Saturday, August 26, 2006

'வேட்டையாடு விளையாடு'

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை
பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்து
விட்டு மக்களும் 'சுமார்', 'போர்', 'ஒருவாட்டி பாக்கலாம்', 'இது குறுந்தகடுல பாக்கதான் லாயக்கு', 'பாட்டுக்காக வேணும்னா படம் ஓடலாம்' என்றெல்லாம் சவடால் விடுகிறார்கள். அதைவிட பகிரங்கமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு படத்தை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வாரம் முதலிடத்தை பிடித்த படமென்று ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் 'தெனாவட்டாக' உட்கார்ந்து கொண்டு. பல வாரத்திற்குப் பிறகு அதே படம் கீழே இறங்கி ஆறுவது இடத்திற்குப் போகும் போது படத்தில் உள்ள குறைகளை கூறுபோடுகிறார்கள். எதன் அடிப்படையில் விமர்சனமென்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

படத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம். அப்படிச் செய்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.


'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு காக்கி சட்டையே பொருந்தாது ஆனாலும் 'காக்கி சட்டை', 'சூரசம்ஹாரம்', 'குருதிபுனல்' என்ற எல்லா படங்களிலுமே அவ்வளவாக காக்கி சட்டையே போடாமல் ஒப்பேத்திவிடுவார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் கமல் அவ்வாறே சமாளித்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பவருக்கு காக்கி உடுப்பு அதிகம் தேவையில்லைதானே? காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி ராகவனாக கமல், தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரகாஷ்ராஜின் மகளின் கொலையில் ஆரம்பித்து நியூயார்கில் ஆரோக்கியராஜாக வரும் பிரகாஷ்ராஜின் கொலை விசாரணையில் தொடர்ந்து, வில்லன்களை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் முடிகிறது. 'நேர்மை'யில் வழக்கமான படம் போலவே மனைவி கயல்விழியாக வரும் கமலினி முகர்ஜியை இழந்து விடுகிறார். நியூயார்கில் ஆராதனாவான ஜோதிகாவின் சந்திப்பு காதலில் முடிகிறது. 'தெனாலி'க்கு பிறகு மீண்டும் கமல்- ஜோதிகா இணைந்துள்ளனர். பாட்டைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் காதல் காட்சியில்லாதது படத்தின் பலமா பலகீனமா என்று படத்தின் வெற்றி தோல்விகள் சொல்லும். கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு.

நன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன், அவருக்கு சரி ஜோடியாக அமைந்து விட்டனர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.

படத்தில் இரத்தக் காட்சிகள் அதிகம். பிணமாக நடித்தவர்கள் அனைவருமே நிஜ பிணமாகவே நடித்திருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு விட்டார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் ஆரோக்கியராஜ் மனைவி சித்ராவின் சடலத்தைக் காட்டும் போது கண்கள் லேசாக
அசைவதை உணர முடிந்தது. படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு முக்கிய வேடம் மற்றபபடி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, அந்த இரு வில்லன்கள் மட்டுமே படத்தில் கனமான பாத்திரங்கள். 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பராக வரும் அந்த போலீஸ் அதிகாரிதான் இந்த படத்தின் வில்லன் அமுதன். அமுதன் மற்றும் இளா இரண்டு வில்லன்களின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வெறி கொண்ட பார்வை, அவர்கள் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது. குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே 'ஓ....' 'F...' & 'B...' (Food & Beverage இல்லை) வார்த்தைகளை நம் காதுகளில் கேட்காத அளவுக்கு ஓசையை அடக்கியிருக்கிறார்கள். கமலினி தெலுங்கில் பிரபலமாம் தனக்குரிய பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தாமரையின் வரிகள் மனதில் பதிந்தே விட்டன. என்னமா எழுதுறாங்க தாமரை...

'பார்த்த முதல் நாளே' பம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் குரலில் பாட்டு நன்றாக இருந்தாலும், பைக்கில் போகிற காட்சி வரும் போது பழைய படத்தில் வருவது போல் பைக்கை ஒரே இடத்தில் நிற்கவைத்து பின்னாடி படம் ஓட்டி இருக்கிறார்கள். கமல் பைக் ஓட்ட பயந்தாரா அல்லது கமலினி பின்னாடி உட்கார மறுத்தாரா, பயந்தாரா என்று தெரியவில்லை.

வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே! - எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஹரிஹரன், விஜய், நகுல் இணைந்து கலக்கியிருக்கும் இந்த பாடல் வரிகள் அருமை. ஒரு நாள் முழுவதும் கமல் - ஜோதிக்கா மான்ஹத்தனில் (Manhattan) சுற்றிப்பார்த்து நாளை கழிக்கும் அழகான பாடல். அதிலும் அழகான ஐந்து ஆங்கிலேய வடிவான ஆண்கள் கிளோஸப்பில் 'வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே!' என்று பாடுவதும், அந்த வீதி மக்கள் பின்னாடியே வந்து பாடுவதாக வரும் போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

உயிரிலே - மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்.

கற்க கற்க - படத்தின் முதல் பாடல். தேவன், திப்பு, நகுல் பாடிய விரைவான பாடல்.

நெருப்பே சிக்கிமுக்கி - அது ஏனோ தெரியவில்லை அடிதடி படமென்றாலே ஒரு ஐட்டம் நம்பர் அவசியமாகிவிடுகிறது. அதுவும் கமல் படத்தில் ஒரு முத்த காட்சியாவது எதிர்பார்த்து வரும் அன்பர்கள் ஏமார்ந்து விடாதபடி இந்த பாடல் அமைந்துள்ளது. பிரான்கோ, சவ்மியா ராவ், சோலார் சாய் பாடிய பாடல் இது.

கண்டிப்பாய் எதிர்பார்ப்பை ஏமாற்றாத பாடல்கள். ஆனால் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாய் இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் வெற்றி, படமாக்கிய விதத்திலுமிருக்கிறது.

ரினைசன்ஸ், ஹார்ட் ராக், பெரிய பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான வாகனங்கள் என்று கேமிரா நியூயார்க்கை ஒரு வலம் வந்தாலும் பெரிய பிரமிப்பாக ஏதும் தோன்றவில்லை எல்லாம் துபாயிலும் இருப்பதாலோ என்னவோ. மேட்ரிக்ஸ் II, பிளேட் III என்ற படங்களுக்காக உபயோகித்த அதே உபகரணங்கள் என்றெல்லாம் செய்தி வந்தமையாலும், மின்னலே, காக்க காக்க என சாதனை படைத்த கெளதம் - ஹாரிஸ் ஜோடி மூன்றாவதாய் இணைந்த படம் என்பதாலும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு.

படத்தின் டைட்டில்களைக் கவனித்தேன் ஏனோ எல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது, பெயர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வந்து மறைந்த பிறகு ஒப்புக்காக தமிழிலும் காட்டப்பட்டது. நாள் கிழமைகளும் ஆங்கிலத்திலேயே காட்டினார்கள். ஒருவேளை எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியாமல் இருப்பத்தில்லை என்று நினைத்ததாலோ என்னவோ.

படம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்டது: 'நம்ம ஊரிலயே முடிச்சிருக்கலாம் (தமிழ்நாடு) நியூயார்க் வரைக்கும் போகவே அவசியமில்ல'. இதை கேட்கும் போது குங்குமத்தில் படித்த 'சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்' என்பதுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் காசை கரியாக்கியிருக்கிறார்கள் நியூயார்க்கில்.

ஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'.

மற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

16 comments:

asariiri said...

//படத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம்//

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.


//ஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'//

//மற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம். //

இறுதியில் நீங்களும் தெனாவெட்டாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் (என்று நினைக்கிறேன்). எழுதனும்கிறதுக்காக எதைவேணுமானாலும் எழுதனுமா? என்னமோ நல்லா இருந்த சரிதான் :)

நெல்லைக் கிறுக்கன் said...

வரிக்கு வரி நீங்க சொல்லிருக்குத உங்க கருத்துக்கள் டிவில வருத விமர்சனத்துக்கு எவ்விதத்துலயும் குறஞ்சது இல்லன்னு நானும் அசரீரி சொன்னத வழிமொழியுதேன்...

Jazeela said...

அசரீரி & நெ.கிறுக்கன் இரண்டு பேருக்குமே ஒன்னு சொல்லிக்கிறேன், இது என் பார்வையில் பட்ட கருத்துதானே தவிர கீறி உப்பு போடவில்லையே. விமர்சனம் என்பது திரைக்கதையை நோண்டி நுங்கெடுக்கும் வேலையாச்சே அதை செய்யவில்லையே. அதுவும் விமசகர்கள் குறைக்கூறி அதற்கு தீர்வும் தருவார்களே அப்படி செய்யவில்லையே. எல்லாவற்றிக்கும் மேலாக திரையரங்கிற்கு போய் பார்த்தேன் திருட்டு விசிடியில் அல்ல ;-)

அப்புறம் ஒரு விசயம், நான் தெனாவெட்டா எழுதுலீங்க ரொம்ப அடக்கமா எழுதியிருக்கிறேன். (அப்ப தெனாவெட்டா எழுதுனா எப்படி இருக்கும் பாத்துக்கிடுங்க ;-) )

Unknown said...

கமலுக்கு காக்கிச்சட்டை பொருந்தாது :))) உங்க விமர்சனத்தை படிச்சிபுட்டு இப்படி அப்பாவியா எழுதி இருக்கீங்களேன்னு வருத்தப்படவா இல்லை நீங்கள் எழுதுன விமர்சனத்தியும் படிச்சி பின்னூட்டம் போடுறனேன்னு சிரிச்சிக்கவான்னு தெரியலை...... குருதிப்புனல் பாத்தீங்களா? பாக்கலையா?, காக்கிச் சட்டை?, சூரசம்ஹாரம்? இப்படி படம் சாணக்யன்(மலையாளம்), அபூர்வ சகோதரர்கள் அப்பா? இதிலெல்லாம் அவருக்கு பொருந்தலையோ? :)))))))))))))))))))))))))))))))))))

துபாய் ராஜா said...

//நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.//

அட்டா,நேற்று நாங்களும் அங்கேதான் வந்திருந்தோம்.

ILA (a) இளா said...

நல்லா சொல்லி இருக்கீங்க ஜெஸி. நம்ம விவசாயத்திலேயும் ஒரு விமர்சனம் ஒன்னை விதைச்சு இருக்கோம் பாருங்க
சுட்டவும்

Boston Bala said...

சுவாரசியமான பார்வை. பல இடங்களில் 101% ஒத்துப் போக வைக்கும் விமர்சனம்

Jazeela said...

//உங்க விமர்சனத்தை படிச்சிபுட்டு இப்படி அப்பாவியா எழுதி இருக்கீங்களேன்னு வருத்தப்படவா // ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படும். நான் உணர்ந்ததை கமலே ஒரு திரைப்பட விழாவில் ஒப்புக் கொண்டுள்ளார். குருதிபுனல் விழாவா, வெற்றிவிழா பட விழாவா என்று நினைவில் இல்லை. நீங்களும் எல்லா படங்களையும் நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும்.

ராஜா, அப்படியா? பார்த்திருந்தாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே ;-)

சாகுல், முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு வரும் வாரம் போய்ட்டு வந்திடுங்க.

நெல்லை சிவா said...

நியூயார்க் தேவையில்லை என்றீருக்கிறீர்கள், ஆனால் அங்கிருப்பதுதான் வில்லன்களுக்கு வெயிட் கூட்டியிருக்கிறது, படத்துக்கு 'ஹை-டெக்' கொடுத்திருக்கு, லோக்கல் வில்லன்கள் பண்ணியிருந்தால், மக்களுக்கு பிரமாண்டம் இருந்திருக்காதே..காசை கரியாக்கியிருக்கிறார்கள் ..அது சரி, எந்த சினிமாதான் காசை விரயாமாக்காமல் இருந்திருக்கு :)
என்னுடைய மற்ற கருத்துக்களை, என்னுடைய தளத்தில் எழுதியிருக்கேன்..

Dr.Srishiv said...

நல்ல விமர்சனாமான்னு தெரியல ;)
ஆனா விமர்சனத்துக்கு நன்றி, படம் பார்த்துட்டு சொல்ல்றேன் :)
ஸ்ரீஷிவ்...

Unknown said...

நல்லா விமர்சனம் பண்ணிருக்கிங்க ஜெசீலா.படம் உங்களுக்கு அவ்வளவா திருப்தி தரலைன்னு உங்க விமர்சனத்தை வைத்து யூகிக்க முடியுது.

VSK said...

இங்கு எல்லாரும் ஒரு பார்வையில் மட்டுமே எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதுதான் நம் பலவீனம்!
அவர் கருத்து என்று முதலிலேயெ டிஸ்கி போட்டுவிட்டார்.
அதற்கப்புறமும் கலாய்ப்பது முறையல்ல!
உங்கள் கருத்து மாறாக இருப்பின், சிரித்துவிட்டுப் போகவும்!
இப்படித்தான் கருத்துகளை நசுக்குகிறோம்!
வெற்றிவிழா, சூரசம்ஹாரம் கமலா இப்போது இருக்கிறார்?
அப்போது பொருந்தினால், இப்போதும் பொருந்தும் என்பது என்ன நியாயம்....அவர் அந்த வயது வித்தியாசத்தைக் காண்பிக்காதபோது?
[இது உங்களுக்கல்ல, ஜெஸிலா!]

Jazeela said...

நன்றி இளா. உங்க பதிவை பார்த்தேன் படித்தேன் பதிலும் எழுதினேன்.

நன்றி பாலா. உங்க விமர்சனமும் பார்த்தேன் நன்றாக இருந்தது.

நன்றி செல்வன். சரியா புரிஞ்சிக்கிட்டீங்க.

Anonymous said...

paarththanaaL paattu thenmErkupparuvakkaatRai
ninaivooduvathaiyum cholliyirukkalam !
ungaL vimarsanam moolam
enakku 8 canadian dollar ilaapam.
indru iravukkaatchy (C$10) paarpathaaka
irunthEn. nallakaalam !
C$2 kku kaLLa CD vaangikkoNdu pOkiREn.
nandRi ! nandRi ! nandRi !
-Imsai ILavarasan Toronto Canada

Jazeela said...

கடைசி வரி படிக்கவில்லையா? திரையரங்கில் பார்த்தால் சுமார், குறுந்தகடில் (CD) பார்த்தால் சலிப்படைவீரகள் (bore).

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு. //

அது போலிஸ்காரங்களுக்கே உரிய ட்ரேட் மார்க். அவ்வளவு தத்ரூபமா தன்னை மாற்றியிருக்கின்றார்னு நினைச்சுக்கோங்கப்பா.. :)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி