Tuesday, April 03, 2007

கப்பலுக்குப் போன மச்சான் - வாசிப்பனுபவம்

வெளிநாடு போக எப்படியெல்லாம் அல்லல்பட வேண்டியுள்ளது, எத்தனை சிரமங்களையும் வாழ்வின் கரடுமுரடான பாதைகளையும் கடக்கவிருக்கிறது என்பதைப் புலம்பாமலும், சோகத்தைக் கொட்டிச் சாகடிக்காமலும், தனக்கே உண்டான மெல்லிய நகைச்சுவையோடு வடித்திருக்கிறார் நாகூர் ரூமி. மும்பாய்க்கே அழைத்து சென்று அவருடன் சுற்றச் செய்து கழிப்பறை பிரச்சனையிலிருந்து சாப்பாடு- உறக்கப் பிரச்சனை வரை எல்லாவற்றையும் விவரிக்கிறார்.வெளிநாடு சென்று கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாடு செல்ல கஷ்டப்படுகிறவர்களுக்கும் என்று சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கும் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற இந்தக் குறுநாவல் சந்தியா பதிப்பக வெளியீடு.

படிப்பவருக்கு 'வெளிநாடு கனவே உனக்கு வேண்டாம்' என்று பயம்காட்டியிருந்தாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை. எத்தனையோ படித்த இளைஞர்கள் இன்றும் வெளிநாடு செல்ல பெட்டி கட்டிவிட்டு பெட்டி பெட்டியாக இடைத்தரகரிடம் பணமும் கொடுத்து விட்டு ஏமாற்றப்படுவது மறைக்க முடியாத ஜீரணிக்க முடியாத உண்மை]

இது கதையா அல்லது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவமா அல்லது உண்மைச் சம்பவத்தில் கற்பனை கலந்ததா அல்லது சம்பவங்கள் திணிக்கப்பட்டுள்ள உண்மையா என்று குழம்பவே தேவையில்லை. இது அக்மார்க் உண்மை சம்பவங்கள், உண்மை கதாபாத்திரங்களாகத்தான்
இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

வெளிநாடு போவதற்கு முன் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் விவரிக்காமல் நடுநடுவே சில சுவாரஸ்ய தகவல்களும், தகவல்கள் தகவலாக மட்டும் துண்டாக இல்லாமல் கதையோடு ஒட்டியிருக்கும் இயல்பும் நம்மை அந்த கதைக்குள்ளேயே வைத்திருக்கும் யுக்தியும் ரூமி எழுத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* வயிற்றுக் குணவில்லாதபோது சிறிது இலக்கியச் செவிக்கும் ஈயப்படும்
* எம்மி மிதித்து ஏனென்று கேட்காத வாரணாசியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் தமிழ்நாடு! வாரணாசி புனிதஸ்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புனிதப் பயணிகள்! புனித வளையல்கள்! புனித மிதி!

இப்படி மெல்லிய நகைச்சுவையைப் பட்டியலிட்டால் முழு நாவலையும் எழுதவேண்டிவரும். (இதெல்லாம் நகைச்சுவையாக்கும் என்று நக்கலடிக்கும் நகைச்சுவை உணர்வேயில்லாதவர்கள் கேட்டால் நான் பொறுப்பல்ல)

- 'மம்மி ரிடர்ன்ஸ் மாதிரி மச்சான் ரிடர்ன்ஸ்! போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பார்கள் எங்கள் ஊரில். என்னைப் பொருத்தவரை பூவுமில்லை மணமுமில்லை கொண்டு போன பணமுமில்லை.'

- "பணத்துக்குப் பதிலாக பண்டமாற்று முறை இன்றும் புழக்கத்திலிருந்தால் நிறைய பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். திறமையை, நேரத்தை, மரியாதையை, அன்பை, உறவுகளை, வயதை, இளமையை என்று எல்லா உன்னதங்களையும் கொடுத்து பணமென்ற இந்த தாளை வாங்க வேண்டியிருந்திருக்காது"

என்று சோகத்தைக் கூட தனது எழுத்தின் திறமையால் லேசாக்கியிருக்கிறார் ரூமி.

தேனீர் கடையில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்ததை "தனது இருப்பை உணர்த்த மனிதர்களின் செவிப்பறைகளை கற்பழிப்பதுதான் ஒரே வழி என்று அவன் முடிவு செய்துவிட்டான்" என்று அழகாக சத்த மாசு தரும் அவஸ்தையைச் சொல்லியிருக்கிறார்.

சென்னை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பூவாசல் தமிழ், நல்ல தமிழ் என்று பல பேச்சு வழக்குகள் தென்படுகிறது. ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தை தவிர்க்க வேண்டிய இடத்திலாவது தவிர்த்திருக்கலாம். யதார்த்தத்தை ஒட்டி வர சேர்க்க வேண்டியுள்ளது என்று பலரும் சொல்லும் சப்பைக்கட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்னால். ஆங்கிலமில்லாத பேச்சு யதார்த்ததையே மாற்றுங்களென்றால் எழுத்திலும் கொண்டுவந்து யதார்த்தம் பதார்த்தம் என்கிறார்கள். நாகூர் ரூமி ஆங்கில பேராசிரியர் என்பதால் மன்னித்து விட்டுவிடலாம். நாம் மன்னிக்கும் அளவுக்கு சின்ன ஆசாமி இல்லை அவர், கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பன்முகத் திறமைக் கொண்ட ரூமியின் படைப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றில்லாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துச் சொல்லி வெளிநாடு செல்ல பணம் தந்து ஏமாறுபவர்களையும், வெளிநாடு கனவு கண்டு அதன் பிறகு அங்கு சென்று கஷ்டப்படுபவர்களையும் காப்பாற்றும் நல்லெண்ணத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. இவர் அனுபவத்தை படிப்பினையாகக் கொண்டு ஏமாறாமல் நீந்தி கரையேறிவிடுவார்களா நம்மவர்கள்? எனக்கு தோன்றியதெல்லாம் வெளிநாடு செல்லும் எல்லோருமே கஷ்டப்படுவதில்லை. சரியான அனுகுமுறையில் விசாரித்து வந்து சேர்வது புத்திசாலித்தனம். நல்ல வேலையில் நல்ல சம்பாத்தியத்தில் குடும்பத்துடன் வாழ்பவர்களை கேட்டுப் பாருங்கள் அந்த மகிழ்வான அனுபவத்தை. இருப்பினும் 'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா' என்று கேட்டால், அது அவரவர் மனதை பொருத்தது என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.அடடா!! கதையைப் பற்றி சொல்ல வந்து கதை வேறெங்கோ போய்விட்டதல்லவா? சரி, விசயத்துக்கு வரலாம்

"அதிர்ச்சிக்கு மனிதர்கள் பழகிடும்போது அது தன் 'அதிர்ச்சி'யை இழந்துவிடுவதைப் பற்றி நாம் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை! குண்டு மழைக்குப் பழகிவிட்டனர் ஆப்கன் குழந்தைகள்." என்று நடு நடுவே வெவ்வேறு விதமான சமூக அக்கறை.

கரீம், சலீம் பாஷா, கமால் என்று பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படிக்கும் போதே அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உருக்கொடுக்க
முடிகிறது. என்னால் மட்டும்தானா அல்லது படிக்கும் அனைவருக்குமா என்று தெரியவில்லை.

படித்து முடிக்கும் போது எல்லா கதாபாத்திரங்களும் நெருங்கிய நண்பர்களாக சொந்தகளாகவே தோன்றுவதால் ரூமி சவுதி செல்லாமல்
பூவாசலுக்கே திரும்பி செல்வது ஜைனப்புக்கு மட்டும் சந்தோஷமில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் தான்.

நாவலின் கடைசிவரை மொத்த நாவலையும் தலையில் ஓடச்செய்து, கதாபாத்திரங்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, கடைசியில் கண்களில் நெறிக்கட்டுவது போல் உதிராமல் அலம்பலுடன் நிற்கிறது நீர். நல்ல புதினம் படித்ததும் மனதில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனையை மனதிற்குள் உலாவரச் செய்து கொண்டேயிருக்கும் - நாகூர் ரூமியின் இந்தப் படைப்பைப் போல.

19 comments:

அபி அப்பா said...

உள்ளேன் ஜெஸீலாக்கா, படிச்சுட்டு வந்து மீதிய கமெண்டுரேன்:-))

ramachandranusha(உஷா) said...

நட்சத்திர மேடம்,
க. போ. மச்சானும், பா. ராகவன் எழுதிய "சுண்டெலி" யும் தொடராய் குமுதம். காமில் வந்துக் கொண்டிருந்ததை ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தேன், சட்டென்று டீவி சீரியலைப் போல நிறுத்திவிட்டார்கள்.ரூமியின் நையாண்டி, நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும். இப்புதினத்தில் கண்வன், மனைவி கடிதங்கள் சுவாரசியமாய் இருக்கும் இல்லே? விசாவுக்கு தோசை, ஆப்பம் உதாரணம் நினைவில் இருக்கு.
ரூமியின் "தூரம்" என்ற சிறுக்கதை இணையத்தில்தான் படித்தேன். படிச்சிருக்கீங்களா :-))))

Anonymous said...

இந்த அபி அப்பா என்ன சொல்ல வரார். அந்த புத்தகத்தினை படிச்சுட்டு வராராமா > இல்லை ஜஸ்ட் அட்டண்டண்ஸ் போடுறாறா ?

செந்தழல்

(புத்தகம் எங்கே கிடைக்கும் )

Naufal MQ said...

கிரிக்கெட் பத்தி ஏதாச்சும் அதுல ரூமி எழுதியிருக்காரா?

Jazeela said...

உஷா, க.போ.ம. அப்ப பாதியிலேயே நிற்கிறதா? படிச்சி முடிக்கலையா? (டீவி சீரியலை ஆவலுடன் பார்ப்பீர்களா என்ன?) தோசை, ஆப்பம் பற்றி ஏற்கெனவே கேட்டிருந்ததால் புதிதாக தெரியவில்லை எனக்கு. //கண்வன், மனைவி கடிதங்கள் சுவாரசியமாய் இருக்கும் இல்லே?// அடுத்தவங்க கடிதத்தை படிப்பதுனா உங்களுக்கு அவ்வளவு சுவாரஸ்யமா;-)?
எனக்கும் ரூமி நக்கல், நையாண்டி ரொம்ப பிடிக்கும். நீங்க சொன்ன 'தூரம்' இன்னும் வாசிக்கவில்லை. தேடிப்பிடிக்கிறேன் படிக்கிறேன். சுட்டியிருந்தால் தாருங்கள்.

செந்தழல் anyindia.com-ல் கிடைக்கும். அபி அப்பா சும்மா 'உள்ளேனம்மா' மட்டும் போட்டுட்டு போற மாதிரி தெரியுது. வாசிப்பனுபவத்த வாசிக்க நேரமில்லையாம் ;-)

Jazeela said...

FB, உங்களுக்கு உணவு, உடை, உறைவிடம், செவிக்குணவு எல்லாமே கிரிக்கெட்தானா? கிரிக்கெட் பற்றி இருந்தால்தான் படிப்பீர்களா என்ன? விச்சித்திர பிறவி. ;-) ம்ம் இருக்கு, கிரிக்கெட் கிண்டல். ;-)

Naufal MQ said...

//ஜெஸிலா said...
FB, உங்களுக்கு உணவு, உடை, உறைவிடம், செவிக்குணவு எல்லாமே கிரிக்கெட்தானா? கிரிக்கெட் பற்றி இருந்தால்தான் படிப்பீர்களா என்ன? விச்சித்திர பிறவி.
//
அப்படியில்லங்க. அவர் கிரிக்கெட் நல்லா தெரிஞ்சு எழுதியிருந்தா அவரையும் நம்ம இந்திய கிரிக்கெட் டீம்ல சேர்த்துக்க சொல்லலாம்ல. அதான் கேட்டேன்.

அபி அப்பா said...

//செந்தழல் anyindia.com-ல் கிடைக்கும். அபி அப்பா சும்மா 'உள்ளேனம்மா' மட்டும் போட்டுட்டு போற மாதிரி தெரியுது. வாசிப்பனுபவத்த வாசிக்க நேரமில்லையாம் ;-)//

கொஞ்சம் வேலையாக இருக்கேன். மதியம் படித்து விடுகிறேன்!

இருந்தாலும் செந்தழல் ரவிக்கு ஏகப்பட்ட நக்கல்:-))

கோபிநாத் said...

\\'மம்மி ரிடர்ன்ஸ் மாதிரி மச்சான் ரிடர்ன்ஸ்! போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பார்கள் எங்கள் ஊரில். என்னைப் பொருத்தவரை பூவுமில்லை மணமுமில்லை கொண்டு போன பணமுமில்லை.' \\\

ஆஹா...அக்கா உங்களின் நகைச்சுவையும் அருமை ;-)))

Jazeela said...

//அப்படியில்லங்க. அவர் கிரிக்கெட் நல்லா தெரிஞ்சு எழுதியிருந்தா அவரையும் நம்ம இந்திய கிரிக்கெட் டீம்ல சேர்த்துக்க சொல்லலாம்ல. அதான் கேட்டேன். // ரொம்பத்தான் கூடிப்போச்சு உங்களுக்கு, ;-) இப்படி சேர்த்து சேர்த்துத்தான் நம் நாட்டு கிரிக்கெட் அணி இந்த நிலையில இருக்கு.

//கொஞ்சம் வேலையாக இருக்கேன். // என்னது என்றைக்குமில்லாத திருநாளா ;-)
//மதியம் படித்து விடுகிறேன்!// நிதானமா வாங்க.

//ஆஹா...அக்கா உங்களின் நகைச்சுவையும் அருமை ;-))) // கோபி, அது என்னுடைய நகைச்சுவையில்ல ரூமியுடையது.

வைசா said...

இந்த்ப் புத்தகத்தைத் தேடி வாசிக்கிறேன். இந்தப் பதிவை வாசிக்கும்போது எஸ்.வி.சேகரும், பாண்டியராஜனும் நடித்து வெளிவந்த "கதாநாயகர்கள்" படம் நினைவுக்கு வருகிறது.

வைசா

Anonymous said...

உள்ளூர்ல புழைக்க தெரியாதது தான் வெளிநாடு போய் அடிமை வாழ்க்கைக்கு தம்பட்டம் அடிக்குமாம், எங்கு ஊரு சித்தன் சொன்னது

அபி அப்பா said...

//Anonymous said...
உள்ளூர்ல புழைக்க தெரியாதது தான் வெளிநாடு போய் அடிமை வாழ்க்கைக்கு தம்பட்டம் அடிக்குமாம், எங்கு ஊரு சித்தன் சொன்னது//

அனானி! இங்கு நாங்கள் அடிமை வாழ்க்கை வாழவில்லை. உங்களை போல் மேனாஜர் ரூம் உள்ளே போகும் போது செறுப்பை ரூம் வாசலில் கழட்டிவிட்டு போவதில்லை. நாங்கள் ஆபீஸில் அரட்டை அடிக்கும் போது மேனேஜர் கிராஸ் செய்தால் கப்சிப் ஆவதில்லை. சார் சார்ன்னு வ்ழியாமல் பெயர் சொல்லிதான் கூப்பிடுவோம். நினத்த நேரத்தில் லீவ் எடுக்கலாம்.I humbly request you ன்னு காலில் விழுவது இல்லை. just one phone போதும், take care ன்னு சொல்லிடுவாங்க, அது தவிர நாங்கள் அனைவரும் அங்கு வர தயார். இந்தியா என்ன ஆகும் தெரியுமா? ETA என்ற ஒரு தமிழரின் நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவுக்கு எவ்வளவு அன்னிய செலாவணி கிடைக்கிறது என்று சிதம்பரத்திடம் போய் கேட்கவும். ஸ்ஸ்ஸ்ஸ் மூச்சு வாங்குது பின்ன வர்ரேன்!

Jazeela said...

//"கதாநாயகர்கள்" படம் நினைவுக்கு வருகிறது.// அதைவிட அதிகமான நகைச்சுவை இந்த புதினத்தில் வைசா.

//உள்ளூர்ல புழைக்க தெரியாதது தான் வெளிநாடு போய் அடிமை வாழ்க்கைக்கு தம்பட்டம் அடிக்குமாம், எங்கு ஊரு சித்தன் சொன்னது // சித்தனுக்கு வெளியூரில் வேலைக் கிடைக்காத கடுப்பில் எழுதியதா இருக்கும்.

தென்றல் said...

ஜெஸிலா,
படிக்க வேண்டும் listல இதையும் சேர்த்துள்ளேன்..!

அறிமுகத்திற்கு நன்றி!

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

Jazeela said...

வாங்க தென்றல். முதல்முறையாக என் வலைப்பூ பக்கம் இப்பதான் தென்றல் வீசுது ;-) வருகைக்கு நன்றி. நிதானமா படிச்சிட்டு கருத்து எழுதுங்க.

மஞ்சூர் ராசா said...

இந்த நாவலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படிக்கவில்லை. உங்களின் விமர்சனம் படிக்க தூண்டுகிறது.

மும்பையில் நான் இருந்தபோது பல கதைகளை கேட்டும் நேரில் பார்த்தும் இருக்கிறேன், வெளிநாடு போவதற்காக காத்துக்கொண்டிருந்தவர்களுடன் தங்கியும் இருக்கிறேன். நாகூராரின் நாவல் உண்மைகதையாகவே இருக்கும் என உங்கள் விமர்சனம் மூலம் எண்ண தோன்றுகிறது

நிறைவாக நீங்கள் சொல்வது போல சரியான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து நல்ல வேலையில் குடும்பத்துடன் பலர் இருப்பதும் உண்மையே. (நீங்களும், நானும் அதில் அடங்குவோமோ?)

Jazeela said...

//நிறைவாக நீங்கள் சொல்வது போல சரியான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து நல்ல வேலையில் குடும்பத்துடன் பலர் இருப்பதும் உண்மையே. (நீங்களும், நானும் அதில் அடங்குவோமோ?)// அதில் என்ன சந்தேகம்? நம்மையெல்லாம் மனதில் வைத்து எழுதியதுதானே ;-)

கண்டிப்பாக வாங்கி படியுங்கள் க.போ.ம.

Unknown said...

அன்புச் சகோதரி ஜெஸீலாவுக்கு,

எனது மனைவி எழுதிய கவிதையை "இஸ்லாத்தில் பெண்ணுரிமை" பாராட்டியதற்கு நன்றி. இன்றுதான் நான் உங்கள் கிறுக்கல்களை வாசித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். நான் இன்றுவரை கப்பலுக்கு போன மச்சான் வாசிக்கவில்லை. நாகூர் ரூமி எனது ஒன்றுவிட்ட அண்ணன். நானும் அவரும் ஒரே வீட்டில்தான் வளர்ந்தோம். கல்லூரி வேலைக்காக ரூமி (ரஃபி) ஆம்பூரில் குடிபெயர்ந்துவிட்டார்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி