Saturday, June 06, 2020

தெரியாம சாப்பிடலாமாம்...

சின்ன வயதில் அதாவது நான் ஆறாவது படிக்கும் வரை நோன்பு வைத்ததில்லை. நோன்பு வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்கும், காரணம் இஃப்தார் நேரம் அதாவது நோன்பு துறக்கும் நேரம். நோன்பு துறப்பதற்காக வகை வகையான பண்டங்கள் இருக்கும். எல்லாம் உணவகத்திலிருந்து வாங்கிய பண்டங்கள். பெரும்பாலும் நான் தான் கடைக்குச் சென்று வாங்கி வருவேன். போண்டா, சூடான ஜிலேபி, ஊத்தாப்பம் - சாதாரண ஊத்தாப்பமில்லை வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே சின்ன ரவுண்டவுமில்லாம பெரிய ரவுண்டாவுமில்லாம வெங்காயத்தைத் தூவி விட்டு, நெய்யை சில கரண்டி விளாவி, முறுகலா.. அந்த வகை ஊத்தாப்பம், இப்படி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான தின் பண்டங்களுக்காகவே “ப்ளீஸ் ம்மா நாளைக்கு நானும் நோன்பு வைக்கிறேன்” என்று அடம்பிடிப்பேன். வீட்டில் உம்மாவைத் தவிர வேறு யாரும் நோன்பு வைப்பதில்லை. என் வாப்பா ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்’ யாரையும் நோன்பு வைக்க அனுமதிக்க மாட்டார். நான் நோன்பு வைக்க வேண்டுமென்று அடம்பிடித்தாலும் “வேண்டாம் உன்னால் முடியாது, அடுத்த வருடம் பார்த்துக்கலாம்” என்றே பதில் வரும். மறுவருடம் பள்ளியில் என் சகதோழிகள் எல்லாம் நோன்பு நோற்றார்கள். “நீ நோன்பு வைக்கலையா?” என்று கேட்டார்கள். வெட்கமாக இருந்தது. பள்ளிக்குக் கொண்டு போன உணவை சாப்பிடாமல் அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவேன்.
இதைக் கவனித்த உம்மா “சரி முக்கியமான நோன்பு மட்டும் முதலில் வை. அப்புறம் உன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தால் மட்டுமே மற்ற நோன்பு” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். நானும் மறுநாள் நோன்பு வைத்தேன். ஏற்கெனவே சொன்னதுபோல் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்க நான் தான் கடைக்குச் சென்று வருவேன். அப்படிப் போகும்போதெல்லாம் ’கமிஷன்’ எடுப்பேன் - அதிகமில்லை நான்கு அணா அல்லது எட்டு அணா தான். இப்படிக் கிடைக்கும் கமிஷனில் முறையாகத் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்றுவிடுவேன். அதுவும் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட மாட்டேன். வீட்டில் வந்து சாப்பிட்டால் உடன்பிறப்புகள் பங்கு கேட்பார்களே, அதனால் வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு, கடைசிக் கடியை வீட்டில் வந்து அக்காவிடம் காட்டி “பாத்தியா தேங்காய் பிஸ்கெட்” என்று வெறுப்பேற்றிய பிறகே கடைசிக் கடியை முடிப்பேன். அன்றும் அப்படித்தான் கடைக்குச் சென்று மீதம் கிடைத்த சில்லறையில் தேங்காய் பிஸ்கெட் வாங்கித் தின்று கொண்டே வீடு வந்தேன். கடைசிக் கடியை அக்காவிடம் காட்டியபோது “நீ நோன்புல்ல?” என்றாள். ’அடடா நோன்பாச்சே’ என்று அவசரமாக வாய்க் கொப்பளித்து, வாந்தி எடுக்க முற்பட்டேன். என் வாப்பா பார்த்துவிட்டார்கள் “தெரியாம சாப்பிட்டா தப்பில்ல ஆனால் தெரிந்தே வாந்தி எடுத்தா தவறு” என்றார்கள். “ஓ அப்ப தெரியாம சாப்பிடலாம் போல” என்று அடிக்கடி தெரியாமல் சாப்பிட்டேன். “நீ சரிப்பட்டு வரமாட்ட” என்று என்னை அந்த வருடமும் நோன்பு வைக்க விடவில்லை. "இனி அப்படியான தவறுகள் நடக்காது நான் சரியான முறையில் நோன்பு வைக்கிறேன்" என்று உறுதி தந்தபின், அந்த உறுதியை நான் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கை வந்த பின் நோன்பு வைக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஊத்தாப்பமும் கிடைக்க ஆரம்பித்தது.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி