Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.

பொதுவாகவே கவுதமிடமிருந்து விறுவிறுப்பான, அதிர்ச்சிகள் அடங்கிய, திகில் நிறைந்த, புதிர் புகுத்திய படத்தைத்தான் எதிர்பார்ப்போம். இதுவோ நேர்மாறாக மெல்லிய உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கும் படமாக.

படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'கவிதை'. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப 'கதை என்ன சொல்ல வருது' என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை. நெருக்கமான தகப்பன் மகன் உறவு குறித்த ஒரு வாழ்க்கைப் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இரட்டை வேடத்தில் சூர்யா என்று தோன்றாதபடி அப்பட்டமான இரு உருவம் கொண்டவராக மாறியிருக்கிறார். முதிர்ந்த சூர்யா ஒப்பனையில் மட்டும் முதிர்ச்சியை காட்டாது தனது உடல் மொழியிலும் அற்புதமாக வித்தியாசம் காட்டியுள்ளார். மகன் சூர்யா அந்த வயதிற்கொப்ப காதல் நாயகனாக அப்பாவை தன் நாயகனாக கொண்ட அடக்கமான புதல்வன் என்ற ஒரு வேடம் மட்டுமில்லாமல் அதிலும் வயது வித்தியாசங்களை காட்ட ஒப்பனையை மட்டும் நம்பாமல் உடல் அசைவில், குறும்பு பார்வையில், இளமை துள்ளல் சொட்ட நடித்துள்ளார். அதுவும் அவர் மேகனாவை காணும் போதெல்லாம் மனதின் அதிர்வுகளை கண்களில் காட்டி அந்த இரயில் தடதடக்கும் வேளையில் ஒளித்து வைக்க முடியாமல் உடனே கொட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் தருணத்தில், அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் அப்பப்பா சூர்யா - 'சூர்யா' என்றாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாக்கியத்திற்கு பொருந்தும் அளவிற்கு நடிப்பை கொட்டி, வானம் பல வர்ணங்களை காட்டுவது போல் சூர்யாவும் பல்முக நடிப்பில்.

கதாநாயகி சமீரா - பார்த்தவுடன் பிடித்து போகும் முகமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் பாடல் கேட்க கேட்க பிடித்து போகுமே அதுபோல சமீராவின் முகமும் அந்த கதாபாத்திரத்தோடு நாம் ஒன்றும் போது பார்த்து பார்த்து பிடித்து போகிறது.

ரம்யா (திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்) கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கிறது. அவள் காதல் தெரிவிக்கும் தருணமும் அதன் நேர்த்தியும் மிக அழகு.

நெடுங்காலமாக ஒப்பனை போட்ட முகமென்பதால் சீக்கிரமே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிட்டதால் சிம்ரனுக்கு வயதானவருக்கான ஒப்பனைக்கு அவசியமில்லாத அளவுக்கு கிழடுதட்டிவிட்டது. அவருடைய மலரும் நினைவுகளில் இளம் சிம்ரனாக மாற்றத்தான் ஒப்பனையாளர் கொஞ்சம் சிரமம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகள் தாமரை என்பதாலும் அதற்கு ஹாரிஸ் இசையமைத்திருப்பதாலும் கேட்வே வேண்டாம், எனக்கெல்லாம் கேட்காமலே பிடித்து போகும். அதுவும் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' உண்மையில் மனதில் மழைத்துளி சொட்டும் பாடல்தான்.

இன்னும் முயன்றிருந்தால் நிறைய கத்திரித்திருக்கலாம். தமிழக திரையரங்கில் குழந்தை கடத்தல் விஷயத்தை மொத்தமாக கத்தரித்துவிட்டார்களாம் - அதுவும் நல்லதுதான். தேவையற்ற சாயம் பூசிய நிஜமில்லாத கதாநாயக சாகசம் இந்தப் படத்திற்கு தேவையற்றதுதான்.

படம் முழுக்க ஆங்கிலம் கதைத்துவிட்டு கடைசி காட்சியில் 'வாரணம் ஆயிரத்திற்கு' பொருள் சொல்லும் பாங்கு சிரிப்பை வரவழைத்தது.

படத்திற்கு என்னவோ என்னால் கதைச் சுருக்கம் சொல்ல முடியவில்லை - சுருக்கும் படியாக இல்லையப்பா மிக நீளப்படம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.

இப்படி நம் தந்தை இருந்திருக்க கூடாதா என்று சிலருக்கும், என் குழந்தைக்கு இப்படி ஒரு தகப்பனாக இருப்பேன் என்று சிலருக்கும் தோன்றினாலே இயக்குனருக்கு வெற்றிதான். பார்க்க வேண்டிய படம்தான், ஒரு முறையாவது.

26 comments:

rapp said...

வணக்கம்:):):)

Bee'morgan said...

//அவள் வீட்டு வாசலில் அதே சட்டை, கித்தாருடன் வந்து நிற்கும் போது அவரின் முகபாவங்கள் //
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்.. யாராவது சொல்றாங்களான்னு.. பல விமர்சனங்கள் படிச்சிட்டேன்.. நீங்கதான் சொல்லியிருக்கீங்க.. :) :) :)

Unknown said...

kasta kalam ..
vivek.j

Jazeela said...

வணக்கம் ராப். ஒண்ணுமே சொல்லாம வணக்கம் சொல்லிட்டு ஓடிட்டீங்க?

ஹப்பா Bee'morgan உங்க எதிர்பார்ப்பை நானாவது தந்தேனே :-) . நன்றி.

விவேக், கஷ்டகாலம் உங்களுக்கா அல்லது எனக்கா :-)

Unknown said...

வாங்க. வாங்க.
எல்லோரும் நல்ல மாதிரி சொல்லாத போது நீங்களும் அண்ணாச்சியும்தான் வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள். அன்னப்பறவை மாதிரியா?
நாங்கள் அன்னப்பறவை இல்லையே!.
படம் பார்த்துட்டு பேசிக்குவோம்.

கோபிநாத் said...

\\எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் \\

ஆகா!!!!...இந்த விஷயம் இப்ப தானே தெரியும்..கடவுளே எனக்கு மட்டும் என் இப்படி ஒரு சோதனை...அவ்வ்வ்வ்வவ்வ் ;-(

Unknown said...

இதை கொஞ்சம் பாருங்களேன். அண்ணாச்சி மறுமொழியும் இருக்கிறது.

Unknown said...

intha padathay kavithay nu sollierukeekalay athuku ungakku oru vanakam , unga machanuku oru Periya VANAKAM . kasta kalam yarukana keteenga vera yaruku intha padathai ini paka poravukungalku, pathavangalaku.. :(

vivek.j
(sorry for typing in tanglish)

Jazeela said...

வாங்க சுல்தான் பாய். நாங்க அன்னப் பறவையெல்லாமில்லை. எல்லாமே பார்க்கும் விதத்திலிருக்கு. 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்'- நீங்க தந்த சுட்டியை பார்த்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. எந்த தமிழ் சினிமாவையும் மோசமா எழுதணும்னு கங்கனம் கட்டிக்கிட்டா ரொம்ப சுலபமா போட்டு உடைச்சிடலாம். ஆனா சுகுணா மாதிரி மோசமா எழுத நம்மாள முடியாதுப்பா. குறை சொல்வது ரொம்பவே எளிது - அவருக்கு சீக்கிரம் இது புரியும். விட்டுத்தள்ளுங்க.

வாங்க கோபி. நலம்தானே? உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதுங்களா? நல்லதுங்கோ.

விவேக், விரைவில் தமிழ் தட்டச்சுவீங்கன்னு நம்புறேன். இங்க வந்து 'கஷ்ட கால' பாடம் சொன்ன உங்களுக்கும் வணக்கம்.

c g balu said...

வாணரம் ஆயிரம் என்றால் என்ன அர்த்தம்?

தமிழன்-கறுப்பி... said...

\\
படத்தில் நிறைய ஓட்டைகள் என்பதால் பல கேள்விகள். இருப்பினும் ஒரே கல்லில் இரண்டு பேரிச்சம்பழமாக (எங்க ஊர்ல மாங்காய் மரத்தை தேடணும்ங்க) சூர்யா தன் தந்தைக்கும், கவுதம் தன் தந்தைக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக அமைகிறது படம்.
\\

நம்ம ஊருக்கு டிவிடி வரும்வரை காத்திருக்க வேண்டும்...

தமிழன்-கறுப்பி... said...

\\
நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது,
\\

அடுத்த பதிவுக்கும் இதை எழுதாதிங்க..:)
(அவ்வளவு இடைவெளி இருக்க கூடாதுன்னு சொல்ல வந்தேன்..)

தமிழன்-கறுப்பி... said...

\\
தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம்.
\\

நானும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம்...

Anonymous said...

///நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது///

Thanks for your self-Awakening.

I also saw the movie here in Ajil. I personally dislike the movie due to slooooooow in moving also too much on father-son dramatic scenes which is not natural. But, your Portrayal of movie is better than the movie ..
Anyway..
வாணரம் ஆயிரம் என்றால் என்ன அர்த்தம்? 1000 number of Elephants?

S.Ravi
Kuwait

தாமிரபரணி said...

//***
படத்தின் ஆரம்பத்திலேயே மிகுந்த அயர்ச்சி அதன் காரணம் படத்தின் பெயரைத் தவிர வேற எதையும் தமிழில் பார்க்காமல் போனதாலும் கூட இருக்கலாம். சின்னச் சின்ன வசனங்களும் ஆங்கிலத்தில் வந்து எரிச்சலைக் கிளப்பியது.
**//
இந்த எரிச்சல் பலபேருக்கு இருக்கு ஜெஸிலா, திரைபடங்களில் மட்டும் அல்ல சின்ன திரையிலும் கூட அப்படித்தான் அதுல விஜய் டி.விதான் முதல் இடம், மேலும் பத்திரிக்கைள், வார இதழ்கள் என அங்கிலம்தான் துக்கலா இருக்கு, இத எல்லாம் பார்க்கும் போது கோபம் தலைக்கு எறுது ஒரு துப்பாக்கி எடுத்து எல்லாரையும் சுடனும் போல இருக்கு ஆங்கிலம் அறிவியலில் சிறந்து விளங்குகிறது , மேலும் வேலை கிடைக்க கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவைபடுகிறது, என்பதை எல்லாம் நான் மறுக்கவில்லை, அதற்காக தமிழ் மொழியை சிதைப்பது நல்லதல்ல, ஆங்கில மொழியை அலுவலகத்தில் பேசினால் போதும் வெளிய நம் தமிழ் மொழியில் முடிந்த அளவு ஆங்கில மொழி கலப்பு இல்லாமல் பேசலாமே, மேலும் தமிழகத்தில் நடுவன அரசால் நடத்தபடும் அனைத்து துறையிலும், இந்தியிலும் ஆங்கிலமும்தான் இருக்கிறது (எ-டு) இரயில்வே துறையில் அனைத்து பெட்டிகளிலும் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது, மேலும்
பொதுவாக வண்டி கிளம்பும் முன், பயணிகளின் பெயர், வயது,சீட்டு எண் போன்ற தகவல் அட்டவனையை ஒட்டுவார்கள் அதுகூட இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது, சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களுக்கு செல்லும் வண்டில் தமிழ் இல்லை என்பது மிக கொடுமையானது,இது தமிழக மக்களுக்கு இளைக்கபடும் மிக பெரிய அநீதி, இது ஆதிகத்தின் அடையாளமாய் தெரியாது, மேலும் விமான நிலையத்தில், பெட்ரோல்/டிசல் நிலையங்களிலும், காஸ் நிலையங்களிலும், ரூபாய் தாள்களிலும், பாஸ் போட் அட்டைகளிலும், ப்பன் கார்டுளிலும், வங்கிகளிலும், எ.டி.எம்மிலும், தபாலு துறைகளிலும், தொலைபேசி நிலையங்களிலும் இப்படி என்ணற்ற இடங்களில் தமிழை அழித்து இந்தியை தமிழர்கள் மேல் திணித்து கொண்டிருக்கிறார்கள், இந்த நயவஞ்சக வடநாட்டவர்களை தட்டி கேட்க நம்மிடம் இன்றைக்கு நல்ல தலைவர்கள் இல்லை, இதை இடித்து எடுத்துரைக்க வேண்டிய பத்திரிக்கை அனைத்தும் பார்பனன் கையில் உள்ளது
அவனுக்கு தமிழ் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன?, தமிழக மக்களுக்கு என்று அனைத்து பொருளையும் இலவசமாகவா கொடுக்கிறானுங்க பின்ன என்னதுக்காக நம்ம மொழி இருக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இத்து போன இந்தி உள்ளது
என்று வடக்கத்தனிடம் தமிழன் விடுதலை பெருகிறானோ அன்றுதான் நாம் நம் மொழியை அனைத்து இடங்களிலும் நிரப்ப முடியும்,

Jazeela said...

மாட்ஸ்கிர்லர், திருத்திட்டேன். நன்றி.

தமிழன் கறுப்பிக்கு எந்த ஊரு?

ரவி, வாணரம் ஆயிரத்திற்கு 1000 யானைகள் என்று பொருள் அல்ல வாரணம் ஆயிரம் என்பதற்கு தான். :-)

தாமிரபரணி, உங்க ஆதங்கம் புரிகிறது. ஆனால் தமிழுடன் மற்ற மொழியும் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை. துபாயுக்கு வந்த புதிதில் அரபிகள் கூட ஹிந்தி பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். இந்தியராக இருந்துக் கொண்டு இந்தி தெரியாது என்று கேட்பவர்களுக்கு அவசியமில்லை என்று சொல்வது நல்ல பதிலாக தெரியவில்லை.
//கோபம் தலைக்கு எறுது ஒரு துப்பாக்கி எடுத்து எல்லாரையும் சுடனும் போல இருக்கு // அய்யையோ வன்முறை வேண்டாமே :-). //தமிழ் மொழியை சிதைப்பது நல்லதல்ல// இது சரி. //ஆங்கில மொழியை அலுவலகத்தில் பேசினால் போதும்// அவசியமா என்ன? தமிழரிடம் தமிழில் பேசுவோமே. அலுவலகம் தானே பள்ளிக்கூடமில்லையே? // (எ-டு) இரயில்வே துறையில் அனைத்து பெட்டிகளிலும் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது// எல்லா மாநிலங்களிலும் எப்படியில்லையா?

//மேலும்
பொதுவாக வண்டி கிளம்பும் முன், பயணிகளின் பெயர், வயது,சீட்டு எண் போன்ற தகவல் அட்டவனையை ஒட்டுவார்கள் அதுகூட இந்தியிலும் ஆங்கிலதிலும்தான் இருக்கிறது,// இருந்துட்டு போகட்டுமே.

//சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களுக்கு செல்லும் வண்டில் தமிழ் இல்லை என்பது மிக கொடுமையானது// என்ன கொடுமையிது :-(
//
என்று வடக்கத்தனிடம் தமிழன் விடுதலை பெருகிறானோ அன்றுதான் நாம் நம் மொழியை அனைத்து இடங்களிலும் நிரப்ப முடியும்// விடுதலை? யாரும் யாரிடமும் விடுதலை பெற வேண்டிய அவசியமில்லை. தமிழன் தமிழை நேசித்தாலே போதுமான மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

gnani said...

அன்புள்ள ஜெசி உன்னை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ என்னை தொடர்ந்து www.gnani.netல் சந்திக்கலாம்.

இன்று இரவுதான் வாரணம் ஆயிரம் படம் மும்பையில் பார்க்க்ப் போகிறேன்.

au revoir

அன்புடன் ஞாநி.

Jazeela said...

www.gnani.net பார்த்தேன். அதில் நான் யார் பகுதியில் அம்மா பாடத்தை பார்க்கும் போது ஏதோ போன ஜென்மத்து நினைவாக அவர்கள் முகம் நிழலாடியது. நீங்கள் என் வலைப்பதிவுக்கு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். மனோஷையும் பார்க்க சொல்லுங்கள்.

Anonymous said...

//இந்தியராக இருந்துக் கொண்டு இந்தி தெரியாது என்று கேட்பவர்களுக்கு அவசியமில்லை என்று சொல்வது நல்ல பதிலாக தெரியவில்லை. //

ஏன் சொன்னால் என்னவாம்?
இந்தியராக இருந்து கொண்டிருப்பவனெல்லாம் தமிழ் தெரியாமல் இருப்பதை அவசியமென்றா சொல்கிறான்? இந்தியாவின் தேசிய மொழிகளில் ஹிந்தியும் ஒன்று அவ்வளவுதான் அம்மணி.

இது நல்ல பதிலாக இல்லையென்றால் “போடா வெண்ணெய்! நீ தமிழைப் படி. பொறவு நான் ஹிந்தி படிக்குறேன்'ன்னு சொல்றது நல்ல பதிலா இருக்குமா என்ன?

ஹிந்தி படிப்பதில் த்வறில்லையென்று சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். தெரியாது என்பது என்னமோ அவமானகரமான விசயமென்பது போல எழுதுவதுதான் தேசிய ஜல்லிகளை நினைவூட்டுகிறது :-(

Jazeela said...

//ஏன் சொன்னால் என்னவாம்?// ஒரு அரபி நம் இந்திய மொழியில் ஒன்றான ஹிந்தியை பேசும் போது அந்த மொழி அதுவும் நம் தேசிய மொழி என்று சொல்லும் மொழி எனக்கு தெரியவில்லை அதற்கான அவசியமில்லை என்று சொல்ல எனக்கு கஷ்டமாக உள்ளது அவ்வளவுதான். ஒரு மொழி அதிகமாக கற்றுக் கொள்வதில் தவறில்லையே. இதையும் தேசிய ஜல்லி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.

c g balu said...

தாங்கள் என் கேள்வி வாரணம் ஆயிரம் என்னும் சொற்றொடருக்கு விளக்கம் சொல்லவில்லை. தயவு செய்து கூறவும். எனக்கு தெரிந்தவரையில் ஆயிரம் அனுபவங்கள் என்று நினைக்கிறேன். சரியா?

திங்கள் சத்யா said...

நல்லாத்தான் "வானரம் ஆயிரம்" விமர்சனம். இத்தனை கெட் அப்புல சூர்யாவைப் பார்த்தால், உங்களுக்கு தசாவதாரம் கமல் ஞாபகத்துக்கு வர்றதில்லையா? ஏன் தமிழ் படங்களில் மட்டும் இப்படி டபுள் ஆக்க்ஷன், ட்ரிபிள் ஆக்க்ஷன் போடுறாங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.

சாணக்கியன் said...

அப்பாடா, படம் நல்லா இருக்குனு சொல்லியிருக்கிற இன்னொரு பதிவப்பாத்தாச்சு. என் விமர்சனம் பாருங்களேன்
http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

Jazeela said...

மட்ஸ்கிர்ப்ளர் -வாரணம் ஆயிரம் என்றால் ஆயிரம் யானைகள்னு பொருள்.

//நல்லாத்தான் "வானரம் ஆயிரம்" விமர்சனம். இத்தனை கெட் அப்புல சூர்யாவைப் பார்த்தால், உங்களுக்கு தசாவதாரம் கமல் ஞாபகத்துக்கு வர்றதில்லையா? ஏன் தமிழ் படங்களில் மட்டும் இப்படி டபுள் ஆக்க்ஷன், ட்ரிபிள் ஆக்க்ஷன் போடுறாங்கன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.// நீங்களும் குழம்பிட்டீங்களா? அது வானரம் இல்ல வாரணம் :-). தமிழ் படங்களில் மட்டுமில்லை எல்லா இந்திய படங்களிலும் கூட டபுள் உண்டு. அதற்கு இரு காரணங்கள் 1. அப்பா மாதிரிதான் பிள்ளையும் பிறக்கும் இந்தியாவில் :-). 2. மற்ற கதாபாத்திரங்களை வேறு நல்ல நடிகர்கள் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் அதே நபர் இரு வேடம் ;-).

வாங்க சாணக்கியன். இதோ இப்ப வந்து படிக்கிறேன்.

Fahad Faraz said...

naan innum paarkkavillai.dvd vanda pirahu than paarkanum.unga vimarisanam paditha pirahu paarka thonudu

Akilan The Great said...

mokka padam

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி