Tuesday, August 07, 2007

யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். தேவைப்பட்டால் ஒரு தொலைபேசி அழைப்புதானே?!. அதுவும் வேலை, அலுவல், குடும்பம் என்ற வரிசையில் நம் நட்பு பின்னால் சென்றுவிட்டது. ஜூலை 2ஆம் தேதி உன் பிறந்தநாளுக்கு நானும் என் மகளும் சேர்ந்து

தொலைபேசியில் உனக்கு பிறந்தநாள் பாடல் பாடும் போது 'happy long life to you' என்று சொல்லும் போது விளையாட்டாக 'long life எல்லாம் வேண்டாம்ப்பா' என்றாயே அது விதியின் காதில் இப்படியா விபரீதமாக விழுந்துத் தொலைய வேண்டும்? நம் நட்பில் உள்ள பலதரப்பட்ட ரகசியங்களை புதைப்பதற்காகவா நீ குழிக்குள் சென்றுவிட்டாய்? உன் பிள்ளைகளைப் பார்த்தாலே உன் தாய்மையின் பிரதிபலிப்பு தெரியுமே! எங்களுக்காக இல்லாவிட்டாலும் அபி- ஜெஸிக்காக உன் உயிரைக் கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்க வேண்டாமா? எப்படி இவ்வளவு சுலபமாக விட்டுவிட்டு சென்றுவிட்டாய்?

அன்று ஃபாத்தின் 'யாஸ்மின் ஆண்ட்டி உங்களை இப்பவே பார்க்க வேண்டுமெ'ன்று அழுதவுடன் இன்ப அதிர்ச்சியாக வீட்டுக்கு வந்து நின்றாயே. இப்போதும் அவள் அழுகிறாள் உன்னைக் கேட்டு நான் என்ன சொல்லிப் புரிய வைக்க? உனது மனதைப் போன்ற மல்லிகைப்பூவை உனக்கு பிடிக்குமென்று ஊரிலிருந்து யார் வாங்கி வந்தாலும் உனக்குத் தரும் போது 'கொஞ்சம் வாடிப் போய்விட்டதே' என்று நான் வருத்தப்பட்டால் நீ முகம் மலர்ந்து 'பரவாயில்லைப்பா' என்று கொடுத்த அன்புக்காக ஆசையாக வாங்கி சூடிக் கொள்வாயே. இப்போது உனக்காக நிறையப் பூ வாங்கி வைத்துள்ளேன் எப்போது வந்து எடுத்துக் கொள்ளப் போகிறாய்? வாடுவதற்குள் சீக்கிரம் வந்துவிடு. உன் வீட்டுக்கு நான் வந்தால் காப்பி, டீ குடிக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு என்னை பால் குடித்தே ஆக வேண்டும் என்று அன்பாகக் கட்டளையிட்டு உபசரிப்பாயே. அந்த அன்புக்காக ஏங்குகிறேன். எப்போது வருவாய்? உன் ஆங்கில புலமையைக் கண்டு வியந்து உனக்கு ஒரு வலைப்பூ பின்ன இருந்தது தெரியுமா உனக்கு? உன்னை வற்புறுத்தியாவது எழுத வைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இறைவன் வேறு விதமாக எழுதிவிட்டானே. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்: நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அறிவேன் அதற்காக இவ்வளவு அவசரமாக நீ அவனிடம் சென்றிருந்திருக்க வேண்டாம் யாஸ்மின்.

என்னிடம் வந்து ஏன் மன்னிப்பு கேட்டாய் யாஸ்மின்? என்னிடம் சொல்லாமல் போனதற்காகவா அல்லது இறுதி மூச்சின் வழக்கமான நியதிக்காக சம்பிரதாயத்திற்காகவா? ஏன் நீ மட்டும் கேட்க வேண்டும் - நானும் கேட்டு விடுகிறேன். என்றேனும் ஏதாவது உன் மனம் காயப்படும் படி பேசியிருந்தால் கண்டிப்பாக அது என் தவறான வார்த்தையின் தேர்வு என்பதைப் புரிந்து என்னை மன்னித்தும், நான் பல விஷயங்களில் சொல்ல மறந்த நன்றியையும் இப்போது ஏற்றுக் கொள்வாயா?

யாஸ்மின், உனக்கு நினைவிருக்கிறதா நம்முடைய துருக்கி சுற்றுலா? அந்த படங்களில் நாம் இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதை இப்போது எடுத்துப் பார்த்தால் என் கண்களில் முட்டிக் கொண்டு வருகிறது கண்ணீர், ஏன்? நீ என் வளைகாப்பில் அணிவித்த அந்த பிரத்யேக நிற வளையலைத் தேடிப்பிடித்து அணிந்து கொண்டேன். நான் அறிவிழந்து நடக்கிறேன் என்கிறார்கள் என் வீட்டார் - உன்னை இழந்ததால்தான் அப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பாயா யாஸ்மின்? எதற்கும் தளராத நான் சமயங்களில் சோர்வாக இருந்தால் ஆறுதல் சொல்வாயே? இப்போது வாழ்நாளிலே இல்லாத தளர்ச்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, நீ எங்கே போனாய் என்னை தேற்றாமல்? மன உறுதி என்று மார்தட்டிக் கொண்டு திரியும் நான் இப்படி ஆனதைக் கண்டு என் தாயும் 'உன் தோழிக்காக வருந்துவது போல் எனது இறப்பில் வருந்துவாயா' என்று பரிதாபமாக கேட்கும் அளவுக்கு என்னை நொறுக்கிவிட்டாயே நியாயமா யாஸ்மின்? என்னிடம் ஒருவேளை நீ சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் மனதை திடப்படுத்தி இருந்திருப்பேன். உன் கடைசி முகத்தை பார்த்திருந்தால் கூட அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிவிட்டாய் என்று ஆறுதல் பெற்றிருப்பேன். அந்த கொடுப்பினையைக் கூடத் தராமல் சொல்லாமல் சென்றுவிட்டாயே.

உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. நம்முடைய நெருக்கமானவர்களுக்கு முன்பே நாம் சென்று விட்டால் நன்றாக இருக்கும் பிரிவின் துயரைச் சந்திக்கவே வேண்டாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் அந்த அதிர்ஷ்டம் உனக்குத்தான் வாய்த்திருக்கிறது. உன்னை பற்றிய செய்தியை நம்முடைய மற்ற தோழிகளுக்குச் சொல்லும் போதுதான் எங்கள் நட்பை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன். நம் நட்பின் ஆயுள் குறைவு என்று தெரிந்திருந்தால் கிடைத்த அற்ப நேரங்களிலும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.

உனக்கு எழுதிய பிறகுதான் எனக்குக் கொட்டி தீர்த்த மன ஆறுதல் கிடைத்திருக்கிறது யாஸ்மின். இந்த கடிதத்தை உன் ஜிமெயிலுக்குதான் அனுப்ப இருந்தேன். ஆனால் நான் என்றோ என் வலைப்பூவில் எழுதிய என் கதையைப் படித்துக் கிண்டல் செய்தாயே அப்போதுதான் தெரிந்து கொண்டேன் உன் மடல் பெட்டியைத் திறக்கிறாயோ இல்லையோ என் வலைப்பூவை படிக்கிறாயென்று, அதனால் எந்த மூலையில் இருந்தாலும் இந்த பாவியின் மடலை படித்துவிட்டு பதில் எழுதுவாய் என காத்திருக்கிறேன் உனக்காக பிராத்தித்தபடி.

31 comments:

அபி அப்பா said...

படித்து முடித்து அழுது விட்டேன். நான் இப்போது எந்த நிலையில் ஆபீஸ்ல இருக்கேன்ன்னு தெரியலை. ஏன் ஏதாவது பிரச்சனையா என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் கூட இருப்பவர்கள்:-(((((((

கண்மணி/kanmani said...

என்ன சொல்ல ன்னு தெரியலை ஜெஸிலா
ஒன்று மட்டும் நிச்சயம் மிக அன்பானவர்களை நல்லவர்களை இறவன் தன்னிடம் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்.
இப்படிக் கொட்டித்தீர்த்தாலாவது உங்கள் மன பாரம் குறையட்டும்

அபி அப்பா said...

ஜஸீலா உங்களுக்கு தைரியம் சொல்ல முடியலை!

குசும்பன் said...

:( சொல்லி தேற்றுவதற்கு வார்தைகள் இல்லை.

"உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. "

இதுபோல் அபத்த பேச்சுகள் வேண்டாமே:(

N Suresh said...

என் அன்புத் தங்கையே,

ஆறுதல் கிடைக்குமென்று நினைத்துத் தான் "யாஸ்மினிக்கு நீ அனுப்பின கடிதம்" வாசித்தேன்.

அலுவலகமென்று பாராமலும் நான் அழுதுவிட்டேன். கடைசியாக யாஸ்மினை நீ பார்க்காதது நல்லதென்றே நினைக்கிறேன். அந்நிலையில் நீ பார்த்திருந்தால் உன் மனம் தாங்காமல் இன்னமும் தவித்திருக்கும்.

வாடியவர்கள் எங்கள் அனுபவத்திலிருந்து சொல்கிறோம்.

ஒரு பழக்கமும் இல்லாத எங்களுக்கே இந்த நிலை என்றால், அவர்களோடு நன்கு பழகின் உன்னைப் போன்றோர் நிலையை என்னால் உணர முடிகிறது. உன்னுடைய இந்த கடிதத்தில் நீ தெரிந்தோ தெரியாமலோ பல பாடங்களை சொல்லியிருக்கிறாய்

1) மரணம் என்ற கொடூரம் என்றும் வரலாம்

2) அருகிலிள்ளோர் தூரத்திலுள்ளோர் என யாராக இருந்தாலும் அவர்களோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு அன்பை கொடுத்து மகிழ வேண்டும்

3) யாரிடமாவது கசப்பு இருந்தால் உடனடி அவர்களோடு மன்னிப்பு கேட்டு ஓப்புறவாகவேண்டும்

3) வாழ்க்கை என்பத மலரும் நினைவுகளின் சேகரிப்பே... பணச்சேகரைப்பல்ல..

கண்ணீர் முந்துகிறது... இதற்குமேல் இப்போது எழுதமுடியவில்லை..

அன்புடன் அண்ணன்
என் சுரேஷ்

லொடுக்கு said...

:(

Unknown said...

செய்தி அறிந்ததும் பொய்யாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே ஆசிப்புக்கு தொலைப்பேசினேன். ஆனாலும் :-((((((((((((((((((((((((

Sumathi. said...

ஹாய் ஜெஸிலா,

நாம யாரையாவது ரொம்ப இழக்கும் போது தான் இது போல எண்ணத் தோனும். நாம ரொம்ப நேசிக்கறவங்களைத் தான் கடவுள் சீக்கிரம் நம்மிடமிருந்து பிரித்து விடுகிறான். வேற என்ன சொல்லறது.இப்படியாவது உங்கள் மனம்
சமாதானமடையட்டும்.

Unknown said...

படித்தவுடன் கண்கள் கலங்கிவிட்டது.
சில இழப்புகள் ஈடு செய்ய இயலாதவைதான் - எனினும் இன்ப, துன்பங்களின் கலவைதானே வாழ்க்கை. பொறுமையுடன் இருங்கள்.அன்புடன்

Anonymous said...

Assalamu alaikkum, Ennai kalanga vaithu vittadhu un kaditham, yenakku erkanave aval pillaigalai ninaikkumbothu avvapodhu kanneer varum (ithanaikkum avolodu naan palagiyathu kooda kidaiyathu), intha kadithathai parthathum unakku enna solli aaruthal solvathu yendre theriyavillai. Atharkaaga faathinukku pirivaipatri intha chinnavayasile kandathellam sollam kuzhappavendam.ketta kanavaga ninaithu marakkavum. Worries r like birds...let them fly over u.But, dont let them build a nest on your head...Life is a precious gift so keep urself worryfree.

nazeem banu

Unknown said...

சொல்லிக்கொள்ளக் கூட அவகாசம் தராமல் முகத்திலடித்தாற் போல கதவை மூடும் மரணம் கொடியதே!

ஒருவரை மட்டும் பிரிந்த நம்மாலேயே இந்த துக்கத்தைத் தாங்க முடியவில்லையென்றால், அத்துனை பேரையும் இழந்த‌ இறந்தவருக்கு எப்படி இருக்குமோ?

மனிதனின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்; ஆனால் இறைவனின் செயலுக்கு ஒரே காரணம் தான் இருக்கும். அது நன்மைக்கே!! என்பார்கள். எந்த விதத்தில் இது நன்மை என்று தெரியவில்லை.

ஆறுதல் சொல்ல நினைத்தால் வார்த்தைகள் குழறுகின்றன. கண்ணீர் துடைக்க நினைத்தால் விரல்கள் நடுங்குகின்றன. உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. உங்கள் கடிதம் கண்டு அழுது, உங்களுடன் ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.

நா.ஆனந்த குமார்

கோபிநாத் said...

;-((

Benu said...

Assalamu Alaikum,
Its always human tendency that to ignore some1 who loves u because v are sure tht they vl never leave us. Bt if v lose them, v really don know how to react. ennodu frnd kalai 9th-il irandhappo enakku idhe nilamai thaan irundhadhu.

un sogathai nee kotti theerthutta. aana ippathaan engal manam innum rombave barama irukku. ethukkume azhadha naan un madalai kandu kan kalanginen.

insha allah iraivan abhi-kkum, jezi-kkum nal vazhiyai amaithukolla naan eppodhum dua seikiren (ameen)

ILA (a) இளா said...

வார்த்தைகள் ஏதுமில்லாமல் கண்களில் கண்ணீர் ததும்பிய படி

இளா

நண்பன் said...

சகோதரி ஜெஸீலா,

// மன உறுதி என்று மார்தட்டிக் கொண்டு திரியும் நான் இப்படி ஆனதைக் கண்டு என் தாயும் 'உன் தோழிக்காக வருந்துவது போல் எனது இறப்பில் வருந்துவாயா' என்று பரிதாபமாக கேட்கும் அளவுக்கு என்னை நொறுக்கிவிட்டாயே நியாயமா யாஸ்மின்? //

கல்லையும் பிளந்து கண்ணீர் வரச் செய்யும் வரிகள் - ஒரு நெருங்கிய நண்பருக்கு ஒரு துயரம் நிகழும் பொழுது, அதுவே தனக்கும் நிகழ்ந்தால் எவ்வாறிருக்கும் என்ற பதைபதைப்பே, மற்றவரின் துயரத்தில் முழுமனதோடு பங்கேற்க வைக்கிறது. ஆறுதல் சொல்ல தூண்டுகிறது.

இரண்டொரு முறை ஆசிப்பின் வீட்டிற்குச் சென்ற பொழுது ஸலாம் சொன்னதைத் தவிர வேறெதுவும் பேசினதில்லை. அதிகம் பேசுவதில்லை என்ற என்னுடைய வழமையான மௌனம் தான் காரணம். என்றாலும், அந்த மரணச் செய்தியைக் கேட்ட பொழுது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே கிடையாது. சம்பந்தமில்லாமல், பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போன என் தங்கையின் நினைவு தான் வந்தது. 'இறந்து விடுவாள்' என்பதற்கான எந்த அறிகுறியுமின்றி, திடுமென ஒரு தொலைபேசியின் தகவல் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பல நாட்களுக்கு ஊரிலிருந்து தொலை பேசி என்றாலே அதை எடுப்பதற்கு மனம் நடுங்கும். என் அம்மாவிடம் சொல்லி இருக்கிறேன் - இனி எப்பொழுதுமே என்னைத் தொலைபேசியில் அழைக்காதீர்கள். நானாக அழைக்கும் பொழுது பேசிக் கொண்டால் மட்டுமே போதுமென்று. இன்றுவரையிலும் அதுவே வழக்கமாகி விட்டது.

ஆகஸ்ட் 2 மதியம், தமிழன்பு எனக்குத் தொலை பேசிய பொழுது, கனவில் கூட நினைத்திருக்கவில்லை - இப்படி ஒரு செய்தி வரும் என்று. உடன் மனதில் தோன்றிய நினைவுகள் - என் தங்கையின் மரணமும் அதைத் தொடர்ந்த துயரங்களும் தான். ஒரு மரணத்தினால் நிகழ்ந்த இழப்பு எத்தனை துயரமானது என்ற உணர்வை எனக்குக் காட்டியதே என் தங்கையின் மரணம் தான். மீண்டும் அதே அளவிற்கான துயரம் அதன்பின் என்னைத் தாக்கியது இப்பொழுது தான்.

// உன் இழப்புக்கு பிறகு என் மகளுக்கு நான் சொல்லித் தர ஆரம்பித்துவிட்டேன் நான் இல்லாமல் இந்த உலகை அவள் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று. //

அத்தியாவசியமான தேவை. இழப்புகளை - நிரந்தர இழப்புகளை எப்படி தாங்கிக் கொள்வது என்று அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். முழுமையான தேவை அது. 2004ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தைப் பிரிந்து ஒரு வருடம் முடிந்து மீண்டும் ஊருக்குச் சென்ற பொழுது, நான் இல்லாத வாழ்க்கையை அனைவரும் இயல்புடன் எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொண்டமையை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் - ஒரு மெல்லிய துயரத்துடன். அது குறித்து, 2005 ஆம் ஆண்டில், நான் எழுதிய கவிதையின் கடைசி வரிகள்:

நானில்லாத வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொண்ட
உங்கள் வாழ்வில்
உள்ளே நுழையாது
விலகி நின்று பார்த்தால்
வாழ்க்கை
இனிப்பாகத்தான் இருக்கிறது.

(முழுக்கவிதை:: http://nanbanshaji.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88?updated-max=2006-01-17T22%3A58%3A00%2B04%3A00&max-results=20'

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நெருங்கிய தோழியை இழப்பது பெரிய கொடுமை தான் ... மனதைரியம் கொள்ளுங்கள்.

துளசி கோபால் said...

உங்க பதிவு பார்த்துத்தான் இந்தத் துயரச்செய்தி தெரிஞ்சது.

மனம் அப்படியே துவண்டு போயிருச்சுங்க.

குழந்தைகளை நினைச்சா இன்னும் பாரமாகிருது மனசு.

அகமது சுபைர் said...

எனக்கு நண்பர்களாக வாய்த்தவர்களுக்கெல்லாம் ஒரு வித சோகமே பரிசாய் கிடைத்திருக்கிறது. என்னுடன் நன்கு பழகிய நண்பர் சாகரன் இறந்தபோது,சவூதியில் இருந்தேன். இப்போது தான் பழக ஆரம்பித்த நண்பர் ஆசிப் மீரான், இந்தியா செல்லும்போது,"ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 3 வரை விடுமுறை. ஆகஸ்ட் 4 முதல் துபாயில் இருப்பேன்" என்று சொல்லிச்சென்றார். ஆனால் இறைவன் வேறொன்று நினைத்திருக்கிறான். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Unknown said...

அன்புச் சகோதரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்
''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக்
கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்ଯகுர்ଯஆன் 4:78)

மேலும் கூறுகிறான்.

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம்
அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.
2:157 இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்ଯகுர்ஆன்)

சகோதரியே! நீங்கள் மீண்டும் சகோதரி ஜாஸ்மினை சந்திக்க முடியாது என்று என்னுவது தவறல்லவா? முடியும் பொருத்திருங்கள்... கொஞ்சம் பொருத்திருங்கள் நிரந்தரம் இல்லா உலகை விட்டு நிரந்தரமான உலகில் நாம் அனைவரும் சந்திப்போம் அப்போது பிரியத்திற்குறியவர்கள் அனைவரும் பிரியாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று கவலைப்படுங்கள் பிரியப்படுங்கள் ஆசைப்படுங்கள் அந்த வாழ்க்கை தான் நிரந்தரம்.

உங்களது வருத்தத்திற்கு இறைவசனங்களின் மூலம் ஆறுதல் மட்டுமே கூற முடியும்.

இழந்தவர்களுக்குத்தான் இழப்பின் அருமை புரியும் என்கிறீர்களா? உண்மை முற்றிலும் உண்மை...

பொருமைக்கு சிறப்பான நற்கூலிகளை சித்தப்படுத்தி வைத்துள்ளான் நம் இறைவன். பொருமையைக் கையாளுங்கள்.

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் பொழியப்படட்டுமாக...

Jazeela said...

என்னுடைய துயருக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முயன்ற, பிராத்தித்த, பதிலிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெஸிலா,
அன்பு என்றும் அழியாது.
யாஸ்மினின் குழந்தைகளுக்கும் தாயன்பு வேண்டும். நீங்கள் துணையிருங்கள்.

Anonymous said...

கண்ணீருடன்... நண்பன் திகிலன்

Aruna Srinivasan said...

ஜெஸிலா, தாமதமாகதான் இந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆசீப் மீரானை அவ்வப்போது பதிவுகளில் பார்த்திருந்தாலும், நேரடி அறிமுகம் ஆனதில்லை. பதிவர் பட்டறை தினத்தன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். ஆனால் அப்போது இந்த துயரச் செய்தியை அறிந்திருக்கவில்லை. அன்பு மனைவியை இழந்த அவருக்கு மன ஆறுதல் விரைவில் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

காட்டாறு said...

வார்த்தைகள் வரவில்லை ஜெசிலா. இழப்பின் வலி போல் கொடுமையான விஷயம் வேறேதுமில்லை ஜெஸிலா. ஆனாலும் நாம் வாழத்தான் வேண்டும். இல்லையா ஜெஸிலா?படிப்பினைகள் கற்றுத்தரும் மரணம் இல்லையேல்........

உங்கள் மனமும், யாசின் குடும்பத்தாரின் மனமும் சமாதானமடைய பிராத்திக்கிறேன்.

Anonymous said...

ஜெஸிலா.. நான்தான்ப்பா யாஸ்மின்..!

என்னப்பா நீ.. குழந்தை மாதிரி... நம்ம கையில என்ன இருக்கு..? நிச்சயமாக நம்ம எல்லாரும் இறைவனிடம் மீளக்கூடியவர்கள்தான், நடந்ததை நினைச்சி வருந்திட்டு இருக்காம நடக்க வேண்டியதை பாருப்பா.. மகளுக்கு தைரியம் சொல்லி வளர்த்து வா.. ஆனால் தைரியம் என்ற பெயரில் பயமூட்டி விடாதே..

என் மீது இத்தனை பிரியம் வைத்திருக்கும் உன்னை நினைத்தால் நான் ஒரு நல்ல தோழியோடு வாழ்ந்தேன் என்ற நிம்மதி கிடைக்கிறது. எனக்காக நீ செய்ய வேண்டிய உதவியெல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மை படைத்த அந்த இறைவனின் முன்னிலையில் நான் வெற்றியடைய பிரார்த்திக்க வேண்டியது தான்.

எனக்காக பிரார்த்திப்பாயா...?

நட்புடன்
பிரியமான தோழி
யாஸ்மின்

Jazeela said...

யாஸ்மின் உன்னுடைய பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நியாயத்தீர்ப்பு நாளில் கண்டிப்பாக உனக்கு வெற்றிதான். என் பிராத்தனைகள் எப்போதும் உன்னுடன்.

கண்ணீர் தீர்வன்று காலம்தான் அருமருந்து என்று ஒரு தீர்கதரிசியின் வாக்கின்படி தெளிவாக இருக்கிறேன். உன்னுடைய இந்த பின்னூட்டமும் எனக்கு வலு சேர்க்கிறது.

சென்ஷி said...

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

மன‌ அழுத்தங்களை நானும் உணர்கின்றேன். :(


சென்ஷி

கானா பிரபா said...

முகம் தெரியாத அந்தச் சகோதரியின் திடீர் இழப்பு இப்போதும் மனதைக் கனக்கச் செய்கின்றது. உங்கள் பதிவு இன்னும் அதிகப்படுத்திவிட்டது

delphine said...

நாம் ரொம்ப நேசிக்கிறவங்க ... இப்படித்தான் போய் விடுகிறார்கள்..வாசிச்சு ரொம்ப கவலையா இருந்துச்சு ஜெசிலா.

Trichy Syed said...

உங்களின் ஆழமான அன்பை நினைத்து அழுதேன் சகோதரி!

- திருச்சி சையது

Ameeraa Ameen said...

யார் என்று கூட தெரியாத அவர்களின் மறைவு, அடக்கம் மீறி அழ சொல்கிறது. அன்புக்குரியவர்கள் மறைவதில்லை மாறாக நம் மனதுக்குள் ஒளிந்திருக்கிறார்கள், விட்டு சென்ற நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமீராஅமீன்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி