Monday, July 10, 2006

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.

ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.

என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..

எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் நுழையும் போது நம்மை அறியாமல் நிகழும் ஒரு பதற்றம் - அது ஏன்? எதற்காக? சில சமயங்களில் நாம் சொல்ல வந்ததை மற்றவர்கள் சொல்வதும், நாம் இப்படி நடந்துவிடுமோ என்று பயங்கொள்ளும் நேரத்தில் நிகழ்ந்துவிடுவதும், மனசே சரியில்லை என்று தோன்றும் போது நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களும் நம்மை தேடுவதும் எதனால்? ஆமா இவ என்னடா ஆறு விளையாட்டுல கலந்துக்க சொன்னா ஆறாவது அறிவை ஆராய்கிறாள் என்று சலிப்பு ஏற்பட்டிருக்கும். என்ன செய்றதுங்க ஆறு என்றவுடன் எந்த ஆறு நினைவுக்கு வருதோ அதைதானே கிறுக்க முடியும். இப்படி என் ஆறாவது அறிவை வைத்து முன் கூட்டிய அறிந்த ஆறு விஷயங்கள்:
  1. 1. ஆசையாக வளர்த்த மீன் குட்டிப் போட்டு சில நாட்களிலேயே செத்து போகும்ன்னு தோனுச்சு - செத்து போச்சு ;-(
  2. 2. வீட்டுக்கு வரிசையாக நிறைய விருந்தாளிகள் முன் அறிவிப்பு இல்லாமலே வர போறாங்கன்னு தெரிந்து வீட்டை சுத்தம் செய்து சாப்பிட, அருந்த ஏதேதோ செய்து வைத்தது.
  3. 3. என் நண்பனும் தோழியும் காதலில் மாட்டி கல்யாணத்தில் முடிவார்கள் என்று வாய்விட்டு கூறி, இரு தரப்பினரிடமிருந்தும் நட்பை கொச்சைப்படுத்துவதாக திட்டு வாங்கி. கடைசியில் நான் சொன்னதே ஆரம்பமாகி, திருமணத்தில் முடிந்து இப்ப ஒரு குழந்தை. ;-)
  4. 4. வண்டி எடுக்கும் போதே ஏதோ அசம்பாவிதம் நேரும் என்று தோன்ற.பிராத்தித்து வண்டி எடுத்து, கவனமாகத்தான் ஓட்டினேன், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் லேசான மோதலில் தப்பியது என் வண்டியும் மற்றவர் வண்டியும்.
  5. 5. இரண்டு பெண் குழந்தையை பெற்றவர்கள் மூன்றாவதை சுமக்கும் போது. 'தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இதுவும் பெண் குழந்தைதான்' என்று மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லி, 'அடிப்பாவி அப்படிலாம் சொல்லாதேன்னு' சொன்னாங்க. அப்படியே ஆகிவிட்டது. மூன்றாவதும் முத்தான பெண் குழந்தை.
  6. 6. நேற்றுக் கூட ஏதோ காரணமே இல்லாமல் மனசே சரியில்லை. ஊருக்கு அழைத்து பேசிய பிறகுதான் ஏன் என்று புரிந்தது. அக்காவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்களாம்.
ஆறு: 666 இது சாத்தான் எண்ணாக இருக்கலாம் ஆனால் 6+6+6=18 (1+8=9) 6x6x6=216 (2+1+6=9) ஒன்பது பலருக்கு அதிஷ்ட்ட எண். அதிஷ்டம் துரதிஷ்டம் என்று பலர் நம்புவார்கள். சிலர் உணர்ந்து அதனை பொய் என்பார்கள். சில சமயங்களில் இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றும் வாழ்க்கையிலலும் கணினி போல undo செய்யும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட மனதை பாதித்த ஆறு சம்பவங்கள்.
  • * அஞ்சலி நாய் புத்திபேதலித்து இறந்தது.
  • * பால்காரன் பசு கன்னு போடும் போது செத்துப் போனது.
  • * பத்தாம் வகுப்பு இறுதியான பொது தேர்வில், ஒரு சக மாணவி நல்ல படிக்கும் பெண், இரவு முழுக்க கண் விழித்து படித்ததில் சுயம் இழந்து ஏதோ குழம்பி, தன்னிலை மறந்து பரிட்சை தாளை கிழித்து, வகுப்பறையில் கலாட்டா செய்து எல்லோரையும் பீதியடைய செய்து, அந்த 15 நிமிட கோலத்தால் அன்று அவள் பரிட்சை எழுத முடியாமல், ஒரு வருடம் வீண் செய்ய வேண்டியாகிவிட்டது.
  • * என் தோழி அபிராமியின் அப்பா திடீர் மரணம். வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருந்து திடீர் சரிவு. பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து பணம் கட்டணம் கட்ட இயலாமல் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டு அவள் வாழ்வின் முதல் நாளில் எங்களை எல்லாம் சந்தித்து புது பள்ளிக்கூடம் சேர்ந்துவிட்டேன் நாளை புது பள்ளி உடுப்பு (uniform) என்று உற்சாகமாக சொல்லி சென்றவள். அப்பாவின் இழப்பை தாங்காத அவள் அம்மா, மகள் குளிக்கும் சமயத்தில் எரிவாயுவை திறந்துவிட்டு. கடைசிக்குட்டி மகனுடன் சேர்ந்து செய்துக் கொண்ட தற்கொலையில் அபிராமியும் பலியானது.
  • * பக்கத்து வீட்டு ரோஜா அக்காவின் கணவர் கால் தடுக்கி விழுந்து, சின்ன கல் நெற்றிபொட்டில் குத்தி அகால மரணமடைந்தது.
  • * சக ஊழியர் 29 வயதிருக்கும். திருமணமாகி, கர்பிணி மனைவியை தாயகம் விட்டு, வேலையை துபாயில் தொடர வந்தவர் இயற்கை எய்தியது.

ஆறு என்றவுடன் ஆறாவது அறிவை தவிர நினைவுக்கு வருவது:

  1. கடலில் இணையும் கரைக் கொண்ட ஆறு
  2. ஆறுநாள் யுத்தம் (இஸ்ரேல் - அரபு நாடுகள் 1967)
  3. ஆறு வித்தியாசங்கள்
  4. ஆறு விரல் கொண்ட என் தோழி
  5. ஆறு படம்
  6. டிசம்பர் ஆறு

வேரென்ன எழுதுவது?

-என்னை விரும்பிய ஆறு உள்ளங்கள் என்று காதல் காப்பியம் எழுதலாம். ;-)

-நான் சமைத்து திட்டு வாங்கிய ஆறு பண்டங்கள் பற்றி சமையல் குறிப்பு எழுதலாம். ;-)

-நான் பெற்ற பாராட்டு பரிசுகள் என்று பெருமை பட்டியலிடலாம்.

எதற்கு வம்பு, அப்படியே நிறுத்திப்புட்டு வேறு நபர்களை ஆறு விளையாடிற்கு அழைப்போம். பெறும்பாலும் எல்லோரும் ஆறு போட்டாகிவிட்டார்கள், இருப்பினும் அழைத்து பார்ப்போம்.

  1. ஆசிப் மீரான் (சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒதுங்கிட வேண்டாம். உங்களை இளசாக்க சின்ன முயற்சி ;-) ஊரிலிருந்து வந்த பிறகு எழுதினால் போதும்.)
  2. முஜீப்
  3. மஞ்சூர் ராசா
  4. கோவி.கண்ணன்
  5. உமா கதிர்
  6. கவிமதி

7 comments:

கோவி.கண்ணன் said...

//என் ஆறாவது அறிவை வைத்து முன் கூட்டிய அறிந்த ஆறு விஷயங்கள்://
உங்கள் ஆறு பதிவு அறுசுவையாய் இருந்தது. சில நேரங்களில் நினைப்பது அப்படியே நடந்துவிடுவது எனக்கும் கூட ஆச்சிரியமளிக்கிறது.

ஜெஸிலா அவர்களே ... ஆறுப் போட்டு ஆறியே போச்சு... அழைப்புக்கு நன்றி
http://govikannan.blogspot.com/2006/06/blog-post_21.html

╬அதி. அழகு╬ said...

மறக்கவியலாத, உருக்கமான ஆறு!

\\பால்காரன் பசு கன்னு போடும் போது செத்துப் போனது\\

செத்துப் போனது/போனவர் பசுவா-கன்றா/பால்காரரா என்று தலையில் முடி மட்டும் உள்ள என்னைப் போன்றவர்கள், இருப்பதையும் பிய்த்துக் கொள்வர். எனவே, விளக்கி விடவும்.

மஞ்சூர் ராசா said...

ஜெஸிலா, ஊருக்கு போகக் கிளம்பிகிட்டிருக்கேன். நீங்க வேறெ ஆறு போடறதுக்கு என்னையும் கூப்பிட்டுட்டீங்க.

எனக்கு ஆறறிவு இருக்கான்னே சந்தேகம். இதிலெ ஆறு விசயங்களெ வேறெ எழுத சொல்லறீங்க. சரி, சரி எழுதறேன்.

ஆனா கொஞ்சம் ஆறட்டும். ஊருக்கு போய் வந்து நிதானமா எழுதறேன்.

நன்றி.

மஞ்சூர் ராசா said...

அன்பு ஜெசிலா

என் தோழி அபிராமியின் அப்பா திடீர் மரணம். வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருந்து திடீர் சரிவு. பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து பணம் கட்டணம் கட்ட இயலாமல் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அப்பாவின் இழப்பின் துயரத்தில் இருந்து மீண்டு அவள் வாழ்வின் முதல் நாளில் எங்களை எல்லாம் சந்தித்து புது பள்ளிக்கூடம் சேர்ந்துவிட்டேன் நாளை புது பள்ளி உடுப்பு (uniform) என்று உற்சாகமாக சொல்லி சென்றவள். அப்பாவின் இழப்பை தாங்காத அவள் அம்மா, மகள் குளிக்கும் சமயத்தில் எரிவாயுவை திறந்துவிட்டு. கடைசிக்குட்டி மகனுடன் சேர்ந்து செய்துக் கொண்ட தற்கொலையில் அபிராமியும் பலியானது.

நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகள் படித்து மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தேன். நெஞ்சை அடைத்தது. உங்கள் மனம் எப்படி வேதனை அடைந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்..... மிகப்பெரிய இழப்பு.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அழைப்பை ஏற்று ஆறிட்டதற்கு நன்றி ஆறாம் அறிவு என்றெல்லாம் பயமுறுத்தலாக நன்றாக இருக்கிறது :-)))

கதிர் said...

ஜெஸிலா அக்கா! இந்த ஆட்டத்துக்கு யாரும் நம்மள கூப்பிடாத வரைக்கும் சந்தொஷபட்டேன். ஏன்னா எனக்கு பிடிச்ச விஷயத்தை ஆறுக்குள்ள அடக்க முடியாதே. இருந்தாலும் கூப்பிட்டிங்களே என்ன செய்றது. இன்னிக்கு விளையாடிட்டா போச்சி.

அன்புடன்
கதிர்

Jazeela said...

அறுசுவை என்று ஆறுதல் அளித்த கோவி.கண்ணனுக்கும் பயமுறுத்தலாக நன்றாக இருக்கிறது என்ற குமரனுக்கும் நன்றி.

அழகு உங்களை மாதிரி அறிவுஜீவிகளுக்கு விளக்காமலே புரியும்ன்னு விட்டுவிட்டேன் தப்புதான் ;-) பால்காரனின் பசு, கன்னு போடும் போது செத்துப் போச்சு (பசு செத்து போச்சு) புரிந்ததா?

ம.ராசா. ஊருக்கு போய்விட்டு வந்து எழுதினால் இன்னும் ஊர் நிகழ்வோடு சேர்ந்து சுவாரஸ்யமாக இருக்கும்.

தம்பி உமாகதிர் ஐந்தா ஆறா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு வலைப்பூ போதுமான்னு ஆரம்பிச்சுடுங்கோ.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி