Monday, April 30, 2007

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?


ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். 'இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க'ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு விசித்திரமாக இருந்தது. மேலாளரிடம் நேரடியாக கேட்டேன் 'first impression is the best impression' என்று சிரித்துக் கொண்டார். குழப்பத்துடன் அவர்களுக்கு 'என்ன குறைச்சல்' என்று வக்காலத்தை தொடங்கினேன். 'நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உனக்கு, அவள் என் அறைக்கு வந்த போது ஒரு பந்து உள் வந்துவிட்டு வந்த வேகத்தில் அடித்து திரும்புவதாக இருந்தது எனக்கு' என்று மறுபடியும் சிரித்தார். அந்த பெண்ணின் உடல் வாகைக் கேலி செய்வது எனக்கு ரசிக்கும் படியாக இல்லை கோபத்தில் கதவை மட்டும்தான் வேகமாக சாத்த முடிந்தது.

இதே போல் பல வருடங்களுக்கு முன் நான் வேறு அலுவலகத்தில் இருந்த போது மனிதவள மேம்பாட்டு பிரிவில் சில மாதங்கள் இருந்தேன். அனுப்பிய பொழிப்புரைகளில் தகுந்தவற்றை பிரித்து தகுதியானவர்களை நேர்முகம் செய்து, வடிகட்டி, நான் சரி என்று நினைப்பவர்களை மட்டும் மேலாளரிடம் நேர்முகத்திற்கு அனுப்புவேன். அப்படி தகுதி பெறுபவர்களை வேலையில் அமர்த்துவார்கள். இப்படி வந்த பொழிப்புரையில் ஒரு காரியதரிசி வேலைக்கு எம்.சி.ஏ. படித்த நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல பிற தகுதிகள் கொண்ட ஒரு பெண் விண்ணப்பித்திருந்தார். தேவைக்கு அதிகமான தகுதியென்று ஒதுக்க இருந்தேன். கவனித்ததில் 'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்றதும் 'அட தமிழ் பொண்ணு' அழைத்தாவது பேசலாம், இவ்வளவு தகுதியுள்ளவர் சம்பந்தமில்லாத வேலைக்கு விண்ணப்பித்ததைப் பற்றிக் கேட்கலாம் என்ற ஆவல் பிறந்தது. அழைத்தேன். அழகான மொழி வளமும், குரல் வளமும் இருந்தது. என்னை அறிமுகம் செய்து கொண்டு காரணம் கேட்டேன். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய அப்பா பல வருடங்களாக அவரைப் பிரிந்து ஷார்ஜாவில் வேலைப் பார்த்திருந்திருக்கிறார். அவருடைய அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்ததாம் அதற்கே பல வருடங்கள் சம்பாத்தியம் தொலைத்து மனைவியையும் இழந்து உடல்நலம் சரியில்லாத போதும் இங்கு கஷ்டப்படுவதால், சுமையை பகிர்ந்துக் கொள்ள மகள் தயாரானாலும் அவள் தந்தை அவருடைய 'ஸ்பான்சர்ஷிப்பில்' மகளை அமீரகத்திற்கு அழைக்க முடியாததால் (மகளை தன் விசாவில் எடுத்துக் கொள்ள குறைந்தது 4000 திர்ஹம் அதாவது 45000ரூ. மாத சம்பளம் வேண்டும்) சுற்றுலா நுழைமதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதங்கள் முடியப் போகிறது, தகுதிக்கேற்ற வேலையென்ற அவசியமில்லை ஏதாவது வேலை கிடைத்து நிறுவன நுழைமதி கிடைத்தால் போதும் அப்பாவுக்குத் துணையாக இருந்து கொள்வது மட்டுமே அவளது நோக்கம். கடைசியாக அவர் சொன்ன விஷயம் மனதைத் தின்றது - 'என்னதான் தகுதியிருந்தாலும் அழகும் வேண்டும் போல, நான் கருப்புங்க அதான் வேலையே கிடைக்கவில்லை' என்றார் உடையும் குரலில். பலவகையில் முயற்சி செய்தும் அவரை வேலையில் அமர்த்த முடியவில்லை. அதுவும் வரவேற்பாளினியாகவும் காரியதரிசியாகவும் இருக்க அழகு ரொம்ப முக்கியமாகப்பட்டது மேலாளர்களுக்கு. பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே என் கையாலாகாத்தனத்தை கடிந்துக் கொண்டிருந்தேன்.

அன்று மதியம் சாப்பிட உட்காரும் போது சக தோழிகள் கொண்டு வந்திருந்தைக் கவனித்தேன், சின்ன டப்பாவில் சின்ன துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் நிரப்பிக் கொண்டு வந்திருந்தாள், 'என்ன இது' என்றேன் 'நான் 'டயட்'டில் இருக்கிறேன்' என்றாள் பெருமையாக. மற்றொருத்தி எனக்கு ஒன்றுமே வேண்டாம் 'ஸ்லிம் டீ' மட்டும் குடிக்கப் போறேன் என்றாள். நான் மட்டும்தான் சாப்பாடு, குழம்பு, பொறியல் என்று எல்லாம் கொண்டு போய் ஒன்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி நின்றுக் கொண்டு 'எப்படிப்பா நீ மட்டும் இப்படிலாம் சாப்பிட்டாக் கூட அப்படியே இருக்கே', 'நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகுது', 'அவங்க குடும்பத்துல எல்லாருமே அப்படிதாம்ப்பா' என்று ஆளாளுக்கு தன் பங்குக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை உற்றுக் கவனித்தால் சமூகக் கட்டாயத்திற்காக கல்லூரி மாணவி, வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல இல்லதரசிகளும் கூட தன்னை கனகட்சிதமாக வைத்துக் கொள்ள சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு பலவகைப்பட்ட பக்கவிளைவுக்கு உள்ளாகிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடலைப் பேணுவது இல்லை இவர்கள் தங்கள் கணவர்கள் கைவிட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள 'டயட்' என்ற பெயரில் தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார்கள்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்? ஒல்லி அழகா பருத்திருப்பது அழகா அல்லது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பது அழகா? கருப்பு அழகா சிவப்பு அழகா இல்லை இடைப்பட்ட நிறம் அழகா? பெண்கள் அழகைப் பற்றி பேச மன்மதன்களாக இருக்க தேவையில்லை ஆண் என்ற தகுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள் பலர். பெண்ணின் தேவையென்பது மிகவும் சாதாரணமானது ஆனால் ஒரு ஆண் தன் மனைவியாக வரப் போகும் மனைவிக்கு வேண்டிய தகுதிகளை 'மாட்ரிமோனியலை' எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். எத்தனை பெண்கள் இந்த வகையான நிபந்தனைக்குள் வராததால் முதிர்கன்னிகளாக இன்றும் இருக்கிறார்கள்? சந்தையில் எப்படிப்பட்ட பொருள் நல்ல விலைபோகிறது, எந்த பொருட்களின் வியாபாரம் 100% லாபம் தருகிறது என்பதை கணக்கில் கொண்டு ஒரு வியாபாரி, தொழிலதிபரும் பொருளை தந்து அதன் பின் அதற்கேற்ப விளம்பரமும் செய்வான். அதுபோல ஆகிவிட்டது பெண்கள் நிலையும். இதற்கும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான் காரணம் என்று பொதுப்படையாக முத்திரை குத்தாமல் (அதுவே உண்மையாக இருந்தாலும்) ஆராய்ந்து பார்த்தால் ஊடகங்கள், சினிமா, இதிகாசம், காப்பியம் என்று எல்லாமும்தான் காரணமாகிறது.

'உடுக்கை போன்ற இடுப்பு' என்று அன்று மட்டுமல்ல, 'பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி', 'ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு', 'ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி' என்றெல்லாம் பாட்டும் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் குண்டான ஆணைப் பற்றி பாடினால் 'கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா... எந்த கடையில நீ அரிசி வாங்கின உன் அழகுல ஏன் உசுர வாங்குற' இப்படி அல்லது 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' அவன் பருமனாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் இவளுக்கு அழகுதான், ஏன்னா எழுதுறது ஆண்கள் பாருங்க. அதனால் அது அப்படியே ஆகிவிட்டது. இந்த மாதிரியான சூழலில் ஊறிப் போன பெண்கள் நடிகைகளையும், விளம்பரத்திற்கு வரும் பெண்களையும் பார்த்து அதே மாதிரி தாமுமிருக்க முயல்கிறார்கள். ஒல்லி பெண்களுக்கு 'மாடல்' யார் தெரியுமா நம்ம 'பார்பி' பொம்மைதான். ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் காலத்திற்கேற்பவும் ஆண்கள் இரசனை மாறுகிறது. ஒரு காலகட்டத்தில் குண்டு குஷ்பு பிடித்தால் கொஞ்ச நாட்களுக்கு பின் ஒல்லி சிம்ரன் பிடிக்கும் இப்படி ஆண்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதற்கேற்ப பெண்களும் ஆட வேண்டிய கட்டாயம். ஆனால், எல்லா ஆண்களும் மனைவிமார் மெல்லிசாக உடைந்துவிடுவது போல் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.

ஒரு ஜான் வயிற்றை நிரப்ப முடியாமல் உலகின் பல பகுதியில் பட்டினியாலும் பிணியாலும் வாட, எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தனக்குத்தானே கட்டுபாட்டை விதித்து சாப்பிட வேண்டிய வயதிலும் சாப்பிடாமல், நோயாளி போல் அளந்து சாப்பிடுகிறார்கள். மெலிந்து காணப்படுவது அழகா உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அழகா என்று இவர்களுக்கு யார் புரியவைப்பது? பெண்கள் விழித்துக் கொள்வார்களா அல்லது ஆண்களாவது புற அழகு தேவையில்லை அக அழகு போதும் என்று பெண்களுக்கு புரிய வைப்பார்களா?

Tuesday, April 24, 2007

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?


காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத நோய்களும் வந்துக்கிட்டே இருக்கு. அப்படின்னா அந்தந்த கால கட்டங்கள்ல இந்த மாதிரியான நோய்களெல்லாம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பா இருந்திருக்கும் ஆனா, ஏன் எதுக்குன்னு ரொம்ப யோசிக்காம, பெருசா எடுத்துக்காம, காரணமே புரியாம போயும் சேர்ந்திருப்பாங்க. இப்பல்லாம் நாம சர்வசாதாரணமா அன்றாடம் கேக்குற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? 'மனவுளைச்சல்' (depression). பள்ளிக்கூடம் போற குழந்தைக்கு வீட்டுப்பாடத்துல தொடங்கி, வேலைக்குப் போறவங்களோட அன்றாட அலுவல்கள் வரைக்கும் இப்போ நீக்கமில்லாம நிறைஞ்சு நிக்குற வார்த்தை இதுதான். மருத்துவம் விஞ்ஞானமெல்லாம் வளர்றதால மன உளைச்சல்ங்குறது காய்ச்சல், தடுமல் மாதிரி சாதாரணமான நோய்தான்னு கண்டுபுடிச்சிருக்காங்க. என்னடா, குண்டு போடறாளேன்னு பாக்குறீங்களா? இல்ல. நெசமாத்தான் சொல்றேன்.

பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது அந்த மாதிரிதான் இந்த மன அழுத்த நோயும். இது யாருக்கு வேணும்னாலும் வரலாம். அச்க்ஷய த்ருதி மாதிரி புதுசா இதுவும் இப்போ நம்ம வாழ்க்கைக்குள்ள எதிர்பாராம நுழைஞ்சிடுச்சு. எனக்கில்லன்னு தப்பிக்கவே முடியாது நீங்க. வாழ்க்கைல ஏதாவது ஒரு கட்டத்துல மன அழுத்தத்த நிச்சயமா உணர்ந்திருப்பீங்க. ஆனா ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்களிருக்கும் அதுதான் வித்தியாசம். அதுவும் கணிணி தொடர்பான வேலை பார்த்தால் போச்சு. இந்த வம்பு சுலபமா தேடி வரும். நாள் முழுக்க கணினி திரையையே கண்கொட்டாம பார்த்துக்கிட்டிருக்கணும். வீட்டுக்கும் நேரத்திற்கு போக முடியாது. வேலையிருக்கோ இல்லையோ சும்மாவாவது வேலையை கட்டிக்கிட்டு அழுவாங்க. இப்படி அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யுற வேலையிலதான் நிறைய தவறுகளும் வரும், அத திருத்தவே அடுத்த இரண்டு நாட்கள் வீணாகும். சிலருக்கு இந்த மன அழுத்த பிரச்சனையால மறதியும் அதிகரிக்கும், ஒரு பொருள எங்கையாவது வச்சிட்டு எங்க வச்சோம்னு தேடி எடுக்கவே நேரவிரயமாகும்.

வேலையில் மட்டுமா இது? வீட்டுக்குப் போனா ஏதாவது பிரச்சனைய உங்க மறுபாதி தொடங்குவாங்க, அதுக்கும் காரணம் இதே வியாதிதான். வீட்டுல இருக்கிற பெண்களும் பாவம் அழுமூஞ்சி 'சீரியல' எவ்வளவு நேரந்தான் பார்க்க முடியும்? (எல்லோரும் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பிச்சாலாவது அதுக்கு ஒரு வடிகாலா அமையும், என்ன நான் சொல்றது) அதனால் கட்டுனவர் எப்ப வருவாருன்னு வழி மேல் விழி வச்சு காத்து கெடப்பாங்க. வந்தவுடனே ஆரம்பிச்சிடுவாங்க பல்லவிய. எனக்கு வீட்டுல ரொம்ப அலுப்பா இருக்கு. காலையிலிருந்து சாயந்திரம் வர தனியாவோ இல்லாட்டி குழந்தையோடோ தொலைக்காட்சியோடோ மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன் வெளியில கூட்டிக்கிட்டுப் போங்கன்னு தொடங்கிடுவாங்க. அலுத்துப் போய் வந்தவனுக்கு உடம்புல திராணியில்லன்னு புரிஞ்சிக்கிறது அவங்களுக்கு கஷ்டம்தானே? அதனால அவங்கள ஈடுகட்ட நீங்களும் அழைச்சுட்டுப் போவீங்க, அப்ப உங்க மன அழுத்தம் வேற வழியில வெளிப்படும். உங்கள்ள கொஞ்சமென்ன நிறையப் பேர் அழுத்தத்த புகையா ஊதித்தள்ளுறேன் பேர்வழின்னு இன்னொரு பிரச்சனைய வெல கொடுத்து வாங்குவீங்க. இந்த மன அழுத்தம் உங்களுக்கு கொஞ்சமா இருந்தா தப்பிச்சிக்கலாம் ஆனா கடுமையா மாறாமப் பார்த்துக்கணும். இல்லன்னா அதுவே பல பிரச்சனைய ஏற்படுத்தும்.
என்ன மாதிரி உபாதைன்னு கேட்குறீங்களா? மனவுளைச்சலால இயல்பு வாழ்க்கையே மாறிடும். இல்லற வாழ்வையே சிதைக்கும். இதுல பக்கவிளைவா வேற சிலருக்கு உடல் பருக்கும் இல்லன்னா உடல் மெலியும், இரத்த அழுத்தம் கூடும், இருதய நோய்னு பல கொடச்சல் வரும். இப்ப உங்களுக்கு நமக்கு இந்த அழுத்தம் ரொம்ப இருக்கா கொஞ்சமா இருக்கான்னு கேள்வி வருமே? இந்த அறிகுறி இருக்கான்னு உங்களையேக் கேட்டுப் பாருங்க.

1. தேவையில்லாமல் எரிச்சல்படுறீங்களா?
2. திடீரென்று உற்சாகமாக இருக்குற நீங்க திடீருன்னு மனசு சோர்வாகிடுதா?
3. யாரக் கண்டாலும் தேவையில்லாம கோபம் வருதா?
4. எல்லாம் இருந்தும் வாழ்க்கையில அமைதியே இல்லன்னு தோணுதா?
5. மனசு குழப்பமா இருக்கிறதால எதிலயுமே ஈடுபடமுடியலையா? தீர்மானம் எடுக்க முடியலையா? தடுமாறிப் போறீங்களா?
6. காரணமே இல்லாமல் வாய் விட்டு அழணும் போலருக்கா?
7. அவசியமில்லாம ஒரு குற்றவுணர்ச்சில கூனிக்குறுகி போறீங்களா?
8. மன அழுத்தத்தால சில சமயம் தூக்கம் எல்லா வேலையையும் தள்ளிப் போடச் சொல்லி உங்கள படுக்கச் சொல்லுதா உடம்பு? தூங்குனா பரவாயில்ல ஆனா தொடர்ந்து இரண்டு- மூணு நாட்கள்னு இழுத்தடிச்சா உடனே மருத்துவரை அணுகுங்க.
9. வியாதி முத்திப்போச்சுன்னா தற்கொலை செஞ்சிக்கோன்னு காதில கேட்டுக்கிட்டே இருக்குமாம். செத்துடலாம் அதான் நல்லதுன்னு தோணுமாம்.

இப்படி இந்த சின்ன பிரச்சனையோட விளையாட்டு வகை வகையானது. 1-4 ல சொல்லிருக்கிறது பொதுவா எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதான் ஆனா அதுவே கடுமையா மாறி வாழ்வையே ஆக்கிரமிச்சிக்காமப் பார்த்துக்கணும், அது ரொம்ப முக்கியம்.

மன அழுத்தம்றது வேலையில சேர்ந்த பிறகுதான் வரும்னு தப்புக் கணக்கு போடாதீங்க, அதற்கு இதுதான் காரணம்னு வரையறையெல்லாம் இல்ல. பொதுவாவே வாழ்க்கைல பெரிய மாற்றம் ஏற்படும் போது வரலாம். அதாவது பிடிக்காத பாடத்தை வற்புறுத்தி படிக்க வைக்கும் போது, புது வேலையில் சேரும் போது, வேலை பிடிக்காமல் போகும் போது, திருமணத்திற்கு தயாரில்லாதப்ப செஞ்சிக்கும் போது, திருமண முறிவு ஏற்படும்போது, பிடிச்சவர இழந்துட்டா, பண கஷ்டம்னு வழக்கமான காரணத்த தவிர

* பரம்பரை வியாதியாக இருக்கலாம்
* பள்ளிப் பருவத்தில் நிறைய வீட்டு வேலையாலக் கூட வரலாம்
* பெத்தவங்க சண்டைய தினம் பார்க்கும் காரணத்தினாலக் கூட ஒட்டிக்கலாம்
* எந்த ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தாலும், கொண்டாட்டமிருந்தாலும் இரச்சல் அதிகமா இருக்கும் அப்ப நேரடிலாம்
* அதிகமா ஏதாவது எதிர்பார்த்திட்டிருந்து ஏமாத்தமடஞ்சா ஏற்படலாம்
* வேலைகள் தள்ளிப் போடப்பட்டு அதனால் மலை போல் குவிந்திருக்கும் வேலையை நேரிடும் போது வரலாம்
* அலுவலகத்தில பிரச்சனைன்னு மூச்சிறக்கம் தாங்காம வீட்டுக்கு வந்து அங்கேயும் சண்ட- சச்சரவுன்னு தொடர்ந்தால் பாதிக்கப்படலாம்

இந்த நோய் ஆண்- பெண் பால் வித்தியாசமெல்லாம் பார்க்குறதில்ல. என்னதான் பெண்கள் எதையும் தாங்கும் இதயமாக இருந்தாலும் அவங்க இரத்தத்தில கலந்து உடலுறுப்ப உசுப்பி விடுற உட்சுரப்பில மாத்தம் வந்தாலும் (hormonal changes), மாதவிடாய் மொத்தமா நிற்குற தருவாயிலும் (menopause), குழந்தய பெத்தெடுத்த ஒரு சில மாசத்தில ஆனா ஒரு வருஷத்திற்குள்ள (postpartum depression) இந்த மாதிரி மன அழுத்த பிரச்சனை வர அதிக வாய்ப்பிருக்கு. ரொம்ப மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு குறை மாசக் குழந்தையோ, மூளை வளர்ச்சிக் குன்றியக் குழந்தையோ பிரசவிக்குற வாய்ப்புகளும் இருக்காம். அதனாலத்தான் கர்பிணிப் பெண்களுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சுக் கொடுக்குறாங்க, ரொம்ப கொஞ்சுனாலும் அடம்பிடிச்சாலும் கர்பிணிப் பெண்ணுனா கொஞ்சம் சகிச்சிப் போற சலுகை அவங்களுக்கு இருக்கத்தான் செய்யுது.

சரி இந்த பிரச்சனை ஏன் வருதுன்னு யோசிச்சீங்களா? மனவுளைச்சல் வரும் போது நம்ம மூளைல என்னலாம் மாற்றம் வருது தெரியுமா?

'மன' அழுத்தம்னு பேரு வச்சிருந்தாலும் அது மூள சம்பந்தப்பட்டதுதான். மூளையோட செயல்பாடுதானே நம்முடைய இதய துடிப்பு, உணர்வு, உணர்ச்சி எல்லாத்தையும் கட்டுப்படுத்துது. சின்ன வயசுல மூளை பாகத்தையெல்லாம் பத்தி படிச்சது இப்ப கொஞ்சம் ஞாபகத்துக்கு வரலாம் அதாவது மூளையுடைய தகவல் தொடர்பே கோடிக்கணக்கான நீயூரானைக் கொண்டதுதானே. அந்த நீயூரான் மூளையுடை இரசாயனத்துடன் கலக்கும் போதுதான் உடலுக்கும் மூளைக்கும் சரியான தகவல் தொடர்பு நிகழுமாம். அப்போ மூளை இரசாயனம் (brain chemical) எப்பவாவது குறையும் போது இல்லன்னா அதுல ஏத்த இறக்கம் நேரும் போது அல்லது இரசாயனம் சரியா நீயூரான்ல செலுத்த முடியாத போது மனவெழுச்சியிலும், உணர்ச்சியிலும் மாத்தம் வந்து இந்த மனச்சோர்வு, மந்த நிலை, மன அழுத்தம்னு பாதிக்கப்படுறோம். எதுக்கு நீட்டி முழக்குவானேன்? மூளையுல ஏற்படுற இரசாயன மாற்றத்தாலதான் இந்த பிரச்சனை இன்னும் புரியுறா மாதிரி சொல்லனும்னா எப்படி ஒரு தொலைப்பேசியில, செல்பேசியில இணைப்பு ஒழுங்காக் கெடைக்காட்டா நம்ம பேசுறது மத்தவங்களுக்கு கேட்காம 'ஹலோ' ஒன்னுமே கேட்கல 'சிக்னல்' கெடைக்கலன்னு கத்துவாங்களோ அதே மாதிரிதான் இதுவும்.

ஆனா இந்த மாதிரி பிரச்சனை நமக்கு இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு நமக்கு நாமே உதவிக்கிட்டா கட்டுக்குள்ளக் கொண்டுவந்திடலாம். வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு சொல்வாங்க அதனால சிரிப்பு பயிற்சி செய்யலாம், இல்லாட்டி உடற்பயிற்சி எடுத்துக்கலாம் - ரொம்ப கஷ்டம்னு தோணுதா? அப்ப யோகா செய்யுங்க- நேரமில்லன்னு சாக்கா? அப்ப அந்த மாதிரி இருக்கும் போது பிடிச்ச விஷயத்த செய்யுங்க புத்தகம் வாசியுங்க, பாட்டுக் கேளுங்க அல்லது பிடிச்சவங்கள அழைச்சி பேசுங்க (பிடிச்சவங்கள அழைக்கும் போது அவங்க ரொம்ப பரபரப்பா இருந்து உங்களுக்கு நேரம் தராட்டா இன்னும் பிரச்சன அதிகரிக்கும் ஜாக்கிரதை). இந்த மாதிரி பிரச்சனையே வராம இருக்க உங்கள நீங்களே ஆரோக்கியமா வச்சிக்கணும். என்ன செஞ்சும் உங்கள மீறி செயல் நடக்குதா தயங்காம மருத்துவரப் போயுப் பாருங்க மருந்து, சிகிச்சையால குணமடையக் கூடிய விஷயம்தான் இது.

இந்த வியாதியால என்ன ஒரு மன ஆறுதல்னா மூள இருக்குன்னு ஊர்ஜிதப்படுத்திக்கலாம். ரொம்ப பூஞ்சாடிக்காட்டிட்டதால கேவலமான கடியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ன்னு புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி. மேலயே சொன்னா மாதிரி பயங்காட்டுறதுக்காக இதையெல்லாம் சொல்லல, தெளிய வைக்கத்தான் இந்த பதிவே.

Friday, April 13, 2007

கன்னத்தில் முத்தமிட்டால்...

சின்ன வயதில் தாய்மை என்பது பெரிய புதிராக தோன்றும் எனக்கு. என் மூத்த அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அவள் இரசித்து குழந்தையை கொஞ்சுவதைப் பார்த்து எனக்குள்ளே பல கேள்விகள் அதில் ஒன்றே ஒன்றை அவளிடம் உதிர்த்தே விட்டேன் இப்படி "பெத்த குழந்தன்னா பாசம் பொத்துக்கிட்டு தன்னால வந்திடுமோ? நீ பாக்க நானும்தான் பொறந்து வளர்ந்தேன், என்ன இத்தன வருஷமா தெரியும் உனக்கு, ஆனாலும் என்ன விட இப்ப வந்த புள்ள மேலதான் உனக்கு பாசம் அதிகம்" என்று பொறாமையின் வெளிப்பாடு தெரித்தது. அவள் பதிலுக்கு மெளனம் தந்தாள். எனக்கு அதன் பொருள் என்னவென்று அப்போது புரியவில்லை. குழந்தை பருவத்தில் புது புது வார்த்தைகள் அறிய வரும் போது தெரிந்த சில வார்த்தையை வைத்து புது வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்வது பழக்கமாகயிருந்தது, அப்போது திருக்குறளில் வந்த 'வாய்மை' அதிகாரத்தில் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்ற குறளை 'வாய்மை'க்கு பதில் 'தாய்மை'ப் போட்டுக் கொண்டால் நினைவில் எளிதில் நிற்கும் அதற்கு காரணம் என்னவென்றும் அப்போது புரியவில்லை. விடை 2004-ல் நான் தாய்மை அடைந்த போது தான் கிடைத்தது. அந்த இனம்புரியாத மனநிறைவை வார்த்தையில் வடிக்க இயலாது.

திருமணத்திற்கு முன்பே நான் வைத்த முதல் கோரிக்கை இரு குழந்தை என்றால் ஒரு குழந்தை தத்தெடுத்த பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று. எனது கோரிக்கையை என் கணவரும் ஏற்றுக் கொண்டார். ஆண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரம் பேர் இருப்பார்கள் இல்லையென்றாலும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் பெண் குழந்தைகள் அப்படியில்லை. பெண் என்பதால் கூட அவர்கள் அனாதையாக்கப்பட்டிருக்கலாம் என்பதாலே அப்படியொரு கோரிக்கை. பெற்றெடுக்கும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மற்றுமொரு பெண் குழந்தை தத்தெடுக்க வேண்டாமே என்ற என் கணவரது கோரிக்கையையும் நியாயமென்று நானும் ஏற்றுக் கொண்டேன். 'கன்னத்தில் முத்தமிட்டால்' பார்த்த போது தத்தெடுப்பதிலும் உள்ள சில வகையான சிரமங்கள் புரிந்தது. இருப்பினும் அதற்கு ஆயுத்தமாகத்தான் இருந்தோம். பிறந்தது பெண் என்பதால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் எல்லா பாடல்களும் அற்புதமென்றாலும் என்றுமே ஆனந்த அவஸ்தையாக நான் உணர்வது இந்த பாடலைக் கேட்கும் போதுதான். வைரமுத்துவின் வரிகளை சின்மயியின் வசீகர குரல் உச்சரிக்க ஏ.ஆர். ரகுமான் இசை தவழ்ந்து வந்து காதுக்கு புதுவித இன்பத்தை தந்து மனதை நிரப்பி என்னையும் அறியாமல் கண்களையும் பனித்துவிட செய்யும் இந்த பாடல். முதல் முறை கேட்ட போது மட்டுமல்ல அவ்வகை உணர்வு எந்த மனநிலையில் கேட்டாலும், எத்தனை முறைக் கேட்டாலும் எனக்கு ஏனோ இதே மாதிரியான உணர்வுதான். தன் முதல் பாடலிலேயே தனக்கான ஒரு நல்ல பெயரை தக்கவைத்துக் கொண்டார் சின்மயியும். ஏ.ஆர்.ஆர். எத்தனையோ தமிழ் கொலை செய்யும் பாடகர்களை தமிழ் பாட அழைத்து வந்திருந்தாலும் சில நல்ல பாடகிகளையும் அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டவர். அந்த வகையில் இசையுலகுக்கு சின்மயியின் குரல் ஒரு வரப்பரசாதம்தான். சில பாடல்களை கேட்கும் போது பார்க்க ஆசை தோன்றும். பார்த்த பிறகு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றும். ஆனால் இந்த பாடல் அப்படியல்ல. இந்த பாடல் படத்தில் இருமுறை பெண்- ஆண் குரலில் வெவ்வேறு சூழலில் ஒலிக்கும். இரு பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவும், காட்சியமைப்புகளும், கலை அம்சங்களும், வண்ண தேர்வில் எடுத்துக் கொண்ட சிரமங்களும் அதன் நுனுக்கங்களும் அந்த பாடலை காதலிக்க செய்ய தூண்டும். இரு பாடல்களுமே தண்ணீரிலிருந்துதான் காட்சி விரிவடையும். பெண் என்பதால் என்னவோ தாய் தன் குழந்தையை வர்ணித்து சிலாகிக்கும் அந்த வைர வரிகள் கொண்ட பாடலே எனக்கு மிக பிடித்தமானது.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2)

எத்தனையோ அற்புதமான பாடல்களை பாடிய பி.ஜெயசந்திரன் தான் அந்த ஆண் குரலின் சொந்தக்காரர்.

இசையோடு ஒலிக்கும் ரம்ய குரலுக்கேற்ப வாயசைக்கும் சிம்ரனின் முகபாவமும், குழந்தை கீர்தனாவின் முகபாவமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே (2)


என்று பாடியவுடன் அந்த குழந்தை தன் தாயை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மனதை லேசாக்கி காற்றில் பறப்பாள். அந்த கணம்தான் என் கண்களும் பனிக்கும்.

வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

வானத்தின் ஒரு பகுதியை உடுத்தியதுப் போல் நீல சேலையில் தரையில் படர்ந்து தன் மகளை மார்பில் சாய்த்துக் கொண்டு பாடல் வரிகளுக்கேற்ப தாய் சேய்க்கு உண்டான நெருக்கத்தை உணர்த்தும் காட்சி பரிமாணம் அபாரம்.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)

ஆனந்த கீதம் ஒலிக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் மகளுடன் அலைகள் இல்லாத கடல் நீரின் நடுவே அலைமோதி விளையாடுவது அழகு.

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

குழந்தை கீர்த்தனாவின் விறைத்த பார்வை, சிம்ரன் எறியப்படும் கல்லுக்கா அல்லது 'எனது பகை' என்று விளித்தமையாலா?

காதல் மலரும் நீ, கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ (2)

ஆவலான அணைப்புக்காக கையை அகல விரித்து ஓடும் தாயை விளையாட்டாக ஏமாற்றும் குழந்தை.

பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ (2)
மரணம் மீண்ட ஜனனம் நீ,


அற்புதமான வார்த்தை செறிவு.

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


ஆண் குரலில் ஒலிக்கும் சரணம்:

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே (2)
(நெஞ்சில் ஜில் ஜில்)


குழந்தையை எழுத்துப் பிழை, நான் தூக்கி வளர்த்த துயரம் என்று சொல்லியிருப்பது படச்சூழலுக்கு சரியென்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

பலமுறை சொன்ன விஷயங்களை வெவ்வேறு விதமாக புதிய பாடலாக உருவெடுத்து வந்திருந்தாலும், இந்த பாடலில் வரும் கருத்தும் விஷயமும் வேறு எந்த பாடலிலும் வந்ததாக தெரியவில்லை. நிறையப் பாடல்கள் வார்த்தைகள் தொலைந்தே போகும் அளவுக்கு இசையின் இரைச்சல் மிஞ்சும் ஆனால் அமைதியான திகட்டாத மெல்லிசையோடு உணர்வுபூர்வமான குரல், வலிமை மிகுந்த வரிகள், அழகிய ஒளிப்பதிவு, இயக்கம் என்று
இந்தப் பாடல் என் பார்வையில் வித்தியாசப்பட பல காரணங்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலைக் கேட்கும் போது இல்லாத அமைதியில் மனதை கொண்டு செலுத்துவதாகவும் உணர்வேன்.

புது பாடலாக இருந்தால் பரவாயில்லை ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த பாடலைப் பற்றி என்ன விவரிப்பு என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு என்றும் திகட்டாத எப்போதும் சுவைக்கும் பாடல் இது.

நீங்களும் பார்த்துக் கேட்டு மகிழுங்கள்:

ஒரு தெய்வம் தந்த பூவே...

Sunday, April 08, 2007

மிளிரும் நட்சத்திரம்

என்னை நட்சத்திரமாக்கி, தினமும் எழுத செய்து ஊக்கமளித்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி.

பின்னூட்டமிட்டு பதிவை உயிர் வாழ வைத்த அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள். பதிவை படித்து விட்டு பின்னூட்டமிட ஒன்றுமில்லை என்று பார்வையிட்டு மட்டும் சென்றவர்களுக்கு எண்ணற்ற நன்றி. அபி அப்பாவுக்கு 'பிரத்தியேக' நன்றி, காரணம் சிங்கம், புலி என்று ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழைத்து வந்து என் பதிவை படிக்க செய்தமைக்கு.

'உங்கள் கவனத்திற்கு' பகுதியில் 'நட்சத்திரப் போட்டி'யை போட்டு ஆதரவு தந்த தேன்கூடுக்கும் மிக்க நன்றி.

என் செல்பேசியில் நானே எடுத்தப் படத்தை வைத்து தந்த போட்டியின் சரியான விடை சென்னையில் உள்ள 'கூவம் ஆறு'. சரி எழுதி பரிசை தட்டி செல்பவர் 'ஃபாஸ்ட் பவுளர்'. வாழ்த்துக்கள் பாஸ்ட் உங்களை தனி மடலில் நாளை தொடர்புக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள். நட்சத்திர வாரம் நிறைவாகிறது.

துபாய் நல்ல துபாய்

துபாய்க்கு வந்து இந்த அக்டோபரோட பத்து வருஷமாகுது. பத்து வருஷத்துல என்ன கிழிச்ச என்ன சாதிச்சன்னு கேட்டிடாதீங்க அப்புறம் நிறைய சாதிச்சேன்னு பொய் சொல்ல வேண்டி வரும். என்ன நம்ப முடியலையா? என்னாலயே நம்ப முடியல அப்புறம் நீங்க நம்பனும்னு எதிர்பார்ப்பேனா? ஆனா மறக்க முடியாத சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. அக்கா துபாய்ல இருந்த தைரியத்துல நான் ஒரு தப்பித்தலுக்காக போறேன்னு அடம்பிடிச்சதும் வீட்டுல அனுப்பி வச்சாங்க. ஒரு பெண்ணை, அதுவும் எங்க சமூகத்துல- தனியா துபாய்க்கு அனுப்புறதே பெரிய விஷயம்தான். ஆனா வந்து இறங்கியதும் வெளிநாடுன்னு பெரிய பிரம்மிப்பெல்லாமில்ல. அக்கா கூட கேட்டா என்ன வெளியில வேடிக்கைப் பார்த்துட்டு வருவேன்னு பார்த்தா 'ம்மு'ன்னு வரேன்னு. பின்ன சந்தோஷமாவா இருக்கும்?! அப்பா அம்மா அக்காமார்கள், தோழிகள், ஆசையா வளர்த்த மீன்கள், நெருக்கமா இருந்த செடிகள்னு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாச்சு. அக்காக்கிட்டக்கூட அதான் கேட்டேன் "உன் புருஷன்ற ஒரு சொந்தத்துக்காக எல்லாத்தையும் எப்படி விட்டுட்டு வர மனசு வந்துச்சு"ன்னு. "நானாவது ஒரு சொந்தத்துக்காக வந்தேன் நீ எதுக்குடி வந்தே"ன்னு ஒரு நியாயமானக் கேள்வி கேட்டவுடனே நான் 'கப்-சிப்'ன்னு ஆயிட்டேன்.

எங்க வீட்டுல நாலு பொண்ணுங்க. நான் தான் நாலாவது. நானும் பெண்ணா பொறந்துட்டதால பெத்தவங்களுக்கு ரொம்ப வருத்தமாம். அம்மா நான் பொறந்தப்ப என்ன தூக்கக்கூட இல்லன்னு பக்குத்து வீட்டு அக்கா அடிக்கடி சொல்லி நினைவுபடுத்துவாங்க. எனக்கப்புறம் ஒரு கடைக்குட்டி ஒரு தம்பி இருக்கான் அது வேற விசயம். ஆனா ஆண் பிள்ளன்னு எதுக்குக் கேட்கிறாங்க? ஆண் பிள்ளையா இருந்தா அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருப்பான்னுதானே? அதனால நானும் எப்பவுமே அப்படி இருக்கணும்னு சின்னதிலிருந்தே ஒரு வைராக்கியம். எதுக்குமே பெத்தவங்க கிட்ட காசு கேட்கக் கூடாதுன்னு இருப்பேன். அஞ்சு வரைக்கும்தான் மெட்ரிகுலேஷன் பள்ளி அதுக்கப்புறம் அரசினர் பள்ளிதான், அதனால மாச மாசம் பள்ளிக்கு பணம் கட்டத் தேவையில்ல. பள்ளிக்கூடத்துல எல்லாப் பசங்களும் சுற்றுலாப் போனாக்கூட அத வீட்டுல வந்து சொல்ல மாட்டேன். இன்னிக்கு விடுமுறைன்னு சொல்லிடுவேன். ஒரு வருஷம் படிச்சி முடிச்சதும், இந்த வருஷப் புத்தகத்த கைமாத்தி அதுல கெடைக்குற காச வச்சிதான் புது வருஷ புத்தகத்த வாங்குவேன். அப்பா பத்திரிகையில் புகைப்பட நிபுணர் அதனால நிறைய படச்சுருளோட டப்பா கெடைக்கும். பள்ளி தோழிங்க கிட்ட அவங்கவங்க வீட்டுல இருந்து பூதர்மாவு அதாங்க வாசனப் பவுடர் கொஞ்சம் எடுத்து வரச் சொல்வேன். எல்லா விதமான பவுடர்களையும் அந்த படச்சுருள் டப்பாலக் கொட்டினால் புதுவித வாசன வரும், அத பெரிய வகுப்பு படிக்கிற அக்காங்கக்கிட்ட 5 ரூபாய்க்கு விற்பேன். வாசன மாவுக் கொண்டு வரவங்களுக்கு 50 பைசாக் கொடுத்துட்டு மிச்சத்த என் தேவைக்கு வச்சுக்குவேன். அதே மாதிரி பறவைங்க இறக்கைல வித விதமான நிறத்துல சாயம் பூசி அத மொத்தமாக் கட்டி அதுல ஒரு 'பின்'குத்தி அதையும் 5 ரூபாய்க்கு விற்பேன். சட்டையில் குத்திக்கிற 'பிரோச்' மாதிரி அழகா இருக்கும். இந்த மாதிரி குட்டி குட்டி வியாபாரம் நெறய வச்சிருக்கேன். அப்ப நான் மூணாவது நாலாவதுதான் படிச்சிட்டுருப்பேன். அந்தக் காசை மிட்டாய் வாங்கித் திண்ண செலவழிக்க மாட்டேன். சேர்த்து சேர்த்து வச்சி எதுக்காவது உபயோகமா பயன்படுத்துவேன். அப்பவே பணம் பண்ணுற எண்ணம்னு சொல்ல வரேன். அதுக்கா இந்த பில்டப்புன்னு கேட்காதீங்க.

ஒவ்வொரு அக்காவுக்கா கல்லூரி படிப்பு முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டிருந்தாங்க. நான் பார்த்தேன் இதுல நம்ம மாட்டிக்க கூடாது, சில வருஷமாவது பெத்தவங்களுக்கு சம்பாதிச்சு தரணும்னு என்னோட பல வருஷக் கனவ நெனவாக்க துபாய் வந்து சேர்ந்தேன். அதே மாதிரியே நடந்துக்கிட்டேன். ஒரு பெண்ணாலயும் எல்லா விதத்திலயும் பெத்தவங்களுக்கு ஒரு ஆணை விட அதிகமாகவே உதவ முடியும்னு நிரூபிச்சிட்டேன். மறக்க முடியாத சில நிகழ்வுன்னு ஆரம்பிச்சுட்டு அத சொல்லலன்னா எப்படி?

நான் துபாயில போன என்னுடைய முதல் நேர்முகம் ஒரு பெரிய நிறுவனம்தான் ஆனா இந்திய நிறுவனம். குடும்ப நண்பரோட செல்வாக்க வச்சு அந்த நிறுவனத்தோட மனிதநலம் மேம்பாட்டு துறை மேலாளரைப் போய் பார்த்தேன். அவர் என்னுடைய பொழிப்புரை, சான்றிதழ் எதையுமே பார்க்கல, அவர் என்னப் பார்த்தவுடன் சொன்ன விஷயம் "உனக்கு நேர்மையா ஒரு அறிவுரை சொல்லணும்னு தோனுது, நீ ஊருக்குப் போய்ட்டு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வா. இரண்டு பேருக்கும் சேர்த்து வேல தரோம். நீ கல்யாணமாகாத பொண்ணு இங்க வேல பார்த்தீனா எங்க பையனுங்க அவங்க தெறமைய வேலைலக் காட்டமாட்டானுங்க உங்கிட்டக் காட்டத்தான் நினப்பாங்க"ன்னு சொன்னதும், அந்த கசப்பான உண்மை என்ன ரொம்ப பாதிச்சுது. வீட்டுக்கு வந்து 'ஓ'ன்னு அழுதேன். அழுததற்கான காரணம் முதல் அடியே சறுக்குதேன்னு. என் திறமை வேணாம் என் கல்யாண தகுதிதான் வேணுமாம், இந்த நிறுவனம் இல்லாட்டி என்ன எத்தனையோ இருக்குன்னு மனதிடம் இன்னும் கூடிச்சு. இது இஸ்லாமிய ஊருன்னுதான் பேரு ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு போனேன் "நீ தலையில துணிப் போட்டுட்டு போனேனா வேலைக் கிடைக்காது"ன்னு உபதேசம், அப்படி சொன்னதும் ஒரு முஸ்லிம் பெண்மணிதான். நான் நானாத்தான் இருப்பேன். இப்படி இருந்து வேல கெடச்சா கெடக்கட்டும்னு இருந்தேன். அப்ப திருமணமாகாத பெண்களுக்கு நுழைமதி சுலபமா கிடைக்காததால பெரிய தலவலியா வேற இருந்துச்சு, ஆனா பெரிய நிறுவனமா இருந்தா அந்த பிரச்சனையெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க. அப்புறம் இன்னொரு இடத்திற்கு போனேன் நேர்முகத்திற்கு, எல்லாரும் 'சூட்-கோட்', குட்ட பாவாடைன்னு விதவிதமா வந்திருந்தாங்க. நான் மட்டும்தான் சுரிதார். போச்சுடான்னு நினச்சேன், ஏனா அந்த மேலாளர் "இந்த மாதிரி பாரம்பரிய உடைல நேர்முகத்திற்கு வரக்கூடாது"ன்னார். நான் சொன்னேன் எங்க ஊர்ல இது பாரம்பரிய உடை இல்ல நவநாகரீக உடைதானு ஒரு போடு போட்டேன். என்னதான் நான் மற்ற உடைகளெல்லாம் உடுத்தினாலும், தகுதிக்காக வேலக் கெடக்கினுமே தவிர உடைக்காக இருக்கக் கூடாது பாருங்க. ஆனா அதே நிறுவனத்திலிருந்து இரண்டாவது நேர்முகத்திற்கு வரச் சொன்னதும் ஆச்சரியமா இருந்துச்சு. அங்கேயே வேலையும் கிடச்சுது.

அது சரி, ஏன் சொந்தக் கத சோகக்கதயெல்லாம் சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? நம்ம வலைஞர்களுக்குள்ள நோயிருக்குல? அட எனக்கும் சேர்த்துத்தான், அதாங்க எழுதுறவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிக்காம அவங்க படைப்ப வாசிக்கிறதுல கொஞ்ச சிரமப்படுற நோயப்பத்தித்தான் சொல்லுறேன். என்ன படைப்பு, எதப்பத்தி எழுதிருக்காங்க, எப்படி எழுதிருக்காங்கன்னு படிக்க மாட்டோம்ல. நாம யாரு எழுதிருக்கான்னு பார்ப்போம், பின்ன தலைப்பு கவர்ச்சியா இருக்கான்னு பார்ப்போம் அதெல்லாமிருந்தாத்தானே சொடுக்கி வாசிக்கச் சொல்லுது. அதனாலத்தான் என்னைக்குமில்லாத திருநாளா சொந்த புராணம் கொஞ்சம் பாடிருக்கேன். ஆனாலும் ஒரு பதிவுன்னு இருந்தா, அத நாமப் படிக்கும் போது ஏதாவது புதுசா தெரிஞ்சிக்கணும்னு ஆசப்படுவோம்ல? இது வரைக்கு படிச்சுப்புட்டு ஒண்ணுமே இல்லாமப் போனா எப்படி அதுவும் தினமும் ஒரு சுவாரஸ்யம்னு சொல்லிட்டேன்ல, அதுக்காக துபாயப் பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன். நான் இங்க வந்த போது இருந்த துபாய்க்கும் இப்பவுள்ள துபாய்க்கும் நிறய வித்தியாசம். பத்து வருஷத்துல நம்ம ஊருல அப்படி பெரிய மாத்தம் வந்திருக்கான்னா இந்த ஊரோட ஒப்பிடும் போது அது பெரிய விஷயமில்லன்னு சொல்லலாம்.


1990ல் எடுத்த படங்களைப் பார்க்கும் போது இந்த மாதிரி நானும் எடுத்திருந்தா வட்டம் போட்டு காட்டிருப்பேன். அப்போதெல்லாம் துபாய் ஷார்ஜா ரோட்டுல அந்த மணல்ல உட்கார்ந்து லூட்டி அடிப்பதே தனி சுகமாகத்தான் இருந்தது. இப்போது எங்கு திரும்பினாலும் கட்டிட மயமாயிடுச்சு. வீதில வண்டி கூடிப்போச்சு, போக்குவரத்து நெரிசல் கூடிப்போச்சு, வீட்டு வாடகை ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஏறிப் போச்சு. துபாயப்பத்தி விரிவா எழுதலாம்னா அதுக்கு வேலயே வைக்காம நிறை வலைப்பதிவர்கள் எழுதிக்குவிச்சிட்டாங்க. சரி கொஞ்சம் சுருக்கமா:




* உலகத்திலேயே ஒரே 7 நட்சத்திர விடுதின்னா அது 'புர்ஜ் அல் அரப்'தான் (Burj Al Arab). ஒன்றரை வருஷத்துல கட்டி முடிச்சிட்டாங்க. உள்ளப்போயி சுத்திப்பார்க்கவே 60 யூரோ. அப்ப தங்கறதுக்கு எவ்வளவாகும்னு யோசிச்சுப்பாருங்க ஒரு இரவு தங்க $7500லிருந்து $15000 வரை இருக்காம்.


* வெளியில 50-55c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி அமச்சிருக்காங்க 'மால் ஆப் எமிரேட்ஸை' (Mall of the Emirates). இதுதான் உலகின் மிகப் பெரிய வணிக வளாகமாம். உறைபனி மூடிய தரைல வழுக்கிக்கிட்டு போகிற அதிசயம் இந்த மால் ஆப் எமிரேட்ஸுக்குள் இருக்கிற 'ஸ்கீ துபாய்'ல இருக்கு.





* 'பாம்' ('bomb'னு படிச்சிடாதீங்க இது 'Palm') பற்றிக் கேள்விப்பட்டீங்களா இல்லையான்னு தெரியல. ஈச்சை மரத்தோட வடிவத்தில் தீவு. அதாவது கடலுக்குள்ள மண்ணக்கொட்டி வீடு கட்டிருக்காங்க. இந்த மாதிரி இதுவரைக்கு மூணு தீவு உருவாகிக்கிட்டிருக்கு. ஒரு தீவு முழுசா முடிவடஞ்சிடுச்சு. மற்ற இரண்டு தீவுடைய வேல நடந்துக்கிட்டு இருக்கு. இதுவும் சீனச்சுவர் மாதிரி நிலாவிலிருந்து பார்த்தால் தெரியுமாம். நிலவிலிருந்து தெரியுதோ இல்லையோ எங்க அலுவலகத்திலிருந்து பார்த்தா ரொம்ப அழகா தெரியுது. இதுதான் உலகத்தின் எட்டாவது அதிசயமாகப் போகுதுன்னு சொல்றாங்க.

* 'புர்ஜ் துபாய்' கட்டிக்கிட்டு இருக்காங்க. 2008-ல உலகத்திலேயே இதுதான் மிகப்பெரிய கட்டிடமா இருக்கப் போகுதாம். இப்போதைக்கு 117 மாடி கட்டி முடிச்சாச்சு, தற்போதய உயரம் 410.5 மீட்டர், 800 மீட்டரை எட்டுமாம்.

* 'துபாய் லாண்ட்' இது 2009-ல முடியும்போது. இதுவும் உலகத்திலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனி நகரமாகவே வரப்போகுதாம்.

இந்த மாதிரி இன்னும் வரப் போகிற அதிசயங்கள் நெறய. இப்படி உலகப் புகழ் பெற்ற, பெறப் போகிற விஷயங்கள் எல்லாமே நான் துபாய்க்கு வந்த பிறகுதான் வந்தது. என்னாலதான் துபாய்க்கு அதிர்ஷ்டமே வந்துச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க?

Saturday, April 07, 2007

ப்ளூ கிராஸுக்கு ஒரு கேள்வி

ஈத் பெருநாளுக்கு வழக்கமாக 3-4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் பெரும்பாலும் நாங்கள் எல்லோரும் தொலைதூரப் பிரயாணம் செய்ய பிரியப்படுவோம். பத்து பதினைந்து பேர் சேர்ந்து இந்த முறை ஹத்தாவுக்கு போனோம். எத்தனை முறை போனாலும் மீண்டும் போக தூண்டும் ஹத்தா! அந்த நெடுபயணமே எனக்கு பிரியமானது. ஆறு வருடங்களுக்கு முன்பு செல்லும் போது அரட்டத்தில் ஓடும் பைக்கில் 1/2 மணி நேரத்திற்கு 25 திர்ஹம்தான். அரை மணிக்கு என்று எடுத்து விட்டு கைமாற்றி கைமாற்றி ஓட்டி 1 மணி நேரமாக்கிவிடுவோம். உள்ளே சென்றுவிட்டால் தேடி பின்னால் வரும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இப்போது அதே இடத்தில் அந்தப் பாலைவனத்தில் கூடாரம் போட்டு அதையும் வணிக நிலமாக்கியிருந்தார்கள். 4-wheeler drive, பைக், ஒட்டகச் சவாரி, குதிரை சவாரி, மருதாணி இடுதல் என்று பலவகைப்பட்ட அரேபிய பாரம்பரிய விஷயமாகிவிட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு பறவையும் உட்கார்ந்திருந்தது அமைதியாக. அருகில் சென்று பார்த்தேன் குதிரைக்குத்தானே கடிவாளம் பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த பறவைக்கும் கடிவாளம் போட்டிருந்தது ஏன் என்று வினவினேன் 'கண்ணைக் கட்டிக் கொண்டால் உலகம் இருட்டுன்னு நினச்சிக்குமாம் பூனை' அதே கதைத்தான் இந்த பறவைக்கும். துறுதுறுவென துரத்தி இரை தேடும் பறவையான வல்லூறுவால் அடைந்துகிடக்க முடியாதாம். அப்படியிருந்தால் தன் கூரிய மூக்கை தன்னைதானே மாயித்துக் கொள்(ல்)ளுமாம். சோம்பேறி மனிதர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் வேலையில்லாமல் உட்கார்ந்திருந்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் ஐந்தறிவைப் பார்த்து வியந்தேன்.

வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு. அதனைப் பற்றி மேலும் அறிய அந்த பயிற்சியாளரை கேள்வி கேட்டே துளைத்துவிட்டேன்.

இந்த வல்லூறு அரேபிய பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இதனை தானே பிடித்து பயிற்சி தருவது இவர்களுக்கு பெரும் கௌரவமாக விளங்குகிறதாம். பல நாள் கண்காணித்து, அதன் போக்கை அறிந்து, இரையைத் தந்து தூரத்திலிருந்து மறைந்து தாக்கி ஒரு வல்லூறுவை சேதமில்லாமல் பிடிப்பது அவர்களின் வீரத்திற்குச் சவாலாக விளங்குவதால் இந்த விளையாட்டை விரும்பி விளையாடுகிறார்கள். ஆனால் எல்லாராலும் இதனை விளையாட முடியாது, காரணம் இது விலை உயர்ந்த பொழுதுபோக்கு விளையாட்டு. இந்த விளையாட்டைப் பெரிய ஷேக்மார்கள்தான் விளையாடுகிறார்கள். பெரும்பாலும் வல்லூறுகளை மற்றவர்களிடமிருந்து கெளரவப் பரிசாக கிடைத்ததாகவோ அல்லது திறமையால் பிடித்ததாகவோதான் வைத்திருப்பார்கள். இப்போதெல்லாம் இந்தப் பறவைகள் மத்திய கிழக்கு அரபுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாம். நல்ல ரக வல்லூறுவை விலை கொடுத்து வாங்கினால் கிட்டத்தட்ட 30000 டாலராகுமாம். அப்ப ஒரு பறவைக்கு இவ்வளவு விலையா என்று நான் கண் விரித்ததில் என்னைப் பார்த்து பயந்தேவிட்டார் அந்தப் பயிற்சியாளர். வல்லூறு பயிற்சியாளர்களை 'சாகர்' என்று அழைக்கிறார்கள்.
பயிற்சியின் போது அந்த பறவையுடனே முழு நேரமும் செலவிட வேண்டுமாம். இதனை வெறும் கையால் மற்றப் பறவைகளை பிடிப்பதுப் போல் பிடிக்க முடியாது, மிகக் கூரிய நகங்கள் கொண்டதால் தோலாலான கைக்கவசத்தைவிட கடினமான கையுறை அணிந்து அதன் மேல்தான் அதன் கால்களைப் பதிய வைக்கிறார்கள். பார்க்க கையை கார்பெட்டால் சுற்றியிருந்ததுபோல் இருந்தது.

இரண்டு முக்கிய வகைகளான பைரி (Peregrine) மற்றும் வைரி (Saker - cherruq) வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லதாம். இதில் பெண் வைரி வல்லூறு வகை, ஆண் வகையைக் காட்டிலும் மிகவும் வல்லமை கொண்டதாம் (தெரிஞ்ச விஷயம்தானே, எப்பவும் பெண் இனம்தானே சிறப்புமிக்கது).

இந்தப் பறவைகளுக்கு பயிற்சி காலத்தின் போது அவர்களே புறாவையோ வேறு பறவையையோ பறக்க விட்டு அதனைப் பிடிக்க பயிற்சி தருகிறார்கள். இது மிகவும் புதிய முறையாகத் தெரிந்தது. பெரும்பாலும் துப்பாக்கி வேட்டையாடுவது, வில்-அம்பு வைத்து வேட்டையாடுவது கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன பறவை மூலம் பறவையை பிடிக்கும் வித்தை, என்ன வேறுபாடு? என்று கேட்டதற்கு. இஸ்லாமிய முறைப்படி இறந்தவைகளை உண்ணக் கூடாது. ஆகையால் உயிருடன் பிடித்து வருவதற்குத் தக்க பயிற்சி தருகிறார்களாம். அப்படி பிடித்து வரும் வல்லூறுக்கு உடனே அதன் உணவைப் பயிற்சியாளர் பரிசளித்து விடுவார்களாம். வேட்டையாடிய உயிரை வெல்லும் பிராணி பசியாறுமென்று தெரியும் ஆனால் இந்தப் பறவை பயிற்சியாளரின் பரிசுக்காக தம் பசியை தள்ளிப் போடுவது விச்சித்தரமாகவும் அதன் தனிச் சிறப்பாகவும் தோன்றியது.



பிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது. வல்லூறுவை சிறந்த முறையில் பாதுகாத்தாலும், சிறப்பு பராமரிப்பு அளித்தாலும், குளிர்காலத்தில் மட்டுமே வேட்டைக்கு உபயோகித்தாலும், பறவைக்கான சுதந்திரத்தைத் தர நல்ல மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு அதன் காலில் ஒரு 'சிப்' போல பொருத்தி பறக்க விட்டுவிடுவதனால் அதன் போக்கும் நலனும் கணினியிலேயே அறிந்துக் கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது என்று வியந்தார் அந்தப் பயற்சியாளர்.

என் கேள்விகளால் துவண்டுவிடாமல் மிகவும் ஆர்வத்துடன் அவர் கூறிய விளக்கத்திலிருந்து அவர் அந்தப் பறவை இனத்தின் மேல் வைத்திருந்த பற்றும் ஈடுபாடும் தெரிந்தது. மேலும் கேள்விகள் கேட்டு அவரைத் துன்புறுத்த விரும்பாததால் விடைபெற்றேன். வெளியே வந்த பிறகு தொண்டையில் தொக்கி நின்ற கேள்வி, 'ப்ளூ கிராஸ்' பார்த்தால் நல்லமுறையில்தான் வளர்கிறது வல்லூறு என்று சந்தோஷப்படுவார்களா அல்லது அதிலும் ஏதாவது குறைக் கண்டுப்பிடிப்பார்களா என்பது.

Friday, April 06, 2007

கிறுக்கல்கள்

கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக...

மர நிழலில் ஒதுங்கினேன்
மர அசைவில்
நேற்று சேகரித்ததிலிருந்து
எனக்கு மட்டும் மழை
***

வானத்தின் ஜன்னலில்
எட்டிப்பார்க்கும் சூரியன்
நட்சத்திரம்
***

செத்தும்
முகத்தில் எச்சில்
சிலை
***

எதிர்பாராமல்
எதிர்கொண்டு முடிந்தது
கூச்சம்
***

ஒட்டக நிழலில்
தொழுகை
பாலைவனம்
***

வெளிநாட்டு வேலை
தள்ளிப்போடப்பட்டது
தாம்பத்யம்
***

நாட்டின் மானம்
பந்தயத்தில் அடமானம்
கிரிக்கெட்
***

நாய்களுடன் போட்டி
எச்சில் இலைக்கு
மனிதன்
***

என்னையே தொடர்ந்தாலும்
நெருங்கி வர முடியாத
நிழல்
***

வீசிவிட்டு
அழுதது குழந்தை

சாமி ஊர்வலத்தில்
திடீர் ஜாதி கலவரம்
பலர் காயம்
சிலர் மரணம்

வீசப்பட்ட
அப்பாவின் ஒற்றைச்செருப்பு
ஒன்றுமறியாமல் வீதியில்.

***

Thursday, April 05, 2007

மூட(ர்) நம்பிக்கை

இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம்.

கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள்.

மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லா பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.

'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது.


'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.

'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை.

முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம்.
முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு

'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்?

கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .
ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம். அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன்.

கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளை தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.

Wednesday, April 04, 2007

தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே.

ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு கணவனை, கடைசி காலத்தில் பிள்ளையை. அதுவும் ஆண் பிள்ளை இல்லாத, கணவன் இல்லாத பெண்ணாகப் போனால் மருமகனைச் சார்ந்தவள் என்று ஆகிவிடுகிறது.

பெண் பெருமை என்று ஆரம்பித்துவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன். அதான் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் இப்படித்தான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடியும். பெண்ணுக்குப் பெருமை அவள் பெயருக்கு முன்னால் தந்தையின் முதல் எழுத்தை காணாமலாக்கிவிட்டு திருமணத்திற்குப் பிறகு கணவனின் முதல் எழுத்தைப் போட்டுக் கொள்வதாம். இப்படியும் சில பெண்கள்.

இப்படித்தான் என் அக்கா 'S'-இல் தொடங்கும் என் தந்தையின் முதல் எழுத்தை நீக்கிவிட்டு திருமணத்திற்கு பிறகு கணவனின் பெயரில் 'C.N.' என்று மாற்றிக் கொண்டாள். பாஸ்போர்ட்டில் அவள் பெயர் கணவனின் பெயருக்குப் பிறகுதான் அவள் பெயர் வரும். மருத்துவ பரிசோதனை, ஓட்டுனர் உரிமம் என்று எந்த இடத்திற்குச் சென்றாலும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரை வைத்துத்தான் அழைப்பார்கள். அவளை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? 'காடரலி' என்று 'ஸ்டைலாக' அழைப்பார்கள் காரணம் அவள் கணவனின் பெயர் காதர் அலி நஜிமுதீன் (Cader Aly Nagemudeen). அவளுக்கே தன்னை அழைக்கிறார்கள் என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். இப்போது அவள் பெயரே மறைந்து கொண்டும், மற்ற பெயரில் விளித்தால்தான் திரும்புவேன் என்ற நிலைக்கும் வந்தாச்சு. அக்கா இப்படியென்றால் அம்மா அதற்கும் மேல். அம்மாவின் பெயரை யாராவது கேட்டால் திருமதி. சாகுல் அமீது என்பார்கள். ஒருநாள் நான் கேட்டேவிட்டேன். ஏன் இப்படி என்று? இவர்கள் உண்மையான காரணம் சொன்னார்களா அல்லது எனக்காக, நான் சண்டைக்கு வருவேன் என்று காரணம் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன காரணம் அவர்கள் பெயர் அவர்களுக்கே பிடிக்கவில்லையாம். அப்படியே அவர்கள் பெயர் சொன்னாலும் உங்க பெயரைச் சொல்லுங்க என்று கேட்பார்கள் ஏனெனில் அம்மாவின் பெயர் 'ஷாஜகான்' மகள் ஒரு ஆணைப் போல் தைரியமானவளாக இருக்கட்டும் என்று தாத்தா வைத்த பெயர் அப்படி.

சில பத்தாம்பசலிகள் கணவனின் பெயரை வாயால் சொல்லி விடுவதும் குற்றம் என்று இன்றைய சூழலிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவாவது இப்போது கொஞ்சம் மறைந்து வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இன்னாரின் திருமதி என்றும் தந்தை பெயரை நீக்கிக் கணவர் பெயரின் முதல் எழுத்தை 'இன்னிஷியலாக' சூட்டிக் கொள்வது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது எனக்கு. மொத்த அடையாளத்தையும் மறைத்து, மாற்றிக் கொள்வது அதிகம்தானே? நீ நீயாக இரு, உனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள் என்று சொல்வதில் தவறிருக்கா என்ன?

தந்தையுடைய முதல் எழுத்தைப் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் எப்போதிலிருந்து வந்தது, ஏன் வந்தது? மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே பெயரில் பலரிருந்தால் பெயர் குழப்பம் வராமலிருக்க இப்படி சேர்த்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இது உண்மை காரணமாக இருக்க முடியாது இரட்டைப் பெயர் கொண்டவர்களுக்குமா பெயர் குழப்பம் வரும் அப்படிப் பார்த்தால் தாய் தன் கற்பை நிரூபிக்கவே குழந்தையின் பெயருக்கு தந்தையின் முதல் எழுத்தை வைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. என் நண்பர் ஒருவர் தன் தாயின் பெயரின் முதல் எழுத்தை 'இனிஷியலாகவும்' தன் தந்தையின் பெயரை பெயருக்குப் பின்னாலும் போட்டுக் கொள்வார் - வ. முரளி சண்முகவேலன் என்று. தாய் தந்தை இருவருமே தன் பெயரில் வைத்துக் கொள்ள இப்படிச் செய்யலாம். அப்படியே நடைமுறையுமாக்கலாம் அல்லது தன் பெயரை மட்டுமே எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பது சாத்தியமா?

Tuesday, April 03, 2007

கப்பலுக்குப் போன மச்சான் - வாசிப்பனுபவம்

வெளிநாடு போக எப்படியெல்லாம் அல்லல்பட வேண்டியுள்ளது, எத்தனை சிரமங்களையும் வாழ்வின் கரடுமுரடான பாதைகளையும் கடக்கவிருக்கிறது என்பதைப் புலம்பாமலும், சோகத்தைக் கொட்டிச் சாகடிக்காமலும், தனக்கே உண்டான மெல்லிய நகைச்சுவையோடு வடித்திருக்கிறார் நாகூர் ரூமி. மும்பாய்க்கே அழைத்து சென்று அவருடன் சுற்றச் செய்து கழிப்பறை பிரச்சனையிலிருந்து சாப்பாடு- உறக்கப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் விவரிக்கிறார்.வெளிநாடு சென்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாடு செல்ல கஷ்டப்படுகிறவர்களுக்கும் என்று சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கும் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற இந்தக் குறுநாவல் சந்தியா பதிப்பக வெளியீடு.

படிப்பவருக்கு 'வெளிநாடு கனவே உனக்கு வேண்டாம்' என்று பயம்காட்டியிருந்தாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை. எத்தனையோ படித்த இளைஞர்கள் இன்றும் வெளிநாடு செல்ல பெட்டி கட்டிவிட்டு பெட்டி பெட்டியாக இடைத்தரகரிடம் பணமும் கொடுத்து விட்டு ஏமாற்றப்படுவது மறைக்க முடியாத ஜீரணிக்க முடியாத உண்மை]

இது கதையா அல்லது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவமா அல்லது உண்மைச் சம்பவத்தில் கற்பனை கலந்ததா அல்லது சம்பவங்கள் திணிக்கப்பட்டுள்ள உண்மையா என்று குழம்பவே தேவையில்லை. இது அக்மார்க் உண்மை சம்பவங்கள், உண்மை கதாபாத்திரங்களாகத்தான்
இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

வெளிநாடு போவதற்கு முன் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் விவரிக்காமல் நடுநடுவே சில சுவாரஸ்ய தகவல்களும், தகவல்கள் தகவலாக மட்டும் துண்டாக இல்லாமல் கதையோடு ஒட்டியிருக்கும் இயல்பும் நம்மை அந்த கதைக்குள்ளேயே வைத்திருக்கும் யுக்தியும் ரூமி எழுத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* வயிற்றுக் குணவில்லாதபோது சிறிது இலக்கியச் செவிக்கும் ஈயப்படும்
* எம்மி மிதித்து ஏனென்று கேட்காத வாரணாசியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் தமிழ்நாடு! வாரணாசி புனிதஸ்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புனிதப் பயணிகள்! புனித வளையல்கள்! புனித மிதி!

இப்படி மெல்லிய நகைச்சுவையைப் பட்டியலிட்டால் முழு நாவலையும் எழுதவேண்டிவரும். (இதெல்லாம் நகைச்சுவையாக்கும் என்று நக்கலடிக்கும் நகைச்சுவை உணர்வேயில்லாதவர்கள் கேட்டால் நான் பொறுப்பல்ல)

- 'மம்மி ரிடர்ன்ஸ் மாதிரி மச்சான் ரிடர்ன்ஸ்! போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பார்கள் எங்கள் ஊரில். என்னைப் பொருத்தவரை பூவுமில்லை மணமுமில்லை கொண்டு போன பணமுமில்லை.'

- "பணத்துக்குப் பதிலாக பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்திலிருந்தால் நிறைய பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். திறமையை, நேரத்தை, மரியாதையை, அன்பை, உறவுகளை, வயதை, இளமையை என்று எல்லா உன்னதங்களையும் கொடுத்து பணமென்ற இந்த தாளை வாங்க வேண்டியிருந்திருக்காது"

என்று சோகத்தைக் கூட தனது எழுத்தின் திறமையால் லேசாக்கியிருக்கிறார் ரூமி.

தேனீர் கடையில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்ததை "தனது இருப்பை உணர்த்த மனிதர்களின் செவிப்பறைகளை கற்பழிப்பதுதான் ஒரே வழி என்று அவன் முடிவு செய்துவிட்டான்" என்று அழகாக சத்த மாசு தரும் அவஸ்தையைச் சொல்லியிருக்கிறார்.

சென்னை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பூவாசல் தமிழ், நல்ல தமிழ் என்று பல பேச்சு வழக்குகள் தென்படுகிறது. ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தை தவிர்க்க வேண்டிய இடத்திலாவது தவிர்த்திருக்கலாம். யதார்த்தத்தை ஒட்டி வர சேர்க்க வேண்டியுள்ளது என்று பலரும் சொல்லும் சப்பைக்கட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னால். ஆங்கிலமில்லாத பேச்சு யதார்த்ததையே மாற்றுங்களென்றால் எழுத்திலும் கொண்டுவந்து யதார்த்தம் பதார்த்தம் என்கிறார்கள். நாகூர் ரூமி ஆங்கில பேராசிரியர் என்பதால் மன்னித்து விட்டுவிடலாம். நாம் மன்னிக்கும் அளவுக்கு சின்ன ஆசாமி இல்லை அவர், கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பன்முகத் திறமைக் கொண்ட ரூமியின் படைப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றில்லாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துச் சொல்லி வெளிநாடு செல்ல பணம் தந்து ஏமாறுபவர்களையும், வெளிநாடு கனவு கண்டு அதன் பிறகு அங்கு சென்று கஷ்டப்படுபவர்களையும் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. இவர் அனுபவத்தை படிப்பினையாகக் கொண்டு ஏமாறாமல் நீந்தி கரையேறிவிடுவார்களா நம்மவர்கள்? எனக்கு தோன்றியதெல்லாம் வெளிநாடு செல்லும் எல்லோருமே கஷ்டப்படுவதில்லை. சரியான அனுகுமுறையில் விசாரித்து வந்து சேர்வது புத்திசாலித்தனம். நல்ல வேலையில் நல்ல சம்பாத்தியத்தில் குடும்பத்துடன் வாழ்பவர்களை கேட்டுப் பாருங்கள் அந்த மகிழ்வான அனுபவத்தை. இருப்பினும் 'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா' என்று கேட்டால், அது அவரவர் மனதை பொருத்தது என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.அடடா!! கதையைப் பற்றி சொல்ல வந்து கதை வேறெங்கோ போய்விட்டதல்லவா? சரி, விசயத்துக்கு வரலாம்

"அதிர்ச்சிக்கு மனிதர்கள் பழகிடும்போது அது தன் 'அதிர்ச்சி'யை இழந்துவிடுவதைப் பற்றி நாம் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை! குண்டு மழைக்குப் பழகிவிட்டனர் ஆப்கன் குழந்தைகள்." என்று நடு நடுவே வெவ்வேறு விதமான சமூக அக்கறை.

கரீம், சலீம் பாஷா, கமால் என்று பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படிக்கும் போதே அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உருக்கொடுக்க
முடிகிறது. என்னால் மட்டும்தானா அல்லது படிக்கும் அனைவருக்குமா என்று தெரியவில்லை.

படித்து முடிக்கும் போது எல்லா கதாபாத்திரங்களும் நெருங்கிய நண்பர்களாக சொந்தகளாகவே தோன்றுவதால் ரூமி சவுதி செல்லாமல்
பூவாசலுக்கே திரும்பி செல்வது ஜைனப்புக்கு மட்டும் சந்தோஷமில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தான்.

நாவலின் கடைசிவரை மொத்த நாவலையும் தலையில் ஓடச்செய்து, கதாபாத்திரங்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, கடைசியில் கண்களில் நெறிக்கட்டுவது போல் உதிராமல் அலம்பலுடன் நிற்கிறது நீர். நல்ல புதினம் படித்ததும் மனதில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனையை மனதிற்குள் உலாவரச் செய்து கொண்டேயிருக்கும் - நாகூர் ரூமியின் இந்தப் படைப்பைப் போல.

Monday, April 02, 2007

நட்சத்திரப் போட்டி

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது சிறகை விரித்து பறக்க முயற்சி செய்கிறேன். உங்களையெல்லாம் வானமென்று வானளவில் உயர்த்தியவுடன் உச்சி குளிர்ந்திருக்குமே? ஆனால் என் வலைப்பூவை வந்து எட்டிப் பார்ப்பவர்கள் மட்டும்தான் வானம் :-)

கிறுக்கல் என்று பெயர் வைத்திருந்தும், என்னையும் ஒரு வலையாளியாக மதித்து நட்சத்திரமாக்கி, தமிழ்மண வானத்தில் மேகங்கள் நகர்ந்து சென்றாலும் இந்த நட்சத்திரம் மட்டும் முதல் பக்கத்திலிருந்து மறைந்து விடாமல் மின்னி அப்படியே நிற்கச் செய்து, எல்லோர் கண்களிலும் பட வைத்து, (பட வைத்தாலும் எல்லோரும் 'சொடுக்கி' படித்திடவாப் போகிறார்கள்?) எல்லா பதிவர்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு தந்து உற்சாகம் தரும் தமிழ்மணத்தின் முயற்சிக்கு வாழ்த்துகள், நன்றிகள்.

வலைப்பூவுக்கு வந்தவுடனோ அல்லது நட்சத்திரமானவுடனோ ஏன் வலைப்பூவில் பதிக்க வந்தேன், எப்படி வந்தேன், யார் அறிமுகம் தந்தார்கள் என்றெல்லாம் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஏன் வந்தேன் என்ற கதையெல்லாம் சொல்லி உங்களை அழ வைக்க விரும்பவில்லை. அப்படி ஒரு சுவாரஸ்யமில்லாத கதை. குழுமங்களில் கூத்தடித்துக் கொண்டிருந்த என்னை நேர விரயம் செய்யாமல் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க கட்டளையிட்டு, வலை உலகில் உள்ள நல்லவை கெட்டவை சொல்லித் தந்து வழி நடத்தி ஒரு வலைப்பூவும் தந்து எழுத ஆரம்பி என்று சொல்லியும், எனக்கேயுரிய நேரமின்மை காரணமாக பல நாட்கள் தள்ளிப்போட்டு, மன அழுத்தத்தின் போது ஒரு மனமாற்றப் பாதை தேவைப்படவே இந்த வலை உலகை தேர்ந்தெடுத்தேன். ஏதோ வந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்ப நட்சித்திரம். எனக்கே நகைப்பாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருக்கிறது. சரி இந்த ஒரு வாரக் காலத்தை என்னால் முடிந்தவரையில் நல்லமுறையில் உபயோகித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யம் காத்திருக்குமென்று உறுதிகொள்கிறேன். எனக்கு சுவாரஸ்யம் உங்களுக்கு எப்படின்னு தெரியவில்லை ;-)

சரி முதல் சுவாரஸ்யத்தை இந்த பதிவிலிருந்தே ஆரம்பிப்போமா?

கீழே உள்ள படங்களை உற்றுப் பாருங்கள். இதோ உங்களுக்கான கேள்வி - படத்தில் உள்ளது ஆறா அல்லது ஏரியா குளமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் மாறாக எந்த ஆறு, ஆற்றின் பெயர் என்ன? எந்த ஊரின் வானம்? சரியாக விடை சொல்லும் நபருக்கு 1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு. பலர் சரியான விடை எழுதினால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வலைப்பூவாளிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டிய போட்டி. ஒருவர் ஒரு பதிலை மட்டும் அளிக்க வேண்டும். (ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை எழுதும் பட்சத்தில் விடை நிராகரிக்கப்படும்.) மறுமொழியை உபயோகித்து பதில் அளிக்கவும். போட்டியின் முடிவும் வெற்றியாளரின் பெயரும் நட்சத்திரத்தின் கடைசி நாளில் (08 ஏப்ரல் 2007) அறிவிக்கப்படும்.


Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி