Monday, June 25, 2007

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, உணர்ந்தத அப்படியே எழுத்தில் கொண்டுவருவது எனக்கு சுலபமான விஷயமில்ல. முயற்சியின் முதல் படியா இந்த பதிவு.

துபாய் சுற்றுலாவில் மிக முக்கியமான ஒன்றான, இது இல்லாமல் சுற்றுலாவே நிறைவு பெறாதுன்னு சொல்லக் கூடியது. அதுதாங்க Desert Safari -தமிழில் இனிதான் பெயர் வைக்கணுமா அல்லது பெயர் இருக்கான்னு தெரியல. நம் நாட்டுலயும் ராஜஸ்தான்ல இது இருக்கு ஆனா இந்த அளவுக்கு இருக்குமான்னு அனுபவிச்சவங்கதான் சொல்ல முடியும்.

அரை நாள் முழுக்க ஒதுக்கிட்டா போதும் அந்த புது உலகத்திற்கு போயிட்டு வந்திடலாம். துபாயிலிருந்து அப்படியே அந்த தங்க மணற் குன்றுக்கு கூட்டிட்டுப் போவாங்க. எத்தனையோ முறை போயிருந்தாலும், இந்த முறை என் கணவருடைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்ததால் கிட்டத்தட்ட 200 பேர் 30 டயோட்டா லாண்ட் கிரூஸரில் -4WD போனது ஒரு புது அனுபவமா இருந்துச்சு. அலுவலகத்தில் எல்லோரும் கூடி, அங்கிருந்து ஒரு 45 நிமிடத்தில் அந்த பாலைவனக் கடலுக்குப் போய் சேர்ந்தோம். அங்கதான் தொடங்கியது இந்த மணற் குன்றை நொறுங்கடிக்கும் வேலை (dune bashing).
குதூகலம் ஆரம்பமாகி வண்டி மேலும் கீழும் உருளத் தொடங்கியது. ஏற்ற இறக்கத்தினால் ரோலர் கோஸ்டரில் போவது போல் இருந்தது. வண்டி தடம் புரண்டிடுமோன்னு நினைக்கும் அளவுக்கு வண்டியின் சக்கரம் மணலில் குத்திக்கிட்டு சாயும்படி நின்றது. மணல் வாரி வாரி இறைத்தது. இந்த மாதிரி ஒரு 25 நிமிஷம். அப்புறம் சரியா சூரியன் மறையும் நேரத்தில் அந்த அழகிய காட்சியைப் பார்க்க வண்டியை நிறுத்தினாங்க. நம்ம ஆட்கள் அதை ரசித்தார்களோ இல்லையோ மணலில் சறுக்கி சறுக்கி விழுந்துக்கிட்டு நம்ம வலையுலகம் மாதிரி ஒருவர் காலை மற்றவர் இழுத்துவிட்டுக்கிட்டு விழுபவர்களை இரசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

அதன் பிறகு கூடாரத்திற்கு அழைச்சுக்கிட்டு போனாங்க அங்க ஒட்டகச்சவாரி இருந்தது. ஆளாளுக்கு ஏறி சவாரி செஞ்சாங்க பாவம் ஒட்டகத்திற்கு நாளைக்கு முதுகு வலி வரப் போகுதுன்னு நாங்கள்லாம் பரிதாபப்பட்டாலும் நாங்களும் ஏறிக் கொண்டோம். இரண்டு ஒட்டகம் ஒன்றன் பின் ஒன்றாக, முன் நடக்கும் ஒட்டகத்தின் மீது நாங்கள் ஏறிக் கொண்டோம். அந்த ஒட்டகத்தின் முன்புறம் என் மகளையும் பின்புறம் என் அக்காவின் மகளையும் உட்கார வைத்துவிட்டு நடுவில் நான் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். பின்னாடி நடந்து வந்த ஒட்டகம் எழும்பும் போது திடீரென்று எங்கள் காதுக்கு அருகில் வந்து கத்தியது. அதைக் கேட்டு பயந்து நாங்க ஒரு கத்துக் கத்த, பயங்காட்ட நினைத்த ஒட்டகம் பயந்து போய் வாயை மூடிக் கொண்டது. வேகமாக இரண்டும் நடக்க ஆரம்பித்து ஒரு வழியாக சவாரி முடிந்தது. சவாரியை விட ஒட்டகத்திலிருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் 'ஜெயிண்ட் வீலில்' மேலிருந்து இறங்கும் போது வயிற்றில் பயத்தில் ஒரு பிசை பிசையுமே அதே உணர்வு.

அங்கிருந்து நகர்ந்து வரும் போதுதான் ஒரு கூட்டமே 'பைக் ரைடு'க்காக வரிசையாக நின்றிருந்தார்கள். கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தோம். ஆண்- பெண்ணுக்கென்று தனி வரிசையெல்லாமில்லை காரணம் என்னைத் தவிர வேறு பெண்கள் பைக்கை ஓட்டவே முன்வரவில்லை அதனால் போன கொஞ்ச நேரத்தில் எனக்கு பைக்கை தந்துவிட்டார்கள். கிளப்பிக் கொண்டு பறந்தேன். 'ரொம்ப தூரம் போக வேண்டாமெ'ன்று எச்சரிக்கை. எங்கிருந்து போவது? அடுத்த பக்கத்தில் ஒட்டகம் முறைத்துக் கொண்டிருந்தது. அதனால் சின்னச் சின்ன வட்டமாக மணற்குன்றில் ஏறி ஏறி ஆசை தீர ஓட்டி காத்திருப்பவர்களை கருத்தில் கொண்டு வந்து சேர்ந்தேன்.

அப்புறம் படங்களெல்லாம் எடுத்துக் கொண்டு ஓய்ந்து உள்நுழைந்தால் அங்கே சின்ன சின்ன கடைகள் இருந்தன, அதில் எல்லாம் துபாயிலிருந்து போகும் சுற்றுலா பயணிகள் நினைவிற்காக வாங்கிக் கொள்ளும் பரிசு பொருட்கள் நிரம்பி இருந்தது. நிறைய கூட்டத்தை பார்த்ததும் கடைக்காரர்களுக்கு நல்ல வியாபாரம் இன்று என்று மகிழ்ச்சி. ஆனா ஒருவரும் அந்தப் பக்கம் வேடிக்கைப் பார்க்கக் கூட ஒதுங்காததால் சீக்கிரமே கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ன்னொரு பக்கம் பார்பிக்கியூ (barbeque/barbecue) இரவு உணவுக்காக மணந்து கொண்டிருந்தது. அப்புறம் அரபி கலாச்சாரப்படி காப்பியும் பேரிச்சம்பழமும் சாண்ட்விச்சுகளும் இருந்தது. அதையெல்லாம் தின்று கொண்டே மருதாணிக்கு கையை நீட்டினோம். அங்கே அரபி கலாச்சார உடைகளும் வைக்கப்பட்டிருந்தன, அதை அணிந்துக் கொண்டு பயம் காட்டினர் சிலர் ஆனால் வேஷம் நல்லாயிருக்கவே அனைவரும் படமெடுத்துக் கொண்டோம். ஒருவர் கையில் அமீரகத் தேசியப் பறவையான வல்லூறை வைத்துக் கொண்டு திரிந்தார், பார்க்க அழகாக இருந்ததாலும் எனக்கு பிடித்தமான பறவையென்பதால் தொட்டு மகிழ்ந்தோம். படமெடுக்க ஆயுத்தமாகும் முன்பு, வேறு ஒருவர் வல்லூறை படமெடுக்க, வல்லூறு காப்பாளர் ஒரு படத்திற்கு 10 திர்ஹம் (ரூ.120) என்று கேட்டார். 'என் பெட்டியில் நான் படமெடுக்க ஏன் காசு தரவேண்டும்' என்று எடுத்தவர் சண்டைக்கு நின்றார். எடுத்தது என் பறவையை என்று சொல்லவே வேறு வழியில்லாமல் காசு கொடுத்துவிட்டு, 'தெரிந்திருந்தால் வெறும் பறவையை எடுத்ததற்கு பதிலாக நான் நின்று எடுத்துக் கொண்டிருப்பேன்' என்று புலம்பிக் கொண்டே சென்றுவிட்டார். அப்புறம் சில விளையாட்டுகள் வைத்தார்கள், இரசிக்கும் படியாக இல்லை.

பிறகு பலமான, சுவையான சாப்பாடு. ஒரு வெட்டு வெட்டி விட்டு உட்கார்ந்த போது தென்றலா புயலான்னு தெரியலை வேகமாக வந்து நடமாடினாள் அந்த அழகு பதுமை அரைகுறை ஆடையில். வேகமாகச் சுழன்று தொடர்ந்து அரை மணி நேரம் ஆடினாள். மூச்சிரைக்காமல், முகம் வாடாமல், பார்ப்பவர்களை கட்டிப் போடச் செய்யும் ஆட்டம். அதைப் பார்ப்பவர்களும் தங்களை அறியாமல் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்கு 'பெல்லி டான்ஸ்' என்று பெயர். ஆடியதெல்லாம் வார்தையில்லாத இசைக்கும் அரபிய பாடல்களுக்கும். நான் ஆட்டைத்தை பார்த்ததை விட மற்றவர்கள் ஆட்டத்தை எப்படி இரசிக்கிறார்கள் என்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததுதான் அதிகம். ஆட்டம் முடிந்து அவள் உள்ளே சென்று விட்டாலும் அதைத் தொடர்ந்து 'பல்லே லக்கா..' சிவாஜியிலிருந்து தமிழ் பாட்டு ஒலிக்கவே ஆட துடித்துக் கொண்டிருந்த ஆட்கள் கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் எழுந்து வண்டிக்கு போய்விட்டோம், வீட்டுக்கு வரும் போது இரவு 11 ஆகிவிட்டது. மறுநாள் அலுவலகமென்றதும் எல்லோருடைய முகமும் வாடிவிட்டது. இருப்பினும் மன இறுக்கம் அகற்ற வார இறுதியில் இப்படி ஒரு தப்பித்தல் தேவையென்றே தோன்றியது.

9 comments:

லொடுக்கு said...

இதில் உள்ள குதூகலத்தை சொன்னால் விளங்காது. அனுபவிச்சாத்தான் தெரியும். டிசம்பர் 31-ல் நாங்களும் சென்றிருந்தோம். குளிரில் இன்னும் அருமையாக இருந்தது.

அமீரக மக்களே! டோண்ட் மிஸ் இட்!!

கதிர் said...

இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாருமே எனக்கு சொல்லலியே!

ப்ரசன்னா said...

ஜெஸிலா, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.html

Jazeela said...

லொடுக்கு, புது வருஷத்த பாலைவனத்திற்கு நடுவில் தான் ஆரம்பிச்சீங்களா? நல்ல அனுபவம் தான். அது என்ன அமீரக மக்களே? நம்மூர்ல இருந்து சுற்றுலாவுக்கு வரும் எந்த மக்களும் 'desert safari' போகாம சுற்றுலாவ முடிச்சுக்காதீங்கன்னு சொல்லுங்க.

என்ன தம்பி இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க. ஒண்ணு செய்யுங்க அடுத்த வலைப்பதிவர் மாநாட்டை உங்க செலவில் அங்க வச்சிடுங்க. கண்டிப்பா எல்லோரும் வந்திடுவோம் ;-)

ப்ரசன்னா, எட்டாஆஆஆ? ஆளாளுக்கு பயங்காட்டுறீங்க. கையாளப் போடணுமா? இல்ல இரு சக்கர வண்டி ஏதாவது தயார் பண்ணி வச்சிருக்கீங்களா?

லொடுக்கு said...

//தம்பி said...
இப்படி ஒரு பாலைவனம் இருக்கறதா யாருமே எனக்கு சொல்லலியே!//

தம்பி,
முதல்ல கிடேசன் பார்க் & அடர் கானகத்தை விட்டு வெளியே வாங்க. அப்பத்தான் எல்லாம் தெரிய வரும் ;).

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

இந்த பாலை நடனம் இருக்கே அட்டகாசமான மேட்டர்.பாரம்பரிய நடனமும் கூட மிகத் தேர்ந்த கலைஞர்களால மட்டும்தான் இந்த நடனத்தை சிறப்பா ஆடமுடியும்.இதை பற்றி விரிவா எழுதினாலும் நல்லாதான் இருக்கும்.நடன மங்கையின் புகைப்படம் போட்டிருக்கலாமே :(

Jazeela said...

//நடன மங்கையின் புகைப்படம் போட்டிருக்கலாமே// அப்புறம்? பதிவ படிங்கன்னா படம் காட்ட சொல்லுதீக? தம்பிதான் அவர் செலவுல வலைபதிவர் மாநாட்டை அங்க ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காருல வேறென்ன.

நானானி said...

ஜெஸிலா!
உங்களை எட்டு போட அன்போட
அழைக்கிறேன். போடுங்க!

Jazeela said...

நானானி உங்களுக்கும் சேர்த்துதான் எட்டுப் போட்டிருக்கேன்னு வச்சிக்கோங்க. அழைப்புக்கு நன்றிப்பா.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி