நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்க்கும் போது, அது என் முதல் வேலையிடம். அங்கு 'சார்வாள்' கலாச்சாரம் அதிகமாக இருந்தது. எனக்கும் அப்படியே பழகி இருந்தது. பார்ப்பவர்களையெல்லாம் 'சார்'தான்.
அதன் பிறகு நான் எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு யாரையாவது 'சார்' என்று அழைத்தால் கோபப்பட்டார்கள், அறிவுரை தந்தார்கள், தெறித்து ஓடினார்கள். பெயரை வைத்து மட்டுமே அழைக்க வேண்டுமென்று கெஞ்சினார்கள், உத்தரவிட்டார்கள், அதட்டவும் செய்தார்கள். என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. "பெரியவர்களைப் பெயர் சொல்லி எப்படி அழைப்பது?" என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தூரத்திலிருந்து அழைப்பதையே தவிர்த்து, அருகில் சென்று பேச வேண்டியதாக இருந்தது.
மேலாளர் அழைத்து 'சார் (SIR) என்றால் 'South Indian Rascal'என்ற பொருளுண்டு தெரியுமா?" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்பர் அழைத்து "'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா?'" என்றார்.
எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இன்னொருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சங்கடமாக இருந்தால் 'திரு'வுடன் அவரது இரண்டாவது பெயரை இணைத்து அழைக்கச் சொல்லி கேட்டார்.
எங்களது பக்கத்து வீடு, நான் சின்ன வயதிலிருந்தே அவர் பார்க்க வளர்ந்தவள், அவரும் அதே அலுவலகம். அவரை 'ஆன்ட்டி' என்றேன், அவ்வளவுதான் இடி விழுந்தது போல் உணர்ந்தவர், என் கையைப் பிடித்துத் 'தரதர'வென்று இழுத்துக் கொண்டு போய் "'ஆன்ட்டி', 'அங்கிள்' என்று அலுவலகத்தில் அழைத்து எங்களை அசிங்கப்படுத்தாதே. இந்த இடத்தில் நீயும் நானும் சக ஊழியர்கள் அவ்வளவுதான்" என்று மிகவும் கண்டிப்பாக, அழுத்தமாக, மிரட்டலாகச் சொன்னார்கள்.
நிறுவனரையே 'பேராசியர்' என்றும் அவரது மனைவியை 'மிஸஸ் மீனா' என்றுமே எல்லோரும் அழைத்தனர். எனக்கும் அதுவே பழகியிருந்தது. சுலபமாகவும் இருந்தது. அப்படிப் பழகியதால் வயது வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே நண்பர்களாக, சகஜமாகப் பழக முடிந்தது.
துபாய் வந்த பிறகும் இதுவே தொடர்ந்தது. முதல் முதலில் ஒரு மாதம் மட்டும் பணி புரிந்த 'ஸீனத் ரீ சைக்கிள்' நிறுவனத்தில் 'காக்கா' கலாச்சாரம் மலிந்திருந்தது. கீழக்கரை நிறுவனம். அதனால் எல்லோரும் எல்லோருக்கும் 'காக்கா'தான். எனக்கு அந்த இடமே வித்தியாசமான சூழலாக இருந்தது. நல்லவேளையாக அங்கு எனக்கு நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. காரணம் எனக்கு அப்போது திருமணமாகவில்லை என்பதே.
"எங்க பயலுங்க உங்க கிட்ட திறமையக் காட்ட நினைப்பாங்களே தவிர, வேலைய எவனும் பார்க்க மாட்டார்கள்" என்று வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதும் நல்லதாகப் போனதால், நான் வெளியேறி வேறு நல்ல இடத்தில் வேறு நல்ல வேலையும் கிடைத்தது.
சேர்ந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கும் பெயர் சொல்லி அழைக்கும் முறையே தொடர்ந்தது, என்னைவிட முப்பது வயது மூத்தவரையும் பெயர் சொல்லியே அழைத்தேன், அவரும் இந்தியர்தான், ஆனால் அவரும் அதைத்தான் விரும்பினார். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதன் பிறகு நான் வேலை செய்த எல்லா நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனமென்பதால் 'சார்' என்ற சொல்லே அந்நியமானது. பெயர் சொல்லி அழைப்பதே எனக்குப் பிடித்திருந்தது. நெருக்கமில்லதவர்களை அல்லது தெரிந்தவர்களாக, அல்லது நண்பர்களாக இருப்பவர்களைப் பெயருக்காக அல்லது மரியாதை என்று நினைத்துக் கொண்டு அண்ணன், சேட்டா, அங்கிள், ஆட்டுக்குட்டி என்று அழைப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலும் அப்படி அழைப்பதைத் தவிர்ப்பேன்.
நண்பர்களின் தாய்- தந்தையர்களை மட்டும் தயக்கமில்லாமல் என்னால் 'அப்பா அம்மா' என்று அழைக்க முடிகிறது. ஆங்கிலப் படத்தில் மற்றும் சிரீஸில் நண்பர்களின் அம்மாவை 'மிஸஸ் ......' என்றே அழைப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் எல்லோரும் எல்லோரையும் முதல் பெயரை வைத்தோ நெருக்கமில்லாதவர்களைத் தலைப்போடு அதாவது திரு/ திருமிகு சேர்த்தே அழைக்கின்றனர். இதனைச் சிறப்பான முறையாகவே நான் பார்க்கிறேன். என்னை மற்றவர்கள் அக்கா, சகோதரி, ஆன்ட்டி, பாட்டி என்று எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பெயர் சொல்லி அழைப்பதே எனக்கு விருப்பம். ஆனால் நெருக்கமில்லாதவர்கள் யாரேனும் ஜெஸிலா என்ற பெயரைச் சுருக்கி ஜெஸி என்று அழைத்தால் மட்டும் எரிச்சலாகும் 'யார் அவருக்கு இதற்கு அனுமதி தந்தது?' என்று நினைத்துக் கொள்வேன். ( ஆனாலும் அவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டும் புலம்புவேன்)
சிலர் பெயர் சொல்லி அழைத்தால் திமிர் பிடித்தவளாகப் பார்க்கிறார்கள், நான் அழைப்பது அவர் பெயரை என்று அறியாமலே. பெயர் என்பது அழைப்பதற்குத்தானே?
No comments:
Post a Comment