Monday, July 20, 2009

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற வார்த்தையை நெல்லை இஸ்லாமியர்கள் மட்டுமே உபயோகிக்கிறார்கள்னு நினைக்கிறேன். ஊரிலிருந்த வரைக்கும் அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியலை. ஆனால் இங்க வந்த பிறகு அது ஒரு அரபி வார்த்தை - பயத்தால் தவிர்ப்பது என்று பொருளென்று தெரிஞ்சிக்கிட்டேன். சரி, இது மொழி ஆராய்ச்சிக்கான பதிவில்லை, வந்த வழியே பயந்து ஓடிடாதீங்க. ஆமா எங்க விட்டேன், ம்ம் உணவகத்தில் சுத்தம் பார்ப்பது, என்னத்த தான் சுத்தம் பார்த்தாலும் சில சமயங்களில் மாட்டுவது நாமளாத்தான் இருக்கும். சென்னைக்கு சென்றிருந்த போது தி.நகர் ‘முருகன் இட்லிக் கடை’க்கு போயிருந்தோம். சாப்பிடும் போது அக்காவுக்கு ஏதோ தென்பட சொல்லாமல் மறைத்துவிட்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு “யாரும் கோபப்படாதீங்க, என் உணவில் இது இருந்தது” என்று காட்டினாள். பார்த்தவுடனே எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. உணவிலிருந்தது நகம் அதுவும் கை நகம் மாதிரி தெரியலைங்க கால் கட்டவிரல் நகம் மாதிரி பெரியதாக. உவ்வே! நினைச்சாலே இன்னும் குமட்டுது. எனக்கு பயங்கர கோபம் என்னை எல்லோரும் பொறுமையாக இருக்க சொல்லிட்டு, உணவகத்தவர்கள் அசிங்கப்பட்டுவிட கூடாதென்றும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் சகூஜப்படக் கூடாதென்றும் மெதுவாக அந்த பணம் செலுத்துமிடத்தில் இருந்தவரிடம் விஷயத்தைச் சொல்ல அவர் மேலாளரை அழைத்தார், வந்தவர் பார்த்துவிட்டு அவர் எந்த உணர்ச்சியுமில்லாதவராக ”ஆமாங்க நகம்தான். சாரி, என்ன செய்ய சொல்றீங்க”ன்னு என்னவோ தினம் நடக்கும் விஷயம் போல சர்வ சாதாரணமாக கேட்டுக் கொண்டார். உடனே அக்கா ”இதுவே துபாயாக இருந்தால் உங்க உணவகத்தை அடைத்து சீல் வைத்திருப்பார்கள். நல்ல உணவகமென்று வந்தோம் இனி யாரையும் இங்கு வர சிபாரிசு செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி: அபுதாபி ’எமிரெட்ஸ் பாலஸ்’ உணவகத்தில் தலைமை சமையற்காரருக்கு ரூ. 1104000/- (US$ 27,000) அபராதமாம். எதற்கு தெரியுமா அபுதாபி நகராட்சியர்கள் உணவகத்தை பரிசோதனை செய்ய செல்லும் போது குளிர் சாதனப்பெட்டியில் காலாவதியான தயிர் இருந்ததாம். இதற்கு விசாரனை, காவல், அபராதமெல்லாமும். இத்தனைக்கும் அந்த தயிரை யாருக்கும் பரிமாறவில்லை வெறும் குளிர் சாதனப்பெட்டியில் இருந்ததற்கு மட்டுமே இந்த அபராதம். போன மாதம் ஒரு சைனீஸ் உணவகத்தின் உணவை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு அமீரகத்தில் எல்லா உணவகத்தையும் சோதனை செய்து நகராட்சியின் கட்டளைகளுக்கும் சுத்த தரத்திற்கும் ஈடில்லாத சுமார் ஆயிரத்திற்கும் மேலான ஷார்ஜாவிலுள்ள உணவகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறை சோதனைக்கு செல்லும் போதும் அவ்வாறே இருந்தால் உணவகத்திற்கு சீல் வைக்கும் அபாயமும் உள்ளதால் எல்லோரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம். எனவே உணவகம் நடத்துபவர்கள் கூடுமானவரை சுத்தமாக உணவக்த்தை வைத்துக் கொள்வதில் முனைப்பாயிருக்கிறார்கள்

போன வருடம் எங்கள் வீட்டுக்கு அருகே வழக்கமாக வாங்குமிடத்தில் ‘பெப்பர் சிக்கன்’ வாங்க விட்டோம். சாப்பிடும் போது அதில் ஒரு இறைச்சி துண்டு இருந்தது. நாங்கள் சிக்கன், இறைச்சி எல்லாமும் சாப்பிடுபவர்கள் தான் இருந்தாலும் சிக்கனில் இறைச்சி வந்தால் அது உணவகத்தின் கவனக்குறைவை குறிப்பதால் உணவகத்தை அழைத்து விஷயத்தை சொல்லி இனி இவ்வாறு நிகழலாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஒரு ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பார்த்தால் உணவகத்திலிருந்து ‘பெப்பர் சிக்கன்’ மற்றும் ‘பட்டர் நான்’ அதுவும் இலவசமாக. வேண்டாம் சாப்பிட்டு முடித்துவிட்டோம் வீணாகிவிடும் எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகு எடுத்து சென்றார்கள். வாடிக்கையாளர் திருப்தி என்பதை விட எங்கே ஏதாவ்து புகார் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் அதன் மூலம் உணவகத்தை மூட வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சமுமே இதற்குக் காரணம் எனலாம். இந்த உணவக்ங்களை நடத்துபவர்களும் இந்தியர்கள்தான்.

சட்டங்கள் எல்லா இடத்திலும் தான் இருக்கிறது. ஆனால் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யும்போதோ அல்லது அதன் கடுமைக்குப் பயந்து மட்டுமோதான் தவறுகள் திருத்தப்படுகிறது.

இங்கே நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் எப்போது தாயகத்திலும் முறையாக செயல்படத் துவங்கும்?

16 comments:

Anonymous said...

very sorry to hear the news..

Not only hotels , top companies and govt not willing to serve the customers..They do not want bad news from customers.(eg, very recently i bought lipstick for my wife from top retail shop, there is no mrp/manf date/exp date i send a mail to lakme ..no reply but for auto reply.)

Indian consumer should walk-up soon..pl write in mouthshout.com about this.. every one should know..
VS Balajee

அதிகாலை வீரா துபாய் said...

எல்லா இடங்களிலும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதை கடைபிடிபிடிப்பதில்லை.
லஞ்சம் எப்போ ஒழிகிறது.அப்போதுதான் எல்லா இடங்களில் சுத்தமான உணவுகளும்,பொருட்களும் கிடைக்கும். உங்களின் தட்டிகேட்கும் மனப்பான்மை தொடரட்டும். நன்று

Anonymous said...

யாருய்யா அது வீரா??
சாப்பிட்டுட்டு 'கம்'னு வந்துட்டாங்கன்னு எழுதியிருக்காங்க. தட்டி கேட்டதா எழுதியிருக்கீங்க? தூக்கத்துலேருந்து முழிச்சிட்டு பின்னூட்டம் போடுங்கய்யா

shabi said...

நீங்க பதிவர் சந்திப்புக்கு போகலியா இல்ல யாரும் கூப்டலியா...//எங்கள் ஊரிl வசுவாசு புடிச்சவன்னு சொல்லுவாங்க

Unknown said...

இப்போது நகம். அடுத்தது 'எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்' மாதிரி கால்விரலே வராமல் இருந்தால் சரிதான். இட்லியில் நகம் கிடந்தும் அப்படியே சாப்பிட்டு விட்டு.... இருந்தாலும் உங்கள் அக்கா பொறுமையின் சிகரம்.

அப்புறம், 'வஸ்வாஸ்' என்பது மனதில் ஏற்படும் வீணாண எண்ணங்கள், சந்தேகங்கள் என்பதைக் குறிக்குமென நினைக்கிறேன். இதிலிருந்து பாதுகாப்பு பெற குர்ஆனின் சிறிய வசனங்களில் ஒன்றான 'குல் அஊது பிரப்பின்னாஸ்' என்ற வசனத்தை ஓதுவார்கள் எனக் கேட்டிருக்கிறேன்.

Jazeela said...

VS Balajee, Auto reply வந்துதேன்னு சந்தோஷப்படுங்க :-).

தட்டிக்கேட்டா நம்மூருல தட்டிப்புடுவாங்க வீரா. இந்த சம்பவத்தை எல்லோரும் கவனிக்காவிட்டாலும் ஒரு சிலர் பார்க்கத்தானே செய்தார்கள். யாரும் முகம் சுளிக்கவுமில்லையே, என்னத்த சொல்ல நம்ம மக்களுக்கு அதுதான் தேவாமிருதம்.

’கம்’னு வரலையே ஆசிப், கேட்க தானே செய்தோம். என்ன, சண்டைப்போடவில்லை. இனி கவனமாக இருங்களென்றும், இந்த உணவகத்தை யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டோம் என்றும் தானே சொன்னோம். அதனால் தூங்கிகிட்டே வாசித்தது நீங்க தான் :-). செம தூக்கமென்று ஸ்டேடஸ் பகுதியில் நேற்று போடும் போதே நினைச்சேன்.

Jazeela said...

வாங்க ஷாபி. நலம் தானே? பதிவர் சந்திப்புக்கு போகவில்லை. யாரும் கூப்பிடவில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். வர வேண்டாம்னு சொல்லிட்டாங்கப்பா. நீங்க ஏன் போகவில்லை?

சுல்தான் பாய், நீங்க சொல்வது 100% சரி. வஸ்வாஸ் என்பது பெயர் சொல். ஒஸ்வாஸ் என்பது ஆகுப்பெயர். என்னடா இவ அரபி வாத்திமாதிரி சொல்லிக்கிட்டு இருக்காளேன்னு நினைக்காதீங்க. எங்க அலுவலக அரபி செய்தியாசிரியரிடம் கேட்டு தெரிந்துக் கொண்ட விடயம்.
பதிவர் சந்திப்புக்கு ஒரு பெண் பதிவரை கூட்டிக் கொண்டு வரப் போகிறேன்னு சொல்லியிருந்தா நானும் வந்து கம்பெனி கொடுத்திருப்பேன்ல?

உண்மைத்தமிழன் said...

மேடம்..

சென்னைவரைக்கும் வந்துட்டு ஒரு வார்த்தைகூட சொல்லலையே..!!!

சரி போகட்டும்.. இனிமேல் அடுத்த ரவுண்டு ஆரம்பமா..?

ஆணாதிக்கம் சார்ந்த பின்னவீனத்துவத்தை படிச்சு படிச்சு மண்டை காய்ஞ்சு போய் கிடக்கு..!

நீங்களாச்சும் நல்லவிதமா எழுதுறீங்களே.. அதையே தொடர்ந்து எழுதுங்களேன்..!

இந்த ஆசீப் மீரான் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை நீங்க மட்டுமாச்சம் தடை பண்ணுனீங்கன்னா நல்லது. யாருக்காச்சும் வீரம் வேண்டாமா..?

shabi said...

அபுதாபில இருக்குறதுனால துபை வர்றதுக்கு கொஞ்சம் சோம்பேரித்தனம் நீங்க அபுதாபி வரலாமே ஒரு weekend 050-4924310 என் மொபைல்

பீர் | Peer said...

மதுரை முருகன் இட்லி கடையிலும் இப்படித்தான். அதை நானும் ஒரு இடுகையாக இட்டுள்ளேன்.

Jazeela said...

தமிழா தமிழா உண்மை தமிழா, சொந்த ஊருக்கு வரதுக்குக் கூட ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லி அனுமதிக் கேட்டுட்டுதான் வரணும் போல இருக்கே.

//இந்த ஆசீப் மீரான் அண்ணாச்சியின் பின்னூட்டத்தை நீங்க மட்டுமாச்சம் தடை பண்ணுனீங்கன்னா நல்லது. யாருக்காச்சும் வீரம் வேண்டாமா..?//

என்ன தடை செய்யணுமா? புரியலையே? அப்ப உங்களுக்கு வீரமில்லன்னு ஒத்துக்கிறீங்களா?

Jazeela said...

ஷாபி, சோம்பல் உடம்புக்கு நல்லதல்ல :-). அமீரகப் பதிவர்களே ஷாபி எண்ணை குறித்துக் கொள்ளுகள். அடுத்த முறை அபுதாபியில் பதிவர் கூட்டம் ஷாபி செலவில் போட்டுவிடலாம். :-)

பாலு said...

'ஒஸ்வாஸி’ ஒரு நெல்லை தமிழ் வார்த்தை கத்துக்கிடேங்க. முருகன் கடையில இட்டலி சாப்பிடனணம்னு ஆசை இருந்துச்சு .....இப்ப போச்சுது.

Jazeela said...

பாலு, என் பதிவின் நோக்கம் முருகன் இட்லி கடை பிழைப்பில் மண் போடுவதல்ல. நம்மூர் வியாபாரிகளிடம் இருக்கும் அலட்சிய போக்கை சுட்டிக்காட்ட.

Unknown said...

உங்க அக்கா நல்லவங்க போல. நானாக இருந்தால் ஒரு சவுண்ட விட்டு அங்கே சாப்பிடும் பத்திருபது பேர் அடுத்த முறை அந்தக் கடை பக்கம் வராத மாதிரி செஞ்சிருப்பேன்.

செவத்தப்பா said...

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி! "ஒஸ்வாஸி" எனும் வார்த்தையை எங்க‌ளூரிலும் (பொத‌க்குடி) ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள்...

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி