Wednesday, March 30, 2016

மண(ன) முறிவு - Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?"
"வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை."
"மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?"
"இது விவாதத்திற்குரியது"
"என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?"
"இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்."
"கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று ஏதேனும்?"
"இல்லை"
"கணவர் ஏதாவது ஒரு வகையில் அவரது மனைவியை அச்சுறுத்துகிறாரா?"
"இல்லை"
"இவரால் இந்தப் பெண்ணின் வாழ்வில் ஆபத்து உண்டு என்று நம்புகிறாரா? "
"பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக் கொள்வதுமில்லை."
கணவன் இடைமறித்து: "நான் பேச விரும்புகிறேன். அவளுக்குத் தான் என்னுடன் பேச விருப்பமில்லை."
"எல்லாம் சரியாகத்தானே இருக்கு பிறகு விவாகரத்திற்கான காரணம்தான் என்ன?"
"அவள் தன் கணவரை விரும்பவில்லை."
-இப்படி நீதிமன்ற விசாரணையோடு துவங்குகிறது இஸ்ரேலிய திரைப்படமான Gett: The Trial of Viviane Amsalem.

ஒரு பெண்ணின் தேவையை அறிய முற்படாமல், அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவளுக்கான மரியாதையைத் தராமல் அவள் கணவரின் விருப்பத்தை மட்டுமே பிரதானமாக்குகிறார்கள். முடிந்த வரை அவருக்குச் சாதகமாக விசாரணையைக் கொண்டு செல்கிறார்கள். இரண்டு மணிநேர முழுத் திரைப்படமும் விசாரணையாக, நீதிமன்ற காட்சிகளாக மட்டுமே இருப்பினும், அயர்ச்சியில்லாமல், பல கேள்விகளுடன், வாழ்வியல் சிக்கலுடன், ஆண் ஆதிக்க நீதிபதிகளின் அமைதியான அட்டூழியங்களாக விரிகிறது.

இப்படத்தின் மூலம் இஸ்ரேலின் வாழ்வியல் முறையை விளங்க முடிகிறது. இஸ்ரேலில் எந்த உள்நாட்டு திருமணமும் அல்லது விவாகரத்தும் மதக்குருக்களால் மட்டுமே சட்டப்பூர்வமாக்க முடியுமாம், அதுவும் 'கணவரின்' முழு ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகுமாம். மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களில் மாட்டிக் கொண்ட கதாநாயகி வீவியன், கணவர் எலிஷா ஆம்சலெமிடமிருந்து விவாகரத்து கோருகிறார். அவர் தர மறுக்கிறார். வீவியன் தன் தரப்பு நியாயங்களை விவரிக்க அழைத்து வரும் சாட்சியங்களும், எலிஷா நல்லவர் என்று சான்றிதழ் தருகிறார்கள். அவர் நல்லவர்தான் ஆனால் அவர் தனக்கு நல்ல கணவரில்லை என்பதைத் தனது வழக்கறிஞர் மூலம் விளங்க வைக்கப் பாடுபடுகிறார் வீவியன். சாட்சிகளாக வரும் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு பெண்ணை அவர்கள் பார்க்கும் வெவ்வேறு பார்வைகளின் பிம்பங்களாக உரு தந்திருக்கிறார் இயக்குனர். இந்தச் சமுதாயத்தில் பலருக்கு, ஏன் பெண்கள் உட்பட பலருக்கு, கணவர் அடிக்கவில்லை, குடிக்கவில்லை, வேறு பெண் தேடி செல்லவில்லை, உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இவ்விதமான மனநிலை இருப்பதால்தான் வீவியன் போன்ற பெண்களின் மனம் இவர்களுக்குப் புரிவதில்லை. இதையெல்லாம் மீறி திருமண வாழ்வில் ஒரு பெண் எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி இவர்களுக்கு விளங்குவதில்லை. அதே போல ஒரு மனைவியின் கடமையாகப் பொதுவாகப் பலர் சிந்திப்பதும், அதுவே இந்தப் படத்தில் சொல்லப்படுவதும், கணவருக்குப் பிடித்ததைச் சமைத்துப் போடுதல், கணவரின் பெற்றவர்களைக் கவனித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கணவரின் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருத்தல், கணவரின் தேவைக்கு இணங்குதல் இதைத் தவிர வேறில்லை. அந்தப் பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு, அதில் அவளுக்கும் ஆசைகள், கனவுகள், தேவைகள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் உண்டு என்பதை நியாயப்படுத்த முற்படும் போது அதைப் புரிந்து கொள்ளாமல் அதனையும் தவறாகப் பார்க்கும் சமுதாயமும், மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களும் அவளுக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைக்கச் செய்யாமல் செய்கிறது.

இந்தப் பெண் கதாபாத்திரத்தின் மொத்த வலியையும் பணிவையும் செருக்கையும் சேர்த்து அதன் முழு வடிவமாகவே மாறுகிறார் கதாநாயகி வீவியனாக வரும் ரோனித் எல்காபெட்ஸ். அவரே தன் சகோதரர் ஷலோமி எல்காபெட்ஸோடு இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை பெரிய ஆறுதலானது இஸ்ரவேலர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் 'Ophir Award' இப்படத்திற்குக் கிடைத்தது மட்டுமல்லாது ஜெருசலேம் திரைப்பட விழாவில் 'பார்வையாளர்களுக்குப் பிடித்த படம் பிரிவுக்கான விருதும் இப்படத்திற்கே கிடைத்துள்ளது ஒரு வகை நம்பிக்கையைத் தருகிறது.

யூதர்களும் பிற மத அடிப்படைவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதைப் பறைசாற்றும் படம். கடவுளின் பெயரில் ஆண்கள் மாறு செய்யும் ஒரு பெண்ணின் கதை.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி