இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து செல்ல இயலவில்லை. “படத்தைப் படமாகப் பாரும்மா” எ ன்று அறிவுரை சொல்பவர்கள் வரிசையாக வந்து தலையில் குட்டோ, என்னிடம் திட்டோதான் வாங்குவீர்கள். ஏனென்றால் இது படமல்ல பல பெண்களின் உண்மையான வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையைப் படமாகப் பார்க்கவும் என் போன்றவர்களுக்குப் பொறுமையுமில்லை, மனதில் தெம்புமில்லை. அப்படி என்ன படம் என்றால் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தைப் பார்க்க சொல்லி நண்பர் பரிந்துரைத்தபோது என்ன கதை, யார் நடித்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன்.
40 நிமிடம் முடிந்த பிறகும் ஒரே விதமான காட்சிகள் அலுப்பைத் தந்தாலும் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை அவ்வளவு எளிதில் செரிமானமாவதில்லை.
ஒரு பெண்ணை - இல்லை வேண்டாம் மனைவியை - அடித்துத் துன்புறுத்துவது, குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, கேட்கக் கூசும் வார்த்தைகளால் வசைபாடுவது, அவள் அனுமதியில்லாமல் தொடுவது அல்லது அவளின் உடல்நிலை, மனநிலை தெரியாமல் நெருங்குவது மட்டுமல்ல பெண்ணுக்கெதிரான வன்கொடுமை. அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவளின் அடிப்படை தேவைகளுக்குச் செவிமடுக்காமல், நியாயமான விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவளுக்கான வன்கொடுமைதானென்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் அல்லது ஆண்களால் புரிந்து கொள்ள முடியும்?
தொப்புள்கொடி உறவைத் துண்டித்து மருமகளாக உருமாறும் மருமகளை, மகளாக வேண்டாம் மனுஷியாகவாவது நடத்துகிறார்களா? இல்லை. அவளை மட்டுமல்ல அந்த வீட்டுப் பெண் அதாவது புதுமணப்பெண்ணின் கணவரின் தாயாருக்கும் அந்த வீட்டில் அதே நிலைதான்.
காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழல்கிறார். உணவருந்த வீற்றிருக்கும் ஆண்மகன்களுக்குச் சுடச்சுட தோசை வார்க்கும் பெண்கள் கடைசியில் உண்பதென்னவோ மீந்து விட்ட, காய்ந்த, கரிந்த தோசைதான் என்று உணரும் ஆண்கள் எத்தனை பேர்?
‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தோசையோ சமையலோ அல்லது வீட்டு வேலையோ இங்குப் பிரச்சனையில்லை. மாறாக மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் அதிர்வுகளைக் கேட்பாரில்லை. பெற்ற தாயும் ‘நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாய், இதெல்லாம் பிரச்சனையா?’ என்றுதான் கேட்கிறார். பெண் பார்க்க வரும் போது ஆடத் தெரியும் பாடத்தெரியும் என்றால் புளங்காகிதம் அடையும் குடும்பத்தவர்கள், நடன ஆசிரியராகப் பள்ளிக்குச் செல்ல அவள் விரும்பும்போது, 'அதெல்லாம் நம் குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது' என்றும், உன் மாமியார் முதுகலைப் பட்டதாரி அவளை வேலைக்குச் செல்ல வேண்டாமென்று என் தகப்பனார் சொன்னவுடன் நான் கட்டுப்பட்டேன், இன்று அவள் நல்ல மக்களை வளர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சொல்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் மக்கள் சீரழிந்து போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியும் தானே?
குழந்தைகளைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும்தான் மனைவி தேவைப்படுகிறாளென்றால், அதற்குரிய படிப்பை மட்டும் பெண்களுக்குக் கற்பிக்கலாமே?! படித்த பெண்கள் மனைவியாக வேண்டுமென்று விரும்புபவர்கள் தன் குழந்தையை வளர்ப்பதற்காகவா? உங்கள் மகள்களுக்கும் இதற்காகத்தான் ஓர் ஆண் கல்வியைத் தருகிறானா? எப்போது இவர்கள் யோசிக்கப் போகிறார்கள்?
வீட்டிற்கு வரும் விருந்தாளி தேநீரை குறை சொல்லி, நானும் சமைக்கிறேன் பேர்வழியென்று சமையலறையை ஒரு வழி செய்துவிட்டு, அவள் அடுப்படியில் வேலை இருக்கிறது என்று சொல்லும்போது, "அதைத்தான் நான் முடித்துவிட்டேனே இன்னுமென்ன அங்கு மிச்சமிருக்கிறது?" என்று ஏளனமாகச் சிரிக்கும்போது, அந்த மொட்டைத் தலையில் ஆணியடிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.
’சட்டினியை அம்மியில் அரைக்காமல் மிக்ஸியில் அரைத்தாயா? சரி பரவாயில்லை’ என்று சலுகையைப் போல் சொல்லும் மாமனார், ஆனால் சாப்பாட்டை விறகடுப்பில் வைத்துச் சமைத்தால்தான் சுகமென்றும், துணிகளைக் கைகளில் துவைத்தால்தான் அணிவேனென்றும் புன்முறுவலோடு அன்பொழுகப் பேசுவதும் நமக்குக் கோபத்தை வரவழைத்தாலும், காலையில் எழுந்தவுடன் கையில் 'பிரஸை பேஸ்டோடு' கொண்டு தருவதிலிருந்து, வெளியில் கிளம்பும்போது செருப்பை எடுத்து மாட்டிவிடுவது வரை அவர் மனைவி அவருக்குச் செய்து பழக்கியதாலேயே அந்தக் கலாச்சாரம் அப்படியே தொடர்கிறது. இதெற்கெல்லாம் முழுக்கக் காரணம் வேறு யாருமில்லை - பெண்களேதான்.
மகனை வளர்க்கும்போது அடுப்படி பெண்ணுக்குரியது, வீட்டு வேலை பெண்ணுக்குரியது என்று காட்சிகளாகப் பதியவைத்து வளர்க்கிறாள். தண்ணீர் வேண்டுமென்றாலும் அவனுக்குக் கையில் கொண்டு தருகிறாளே தவிர ‘உன் தேவைகளை நீயே செய்ய வேண்டுமென்று’ வலியுறுத்துவதில்லை. ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டுமென்ற எழுதாத சட்டம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெண்களின் உள்ளாடையை மறைத்தே காய வைக்க வேண்டுமென்றும் அதை மற்ற ஆண்கள் பார்ப்பதே அசிங்மென்றும் சொல்லியே வளர்க்கப்படும் சமுதாயத்தில், ஏன் ஆண்கள் உள்ளாடையைப் போல்தான் பெண்களுக்கும் என்று புரியவைக்கவோ வாதிடவோ யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் எழுதப்படாத சட்டம், இதுதான் காலம் போற்றும் கலாச்சாரம், பதிய வைத்த பண்பாடு. புல்ஷிட்!!
இந்தப் படம் வெறும் சமையலறைக் கலவரத்தையும் ஆணாதிக்கத்தைப் பற்றியும் மட்டும் பறைசாற்றவில்லை. ஒருபடி மேலே சென்று, அரசியலையும் தொட்டுச் செல்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தை உலுக்கிய மதப் பிரச்சனையைப் பேசுகிறது. ஆணாதிக்கத்தால் விளைந்த சபரிமலை பிரச்சினையையும் விவரிக்கிறது.
இந்தப் படத்தில் சில மசாலா தூவிய காட்சிகள்:
* விருந்துக்குச் சென்ற இடத்தில் ஒருவர் புதுமணப் பெண்ணிடம் ‘மாட்டுக் கறி சாப்பிடுவாயா?’ என்று கேட்பார். "வீட்டிலேயே மாட்டுக் கறி சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றதும், ‘இல்லை, வீட்டுக்கு வெளியில் சமைக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே வீட்டில் அதைப் பரிமாறும் காட்சி.
* “மாதவிடாய் என்பதால் உங்களைச் சமையலறையில் அனுமதிப்பதில்லை, ஆனால் எனக்கு மாதவிடாய் இருந்தாலும் நான் மற்றவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறேன். அவர்களுக்குத் தெரியவா போகிறது? தினமும் வேலைக்குச் சென்றால்தான் என் பொழப்போடும்” என்று வீட்டு வேலை செய்பவர் சொல்லும் காட்சி.
* “கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தம்பி கேட்டதும், “ ஏன் நீயே போய் எடுத்துக் குடிக்க முடியாதா? ” என்று தன் வீட்டுச் சாப்பாடு மேசையிலிருக்கும் கோப்பையைத் தட்டி விட்டு , தன் தம்பியிடம் ஆவேசமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி.
இப்படிப் பல காட்சிகள் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். மற்றொரு காட்சியில், கணவரின் சபரிமலை நோன்பின் நடுவில் மாதவிடாயுடன் இருக்கும் மனைவி தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். அந்த ப் பாவத்தை எப்படித் தொலைப்பது என்று குருவிடம் கேட்கும்போது அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டி, மாதவிடாயுள்ள ஒரு பெண்ணைத் தொட்ட பாவத்தை அல்லது தீட்டை விலக்கி தூய்மையாக்குவதற்கான பரிகாரமாக மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது அல்லது மாட்டின் சிறுநீரைக் குடிப்பது என்று பரிகாரம் சொல்கிறார் . அப்படியானால் பெண்ணின் மாதவிடாயைவிட, அவளுடைய உதிரத்தைவிட, அவள் தாய்மைக்கான மாதவிடாய் சுழற்சியைவிட மாட்டு மலமும் சிறுநீரும் தூய்மையானதா?
அரசியல், மதம், ஆணாதிக்கமென்று பலவற்றைப் பேசுவதால்தானோ என்னவோ இந்தப்படத்தை நெட்பிலிக்ஸுக்கு அனுப்பினால் பதிலே வரவில்லையாம், அமேஸான் பிரைமும் இந்தப் படம் அவர்களின் அளவுகோல்களுக்குப் பொருந்தாது என்று பதில் தந்ததாம், கடைசியில் நீஸ்ட்ரீம் ஏற்றுகொண்டதால் படம் வெளிவந்திருக்கிறது.
பெண்ணைப் பற்றிப் படமெடுத்தாலும் அதைப் பற்றிப் பேசினாலும் பலருக்குப் பிரச்சனையாகிவிடுகிறது என்பதில் வியப்பில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால், சாப்பாடு மேசையின் ஒழுங்கின்மை, வேலைக்குப் போக அனுமதிக்காதது, உடலுறவின் போது கணவன் சொல்லும் சுடு சொல், முகநூலில் தோழியின் பதிவைப் பகிர்ந்ததை நீக்கச் சொல்வது என்று எல்லாமும் சிறிய விஷயங்களாகதான் தெரியும். இப்படியான ஏற்ற இறக்கங்களோடு கூடியதுதான் வாழ்க்கை என்றும் தோன்றும்.
பெண்ணுக்குச் சமையல் வேலையும், வீட்டு வேலையும்தானே பொழுதுபோக்கு என்றும் கூடத் தோன்றும்.
வயதான பிறகு ஆணுக்கான அலுவல் ஓய்வு காலத்திலும், அவர் செய்தித்தாள் வசதியாக உட்கார்ந்து வாசிக்க, அவர் மனைவியான மூதாட்டி தேநீரோடு வந்து நிற்பாள். ஆண்மகன் தினமும் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்துவிட்டு அவருடைய வழக்கமான வாழ்க்கைமுறையைத் திருமணத்திற்குப் பின்பும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர முடியும். ஆனால் பெண்ணுக்கு?
அலுவலக வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணுக்கு எல்லாத் தேவைகளையும் வீட்டில் இருப்பவர் செய்து தருகிறார். பெண் அலுவலகத்திற்குச் சென்றாலும் வீட்டுக்கும் வந்து அவள் வேலை தொடர்கிறது. ஆணுக்கு வாரத்திற்கு இரு தினமோ ஒருநாளோ விடுமுறை, பெண்ணுக்கு? இதில் என்னைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம், விதிவிலக்கெல்லாம் விதியாகிவிடுவதில்லையே?! நான் சொகுசாக இருக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் பழங்காலத்து கதை 21-ஆம் நூற்றாண்டில் இதெல்லாம் நடப்பதில்லை என்று பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமென்பது போலப் பிதற்றும் கூட்டம் உள்ளது.
இதற்காகதான் மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் வழங்குவதற்கான திட்டம் பற்றிப் பேசினார். அவர்தான் பல வருடங்களுக்கு முன்பே ‘வேல வேல ஆண்களுக்கும் வேல பெண்களா போனா ஆண்களுக்கும் வேல’ என்று ஓர் ஆண் தன் அலுவலக வேலை முடித்த பிறகு, வீட்டு வேலைகளை மிகக் கச்சிதமாகச் சுலபமாகச் செய்வதைத் தனது ‘அவ்வை சண்முகி’ படத்திலேயே காட்டியவராச்சே. ஆனால் இல்லத்தரசிகளின் வலியோ, அல்லது வீட்டு வேலை பற்றியோ தெரியாத கங்கனா ரணாவத் பணிவிடைகளுக்கு விலையில்லை என்றார். இப்படியான முட்டாள் பெண்களால்தான் இன்னும் பெண்களின் நிலை சாபக்கேடாகவே உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் குடும்பம் என்ற நிறுவனக் கட்டமைப்பின் ஆணாதிக்கத்தை இந்தப் படம் பறைசாற்றுவதால் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் இல்லை. சொற்ப வசனங்கள், எந்தப் பின்னணி இசையுமில்லை, பயன்படுத்திய அத்தனை ஒலிகளும் நம் வீட்டில் அன்றாடம் ஊடுருவும் இசைதான் - தாளிக்கும் ஓசை, காய் நறுக்குதல், வெட்டுதல், வறுப்பது, பாத்திரம் கழுவுதல், வதக்கல், துடைத்தல், துவைத்தல் என்று இதற்குமுன் நாம் செவிமடுக்க மறுத்த அல்லது மறந்த விஷயங்களை இயக்குநர் ஜோ பேபி வேண்டுமென்றே ஒன்றரை மணி நேரப் படமாக்கி மிக நிதானமாக நகரச் செய்து, அடுப்பங்கரையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வைத்துள்ளார்.
கதாபாத்திரத் தேர்வு மிக அருமை. இயக்குநருக்கு நிமிஷா மீது என்ன கோபமோ தெரியவில்லை இப்படி வேலை வாங்கியிருக்கிறார். சூரஜ் மீதும் அவருடைய தந்தையாக வரும் தாத்தா மீதும் நமக்கு வரும் கோபமே அவர்களின் நடிப்புக்குச் சாட்சியாகிறது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உங்கள் பசிக்குத் தீனியோ இல்லையோ உங்கள் சிந்தனைக்கு நிறையவே தீனியளிக்கும்.
No comments:
Post a Comment