Thursday, August 31, 2006

சின்ன சின்ன ஊடல் - குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்

'எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்' என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு 'டோனட்' வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு மகிழ்ந்தனர். அவள் அணிந்த புத்தாடையில் அவள் அழகாக இருக்கிறாள் என்று அலுவலகத்தில் உள்ள எல்லா நபர்களும் கூறினாலும் அவள் அந்த வார்த்தையை தன் காதலிடமிருந்து எதிர்பார்த்து, அலுவலகம் முடிந்தவுடன் அவன் சந்திப்பிற்காகக் காத்திருந்தாள். அலுவலகம் முடிந்த பிறகு இருவரும் சந்திப்பது வழக்கம்.

மணி 6.15 ஆனதும் காதலன் விக்ரமுக்கு செல்பேசியில் அழைத்தாள்.

"கண்ணா, நான் கிளம்புறேன்" என்றாள் - அவன் அவளைக் காக்க வைத்ததால், செல்லக் கோபத்தில்.

"கிளம்புறியா? சரி செல்லம் கிளம்பு" அவனிடமிருந்து பதில் வந்தது. 'நான் வருவேன் என்று தெரிந்தும்
ஏன் கிளம்புகிறாள்?' என்று மனதில் அவள் கோபத்தை புரிந்தவனாக எப்படியும் அவளை 'சுருதி மியூசிக்கில்' பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு உத்தரவு கொடுத்துவிட்டான் அவன்..

அலுவலகம் முடிந்தபின் இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவள் செல்லும் வீணை பள்ளிதான் 'சுருதி மியூசிக்'.

அலுவலகத்தில் வேலைப் பளுவில் மூழ்கிவிட்டதால் அவனுக்கு நேரத்திற்குக் கிளம்ப முடியாமல் போனது.

'கிளம்புறேன்னு சொல்லிக் கூட ஒரு வார்த்தை, இரும்மா வந்திடுறேன்'னு சொல்ல தோணுச்சா?' என்று
எண்ணியவளாக அலுவலகத்தில் இருந்து கீழே வந்தாள். அப்படி நினைத்தாலும்,

அலுவலகத்திற்குக் கீழே தன் வாகனம் அருகே வந்து நிற்பான் விக்ரம் என்று எதிர்பார்த்து அவள் கண்கள் இங்கும் அங்கும் தேடியது. ஏமாந்தவளாய் வண்டியை கிளப்பிக் கொண்டு விரட்ட ஆரம்பித்தாள்.. போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததாலும், அவனை எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலும் வேகம் கூடியது. வண்டி ஓட்டியபடியே மறுபடியும் அவனை செல்பேசியில் அழைத்தாள், ஒலித்துக் கொண்டே இருந்தது அவன் கைப்பேசி,

கோபத்தில் இணைப்பை துண்டித்து அவள் கைப்பேசியை பக்கத்து இருக்கையில் எரிந்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு செல்பேசி ஒலிக்கவே, எடுத்து காதில் வைத்தாள். - அவனேதான்

"ம்ம், சொல்லுங்க" அவள் குரலில் கோபம் தணியவில்லை.

"எங்கடா இருக்க?" கனிவாகக் கேட்டான் விக்ரம்.

"நீங்க எங்க இருக்கீங்க?" ஒருவேளை பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டு கண்ணாடியில் அங்கும் இங்கும் தேடிய படி கேட்டாள்.

"நான் இப்பதாண்டா கிளம்பினேன், ரோடு காலியா இருக்கு, அதனால் வண்டி பறக்குது" என்றான்
அவள் கோபத்தை கண்டுகொள்ளாமல்.

"ம்ம் சாருக்கு 'கிளப்'புக்கு போக அவசரமோ?!" என்றாள் எரிச்சலாக.

'கிளப்' என்பது சீட்டு விளையாடி அரட்டை அடிக்கும் 'கிளப்' அல்ல, அவன் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுப்பான். அந்த இடத்தைதான் 'கிளப்' என்று கேட்கிறாள்.

"பசங்களுக்கு இன்னிக்கு விடுமுறதான?! அதான் மதியானமே போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்திட்டேன்" என்றான் அலட்டலாக.

'ஓஹோ! அதான் ஐயா நேரத்திற்கு வேலையை முடிக்க முடியாம, சீக்கிரம் கிளம்பி வந்து என்னப் பார்க்க முடியாம இருந்த காரணமோ' என்று மனதில் நினைத்துக் கொண்டதில் இன்னும் சூடேறியது அவளுக்கு.

வண்டியை இன்னும் விரைவாக்கினாள். கொஞ்ச நேர மவுனத்திற்கு பிறகு "சரி என் வீணை கிளாஸ் வந்திடுச்சு நான் போறேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் வீணை வகுப்புக்கு வந்து நிற்கும் போது பின்னால் விக்ரமுடைய 'காம்ரி' தெரிந்தது.

இருப்பினும் காத்து கிடக்கட்டும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள். தவமாக தவம் கிடந்தாலும், காதலிக்காக என்பதால் 45 நிமிடம் வெளியில் காத்துக் கொண்டு இருந்தான் அவன். இவள் இப்படி அடிக்கடி அவனைக் காக்க வைப்பதால், நேரத்தைப் போக்குவதற்காக வண்டியில் நிறைய புத்தகம் வைத்திருப்பான். புத்தகத்தின் உதவியில் நேரம் பறந்தது. வெளியில் வந்தவள் அவனைப் பார்க்காதது போல் வண்டி எடுத்தாள்.

அவனைக் கண்ணாடியில் பார்த்து 'துத்துத்துத் பாவம் கண்ணா நீ, காத்திருந்தியா, நம்ம போற வழியில் நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்' என்று மனதிலேயே பேசிக் கொண்டாள்.

அவன் இவளைப் பின் தொடர்ந்தான். மறுபடியும் செல்பேசியில் இணைந்தனர். அவன் பின்னால் வண்டியில் இருக்கும் சந்தோஷம் தன் குரலில் தென்படாமல், அவனை பார்க்காதது போலவே பேச்சைத் தொடங்கினாள் "என்ன வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?"

"இல்லடா, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் 'சிக்னலில்' நிற்கிறேன்" அவனும் விடாமல்,

அவளுக்கும் தான் பின்னால் இருப்பது தெரிந்திருக்கும் என்று தெரிந்தும், தான் அவளைப் பார்க்காமல் வீடு வரை சென்றதாக ஊற்றினான்.

கண்ணாடியில் அவனைப் பார்த்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அம்மா தேடப் போறாங்க" என்றாள் கிண்டலாக.

அவன் கார் 'டிராக்' மாறி அவளின் இடது புறத்திற்கு வந்தது.

"கண்ணா, இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பி பாரு" அவளைப் பார்த்தபடி பின்னால் வேகமாக வரும் வண்டிகளுக்கு வழி தராமல், இவளுடைய காரின் வேகத்திலேயே வண்டியை செலுத்திய படி கேட்டான்.

ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவன் பக்கம் திரும்பாமல்

"எங்கே எங்கே?" என்றாள் தேடுவது போன்ற பாவனையில்.

பின்னால் வரும் வண்டி விளக்கை அணைத்து அணைத்துக் காட்டவே, அதே வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விரட்டி வேறு பக்கம் திரும்பினான். இதை சற்றும் எதிர்பாராத சுதா, "செல்லம், அந்தப் பக்கமா எங்க போற?" என்றாள் திகைப்பாக.

அவள் திரும்பாத கோபத்தில், "ம்ம் கிளப்புக்கு தான்" என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

அதைக் கேட்டவுடன் தாங்காமல் இவள் தொண்டை அடைத்தது. "மதியானமே போய்ட்டு வந்துட்டேன்னீங்க" என்றாள் ஏமாற்றத்தை அடக்கிய படி.

"சும்மா சொன்னேன். அதான் உன்னை பார்க்க வீணை கிளாஸுக்கு வந்தேன். நீதான்

கண்டுக்காம போன. பக்கத்தில் வந்து கொஞ்சம் 'திரும்பிப் பாருடா'ன்னு கெஞ்சினேன், ரொம்ப அலட்டிக்கிட்ட, இப்ப நான் எங்க போனா உனக்கு என்ன? விடு" என்றான் - அவள் கோபம் இவனுக்கு ஒட்டிக் கொண்டதுபோல.

"சாரிடா கண்ணா, சத்தியமா கொஞ்ச நேரம் இப்படி தெரியாதது மாதிரி விளையாடிட்டு

ஒரு 'ஸ்டார் மார்டில்' நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரெண்டு பேர் கோபத்தையும் தணிக்கலாம்ன்னு நெனச்சேன்,

ஏமாத்திட்டேடா. என்கிட்ட ஏன் கிளப்புக்கு மதியானமே போனேன்னு பொய் சொன்ன, அதனாலதான் ..." என்று அவள் சிணுங்கினாள்.

"என்ன ஏமாத்த நினச்சு நீ ஏமாந்திட்ட, அதற்கு நான் என்ன செல்லம் செய்ய முடியும்?.

சரி இன்னக்கி இல்லாட்டி என்ன நாளைக்கு சந்திப்போம்ல" என்றான் திடமாக.

ஆறுதலாக அவன் பேசினாலும் ஏமாற்றத்துடன் வாடிய முகமாய் வீடு வந்தாள் சுதா.

எல்லோரும் அவள் அழகாக இருக்கிறாள் என்று சொன்ன அந்த புது ஆடையை அதிர்ஷ்டக் கெட்டது என்று ஒதுக்கி வைத்தாள்.

ஊடலில்தானே காதலின் வலிமை தெரிகிறது.

Saturday, August 26, 2006

'வேட்டையாடு விளையாடு'

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை
பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்து
விட்டு மக்களும் 'சுமார்', 'போர்', 'ஒருவாட்டி பாக்கலாம்', 'இது குறுந்தகடுல பாக்கதான் லாயக்கு', 'பாட்டுக்காக வேணும்னா படம் ஓடலாம்' என்றெல்லாம் சவடால் விடுகிறார்கள். அதைவிட பகிரங்கமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு படத்தை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வாரம் முதலிடத்தை பிடித்த படமென்று ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் 'தெனாவட்டாக' உட்கார்ந்து கொண்டு. பல வாரத்திற்குப் பிறகு அதே படம் கீழே இறங்கி ஆறுவது இடத்திற்குப் போகும் போது படத்தில் உள்ள குறைகளை கூறுபோடுகிறார்கள். எதன் அடிப்படையில் விமர்சனமென்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

படத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம். அப்படிச் செய்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.


'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு காக்கி சட்டையே பொருந்தாது ஆனாலும் 'காக்கி சட்டை', 'சூரசம்ஹாரம்', 'குருதிபுனல்' என்ற எல்லா படங்களிலுமே அவ்வளவாக காக்கி சட்டையே போடாமல் ஒப்பேத்திவிடுவார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் கமல் அவ்வாறே சமாளித்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பவருக்கு காக்கி உடுப்பு அதிகம் தேவையில்லைதானே? காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி ராகவனாக கமல், தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரகாஷ்ராஜின் மகளின் கொலையில் ஆரம்பித்து நியூயார்கில் ஆரோக்கியராஜாக வரும் பிரகாஷ்ராஜின் கொலை விசாரணையில் தொடர்ந்து, வில்லன்களை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் முடிகிறது. 'நேர்மை'யில் வழக்கமான படம் போலவே மனைவி கயல்விழியாக வரும் கமலினி முகர்ஜியை இழந்து விடுகிறார். நியூயார்கில் ஆராதனாவான ஜோதிகாவின் சந்திப்பு காதலில் முடிகிறது. 'தெனாலி'க்கு பிறகு மீண்டும் கமல்- ஜோதிகா இணைந்துள்ளனர். பாட்டைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் காதல் காட்சியில்லாதது படத்தின் பலமா பலகீனமா என்று படத்தின் வெற்றி தோல்விகள் சொல்லும். கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு.

நன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன், அவருக்கு சரி ஜோடியாக அமைந்து விட்டனர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.

படத்தில் இரத்தக் காட்சிகள் அதிகம். பிணமாக நடித்தவர்கள் அனைவருமே நிஜ பிணமாகவே நடித்திருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு விட்டார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் ஆரோக்கியராஜ் மனைவி சித்ராவின் சடலத்தைக் காட்டும் போது கண்கள் லேசாக
அசைவதை உணர முடிந்தது. படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு முக்கிய வேடம் மற்றபபடி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, அந்த இரு வில்லன்கள் மட்டுமே படத்தில் கனமான பாத்திரங்கள். 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பராக வரும் அந்த போலீஸ் அதிகாரிதான் இந்த படத்தின் வில்லன் அமுதன். அமுதன் மற்றும் இளா இரண்டு வில்லன்களின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வெறி கொண்ட பார்வை, அவர்கள் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது. குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே 'ஓ....' 'F...' & 'B...' (Food & Beverage இல்லை) வார்த்தைகளை நம் காதுகளில் கேட்காத அளவுக்கு ஓசையை அடக்கியிருக்கிறார்கள். கமலினி தெலுங்கில் பிரபலமாம் தனக்குரிய பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தாமரையின் வரிகள் மனதில் பதிந்தே விட்டன. என்னமா எழுதுறாங்க தாமரை...

'பார்த்த முதல் நாளே' பம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் குரலில் பாட்டு நன்றாக இருந்தாலும், பைக்கில் போகிற காட்சி வரும் போது பழைய படத்தில் வருவது போல் பைக்கை ஒரே இடத்தில் நிற்கவைத்து பின்னாடி படம் ஓட்டி இருக்கிறார்கள். கமல் பைக் ஓட்ட பயந்தாரா அல்லது கமலினி பின்னாடி உட்கார மறுத்தாரா, பயந்தாரா என்று தெரியவில்லை.

வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே! - எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஹரிஹரன், விஜய், நகுல் இணைந்து கலக்கியிருக்கும் இந்த பாடல் வரிகள் அருமை. ஒரு நாள் முழுவதும் கமல் - ஜோதிக்கா மான்ஹத்தனில் (Manhattan) சுற்றிப்பார்த்து நாளை கழிக்கும் அழகான பாடல். அதிலும் அழகான ஐந்து ஆங்கிலேய வடிவான ஆண்கள் கிளோஸப்பில் 'வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே!' என்று பாடுவதும், அந்த வீதி மக்கள் பின்னாடியே வந்து பாடுவதாக வரும் போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

உயிரிலே - மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்.

கற்க கற்க - படத்தின் முதல் பாடல். தேவன், திப்பு, நகுல் பாடிய விரைவான பாடல்.

நெருப்பே சிக்கிமுக்கி - அது ஏனோ தெரியவில்லை அடிதடி படமென்றாலே ஒரு ஐட்டம் நம்பர் அவசியமாகிவிடுகிறது. அதுவும் கமல் படத்தில் ஒரு முத்த காட்சியாவது எதிர்பார்த்து வரும் அன்பர்கள் ஏமார்ந்து விடாதபடி இந்த பாடல் அமைந்துள்ளது. பிரான்கோ, சவ்மியா ராவ், சோலார் சாய் பாடிய பாடல் இது.

கண்டிப்பாய் எதிர்பார்ப்பை ஏமாற்றாத பாடல்கள். ஆனால் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாய் இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் வெற்றி, படமாக்கிய விதத்திலுமிருக்கிறது.

ரினைசன்ஸ், ஹார்ட் ராக், பெரிய பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான வாகனங்கள் என்று கேமிரா நியூயார்க்கை ஒரு வலம் வந்தாலும் பெரிய பிரமிப்பாக ஏதும் தோன்றவில்லை எல்லாம் துபாயிலும் இருப்பதாலோ என்னவோ. மேட்ரிக்ஸ் II, பிளேட் III என்ற படங்களுக்காக உபயோகித்த அதே உபகரணங்கள் என்றெல்லாம் செய்தி வந்தமையாலும், மின்னலே, காக்க காக்க என சாதனை படைத்த கெளதம் - ஹாரிஸ் ஜோடி மூன்றாவதாய் இணைந்த படம் என்பதாலும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு.

படத்தின் டைட்டில்களைக் கவனித்தேன் ஏனோ எல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது, பெயர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வந்து மறைந்த பிறகு ஒப்புக்காக தமிழிலும் காட்டப்பட்டது. நாள் கிழமைகளும் ஆங்கிலத்திலேயே காட்டினார்கள். ஒருவேளை எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியாமல் இருப்பத்தில்லை என்று நினைத்ததாலோ என்னவோ.

படம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்டது: 'நம்ம ஊரிலயே முடிச்சிருக்கலாம் (தமிழ்நாடு) நியூயார்க் வரைக்கும் போகவே அவசியமில்ல'. இதை கேட்கும் போது குங்குமத்தில் படித்த 'சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்' என்பதுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் காசை கரியாக்கியிருக்கிறார்கள் நியூயார்க்கில்.

ஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'.

மற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Tuesday, August 22, 2006

துபாயில்...

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?

ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல 'அல்லாஹ்'ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.



இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா உடைமைகளும் அவனுடையதுதானே? இதில் என்ன அதிசயம்?

அரபிக்கடலில் கிடைக்கும் சஃபி (Safi) என்ற மீன் மீதுதான் இந்த எழுத்துக்கள். விஞ்ஞான ரீதியான பெயர் சிகாரியஸ் கனாலிக்குலாட்டஸ் (Sigarius Cunaliculatus) இந்த மீன் தற்போது, தெய்ரா மீன் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Monday, August 14, 2006

அம்மா தாயே...







யாருடா அது பதிவு போட்டு பிச்ச கேட்குறாங்கன்னு பார்க்கிறீங்களா? பிச்சைதாங்க இது ஒரு வகையான வேண்டுகோள் பிச்சைன்னே வச்சிப்போம்.

பசின்னா பத்தும் பறந்துடும்ன்னு படிச்சவங்க, பெரியவங்க சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த உலகத்துல பல பகுதில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாதவங்க எத்தனையோ சனங்க இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நம்ம வீட்டுல தின் பண்டங்கள, சமச்ச பதார்த்தங்கள வீணடிக்கிறோம். தெரிஞ்சா செய்றோன்னு கேள்வி வரும். தெரிஞ்சோ தெரியாமலோ மிச்சம் வைக்கிறீங்களா இல்லையா, அது தவறுன்னு நெனச்சு மட்டும் என்ன பிரயோசனம், எப்ப திருத்திக்கப் போறீங்க? பெரும்பாலும் சாப்பாட வீணாக்குறது குழந்தைங்கதான், அதற்கு காரணம் பெரியவங்க நீங்க தானே? இல்லையா பின்ன..

தாய்மார்களுக்கு எப்போதும் தன் குழந்தைகள் அதிகம் உண்டு ஆரோக்கியமா இருக்கணும்னு ஆவல். அதில் தவறில்லை. ஆனால் தன் குழந்தை இவ்வளவுதான் சாப்பிடுவாள்/ வான் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வீணாக்கும் அந்த உணவு வேறு குழந்தையின் பசியை தீர்க்கும் என்று அறிந்திருந்தாலே இந்த அலட்சிய போக்கு வராது.

ஒரு குழந்தை மிச்சம் வைக்கும் அந்த உணவு பண்டத்தை வீட்டில் யாராவது சாப்பிட்டு முடித்து விரயம் செய்யாமல், குப்பைத்தொட்டியில் போடாமல் இருந்தாலே உத்தமம். நிறைய சமைத்து விட்டு மிஞ்சி, வீணாக்குவதற்கு பதிலாக அளவாக சமைத்தாலே போதுமானது.

சிலர் பழங்களை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக நிறைய வாங்குவார்கள். வீட்டில் ஆர்வமாக யாரும் சாப்பிடாததால் அழுகி, கடைசியில் குப்பைக் கூடைக்கு செல்லும். இப்படி வீண் விரயம் செய்வதை விட தேவையானவையை மட்டும் வாங்கி உண்ணலாமே?

வீட்டில், பார்க்கவே ருசியாக இருக்கும் உணவை, தட்டு நிறைய அள்ளிப் போட்டு நிரப்பிக் கொள்வோம், வாயில் வைத்த பிறகு 'நல்லாவே இல்ல வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்து விடுவோம். அப்படி செய்யாமல் கொஞ்சம் முதலில் வைத்து ருசி பார்த்து மீண்டும் வைத்துக் கொள்ளலாமே?



விரயம் செய்வதை விட வீட்டில் வேலை செய்பவரிடம் தவறாக நினைக்கவில்லை என்றால் தரலாம், இல்லை பிச்சைக்காரர்களுக்கு தரலாம் அதுவும் வாய்பில்லை என்றால் குடியிருப்பு காவலாளியிடம் கொடுக்கலாம். இவர்களெல்லாம் ஏழ்மை அறிந்தவர்கள், பசி புரிந்தவர்கள் வீணாக்காமல் கண்டிப்பாக பசியோடு இருக்கும் வயிறுக்கு சேர்த்து விடுவார்கள். இதெல்லாம் முடியாவிட்டாலும் பூனை, நாய், பறவைகளுக்காவது போடலாம். ஆனால் தயவு செய்து யாருக்கும் பயனில்லாத வகையில் தூர எறிவது சரியில்லைதானே?

குற்ற உணர்வில் எழுதும் பதிவாகவும் இதை கொள்ளலாம். ஏனென்றால் துபாயில் பிச்சைக்காரனே இல்லை. அளவாக சமைத்தாலும் எஞ்சிவிடுவதை என்ன செய்வது? மறுநாள் வைத்து சாப்பிட முடியாமல் சமயங்களில் விரயமாகிவிடுகிறது.

அப்படித்தான் போன வாரம் அலுவலகத்திற்கு உணவு கொண்டு போனேன் எல்லோரும் சாப்பிட்டும் நிறைய மிஞ்சிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் கீழ் மட்டத்தில் வேலைப் பார்ப்பவரிடம் கொடுத்தேன். மறுநாள் நான் கொடுத்த பாத்திரத்தின் மீது ஒரு சீட்டு அதில் 'நன்றி. நான் மனிதன் கோழி அல்ல' என்று எழுதி இருந்தது. நிறையதானே தந்தோம் பற்றாமல் போய்விட்டதோ என்று எண்ணிக் கொண்டேன். மறுநாள் அதை விட கொஞ்சம் நிறைய மிஞ்சவே, எடுத்துக்குறீங்களான்னு அவரிடம் கேட்டேன். "நான் எழுதியத படிக்கலையோ நீங்க" என்று கேட்டதும். "கோழி சாப்பிடுற அளவை விட கூடத்தான் இருக்கு" என்றேன். அதற்கு அவர் சொன்னார் "நான் எழுதியது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். எங்க ஊர்ல சாப்பிட்டுவிட்டு கையை நக்காம கோழிக்கு காட்டுவோம் அது கொத்திக் கொள்ளும், வயறு நிறைந்ததா நாங்க சந்தோஷப்படுவோம். அதுமாதிரி இருக்கு நீங்க செய்றது" என்று தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார். குத்தலாக இருந்தது எனக்கு. சாப்பிட்டு மிச்சம் வருவதை சாப்பிடமாட்டோம், எனக்கு என்று தனியாக எடுத்து வந்தால் சாப்பிடுவோம் என்று அவர் சொல்லவந்த செய்தி பிறகு புரிந்தது. என்ன செய்வது நாம ஒண்ணு நெனச்சா மத்தவங்க அதயே வேற மாதிரி நினைக்கிறாங்க.

சாப்பாடு வீணாகும் போதெல்லாம் இந்தப் படங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து நிற்கிறது, மனசு பதறுகிறது. இப்பவெல்லாம் எல்லோரையும் மிச்சம் வைக்காதீங்க, வீணாக்காதீங்கன்னு சொல்லி விரட்டியே எல்லாத்தையும் சாப்பிட்டு முடிக்கச் செய்கிறேன், அதுவே பெரிய மன ஆறுதல். நீங்களும் செய்ய முயற்சிப்பீங்களா?

Monday, August 07, 2006

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்
பெற்ற உறவில்லை
பின்னாளில்
உற்ற உறவும் இல்லை

உன் சந்திப்பே
என் சந்தோஷமானது
மலிவாக மகிழ்ச்சி என்றால்
அதன் மறுபெயர் நீ என்பேன்
என் பிரச்சனைகளுக்கு
யோசனை கிடங்கானாய்
பாதிப்பில் பாசி படிந்தால்
பூசி தேற்றுபவன் நீ தானே
என் அறிவு வறுமையிலும்
ஆதரவாய் நீ நின்றாய்

நீயே என்
இன்பத்தின் ஆரம்பம்
தவிப்பின் துணை
தனிமையின் தீர்வு
துன்பத்தின் தேடல்

என் உளறல்களையும்
காது கொடுத்து கேட்டாய்
பதிலாக கனிவாய் மொழி பேசினாய்
கருணை பார்வை வீசினாய்
தேவைக்கு தோள் கொடுத்தாய்

என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்
புதிய பிரதிநிதியே
நீ என்
சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,
காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோ
இல்லாதபோது
உணர்வால் உணர்த்திய
உறவில்லாத உறவாக
எங்ஙனம் முளைத்தாய்?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி