Wednesday, February 21, 2007

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன்.

என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் என்றால் என்னது, எப்படி இருக்கும்?" என்று அப்பாவியாக கேட்டாள். ஏனெனில் அவள் ஒரு ஐரோப்பிய லெபனான்காரி. விளக்கம் தரும் முன்பே அவள் "ஓ! அந்தக் கவர்ச்சி உடைதானே?" என்று நக்கலாகச் சிரிக்க. "என்ன சொல்கிறாய்?" என்றேன் ஆச்சர்யமாக. "ஆமாம், ஒரு நீளமான துணியைச் சுற்றிச் சுற்றி எதையுமே மறைக்காமல் கட்டுவீர்களே? அதுதானே!! " என்றாள் மறுபடியும் ஒரு புன்முறுவலுடன். எனக்கு சரியான கோபம், அவள் நமது தேசிய உடையைச் சொல்கிறாள் என்று புரிந்தது, இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு "அதன் பெயர் 'சேலை'. ஆனால் நீ சொல்வது போல் கவர்ச்சியான உடை இல்லையே?!" என்றேன். " இரு. உனக்குக் காட்டுகிறேன்" என்று கூகிளில் தேடினேன். உடன் வந்து விழுந்தது இந்த படம் தான் (விக்கிபீடியாவில்). நொந்து போனேன்.
இத காண்பிச்சா முடிவே கட்டிடுவான்னு தேடித் தேடி ஒரு ஒழுக்கமா புடவை கட்டியிருக்கும் பெண்ணை காண்பித்து தப்பித்துக் கொண்டேன்.


முன்பெல்லாம் 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்ற சொற்களை அடிக்கடி கேட்டிருப்போம் இப்போது அந்த சொற்கள் காணாமலே போச்சு. மற்றவர்கள்தான் அப்படின்னா தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ப்பெண்களும் இப்படித்தானே இருக்கிறார்கள்! சரி இங்கதான் இப்படியென்றால் சென்னையில் இதைவிட படு மோசம். உள்ளாடையை மறைக்கமட்டுமே முதுகில் சின்ன மறைவு, அதுவும் போய் முழுதுமாக திறந்தவெளி ஜன்னல், இறக்கமாக தொப்புள் தெரியும் படி அடுக்கிய சேலை. நம்ம தேசிய உடையே உருமாறி வருகிறது ரொம்ப வருத்தம்தான்.


சரி சேலைதான் அப்படியென்றால் மற்ற உடைகளும் அப்படித்தான் இருக்கிறது.
- இறுக்கமான மேல்சட்டை, புடைத்துக் கொண்டிருப்பதை கண்ணால் அளந்து கொள்ளுங்கள் என்பது போல.
- இறக்கமான கழுத்து வைத்து மேல் கோடு தெரிவது.
- தொப்புள் தெரிய மேல்சட்டையை குட்டையாக அணிவது
- எல்லாம் தெரியும்படி கண்ணாடி உடை அணிவது.
இப்படி 'பேஷன்' என்ற பெயரில் மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அப்படியே மாறி வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஊடகம் மற்றும் திரைப்படங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கு நாம் இடுப்பு தெரிய சேலை கட்டுவது அதாவது வயிற்றைக் காட்டுவது கவர்ச்சி. இலைமறைவாய் காய்மறைவாய் தெரியாமல் மேலே அப்படியே காட்டுவது, தொடை தெரிய கவுன் போடுவது நமக்கு கவர்ச்சி. கேரளாவில் மேல் துண்டு போடாமல் இருப்பது கவர்ச்சியில்லை ஆனால் குட்டைப் பாவாடை போட்டால் கவர்ச்சியாம். இப்படி இடத்திற்கு இடம் வெவ்வேறு உறுப்புகள் கவர்ச்சி.

இதையெல்லாம் விட பெரிய கொடுமை, கீழ் உள்ளாடை தெரிய கால்சட்டையை இறக்கமாகப் போடுவது. உள்ளே 'ஜி' தெரிந்தால் அதிலும் இவர்களுக்குப் பெருமை. முதலில் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என் சக தோழியிடம் உள்ளாடை தெரிகிறது என்று சுட்டிக்காட்டினேன் (சேலையை கவர்ச்சி என்று சொல்லியவள் இல்லை இவள் இந்தியன் தான் ஆனால் இந்தி பேசுபவள்). அதற்கு அவள் "இப்ப இதுதான் பேஷன்" என்று 'பேஷனாக' சொல்லிவிட்டு சரி செய்யாமலே சென்றாள். கருமம் என்று நினைத்துக் கொண்டேன். இப்ப அந்த பேஷனும் போய் இன்னும் கொடுமையான 'பேஷன்', அதாவது கால்சட்டையை ரொம்ப கீழ் இறக்கிப் போட்டு கீழ் கோடு தெரிவது. மேல் கோடு காட்டியது போதாதென்று இப்போது கீழ் கோடு காட்டுகிறார்கள். எங்க போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.
கல்லூரி பெண்களிடம் இப்படி போனால் ஆண்கள் பார்க்காமல் கேலி செய்யாமல் என்ன செய்வார்கள் என்று கேட்டால். 'இப்படி ஆடை உடுப்பது எங்க இஷ்டம் அதில் உங்களுக்கென்ன கஷ்டம், பார்க்காவிட்டால் அவர்களுக்கு இல்லை நஷ்டம்' என்று டி.ரா. பாணியில் பதில் வருகிறது. 'எப்படியும் உடை அணிவோம் மற்றவர்கள் ஏன் பார்க்கிறார்கள். ஆண்கள் மட்டும் மேல் சட்டையில்லாமல், லுங்கியை மடித்து மேலே கட்டுதல் என்று இருக்கலாம், ஆடைகளை எங்கள் விருப்பத்திற்கேற்ப அணியக் கூட சுதந்திரம் இல்லையா?' என்று பெண்ணீயம் பேசும் விதண்டாவாதிகளை ஒன்றும் சொல்வதற்கில்லை.

இன்று என் மகளின் பிறந்தநாள். அவளுக்குச் சென்னையிலிருந்து வாங்கி வந்திருந்த கால்சட்டையும், கையில்லாத மேல் சட்டையும் அணிந்தேன். அந்தக் கால்சட்டை கீழே இறக்கமாக அவள் உள்ளாடை தெரியும் படி இருக்க. நான் ஒழுங்காகப் போட்டுவிட்டேன். அவள் கேட்கிறாள் "ஏன் ம்மா இந்த கால்சட்டை வாங்கினீங்க, ரொம்ப இறக்கமா இருக்கு என் ஜட்டிலாம் தெரியுது" என்று சலித்துக் கொண்டு தூக்கி தூக்கிவிட்டுக் கொண்டாள். அந்த மூன்று வயது சின்ன குழந்தைக்கு இருக்கும் அறிவும் கூச்சமும் துளியாவது 'பேஷன்' என்று அலையும் வளர்ந்த பெண்களுக்கு வராதா?

Monday, February 19, 2007

கைக்கு எட்டியது


அக்கம் பக்கத்து பசங்களுடன் மலிவான மட்டைகள் வாங்கி அதில் கோழியிறகு பூ வைத்து பிரமாதமாக விளையாடுவதாக நினைத்துக் கொள்வேன். அதுதான் டென்னிஸ் என்பதுபோல் பிரம்மையுடன் அது மிக சுலபமான விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். என் அக்காவின் கணவர் ஒரு டென்னிஸ் கோச்சர். அவர்களிடம் எனக்கும் விளையாட ஆர்வம், உங்க மாணவிகளைவிட நல்ல விளையாடுவேன் என்று புருடா விட்டு, அவர்கள் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு என்னையும் அழைத்து செல்ல செய்தேன். அங்கு போய் பார்த்தால் பந்தை வைத்து விளையாடுகிறார்கள். நானும் நல்ல விளையாடுவேன் என்பது போல் மட்டையை எடுத்துக் கொண்டு பந்தை ஒரு தட்டு தட்டினேன், கோட்டுக்கு அந்த பக்கம் போய் விழுந்தது பந்து மட்டுமல்ல மானமும்தான். சரி இது சரிப்படாது தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் உத்தமமென்று இருந்துவிட்டேன். ஆனாலும் பிரபலங்கள் விளையாடும் போது அவங்களை நேரில் பார்கணும்னு எப்பவுமே யோசிச்சதுண்டு.

இப்பதான் துபாய் ஷாப்பிங் ·பெஸ்டிவல் (DSF) என்று அழைக்கப்படும் திருவிழா துபாயில் கோலாகலமாக பிப்ரவரி 2ஆம் தேதி முடிவடைந்தது. இந்த விழாவின் முடிவில் தான் எப்போதுமே சில முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் நிகழும். அதில் மிக முக்கியமானது துபாய் ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி. இன்று 19ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை பெண்களுக்கான ஆட்டமும், பிப்ரவரி 26ஆம் தேதியிலிருந்து மார்ச் 3ஆம் தேதி ஆண்களுக்கான ஆட்டமும் நடக்கவிருக்கிறது.

ஆண்கள் பிரிவில் 32 பேரும் அதாவது 16 இரட்டையர் ஆட்டமும், பெண்கள் பிரிவில் 28 பேர் - 16 இரட்டையர் ஆட்டமும் நடைபெறும். உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெய்னை சேர்ந்த ரஃபேல் நாதல் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் சாம்பியனான ஜஸ்டின் ஹெனினும் கலந்துக் கொள்கிறார்கள்.

துபாய் ஆட்சியாளரும், அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்துமால்தான் இந்த துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அமைக்கப்பட்டு துபாய் டியூட்டி ப்ரீயால் நடத்தப்படுகிறது.

ஏவியேஷன் கிளப்பில் நடக்கும் துபாய் டியூட்டி பிரீ ஆண்கள் ஓபன் டென்னிஸ் 1993ல் தொடங்கியிருந்தாலும் அதிகாரபூர்வமாக 5000 அமர இடம் கொண்ட துபாய் டென்னிஸ் ஸ்டேடியத்தில் துவங்கியதென்னவோ 1996ல் தான். இதற்கான பரிசுத் தொகை $3 மில்லியன். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா $1.5 மில்லியன். மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்கி 7 மணி வரை நீடிக்கும்.

நுழைவுக் கட்டணம் திர்ஹம் 30/-ல் தான் (350 இந்திய ரூபாய்). தொலைக்காட்சியில் இப்ப பார்க்காத டென்னிஸை நேரில் பார்க்க வாய்ப்பிருந்தும் வசயிருந்தும் நேரமில்லை இதுதாங்க கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு சொல்றாங்க போல!

Wednesday, February 14, 2007

அன்பர்கள் தினம்

ல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.

* சொந்த படமாக இருக்க வேண்டும்.
* உங்க படத்தை நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.
* படத்தின் அளவு 4 x 6 ஆக இருக்க வேண்டும்.
* படத்தின் கோப்பு 256KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* அனுப்ப வேண்டிய கடைசி நாள் 'காதலர்கள் தினம்' எப்போது என்று கண்டுபிடித்து அந்த நாளில் சரியாக கிடைக்கும் படி செய்ய வேண்டும்.



சரி விஷயத்திற்கு வருவோம்...

யாரோ 'வாலண்டைன்' என்பவருக்காக பிப்ரவரி 14-ஐ நாம் ஏன் கொண்டாட வேண்டும்? நாள் பார்த்தா காதலிக்க வேண்டும்?

வணிக ரீதியாக, வியாபார ரீதியாகப் பெருகிவிட்ட புது புது தினங்களை மேல்நாட்டவர்கள் கொண்டாடுவார்கள். ஏனெனில் காதலிக்கவும் ஒரு தினம் ஒதுக்கித்தான் செய்வார்கள். அன்னையர் தினத்தில்தான் 'அன்னை' இருப்பதே இவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் உறுதியான அன்புள்ளங்கள் கொண்ட 'இந்தியர்கள்' நமக்கு இது சரிப்படுமா?

உங்களவரை/வளை சந்தித்த அல்லது உங்கள் காதல் கைக்கூடிய அல்லது உங்கள் காதலைத் தெரிவித்து இருவரும் ஒருசேர மலர்ந்த தினத்தை காதலர்கள் தினமாகக் கொண்டாடலாமே?

வியாபார நோக்கமில்லாமல் இலவசமான இந்த வலைப்பூவில் இலவசமாக ஒரு பதிவு. ஹே! இலவசமாக சில படங்களும்.

அப்புறம் இன்னொரு விஷயம் மேலே உள்ள பரிசுப் போட்டி சும்மா 'அல்வா'ங்கோ!








Saturday, February 10, 2007

அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 'டாஷ்' என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைத்திருந்த காலத்தில் காதல் செய்யும் தோழிகளை கெட்ட பெண்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு வள்ளுவர் கோட்டம் போகாமல் ஜகா வாங்கிவிட்டேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலையைக் கண்ட போது விண்ணப்பித்தேன் உள்ளூர் வள்ளுவர் கோட்டம் போக வேண்டுமென்று அது இந்த முறை பயணத்தில் நிறைவேறியது.

வள்ளுவர் கோட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் என் பங்குக்கு:

தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் 'திருக்குறளை' தந்த திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட நினைவகம்தான் வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு ஆளூநர் திரு.கே.கே.ஷா அவர்கள் தலைமையில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பக்ருத்தீன் அலி அகமது அவர்களால் 'வள்ளுவர் கோட்டம்' சென்னையில் திறந்து வைக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் சிற்பத் தேர்:
இது தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் திருக்கோயில் வடிவமைப்பு உடையது. இதன் பீடம் 25 அடி சதுரப் பளிங்கால் அமைந்தது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் இத்தேரை இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.



பெரிதும், சிறியதுமாக பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லாலானவை. பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி பருமன் 2 1/2 அடி. தேரின் அடித்தள அடுக்குகளில் மிக நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. இவை குறிப்பிட்ட குறட்பாக்களின் பொருளை விளக்குகின்றன. திருவள்ளுவர் சிலை உள்ள கருவறை, தரையிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. இது 40 அடி அகலத்தில் எண் கோண வடிவாக அமைந்தது.

அரங்கு குறள் மணிமாடம் மாடி:

அரங்கம்: தொல்பெரும் தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள 'தோரணவாயில்' பார்வையாளர் அனைவரையும் அரங்கத்திற்கு வரவேற்கிறது. தூண்கள் ஏதுமில்லாத இவ்வரங்கத்தின் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்குகளில் இதுவும் ஒன்று. 4000 பேர் நன்கு அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க இயலும். இந்த அரங்கத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் உண்டு. (நாங்கள் சென்றிருந்த போது ஏதோ பருத்தி ஆடைகள் கண்காட்சி மறுதினத்திலிருந்து தொடங்கப் போவதால் ஏதேதோ வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது) அரங்கத்தைச் சுற்றி தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. இதே போல் மேல் மாடியில் ஒரு மைய மாடியில் ஒரு மைய மாடமாகத் தாழ்வாரம் உள்ளது. இதுவே குறள் மணிமாடம்.

குறள் மணிமாடம்: இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன. சில முக்கிய குறள்களை விவரிக்க அழகிய ஓவியங்களும் நிரம்பியிருந்தது. ஆனால் அந்தப் புத்தக வடிவில் பொறிக்கப்பட்டுள்ள குறளின் நடுவில் திருஷ்டிக்காகவா என்று தெரியவில்லை வரிசையாக எல்லா புத்தகத்தின் நடுவிலும் வெற்றிலை சுவைத்துத் துப்பிய கறைதான் இருந்தது.


வேயாமாடம்: திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல கோபுரம் கலசம் ஆகியவற்றைக் காண வேயாமாடம் அமைந்துள்ளது. இதன் நீளம் 220 அடி. அகலம் 100 அடி. இங்கு கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை, மூன்றின் நிழலுருவம் தோன்ற மூன்று நீர் நிலைகள் இருந்திருக்க வேண்டிய இடம் வறண்டு கிடந்தது. '6 மணியாச்சு கிளம்புங்க' என்று பிரம்புடன் வரும் நபரிடம் 'ஒரு நிமிடம்' என்று சொல்லிவிட்டு வேயாமாடத்திற்குச் செல்லும் படிக்கட்டில் அவசரமாக மூச்சிரைக்க ஓடி திருவள்ளுவர் சிலையை தரிசித்துவிட்டு படமும் எடுத்துவிட்டு கீழே வந்துவிட்டேன்.

சுற்றாடல்: சிற்பத்தேர், அரங்குகள் போக சுற்றியுள்ள பகுதியில் அலங்காரத்திற்காக பூஞ்செடிகளும் மற்ற செடிகளும் வைத்திருப்பது ஒரு சின்ன பூங்காவாக காட்சியளிக்கிறது.



இந்த மாதிரியான ஒரு இடம் வெளிநாட்டில் இருந்தால் எவ்வளவு அழகாகப் பராமரிப்பார்கள். எவ்வளவு பாதுக்காப்பாக கவனித்துக் கொள்வார்கள். இந்த இடத்தை வைத்து எத்தனை சுற்றுலா பயணிகளைக் கவரலாம்? அரசாங்கத்திற்கு பராமரிக்க பணமில்லையென்றால் கூட 'அனுமதி இலவசம்' என்றில்லாமல் நுழைவுக் கட்டணம் வைத்து அந்த வருமானத்தில் இன்னும் அழகாக வைத்திருக்கலாமே? ஆசியாவிலேயே பெரிய அரங்கில் ஒன்றான இந்த அரங்கில் எத்தனை பெரிய நிகழ்ச்சிகள் நடத்தி எவ்வளவு அழகாக பராமரித்து இன்னும் பிரமாதமாக வைத்திருக்கலாம்? இப்பவும் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன, மந்திரிகளும் வந்து கலந்து கொள்ளத்தான் செய்கிறார்கள் ஆனால் முழு அக்கறை யாருக்கும் ஏனில்லை? அவ்வளவு பெரிய இடத்தைப் பராமரிக்க, பாதுகாக்க இரண்டே ஆட்கள் போடப்பட்டுள்ளார்கள். 'துப்பாதே' என்று மக்களை விரட்டவே ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு ஆள் வேண்டுமே. நிறைய வருமானம் வரும்படி செய்தால், அதற்கான செலவுகள் செய்யவும் தயக்கமிருக்காதே? அரசாங்கத்தைக் கடிந்தும் குற்றமில்லை நம் மக்களைச் சொல்ல வேண்டும், ஏன் தான் நம் மக்களும் அசுத்தம் செய்கிறார்களோ? எப்படித்தான் திருக்குறள் மீது 'துப்ப' மனசு வருகிறது? சுத்தமாக ஒரு இடமிருந்தால் மத்தியில் துப்ப மனசு வராதுதானே? ஸ்பென்சர் பிளாசா, சிட்டி செண்டர் நடுவில் துப்பவா செய்கிறார்கள்? என்னவொரு பாரபட்சம்.?!!

தமிழக அரசு வள்ளுவர் கோட்டம் பராமரிக்கவென்று ஒதுக்கிய பணத்தை அம்மா ஆட்சியில் வேறெங்கோ ஒதுக்கிவிடுவார்களாம் காரணம் கீழே உள்ள இந்த படம்தான்.

ஆட்சி சண்டையில் தவிப்பது உயிருள்ள மக்கள் மட்டுமல்ல 'திருவள்ளுவரும்தான்'.

சமீபத்திய செய்திப்படி தமிழக அரசு ரூ.60 லட்சத்தை வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க ஒதுக்கியுள்ளார்கள். பணம் கொட்டிப் புதுப்பித்த பிறகாவது மறுபடியும் நாசமாகாமல் பராமரிக்கிறார்களா என்று பார்ப்போம்.

Wednesday, February 07, 2007

ஒரு மாலையும் சொதப்பல் சந்திப்பும்

சென்னை பயணம் இனிதாக நிறைவாக அமைந்தது. முப்பது நாள் செல்லும் பயணமெல்லாம் அம்மா வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்குமே மாற்றி மாற்றி போய் கொண்டு கடைசியில் எங்கும் ஒழுங்காக இல்லாத உணர்வோடு துபாய் வந்து சேருவேன். இந்த முறை அப்படியில்லாமல், 10 நாட்கள் விடுமுறையில் வந்த நான், ஹஜ்ஜிலிருந்து திரும்பி வந்த பெற்றோர்களையும் பார்த்துச் செல்வதற்காக விடுமுறையை 15 நாட்களாக நீட்டித்துக் கொண்டு நிறைவான பயணமாக மாற்றிக் கொண்டேன்.


வயோதிகர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்று பார்க்கக் கடமைப்பட்ட எல்லாவரையும் பார்த்தது போக நெருங்கிய பந்தத்தின் திருமணத்தில் கலந்துகொண்டு எல்லா சொந்தங்களையும் ஒருசேர பார்த்து மகிழ்ந்து, ஊரையும் கொஞ்சம் சுற்றுகிறேன் பேர்வழியாக கடற்கரை, வள்ளுவர் கோட்டம், ராயல் சர்க்கஸ், இரண்டு திரையரங்குகள் (அபிராமியில் 'போக்கிரி',பிரார்த்தனாவில் 'தாமிரபரணி'), போத்தீஸ் என்று எல்லா பக்கமும் சுற்றி திரிந்தாச்சு.


இந்த சிறு விடுமுறையிலும் ஒருநாள் 'பெண் எழுத்தாளர்கள் சந்திப்பு' என்று 26ந் தேதி 3.30க்கு ஒதுக்கி வைத்தேன். தெரிந்தவர்கள் போக அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் சந்திக்க ஆவலாக இருந்து, துபாயிலிருந்து கிளம்பும் முன்பே கிட்டத்தட்ட 10 பேரை வருகிறேன், முயற்சிக்கிறேன் என்று எழுதவைத்து, ஏற்பாடுகளும் செய்திருந்தேன். சென்னை சேர்ந்த பிறகும் எல்லோரையும் அழைத்துப் பேசி நேரடியாக 'சரி' என்று வாங்கிக் கொண்டேன். நான்கு வலைப்பதிவர்கள், ஒரு கவிதாயினி, மூன்று சமூக ஆர்வலர்கள், மூன்று ஊடக மற்றும் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து வெவ்வேறு துறையில் பெண்களுக்கு உண்டான பிரச்னைகளையும், பெண்ணீயம் பற்றி பேசவும், பலதரப்பட்ட விஷயங்களின் கருத்தாடலாகவும் அமையும் என்று பெரிய பெரிய கற்பனையெல்லாம் செய்து 25ஆம் தேதி நினைவுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்து மறுநாள் சந்திப்புக்குக் காத்திருந்தேன்.


வழி கேட்டு முதல் அழைப்பாக அருணா ஸ்ரீனிவாசன். பிறகு சரியாகக் கண்டுபிடித்து வந்து சேர்ந்ததும் பேசத் துவங்கினோம். கொஞ்ச நேரத்தில் நிர்மலாவும் அவர்களைத் தொடர்ந்து வைகை செல்வியும் வந்து சேர்ந்தார்கள். 'திசைகளின்' தற்போதைய நிலவரம் குறித்து பேசத் தொடங்கி விரைவில் 'திசைகள்' தொடரும் என்ற நல்ல செய்தியோடு, வலைப்பூவில் நடக்கும் விஷயங்களைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் பேசி நொந்து கொண்டோம். வைகை செல்விக்கு வலைப்பூ பற்றி சுருக்கமாக விளக்கினார் நிர்மலா.


அருணா, வலைப்பூ ஆரம்பித்த காலங்களைப் பற்றியும், ஒருங்குறிக்கு முன்னால் வலைப்பூ இருந்த நிலவரம், மறுமொழி மட்டுறுத்துவதற்கு முன்னால் இருந்த நிலைப்பாடு, பயமுறுத்தும்/ அருவெறுப்பூட்டும் மறுமொழிகள் வந்த அனுபவம், தமிழ்மணத்தில் ஒரு பதிவைப் பற்றி புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாத தொழில்நுட்ப சிரமங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். வெளிப்படையாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார்கள்.


தமிழ்மணம் தேன்கூடு தளங்கள் எல்லா வலைப்பூவையும் சேகரிக்கும் நிரலிதானே தவிர இதை வெளியிடலாம் வேண்டாம் என்று வடிக்கட்ட முடியாத தொழில்நுட்ப அவலம் இருக்கத்தான் செய்கிறது. Spam filter போல் ஏதாவது செய்ய வேண்டும், அமீரகத்தில் நிறைய வலைத்தளங்கள் சேவை வழங்குனர்களால் 'தடை' செய்யப்படுவது போல் தமிழ்மணமும் தேன்கூடும் தடை செய்ய ஆரம்பித்தால், மக்களும் நமது வலைப்பூவை தடை செய்துவிடுவார்களோ என்று பயந்து ஒழுங்காக எழுத ஆரம்பித்து விடுவார்கள். கருத்துச் சுதந்திரம் என்று கண்டபடி எழுத சுதந்திரம் கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தடிசாக்கில் நான் சொன்னேன். அதே போல் பெண் வலைப்பதிவாளர்கள் புகைப்படம் போட்டால் சில அபாயம் இருப்பதாக அறிந்து நீக்கிவிட்டதையும் சொன்னேன். அதற்கு நிர்மலா 'இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்று. ஆண்கள் அவர்கள் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் சுதந்திரமாக. ஆனால் பெண்கள் படம் போட்டால் கூட பயப்பட வேண்டி இருக்கு' என்று வலையுலக நிலவரத்தைக் குறித்து வேதனைப்பட்டார்கள்.


நிர்மலா, வலைப்பூவை தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்து கடிந்து கொண்டார்கள். தேவையில்லாத குப்பைகளுக்கு நடுவே அவர்கள் எழுதியது வரும் போது இது தேவையா நமக்கு, தமிழ்மணத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போதெல்லாம் வளர்த்துவிட்ட ஏணியை விரட்டியடிக்க மனமில்லை என்று கவலைப்பட்டார்கள். (நிர்மலா முகத்தில் ஓடும் ரேகையை வைத்து அவர்கள் மனம் படித்து, அழைத்து பேசி, என்னைப் போலவே உங்களுக்கும் பெரிய ஏமாற்றம்தானே என்று கேட்டேன். 'அடடா, அப்படியே என் முகம் காட்டிக் கொடுத்துவிட்டதா' என்று உண்மையை ஒப்புக் கொண்டார்கள்).


வைகை செல்வி, பெண்ணாக ஒரு அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள். பெண் என்பதால் ஏற்படும் அலட்சியத்தையும், இப்போதெல்லாம் நிறைய வாசிக்க எழுத முடியவில்லை, காரணம் வேலைப் பளு என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் சுற்றுப்புறச் சூழல் பிரிவில் இருப்பதால் அது தொடர்பான 'வானகமே வையகமே' இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழை எல்லோருக்கும் தந்தார்கள். அது அவர்கள் தொழில் ரீதியான பத்திரிக்கை. நிறைய பேர் வருவார்கள் என்று நிறைய பிரதி எடுத்து வந்திருந்தார்கள்.


நால்வருக்குமே நிறைய பேர் கலந்து கொள்ளாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொருவரையாக அழைத்தேன் யாரும் பதிலளிக்கவில்லை. பொன்ஸ் சாவகாசமாக எடுத்து 'ஹலோ ஜெஸிலாவா, எங்க வீட்டுல உறவினர்களெல்லாம் வந்துவிட்டார்கள், சொல்லனும்னு நினச்சேன்...' என்று இழுத்தார்கள். 'ஆமா, தமிழ்நதி என்னாச்சு' என்றேன். 'அவங்க நேற்றே வரமுடியாதுன்னு என்கிட்ட சொன்னார்கள் நான்தான் சொல்ல மறந்துட்டேன்' என்று அலட்சிய பதில் தந்தார்கள். அழைக்கத்தான் முடியவில்லை ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பியிருக்கலாம் என்று நான் கடிந்து கொண்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன். "பெண்கள் பெரும்பாலும் 'professional'களாக நடந்து கொள்வதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்" என்றார்கள் நிர்மலா.


மதுமிதா சென்னையில் இல்லாததால் மிகுந்த ஆர்வமிருந்தும் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்தியதோடு மட்டுமில்லாமல், சந்திப்பு முடிந்த பிறகும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் விசாரித்தார்கள்.


பொது இடத்தில் கூட்டம் வைக்காததும், நிறைய 'அஜெண்டா' வைத்திருந்ததும்தான் பெரும்பாலானவர்கள் வரத் தவறியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 'ரொம்ப சீரியஸான கூட்டம் போல' என்று பலரும் நினைத்திருக்கலாம். இதற்காகவா அவ்வளவு தூரம் போக வேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். பெண்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாக வருவார்கள் என்றெல்லாம் பெரிதாகக் கற்பனை செய்தது என் தவறுதான். எழுத்தாளர்கள், பதிவர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரையும் அவியல் போல அழைத்தது கூட நிறைய பேர் வராமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். சிலருக்கு நிஜமாகவே காரணங்கள் இருந்திருக்கலாம் எது எப்படியோ வரமுடியாததை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் எதிர்பார்ப்பால் 'பெரிய' ஏமாற்றம் இருந்திருக்காது.


இந்த கெட்ட அனுபவத்தால் அடுத்த முறை கண்டிப்பாக எல்லா பதிவர்களையும் சந்திப்பது என்று முடிவுசெய்துவிட்டேன். பெண்கள் வேஸ்ட். அதற்காக ஆண்கள் பெஸ்ட் என்று சொல்லமாட்டேன்.

Thursday, January 11, 2007

சென்னையில் பெண் பதிவாளர்கள் சந்திப்பு...

வலைப்பூவில் சிக்கி கிடக்கும் பூவைகளே நாமும் ஒரு மாநாடு கண்டால் என்ன?

நான் சென்னைக்கு வரும் 18ந் தேதி வருகிறேன், பத்து நாட்கள் விடுமுறையில். பெண் எழுத்தாளர்கள் மற்றும் பெண் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன், நட்பு ரீதியாக மட்டுமே. சென்னையில் பெண் வலைப்பதிவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாததாலேயே இந்த பொது அறிவிப்பு. இல்லையெனில் தனி மடல் அனுப்பியிருப்பேன். விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும் எங்கள் இல்லத்திலேயே சந்திக்கலாம், வெள்ளி அல்லது சனிக்கிழமையில் (26, 27).

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்.

குறிப்பு: ஆண்களை இந்த ஆட்டத்திற்கு சேர்த்துக்க போவதில்லை.

Saturday, December 30, 2006

தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்:

http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=



1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின்

தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார்.

148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல

ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?

இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண தண்டனை கொடுத்து கொண்டாடுகிறார்கள் காட்டுமிராண்டிகள்.

சதாமின் அழிவு முடிவா? இல்லை ஆரம்பமா? காலம்தான் பதில் சொல்லும்.

Friday, December 29, 2006

சிம்ரனுக்கொரு நியாயம் ரஜினிக்கொரு நியாயமா?

சந்திரமுகியில் வாய்ப்பு புட்டுக்கிச்சு, அப்போ சிம்ரன் கர்ப்பமா இருந்தது காரணம். வயிற்றில் புள்ளய வச்சிக்கிட்டு 'ரா.. ரா..' ஆடியிருந்தால் ஜோதிகா ஆடின 'அந்த' ஆட்டம் வந்திருக்குமா? இப்ப சிம்ரனுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருஷமாகிறதாம், மீண்டும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ருசி கண்ட பூனையாச்சே அவ்வளவு லேசில் திரைத்துறையை விட்டு போக முடியுமா?

அதனால்தான் மீண்டும் திரைதுறைக்கு வந்துவிட்டார். விளம்பரங்களில் வலம் வருபவரை இயக்குநர்கள் அணுகி தாரளமாக அக்கா, அண்ணி, அம்மாவாக நடிக்க நிறைய வாய்ப்புக்கள் தருகிறார்களாம்.

பேரன் கண்ட பிறகும் ரஜினி கதாநாயகனாக வருவார் நாம் பார்க்க வேண்டும். பூசணிக்காய் உடம்பை வைத்துக் கொண்டு சின்னஞ்சிறுசுகளுடன் கைக்கோர்த்து ஆடுவார் விஜயகாந்த் பார்த்துத் தொலைக்க வேண்டும். கமலுக்கு இன்றும் இரண்டு ஜோடிகள் கேட்கிறது. சரத்குமார் முகத்தில் பல சுருக்கம் வந்த பிறகும் நாயகிகளுடன் மரத்திற்கு மரம் மாறி கண்ணாமூச்சி விளையாடுவார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்ம கதாநாயகிகள் திருமணமாகி ஒரு குழந்தைப் பெற்றுவிட்டால் அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கிறது. என்ன அநியாயம். ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா? இன்று நேற்றல்ல காலகாலமாக நடந்து வரும் அநியாயம்தான் இது. 'பராசக்தி'யில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பண்டரிபாய், 'அன்னையின் ஆணை'யில், இன்னும் பல படங்களில் சிவாஜிக்கு தாயாக நடித்திருக்கிறார். இதே கொடுமையைதான் ரஜினி செய்தார், 'எங்கயோ கேட்ட குரலில்' மீனா மகளாக நடித்து விட்டு, 'வீரா', 'முத்து' படங்களில் ரஜனிக்கு ஜோடியாக வந்தார். ஆண் ரசிகர்களுக்கு எப்பவுமே பார்க்க புதுசு புதுசாக தினுசு தினுசாக இளமை துள்ளும் கதாநாயகிகள் வேண்டும் போலும். ஆண் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் இப்படிப்பட்ட கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். பாவம் சபிக்கப்பட்ட கதாநாயகிகள்.

இந்த வரிசையில் சிம்ரன் தனி இரகம்தான். அணுகிய இயக்குநர்களுக்கு பதிலடியாக 'இன்னும் இளமை துடிப்பில்தான் இருக்கிறேன், கதாநாயகி வேடமென்றால் வாங்க, இல்லாட்டி சோலியப் பார்த்துக்கிட்டு போங்க' என்று சொல்லிவிட்டாராம். பிடிவாதத்திலும் ஒரு அர்த்தமிருந்திருக்கிறது, இப்போது தெலுங்கில் இரட்டை வேடம் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் இயக்குநர் ஓ.வி.எஸ். சவுத்ரி. படத்தின் பெயர் 'ஒக்கமகடு', ஜோடியாக பாலகிருஷ்ணா.

Wednesday, December 27, 2006

ஐஸ்வர்யா ராயின் முதல் கணவர்...

முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சல்மான் கான், விவேக் ஓப்ராய், அபிஷேக் பச்சன் என்று பலருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவருடைய முதல் கணவர் யார் என்பதை அறிந்து திடுக்கிட்டேன்.

வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மங்களூர் அருகில் உள்ள மங்கல்பாடியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் சுவாமியின் அறிவுரையின் பேரில்தான் இந்தக் கல்யாணம் நடந்ததாம். ஹரிவன்ஷ்ராய் பச்சனின் 99-ம் பிறந்தநாளையொட்டி வாரனாசியில் நடந்த பூஜையின் போது ஐஸ்- அபிஷேக்கின் இடது புறம் இருந்ததை வைத்துத்தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று புரளிகள் கிளம்பியது. ஆனால் ஐஸ்வர்யாவின் மாங்கல்ய தோஷம் காரணமாகவும், பிற தோஷங்களின் ஆதிக்கம் இருந்ததாலும் அவர்களது திருமணம் இந்த ஆண்டின் (2006) கூட்டுத்தொகை 8 என்பதாலும் அவர்களது திருமணம் 2007-ல் மகர சங்கராந்திக்குப் பிறகு ஜனவரி 14-க்கும் பிப்ரவரி 27-ம் தேதிக்கும் இடையில் நடைபெறலாம் என்று அந்த ஜோசியரே சொல்லியிருக்கிறார்.

இவரது அறிவுரையின் பேரில்தான் தோஷம் நீங்க ஐஸ்வர்யா ராயுக்கும் வாழை மரத்திற்கும் திருமணம் நடந்ததாம்.

எனது கேள்வியெல்லாம்:

1) இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மூடப்பழக்கத்திற்கு எப்படி துணைப் போக முடிந்தது ஐஸ்வர்யாவினால்?

2) அப்படியானால் அழகிப் போட்டிகளில் அறிவுக்கும் வேலை உண்டு என்பது வெறும் கண்துடைப்புதானா?

எப்படியோ அந்த வாழை மரம் அதிர்ஷ்டசாலி என்று பல ஆண்கள் வெதும்பினாலும் ஒரு முட்டாள் பெண்ணை மணந்த துயரமே மிஞ்சும் அந்த வாழை மரத்திற்கு என்பது என் கணிப்பு.

Sunday, December 24, 2006

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006

சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின பத்திரிக்கை 'தினத்தந்தி' சவுதி அரேபியாவில் துபாய் இருப்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைப்பிலேயே தவறு. தெரிந்த தவறு ஒன்று தெரியாதது எத்தனையோ?

செய்தி: // சிகிச்சை கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணின் குழந்தை பிணைக்கைதியாக சிறைவைப்பு துபாய் ஆஸ்பத்திரியில் மனிதாபிமானமற்ற சம்பவம்

துபாய், டிச. 24-

கட்டண பாக்கிக்காக இந்திய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை துபாய் ஆஸ்பத்திரி பிணைக் கைதி போல பிடித்து வைத்துள்ளது.

இந்திய பெண் குழந்தை.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ரெஹ்னா. ஆந்திர மாநில ஐதராபாத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தாகிர் அக்ரம் முகமது (வயது 35). இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்........

Thursday, December 21, 2006

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க.

கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' என்றார் (பட்டிமன்றம்தான் உட்கார்ந்து பேசுவாங்களா? - லியோனி உட்கார்ந்துதானே தீர்ப்பு சொல்வார், நாங்களும் தான் உட்கார்ந்து கொண்டே பாடுவோம் என்பது போல்). போட்டாச்சு உட்கார்ந்து பாடினார்கள் நாலு பேரும் சேர்ந்து மாறி மாறி பாட்டு 'மாரி' பொழிந்தார்கள்.

அதன் பிறகு கங்கை அமரன் சொன்னார், "நீங்க நுழைவு கட்டிணமெல்லாம் வைக்காம எப்படி இலவசமா இந்த நிகழ்ச்சிய நடத்துறீங்களோ அதே மாதிரிதான் நாங்களும் ஒரு பைசா வாங்காம வந்திக்கோம்" என்றார். (நான் உடனே எங்க குடும்பத்தினரிடம் சொன்னேன் எல்லோரும் சேர்ந்து அண்ணனுக்கு ஒரு 'ஓ' போடலாமென்று, 'ஓ' போட்டு கைத்தட்டினோம்.) பிறகு எஸ்.பி.பி. சரணை அழைத்தார், அவரிடம் "என்ன சரண் எத்தன கிலோ பையோட வந்தீங்க இப்ப எத்தன கிலோ பையோட ஊர் போகப் போறீங்க" என்றார், சரண் சொன்னார் "காசு வாங்காம நிகழ்ச்சி நடத்துறதால ஒண்ணும் வாங்கல, வாங்க காசுமில்ல" என்று. (பார்க்கவே பாவமாக இருந்தது). க.அமரன் தொடர்ந்து "சரண் காசில்லன்னா என்ன கடன் அட்டை வச்சிருப்பீங்களே தேய்க்க வேண்டியது தானே" என்று வம்பிழுத்தார். பாவம் சரண் "செலவாகிடும்னு வீட்டிலேயே வச்சிட்டு வந்திட்டேன்" என்றார். (நாங்களே ஒரு பதினோரு உருப்படி எங்க குடும்பதிலிருந்து போயிருந்தோம். அதனால் சொன்னேன் காசு வாங்காம வந்திருக்காங்க கடைசி வரை இருந்து கையையாச்சும் தட்டிட்டு போவோம்ன்னு). நிகழ்ச்சியில் சில பாடல் மட்டுமே முழுமையாக பாடினார்கள். மற்றவையெல்லாம் தொடர் பாட்டுதான். அப்புறம் நேயர் விருப்பம் தந்தார்கள். விரும்பிய பாடல் நான்கு வரி பல்லவி மட்டும். நான் விரும்பி கேட்டேன் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' மாயாவி படத்திலிருந்து. பாடினார் சரண். இப்படியே நிகழ்ச்சி பன்னிரெண்டு மணி வரை நடந்தது.

அதற்கு மறு வாரம் 'துபாய் தமிழ் சங்கம்' உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. விழாவைப் பற்றியும், அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். குறையாக முதலில் பேசியவர் என்னைப் போலவே கங்கை அமரன் மற்றும் குழுவினருக்கு எந்த கட்டணமும் தராமலிருந்தது குறித்து வருத்தப்பட்டார். அவருக்கு அமைப்பிலிருந்து அல்லது உறுப்பினர்கள் சேர்ந்தாவது ஏதாவது பணம் தந்திருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அமைப்பின் தலைவர் சபேசன் விளக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் புரிந்தது கங்கை அமரன் மற்றும் குழுவினர்கள் காசு வாங்கியிருக்கிறார்கள். அந்த ஒப்பந்த காகிதங்களையும், பணம் பெற்றுக் கொண்ட கையெழுத்துக்களையும் காட்டினார்கள். அதிர்ந்து போய் விட்டோம். பின்ன ஏன் அவர்கள் அப்படி பேசினார்கள் என்று கேள்வி வந்தது. தலைவர் சபேசன் சொன்னார் "அவங்க சின்னப்புள்ளதனமா நடந்துக்கிட்டாங்க அதற்கு நாம் என்ன செய்ய முடியுமென்று" வருத்தப்பட்டார்.

என்னா ஆளுய்யா இந்த கங்கை அமரன்?? என்னை டபாச்சா மாதிரி இத்தனை நூறு பேர்களை நம்பவச்சிட்டார். இப்ப சொல்லுங்க கங்கை அமரன் அரசியலுக்கு வர தகுதிப் பெற்றுவிட்டார்தானே?!

Wednesday, December 20, 2006

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.

'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! நான் வீட்டிலிருந்து கொண்டு வந்தாச்சு'ன்னு தட்டிக்கழிச்சிட்டேன். ஆனா மத்த வெள்ளக்காரருங்க ('வெள்ளக்காரன்'னா கொஞ்சம் மரியாத கொறவா இருக்கும் அதான்) எல்லாம் 'வேணும் வேணும்'னாங்க. அவளும் 10 திர்ஹம்ஸ் (அதாவது 130 ரூபாய்) ஆகும் என்று எல்லோரிடமும் வசூலித்தாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் கொடுத்தார்கள் எல்லோரும் அவ ஊருக்காரங்கதான் (வெள்ளக்காரரருங்க), கீழ் கடையில் போயி மூணு ரூபாய்க்கு (ரூபான்னா திர்ஹம் என்று பொருள் கொள்க, அப்படி சொல்லி இருபது வருஷத்திற்கு மேல பழக்கமாயிடுச்சில்ல) ரொட்டி வாங்கி, 5 ரூபாய்க்கு மயூனைஸ் வாங்கி, சில காய்கறிகளும் வாங்கி, மொத்தத்தில் வெறும் 15 திர்ஹம் மட்டும் செலவழிச்சி பொருள் வாங்கி வந்து ரொட்டிய வெட்டி சாண்ட்விச், அதில் மயூ தடவி, காய்களை உள்ளே அடுக்கி போட்டுக் கொடுத்தாள். சாப்பிட ஆரம்பித்தார்கள். அவளும் "எப்படி இருக்கு சுவை" என்று ஸ்டைலாக கேட்க, ஒருவர் "'ம்ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு, எப்படி செஞ்சீங்க" (சமையல் குறிப்பு வேறையான்னு நினச்சிக்கிட்டேன்). இன்னொருவர் "ரொம்ப சிரமமெடுத்து செஞ்சது போலிருக்கு, சுவை நல்லா இருக்கு" (கஷ்டகாலண்டா சாமி! ). இப்படி ஒவ்வொருவரும் 'ஆஹா' 'ஓஹோ' பிரமாதம்ன்னு சாப்பிடுறாங்க (சில கவிதைகளை புரியாமே இரசிக்கிற சில பேர் மாதிரி). இவள் பதிலுக்கு "பின்ன சுவையாகத்தானே இருக்கும், அன்போடு பரிமாறியதல்லவா" என்றாள் அடக்கமாக. எனக்கு சிரிப்பு தாங்கல. என்னைப் போலவே வீட்டிலிருந்து கொண்டு வந்தவன் நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று முணுமுணுத்தான்.

இந்த கேண கிறுக்கனுங்க (முட்டாள்கள் ஆகிவிட்ட பின்பு இவர்களுக்கு மரியாதை எதக்கு?) அத சும்மா சாப்பிட்டு போகம என்னைப் பார்த்து 'இந்த இந்தியர்கள் நீங்கள் எப்படித்தான் தினமும் சோறும் கறியும் சாப்பிடுகிறீர்கள் ரொம்ப செலவாகவில்லையா?' என்று கேட்டுவைக்க. நானும் உடனே "நாங்க வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம், இங்க வந்து வாங்குவதில்லை என்று அப்பாவியாக பதில் சொன்னதில் உள்ள சூசகத்தையும் மரமண்டைகளுக்கு புரியவில்லை. இவர்கள் ஏமாந்தார்களா அல்லது அவள் சாமார்த்தியசாலியான்னு நீங்களே சொல்லுங்க.

Tuesday, December 19, 2006

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:

அடித்தே இன்புறுகிறாய்
நல்ல விஷயமோ
கெட்ட விஷயமோ
வாழ்க்கையின் ஆரம்பமோ
வாழ்க்கையின் முடிவோ
அடிக்காமல் அடங்காதா
விசேஷம்?
இருக்கும் போதுதானென்றால்
இறந்த பிறகுமா?

Sunday, December 17, 2006

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்து
எழுதும் போதும்

ஆபாச படத்தை
பார்க்க கூடாத வயதில்
பார்க்கத் துணிந்த போதும்

கல்லூரி மறந்து
ஊர் சுற்றும் போதும்

சுருட்டு, மது, மாது
என்ற போதும்

காதலியுடன்
ஓடிப் போக நினைக்கையிலும்

தடுத்து நிறுத்தி
எடுத்துரைக்காமலிருக்க
முடியவில்லை என்னால்

உளியாகத்தான் எனை
நினைத்திருந்தேன்
உடைப்பேன் நட்பையென்று
அறியாமல்

Thursday, November 30, 2006

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா
படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
வரிகள்: வாலி

படத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும்.

சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு தோன்றும், சில பாடலால் சந்தோஷம், சில பாடலால் பயம், சில பாடலால் மன சஞ்சலம், சில பாடலால் பல பழைய நினைவுகள், சில பாடலை கேட்டவுடன் நம்மை அறியாமல் வார்த்தைகள் நம் உதட்டில் ஒட்டிக் கொண்டு அதையே முணுமுணுத்துக் கொண்டும் இருப்போம். சில பாடல் அதில் வரும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து தரும். ஒரு பாடலை பிடிக்க பல காரணங்கள் பல பேருக்கு இருப்பினும், ஒரு பாடலை பிடித்து போக முதல் காரணம் அதிலுள்ள ரம்யமான இசை இணைந்த எளிமையான கவிதை வரிகள்தான் என்பது என் கருத்து.

ஏ.ஆர்.ஆரின் பாடல் எப்போதுமே கேட்க கேட்கதான் இனிக்கும். கேட்டவுடனே பிடித்து போகாது. பல முறை காதில் ஒலித்த பிறகே உதடுகள் உச்சரிக்க தொடங்கும். அப்படி மெல்ல மெல்ல வந்து மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலில் 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் தற்போதையது. நல்ல மெல்லிசை, ஸ்ரேயா கோஷுக்கு தமிழ் பாடம் எடுத்துப் பாட வைத்த பாடல் என்று தோன்றுமளவுக்கு மிக உணர்ந்து பாடியது போல இருக்கிறது அவரது குரலில் தெரியும் உணர்வுகள். ஆனால் இந்த உணர்வுபூர்வமான விசயத்தை திரையில் பூமிகாவின் முகத்தில் துளியும் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமே.


முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?

தன் தலையை தானே தட்டிக் கொண்டு நானா என்று கேட்டிருப்பது அந்த வரிகளின் அழுத்தம் ஒலிக்கும் அளவுக்கு உணர்வுகள் இல்லாமல் ரொம்ப லேசாக, விளையாட்டாக உச்சரித்திருப்பது போல் உள்ளது பூமிகாவின் நடிப்பு.

நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..

ஷ்ரேயா எந்த கஷ்டமும்படாமல் சுலபமாக பாடியிருப்பதாகவே தோன்றுகிறது பாடலை கேட்கும் போது. ஆனால் குரலில் அந்த நுணுகங்களை கொண்டுவர ரகுமான் எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார், புரியவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரென்று ஷ்ரேயாவையும் ஏ.ஆர்.ஆரையும் கேட்டால்தான் தெரியும்.

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த ஆ.... ஆ... ஹாஹா...


குழுவினர் பாடும் இந்த ரங்கோலி இடம் இனிமை. வானவில் கீழ் வந்து ஒரு சுற்று சுற்றுவதும், பாட்டில் வரும் இயற்கை சூழலும் நன்றாக வந்திருக்கிறது. பூமிகா கால்பந்தாட்ட திடலுக்கு வந்து குலுங்கி ஆடுவது அழகு, டைரி மில்க் விளம்பரத்தை நினைவுப்படுத்துகிறது.

பூவைத்தாய் பூவைத்தாய்
நீ பூவைக்கோர் பூவைத்தாய்
மன பூவைத்து பூவைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஹோ..

தேனீ நீ மழையில் ஆட
நான் மான்தான் நனைந்து வாட
என் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஹோ

வாழும் ஒரு சில நாளும்
கனி என ஆனால் தருவேன் என்னை..ம்

-இந்த வரிகள் எத்தனை முறைக் கேட்டும் சரியாக விளங்கவில்லை

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..ஆ

நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நான் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமாஆஆ

அருமையான உவமை வரிகள். நிலவை வைத்துக் கொண்டு கவிஞர்கள் என்னமா எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணம். இந்த இடத்தில் பூமிகாவின் கண்களை நெருக்கமாக காட்டியிருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.

தேன் மலை தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமோஓஓஒ

இந்த இடத்தில் தவறாமல் சாய்ந்துவிட்டார் பூமிகா சூர்யா தோள் மீது

நீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்திடலாம்..

முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..
நான்..நானா கேட்டேன்..என்னை நானே..?
நான்..நீயா..நெஞ்சம் சொன்னதே..!
முன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..
முன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த
(2 முறை)


சூர்யா - பூமிகா காதல் ஜோடியின் நெருக்கத்தை இந்த ஒரு பாடலில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் என்.கிருஷ்ணன்.

ஏ.ஆர்.ஆரின் மெல்லிசை, ஷ்ரேயாவின் குரல் வளம், வாலியின் வரிகள், எனக்கு பிடித்த சூர்யா எல்லாம் கலந்து மனதில் நிற்கும் பாடல். பாடலை கேளுங்கள் பார்த்தால் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கு ;-)

பாடலை பார்க்க:


பாடலை கேட்க:
முன்பே வா.. பாடலை இறக்க

Sunday, October 15, 2006

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.


மாதம் முழுவதும்
சிறை பிடித்து
சாகும் நிலையில்
ஆலிவ் இலை தந்து
திறந்து விட்டு
பறக்க செய்து
கைத்தட்டி
இனிப்பு வழங்கி
கொண்டாடினர்
சுதந்திர தினம்

Saturday, September 09, 2006

உளமாற நேசிக்கிறேன்

எதையாவது எழுதலாமென்றால் யோசிக்காமல் நினைத்ததை எழுதி வைக்கிறோம் அதுவே நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி எழுத ஏனோ தயக்கம் வரத்தான் செய்கிறது. இப்படி, நான் 'எழுதலாமா வேண்டாமா?' என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர் சொன்னார் "என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க" என்று கேட்டது 'சுறுக்'கென்றது. சரிதான் என்று பட்டதும் எழுதலாமென்றால் எங்கே நேரம்?

நேரம் கிடைத்தால்தானே?! நேரம் இருந்த போது எழுதலாமா?ன்னு யோசிச்சேன், எழுதலான்னு நினைக்கும் போது நேரமே இல்ல. கல்லைக் கண்டா நாயக்காணோம், நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஆகிப் போச்சு கத. எது நாய், எது கல் என்ற ஆராய்ச்சி வேண்டாம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பு தொடங்கி மூன்று மாதங்களாக செயல்பட்டுவந்தாலும், அமைப்பை முறைப்படி துவங்கி வைக்க முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போது அவர் துவக்க விழாவிற்கு கொடுத்த தேதி செப்டம்பர் 7. கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் நேற்று காலை முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா தலைமையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் முன்னிலையில், 'நக்கீரன்' கோபால், 'ஹிந்து' ராம், 'தினகரன்' கதிர்வேல் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

அமைப்பின் தலைவர் ஜி. கிருஷ்ணன், துணை தலைவர் முருகராஜ், செயலாளர் ரகுநாதன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். அமைப்பின் துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பிற்கான வலைத்தளமும் துவங்கி வைக்கப்பட்டது. மற்றும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர்களின் தொலைபேசி மற்றும் பத்திரிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் அடங்கிய புத்தகத்தை கவர்னர் வெளியிட
முதல் பிரதியை பரிதி இளம்வழுதி பெற்றுக்கொண்டார். முதலமைச்சருக்கு 1895ல் எடுக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் படத்தையும், 1920ல் எடுக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் தொடரூர்தி நிலையத்தின் புகைப்படத்தை கவர்னருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினர்.

முன்னதாக பழம்பெரும் புகைப்பட கலைஞர்கள் தினமலரில் இருந்த கே.விஸ்வநாதன், மகாராஷ்டிரா நிலநடுக்கத்தின் போது எடுத்த சிறந்த படத்திற்காகவும், மாலைமுரசில் பணியாற்றிய அமீது முதலமைச்சர் கருணாநிதியின் தாய் இறந்த போது அவருக்கு அறிஞர் அண்ணா ஆறுதல் சொல்வதுபோல எடுத்த புகைப்படத்திற்காகவும், ஹிந்துவில் இருந்த நாராயணச்சாரி, விளையாட்டு சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்காகவும் முதலமைச்சர் கையால்
பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

'இந்த செய்திக்கும் இவளுக்கும் என்ன?' என்று நீங்க மண்டையை உடைத்துக் கொள்ளும் முன்பே, கவுரவிக்கப்பட்ட அமீது என் தந்தையார் என்று சந்தோஷத்தோடு சொல்லிக் கொள்கிறேன். என் தந்தையின் பிறந்த தினமான செபடம்பர் ஏழாம் தேதியன்றே இந்த கவுரவ
விருது கிடைத்தது இன்னொரு மகிழ்ச்சி. உங்களை நினைத்தாலே பெருமையாயிருக்கிறது வாப்பா. உளமாற நேசிக்கிறேன் உங்களை அன்றைப் போல இன்றும்.

Saturday, September 02, 2006

எதற்காக வலைப்பூ?

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க "ஆரம்பிக்கலாம் யாருவேணாலும், ஆனா நீ எழுதுற எழுத்துக்கு பதிலடி வரும். தலையில குட்ட நெறைய பேர் காத்து கெடப்பாங்க. கன்னாபின்னான்னு திட்டி வரும் பெயருடனும் பெயரில்லாமலும். ஒரு பொது எடத்துல நின்னு உன் கருத்த சொல்றா மாதிரி வலைப்பூ. அதனால எழுதிற எல்லா கிறுக்கலையும் வலையேற்றாம உனக்கே 'ஆஹா நானா எழுதினேன்'னு தோணுற அளவுக்குள்ள பதிவை மட்டும் போடு" அப்படின்னு ஒரு பெரிய பில்டப்பே கொடுத்தாங்க. இலவசமா கிடைக்குது என்பதற்காக அப்படியேவா அறிவுரைய அள்ளிக்க முடியும்? எடுத்துக்கிறத மட்டுந்தான் எடுத்துக்க முடியும் அதான் என் வலைப்பூவையே கிறுக்கல்னு போட்டு பிரிக்காம எல்லாத்தையும் கொட்டி வைக்கிறேன் நீங்களும் பாவம் படிச்சு தொலைக்க வேண்டியிருக்கு.

யாரும் யாருடைய வலைப்பூவுக்கும் தேடிப் போவதில்லை மாறாக
* 'அண்மையில் மறுமொழி இடப்பட்ட இடுகை',
* 'பரிந்துரைக்கப்பட்ட இடுகை',
* 'அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை',
* 'தேன்கூடு போட்டி'யில் பங்கேற்றவர்கள்

இந்த மாதிரி இடங்களில் தலைப்பும் கூடவே வரும் நான்கு வரிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலே ஒரு பதிவை திறந்து படிக்கிறோம். அல்லது பதிவின் சுட்டியை தனிமடலிலோ, பின்னூட்டத்திலோ படிக்க தருவதால் படிக்கிறோம். படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் எல்லோரும் பதில் எழுதுவதில்லை அதிலும் ஒரு கணக்கு இருக்கு

* சிலர் பிடித்திருந்தாலும் சரி பிடிக்கவில்லையென்றாலும் சரி ஏதாவது பதில் எழுதி தன் வருகையை நியமனம் செய்து கொள்கிறார்கள்.
* சிலர் பாராட்ட மட்டுமே செய்வார்கள், நன்றாக இல்லை என்றால் படித்து விட்டு ஓடிவிடுவார்கள். (எண்ணிக்கையில் இப்படிப்பட்டவர்கள் குறைவு என்று சொல்லலாம்).

* சிலர் குறைகள் கண்டுபிடிக்கவே மற்றவரின் பதிவுக்கு போய் இரண்டு குத்து குத்திவிட்டு வரவில்லையென்றால் இவர்களுக்கு தூக்கம் வராது. இதில் தவறில்லை, குறை தெரிந்தால்தான் அடுத்த முறை நிறையாக இருக்கும்.

* சிலர் தனக்கு தானே ஒரு ரேஞ்சு வைத்துக் கொண்டு தனக்கு சரி சமமாக நினைக்கும் நபர்களின் பதிவுகளுக்கு மட்டும் போய் பதில் எழுதும் பழக்கம் கொண்டவர்கள். தன் உடம்பைவிட தலையின் எடை இவர்களுக்கு ரொம்ப அதிகம்தான்.

* சிலர் வாக்குவாதம் செய்ய, சண்டை போட, வம்பிழுக்கவே மற்றவர்கள் வலைக்கு போய் சுறுக்கென்று எழுதி வைத்துவிட்டு வருகிறார்கள். (இதுல எந்த குத்தும் இல்லப்பா நம்புங்க)

மொத்தத்தில் ஒருவரை மெச்சி ஒருவரும் அல்லது ஒருவரை தூற்றி மற்றவரும் வலைத்தளத்தில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிடுகிறார்கள்.

எதற்காக யாருக்காக எழுதுகிறோமென்றால்

* என் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க என்பதுதான் பலரது கருத்து. ஆனால் அந்த நோக்கம் கூட இல்லாமல் பல பேர் தம் கருத்தை சொல்வதை விட மற்றவனை தாக்குவதில் ரொம்பவும் பெரிய குறிக்கோள்களுடன் திரிகிறார்கள்.

* இப்படித்தான் எழுத வேண்டும், இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நிற்க வேண்டுமென்றெல்லாம் இல்லாமல் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைப்பது ஒரு விதம். எழுதுகோலைப் பிடித்து எழுதும் போது நம் மனசு சொல்றபடி எழுதுவோம் ஆனா இந்த கணினி முன்னாடி தட்டுறது இருக்கே அது நம்ம மூளை என்ன சொல்லுதோ அதன்படி கேட்டு செயல்படுகிறோம். அதனால்தான் பலர், மற்றவர்களைக் காயப்படுத்துகிறோமா என்று கொஞ்சம் கூட மனதால் யோசிக்காமல் செய்யும் செயலாகிவிடுகிறது.

* சிலர் எழுதும் போது எப்படித்தான் இப்படி எழுதுகிறார்கள் என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். இது நமக்கு தோணாம போச்சேன்னு தோணும். அப்படிப்பட்டவர்கள் எழுத்து சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுவது ரொம்பவும் கஷ்டமாகி போகிறது. (போன மாத தேன்கூடு போட்டியில் 'திரைச்சீலை' என்ற கதை படித்து அப்படி தோன்றியது. யாருமே அந்த கதையை படிக்கவில்லையோ அல்லது புரிந்துக் கொள்ளவில்லையோ தெரியவில்லை பத்து இடத்திற்குள்ளும் வராமல் போனது ரொம்ப கஷ்டமாக இருந்தது மனதுக்கு.)

* சிலர் வணிக முறையாக உபயோகிக்கிறார்கள் இந்த வலைப்பூவை. தன்னுடைய நிறுவனத்தைப் பற்றி பலருக்கு கொண்டு செல்ல, தன் பொருளை விற்க, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள என பலதரப்பட்ட வணிகம் இந்த வலைப்பூவில்.

சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.

1. இரகிசய டைரியை பலர் பார்க்க படிக்க வைப்பது. அதாவது நிகழ்வை, நடந்த சொந்த அனுபவத்தை, ஏமாற்றத்தை, வெற்றியை, சந்தோஷத்தை, சோகத்தை கொட்டி தீர்க இணையத்தில் ஒரு இடம். அதை மற்றவர்கள் பார்ப்பதில் படிப்பதில் ஆட்சேபனை இல்லாதவர்கள் இவர்கள்.

2. சிலர் நிறைய நட்பு சம்பாதிக்க, பொழுதுபோக்காக அரட்டையடிக்க, நூல்விட, கடல போட. இவர்களது ஒரு குறுகிய வட்டம் மட்டுமே நிறைய தேடல் இல்லாதவர்கள். எழுதுவதை 'ஆஹா' 'ஓஹோ' போட ஒரு சிறிய வட்டம் சம்பாதித்தால் போது என்று இருப்பவர்கள்.

3. நிறைய பேர் வித்வான்களாக, புலவர்களாக, அறிஞர்களாக, துத்துவ ஞாநியாக, அறிவு ஜீவிகளாக தன்னை நியமித்துக் கொண்டு தன் கருத்தை பலருக்கு கொண்டு செல்லும் எண்ணம் உடையவர்கள். இவர்கள்தான் தான் எழுதுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் மற்றவர்கள் என்ன எழுதிகிறார்கள் என்ற தேடலுடன் படிப்பவர்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றால்தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பது போல். கண்டதை படிப்பவர்கள்தான் கற்றவர்களாகிறார்கள். இவ என்னடா பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி எழுதிருக்காளேன்னு நினைக்காதீங்க, எனக்குத் தெரிஞ்ச காரணத்த நா சொல்லிட்டேன். எதுக்கு பதிக்கிறீங்கன்னு நீங்க சொல்லுங்க.

எழுத்து சுதந்திரம் நிறைந்த இந்த வலைப்பூவை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Thursday, August 31, 2006

சின்ன சின்ன ஊடல் - குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்

'எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்' என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு 'டோனட்' வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு மகிழ்ந்தனர். அவள் அணிந்த புத்தாடையில் அவள் அழகாக இருக்கிறாள் என்று அலுவலகத்தில் உள்ள எல்லா நபர்களும் கூறினாலும் அவள் அந்த வார்த்தையை தன் காதலிடமிருந்து எதிர்பார்த்து, அலுவலகம் முடிந்தவுடன் அவன் சந்திப்பிற்காகக் காத்திருந்தாள். அலுவலகம் முடிந்த பிறகு இருவரும் சந்திப்பது வழக்கம்.

மணி 6.15 ஆனதும் காதலன் விக்ரமுக்கு செல்பேசியில் அழைத்தாள்.

"கண்ணா, நான் கிளம்புறேன்" என்றாள் - அவன் அவளைக் காக்க வைத்ததால், செல்லக் கோபத்தில்.

"கிளம்புறியா? சரி செல்லம் கிளம்பு" அவனிடமிருந்து பதில் வந்தது. 'நான் வருவேன் என்று தெரிந்தும்
ஏன் கிளம்புகிறாள்?' என்று மனதில் அவள் கோபத்தை புரிந்தவனாக எப்படியும் அவளை 'சுருதி மியூசிக்கில்' பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு உத்தரவு கொடுத்துவிட்டான் அவன்..

அலுவலகம் முடிந்தபின் இருவரின் சந்திப்புக்குப் பிறகு அவள் செல்லும் வீணை பள்ளிதான் 'சுருதி மியூசிக்'.

அலுவலகத்தில் வேலைப் பளுவில் மூழ்கிவிட்டதால் அவனுக்கு நேரத்திற்குக் கிளம்ப முடியாமல் போனது.

'கிளம்புறேன்னு சொல்லிக் கூட ஒரு வார்த்தை, இரும்மா வந்திடுறேன்'னு சொல்ல தோணுச்சா?' என்று
எண்ணியவளாக அலுவலகத்தில் இருந்து கீழே வந்தாள். அப்படி நினைத்தாலும்,

அலுவலகத்திற்குக் கீழே தன் வாகனம் அருகே வந்து நிற்பான் விக்ரம் என்று எதிர்பார்த்து அவள் கண்கள் இங்கும் அங்கும் தேடியது. ஏமாந்தவளாய் வண்டியை கிளப்பிக் கொண்டு விரட்ட ஆரம்பித்தாள்.. போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததாலும், அவனை எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தாலும் வேகம் கூடியது. வண்டி ஓட்டியபடியே மறுபடியும் அவனை செல்பேசியில் அழைத்தாள், ஒலித்துக் கொண்டே இருந்தது அவன் கைப்பேசி,

கோபத்தில் இணைப்பை துண்டித்து அவள் கைப்பேசியை பக்கத்து இருக்கையில் எரிந்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு செல்பேசி ஒலிக்கவே, எடுத்து காதில் வைத்தாள். - அவனேதான்

"ம்ம், சொல்லுங்க" அவள் குரலில் கோபம் தணியவில்லை.

"எங்கடா இருக்க?" கனிவாகக் கேட்டான் விக்ரம்.

"நீங்க எங்க இருக்கீங்க?" ஒருவேளை பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டு கண்ணாடியில் அங்கும் இங்கும் தேடிய படி கேட்டாள்.

"நான் இப்பதாண்டா கிளம்பினேன், ரோடு காலியா இருக்கு, அதனால் வண்டி பறக்குது" என்றான்
அவள் கோபத்தை கண்டுகொள்ளாமல்.

"ம்ம் சாருக்கு 'கிளப்'புக்கு போக அவசரமோ?!" என்றாள் எரிச்சலாக.

'கிளப்' என்பது சீட்டு விளையாடி அரட்டை அடிக்கும் 'கிளப்' அல்ல, அவன் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுப்பான். அந்த இடத்தைதான் 'கிளப்' என்று கேட்கிறாள்.

"பசங்களுக்கு இன்னிக்கு விடுமுறதான?! அதான் மதியானமே போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்திட்டேன்" என்றான் அலட்டலாக.

'ஓஹோ! அதான் ஐயா நேரத்திற்கு வேலையை முடிக்க முடியாம, சீக்கிரம் கிளம்பி வந்து என்னப் பார்க்க முடியாம இருந்த காரணமோ' என்று மனதில் நினைத்துக் கொண்டதில் இன்னும் சூடேறியது அவளுக்கு.

வண்டியை இன்னும் விரைவாக்கினாள். கொஞ்ச நேர மவுனத்திற்கு பிறகு "சரி என் வீணை கிளாஸ் வந்திடுச்சு நான் போறேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் வீணை வகுப்புக்கு வந்து நிற்கும் போது பின்னால் விக்ரமுடைய 'காம்ரி' தெரிந்தது.

இருப்பினும் காத்து கிடக்கட்டும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள். தவமாக தவம் கிடந்தாலும், காதலிக்காக என்பதால் 45 நிமிடம் வெளியில் காத்துக் கொண்டு இருந்தான் அவன். இவள் இப்படி அடிக்கடி அவனைக் காக்க வைப்பதால், நேரத்தைப் போக்குவதற்காக வண்டியில் நிறைய புத்தகம் வைத்திருப்பான். புத்தகத்தின் உதவியில் நேரம் பறந்தது. வெளியில் வந்தவள் அவனைப் பார்க்காதது போல் வண்டி எடுத்தாள்.

அவனைக் கண்ணாடியில் பார்த்து 'துத்துத்துத் பாவம் கண்ணா நீ, காத்திருந்தியா, நம்ம போற வழியில் நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்' என்று மனதிலேயே பேசிக் கொண்டாள்.

அவன் இவளைப் பின் தொடர்ந்தான். மறுபடியும் செல்பேசியில் இணைந்தனர். அவன் பின்னால் வண்டியில் இருக்கும் சந்தோஷம் தன் குரலில் தென்படாமல், அவனை பார்க்காதது போலவே பேச்சைத் தொடங்கினாள் "என்ன வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?"

"இல்லடா, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் 'சிக்னலில்' நிற்கிறேன்" அவனும் விடாமல்,

அவளுக்கும் தான் பின்னால் இருப்பது தெரிந்திருக்கும் என்று தெரிந்தும், தான் அவளைப் பார்க்காமல் வீடு வரை சென்றதாக ஊற்றினான்.

கண்ணாடியில் அவனைப் பார்த்தபடி சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அம்மா தேடப் போறாங்க" என்றாள் கிண்டலாக.

அவன் கார் 'டிராக்' மாறி அவளின் இடது புறத்திற்கு வந்தது.

"கண்ணா, இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பி பாரு" அவளைப் பார்த்தபடி பின்னால் வேகமாக வரும் வண்டிகளுக்கு வழி தராமல், இவளுடைய காரின் வேகத்திலேயே வண்டியை செலுத்திய படி கேட்டான்.

ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவன் பக்கம் திரும்பாமல்

"எங்கே எங்கே?" என்றாள் தேடுவது போன்ற பாவனையில்.

பின்னால் வரும் வண்டி விளக்கை அணைத்து அணைத்துக் காட்டவே, அதே வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விரட்டி வேறு பக்கம் திரும்பினான். இதை சற்றும் எதிர்பாராத சுதா, "செல்லம், அந்தப் பக்கமா எங்க போற?" என்றாள் திகைப்பாக.

அவள் திரும்பாத கோபத்தில், "ம்ம் கிளப்புக்கு தான்" என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

அதைக் கேட்டவுடன் தாங்காமல் இவள் தொண்டை அடைத்தது. "மதியானமே போய்ட்டு வந்துட்டேன்னீங்க" என்றாள் ஏமாற்றத்தை அடக்கிய படி.

"சும்மா சொன்னேன். அதான் உன்னை பார்க்க வீணை கிளாஸுக்கு வந்தேன். நீதான்

கண்டுக்காம போன. பக்கத்தில் வந்து கொஞ்சம் 'திரும்பிப் பாருடா'ன்னு கெஞ்சினேன், ரொம்ப அலட்டிக்கிட்ட, இப்ப நான் எங்க போனா உனக்கு என்ன? விடு" என்றான் - அவள் கோபம் இவனுக்கு ஒட்டிக் கொண்டதுபோல.

"சாரிடா கண்ணா, சத்தியமா கொஞ்ச நேரம் இப்படி தெரியாதது மாதிரி விளையாடிட்டு

ஒரு 'ஸ்டார் மார்டில்' நிறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரெண்டு பேர் கோபத்தையும் தணிக்கலாம்ன்னு நெனச்சேன்,

ஏமாத்திட்டேடா. என்கிட்ட ஏன் கிளப்புக்கு மதியானமே போனேன்னு பொய் சொன்ன, அதனாலதான் ..." என்று அவள் சிணுங்கினாள்.

"என்ன ஏமாத்த நினச்சு நீ ஏமாந்திட்ட, அதற்கு நான் என்ன செல்லம் செய்ய முடியும்?.

சரி இன்னக்கி இல்லாட்டி என்ன நாளைக்கு சந்திப்போம்ல" என்றான் திடமாக.

ஆறுதலாக அவன் பேசினாலும் ஏமாற்றத்துடன் வாடிய முகமாய் வீடு வந்தாள் சுதா.

எல்லோரும் அவள் அழகாக இருக்கிறாள் என்று சொன்ன அந்த புது ஆடையை அதிர்ஷ்டக் கெட்டது என்று ஒதுக்கி வைத்தாள்.

ஊடலில்தானே காதலின் வலிமை தெரிகிறது.

Saturday, August 26, 2006

'வேட்டையாடு விளையாடு'

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை
பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்து
விட்டு மக்களும் 'சுமார்', 'போர்', 'ஒருவாட்டி பாக்கலாம்', 'இது குறுந்தகடுல பாக்கதான் லாயக்கு', 'பாட்டுக்காக வேணும்னா படம் ஓடலாம்' என்றெல்லாம் சவடால் விடுகிறார்கள். அதைவிட பகிரங்கமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு படத்தை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வாரம் முதலிடத்தை பிடித்த படமென்று ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் 'தெனாவட்டாக' உட்கார்ந்து கொண்டு. பல வாரத்திற்குப் பிறகு அதே படம் கீழே இறங்கி ஆறுவது இடத்திற்குப் போகும் போது படத்தில் உள்ள குறைகளை கூறுபோடுகிறார்கள். எதன் அடிப்படையில் விமர்சனமென்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

படத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம். அப்படிச் செய்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.


'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு காக்கி சட்டையே பொருந்தாது ஆனாலும் 'காக்கி சட்டை', 'சூரசம்ஹாரம்', 'குருதிபுனல்' என்ற எல்லா படங்களிலுமே அவ்வளவாக காக்கி சட்டையே போடாமல் ஒப்பேத்திவிடுவார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் கமல் அவ்வாறே சமாளித்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பவருக்கு காக்கி உடுப்பு அதிகம் தேவையில்லைதானே? காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி ராகவனாக கமல், தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரகாஷ்ராஜின் மகளின் கொலையில் ஆரம்பித்து நியூயார்கில் ஆரோக்கியராஜாக வரும் பிரகாஷ்ராஜின் கொலை விசாரணையில் தொடர்ந்து, வில்லன்களை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் முடிகிறது. 'நேர்மை'யில் வழக்கமான படம் போலவே மனைவி கயல்விழியாக வரும் கமலினி முகர்ஜியை இழந்து விடுகிறார். நியூயார்கில் ஆராதனாவான ஜோதிகாவின் சந்திப்பு காதலில் முடிகிறது. 'தெனாலி'க்கு பிறகு மீண்டும் கமல்- ஜோதிகா இணைந்துள்ளனர். பாட்டைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் காதல் காட்சியில்லாதது படத்தின் பலமா பலகீனமா என்று படத்தின் வெற்றி தோல்விகள் சொல்லும். கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு.

நன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன், அவருக்கு சரி ஜோடியாக அமைந்து விட்டனர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.

படத்தில் இரத்தக் காட்சிகள் அதிகம். பிணமாக நடித்தவர்கள் அனைவருமே நிஜ பிணமாகவே நடித்திருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு விட்டார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் ஆரோக்கியராஜ் மனைவி சித்ராவின் சடலத்தைக் காட்டும் போது கண்கள் லேசாக
அசைவதை உணர முடிந்தது. படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு முக்கிய வேடம் மற்றபபடி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, அந்த இரு வில்லன்கள் மட்டுமே படத்தில் கனமான பாத்திரங்கள். 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பராக வரும் அந்த போலீஸ் அதிகாரிதான் இந்த படத்தின் வில்லன் அமுதன். அமுதன் மற்றும் இளா இரண்டு வில்லன்களின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வெறி கொண்ட பார்வை, அவர்கள் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது. குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே 'ஓ....' 'F...' & 'B...' (Food & Beverage இல்லை) வார்த்தைகளை நம் காதுகளில் கேட்காத அளவுக்கு ஓசையை அடக்கியிருக்கிறார்கள். கமலினி தெலுங்கில் பிரபலமாம் தனக்குரிய பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தாமரையின் வரிகள் மனதில் பதிந்தே விட்டன. என்னமா எழுதுறாங்க தாமரை...

'பார்த்த முதல் நாளே' பம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் குரலில் பாட்டு நன்றாக இருந்தாலும், பைக்கில் போகிற காட்சி வரும் போது பழைய படத்தில் வருவது போல் பைக்கை ஒரே இடத்தில் நிற்கவைத்து பின்னாடி படம் ஓட்டி இருக்கிறார்கள். கமல் பைக் ஓட்ட பயந்தாரா அல்லது கமலினி பின்னாடி உட்கார மறுத்தாரா, பயந்தாரா என்று தெரியவில்லை.

வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே! - எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஹரிஹரன், விஜய், நகுல் இணைந்து கலக்கியிருக்கும் இந்த பாடல் வரிகள் அருமை. ஒரு நாள் முழுவதும் கமல் - ஜோதிக்கா மான்ஹத்தனில் (Manhattan) சுற்றிப்பார்த்து நாளை கழிக்கும் அழகான பாடல். அதிலும் அழகான ஐந்து ஆங்கிலேய வடிவான ஆண்கள் கிளோஸப்பில் 'வெண்ணிலவே! வெள்ளி வெள்ளி நிலவே!' என்று பாடுவதும், அந்த வீதி மக்கள் பின்னாடியே வந்து பாடுவதாக வரும் போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

உயிரிலே - மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்.

கற்க கற்க - படத்தின் முதல் பாடல். தேவன், திப்பு, நகுல் பாடிய விரைவான பாடல்.

நெருப்பே சிக்கிமுக்கி - அது ஏனோ தெரியவில்லை அடிதடி படமென்றாலே ஒரு ஐட்டம் நம்பர் அவசியமாகிவிடுகிறது. அதுவும் கமல் படத்தில் ஒரு முத்த காட்சியாவது எதிர்பார்த்து வரும் அன்பர்கள் ஏமார்ந்து விடாதபடி இந்த பாடல் அமைந்துள்ளது. பிரான்கோ, சவ்மியா ராவ், சோலார் சாய் பாடிய பாடல் இது.

கண்டிப்பாய் எதிர்பார்ப்பை ஏமாற்றாத பாடல்கள். ஆனால் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாய் இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் வெற்றி, படமாக்கிய விதத்திலுமிருக்கிறது.

ரினைசன்ஸ், ஹார்ட் ராக், பெரிய பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான வாகனங்கள் என்று கேமிரா நியூயார்க்கை ஒரு வலம் வந்தாலும் பெரிய பிரமிப்பாக ஏதும் தோன்றவில்லை எல்லாம் துபாயிலும் இருப்பதாலோ என்னவோ. மேட்ரிக்ஸ் II, பிளேட் III என்ற படங்களுக்காக உபயோகித்த அதே உபகரணங்கள் என்றெல்லாம் செய்தி வந்தமையாலும், மின்னலே, காக்க காக்க என சாதனை படைத்த கெளதம் - ஹாரிஸ் ஜோடி மூன்றாவதாய் இணைந்த படம் என்பதாலும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு.

படத்தின் டைட்டில்களைக் கவனித்தேன் ஏனோ எல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது, பெயர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வந்து மறைந்த பிறகு ஒப்புக்காக தமிழிலும் காட்டப்பட்டது. நாள் கிழமைகளும் ஆங்கிலத்திலேயே காட்டினார்கள். ஒருவேளை எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியாமல் இருப்பத்தில்லை என்று நினைத்ததாலோ என்னவோ.

படம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்டது: 'நம்ம ஊரிலயே முடிச்சிருக்கலாம் (தமிழ்நாடு) நியூயார்க் வரைக்கும் போகவே அவசியமில்ல'. இதை கேட்கும் போது குங்குமத்தில் படித்த 'சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்' என்பதுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் காசை கரியாக்கியிருக்கிறார்கள் நியூயார்க்கில்.

ஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'.

மற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி