நான் மிகச் சுலபத்தில் யாரையும் அண்ணன்/ அக்கா என்றெல்லாம் முறையோடு கூப்பிட்டு விட மாட்டேன், அப்படியிருக்க நான் ’வாப்பா’ என்று வாய்நிறைய அழைக்கக் காரணம் யாஸ்மின்தான். நான் வாப்பாவைச் சந்திக்கும் முன்பே அவரைப் பற்றி யாஸ்மின் நிறையவே சொல்லியிருக்கிறார்.
ஆசிப் - யாஸ்மினின் காதலுக்கு மரியாதை கொடுத்து அதைத் திருமணத்தில் முடியவும், யாஸ்மினைக் குடும்பத்தின் அங்கமாகவும் அவளுக்கு எந்தவித நெருடலுமில்லாமல் இருக்குமாறு அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தில் அவரை இணைத்துக் கொண்டவர் என்பதாலேயே நான் அவர்களைப் பார்க்கும் முன்பே அவர்கள் மீதான பிரியமும் அன்பும் நிறைந்திருந்தது.
திரு. பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் வாப்பாவுக்கும் எங்கள் அமைப்பான அமீரகத் தமிழ் மன்றத்தின் (அன்று அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள்) சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவின் முடிவில் ஆசிப் என்னை வாப்பாவிடம் "இதுதான் ஜெஸிலா" என்று அறிமுகம் செய்து வைத்தார். வாப்பா உடனே தன்னுடைய ’காற்று வெளியினிலே’ நூலில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசளித்தார்கள். உடனே நான் ‘மகள்’ என்று அடையாளப்படுத்தி எழுதி இருக்க வேண்டுமென்று முதல் சந்திப்பிலேயே உரிமையுடன் கேட்டேன். அதன்பின்னர் அது, வாப்பா மகள் உறவாக அப்படியே தொடர்ந்தது.
வாப்பாவுடன் நிறையப் பேசியிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்திலிருந்து அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து, தனிப்பட்ட பிரச்சனை, துறைசார்ந்த பிரச்சனைகள், அவர்களுடைய ஆதங்கங்கள், கோபங்கள், பிடித்தவை, பிடிக்காதவை என்று அத்தனையும் பேசி தீர்த்திருக்கிறோம்.
என்னுடைய எழுத்தில் என் குரலே கேட்பதாகவும், அப்படியே எழுதும்படியும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள், நான் பாடிய பாட்டை எங்கேயோ கண்டுவிட்டு அதில் எது சிறப்பு, எது சரிவு என்று என் தவறுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
என் ஜிமெயிலின் உட்பெட்டி அவர்களுடைய குரல் பதிவுகளால் நிரம்பி வழிகிறது. துபாயில் எங்களுடன் தங்கியிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் வெந்நீர் கேட்பார்கள், இன்னின்ன மாத்திரைகளைப் போட வேண்டும், உப்பு அதிகமில்லாத சாப்பாடு வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும், கட்டளைகள் பிறக்கும், ஆனால் அதையெல்லாம் மீறி திருட்டுத்தனமாக நானும் வாப்பாவும் உணவகத்திற்குச் சென்று நாங்கள் இருவர் மட்டும் அவரவர்களுக்குப் பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.
அவர்களுடைய அகவை 80 விழாவில் ‘காற்றின் மொழி’ என்ற நூல் ஆசிப் அவருடைய வாப்பாவுக்குத் தந்த இன்ப அதிர்ச்சிகளில் ஒன்று. அந்த நூல் முழுக்க வாப்பாவைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவத்தின் தொகுப்பு இடம்பிடித்தது . (அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாக்கியமும் எனக்கே கிடைத்தது. )
அந்த நூலில் நானும் ‘அன்புள்ள வாப்பாவுக்கு...’ என்று ஒரு பதிவைக் கடிதம் போல் எழுதியிருந்தேன். அந்த நூலை வாசித்து முடித்த பிறகு, அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டையும் மின்னஞ்சலாகத் தந்திருந்தார்கள்.
வாப்பா அக்பராகவும், நான் பேகம் சாஹிபாவாகவும், ஆசிப் சலீமாகவும் மேடையில் ஒப்பனையில்லாமல், நாடகத்திற்கான எந்த ஒத்திகையுமில்லாமல், குரல் மட்டுமே நடிக்க வேண்டும், மகிழ்ச்சி, துயரம், ஆச்சர்யம், அதிர்ச்சி எல்லாம் குரலில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். ஒரு வானொலி நாடகம் எப்படி இருக்க வேண்டுமென்பதை மேடையில் காட்டப் போகிறோம் என்று அதனை மிக நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த நாடகத்தின் பெயர் ’ஆக்ராவின் கண்ணீர்’.
இதே ‘ஆக்ராவின் கண்ணீர்’ நாடகத்தைச் சவூதி மேடையில் திரு. பி.எச். அவர்களுடனும் வாப்பா செய்திருக்கிறார்கள். அதில் அக்பர் ‘லாஹிலாஹா இல்லல்லாஹ்’ என்று மும்முறை வெவ்வேறு குரல் மாறுபாடுகளோடு சொல்லி அவர் மூச்சு நிற்பதான இறுதிக் காட்சியில் நிறைவாக ‘இல்லல்லாஹ்....’ என்று குரல் கம்மி குழறும்போது நம் கண்களில் கண்ணீர் நிறையும்.
கடந்த பத்து நாட்கள் வாப்பா மருத்துவமனையில் இருந்துவிட்டு முன்தினம்தான் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போதும் அழைத்துப் பேச முயற்சி செய்தேன், அங்கு பணி புரிபவர் "வீடியோ காலில் மட்டுமே பார்க்கலாம் பேச இயலாது" என்று சொல்லிவிட்டார். அவர்களுடைய திருமண நாளுக்கும் அவர்களிடம் வாழ்த்துச் சொல்லவில்லை.
நேற்று காலை 6.30 மணிக்கு ஆசிப் அழைத்த போது, அந்தப் பக்கம் ஆசிப்பின் அழுகைக் குரலை மட்டும் வைத்து செய்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
வாப்பா ஓர் அழகான நிறைவான வாழ்க்கையை மிகக் கம்பீரமாக வாழ்ந்துவிட்டார்கள், அவர்கள் படுக்கையில் கிடப்பதையோ துவண்டு போவதையோ நான் விரும்பவில்லை. அதனால் அவர்களின் மறைவு அவர்களுக்கான விடுதலையாகத்தான் நான் பார்க்கிறேன். சென்று வாருங்கள் வாப்பா!! இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்திப்போம்.
நாம் இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம், இந்த உலக வாழ்வை விடச் சிறந்ததைப் பகரமாகத் நமக்குத் தருவானாக. ஆமீன்.!!
No comments:
Post a Comment