நான் பிறந்து வளர்ந்த இல்லத்தை இடிக்கிறார்கள் என்று அறியும் போது மனது பதைபதைக்கிறது. சென்னைக்குச் சென்றாலே பத்திரிகையாளர் குடியிருப்புக்குச் சென்று இறங்கினாலும், நான் பிறந்து வளர்ந்த குடியிருப்பான 'பீட்டர்ஸ் காலனி'யைக் கடக்கும் போதெல்லாம் 'எங்க வீடு' என்று தவறாமல் அனிச்சையாகச் சொல்லி விடுவேன். என் கணவரும் 'எத்தனை முறைதான் சொல்லுவே' என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்குப் பூரிப்புடன் சொல்லி மகிழ்வேன். அந்த வீட்டை விட்டு இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருந்தாலும் என் கனவுகளில் வீடு என்றால் இன்னும் எனக்கு பீட்டர்ஸ் காலனி வீடே வருகிறது.
வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தது, ஈசல் பிடித்து அதற்கு ஃபாத்திமா என்று பெயர் வைத்து வளர்த்தது, அஞ்சலி நாய் இறந்தது அறிந்து அதற்குக் குழி வெட்டிப் புதைத்து அழுதது, மதுர அண்ணன் கால்வாய் திறந்து கரப்பான் பிடிப்பதை வேடிக்கைப் பார்ப்பது, வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்தது, மாடியில் நின்று 'வாட்ச்மேன் காப்பாத்துங்க' என்று விளையாட்டாகக் குரலெழுப்பி எல்லோரையும் பயமுறுத்தியது, 'பைக்' ஓட்டச் சொல்லித் தருகிறேனென்று சாந்தி அக்காவைக் கீழே தள்ளியது, 'மொட்ட மாடி லவ் ஜோடி' என்று கலாய்த்து காதலர்களை மாட்டிக் கொடுத்தது - இப்படி பல நினைவுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய வளாகம்.
திமுகவின் தற்போதைய தலைவர் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்கு கேட்க வரும்போது வண்டிக்குப் பின்னால் ஓடியது, ஓவியத்திற்காக தொடர்ச்சியாகப் பரிசுகள் வாங்கியது - ஒருமுறை நடிகர் சிவகுமார் வந்து பரிசளித்தார், ஆச்சி மனோரமாவின் முன்பு மாறுவேடப் போட்டியில் குறத்தியாக மணி விற்றேன். வருடா வருடம் காலனி ஆண்டுவிழாவில் வெள்ளித்திரை என்று ஏதாவது படம் எடுத்து ஓட்டுவார்கள் அங்கு கும்பலில் உட்கார்ந்து படம் பார்த்தது - இப்படி பல சுவாரஸ்யமான நினைவலைகளைக் கொண்டு நிறுத்தியது 'பீட்டர்ஸ் காலனி' இடிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசிக்கும்போது.
எங்கள் வீடு 17/3, பக்கத்து வீடு 17/4-ல் தான் அதிக நேரம் இருப்பேன். அது வாசுகி அக்கா வீடு. அவர்கள் வீட்டில் சில காலம் நான் தேவகியாகி இருந்திருக்கிறேன். வாசுகி அக்காவின் அம்மாவையும் அப்பா அவினாசிமணியையும் நானும் அம்மா அப்பாவென்றே அழைப்பேன். அதனால்தான் இயக்குநர் பாண்டிய ராஜன் எனக்கு மாமா முறையாகினார்.
17/2 ஞாநி அங்கிள் வீடு. என் தம்பியும் மனோஷும் டிகிரி தோஸ்த். இருவரையும் ஒரு 'சீரியலில்' நடிக்க வைக்க அரும்பாடுபட்டு தோற்றார்கள் ஞாநி அங்கிள். ஏதேனும் பேச்சுப் போட்டியென்றால் அவரிடம் எழுதிக் கேட்டு போய் நிற்பேன். அவர், உனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வா அதை திருத்தித் தருகிறேன் என்பார். சில பேச்சுப் போட்டிக்கு மேல் வீட்டு மணிமொழியும், மூன்றாம் மாடி வக்கீல் அப்துல்லாஹ் அங்கிளும் உதவியுள்ளனர்.
ஓவியப் போட்டியென்றால் ஓவியர் ஜெகதீஷ் ஐயாவை அணுகி அவரிடம் என் கற்பனைகளைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். பச்சைக் கலரில் கையெழுத்து வாங்க சில பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்கும் செல்வேன் - அவர்களுடைய பெயர்கள் நினைவில் இல்லை. கவிஞர் மு. மேத்தா அவர்களையும் இப்படித்தான் அடிக்கடி தொந்தரவு செய்வேன்.
17/1 'தினகரன்' முத்துபாண்டியன் அங்கிளின் மகள் ஷீலா அக்காதான் எனக்கு கார்ட்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்கள். 17/4 வித்யா/ நித்யா வீட்டிற்குச் சென்று மாமியிடம் உறை மோர் வாங்கி வருவேன். 17/18 என் தோழி சத்யாவுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 17/12 வெண்ணிலா அக்காவுடனும் முகநூல் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படி காலனி உறவுகளே நிறைய. அங்கிருந்த வரை ஜாதி -மத பேதமோ, இன பேதமோ அனுபவித்ததே இல்லை.
'பீட்டர்ஸ் காலனி ரவுடி' என்று பெயரெடுக்கும் அளவிற்கு எல்லா பிளாக்கிலும் எல்லாரையும் தெரிந்து வைத்திருப்பேன், பழகுவேன்.
நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து வந்த பிறகு பின் வாசல் பக்கம் இருக்கும் விளையாட்டு திடலே மறைந்து காடாக, புதராக மாறி இருந்ததையே என்னால் சகிக்க முடியவில்லை. தூங்குமூஞ்சி மரத்தில் வளரும் பண்ணி வாகை மலரைக் காண முடியாமல் அவ்வளவு தவித்திருக்கிறேன். இப்போது அந்த இடமே இல்லாமல் போக போகிறது.
நேற்று என் தம்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் நண்பர் எங்கள் பிளாக்கை, எங்கள் வீட்டைப் படம் எடுத்து அனுப்பி இருந்தார்.
போன முறை சென்னை சென்றிருந்தபோதும் 'சத்தியம் தியேட்டர்' சென்ற போது எங்கள் வீட்டருகே சென்று பக்கத்தில் நின்று கண்சிமிட்டிவிட்டே வந்தோம். இனி அந்த கொடுப்பினையுமில்லை.
கடைசியாக ஒருமுறை அங்கு சென்று உட்கார்ந்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அதற்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மரங்கள் மடிந்தாலும் இடம் அழிந்தாலும் குழந்தைகளாக கதைப் பேசி கொஞ்சி மகிழ்ந்த எங்கள் சிரிப்பொலியும் அதன் நினைவுகளும் எங்களுள் என்றும் தங்கி இருக்கும்.
No comments:
Post a Comment