Wednesday, February 21, 2007

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன்.

என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் என்றால் என்னது, எப்படி இருக்கும்?" என்று அப்பாவியாக கேட்டாள். ஏனெனில் அவள் ஒரு ஐரோப்பிய லெபனான்காரி. விளக்கம் தரும் முன்பே அவள் "ஓ! அந்தக் கவர்ச்சி உடைதானே?" என்று நக்கலாகச் சிரிக்க. "என்ன சொல்கிறாய்?" என்றேன் ஆச்சர்யமாக. "ஆமாம், ஒரு நீளமான துணியைச் சுற்றிச் சுற்றி எதையுமே மறைக்காமல் கட்டுவீர்களே? அதுதானே!! " என்றாள் மறுபடியும் ஒரு புன்முறுவலுடன். எனக்கு சரியான கோபம், அவள் நமது தேசிய உடையைச் சொல்கிறாள் என்று புரிந்தது, இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு "அதன் பெயர் 'சேலை'. ஆனால் நீ சொல்வது போல் கவர்ச்சியான உடை இல்லையே?!" என்றேன். " இரு. உனக்குக் காட்டுகிறேன்" என்று கூகிளில் தேடினேன். உடன் வந்து விழுந்தது இந்த படம் தான் (விக்கிபீடியாவில்). நொந்து போனேன்.
இத காண்பிச்சா முடிவே கட்டிடுவான்னு தேடித் தேடி ஒரு ஒழுக்கமா புடவை கட்டியிருக்கும் பெண்ணை காண்பித்து தப்பித்துக் கொண்டேன்.


முன்பெல்லாம் 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்ற சொற்களை அடிக்கடி கேட்டிருப்போம் இப்போது அந்த சொற்கள் காணாமலே போச்சு. மற்றவர்கள்தான் அப்படின்னா தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ப்பெண்களும் இப்படித்தானே இருக்கிறார்கள்! சரி இங்கதான் இப்படியென்றால் சென்னையில் இதைவிட படு மோசம். உள்ளாடையை மறைக்கமட்டுமே முதுகில் சின்ன மறைவு, அதுவும் போய் முழுதுமாக திறந்தவெளி ஜன்னல், இறக்கமாக தொப்புள் தெரியும் படி அடுக்கிய சேலை. நம்ம தேசிய உடையே உருமாறி வருகிறது ரொம்ப வருத்தம்தான்.


சரி சேலைதான் அப்படியென்றால் மற்ற உடைகளும் அப்படித்தான் இருக்கிறது.
- இறுக்கமான மேல்சட்டை, புடைத்துக் கொண்டிருப்பதை கண்ணால் அளந்து கொள்ளுங்கள் என்பது போல.
- இறக்கமான கழுத்து வைத்து மேல் கோடு தெரிவது.
- தொப்புள் தெரிய மேல்சட்டையை குட்டையாக அணிவது
- எல்லாம் தெரியும்படி கண்ணாடி உடை அணிவது.
இப்படி 'பேஷன்' என்ற பெயரில் மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அப்படியே மாறி வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஊடகம் மற்றும் திரைப்படங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கு நாம் இடுப்பு தெரிய சேலை கட்டுவது அதாவது வயிற்றைக் காட்டுவது கவர்ச்சி. இலைமறைவாய் காய்மறைவாய் தெரியாமல் மேலே அப்படியே காட்டுவது, தொடை தெரிய கவுன் போடுவது நமக்கு கவர்ச்சி. கேரளாவில் மேல் துண்டு போடாமல் இருப்பது கவர்ச்சியில்லை ஆனால் குட்டைப் பாவாடை போட்டால் கவர்ச்சியாம். இப்படி இடத்திற்கு இடம் வெவ்வேறு உறுப்புகள் கவர்ச்சி.

இதையெல்லாம் விட பெரிய கொடுமை, கீழ் உள்ளாடை தெரிய கால்சட்டையை இறக்கமாகப் போடுவது. உள்ளே 'ஜி' தெரிந்தால் அதிலும் இவர்களுக்குப் பெருமை. முதலில் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என் சக தோழியிடம் உள்ளாடை தெரிகிறது என்று சுட்டிக்காட்டினேன் (சேலையை கவர்ச்சி என்று சொல்லியவள் இல்லை இவள் இந்தியன் தான் ஆனால் இந்தி பேசுபவள்). அதற்கு அவள் "இப்ப இதுதான் பேஷன்" என்று 'பேஷனாக' சொல்லிவிட்டு சரி செய்யாமலே சென்றாள். கருமம் என்று நினைத்துக் கொண்டேன். இப்ப அந்த பேஷனும் போய் இன்னும் கொடுமையான 'பேஷன்', அதாவது கால்சட்டையை ரொம்ப கீழ் இறக்கிப் போட்டு கீழ் கோடு தெரிவது. மேல் கோடு காட்டியது போதாதென்று இப்போது கீழ் கோடு காட்டுகிறார்கள். எங்க போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.
கல்லூரி பெண்களிடம் இப்படி போனால் ஆண்கள் பார்க்காமல் கேலி செய்யாமல் என்ன செய்வார்கள் என்று கேட்டால். 'இப்படி ஆடை உடுப்பது எங்க இஷ்டம் அதில் உங்களுக்கென்ன கஷ்டம், பார்க்காவிட்டால் அவர்களுக்கு இல்லை நஷ்டம்' என்று டி.ரா. பாணியில் பதில் வருகிறது. 'எப்படியும் உடை அணிவோம் மற்றவர்கள் ஏன் பார்க்கிறார்கள். ஆண்கள் மட்டும் மேல் சட்டையில்லாமல், லுங்கியை மடித்து மேலே கட்டுதல் என்று இருக்கலாம், ஆடைகளை எங்கள் விருப்பத்திற்கேற்ப அணியக் கூட சுதந்திரம் இல்லையா?' என்று பெண்ணீயம் பேசும் விதண்டாவாதிகளை ஒன்றும் சொல்வதற்கில்லை.

இன்று என் மகளின் பிறந்தநாள். அவளுக்குச் சென்னையிலிருந்து வாங்கி வந்திருந்த கால்சட்டையும், கையில்லாத மேல் சட்டையும் அணிந்தேன். அந்தக் கால்சட்டை கீழே இறக்கமாக அவள் உள்ளாடை தெரியும் படி இருக்க. நான் ஒழுங்காகப் போட்டுவிட்டேன். அவள் கேட்கிறாள் "ஏன் ம்மா இந்த கால்சட்டை வாங்கினீங்க, ரொம்ப இறக்கமா இருக்கு என் ஜட்டிலாம் தெரியுது" என்று சலித்துக் கொண்டு தூக்கி தூக்கிவிட்டுக் கொண்டாள். அந்த மூன்று வயது சின்ன குழந்தைக்கு இருக்கும் அறிவும் கூச்சமும் துளியாவது 'பேஷன்' என்று அலையும் வளர்ந்த பெண்களுக்கு வராதா?

26 comments:

லொடுக்கு said...

//ஆண்கள் மட்டும் மேல் சட்டையில்லாமல், லுங்கியை மடித்து மேலே கட்டுதல் என்று இருக்கலாம், ஆடைகளை எங்கள் விருப்பத்திற்கேற்ப அணியக் கூட சுதந்திரம் இல்லையா?'
//
நண்பர் பாலபாரதிக்கு உள்குத்து இல்லையே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க சரியா உடை உடுத்தலன்னா தப்புதான். அதுக்காக தப்பா இருக்கற போட்டோ எல்லாம் எடுத்து போட்டு இருக்கீங்களே அது சரியா ...எடுத்துக்காட்டு எதுக்கெல்லாம் குடுக்கறதுன்னு இல்லியா? :-(

Jazeela said...

எப்பா நல்லா இருப்பீங்க வம்புல மாட்டிவிடாதீங்க.

எந்த உள்குத்தும் யாருக்கும் வைக்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாசிலா said...

ரொம்பவும் அடக்கமா உடுத்தினாலும் 'பழைய பஞ்சாங்கம்' என்கிற பேச்சுக்கு ஆளாகுவார்களே?
இக்காலத்திய ஆடம்பர மற்றும் வெளிவேட உலகில் நீங்கள் சொல்வது எடுபடுமா?

சென்ஷி said...

//பெண்ணீயம் பேசும் விதண்டாவாதிகளை ஒன்றும் சொல்வதற்கில்லை.//

சிரிப்புதான் வருது... :)))

சென்ஷி

Anonymous said...

//"ஏன் ம்மா இந்த கால்சட்டை வாங்கினீங்க, ரொம்ப இறக்கமா இருக்கு என் ஜட்டிலாம் தெரியுது" என்று சலித்துக் கொண்டு தூக்கி தூக்கிவிட்டுக் கொண்டாள்//

ஜட்டி தெரியக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்தா அப்டித்தான் சொல்லும் சின்னப்புள்ள

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு கட்டுரை.

நமது புடவை கொஞ்சம் கவர்ச்சியான உடை என்பது மறுப்பதற்கில்லை. அதை சரியாக கட்டாமல் பேஷன் ஷோவில் வருவது போல இப்பொழுது பலரும் கட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

சுடிதார் கூட துப்பட்டா என்று ஒன்று வருகிறது. இப்போதெல்லாம் இதை வெறும் ஸ்கார்ப் ஆகத்தான் பயன் படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில் லெபனீஸ்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் போடும் உடைகளை கவனிக்கையில் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. அலுவலகத்திற்கே பலர் இறுக்கமான உடைகளை போட்டுக்கொண்டுத்தான் வருகிறார்கள்.

Jazeela said...

//எடுத்துக்காட்டு எதுக்கெல்லாம் குடுக்கறதுன்னு இல்லியா? :-( // லட்சுமி, இல்லாததை இருப்பதாக படம் காட்டவில்லையே. உள்ளது உள்ளபடியே போட்டிருக்கிறேன் அவ்வளவுதான். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

//இக்காலத்திய ஆடம்பர மற்றும் வெளிவேட உலகில் நீங்கள் சொல்வது எடுபடுமா? // மாசிலா, பழைய பஞ்சாங்கமா இருக்க சொல்லவில்லை. மற்ற நவீன உடைகளிலும் எத்தனையோ அழகான மறைவான உடைகள் இருக்கும் போது எதற்கு இப்படி என்றுதான் கேட்கிறேன்.

மு. மயூரன் said...

சீரியசாத்தான் கேக்கிறேன், எனக்கு பின்வரும் கேள்விகளுக்கு பதில் தேவை. தயவு செய்து எங்கேயாவது தேடி எடுத்து சொல்வீர்களா?

1. இந்திய நாட்டில் தைக்கப்பட்ட ஆடைகளை அணியும் கலாசாரம் எப்போது, எங்கிருந்து வந்தது?

2. தையற் கலை அறிமுகமாவதற்கு முன் இந்தியப்பெண்கள் என்ன அணிந்தார்கள்?

3. ரவிக்கை, பிரா போடும் பழக்கம் எத்தனையாம் நூற்றாண்டுக்குப்பிறகு இந்தியாவுக்கு வந்தது?

4. ரவிக்கை வருவதற்கு முன் இந்தியப்பெண்கள் மார்பை எப்படி மறைந்த்தார்கள்.

5. இன்றைக்கு இந்தியாவில் எங்கேயுள்ள தலித் பெண்கள் உயர்சாதிக்காரர்களால் இன்னமும் மேற்சட்டை அணிய தடைவிதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

6. பெண்கள் மார்பை மறைத்துத்தான் உடை அணியவேண்டும் என்ற சம்பிரதாயம் எந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது?


7. மார்பை மறைக்கத்தேவையில்லை என்று வாழ்ந்த காலத்தில் வெளித்தெரிந்த மார்பினை பார்த்து எல்லா ஆண்களும் உலகின் எல்லாப்பெண்களையும் சீண்டிக்கொண்டும் பாலியல் ரீதியாக தாக்கிக்கொண்டும், விசிலடித்துக்கொண்டும்தான் திரிந்தார்களா?

Anonymous said...

பரவாயில்லீங்க ஜெஸிலா.. உங்கள மாதிரி நினைக்கிறவங்களைப் பார்க்கும்போதுதான் நம்ம கலாச்சாரம் அழியாம இருக்கும்கற நம்பிக்கை வருது...ஆனா இத நீங்க இப்டி படம் போட்டு விளக்கியிருக்க வேண்டாங்க!!

ஆனாலும் எனக்கென்னவோ,இதையெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத ஐரோப்பா,அமெரிக்காவில், ஆசைக்கு சில நாள், இப்ப‌டி உடுத்தினால் பரவாயில்லைன்னு தோணுதுங்க‌..

உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Jazeela said...

/அப்டித்தான் சொல்லும் சின்னப்புள்ள// அனானி அண்ணா உள்ளிருப்பதை வெளியில் தெரியக் கூடாது. என்று சின்னப்புள்ளைக்கு தன்னாலே தெரிஞ்சிருக்கு.

//அதே நேரத்தில் லெபனீஸ்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் போடும் உடைகளை கவனிக்கையில் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது.// உண்மைதான். நன்றி சுந்தர்.

//கேள்விகளுக்கு பதில் தேவை. தயவு செய்து எங்கேயாவது தேடி எடுத்து சொல்வீர்களா?// உள்ளதுக்கே நேரமில்லை. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது மயூரன். உங்க கேள்விகளோடு ஏவால் எந்த ஆடை அணிந்தார்கள். எந்த பாகங்கள் மறைத்தார்கள் என்பதையும் சேர்த்து பதில் தேடுங்கள். ஒரு வலைத்தளத்தில் பார்த்தேன் ஆனால் அது தடுக்கப்பட்ட வலைத்தளம். இங்கு அமீரகத்தில் தெரியாவிட்டாலும், மற்ற நாடுகளில் தெரியும். கூகிளில் தேடுங்கள் விடை தெரிந்த பிறகு பதிவு போடுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கதிரவன்.

Anonymous said...

people are changing in name of culture.This is unavoidable change if your cultural values are not strong.I am a tamil girl,living in overseas all my life.I never been to my native land all my life.But I am still following my tamil culture and having problem following some of the dress code you have mentioned.Because my culture doesn't allow me to wear such thing.But many of my friends around me are not following our traditional culture.You can say that they are westernized.When your values change,you will also change.This is the fact.Make our future generation realise our true cultural values,then maybe such thing won't happen.But the thing is culture itself is changing.sorry for not typing in tamil.My font got problem.

Jazeela said...

தமிழ் பொன்னு உங்க கருத்துக்கு நன்றி. எனக்கு நவீன உடை அணிவது தவறு என்று நான் சொல்லவே இல்லை. நானும் இங்கு நவீன உடைதான் அணிகிறேன். ஆனால் அதில் ஆபாசம் காட்ட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

Anonymous said...

Edmand Newman

Nice Post sister, I like your feelings.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இல்லாததை இருப்பதாக படம் காட்டவில்லையே. உள்ளது உள்ளபடியே போட்டிருக்கிறேன் அவ்வளவுதான். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.//

உள்ளதை உள்ளபடி காட்டக்கூடாது என்பதற்க்கு தாங்க உடைகளே.
அதுனால தான் கேட்டுகிட்டேன் உள்ளதை உள்ளபடி காட்டுகிற படங்கள் கலாச்சாரத்தை காக்க நினைக்கும் உங்கள் பதிவில் வேண்டாமே என்கிற நல்ல எண்ணத்தில்.

\\நானும் இங்கு நவீன உடைதான் அணிகிறேன். ஆனால் அதில் ஆபாசம் காட்ட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். //

ஆபாச படம் போட்டு விளக்குவது,
படம் முழுவதும் ரத்தத்தை காட்டிவிட்டு கத்தி எடுத்தால் கத்தியால் சாவு வரும் என்று அறிவுறுத்தும் படத்துக்கு இணையாக இருக்கிறதே என்கிற கவலையில் எழுதியது அந்த பின்னூட்டம்.

மு. மயூரன் said...

ஆதாம் ஏவாளுக்கெல்லாம் போகத்தேவையில்லை.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் மார்பை மூடி உடை அணியவில்லை.

இங்கே யாழ்ப்பாண உயர்சாதியினர் ஐம்பது வருடங்கௌள்க்கு முன்பு கீழ்ச்சாதிக்காரிகள் மேற்சட்டை போட்டால் கொக்குத்தடியால் கிழித்தார்கள். அதற்கெதிராக போராட்டம் எல்லாம் நடந்திருக்கு.

இதில் எதுங்க கலாசார உடை?

இரு நூறு வருடங்களுக்கு முன்பு இல்லாமல், வெள்ளைக்காரன் அவ்ந்தபிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ரவிக்கை, பிரா, உள்ளிட்ட சமாச்சாரங்களை கலாசார உடை என்று சொல்லி தூக்கிப்பிடித்துக்கொண்டு, இப்போ மேற்கத்தைய மோகம் எங்கிறீங்க.

பாட்டி குறுக்கு கட்டோட தான் வயலுக்கு வேலைக்கு போனா. அது எங்கள் கலாசார உடை என்று சொல்றீங்களா?

இந்த மாதிரி விவாதங்களில் நேரம் செலவழிக்க விருப்பமில்லை.

அதனால் தான் சில கேள்விகள் மூலம் கிணற்றுக்கு வெளியே கொண்டுபோக முயன்றேன்.

தன்னைத்தானே புனித நூல், கடவுள் தந்தது என்று பீற்றிக்கொள்ளும் ஒரு புத்தகத்தை பிடித்துக்கொண்டு இந்த உலகின் ஒவ்வொரு அசைவையும் பார்க்க முயன்றால் தேங்கி நாறிப்போன ஒரு கலாசாரம் தான் மிஞ்சும்.

அந்த புத்தகம் எந்த புத்தகமாகவும் இருக்கலாம். குர் ஆனாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமான் விசயம், சேலை என்பது வெள்ளைக்காரன் வருவதற்கு சற்று முந்தைய காலத்தில் கூட மார்பு வெளித்தெரியும் ஆடையாகத்தான் இருந்தது.

Leo Suresh said...

ஜெஸிலா,
நல்லா இருந்தது பதிவு என்ற கருத்தை சொல்வதற்கு அந்த படங்கள் தடைசெய்கிறது.வன்முறையெய் அதிகமாக காட்டிவிட்டு வன்முறை தவறானது என்று சொல்லும் படங்களை போல் உள்ளது உங்கள் பதிவு.
லியோ சுரேஷ்
துபாய்

Anonymous said...

//தன்னைத்தானே புனித நூல், கடவுள் தந்தது என்று பீற்றிக்கொள்ளும் ஒரு புத்தகத்தை பிடித்துக்கொண்டு இந்த உலகின் ஒவ்வொரு அசைவையும் பார்க்க முயன்றால் தேங்கி நாறிப்போன ஒரு கலாசாரம் தான் மிஞ்சும்.
//
நண்பர் மயூரன்!

இதில் மதத்தை பற்றிய விமர்சனம் எங்கிருந்து வந்தது?

சரி. ஒவ்வொரு கலாச்சாரமும் ஒரு காலத்தில் தோன்றியவை தான். சேலை கட்டும் கலாச்சாரம் நீங்கள் சொல்வது போல் 200 ஆண்டுகள் புதுமையானதாகவே இருக்கலாம் தான். ஆனால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உடை எப்படியும் உடுத்தலாம் என்கிறீர்களா? இல்லை உடையே வேண்டாம் என்கிறீர்களா?

sundar said...

இவ்வளவு பேர் இத்தனை சொன்ன பிறகு, நான் என்ன சொல்ல ? ரொம்ப கர்நாடகமாய் இருக்கவும் வேணாம் ரொம்ப அதிகமா போகவும் வேணாம்..

Jazeela said...

//வன்முறையெய் அதிகமாக காட்டிவிட்டு வன்முறை தவறானது என்று சொல்லும் படங்களை போல் உள்ளது உங்கள் பதிவு.//

சுரேஷ் மற்றும் லட்சுமி இதே கருத்தை சொல்வதால் நான் விளக்கம் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் இப்படி உடை அணிபவர்களை நாம் தடை செய்ய முடியுமா? அவர்களின் படம்தான் அது. அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லைதான். இருப்பினும் முகமில்லாத படம்தான் போட்டிருக்கிறேன். அதனால் என் செயல் யாரையும் காயப்படுத்த அல்ல. ஆனால் நம் வீட்டு பெண்களை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலிட்ட படங்கள். படமே முகம் சுளிக்க வைக்கிறது என்பதை காண்பிக்கவேப் போட்ட படங்கள் அவை.
//ஆனா இத நீங்க இப்டி படம் போட்டு விளக்கியிருக்க வேண்டாங்க!!// என்று சொன்ன கதிரவன்
//இப்ப‌டி உடுத்தினால் பரவாயில்லைன்னு தோணுதுங்க‌..// என்று முடித்திருக்கிறார். இப்படித்தான் பார்த்து பழகி கடைசியில் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.

மயூரனுக்கு பு.மக்கு வந்து பதிலளித்ததால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க மயூரன், இதே பதிவை வேறு யாராவது எழுதி இருந்தால் மதத்தை அங்கு புகுத்த தோன்றியிருக்குமா உங்களுக்கு?

சங்கர் கணேஷ் said...

Neenga sollurathu sarithan aana intha kaalathula solluratha yaarume keka maatikuraangale...

மு. மயூரன் said...

உங்களை தனிப்பட தாக்கும் எண்ணத்தோடு மததை இழுக்கவில்லை.

நான் அடிப்படைவாதங்கள் பற்றி சொன்னேன். ஏதாவதொரு நூலை, ஒரு கருத்தை பிடித்துக்கொள்ளும் அடிப்படைவாதம்.

அதிலிருந்துதான் மாற்றங்களை எதிர்க்கும் மனோபாவம் வளர்கிறது.

நீங்கள் கலாசாரம் என்று நினைக்கும் ஒரு குறித்த வாழ்க்கைமுறையை பின்பற்றாதவர்களை கண்டபாட்டுக்கு திட்டிதீர்க்கும் மனோபாவம்.

யார் எழுதினாலும் இந்த மனோபாவத்திலிருந்துதான் எழுதவேண்டும்.

ஐயோ கடவுளே!

இது தேவையில்லாமல் நீள்கிறது.

நான் ச
சொல்லவருவதெல்லாம் இதுதான்,


எந்த உடையை மனிதர்கள் உடுத்துகிறார்கள் என்பது பாதிக்கு மேல் அவர்களது விருப்பம் இல்லை.
புறச்சூழல் அவ்வாறு மனமாற்றங்களை உருவாக்குகிறது.

நான் நானாக இருக்க முடியுமானால் அப்படி என்னை நானாக இருக்க அனுமதிக்கும் உடைகளே கண்ணியமான உடைகள் என்பது என் கருத்து.

கலாசாரம் செத்துப்போகிறது ன்று கவலைப்படும் பார்வைக்கோணத்திலிருந்து, மனிதர்கள் தாமாக இருக்க இந்த ஆடைகள் அனுமதிக்கவில்லையே என்ற பார்வைக்கோணத்திலிருந்து உங்கள் விமர்சனம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றது

கலாசார ஆடை என்பது சுத்த அறிவிலித்தனம். கலாசார அடை என்று ஒன்று நிலையாக எந்த இனத்துக்கும் இந்த உலகில் இல்லை.

கலாசாரமே பெரிய வன்முறை, கலாசார ஆடை என்பதும் அதில் ஒரு பகுதி.

பாவப்பட்ட பெண்கள் இந்த வன்முறையிலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

மு. மயூரன் said...

உங்கள் கருத்துக்களை குறை கூறும் நோக்கத்தோடு கருத்துச்சொல்லவில்லை. அத்தோடு சமூக அக்கறையின் அடிப்படையில் தான் உங்கள் பதிவும் அமைகிறது.
அதற்கு பாராட்டுக்கள்.

தனிமனிதர்கள் தாமாய் நினைத்து திருந்த முடியும் என்ற உங்கள் நம்பிக்கையோடுதான் எனக்கு உடன்பாடில்லை.
அத்தோட்டு கலாசாரம் என்பதற்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவம் எனக்கு உடன்பாடில்லாத ஒன்று.

ஒருவருடைய சுயமரியாதையை பாதிக்கும் எந்த உடையும் தவிர்க்கப்பட வேண்டியதே.
உள்ளாடை தெரியும் உடைகள், பர்தா, இன்னும் பல, இந்த பட்டியலில் அடங்கும்.

Anonymous said...

ஜெஸிலா,

ஒரு சின்ன திருத்தம்..

நான் சொல்ல வந்தது..வெறுமனே //இப்ப‌டி உடுத்தினால் பரவாயில்லைன்னு தோணுதுங்க‌..// இல்லை.

ஆசைப்பட்டால், அரிதான சமயங்களில் உடுத்தினால், தப்பில்லன்னு நினைக்கிறேன். அதுவும், இதையெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத நாடுகளில் மட்டும்..

அதுக்காக,"ஒண்ணு,இப்டி உடுத்தக் கூடாதுன்னு சொல்லு, இல்ல உடுத்தலாம்னு சொல்லு, அதென்ன ஆசைப்பட்டா உடுத்திக்கலாம்னு சொல்ற‌‍"ன்னு கேக்காதீங்க :-))

'களவும் கற்று மற'ங்கற மாதிரி, ஒரு தடவை மட்டுமாவது இப்டி உடுத்திப் பாக்கணும்னு நினைக்கிற சில சின்னஞ்சிறுசுகளுக்காகவே இந்தக் கூற்று !!

- இர.கதிரவன்

Anonymous said...

சாண்டில்யனின் நாவலில் பெண் கதாபாத்திரத்தின் அழகினை வர்ணிப்பதற்காக ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கி இருப்பார். அதுபோல ஆபாசத்தை அக்குவேறு ஆணிவேராக ரொம்ப "தெளிவாக" விளக்கி இருக்கிறது உங்கள் பதிவு. கவர்ச்சியைப் பற்றிய கவர்ச்சியான பதிவு! இதனால்தான் எனக்கும்கூட பதில் சொல்லத் தோன்றுகிறது.

கடலுக்கடியில் மறைந்துள்ள முத்துக்கும், பூமிக்குள் மறைந்துள்ள தங்கத்திற்கும்தான் மதிப்பு அதிகம். உடம்பின் மீதான மதிப்பு குறையாமல் இருப்பதற்கும், சுற்றுப்புற தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் தான் உடை.

எனது தாத்தா காலத்தில் இருந்த குளம் இப்போது பரப்பளவில் சுருங்கி விட்டது... காரணம் மண்ணாசை. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் உலகம் சுருங்கியது போல நவநாகரீக ஆசையினால் உடை சுருங்குவது தவிர்க்க முடியாத ஒன்று.

கணிதவியலின்படி சொல்வதானால் காதல், காமம், கவர்ச்சி, ஆபாசம், அழகு அனைத்துமே வரையறுக்க முடியாத கணத்தில் அடங்கும். இதற்காக ஆதாம் ஏவாள் கதைக்கெல்லாம் போக வேண்டாம்.

RAZIN ABDUL RAHMAN said...

சகோதரி ஜசீலா....அவர்களுக்கு....தங்களது பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்...பெண்களே திருந்துங்கள்...தலைப்பு மற்றும் பதிவு..சாட்ட்டையடி..சிறப்பாக இருந்தது...நானே ஹிஜாப் பற்றி எழுத நினைக்கும் பொது...நீங்கள் குறிப்பிட்ட விஷயம் எல்லாம் எனக்கும் எழுத தோன்றும்..ஆனால் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை...ஆபாசமாகிவிடுமோ என்று பயந்ததுண்டு....ஆபாசத்திற்கு ஆடை இட்டு எழுத நினைத்த எனக்கு,அது முடியாது..என்று தங்களது பதிவு எனக்கு எடுத்து காட்டுகிறது...நன்றி... SILA PADANKALAI THAVIRTTHU IRUKKALAAM...TAMIL THAVAKKUTHU,,,ELUTHA MUDIYALA..ATHAAN THANGLISH...

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி