Sunday, June 07, 2020

தெரிந்த எழுத்தாளரின் தெரியாத எழுத்து

தெரிந்த எழுத்தாளர்களுடைய எழுத்தை வாசிக்கும் போது எழுத்தில் அந்த எழுத்தாளர் தெரிவது இயல்புதான். ஆனால் அதற்கான எந்தச் சுவடையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் தெரிசை சிவா. குட்டிகோராவின் மணம் எனக்கு சிவாவை தெரிந்த பிறகே தெரிய வந்தது. இது சிவாவுடைய முதல் நூல், இருப்பினும் தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தோட்டம், நாஞ்சிலுக்கே உண்டான எள்ளல், ஒவ்வொரு கதையிலும் ஒளித்து வைத்திருக்கும் சுவாரஸ்யம் அந்த நூலை வாசித்து முடிக்க வைக்கிறது சொற்ப தினங்களில். ஆம், தினங்களில்தான். இப்போதெல்லாம் என்னால் சொற்ப நிமிடங்களிலோ, நாழிகைகளிலோ சிறிய நூலாக இருந்தாலும் முடிக்க இயலவில்லை. அதுவும் குட்டிகோரா எடுத்தால் படித்தே ஆக வேண்டுமென்று, முனையில் உட்கார்ந்து கொண்டு, அடுத்து என்னவென்ற ஆவலில் நகம் கடிக்க வைக்கும் நூல் இல்லை.
பக்கீர் பாய், அண்டி, இராமசாமி வாத்தியார், வள்ளியம்மை என்று நான்கு கதையின் முக்கியக் கதாபாத்திரத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக உணர்கிறேன். அதனால் முதல் நான்கு கதைகளுமே ஒரே மாதிரியான வடிவமாக எனக்குத் தெரிந்தது. முதல் பகுதி அந்த முக்கியக் கதாபாத்திரத்தின் விவரணையோடு நம் குவியத்தை அவர்கள் மீது செலுத்தி கடைசியில் அவர்கள் மன அளவு பாதிப்பை நம்மிடமும் கடத்துகிறார் நூலாசிரியர். என்னதான் வெள்ளை காகிதத்தில் ஒரு கருப்பு புள்ளி வைத்து அதனை என்னவென்று யாரிடமாவது காட்டி கேட்டால் வெள்ளை காகிதம் என்று சொல்லாமல் கருப்பு புள்ளி என்று சொல்லும் மனங்கள் தான் அதிகம் என்பதைத் தமது கதைகளில் நிறுவியுள்ளார்.

ஒரே மாதிரி கதைகள் அமைவதிலிருந்து வெளிவர அல்ல அந்த வடிவத்தை உடைக்கும் உபாயமாக அடுத்ததை ஜமீன் கதையாக்குகிறார் ஆனால் முடிவு நமக்கு முன்னதாகவே உய்த்துணர முடிகிறது.

நூலாசிரியர் சிவாவின் பலமே அவருடைய விவரணைகள்தான் என்று தோன்றுகிறது. சூழலை நம் கண்முன்னே கொண்டு வந்து, அதில் வரும் கதாபாத்திரங்களின் அமைப்பை நம்முடைய கற்பனைக்கு விட்டு வைக்காமல் அவர்களையும் விவரித்து நம் முன் நிறுத்தி பிறகு கதைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அதில் மிளிர்ந்தது 'வெத்தலப்பட்டி' கதை.

வேட்டியை மட்டும் கட்டும் என் மாமாவை நினைவுப்படுத்தியது 'பேண்ட்' கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வகைமையாக்க வேண்டுமென்றே பேய்களையும் யட்சினியையும் சேர்த்துகொண்டு மூன்று கதைகளில் நம்மைப் பயமுறுத்துகிறார்.

குட்டிகோரா, நருவல் ஆகிய கதைகளில் எழுத்துக்களின் நறுமணத்தை நமக்கு விட்டுச் செல்கிறார்.

'முடியன்' என்ற கதையில் நையாண்டியில் முத்திரைப் பதிக்கிறார். ஜெமோவின் 'மாடன் மோட்சம்' கதையை நினைவூட்டுகிறார். அதைப் போலவே 'அண்டி' என்ற கதையும் நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா'வை நினைவுப்படுத்துகிறார். சிவாவும் நாஞ்சில் எழுத்தாளர் என்பதால் அதே கதாப்பாத்திரத்தை ஒரே இடத்தில் நின்று பார்த்து எழுதலாம், ஆனால் ஒரே கதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கும் தாக்கமே இரண்டு கதைகளிலும் வெளிப்பட்டது. அபிமான எழுத்தாளர்களின் எழுத்து சாயல் இருக்கலாம் கருத்து சாயலுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

சிவாவின் எழுத்தில் ஆங்காங்கே நகைச்சுவையோடு கலந்த ஒருவரி அழகியல்கள் அழகு. நான் இரசித்ததில் சில:
'கிளாசுக்களோடு அந்த நினைவுகளையும் கழுவ ஆரம்பித்தார்'
'சாமியாப் பொறந்தா வைணவச் சாமியா... அதுவும் திருப்பதி வெங்கடாச்சலபதியா பொறக்கணும்'

இயல்பான நடையில் சொல்லப்பட்ட வெவ்வேறு வகைமையான கதைகளென்றாலும் ஒரே மாதிரியாகக் கட்டமைத்து கொண்டுவந்து நேர்மறையாக நிறைவாகிறது எல்லாக் கதைகளும். சிறுகதையென்றால் இப்படித்தான் கட்டமைக்க வேண்டுமென்று எழுத்துப் பட்டறையில் ஏதும் நூலாசிரியர் கற்றறிந்திருக்கலாமாக இருக்கும்.

நூற்றி ஐம்பது பக்கத்தில் பதிமூன்று கதைகள் இலகுவான வாசிப்புக்குத் துணையாகிறது ஆனால் எழுத்துப்பிழைகளை அடுத்தப் பதிப்பில் திருத்திவிட்டால் நன்றாக இருக்கும் அத்தோடு நூலின் உள்ளடக்கமும் எனக்கு அவசியமாகப்படுகிறது. ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவந்த 'குட்டிகோரா' உண்மையானவர்களை நமக்கு அறிமுகப்படுத்திச் சில இடங்களில் நமக்குப் புன்முறுவலை அள்ளித் தருகிறது. நீங்களும் வாசித்தால் நான் சொல்வது சரியென்று ஒத்துக்கொள்வீர்களாக இருக்கும். தெரிசை சிவாவுக்கு வாழ்த்துகள்

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி