Thursday, June 25, 2020

சொர்க்கமே என்றாலும்

புத்தம் புதுச் சூழலில் இதமான தட்பவெப்பத்தில் எழிலுடன் கூடிய இடத்தில் ரம்யமான மணம் தன்னைத் தொட்டுச் செல்ல, சலீம் எழுந்தான். உடலில் எந்த வலியும் இல்லாததை உணர்ந்தான். கை, கால்களை உதறினான், தன் இளமை திரும்பி விட்டதாக அவனுக்கே தோன்றியது. அவன் வழக்கமாக அணிந்திருக்கும் கண்ணாடி இல்லை. ஆனாலும் கண் பார்வை மிகச் சிறப்பாகத் தெரிந்தது.

 

தன் பிறந்த மேனியில் வெள்ளைத் துணி சுற்றி இருப்பதைப் பார்த்தான். அவன் அருகில் எல்லா வண்ணங்களும் கொட்டிய குடுவையில் முக்கி எடுத்ததுபோன்ற சிறகுகளையும் அகல் போன்ற அலகையும் கொண்ட ஓர்அழகிய பறவை அவனுக்காகக் காத்திருந்து. அதனுடன் புதுத் துணியைக் கண்டான், கையில் எடுத்தான். எங்கேயோ அதைப் பார்த்த நினைவு, அதனைத் தொட்டபோது உடனே உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. வான் வண்ணத்தில் மேகத்தையொத்த வடிவமைப்பிலிருந்த உடையை உடுத்திக்கொண்டான். அந்த உடை அவனுக்காகவே அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தது.

 

கால்களுக்குக் கீழ் இது மண் தானா என்ற சந்தேகத்தில் கையில் எடுத்துப் பார்த்தான். வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ள வேண்டும்போல, சிலிர்ப்பை உண்டாக்கும் அளவிற்கு அந்த மணல் வித்தியாசமான நிறத்தில் இருந்தது. அவன் இதுவரை கண்டிருந்த தேரிகாட்டு மணல் போலவோ பாலைவன மணல் போலவோ இன்றி புதுவித மணலாக இதமான குளிராகக் கால் புதையாமல் அதே சமயம் பறக்காமல் தன் உயிர் இப்போது வேறு வித ஆற்றலாக மாறியிருந்ததை உணர்ந்தான். நடக்கவும் இல்லாது பறக்கவும் இல்லாது நகர்வது சலீமுக்கு இன்பமாக இருந்தது. ‘இந்த மணலில் எப்படி இந்தப் பூ பூத்தது?’ என்ற யோசனையில் அருகில் சென்றால் வான் நட்சத்திரம் பூவாக மலர்ந்திருந்தது அதனை மினுமினுத்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இவனுக்கு ஒரே குழப்பம், ‘விண்மீன்கள் வாயுக்களினாலானவை, அது தரும் ஒளி, வெப்பம் மிகுந்தவை ஆனால் இந்த வகை வகையான கண்களுக்குச் சுகமான வண்ணங்களில் தென்படும் நட்சத்திரம் பரவசத்தை அளிக்கிறதே எப்படி?’ என்று ஆராய்ச்சியில் அங்கேயே நின்று உற்று நோக்கினான்.  அருகில் குளிர்ந்த நீரோடை இருந்தது. அதனைக் கண்டதும் அவன் எண்ணம் அங்கே குவிந்தது., நீரில் இறங்கி ஒரு குளியல் போடலாமா என்றும் அவனுக்குத் தோன்றியது. எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு நுணுக்கங்களும் புதுமையாக இருந்தன.. வானம் மட்டும் எப்போதும்போல் ஓவியமாக இருந்தது.

 

யாருமில்லாத புத்தம் புது இடம்தான். சமநிலையில் ஒரே பரப்பில், சீரான அமைப்பில் எழில் கொஞ்ச, பார்த்திராத பறவைகளின் ஒலி சூழந்திருக்கும் அந்த ஆத்மார்த்த அமைதி அவனுக்குள் பயத்தை எழுப்பவில்லை மாறாக மனம் சாந்தமாக மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தான். கால் போன போக்கில் அடுத்து என்னவென்று அறியாமலே நகர்ந்தான். கொஞ்சம் தொலைவிலேயே தனக்குப் பழக்கமான ஒரு முகம் அவனை நோக்கி புன்னகைத்தபடி வந்தது. அடுப்படியில் கரிப்பிடித்த துணியை ஒத்த உருவத்தில் இருப்பான் சாகுல். இப்போது ஆஜானுபாகு உருவத்தில் அகன்ற மார்பு, வலிமையான புஜங்களுடன் “சலீம்என்று உறுமிக் கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயில் அவதிப்பட்ட சுவட்டையே காணோமே.

 

அவரைக் கண்ட ஆச்சர்யத்தில் ஓடிச் சென்று, அதுதான் இளமை திரும்பிவிட்டதே அதனால் பறந்து நகர்ந்துஅவரைக் கட்டிக் கொண்டு "சாகுல், எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான்.

 

அதற்கு அவர் கம்பீரமான குரலில் "வா சலீம். எனக்கும் நீ வருவதா எந்தத் தகவலுமே இல்ல. ஏதோ மனசு இந்தப் பக்கம் வரணும்னு தள்ளுச்சு வந்தேன். நீ எப்போ இறந்த? நீ இறக்கப் போறதாகவோ, இங்க வரப் போவதாகவோ ஒரு துப்புமில்லயே!!" என்று ஆச்சர்யத்துடனும் சலீமை சந்தித்த மகிழ்ச்சியும் பொங்க, முகம் மலர்ந்து கேட்டார் சாகுல்.

 

சாகுலைப் பார்த்த மகிழ்ச்சி பொங்க மடை திறந்த வெள்ளமென சலீம் பேச நினைத்தாலும் ஏதோவொரு குழப்பத்திலேயே வார்த்தைகள் வெளிவந்தன. "நானே எதிர்பார்க்கல சாகுல் அசந்து தூங்கிட்டேன், நீண்டதூக்கம்போல அங்கிருந்து இங்க வந்துட்டேன். ஏதோ நான் ஒரு செடி மாதிரியும் என்னை வேரோடு பிடுங்கி போட்டா ஒரு வலி வருமே அப்படியொரு உயிர்போற வலி. அப்புறம் நான் என்னை இங்க பார்த்த போதுதான் புரியுது" என்று நிச்சயமற்ற தன்மையோடு சொன்னான் சலீம்.

 

சலிப்பான நமட்டு சிரிப்போடு விளக்கினார் சாகுல் "உயிர் போற வலின்னு சரியாதான் சொல்ற. ஆமா, உன் உயிர் போயிடுச்சு. இப்ப நீ மறுமைக்குள்ள நுழஞ்சுட்ட. ஆனா நீ அதிர்ஷ்டக்காரன்பா எவனையும் அந்த உலகத்துல நீ சுத்தல்ல விட்டுருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன், அதான் சட்டுன்னு என்னை பார்த்துட்ட. இங்க வந்த பிறகு ஒருத்தரை சந்திக்கிறதுக்கு அவ்வளவு நாளாகும்.

 

அதுவுமில்லாம புதுத் துணி வேற உடனே கிடச்சிட்டுது போல, இது நீ அங்க உடுக்கத் துணி கொடுத்து உதவின யாரோ உனக்காகக் கையேந்தி வேண்டியதாலதான் அது அமஞ்சிருக்கு, சரி வா உனக்குப் போகப் போகப் புரியும்” என்றபடி பேசி கொண்டே நகர்ந்தார்கள்.

 

“அட! நம்ம மாத்யூ வீடா அது?” என்று ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக் காட்டி வாய் பிளக்கக் கேட்டான் சலீம். “நீ வரேன்னு தெரிஞ்சி இங்க குடி பெயர்ந்திருப்பான்” என்று சாகுல், சலீம் முகம் பார்த்தபோது, சலீம் அவநம்பிக்கையில் சந்தேகப் பார்வை தந்தான்.

 

அதனைப் புரிந்து கொண்ட சாகுல் உடன் மறுத்து, ”நெசமாத்தான் சொல்றேன், நமக்கு வேண்டிய இடத்துல நம்ம வீட்டை நகர்த்திக்கலாம். அவனுக்கு வந்த வாழ்வ பார்த்தியா… ஒன்னுமில்லாத பையன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போது மாத்யூ, “சலீம், எப்படி இருக்க?” என்று எல்லாப் பற்களும் தெரிய புன்னகைத்தபடி வந்தார்.

 

எப்போதும் ஒரு சோகத்தில் மூழ்கியது போன்றே முகத்தை வைத்திருக்கும் மாத்யூ மிக பொலிவான, சாந்தமான முகத்துடன் தெளிவாகப் பேசியதை பார்த்தவுடன், “மாத்யூ, உன்ன இந்த நல்ல நெலமையில பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா. நான் அப்பவே சொன்னேன்ல உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சலீம்.

 

“எப்பவுமே சொல்வேனே சலீம், சமமான வாழ்வுன்னு அத நான் இங்கதான் பார்க்கிறேன். எந்தவித பாகுபாடுமில்ல, உயர்வு தாழ்வு இல்ல, நினைத்ததை வாழ முடியுது. சக மனிதன் சந்தோஷமா இருக்கான், சுற்றுப்புறம் நல்லா இருக்கு, யாரும் யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. களவு இல்ல, வன்மம் இல்ல, பிரிவு இல்ல, பொறுப்பு இல்ல. விடுதலை உணர்வை முழுமையா சுவாசிக்கிறேன். தானதர்மம் செய்யணும்னு ஆசப்பட்டேன், ஆனா  அப்ப பணமில்ல. மனசார உதவணும்னு ஆசப்பட்டதுக்கே இப்படியான வாழ்க்க அமைந்திருக்கு. அப்ப மனசார கொடுத்து உதவுனவங்களுக்கு? இங்க எல்லாமே இப்படித்தான். எங்க வீட்டு பக்கத்துல பார்த்தியா ஓடை, அதுல நான் நெனைக்கிற பானம் கிடச்சிடும். நம்மூர்ல தான் தண்ணீர்ப் பஞ்சம். ஆனா இங்க ஆசை தீர குடிச்சுக்கலாம். ம்ஹும் ஆசை அந்த வார்த்தையே மறந்துடுச்சு சலீம்” என்று ஞானி மாதிரி பேசியவனை உடைக்கும் வகையில் சாகுல் “ஆமாமா ஆசை இல்லாததாலதான் மாத்யூ, அப்பப்ப கனவுபிரவேசம் பண்ணி உலக ஒட்டுதலிலேயே இருக்கான், அதுவும் அழியா வீட்டுக்குள் வந்துட்டு இன்னும் விழிக்காம இருக்கான்” என்றார் கிண்டல் தொனியில்.

 

மாத்யூ பேச்சை மாற்றும் விதமாக “என் கதைய விடு சலீம், நம்ம மொன வீடு சேகர சந்திச்சியா?” என்றார்.

 

அதற்கும் சாகுல் “சேகர் எப்படித்தான் இங்க வந்தான்னு தெரியல. ‘தான் தவறுதலா இங்க வந்துட்டேனோன்னு’ அவனுக்கே சந்தேகம் வர அளவுக்கு நல்லாயிருக்கான்” என்று எதையோ எதிர்பார்த்தவராகப் பொறாமையின் வெளிப்பாடில் கறுவலுடன் பேசுவதாக இருந்தது சாகுலின் பேச்சு.

 

‘இங்க வந்தும் சாகுலின் குணம் மாறலையே. அப்ப குணத்திற்கேற்ற சலுகையும் வசதி வாய்ப்புமா!? இங்க பொறாமை கிடையாதுன்னு மாத்யூ சொன்னாரே, அப்ப இது பொறாமையில் சேராதா?’ என்று சலீம் யோசித்தான்.

 

மூவரும் தெரிந்த நபர்களை பற்றியெல்லாம் பேசி கொண்டே நடந்தனர். ஆனால் உறவுகள் பற்றியோ சேகருக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் மனைவியை பற்றியோ அவர் பேசவில்லை. சலீமால் கட்டுப்படுத்த முடியாமல், “சேகர், உன் மனைவி செளமியாவ இங்க சந்திக்கலையா!?”  என்று கேட்டான்.

 

எந்த செளமியா என்ற முகபாவனையுடன் சேகர் “சலீம், ஆற்றலாக மாறிய நமக்கு தெரிந்தவர்களைக் கண்டால் மகிழ்ச்சி, ஆனால் மனைவி, மக்கள், என்னைச் சார்ந்து அவள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற எந்தவித உறவு பந்தங்களும் இங்கு இல்ல. இதனை ஒருவித சுதந்திரமா நான் பார்க்குறேன். நான் யாரையும் தேடி போறதுமில்ல, என்னை தேடியும் யாரும் வருவதில்ல. வழிப்போக்கரா சந்திப்பவருடன் மகிழ்ந்து பேசி நகர்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.

 

சிறிது தூரத்திலேயே சலீம் என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்த கடை மாதிரியான அமைப்புத் தென்பட்டது. ”இது என்ன கடை மாத்யூ? என் பெயரில்!!?” என்று கண்கள் விரிய சலீம் கேட்டான். "ஓஹ்! கடைத் தெருவா? உன் பெயரிலா? சரி போய்ப் பாரு, எங்க கண்களுக்குத் தெரியாத இடத்திற்குள்ள நாங்க வரவே முடியாது. அதுக்குள்ள நீ மட்டுந்தான் போக முடியும் சலீம். நாம இறந்த புதுசுல நமக்குப் பிரியமானவங்க செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும், மனசார நமக்குச் சொல்லும் வாழ்த்தும், நல்ல வார்த்தைகளும் நமக்குப் பிடிச்ச தின் பொருளா மாறி இப்படிக் கடையா விரிஞ்சிருக்கும். எதுவுமே கெட்டுப் போகக் கூடியதில்ல. எப்ப வேணும்னாலும் நீ போய் எடுத்துச் சாப்பிடலாம். பணமெல்லாமில்ல. இங்கதான் பணமென்ற ஒரு விஷயமே இல்லையே, நாம அங்க சம்பாதிச்ச குணம்தான் இங்க எல்லாமே” என்று தன் சரக்கில்லாத கடையை நினைத்துப் பேசினார் சாகுல்.

 

மாத்யூ உடனே அங்குள்ள யதார்த்ததைப் பற்றி சலீம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, “சலீம், நம்ம மக்கள், நாம் செத்த உடனே நம்மை நெனச்சு உருகி நமக்காகப் பிரார்த்திப்பாங்க, நம்ம பெயரில தானம் செய்வாங்க. ஆனா நாட்கள் போகப் போக பசங்க மறந்திடுவாங்க. அவங்க உண்டு அவங்க பொறுப்புகள் உண்டுன்னு இருப்பாங்க. அவங்கள நாம் குற்றம் சொல்ல முடியாது” சமாதானப்படுத்த முயன்றார்.

 

“நாம மட்டும் என்னவாம் நம்ம அம்மா அப்பாவுக்குச் சமீபத்துல எப்பவாவது தனியா பிரார்த்தனைச் செய்திருப்போமா? இல்ல அவங்க பேருல தர்மந்தாஞ் செஞ்சிருப்போமா?" என்ற சாகுலின் கேள்விக்குச் சலீம் பதில் சொல்லும் முன்பாகச் சாகுல் மீண்டும் தொடர்ந்தார்.

 

"நாம பேரன் பேத்தி கண்ட பிறகு நம்ம தாத்தா பாட்டியெல்லாம் நமக்கெங்க நெனவிருக்கு சொல்லு? நான் சாகக் கெடந்தப்ப பேரன் ஷாகிர் வந்து, ‘உங்க பேரு என்னான்னு கேட்டான். சொன்னேன். உங்க வாப்பா பேரு என்னன்னு கேட்டான் ரபீக்ன்னு சொன்னேன். அவங்க வாப்பா பேரு என்னான்னு கேட்டான். ஜாஹிருன்னேன். அவங்க வாப்பா பேரு தெரியுமான்னான்.. தெரியுல தம்பின்னு சொன்னேன். பழைய வீட்டு பத்திரத்த விரிச்சி காட்டினான். சுப்ரமணியின் மகன் ஜாஹிருன்னு இருந்துச்சு. சரி அதுக்கு இப்ப என்னடான்னு கேட்டேன். ‘இப்ப நான் காதலிக்கிற பொண்ணோட அப்பா பேரும் சுப்ரமணிதான், வாப்பாக் கிட்ட சொல்லி சம்மதிக்க வையுங்க’ன்னு கேட்டான். அப்ப தான் நான் இங்க வந்து சேர்ந்தேன். அப்புறம் நான் அங்க எட்டிக் கூடப் போய்ப் பார்க்கல.

 

இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது இசாக்குன்னாலும் எசக்கின்னாலும் ஐசக்குன்னாலும் ஒன்னுதான்னு. நான், போதும் போதும்னு வாழ்ந்தாச்சு இன்னும் அந்த உலகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கப் பிடிக்கல” என்று சலீமுடன் பேசிப் பல காலமாகிவிட்டதால் வசமாக மாட்டிக் கொண்டவனிடம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு இடைவெளி தராமல் தொடர்ந்தார் சாகுல்.

 

“எதையோ சொல்லப் போய் எங்கயோ போய்டேன்… ம்ம் ஆமா காலப் போக்கில் நம்ம பிள்ளைங்க நம்மல மறந்திடுவாங்க. அவங்களுக்கும் பல பொறுப்புகள்னு, உலக இன்பங்கள்னு கரஞ்சிடுவாங்க. நம்ம மாதிரிதானே நம்ம புள்ளைகளும் இருப்பாங்க?” என்று இடை இடையில் சிரித்துக் கொண்டார்.

 

அப்போது அங்கு வந்து சேர்ந்த இணையப் போராளி வேந்தன், “என்ன மாத்யூ, நட்பூக்களெல்லாம் சேர்ந்திருக்கீக போல. இப்பதான் “சிலர் வாழ்க்கை முழுக்கச் சொர்க்கத்துக்குப் போகணும்னு விரும்புவாங்க, ஆனால் சாவுன்னா பயப்படுவாங்க. எவ்வளவு முரண்!” அப்படின்னு ஒரு பதிவு போட்டுட்டு வரேன், என்று கடமையுணர்ச்சியோடு இளித்தார். நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமம், கருகருவென அலையலையான சுருள் முடியுடன் கலையான முகமுடையவரை சலீமுக்கு யாரென்று தெரியவில்லை. மாத்யூ அவரை மதுரை வேந்தன் என்று அறிமுகப்படுத்தியதுதான் தாமதம். “அட, நீங்கதான் வேந்தனா? நான் உங்கள் ஃபாலோவர், நீங்க எந்த பதிவு போட்டாலும் லைக் போடுவேன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, வேந்தன் புகைப்படத்தில் வழுக்கையாக இருந்ததை நினைவுப்படுத்தியும் பேசினான்.

 

“அட ஆமங்க, இங்க வந்ததும்தான் இயற்கையாக நான் தொலைச்சிருந்த எல்லாம் திரும்ப கெடச்சுது. முடி மட்டுமில்ல, இளமை, உடல் வலிமை, சந்தோஷம் எல்லாந்தான்” என்று மகிழ்ச்சியில் இருந்த வேந்தன் தன் அறிவுஜீவித்தனத்தைத் தத்துவங்களாக பொழிந்தார் “செத்த பிறகு என்னாகும்னு என்னைக்காவது  யோசிச்சிருக்கீகளா சலீம்? சில பேரு இங்க வந்த பிறகும் உலக ஒட்டுதலிலிருந்து வெளிய வர முடியாம சிக்கித் தவிக்கிறாங்க – அது ஏன்னா, இந்த உலகத்துல அவய்ங்களுக்கான எந்த வரவேற்புமில்ல. எப்படி இருக்குங்கிறேன்? பக்கத்து வீட்டுக்காரஞ்  சாப்பிடலானலும் எனக்கென்னானு கவலையில்லாம இருந்தவய்ங்களுக்கு இங்க என்ன வரவேற்பு இருக்கும்ங்றேன்? தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு சொன்ன பாரதியாரு பேச்சையும் கேக்கல பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்னு சொன்ன நா முத்துக்குமார் பேச்சையும் கேட்கல” என்று வழக்கமான மற்றவர்கள் மீதான தன் அக்கறையை பறைசாற்றினார்.

 

இந்த முறை சாகுல் குறுக்கிட்டு “சரி அதவிடு, இப்ப நீ கடைக்கு உள்ள போறியா இல்ல..." என்று அவர் இழுக்கும் முன்பாகவே சலீம். "இல்ல சாகுல் எனக்குப் பசி இல்ல. மகிழ்ச்சியில மனசு நெறஞ்சி இருக்கேன். எனக்காக மலையளவு பிரார்த்தனைகளான்னு மலச்சுப் போய் இருக்கேன்" என்று வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தான்.

 

வேந்தன் சலீமின் வயிற்றைத் தட்டியவராக, "பசியா? நமக்கு உயிரே இல்ல அப்புறம் எங்கிட்டிருந்துய்யா பசிக்கும்? ஆனா நம்ம சாப்பிடுறதெல்லாம் எங்கிட்டுத்தான் மாயமா மறையுமோன்னு தெரியலப்பா. வெளியிலயே இறங்காதுய்யா சலீமு” என்று சொன்னபோது,

 

சலீமுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று இன்னும் விரிவாக விளக்கினார் சாகுல். “உன் ஆற்றலை இன்னுமா நீ புரிஞ்சிக்கல? ஒலியா சுற்றி திரியலாம் சலீம்” என்றார்.

 

அவரைத் தொடர்ந்து வேந்தன், “நமக்கு விடுதலை கெடச்சிருச்சுப்பா.  நீ எத தேர்ந்தெடுக்குறீயோ அதுவாத்தான் இருப்ப,  யாதுமாய் வாழலாம். ஆனா அதுக்கான  பக்குவமும் தகுதியும் மொத உனக்கு இருக்கணும்” என்று பக்குவத்தை சலீமின் உடல்மொழியில் தேடினார்.

 

கடுமையான முகத்துடன் கூர்ந்து கவனித்த சலீமை லேசாக்கும் விதமாக மாத்யூ “அடுத்தக் கிரகத்தைப் பார்க்கணும்னு இப்பவே கிளம்பிடாத, இங்க பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு” என்று நட்புணர்வுடன் பேசினார்.

 

எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சாகுல் சொன்னார் “நீ உலகத்துக்குத் திரும்பப் போகலாம்ன்னு நினைக்கலாம், போனாலும் அவங்களுக்கு உன்ன பார்க்க முடியாது. பார்த்தாங்கன்னா சலீம்ன்னா கூப்பிடுவாங்க? இல்லவே இல்ல.” என்று சிரித்தார்.

 

அவர் எதற்காகச் சிரிக்கிறார், வேறு நம்மை எப்படிக் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்த சலீமிடம் “உன்ன பேய்யுன்னு ஓட ஓட விரட்டுவாங்க, நீ வராதபடி என்னலாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வாங்க." ஏதோ அனுபவ வலியோடு பிடி கொடுக்காமல் பொடி வைத்தே கண்ணடித்தபடி பேசினார் சாகுல்.

 

கண்களுக்குக் குளிர்ச்சியாகவே எல்லாக் காட்சிகளும் விரிவதாக உள்வாங்கிய சலீம் ‘இதெல்லாம் இவர்களுக்கும் தெரியுதா? இல்ல தனக்கு மட்டுந்தானா?’ என்ற யோசனையில் இருந்த போது ஒரு மரத்தில் வித்தியாசமான கனியைக் கவனித்தான். "என்ன மரம் இது?" என்று கைகளுக்கு எட்டும் கனியை தடவி ’சுவைக்கலாமா கூடாதா’ என்று எண்ணிக் கொண்டே, முதல் மனிதர் ஆதாம் கதையாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு கேட்டான்.

 

"மரமா?" என்று தங்களுக்கு காட்சி தராத மரத்தைப் பற்றி கேட்கிறார் என்று உணர்ந்து மூன்று பேரும் சிரித்தார்கள். ஏதோ விளங்கி கொண்டவனாகச் சலீம், "சரி விடுங்க, உங்க வீடு ரொம்பத் தொலவா? யார் கூடத் தங்கியிருக்கீங்க?" என்று பேச்சை திசை திருப்பினான்.

 

வெண்கல குண்டாவில் சில்லரையைக் கொட்டிய சிரிப்போடு சாகுல், "சரியாப் போச்சு வீடா? வந்தவுடனே வீட்ட பத்தி கேட்குற... நான் வந்து எவ்வளவு காலத்திற்குப் பிறகு எனக்குத் தங்குறதுக்கு இடம் கெடச்சது தெரியுமா?” என்று அலுத்து கொண்டார்.

 

“என் வீட்டைத்தான் நீ பார்த்தியே, அப்படியான வீடு உனக்கும் விரைவில் அமையும்” என்றார் மாத்யூ.

 

வேந்தன் வீட்டைப் பற்றி கேட்டால் தன் முதல்நாளை நினைவுக் கூர்ந்தவராக “நான் வந்தப்ப முதல் முதலா நான் பார்த்தது, என் சீனியர் வீராவையும் பாலாவையும்தான். அவய்ங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமான சிநேகிதய்ங்க.எல்லாரையும் கிண்டலடிப்பாய்ங்க, புள்ளைகள கூட்டிவச்சு கத சொல்லுவாய்ங்க, பாடம் கத்துக் கொடுப்பாய்ங்க. மாமிகளுக்கு வரிசைல நிண்டு ரேஷன் வாங்கித் தருவாய்ங்க, வயசானாலும் அவங்களால முடிஞ்ச எல்லா உதவியும் எல்லாருக்கும் செஞ்சாய்ங்க, அவய்ங்க ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா இங்க வந்து சேர்ந்து இங்கயும் திண்ணையில உட்கார்ந்துகிட்டு அடிக்கிற லூட்டி இருக்கே, அடேங்கப்பா.  அதுமட்டுமில்ல அன்னைக்கு பொசுக்குனு ரெண்டு பேரும் அன்பை வெளிப்படுத்துறோம்னு வாயோட வாய் வச்சு முத்தம் கொடுத்துக்கிட்டாய்ங்க, அதைப் பாத்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிப் போச்சு… அப்படி எனக்கானது அந்த முதல் நாள் மட்டுந்தான். அப்புறம் நான் ஒரு முழுமையான ஆற்றலாக மாறுன பின்னாடி எந்தவித வேறுபாடும் இல்லப்பா” என்று வியந்து கூறியபடி, “உனக்கு இந்த மாதிரி எதும் அனுபவம் இருக்கா மாத்யூ” என்று கேட்டார்.

 

“அந்த உலகத்துலதான் எல்.ஜி.பி.டி.ன்னு பிரித்து பார்த்துக்கிட்டு இருந்தோம், நான் ஏற்கெனவே சலீம்கிட்ட அதான் சொல்லிட்டு இருந்தேன். இந்த உலகத்துல பாலினப் பிரிவுமில்ல, அதனால வர ஏற்றத் தாழ்வுமில்லன்னு. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல. இதெற்கெல்லாமா வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கோம்னு நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு” தன் உண்மையான உள்ளார்ந்த  குமுறலை வெளிப்படுத்தினார்.

 

“தப்புன்னு நெனச்சதெல்லாம் இங்க தப்பே இல்ல. இம்மையில யாருதான் தப்பு சரியெல்லாம் விதியாக்குனாங்களோ!? வாழ்க்கையை சரியாக வாழாமல் விட்டுவிட்டோமோ?” என்று மாத்யூவின் வேதனையில் இணைந்து கொண்டார் சாகுல்.

 

கையையே கைப்பேசி போல் பாவித்த வேந்தன், தான் பார்த்து வியந்த விஷயங்களை மறுமை இணையத்தில் மட்டுமல்ல, சலீமுக்கும் புரிய வைக்கும் முயற்சியில் தன் பங்குக்கு, “இங்க எனக்குப் பிடிச்ச விஷயமே, நம்ம ஊருல நாம் ஆன்னு பாத்த பிம்பங்கள், எல்லாம் இங்க அவன்பாட்டுக்கு சாதாரணமாத்தான் திரிவான், நம்ம வயித்துல அடிச்ச அரசியல்வாதிப்பயகளெல்லாம் நமக்காகச் செக்கிழுப்பான், விவசாயம் பார்ப்பான், வண்டி ஓட்டுவான், நம்ம சொல்ற எல்லா ஏவல் வேலையையும் செய்வான். ஏமாத்தி பொழச்ச அம்புட்டுப் பயகளும், பெட்டி பாம்பா அடங்கி, தொடர்ச்சியா இடத்தத் தூய்மைப்படுத்திக்கிடே திரிவான், செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவான், இயற்கையைப் பராமரிப்பான், ஏதாவது ஒரு வேலையைச் செஞ்சிக்கிட்டு சுத்திக்கிட்டே கெடப்பான். அவய்ங்கள பாக்கும் போது இதெல்லாம் தேவையாடா உனக்குன்னு சிரிப்பு சிரிப்பா வரும். ஆனா பார்த்துக்க, இங்க சாக்கடையில்ல, இல்லாட்டி அதை இந்த அயோக்கியப்பயகதான் தூய்மைப்படுத்தி இருப்பாய்ங்க, பார்க்க கண் கொள்ளா காட்சியா இருந்திருக்கும். அப்புறம் நீ வீட பத்தி கேட்டேல்ல, அதுக்கு நீ தகுதியாகிட்டா உன் பெயருக்கான அழியாத வீடு உனக்கே தெரியும். சிலருக்கு வந்ததும் கெடச்சிரும் அப்படியே செட்டிலாகிடுவாங்க. உள்ள போனதும் அவங்க மனசப் பொறுத்த எல்லாம் செமயா இருக்கும்” என்று வியக்கும் விதமாக சொல்லி வைத்தார்.

 

“போன வாரம் மன்னடி ஆலிம்ஸா தர்மர் சர்புதீன் மவுத்தாகி இங்க வந்ததும் அவருக்கான வீடு வாசல் கனி வகைகள் அது இதுன்னு தடபுடலா இருந்ததுன்னு பேசிக்கிட்டாங்க. யாரு பேசிக்கிட்டாங்கன்னு என்கிட்ட கேட்க கூடாது. அப்புறம் அந்தத் தடபுடலையெல்லாம் நான் எதையும் என் கண்ணாலப் பார்க்கல. ம்ஹூம் இதெல்லாம் இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா என் சொத்த பூராம் தர்மத்துக்கே கொடுத்திட்டு, உலக மக்களுக்காகவே உழச்சிட்டு வந்திருப்பேன்" என்று பெருமூச்சு விட்டார் சாகுல்.

 

’தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்களுக்கும் இவ்வளவுதான் தண்டனையா?’ என்ற யோசனையில் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்த சலீம் 'இதற்கு மேல் இவர்களை தம் கேள்வியால் தொந்தரவு செய்ய கூடாது' என்று முடிவெடுத்தான். அந்தக் கணமே அந்த மூவரும் அங்கிருக்கவில்லை. சுற்றித் தேடினான், யாரையும் காணவில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயங்கள் நடக்கிறதே என்ற மயக்கத்தில் இருக்கும் போது அவன் பூமியில் பார்த்திராத அதி அற்புதமான இயற்கை அழகுகள் கண் முன் விரிந்து கிடந்தது. 'எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு யுகமாகும், இங்கேதானே நிரந்தரமாக இருக்கப் போகிறோம் எவ்வளவு காலமென்றால்தான் என்ன' என்ற நினைப்பிலேயே இருந்தவனின் நெஞ்சை யாரோ அமுக்குவது போல் இருந்தது. உடல் வலிமை இழந்து பலகீனமாக படுக்கையில் கிடத்தி இருப்பதும். சுற்றி மனைவி மக்கள் அழுவதும் தெரிந்து, மூச்சை இழுத்துவிட்டான்.

 

“தேங்க் காட், ஹி இஸ் பேக் வித் அஸ்” என்று மருத்துவர் மகிழ்ச்சியாக கூறினார்.

 

சலீமின் மகிழ்ச்சிதான் முற்றும் வடிந்துவிட்டது.


No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி