Sunday, July 16, 2006

திருமணம் - வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.

திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.

திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.

பெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.

நிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.

வேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம்? அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்? யோசித்திருக்கிறீர்களா?

வாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:

  • மன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).
  • தவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)
  • புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)
  • இருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி!)
  • சிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).

கருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்

  • மற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா?)
  • மற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க!)
  • மற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)
  • மற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)

திறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.

ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.

சுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.

‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.

‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.

அறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).

கர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

இவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.

17 comments:

முத்துகுமரன் said...

எனக்கு உபயோகமான பதிவு. மனப்பாடம் பண்ணி வச்சுக்கிறேன். :-))

╬அதி. அழகு╬ said...

பயனுள்ள பதிவுகளில் ஒன்று!

எல்லாம் சரிதான், ஆனா கருப்புக் கலர் எழுத்து கண்ணைக் குத்துதே! மாத்தக் கூடாதா? அப்படியே ஒங்க கால் செஞ்சிரி பழைய போட்டோவையும் ;-))

Chandravathanaa said...

பயனுள்ள பதிவு

Jazeela said...

முத்துகுமரன் அவர்களே, மனப்பாடம் செய்யாமலே பசுமரத்தாணி போல் பதிய வேண்டும்.

ஆமா, யார் இந்த அழகு? கால் செஞ்சிரி பழைய படமா? பழைய படம் என்றால், சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்த படம். ஆனா பெரிய மாற்றம் ஒன்றுமில்லையே? சமீபத்திய படம் ஒன்றும் வலையேற்றவில்லை. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ஆமாம் என்னை உங்களுக்கு தெரியுமா என்ன? அப்புறம் அந்த கருப்பு நிறத்திற்கு பதில் என்ன நிறம் போடலாம்ன்னோம் சொல்லிடீங்கன்னா உங்க சவுகரியத்திற்கு செய்து விடலாம் ;-)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா எழுதியிருக்கீங்க உங்களிடம் இருந்து இன்னும் நிறைய நல்ல பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

///
இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா?’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள்
///

இதில என்ன பிரச்சனைன்னா ஒருவரை கவர வேண்டும் என்றால் இயல்புக்கு மாறிதான் நடக்க வேண்டியதாகி விட்டது. இன்றுள்ள சூழ்நிலையில் ஒருத்தர் இன்னொருத்தரை கவர வேண்டும் என்றால் தன் இயல்பை எல்லாம் மாற்றிதான் பழக வேண்டியிருக்கிறது. இயல்பா இருந்தா யாரும் திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்குறாங்க( அனுபவத்தில சொல்றேன் ;-))) ). ஒரு தடவை இயல்பை மீறி வேற மாதிரி நடக்கறவங்க கல்யாணம் வரைக்கும் அதே மாதிரி இருக்காங்க அப்புறம் சாயம் வெளுத்துப் போயிடுது :-))

Sami said...

ஆனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் நிலைமை ரொம்ப கஷ்டமாயிடுங்க...

அமலசிங் said...

Very interesting Jessila. Would you be able to organise a women network for Tamil.net? Would you be available to discuss at gtalk?

My id is: amalasingh

கதிர் said...

கவுன்சிலிங் ஆரம்பிச்சிட்டிங்களா?

╬அதி. அழகு╬ said...

வெளுத்த கலர் எழுத்து ஏதாவது போடுங்க; வெள்ளையாக இருந்தாலும் நல்லது. நீங்கள் பயன் படுத்தும் டெம்ப்ளேட்டில் இங்கு இப்படிப் போட்டிருக்கின்றனர்.

விண் டீவியில் அறிவுப் போட்டி வைத்து, பரிசெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவருடைய மேஜையில் அவருக்குரிய பெயர்ப் பலகை இருக்கும்.

அந்த அக்காவாக்கும் என்று தவறாக எண்ணி எழுதிவிட்டேன். மன்னிச்சுக்கோங்க தங்காச்சி!

aaradhana said...

திருமணத்திற்குப்பிறகு 'ego'இருக்ககூடாது... சரிதானே!

ஏ.எம்.ரஹ்மான் said...

மனிதன் என்றால் வாழ்க்கை என்று உண்டு,விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் எல்லாம் சுகமே, மிக அற்புதமாக திருமண வாழ்க்கையைப் பற்றி சொல்லியிறுக்கிண்றீர்கள் ஜெஸிலா, வாழ்த்துக்கள்

Jazeela said...

நன்றி சந்திரவதனா.

//இதில என்ன பிரச்சனைன்னா ஒருவரை கவர வேண்டும் என்றால் இயல்புக்கு மாறிதான் நடக்க வேண்டியதாகி விட்டது.// குமரன் அதற்கு அவசியமே இல்லை. உள்ளது உள்ளபடி நேச்சிக்க ஆள் கண்டிப்பாக இருக்கும்.

கஷ்டம்ன்னு எடுத்துக்கிட்டா எதுதான் கஷ்டமில்ல சாமி?

நன்றி அமலா சிங். பேச்சாடலுக்கு நேரமிருந்தா இன்னும் எழுத மாட்டேனா ;-(

இது கவுன்சிலிங் என்றால் கவுன்சிலிங்குக்கு பெயர் என்ன? ;-)

நன்றி அழகு. அதே விண் டிவியில் கேள்விபதில் நிகழ்ச்சி நடத்தியவள்தான். அந்த நேரத்தில் எடை கூடியிருந்தேன். (தமிழ்நாட்டுக்காரர்களுக்கு வெயிட்டா இருந்தாதான் பிடிக்குமாம்;-) )

சுரணையே இல்லாமல் இருந்தால் தேவலை அராதனா ;-)

துளசி கோபால் said...

ஜெஸிலா,

திருமண நாள் வாழ்த்து(க்)கள்.

பதிவுக்குக் காரணம் இதுதானே?:-))))

Jazeela said...

வாழ்த்துக்கு நன்றி. பதிவுக்கு கூட காரணம் இருக்க வேண்டுமா என்ன துளசி கோபால். அதுவும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ;-)

Darren said...

திருமணம் வாழ்வின் மாற்றம்.

மாற்றம்தாங்க..

விவேக் style ல சொல்லனும்னா:

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் .......

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

துளசி கோபால் said...

///
ஜெஸிலா,

திருமண நாள் வாழ்த்து(க்)கள்.

பதிவுக்குக் காரணம் இதுதானே?:-))))
///

எப்படி திருமண நாள் என்று கண்டு பிடித்தீர்கள் பெரிய விஞ்ஞானியா இருப்பீங்க போல...

Jazeela said...

நன்றி தரன்.

குமரன் அது பெரிய கண்டிபிடிப்பே இல்லீங்க, பினாத்தல் பதிவில் 23ம் புலிகேசி பற்றிய விமர்சனத்தில் நான் பதில் பதிவு போடும்போது குறிப்பிட்டிருந்தேன். கண்டுபிடித்துவிட்டார்கள் விஞ்ஞானிகள் ;-)

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி