Thursday, July 20, 2006

தனி மரம்

பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.

காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைந்ததும் உடலே உறைந்து விடும் அளவுக்குக் குளிராக இருக்கும் அந்த முன் வரவேற்பறை பெரிய இடம் என்பதால் குளிரூட்டியின் தட்பம் எப்போதும் 17-18 தான் இருக்கும். வெயிலில் இருந்து உள்ளே வருபவர்களுக்கு ரொம்பக் குளிராக தெரிவதில்லை.

படியேறி உள்ளே நுழைந்தால் முதலில் அமர்ந்திருப்பது காவல்காரனாக இருந்தாலும், ஏனோ அவன் இடத்தில் அவன் இருப்பதே இல்லை. டீ குடிக்க என்று ஒரு அரை மணி நேரம் காணாமல் போய்விடுவார், பளு இறக்கி வைக்க ஆள் தேவையென்றால் முன்னாடி போய் நிற்பார். எந்த மாடியிலாவது குழல் விளக்கோ, தண்மியோ வேலை செய்யவில்லை என்றால் அதற்கும் இவர் தான் ஓடுவார்.

அந்த முன் முகப்பே அமைதியாக இருக்கும். அந்த வரவேற்புக் கூடத்தில் கேட்பது வரவேற்பாளினி புஷ்பாவின் குரல் மட்டும்தான்.

உயரத்திற்கேற்ப சரியான உடல் வாகு. அதில் ஆறு கஜ சேலையை அழகாக சுற்றிக் கொண்டு அதற்கு ஏற்ற வண்ணத்தில் பொட்டும், சேலையின் இரு வண்ணத்தைக் கடன் வாங்கி செய்தது போலான வளையல்கள் கை நிறைய. கைச்சட்டையின் கழுத்து அகலமாக வைத்து, கழுத்தில் சின்ன சங்கிலியில் பளபளக்கும் தொங்கட்டான். கிள்ளினால் இரத்தம் ஓடுவது தெரியும் அளவுக்கு நல்ல நிறம். உதடு வெளிறாமல் தெரிய அடர்த்தியான உதட்டுச் சாயம். கண்களில் மையிட்டு, கண் முடிக்கு வர்ணம் பூசி, கண் இமைகளில் உடைக்கு ஏற்ற நிறம் நிரப்பி இருந்தாலும் அது கவர்ச்சியாக இருக்காது. நீளமான, மைப்பூசிய கூந்தலை விரித்து விட்டிருப்பார்கள். உடை அலங்காரம் வயதை குறைத்துக் காட்டும் யுக்தியாக இருந்தாலும், முகத்தின் சுருக்கம் அவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று சரியாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

“குட் மார்னிங் ஜெ.என். குரூப்” என்று 60 வினாடிகளுக்குள் 30 முறைக்கு மேல் அதையே ஸ்லோகம் போல் திரும்பத் திரும்ப தொண்டைத் தண்ணீர் வற்றினாலும் சளைக்காமல், குரல் பிசிறாமல், முகம் வாடாமல் தெம்பாக, நாள் முழுக்க முழங்குவார்கள்.

மணியடித்தால் தொலைபேசியை எடுத்து புன்முறுவலுடன் காலை வணக்கத்தைத் தொடர்ந்து அலுவலகத்தின் பெயரை அழகாக உச்சரித்து விட்டு உரியவர்களுக்கு தொடர்பைக் கொடுக்க வேண்டும். ஆனால் அது ஓயாத தொலைபேசி மணியாக இருந்ததால் அவர்கள் அதனை தொல்லைபேசி என்று செல்லமாக அழைப்பார்கள். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை ரொம்பவும் உணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.

எட்டு அழைப்பு வந்தாலும் ‘மட மட’வென அடுக்கி நிலுவைய்¢ல் போட்டு ‘டக் டக்’கென்று உரியவர்களுக்குக் கொடுப்பார்கள். இடை இடையே அலுவலகத்தின் முகவரி, தொலைநகல் எண், கடைகளின் தொலைபேசி எண்கள், அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் குறிப்பு என்று பல வித அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இதில் தவறான எண்ணைச் சுழற்றுபவர்கள் மன்னிப்பு கேட்டும் வைப்பார்கள். நடு நடுவே உள்ளே நுழையும் பார்வையாளர்களுக்கும் இவர் 2வது மாடியில் இருக்கிறார், அவர் இருக்கை நேராக போய் 2வது வலதில் முதல் இருக்கை என்று சொல்ல இவளை அமர்த்தி இருக்கிறார்கள்.

புஷ்பா இவ்வளவு பம்பரமாக மும்மரமாக வேலை செய்தும் இவர்களுக்கு மேலாளர் துண்டுச் சீட்டு அனுப்புவார். அதில் ‘நம்ம இயக்குனர் காலை 11 மணிக்கு அழைக்கும் போது 5 ரிங் போன பிறகுதான் நீ அவர் அழைப்புக்கு பதில் அளித்தாயாம், இனி அப்படி நடக்காமல் இருக்க எச்சரிக்கிறேன்’ என்று.
“ஒரே ஆள் அத்தனை அழைப்பையும் ஒரே நேரத்தில் எடுப்பது எப்படி சாத்தியம்?” என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார் அவர்.

பார்க்கப் பாவமாக இருக்கும் “அதெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுங்க, அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் வேலையில் உள்ள சிரமம் தெரியும்” என்று நான் சொல்லும் சமாதானம் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றும்.

புஷ்பா விவாகரத்து பெற்று தனித்து வாழ்பவர். 14 ஆண்டுகள் கணவனுடன் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் கணவனால் விவாகரத்து தரப்பட்டவர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால் குழந்தைகளும் இவருடன் இல்லை. நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகே அவர் வந்து சேர்ந்தார். வயதில் மூத்தவர் என்று கூடப் பாராமல் ச்¢றியவரில் இருந்து பெரியவர்கள் வரை அவர் மீது ஒரு அலட்சியம். அது எனக்குப் பிடிக்காமல் போனாலும், ‘வயதிற்கு ஏது மரியாதை இங்கு நாற்காலிக்குத்தானே?!’ என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்.

இரண்டரை வருடமாகியும் அவருடன் யாருமே ஒட்டுவதில்லை. அப்படியே பேசினாலும் அந்த நபர்களின் கண்கள் சரியான இடங்களில் அவரை பார்ப்பதில்லை. நேரடியாகவே ‘இன்று என்னோடு வருகிறாயா?’ என்று கேட்கும் துணிச்சலான, பொறுக்கித்தனமான ஆண்களையும் சந்தித்திருக்கிறார் அவர்.. எல்லாவற்றையும் சமாளித்து சகித்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த அவர் பழகிக் கொண்டது போல எனக்குத் தோன்றும்.

பார்வையாளர்கள் நிறுவனத்தின் உள்ளே நுழையும் போது அவர்களின் பெயர், செல்பேசி எண், பார்க்க வரும் நபரின் பெயர், உள்ளே நுழையும் நேரம், வெளியே செல்லும் நேரம் என்று எல்லாவற்றையும் காவல்காரன் பதிவு செய்ய வேண்டும். அவன் இருக்கையில் எப்போதும் இல்லாமல் போவதால் அந்த வேலையும் அவனுக்கு வரும் அழைப்பையும் இவர்தான் எடுக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சின்னச் சின்ன உதவிகள் செய்தும் கூட அவன் மற்றவர்களிடம் இவரைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவான். “இந்த கிழவி எப்போதும் போனை பிடிச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்குன்னு” இரக்கம் இல்லாமல் அவதூறு அளப்பான். அதெல்லாம் தெரிந்திருந்தும் அவன் விட்டுச் செல்லும் பணியை முகம் சுளிக்காமல் செய்வார் அவர்.

அவருக்கு நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கும் வேலையாக இருந்தாலும் தொண்டையை ஈரமாக்கிக் கொள்ளக்கூட தண்ணீர் குடிக்க முடியாது. காரணம், இயற்கை அழைப்பு வரும் போது எழுந்து போனால் அந்த இடத்தில் இருந்து அந்த வேறுவிதமான தொலைப்பேசியை இயக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. என்னையும் அவர்கள் அடிக்கடி கூப்பிட முடியாது - என் மேலாளர் மிகுந்த கோபக்காரர் என்பதால் அவரால் நான் ஏச்சுக் கேட்பதை அவர் விரும்பவில்லை. குளிரூட்டியால் குளிர்ந்து இயற்கை அழைப்பை தவிர்க்க முடியாதபட்சத்தில் மட்டுமே என்னை அழைத்துக் “கொஞ்சம் வர முடியுமா?” என்று கெஞ்சிய குரலில் கேட்பார் அவர்.
எல்லோரிடமும் இடைவெளிவிட்டே பழகும் இவர் என்னைக் கண்டால் அன்பைப் பொழிவார். அதிகம் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காவிட்டாலும் அவரை நான் கடந்து செல்லும் போது நான் தரும் புன்முறுவலே அவருக்குப் போதுமானதாக இருந்தது. எத்¢ர்பார்ப்பில்லாத அன்பு என்று புரிந்துக் கொண்டதால் என்னை பிடித்ததோ என்னவோ?!. சாப்பாட்டு இடைவெளியில் வீட்டுக்குப் போகவில்லை என்றால் நானே போய் அவரிடம் பேசிக் கொள்வேன். நான் யாருடனாவது சகஜமாக நெருங்கிப் பேசிப் பழகுவதை பார்த்தால் போதும் கூப்பிட்டு அறிவுரை தருவார் புஷ்பா. அவரது காதல் திருமணம் தந்த கசப்பான அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு என்னை, “அதிகம் யாருடன் நெருங்கிப் பழகாதே, நீ நட்பாக பழகினாலும் மற்றவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்” என்று அறிவுரை சொல்வார். அது எனக்குள் கோபத்தை வரவழைத்தாலும் என் நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று எண்ணி சமாதானம் ஆவேன்.

நிறுவனத்தைப் பற்றியோ அதில் உள்ளவர்களைப் பற்றியோ பேசிக் கொள்ளவே மாட்டோம் எங்களைப் பற்றி பேசிக் கொள்வோம். அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர் போல் பேசாமல் இன்னும் அவர்களுடனேயே வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் போல் கணவனைப் பற்றியும், மகள்களைப் பற்றியும்தான் எப்போதும் பேசுவார். அப்படி பறிமாறிக் கொள்ளும் போதே அவரின் முகத்தில் சந்தோஷம் தலை தூக்கும். சாப்பிட நான் எதைக் கொண்டுப் போனாலும் ‘இது என் ஷில்பா குட்டிக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்பார். என்னிடம் ‘கலகல’வென பேசினாலும் யாராவது நாங்கள் பேச்¢க் கொண்டிருக்கும் போது வந்தால் முகத்தை சட்டென்று மாற்றி நாங்கள் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் என்பது போல் காட்டிக் கொள்வார்.

என்ன மனக் கஷ்டமாக இருந்தாலும் சமாளித்தவாறு புன்சிரிப்புடன் பேசி, வருபவர்களை உபசரிப்பதே வேலையாகக் கொண்ட அவர்களைப் பார்க்கும் போது அதுவே எனக்கு தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.

அன்றும் அப்படித்தான்.

நிறைய வேலையால் சுழன்று கொண்டிருந்த நான் ஒரு தொலைநகலை எதிர்பார்த்தவளாக அதனை எடுக்க வரவேற்பரை பக்கமாக போன போது புஷ்பாவின் முகம் சிவந்திருப்பதைக் கண்டேன். வழக்கம் போல் அழைப்புகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் குரலில் உற்சாகம் இல்லை.

என்னைக் கண்டதும், காத்திருந்தது போல் ‘கொஞ்சம் இதப் பார்த்துக்குறியாம்மா? நான் கழிப்பறை வரை போய்ட்டு வந்திடுறேன்’ என்றார். பல வேலைகளுக்கு நடுவே நான் இருந்தாலும் குறிப்பறிந்து ‘சரி சீக்கிரம் வந்திடுங்க’ என்று சொல்லிய படி காதில் அந்த பேசும் கருவியை மாட்டிக் கொண்டேன்.

பத்து நிமிடம் கழித்து வந்தவர், முகமெல்லாம் சிவந்து இருந்தது. தண்ணீர் குடித்ததில் கொஞ்சம் சிந்தி மேலே அங்கங்கு நனைந்து இருந்தது. பொய்யான சிரிப்பை வரவழைத்து சூட்டிக்கொண்டார்கள் ‘வந்துட்டேன், நீ போம்மா’ என்றார்கள். அவர்கள் குரலே அழுதுவிட்டு வந்திருக்கிறாரென்பதை காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் நான் ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை- அந்த நேரத்தில்.

சாப்பாட்டு இடைவெளிக்கு அரை மணி நேரமே இருந்தது, காத்துக் கொண்டிருந்தேன் இடைவெளிய்¢ல் அவரைச் சந்திக்க. வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை என்று அக்காவை அழைத்து சொல்லி விட்டேன். அவரது அழைப்பிற்காகக் காத்திருக்கத் துவங்கினேன். அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் என்று அறிவு உணர்த்தியதை மனசு ஒப்புக் கொள்ளவில்லை. நான் காத்திருந்ததற்கு ஏற்ப சரியாக ஒரு மணிக்கு புஷ்பாவே என்னை அழைத்தார்.

“கொஞ்சம் வர்றியாம்மா” என்றார் அழுகை கலந்த வறண்ட குரலில்.

“வரேன்” என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நான் கீழே போனேன். என்னவாக இருக்கும் யாராவது திட்டினார்களா, வெளி இருந்து யாராவது கூப்பிட்டு கண்டபடி பேசிவிட்டார்களா, ஒருவேளை உடல்நிலை குறைவோ என்று பலவாறு யோசித்தபடி வரவேற்பறை பக்கம் சாப்பிட ஒதுங்கும் சின்ன அறைக்கு சென்றேன்.

கலங்கியிருந்த கண்களில், நீயாவது என்னிடம் ஏதாவது என்னைப் பற்றிக் கேளேன் என்ற ஏக்கமான பார்வை தென்பட்டது.
“என்ன புஷ்பா அக்கா ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது...” என்று தொடங்கி விட்டுப் பின்னர் அவரே தொடரட்டும் என்று இடைவெளி விட்டேன்.

அவரைப் பார்க்காதது மாதிரி நான் மேசையை நோக்கிக் குனிந்த நேரத்தில் எச்சிலோடு சேர்த்து அழுகையை அவர் முழுங்குவது தெரிந்தது. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீர் குடித்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டவர் என் கண்களைப் பார்க்க முடியாமல் தவிர்த்து “ஒண்ணுமில்லையேம்மா ” என்றார்கள்.

அவரே சொல்லும்வரையில் நானாக துருவிக் கேட்பது நாகரீகமில்லை என்பதால் பேச்சை மாற்றியபடி “சரி வாங்க. சாப்பிடலாமா?” என்றேன் வரவழைத்துக் கொண்ட உற்சாகக் குரலில்.

என் கண்கள் அவரை நேரே பார்த்த போதும் முகம் கொடுக்காமல் “ம்ம்” என்று மட்டும் தலை குனிந்தபடி கூறினார்கள்.

எனக்கு மனசு கேட்கவேயில்லை புஷ்பா அக்கா இப்படி மனம் ஒடிந்து பார்த்ததே இல்லை நான். என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் ஆனால் ஏனோ ஆரம்பிக்க முடியவில்லை. ஒருவேளை சத்தமாக அழுதுவிடுவாரோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கிறதோ என்னவோ என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவராகவே ஆரம்பித்தார்.

கலங்கிய கண்ணுடன் என்னை நிமிர்ந்து பார்த்து, “இன்னிக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்” என்று கொஞ்சம் நிறுத்தி மறுபடியும் தண்ணீர் குடித்து தொடர்ந்தார்கள் “என் மூத்த மகளுக்கு திருமணமாம்” என்று அழுகையோடு கூடிய குரலில் சொன்னார்கள்.

அதன் பின்னணியே புரியாமல் “நல்ல விஷயம் தானே, அதற்கு ஏன் கலங்கி இருக்கீங்க?” என்று வெளியில் சிரிப்புடனும் உள்ளுக்குள் திகைப்புடனும் கேட்டேன்.

நான் அறியாமையில் கேட்பதை உணர்ந்து, ஆதங்கக் குரலில் “அது இல்லம்மா, நான் ஒரு நல்ல மனைவியா இருந்தேனான்னு தெரியலை. ஆனா சத்தியமா நல்ல தாயா இருந்தேன்.” என்றவுடன்,
அவரது நிலையைக் கொஞ்சம் புரிந்தவளாக, பீறிட்டு வரும் அழுகையை தடுக்க முனைந்து சமாதானப்படுத்து வதற்குள்...

“வீட்டுல ஒவ்வொரு வேலையைப் பார்க்க வெவ்வேறு ஆட்கள். சமையற்காரர், தோட்டக்காரர், எடுபிடிகள், இப்படி நிறைய உதவி செய்றதுக்கு ஆள் இருந்தாலும், என் குழந்தைகளுக்குரிய அத்தனை வேலைகளையும் விரும்பி செய்வேன் நான். மற்ற பணக்கார வீட்டு பொண்ணுங்களப் போல கடைத்தெரு, கிளப்ன்னு இல்லாம என் நேரத்த முழுக்க அவர்களுக்காகத்தான் செலவிட்டேன்.” அவரது குரலின் ஒலி அளவு கூடிக் கொண்டே போனது.
நடுவில் புகுந்து “இப்ப என்ன நடந்து போச்சு?” என்று அமைதியான குரலில் பேசி அவர்கள் சத்தமாகப் பேசுவதை சூசகமாக உணர்த்தினேன்.
மறுபடியும் குரலை தாழ்த்திக் கொண்டு “இரட்டை பொண்கள் பிறந்தவுடன் முகம் சுளித்த அந்த மனுஷனுக்கு “பெண்ணுனா அதிர்ஷ்டம்”ன்னெல்லாம் சொல்லி தேற்ற்¢யவ நான். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொடுத்துக்கிட்டிருக்கும் போதே அடுத்த குழந்தை அழுதால் துடித்து அடுத்த குழந்தையை எடுத்து பாலூட்டுவேன். இரண்டு பேரையும் இரு கண்ணா நெனச்சு பதினைந்து வயசு வரை வளர்த்தேன்.” கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டதில் அவர்களின் மார்பு ஏறித் தணிந்தது. அதில் இருந்த ஏக்கம் எனக்குப் புரிந்தது.

அவர்கள் சோகம் என்னையும் தாக்கியதில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். அமைதியை நிரப்ப மீண்டும் ஒலித்தது அவர்கள் குரல் “மேற்படிப்புக்காக மகள்கள் இரண்டு பேரும் அமெரிக்காவிற்கு போய்ட்டாங்க. எனக்கும் என் கணவருக்கும் பிளவு ஆரம்பமாகி விவாகரத்தில முடியும் போது கூட குழந்தைகளை என் பக்கம் வாதாட கேட்டதில்ல. ஏன் தெரியுமா, சொகுசா வாழ்ந்து பழகிய குழந்தைகள் என் சுயநலத்துக்காக எங்கூட அழைச்சிக்கிட்டேனா பணத்தால கிடைக்குற சந்தோஷம், அமெரிக்க மேல் படிப்பு, ஆடம்பர வாழ்க்கை எல்லாமே பறிபோய்விடும்ன்னு குழந்தைகள் பற்றியே வாய் திறக்கவில்லை நான். ஜீவனாம்ச பணம் வாங்கிக்கிட்டதுல மகள்களுக்கு என் மேல கோபம். அந்தப் பணம் என் வாழ்க்கையை நகர்த்தறதுக்குன்னு புரிந்துக்கொள்ளக் கூட அவங்க தயாரா இல்ல. அவங்க இங்கு வந்து போகும் போது என்னைக் கூப்பிட்டுப் பேசக்கூட பிடிக்காமல் போயிடுச்சு. நான் நினைச்சிக்கிட்டேன் அவர்களோட அப்பாவுடைய கட்டுப்பாட்டால் எங்கிட்ட பேச முடியிலன்னு. பிறகுதான் தெரிஞ்சது அவர்களுக்கேதான் என்னை பிடிக்காம போய் விட்டதுன்னு.” நிறுத்தும் போது அந்த பக்கம் யாரோ போவது கேட்கவே கொஞ்சம் மௌனத்தைப் போர்த்திக் கொண்டு, எங்களை தாண்டிப் போகும் வரை காத்திருந்து மீண்டும்,
“இன்னிக்கு என் தோழி மூலம் என் மூத்த மகளுக்குத் திருமணம்ன்னு கேள்விப்படும் போது என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது தெரியுமா? இருபத்தி-மூன்று வயதே இருக்கும் என் மகளுக்கு திருமணம் நடத்த என்ன அவசரம்? அவள் ஏதாவது தவறான வழியில் போய் விட்டாளோ? பெரிய இடத்து மாப்பிள்ளை அவனும் படித்துக் கொண்டிருப்பவன் தான். அதுவும் வேறு சாதின்னு சொல்லும் போதே காதல் திருமணம்ன்னு யூகிக்க முடிந்தது. அதைத் தவிர வேறு விபரங்கள் தர முடியவில்லை என் தோழியால்.”
கொஞ்சம் யோசித்தபடி “என் மகளுடைய திருமணத்தைப் பற்றி யாருக்கிட்ட கேட்க? எங்களுக்கும் காதல் திருமணம்தான் இப்ப நான் எங்கு நிற்கிறேன் வாழ்க்கையில? மனம் ஒத்துப்போகலைன்னு அவருக்கு 14 வருஷம் கழிச்சிதான் புரிந்து வெட்டி விட்டார். உடைந்து போன நான் போக கதி இல்லாம தற்கொலை செய்துக் கொள்ள துணிந்து, அப்புறம் சில நல்ல சொந்தங்களால் உருக்குலைஞ்ச நான் மீண்டும் தெளிவானேன். என் படிப்பு உதவிச்சு சொந்தக் காலில் நிற்க. எது எப்படிப் போனாலும் என் தாய்மைதான் என்னைக் கொல்றது. என் மகளுடைய தாயா கடமைக்காவது என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்களா? அழைத்தாலும் போகத்தான் என்னால முடியுமா? இப்படிப்பட்ட பெரிய விஷயம் வீட்டில் நடக்கிறது, அடுத்த வாரம் திருமணம், பெற்றவளிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்ற நெனப்பு வந்துச்சா?” என்று பல கேள்விகள். மனதில் தேக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்தார்கள்.

யோசித்தவளாக, வார்த்தை தேடுபவளாக ஆரம்பித்தேன். என்னாலும் இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேட முடியவில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்போது என்னுடம் எல்லாம் திறந்து விவாதிக்கும் அவருக்கு என்னால் வார்த்தைகளாலாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று யோசித்தேன்.

“எல்லாம் முடிஞ்சி போச்சு, ஏன் வீண் எதிர்பார்ப்புகள்? ஆடு பகையாகி, குட்டியை உறவுக்கு அழைச்சா எப்படி? அவர்கள் திருமணத்திற்கு அழைச்சாலும் நீங்க போனீங்கன்னா யாரும் மதிக்கவே மாட்டாங்க. உங்களுக்குத் தாயின் அங்கீகாரம் கூடக் கிடைக்காது. உங்க மகள் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீங்க, நீங்களே நல்ல தாயாக ஆசீர்வதிக்க அழைத்துப் பேசுங்க” என்று சமாதனப்படுத்த முடியாத வார்த்தையாக இருந்தாலும் என்ன சொல்லித் தேற்றுவது என்று தடுமாறி தோன்றுவதைச் சொல்லி வைத்தேன்.

ஏதோ நான் சொல்லியது புது தெம்பு தந்தது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து களைந்து “ரொம்ப சரியா சொன்னேம்மா, நான் கூப்பிட்டுப் பேசுறேன். ஒண்ணு சொல்றேம்மா என்ன சண்டை வந்தாலும் கணவனுடன் சகித்துப் போய் விட வேண்டும். நம்ம சமுதாயத்தில் தனியாக வாழ்வது ரொம்பக் கொடுமை. அனுபவிச்சவ தனியா தவிக்கிறான்னு சில கேலி பார்வைகள். நண்பர்கள் வீட்டில் விசேஷம்னு போனா யாரும் சரி வர பேசுறதில்ல, நல்ல பேசி பழகிட்டா இவ வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிடுவா என்ற பயம். அவளவளுக்கு நம்ம புருஷனை இவ கவர்ந்து விடுவாளோன்னு என்னிடத்தில் பேசுவதே தயக்கம். எந்த குற்றமும் செய்யாத என்னை சமுதாயம் ஒதுக்கியே பார்க்குது” என்று மனவலியுடன் அவர் அறிவுரை போலச் சொன்னபோது என் பெண்ணுரிமை வாதங்களை ஒதுக்கி வைத்து விட்டு எரிச்சலின்றி கேட்டுக் கொண்டிருந்தேன் ஆறுதலாக..

அவர் சொன்ன அறிவுரை மனதில் ஆழமாகப் பதிந்தது. அவரும் தன்னம்பிகையுடன், தன் மகளுடன் பேசப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தான் மதிய சாப்பாட்டைச் சாப்பிடவில்லை என்பதை மறந்தவராக திறக்காத உணவு டப்பாவை பைக்குள் திணித்து “பார்க்கலாம்மா” என்று வேறு எதையோ யோசித்த படி வெளியில் நகர்ந்தார்கள்.

சாப்பாட்டு இடைவெளி நேரம் முடிந்து விட்டாலும், அரக்கப் பரக்க உருளைக்கிழங்கை ரொட்டிக்குள் வைத்து சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டேன். மிச்ச அலுவல் நேரத்தில் தெம்பாக வேலை செய்ய வேண்டி இருக்கே அதற்கு.
மறுபடியும் “குட்டா·ப்டர்னூன் ஜெ.என். குரூப்” என்று தொடர்ந்தது..

அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் 5-ஆவது ஆண்டுவிழா மலருக்காக எழுதியது


2 comments:

ரவி said...

நன்றாக உள்ளது...கதைமாந்தரின் எண்ணச்சுமையை வாசிப்பவருக்கு ஏற்றக்கூடிய படைப்பு..

Jazeela said...

நன்றி ரவி.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி