Tuesday, January 21, 2014

அறம்


பிரபலம் என்றாலே அவருடன் நட்பு பாராட்ட தோன்றும். ஆனால் எந்த வகை பிரபலமென்றாலும் பெரிய அளவில் உறவாடவோ அவர்களுடன் தொடர்பில் இருக்கவோ நான் முற்பட்டதில்லை. அது திரைத் துறையாகட்டும் அல்லது எழுத்துலகாகட்டும். எழுத்தாளர்கள் வருகிறார்களென்றால் அவர்கள் எழுதியதை வாசிக்காமல் புத்தகப் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொண்டு முக தாட்சண்யத்திற்காக இதை வாசித்தேன் அருமையென்று பொய்யாக பேசத் தெரியாது. ஜெமோ அமீரகம் வருகிறார் என்ற போதும் கூட அவருடைய எழுத்துக்களைத் தேடி வாசிக்கத் தோன்றியதில்லை. அமீரகத் தமிழ் மன்றத்திற்கு ஒருவரை விருந்தினராக அழைக்கும் போது அவரைப் பற்றிய பின்புலன்களை வாசித்துத் தெரிந்து கொள்வேன், அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை நல்லவிதமாகப் பேச வேண்டுமென்பதற்காக. ஜெமோ பற்றியும் அப்படித்தான் தெரிந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசி வரவேற்புரை நிகழ்த்தினேனே தவிர அவர் எழுத்துக்களை அதுவரை பெரிதாக நுகர்ந்ததில்லை. ஜெமோ இங்கு வந்திருந்த போது ஆற்றிய சொற்பொழிவு மிக அற்புதமாக அமைந்தது. சிவன் - பார்வதி தாயம் விளையாடும் ஓவியத்தின் பின் புலத்திலுள்ள கதையை விளக்கியதோடு அவர் பார்த்த, தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு அழகாகக் கடத்தத் தெரிந்த தொனியும் உடல்மொழியும் பேச்சுத் திறனும் இன்னும் என் கண் முன்னே நிறைந்திருக்கிறது. அதன் பிறகு அவர் எழுத்தை வாசிக்க முயற்சித்தேன். அவருடைய இணைய தளத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் மண்டையில் எதுவும் ஏறவில்லை. காரணம் மனத்தடையாகக் கூட இருந்திருக்கலாம். தெரியவில்லை. அவர் அண்ணாச்சிக்கு எழுதிய கடிதத்தை வாசித்த போது அவர் மீது மரியாதை சேர்ந்ததே தவிர அப்போதும் கூட அவர் எழுத்தைத் தேடத் தோன்றவில்லை.


கணவர் சென்னைக்குச் சென்றிந்த போது சாகித்ய அகாடமி விருது பெற்ற காரணத்திற்காக ஜோ.டி. குரூஸின் ’கொற்கை’ வாங்கி வரச் சொல்லியிருந்தேன். இவர்கள் சென்ற நேரத்தில் பனுவலில் ’கொற்கை’யில்லையென்று அங்கிருந்து என்னை தொலைபேசிய போது அண்ணாச்சி சொன்னதன் பேரில் ஜெமோவின் 'வெள்ளையானை', 'அறம்' மற்றும் சாரு எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடைய புத்தகம் என்ன இருக்கிறது என்று கேட்டு வாங்கி வரச் சொல்லியிருந்தேன். சிவராமன் எழுதிய 'கர்ணனின் கவசம்' படித்துக் கொண்டிருந்ததால் வாங்கி வந்த புத்தகங்களைத் தொட்டும் பார்க்கவில்லை.

அண்ணாச்சி வீட்டுக்கு வரும் போதெல்லாம் 'அறம் வாசிச்சியா?' என்றே கேட்பார். 'பெரிய புத்தகம்ன்னாலே பீதியா இருக்கு, இத முடிச்சிட்டுத்தான் அத வாசிக்கனும்' என்றேன். பிறகு இன்னொரு தருணத்தில் ’அறம் தனித்தனி கதைகள் தானே அதை ஏன் இன்னும் தொடவில்லை?’யென்று கேட்க. 'அட அப்படியா? அதக் கூட பார்க்கலையே' என்றவுடன் கடுப்பாகிவிட்டார் அண்ணாச்சி.

நேற்றுதான் அறம் வாசிக்கத் தொடங்கினேன். முதல் கதை 'அறம்' வீட்டில் பாதி வாசித்துவிட்டு கீழே வைக்க மனதில்லாமல் அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்று வாசித்து முடித்தேன். அலுவலகத்தில் சுற்றி ஆட்கள் இருந்தும் நிறுத்த முடியாத அளவிற்குத் தேம்புகிறேன் என்னையும் அறியாமல். நெருக்கமான சக ஊழியர் மட்டும் என்னிடத்தில் வந்து 'Is everything fine? Are you ok?' என்று கேட்டார். அதன் பின்னரே தன்னிலைக்குத் திரும்பியவளாக ஒன்றுமில்லையென்று விளக்கிவிட்டு மனதில் 'அறத்தை'யே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

'உண்மை மனிதர்களின் கதைகள்' என்றிருந்தது. அது மேலும் வலியை அதிகரித்தது. இது சாதாரண எழுத்தாகத் தோன்றவில்லை. எடுத்தோம் வாசித்தோம் வைத்தோம் என்றில்லாமல் அது மண்டைக்குள் சென்று தொண்டையை அடைக்க வைப்பது ஒரு சாதாரண எழுத்தால் முடியுமா என்ன? எதையோ யாருக்கோ எப்பவோ சொல்ல வேண்டுவதை தீர்க்கதரிசி போல உருமாறி அல்லது உருவெடுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு. கதையோட்டம் பிரமிக்க வைக்கிறது.

இந்தக் கதையில் சில வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. சூடான அதிகமில்லாத காப்பியை ருசிப்பதை கூட 'பாய்ஞ்சு ஓடிட்டிருக்கிற பொண்ணை பாத்து ரசிக்கமுடியுமா? என்ன சொல்றேள்?’ என்று பெரியவர் சிரிக்க ‘குதிரைய ஓடுறப்ப மட்டும்தானே ரசிக்க முடியும்?' என்று எழுதிய அறிவுஜீவி சம்பாஷனைகளும், 'பொஸ்தக ஏவாரம் பன்றதுக்கு பொடலங்கா ஏவாரம் பண்ணலாம்னு சொல்றான். பொடலங்கா அழுகிரும்டா முட்டாள்' என்று 'அவர் கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு' இப்படியான உள்குத்துகளும் மிக எளிமையாக போகிற போக்கில் நம்மை அழுத்திச் செல்கிற கதை.

ஒரு இடத்தில் இப்படி வரும் 'அத்தனை துயரம் நிறைந்த புன்னகையை சமீபத்தில் நான் கண்டதில்லை' அதை வாசிக்கும் போது எனக்கும் இத்தனை யதார்த்தம் நிறைந்த கதையை சமீபத்தில் எங்கும் வாசிக்கவில்லையென்றே தோன்றியது. மொத்தம் பன்னிரெண்டே கதைகள், சீக்கிரம் முடித்துவிட்டு மற்ற கதைகளைப் பற்றி எழுதுகிறேன். இனி ஜெமோவைத் தேடித் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.

சமீபகாலமாக 'ராயல்ட்டி' 'அறம்' என்று இணையத்தில் பிரளயமே ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பதிப்பகத்திற்காகப் பேசுபவர்கள் இந்தக் கதையைக் கண்டிப்பாகப் படித்திருப்பார்கள். எனக்கென்னவோ இந்த வரிகள் -- "கூட்டம் கூடிட்டுது. 'முதலாளி சொல்றதுதானே நியாயம், என்ன இருந்தாலும் ஏழு வருசமா சோறுபோட்ட தெய்வம்ல அவரு?"ங்கிறாங்க என்ற கூட்டமே இணையத்தில் அதிகம் ஒலிப்பதாக தோன்றியது. இந்தக் கதையை நீங்கள் வாசிக்கவில்லையென்றால் வாசித்துவிடுங்கள். என் கருத்தோடு இசைவீர்கள்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி