலும், குறும்படத்திற்கு மூன்று விருது கிடைத்ததை நிறைவாகவே உணர்ந்தேன்.
இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், இந்தப் படத்தில் என் பூனை மினி மிகவும் சிறப்பாக நடித்துள்ளது. ❤
இப்படியான வாய்ப்பை அமீரக மக்களுக்கு வழங்கும் Rama Malar ரமா & ஆனந்த் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
https://youtu.be/5SYzZEzLrV8 குறும்படத்திற்கான சுட்டியை க்ளிக்கவும். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.


ஒரு காதல் கதை

 சினிமா பார்த்து அழுத அனுபவம் உங்களுக்கிருக்கலாம், கதை வாசித்து அழுத அனுபவம் உண்டா? எனக்கு என்னவாகிவிட்டதென்று தெரியவில்லை, முதல் முறை வாசிக்கும் போது கலங்கினால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் அப்படியே நிகழ்ந்தது. எழுத்தாளர் Mitheen மீரான் மைதீன் அவர்களின் எழுத்துக்கு அப்படியான சக்தியுள்ளது என்றால் மிகையில்லை. பயமுறுத்த வேண்டுமென்ற ஆற்றல் கொண்டு எழுதுவாரோ என்னவோ 'கயிறுகள் உருவங்களாயின' கதையை வாசிக்கும் போது காரணமில்லாமல் பயம் தொற்றிக் கொண்டது. அவ்வாறே இந்தக் கதையில் அழுவதற்கு ஒன்றுமில்லாமல் அழ வைத்துவிட்டது. இந்தக் கதையை வாசிக்கும் போது எல்லாருக்கும் அப்படியான உணர்வு கண்டிப்பாக ஏற்படாது. ஆனால் இஸ்லாமிய பின்புலத்தைச் சேர்ந்த பெண்மணிக்குக் கண்ணீர் துளிர்ப்பதில் ஆச்சர்யமில்லை. நான் சொல்வது 'ஒரு காதல் கதை' நெடுங்கதையைப் பற்றி.

வஸீலா அவள் வாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அவருடைய கையை மெல்லப் பிடித்தபோது என் கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. 'எனக்குத் தனிமை வாய்த்திருந்தால் நான் விபரீதமான முடிவை எடுத்திருக்கக்கூடும்'. 'நடு இரவில் முழிப்பு வந்து சட்டென மொத்தமாய் நடுங்கி, பூஜையறை இருக்கிற வீட்டில் நாம் எப்படி வந்தோமென்று நிலைகொள்ளும்' இடமெல்லாம் என்னால் அந்த உளவியலை புரிந்து கொள்ள முடிந்தது. 'அந்த ஊரே கூடி ஏதோ ஒரு வெற்றியைப் போல எங்கள் திருமணத்தைக் கொண்டாடியது' - இந்த ஒற்றை வரியில் அரசியல் வெளுத்தது.
இருபது வருடங்களாக இரயில் பயணமே செய்யாத என்னைக் கேகே எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டு பயணியாக்கி அவர்கள் பேசுவதை அருகில் உட்கார்ந்து கவனிக்கச் செய்துவிட்டது இந்தக் கதை. எளிமையான
அருமையான
இயல்பான எழுத்து. உரையாடல்களின் மூலம் பல உள்ளடுக்குகளைச் சாமர்த்தியமாக நெருடல் வந்துவிடாதவாறு சேர்த்துள்ளார் கதாசிரியர்.
ஒன்று மட்டும் சத்தியம், கலப்புத் திருமணத்தில் மிகவும் பாதிக்கப்படுவது பெண்தான், 'மதம்' அல்ல. கதையை வாசித்து முடிக்கும்போது நல்லவேளை இப்படியான தவறை நான் செய்ய என்றுமே துணிந்ததில்லை என்ற நிம்மதி பெருமூச்சுவிட முடிந்தது.
'புலம்' பதிபகத்தின் வெளியிடூ. 56 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். விலை 80 மட்டுமே. கேலக்ஸி நூல் விற்பனையாளர்களிடம் வாங்கலாம்.


Tuesday, January 31, 2023

டார்லிங்ஸ் - பல பெண்களின் கதை

 அன்பு செலுத்தும் ஒருவரை எப்படித் தகாத வார்த்தையில் பேச முடியும், அடித்துத் துன்புறத்த முடியும்? காயப்படுத்துபவர்களுக்குத் தெரிவதுமில்லை வெளிக் காயத்தை விட உள்காயமாக மன கசப்பும் வெறுப்பும் அதிகரிக்கும் என்று. செய்வதெல்லாம் செய்துவிட்டு மறுநாள் கொஞ்சி கெஞ்சி சமாதனப்படுத்த நினைக்கும் ஆணுடன் எப்படிதான் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழ முடிகிறது? அவள் அந்த வாழ்விலிருந்து வெளியில் வர நினைத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை இருண்ட நகைச்சுவையாக (டார்க் காமெடி) சொல்லப்பட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறதுடார்லிங்ஸ்திரைப்படம்.


தொடக்கக் காட்சிகளில் ஆலியாபட்டாக வரும் பத்ருநிசா மீது நமக்கு அவ்வளவு கோபம் வருகிறது. தினமும் குடித்துவிட்டுக் காரணமில்லாமல் அல்லது ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அடிக்கும் கணவருக்கு மறுநாள் சமைத்து போட்டு அலுவலகத்திற்கு வழி அனுப்பும் ஒரு கதாபாத்திரம்.

மகள் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் இருக்கும் பத்ருநிசாவின் தாயார் ஷம்சுநிசா (ஷெஃபாலி ஷெரிஃப்) மகள்படும் கொடுமைகளைத் தாங்க இயலாமல், கொடுமையான திருமண வாழ்விலிருந்து துன்புறுத்தும் கணவரை விட்டு வந்துவிடும்படி மகளிடம் கேட்கிறார். ஆனால் பத்ரு தன் கணவனின் 'காதலில்' அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், கணவரை அவளால் சரி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் சொல்லிக் கொண்டு தினமும் அடிவாங்குகிறாள்.


நிறையப் பெண்கள் கொடுமையான திருமண வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணம் குழந்தைகள். அந்தக் குழந்தைக்காகச் சகித்துக் கொண்டு இருந்துவிடலாமென்று பிடிக்காத திருமண வாழ்விலும் தொடர்கிறாள். இன்னும் சில பெண்கள், கணவன் தன்னை குழந்தை இல்லாததால் துன்புறுத்துகிறான், பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. குழந்தையென்று வந்துவிட்டால் சரியாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பத்ரு போன்றவர்கள் பிரிந்துவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பிற்காவது குழந்தை வேண்டும் அதுவும் அந்தக் கொடுமைகார கணவரின் குழந்தை வேண்டுமென்று வேண்டி ஒட்டிக் கொண்டிருப்பதில் கண் மூடித்தனமான அவளது காதலே காரணமாகிவிடுகிறது. இதில் பெரிய ஆறுதலே பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாகத் தன் தாயாரிடம் எல்லாமும் பேச முடிகிறது. சமூகத்தில் அப்படியான சூழலும் பெரும்பாலான இடத்தில் இல்லை என்பதும் அவலம்.

பிரதான பாத்திரமென்று பார்த்தால் 4-5 பேர்தான். சின்னப் பட்ஜெட்டில் அவ்வளவு சிறப்பான கதையை நகைச்சுவையாகச் சொல்ல முடிந்திருக்கிறது பெண் இயக்குநர் ஜஸ்மீட் கே. ரீனால். இந்த இளம் இயக்குநருக்கு இது முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கனமான கதைக்கருவை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ஆனால் அது நகைச்சுவையாக நம்மை வந்து அடையவில்லை. உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்களின் பலவீனத்தை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆண்களைத் திருத்துவதற்காகத் திருமணக் கட்டமைப்பு இல்லையே, கெட்டவன் தரங்கெட்டவனாகவே இருந்துவிட்டு போகட்டுமே, அவள் நல்லவளாக ஒதுங்கி வாழ்துவிடலாமே என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருப்பதாக நான் உணர்கிறேன்.

ஆலியாபட்டைவிட ஹெஃபாலி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கொடூர கணவன் ஹம்ஸாவாக வரும் விஜய் வர்மா மீது ஏற்படும் கோபத்திலிருந்தே வெளிபடுகிறது அவருடைய அபார நடிப்பு. ஸுல்ஃபீயாக வரும் ரோஷன் மாத்யூவின் பாத்திர படைப்பும் சிறப்பு. மலையாளத்தில் பார்த்த ரோஷன் இங்கு நன்றாகவே பொருந்தி நடித்திருக்கிறார்.

இறுதி முடிவு நமக்குத் தெரிந்ததாக இருந்தாலும் பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது. பலடார்லிங்ஸின்கதை இது ஆனால் எல்லா முடிவுகளும் இப்படி அமைவதில்லை.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி