Monday, August 24, 2026

'நூறு சாமி' – தாய்மை எனும் புனிதக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சக மனுஷியின் விடுதலைப் போராட்டம்!

 தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே தியாகம், பொறுமை, பிள்ளைகளுக்காகவே வாழ்பவர் என்ற ஒரு பிம்பம் காலம் காலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அம்மாவுக்கு என்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கக்கூடாது. கணவனை இழந்துவிட்டால் அவளுடைய வாழ்க்கையும் அத்துடன் முடிந்துவிட வேண்டும். குறிப்பாக பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஒரு பெண் தனக்காக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் இன்னும் தயங்குகிறது.
இந்த எண்ணத்தையே கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் கேள்வி கேட்கிறது இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’ திரைப்படம்.
43 வயதான செல்வி கணவனை இழந்து இரண்டு மகன்களுடன் வாழ்கிறாள். இளம் வயதில் கணவனை இழந்தபோது அவளுக்குத் தேவையான ஆதரவைத் தராத உறவுகளே, பல வருடங்களுக்குப் பிறகு அவள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும்போது எதிரிகளாக மாறுகிறார்கள்.
இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய கேள்வி.
ஒரு பெண் தாயாகிவிட்டால் அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிந்துவிட வேண்டுமா?
சமூகம் தாயை தெய்வமாக உயர்த்திப் பேசுகிறது. ஆனால், சில நேரங்களில் ஒருவரை தெய்வமாக்குவதும் அவருடைய மனிதத் தன்மையை மறுப்பதுதான்.
செல்விக்கு ஆசைகள் இருக்கின்றன. அன்பு தேவைப்படுகிறது. தனிமை வாட்டுகிறது. ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அதற்காக அவள் தவறானவளாகிவிடுவாளா?
இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு என் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
என் 60 வயதைக் கடந்த மாமா மறுமணம் செய்து கொண்டபோது, அவரைச் சுற்றியிருந்த பலரும் விமர்சித்தார்கள். இத்தனைக்கும் அவர் 55 வயதுக்கு மேலான விதவை மணந்தார், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு என்று எதுவும் இல்லை. வாழ்க்கையின் பெரும்பகுதியை கடந்து விட்டவர். அந்த வயதில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அதற்கும் பல விமர்சனங்கள் வந்தன.
எனக்கு அது புரியவே இல்லை.
அந்த வயதில் ஒருவருக்கு ஒரு துணை தேவைப்படுவது ஏன் தவறாகப் பார்க்கப்படுகிறது?
ஒருவருடன் பேசுவதற்கு, தன்னுடைய சந்தோஷத்தையும் கவலையையும் பகிர்ந்து கொள்வதற்கு, வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தை தனிமையில்லாமல் கடப்பதற்கு ஒரு துணை தேவைப்படலாம் அல்லவா?
நான் அவர்களுடைய முடிவை ஆதரித்தேன்.
இந்த விஷயம் ஒரு ஆண் செய்தால் நிறைய கேள்விகள் எழாது. ஒரு ஆண் 60 வயதிலும் மறுமணம் செய்துகொண்டால், “அவருக்கு ஒரு துணை தேவை” என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
அதே வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால், “இந்த வயதில் இதெல்லாம் தேவையா?” என்று கேட்க ஆரம்பிக்கிறோம்.
அவள் விதவை என்றால் இன்னும் அதிகமாக.
அவளுக்கு பிள்ளைகள் இருந்தால் வேறு விதமாக.
அவள் தாயாக இருந்தால், அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யும் உரிமையை இந்தச் சமூகமே வைத்துக்கொள்கிறது.
ஆனால் ஒரு கேள்வியை மட்டும் கேட்க மறந்துவிடுகிறோம்.
அவள் என்ன நினைக்கிறாள்?
நூறு சாமி அந்தக் கேள்வியைத்தான் மிகவும் அழுத்தமாக நம் முன் வைக்கிறது.
செல்வியாக நடித்திருக்கும் சுவாசிகாவின் நடிப்பு இந்தக் கதைக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும் அந்தக் காட்சியில், பேசிக்கொண்டே அவளுடைய உணர்வுகள் அழுகையாக மாறும் தருணம் மிகவும் இயல்பாக இருக்கிறது.


அவள் ஒரு தியாகச் சிலையாக இல்லை. தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டு வாழும் ஒரு பெண். அந்த வலியை சுவாசிகா மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் ஆண்டனி ஏழுமலையாக வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது.
அவர் செல்விக்கு வாழ்க்கை கொடுக்க வரும் ஹீரோவாக இல்லை. அவளை காப்பாற்றும் மீட்பராகவும் இல்லை. அவளுடைய கடந்த காலத்தையும், அவளுடைய வலியையும் புரிந்து கொண்டு, அவளுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு மனிதராக வருகிறார்.
அதனால்தான் ஏழுமலை கதாபாத்திரம் இன்னும் இயல்பாகத் தெரிகிறது.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, செல்வி வீட்டில் பொட்டு வைக்க முடியாமல், வேலை செய்யும் இடத்தில் மேசைக்கு அடியில் பொட்டை ஒட்டி வைத்துக் கொள்ளும் காட்சி மிகவும் அழகான குறியீடு. சிறிய காட்சி. ஆனால் பெரிய அர்த்தம்.
கணவனை இழந்தவுடன் ஒரு பெண் தன்னுடைய பெண்மையையும் ஆசைகளையும் மறைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்பார்ப்பதை அந்தக் காட்சி அழகாகச் சொல்கிறது.
அதேபோல் கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸின் கதாபாத்திரமும் முக்கியமானது. வாழ்க்கைக்கு சாப்பாடு, தூக்கம் மட்டும் போதாது. ஒரு துணையைத் தேடுவதும் மனிதனின் இயல்பான தேவைகளில் ஒன்று என்ற கருத்தை அவர் பேசும் இடம் மிகவும் அழுத்தமானது.
பெண்ணின் தனிமை பற்றி பேசுவதற்கே நாம் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உண்மையை ஒரு கன்னியாஸ்திரி கதாபாத்திரம் பேசுவது படத்தில் ஒரு நல்ல மாற்றமாகத் தெரிகிறது.
மேலும் செல்வி கேட்கும் அந்த கேள்வி மனதில் நின்றுவிடுகிறது.
’ஒரு செருப்பு அறுந்துவிட்டால் இன்னொரு செருப்பையும் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் நான் செருப்பு இல்லையே சார், என்னை எப்படி தூக்கி எறிவீர்கள்?’
அந்த ஒரு வசனத்தில் செல்வியின் வலி மட்டுமல்ல, ஒரு பெண்ணின் சுயமரியாதைக்காக, அவள் தன்னை ஒரு பொருளாகப் பார்க்கும் சமூகத்திடம் கேட்கும் கேள்வி அது.
படத்தில் சில குறைகளும் இருக்கின்றன.
சில இடங்களில் பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசை காட்சியின் உணர்வை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த உணர்வுக்கு தடையாக இருக்கிறது. சீரியஸ் காட்சியிலிருந்து திடீரென்று காமெடி, அங்கிருந்து ஃபீல் குட் என மாறும் சில பகுதிகள் கொஞ்சம் தடுமாறுகின்றன.
க்ளைமாக்ஸிலும் படத்தின் மைய உணர்வுக்கு சற்று விலகிய சில கமர்ஷியல் காட்சிகளாக ‘டிரோன்’ வருகிறது. அந்தப் பரபரப்பான காட்சியை நகைச்சுவையாக்கி அந்த இடத்தை இலகுவாக்கிவிடுகிறது. ஆனால் அந்தக் குறைகளைத் தாண்டியும், படம் பேசும் விஷயம் முக்கியமானது.
2017ல் கள்ளக்குறிச்சி வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் நெகிழ வைக்கிறது.
நம்முடைய சமூகத்தில் ஒரு ஆணின் தனிமையைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் தயாராகவே இருக்கிறோம். ஆனால் ஒரு பெண்ணின் தனிமையைப் புரிந்து கொள்ள இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு தாய் என்பதற்காக அவளுடைய வாழ்க்கையில் மற்ற எல்லா கதவுகளையும் மூடிவிட முடியாது.
அவளும் ஒரு மனிதர்தான்.
அவளுக்கும் அன்பு தேவைப்படலாம்.
அவளுக்கும் ஒரு துணை தேவைப்படலாம்.
அவளுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யும் உரிமையும் அவளுக்கே இருக்க வேண்டும்.
பெண்களை தெய்வமாக்கி உயரத்தில் வைத்து வணங்குவதைவிட, அவர்களை சக மனிதர்களாகப் பார்த்து, அவர்களின் விருப்பங்களையும் முடிவுகளையும் மதிப்பதுதான் உண்மையான மரியாதை.
'நூறு சாமி' – தாய்மை எனும் புனிதக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சக மனுஷியின் விடுதலைப் போராட்டம்!
நூறு சாமி என்னுள் விட்டுச் சென்ற முக்கியமான எண்ணம் இதுதான்.

100 பெண்கள்… 100 வெற்றிக் கதைகள்… 100 நிமிடங்கள்!

சில நிகழ்வுகள் சாதனைகளாக மட்டுமே நின்றுவிடுவதில்லை…அவை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத குடும்பத் தருணங்களாகவும் மாறிவிடுகின்றன.

ஜூலை 18, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற “100 Women Entrepreneurs – 100 Success Stories in 100 Minutes” என்ற மாபெரும் நிகழ்வு, Einstein World Records சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த அற்புதமான முயற்சியை முன்னெடுத்த என் சகோதரி வஹீதா பானு மற்றும் பெனாசிர் பாத்திமா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த நிகழ்வு எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
என் சகோதரி நஸீம் பானு, என் அக்கா மகள் பெனாசிர், அவருடைய மகள் அர்ஸு மஹ்தியா என, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறைப் பெண்கள் தொழில்முனைவோராக ஒரே நிகழ்வில் பங்கேற்றது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. ❤️
ஆனால், இந்த நிகழ்வின் மிகப் பெரிய பரிசு எது தெரியுமா? எங்கள் அம்மாவின் முகத்தில் தெரிந்த அந்தப் பெருமிதமும் மகிழ்ச்சியும்!
துபாயில் நான் பலமுறை மேடையேறிப் பேசுவதை அம்மா பார்த்திருக்கிறார்.
ஆனால் இந்த முறை சென்னையில்,
தன் மகள் ஒரு முக்கிய விருந்தினராக மேடையில் அமர்ந்து,
தனது தொழில்முனைவுப் பயணத்தைப் பற்றியும், “மகளிர் மட்டும்” எவ்வாறு தொடங்கப்பட்டது என்பது பற்றியும் பேசுவதை நேரில் பார்த்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது.
மேலும், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், திருமதி எச்.கே. ரவூஃபா, வழக்கறிஞர் முகமது நவீன், திரு. அப்துல் நபீல் மற்றும் Einstein World Records குழுவினருடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டதும் இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.
100 பெண்கள்.
100 வெற்றிக் கதைகள்.
100 நிமிடங்கள்.
ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னாலும் ஒரு கனவு இருக்கிறது.
ஒரு போராட்டம் இருக்கிறது.
பல தடைகளைத் தாண்டிய ஒரு பயணம் இருக்கிறது.
அந்தப் பயணத்தை உலகத்தின் முன் பகிர்ந்துகொள்ளும் ஒரு தைரியம் இருக்கிறது.
பெண்களின் கனவுகளையும், அவர்களின் சாதனைகளையும் ஒன்றாகக் கொண்டாடிய “மகளிர் மட்டும்” குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி