Thursday, March 30, 2023

பாலைவன பரமபதம்

 சமீபத்தில் நான் அபுதாபி சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்மணி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு அவருடைய வணிக அட்டையைத் தந்தார். அதில் அவர் தையற்கல்வி கூடம் வைத்திருப்பதாக இருந்தது. உடனே இவர்தான் ‘பாலைவன பரமபதத்தில்’ வரும் திவ்யாவோ என்று யோசித்தேன். இது என் பிழையல்ல, கதாசிரியர் சிவசங்கரி வசந்த் எழுதிய புதினமான ‘பாலைவன பரமபதத்தில்’ பெரும்பாலான கதாபாத்திரங்கள் உண்மையானவை. அதனால் ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தையொத்த வணிகத்தைப் பார்க்கும்போது இவர்தான் அவர் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நானெல்லாம் முகத்திற்கு நேராகப் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என் இயல்பை எதற்காகவும் யாருக்காகவும் மாற்ற இயலாததால் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் மட்டுமே என்னுடன் பயணிக்க முடிகிறது. என்னைவிடச் சிவசங்கரி வசந்த் ஒருபடி மேல் – தான் ஒருவரைப் பற்றி நினைப்பதையெல்லாம் அப்படியே கதையில் கொண்டு வந்திருக்கிறார். இதை வாசிக்கிறவர்கள் தன்னைப் பற்றிதான் எழுதியுள்ளார் என்று அறிந்து தங்களைத் திருத்திக் கொள்வார்களா என்ன?



’பாலைவன பரமபதம்’ இந்தத் தலைப்புக்கு ஏற்றாற்போல்தான் என் வாசிப்பும் இந்த நூல் பற்றிய என் அபிப்ராயமும் இருந்தது. முதலில் வாசிக்கத் தொடங்கும்போது எதையெடுத்தாலும், யாரைப் பற்றிச் சொன்னாலும் புகாராகவோ அங்கலாய்ப்பாகவோ இருந்ததாக உணர்ந்தேன். ’Gossip’ புதினமா என்றும் முதலில் தோன்றியது. அதன் பிறகு மெல்ல மெல்ல கொரோனா பற்றிய விஷயங்கள் உள் வந்த போதே சுவாரஸ்யம் கூடியது. சுவாரஸ்யமென்றால் நூலை கீழேயே வைக்க முடியாத ஆரவமென்றெல்லாமில்லை நிகழ்வுகளின் அடுக்குகளாகச் சம்பவங்களின் கோவையாகச் சிறப்பாக அமைந்துள்ளது இந்தப் புதினம். இந்த நூல் அபுதாபியின் கொரோனா காலத்தை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளது. அதனால் இது ஒரு முக்கியமான படைப்பு எனலாம். இதில் பெரும்பாலானவர்கள் பெயர் மாற்றப்பட்ட உண்மையான கதாபாத்திரங்கள். இதில் நண்பர்கள் கெளசர் மற்றும் பிர்தெளஸ் பாஷா இருவரின் சுயநலமில்லாத தன்னார்வ தொண்டுகளைப் பற்றிப் பறைசாற்றியிருப்பது மகிழ்ச்சியளித்தது. அவர்களின் பெயர் மாற்றாமல் அப்படியே தந்திருப்பது இன்னும் சிறப்பு. இந்த ஒமான் பெண்மணி விஷயத்தைப் பற்றி நான் தான் முதலில் பிர்தெளஸ் பாஷாவிடம் சொன்னேன், எண் தந்தேன். அத்தோடு என் வேலை முடிந்தது. மிகவும் கஷ்டப்பட்டுக் காய்கள் நகர்த்திச் சாதித்ததெல்லாம் அவர்தான். எவ்வளவு சிரத்தையாக அதனைக் கையாண்டார் என்று முழுவதும் அறிந்து இருந்ததால் அதனைக் கதையாக வாசிக்கும்போது அவ்வளவு சுவையாக இருந்தது.
சிவசங்கரி வசந்த்தின் முதல் நூல் என்று சொல்ல முடியாத வகையில் மிகவும் சரளமாகத் தோய்வில்லாமல் சம்பவங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். முதல் நூலே ஒரு புதினம் என்பதனால் அதில் அவருடைய தன்னம்பிக்கை தெரிந்தாலும், அதனை எங்கள் குழுமத்தில் சொல்ல தயங்கியது முரணாகத் தோன்றியது. அதைப் பற்றியும் அவரிடமே கேட்டுப் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். இவர் இவ்வளவு நன்றாகத் தன் முதல் நூலை கொண்டு வந்திருப்பதற்குக் காரணம் ’புக்பெட்டில்’ அவர் எடுத்துக் கொண்ட எழுத்துப் பயிற்சி எனலாம். எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் எப்படி எழுதி கொண்டிருந்தவர்கள் என்பதை அறிவேன் என்பதால், அவர்களின் எழுத்தில் திடீரென்று தெரிந்த முதிர்ச்சியும், மாற்றமும், ஒருவித ஈர்ப்பும், இதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பயிற்சியினால் மட்டுமல்ல, அதனைச் சிவசங்கரி போன்றவர்களின் சுய முயற்சியினாலும், அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவென்றால் மிகையில்லை.
இன்னும் பல நல்ல படைப்புகளோடு வர
வாழ்த்துகள்
Sivasankari Vasanth.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி