Thursday, July 30, 2009

வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை.

நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் கிண்டலாகவும் கேலியாகவும் மட்டுமே பார்ப்பார்கள். அந்தக் கேலியின் உச்சமாக என்னை எனக்குப் பிடித்தமான அடையார் ‘ஷேக்ஸ் என்ட் கிரீம்ஸுக்கு’ அழைத்துச் சென்று எனக்குப் பிடித்த பனிக்கூழ்களை நான் பார்க்க அவர்கள் சாப்பிட்டு, என் சுய கட்டுப்பாட்டை நான் இழந்து, நோன்பை முறித்துக் கொள்வேனா என்று பரிசோனை செய்வார்கள். எதற்கும் அசராதிருந்த என்னைக் கண்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 'இதெல்லாம் பெரிய கட்டுப்பாடில்லை' என்று விட்டுவிட்டார்கள். உலகத்தில் பல்வேறு பகுதியில் ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கும் போது பட்டினி கிடப்பது மட்டும் எப்படி சுய கட்டுபாடாக இருக்க முடியும் என்பதே இவர்களது கேள்வி.

கட்டுப்பாடு என்பது என்ன? நாயைக் கூடத்தான் உணவில்லாமல் கட்டிப்போடலாம். அது குரைக்கும், சோர்ந்து போகும், கோபப்படும் அருகில் சென்றால் கடிக்கவும் செய்யும். இப்படிக் கட்டிப்போட்டு கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமலான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்த பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாக கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.

’ஒருவர் நபிகள் பெருமானாரிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், தாராளமாக நோன்பு நோற்கலாம். ”நான் பிறந்ததும் ஒரு திங்கள் கிழமை எனக்கு நபித்துவம் கிடைத்ததும் ஒரு திங்கள் கிழமை” என்று கூறினார்கள்’ என்பதைப் படித்ததிலிருந்து திங்கட்கிழமைகளில் நோன்பு வைக்க முற்பட்டேன். இடைப்பட்ட சில காலம் அந்த நோன்புகளை மறந்தே இருந்த வேளையில் இந்த வருடம் ரமலான் வரவிருக்கிறது என்பதால் போன வருடம் விடுபட்ட நோன்பை எல்லோரும் பிடிக்க ஆயத்தமாகும் போது நானும் என் திங்கட்கிழமை நோன்பை ஜூன் மாதக் கடைசியில் ஆரம்பித்தேன். முதல் திங்கள் ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக் திங்கள் தவறியது. இந்த ஜூலை மாத 20 ஆம் தேதி வைத்த நோன்பு என்னை மட்டுமல்ல எங்கள் வீட்டில் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. காரணம் இது கோடையின் உக்கிரமென்பதால் கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஆகாரம் தண்ணீரில்லாமல் மிகவும் தவிப்பாக இருந்தது. பொதுவாக ஒரு மாதம் தொடர்ச்சியாக நோன்பு இருப்போம். முதல் பத்து தவழ்ந்தாலும் அடுத்த பத்து நடக்க ஆரம்பித்து கடைசி பத்து ஓடிவிடும். ஆனால் இப்படி இடைப்பட்ட ஒருநாள் பயிற்சி மிகவும் கடினம் என்பதை உணர்ந்ததோடு ’நோன்பு திறக்கும் வேளையில் ஏற்படும் மகிழ்வு’ என்று படித்திருக்கிறேன், அதில் என்ன மகிழ்வு என்று யோசித்த விஷயம் தவித்த அன்றுதான் புலப்பட்டது.

அலுவலகத்தில் கேட்டார்கள் ’இதில் என்ன பெரிய விஷயம் காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறாய்’ என்று. கேட்பது சுலபம் காலையில் 4 மணிக்கு முன்பாக எழுந்து சாப்பிடுவது என்றால் எவ்வளவு கடினம், அதுவும் தண்ணீரை ஒருநாளுக்கு தேவையான அளவா உடலில் பதுக்கி வைக்க முடியும்? நாங்கள் என்ன ஒட்டகமா? காலையில் எழுந்து சாப்பிடவும் முடியாது. நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்ற உண்மையை அனுபவித்தால் தான் தெரியும். இந்த வருடம் ரமதானும் இனி வரப்போகும் 3-4 வருட ரமதானும் கோடையிலேயே வரவிருப்பதால் அமீரகத்திலிருந்து நோன்பு நோற்பவர்களுக்கு பெரிய சவாலாக இருக்குமென்றே தோன்றுகிறது. ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதை பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

ரமதானை எப்படி சுலபமாக்குவது என்னென்ன சாப்பிடுவது என்ற மடல்கள் வரத் தொடங்கிவிட்டது. நபியவர்கள் ரமலானைப் போன்றே ஷாபானிலும் அதிக நோன்பு வைத்துள்ளார்கள். அதனாலாவது ரமதானுக்கு முன்பே ஷாபானில் நோன்பு வைத்து பழகிக் கொள்வோம்.

14 comments:

Prathap Kumar S. said...

ரம்ஜான் மாதம் தினமும் 6 மணிநேரம் வேலை செய்தாபோதும், அப்புறம் கன்டினியுவா...4 நான் லீவு கிடைக்கும்...ஐ ஜாலி...

சென்ஷி said...

நோன்பை பற்றி நல்ல தெளிவா விவரிச்சு எழுதியிருக்கீங்க.

எங்க அலுவலகத்தில் ரமதான் மாதத்தில் இரவுப்பணி மாத்திரம்தான்.

அய்யனார் said...

எல்லாம் சரிதான் இஃப்தார் என்னிக்குன்னு முன்னாடியே சொல்லிடுங்க :)

Jazeela said...

ஆமாம் விமர்சகன் நாள் ஒடுவதே தெரியாது மாதம் முடிந்து விடுமுறைகளும் முடிந்து மறுபடியும் 8 மணிநேரம் தொடங்கிவிடும் :-)

அட அப்படியா சென்ஷி, இது நல்லாயிருக்கே. அப்ப த்ராவிஹ் கிடைக்காதே?

அய்ஸ் இப்தார் தானே கொடுத்தடலாம். நம்ம அமைப்பு ரீதியா ஒன்று, பதிவர்கள் ரீதியா ஒன்று டபுள் ஓகேவா?

கோபிநாத் said...

\\அய்யனார் said...
எல்லாம் சரிதான் இஃப்தார் என்னிக்குன்னு முன்னாடியே சொல்லிடுங்க :)
\\\

ரீப்பிட்டே ;))

Dr.Imamuddin Ghouse Mohideen said...

நல்ல கட்டுரை!நோன்பின் மாண்பையும்,அருமையையும் அருகிலிருந்து உணர்ந்த என் மாற்றுமத நண்பர்கள் வாரமிரு முறை நம்மைப் போலவே நோன்பிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இமாம்.

கலையரசன் said...

//நம்ம அமைப்பு ரீதியா ஒன்று, பதிவர்கள் ரீதியா ஒன்று டபுள் ஓகேவா?//

டபுள்,
ட்ரிபிள்,
கோட்டிரிபிள்,
குயின்டிரிபிள்,
ஹக்ஸ்டுபிள்,
செப்டுபிள்,
ஆக்டுபிள்,
நானுபிள்,
டெசுபிள் ஓ.கேங்க!!
(யப்பா.. முடியல)

Unknown said...

அன்பு ஜஸீலா, ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டீர்கள். வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருத்தல் உடலின் முழு சுத்தம் செய்தலுக்கு (overhauling) சமம். இதனால் சரியாக இயங்காத பல உறுப்புக்கள் ஒரு மாதத்தில் நாம் கொடுக்கும் நீண்ட ஓய்வில் தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது என்கிறது இக்கால மருத்துவம். அன்று கண்டுபிடிக்கப்படவில்லை

Jazeela said...

கோபி, இப்தார்தானே கொடுத்துட்டா போச்சு.

டாக்டர் இமாம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. நண்பர்களும் நம்மை போன்று நோன்பிருப்பதை அறிந்து மகிழ்ச்சி.

கலையரசன், ஓகேன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன முடியலை ?

ஜாபர், மருத்துவ தகவலுக்கு நன்றி. இக்காலத்தில் கண்டுபிடிப்பதை அக்காலத்திலேயே உணர்த்திவிட்ட விஷயங்கள் உண்மையில் அதிசயம் தான்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

unmaigal said...

நன்றி. நோன்பை பெரும்பாலும் பசியுடன் சம்பந்தப்படுத்திதான் நாம் பார்க்கிறோம்.இறைவன் குர்ஆனில் நோன்பின் மூலம் நீங்கள் இறைபக்தி, இறையச்சம் உடையவர்கள் ஆகலாம் என்கிறான். (2-183). பசியை உணர்வதற்காக நோன்பு என்று குர்ஆனிலோ அல்லது நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலோ நான் பார்த்ததில்லை. ஏனெனில் நபிகளாரும் சரி அவருடைய தோழர்களும் சரி பெரும்பாலும் தங்களின் வாழ்வை பசியுடன்தான் கழித்திருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வயிறாற இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உணவுண்டதில்லை என அவர்களின் துணைவியார் ஆய்ஷா (ரழி) அவர்களின் கூற்று அன்னாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என தெரிவிக்கிறது. நோன்பின் மூலமாக நாம் இறையச்சம் உடையவர்களாக மாறவேண்டும். நோன்பில் எப்படி அதிகமதிகம் இறைப்பாதையில் நமது நேரத்தை கழிக்கிறோமோ அது தொடர வேண்டும். எவ்வாறு தொழுகைகளை விடாமல் தொழுகிறோமோ அது தொடரவேணடும். தேவையற்ற விசயங்களை பேசுவதை விட்டும் தொடர்ந்தும் விலகி இருத்தல் வேண்டும்.( டிவி சீரியலையும் சினிமாக்களையும் நோன்பில் பெரும்பாலோர் பார்ப்பதில்லை).இவை அனைத்தையும் நான் இறைவனுக்காக தவிர்த்து கொண்டேன் என்றால் தொடர்ந்தும் தவிர்த்துக் கொள்கிறேன் என்றால் நோன்பு பயன் தருகிறது என பொருள் கொள்ளலாம். நபிகளார் சொன்னார்கள் - யார் பொய்யான பேச்சையையும் தீய செயல்களையும் விடவில்லையோஅவர் உண்ணாமலிருப்பதாலும் பருகாமலிருப்பதாலும் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை. எனவே இன்ஷா அல்லாஹ் வரும் ரமழானில் நமது இறையச்சம் அதிகமாக முயற்சி செய்வோம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
ரமலான் மாதத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அன்பர்களுக்கென அருமையான பதிவிட்ட ஜெஸிலாவுக்கு நன்றி.

Jazeela said...

நன்றி துபாய் ராஜா.
விரிவான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி உண்மைகள்.

நன்றி இறையடியான்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு.வானொலி நிகழ்ச்சிக்கு இஸ்லாமியப்பாடல்களுக்கு தொகுப்புரை வழங்குவதற்காக அண்ணல் நபி அவர்களின் புத்தகங்களைப் படிப்பதுண்டு.இஸ்லாமியக்கோட்பாடுகள், நபி அவர்களின் தியாகங்களைப் படித்து உருகிவிடும்.மனித உணர்வுகள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை. விரதங்களைக் கேலி செய்வது,அவரவர் நம்பிக்கைகளை அவமதிப்பது எனக்கு கோபமூட்டும். நீங்கள் பொறுமையாய் இருந்தது வியப்பு.அந்தமானில் 5வயது சிறு பள்ளிக்குழந்தைகள் ரம்ஜான் விரதம் இருக்கிறார்கள். இந்த வயதில் என்ன விரதம்.உங்களுக்கு விரதம் இல்லாமலே அல்லாஹ் அருள் புரிவார் என்றாலும் சிரித்தபடி ஓடி விடுவார்கள்.நல்லபதிவு.
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி