Tuesday, May 31, 2022

நெஞ்சுக்கு நிறைவான நீதி

 'நெஞ்சுக்கு நீதி’யில் வரும் கதாநாயகனைப் போலத்தான் எனக்கும் என் பதின்ம வயதில் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பற்றித் தெரியாமல் இருந்தது. ’உண்மையில் இன்றுமா சாதி அடுக்குகளினால் தீண்டாமை, கொலை எல்லாம் நடக்கிறது?’ என்று ஆச்சர்யமாகவே இருந்தது. வாசிப்பும், ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களும் அதன் உண்மை நிலவரத்தை, சாதிய பாகுபாடுகளை, அழுக்கைப் படம்பிடித்து மனதில் நிறுத்தின.

‘ஆர்டிகிள் 15’ பார்க்கும்போது மன அழுத்தமே ஏற்பட்டது. தமிழில் அந்தச் சாராம்சத்தைக் கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு கனமான திரைக்கதையை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் கௌரவ் சோலங்கி. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா அலட்டிக்கொள்ளாமல் செய்த அந்தக் கதாபாத்திரம், இவ்வளவு நடித்தால் போதுமானது என்று இருப்பதாலேயே தமிழில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உதயநிதி சரியான தேர்வுதான். தேவையான அளவே நடித்திருக்கிறார் அலட்டாமல். அவருக்குப் போலீஸ் உடை கச்சிதமாகப் பொருந்துகிறது. நல்லவேளையாகச் சண்டைக்காட்சிகள் இல்லை.
திரைப்படத்தைத் தூக்கிப் பிடிப்பதே அதன் திரைக்கதையும், வசனங்களும், ஒளிப்பதிவும்தான்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உதயநிதியை விடுத்து தான்யா, ஷிவானி, அப்துல், சுரேஷ், இளவரசு என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும் சரியாகச் செதுக்கி அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். ஆனால் வாசிக்கும் பழக்கம் உடையவராகக் காட்டப்படும் கதாநாயகன் உதயநிதிக்கு அதுவும் பெரியார்: ஆகஸ்ட் 15 நூலை வைத்திருப்பவருக்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், ‘தீட்டு’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதது போல் காட்டியிருப்பதெல்லாம் பொருந்தவில்லை. வெளிநாட்டில் படித்தவர் என்பதாலேயே வலிந்து திணித்து ஆங்கிலத்தில் பேசும் வசனங்களும் ஒட்டவில்லை.
பொருந்தாத விஷயங்களையும் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்களால் சரி செய்துள்ளார்.
விஜயராகவன் (உதய்): ‘உங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேணும்ல’
கதாநாயகி: ”ஹீரோ வேண்டாம். ஹீரோ வேணும்னு நினைக்கிற மனநிலை மக்களுக்கு வேண்டாம்”
----
விஜயராகவன் (உதய்): ”எல்லாரும் சமம்ன்னா அப்ப ராஜா யாரு?”
கதாநாயகி: ”அனைவரையும் சமம் என்று நினைப்பவன்தான்.”
--
”சட்டம்தான் எல்லாத்தையும் சரி செய்யும்.”
”சட்டமா? (எள்ளலுடன்) எங்களுக்கும் அதற்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?”
----
”நாயப் பேர் சொல்லி கூப்பிடுற நீங்க, மனுஷங்கள ஏன் இது அதுன்னு சொல்றீங்க?”
----
”ஏய் வா போ’ என்று சொல்லி கூப்பிடுவாரே தவிர என்றைக்காவது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்காரா?”
--
சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்படுவது, கூண்டில் இருக்கும் பெரியார் அம்பேத்கார், ஒதுங்கியே நிற்கும் இளவரசு, எரிச்சலைத் தூண்டும் சுரேஷ் என்று வசனமில்லாமல் காட்சியால் நம்மைக் கலங்கடிக்கும் இடங்களும் உண்டு. ஆனால் இப்படியான காட்சிகளுக்கு இரண்டு பாடல்களைத் தவிர, பின்னணி இசை சிறப்பாக அமையவில்லை. அ ஆ ஆ அ என்று பின்னணியில் இழுவையாக யாரோ கத்திக் கொண்டே இருப்பதாக உள்ளது. சத்தியாவைத் தேடும் போது அதற்கான பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவள் கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சி நம்மை வந்தடையவில்லை. இந்தப் பின்னடைவிற்கு முக்கியக் காரணம் இசைதான். திபு நினன் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
படத்தில் எனக்குப் பிடித்த காட்சியென்றால் ‘டாக்டர் அனிதா, பயப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன்’ என்று உறுதியான குரலில் சொல்லும் அந்தக் காட்சி ’நீட்’ தேர்வுக்கான வாக்குறுதியாக எனக்கு ஒலித்தது. உங்களுக்கு?
’நெஞ்சுக்கு நீதி’ மனதிற்குக் கொஞ்சம் நிறைவைத் தந்தது.

Saturday, May 21, 2022

நல்லுள்ளம் சூழ் உலகு!

 சம்பளம் வாங்கி வேலையில் இருந்தபோது யாரும் என்னை ஏமாற்றியதில்லை, அதற்கான வாய்ப்புமில்லை. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தொழில் தொடங்கிய பிறகுதான் ‘டிசைன் டிசைனாக’ ஏமாற்றுபவர்களைக் கண்டு வியக்கிறேன்.

நாங்கள் செய்வதோ பயிற்சி தந்து சான்றிதழ் தருவது அல்லது ஆய்வு செய்து இயந்திரம் வேலை செய்யப் பாதுகாப்பானது என்று சான்றிதழ் தருவது. சான்றிதழ் தரும்போது பணம் தந்துவிட வேண்டுமென்ற ஒப்புதலின் பேரில்தான் பயிற்சிக்கே வருவார்கள். நிறைய வேலைக்கு இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அதற்கான வேலைத் திட்டமே (project) கையெழுத்தாகும் அல்லது செயல்படுத்த முடியுமென்பதால் ஓரளவுக்கு எல்லாரும் சரியாகப் பணம் தந்து சான்றிதழ் தருவார்கள்.
ஒரு நிறுவனம் 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தது. காசோலையைப் பெற்றுக் கொண்டு சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன்புப் பணத்தைச் செலுத்திவிட்டு, காசோலையைத் திரும்ப வாங்கிக் கொண்டனர். எங்களுக்கும் அதில் எந்தச் சந்தேகமோ ஆட்சேபனையோ இல்லாமல் இருந்தது. மறுபடியும் அதே நிறுவனம் வேறொரு ஆய்வுக்கான் (inspection) சான்றிதழ் கேட்டார்கள், முடித்தோம். அதேபோலவே 30 நாட்களுக்கான காசோலையைத் தந்தார்கள் உறுத்தல் இல்லை பெற்றுக் கொண்டோம். சான்றிதழைத் தந்துவிட்டோம். 30 நாட்கள் முடியும் முன் அழைத்துப் போன முறை போலவே பணமாகத் தந்துவிடுகிறோம் காசோலையை வங்கியில் இட வேண்டாம் என்றார்கள். சரி என்று நாங்களும் காத்திருந்தோம். ஆனால் பணம் வரவில்லை. கேட்கும்போதெல்லாம் இன்று நாளை என்றே இழுத்தடித்தார்கள். பெரிய தொகையுமில்லை. 60 நாட்களுக்கு மேலாகிவிட, சரி சின்ன தொகைதானே இதுவுமா அவர்கள் வங்கியில் இருக்காது என்று எண்ணிக் காசோலையை வங்கியில் துணிந்து செலுத்திவிட்டோம். முதல் நாள் வந்துவிட்டதாகக் காட்டிய கணக்கு மறுநாளே சுதாரித்து, இல்லை காசோலை திரும்புகிறது என்று வந்துவிட்டது. அதில் காட்டிய காரணம்தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் தந்த காசோலை, வங்கிக் கணக்குச் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் காசோலை. அமீரகத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய குற்றம். நிறுவனத்தை அழைத்து என்ன இப்படி ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று கேட்க, விழுந்தடித்துக் கொண்டு வரும் வாரத்தில் பணம் செலுத்தி விடுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். காத்திருக்கிறோம்.
இன்னொரு பெரிய நிறுவனம் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் 2 வருடங்களாகியும் பணம் தரவில்லை. தெரிந்தவர்களின் நிறுவனம்தான் ஏமாற்ற மாட்டார்கள், தாமதமானாலும் தந்துவிடுவார்கள். பெரிய தொகை என்பதால் சுணங்குகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். மேலாளரும், நாங்கள் மற்றவர்கள் மாதிரி இல்லை, காலம் தாழ்த்தினாலும் பணம் வந்துவிடுமென்றே உறுதியளித்தார். சமீபத்தில் நிறுவனத்தை மூடிவிட்டார்கள், பல வழக்கு விசாரணைகள் அந்த நிறுவனத்தின் மேல் இருப்பதாகவும் அவர்கள் திவால்நிலை அறிவித்துவிட்டார்கள் ஆகையால் பணம் வராது என்றும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு சமீபத்தில்தான் தெரிந்தது, திவாலென்று அறிவித்துவிட்டு, மூடுவதுபோல் காட்டிவிட்டு யாருக்கும் பணம் கொடுக்க முடியவில்லை என்று கைவிரித்தவர்கள், வேறு நிறுவனத்தை வேறு பெயரில் தொடங்கிச் சுகமாகத் தொடர்கிறார்கள் என்று.
இவர்கள் இப்படியென்றால் இன்னொரு நிறுவனம் சான்றிதழ் அவசரம் எங்கள் அலுவலக ஓட்டுநர் காசோலையோடு வருகிறார், உடனே கொடுத்தனுப்பி விடுங்கள். அவர் அங்கு வந்தவுடனே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்று கேட்க, வெள்ளந்தியான நானும் என் கணக்கரிடம் மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். வந்தவர் காசோலை தந்தார், வாங்கிவிட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். காசோலையைப் படிமம் எடுக்கும்போது கவனித்தால் அதில் கையெழுத்து இல்லை. அந்த நிறுவனத்தை அழைத்துக் கேட்டால் தவறு நடந்துவிட்டது உடனே அனுப்புகிறோம் என்று இன்னொரு மாதம் இழுத்தடித்துவிட்டு தந்தனர். இன்னொரு நிறுவனம் இப்படித்தான் அவசரமாகச் சான்றிதழ் வேண்டுமென்று காசோலை தந்தார்கள் கையெழுத்தெல்லாம் இருந்தது, ஆனால் Proactive Excel Safety Consultancy என்பதில் lலை விட்டுவிட்டார்கள். படிக்கும்போது மூளை அதனைக் கவனமாகப் பார்க்காதுதானே விட்டுப் போய்விட்டது. ஆனால் அதன் பிறகு பார்த்து கேட்டால் இதோ அதோ என்று அதேபோல் தான் இழுத்தடித்துத் தந்தார்கள்.
இன்னும் சிலர் ஆய்வுச் சான்றில்லாமல் அதற்கான முன் அறிக்கை (first report) மட்டுமே வைத்துத் தனக்கான காரியத்தை முடித்துவிட்டு ‘என்ன ஆய்வு, எப்போ செய்தீர்கள், யார் நீ’ என்பதாக ஏமாற்றுகிறார்கள். எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது என்ற அதிர்ச்சியிலேயே பலரை மன்னித்து விட்டுவிட வேண்டியுள்ளது (வேற வழி!?). என்னதான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றினாலும் இறைவன் ஏதாவதொரு வகையில் உதவிக் கொண்டுதான் இருக்கிறான். ’நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’ என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே?!


சமத்துவம்

 எனக்குத் தெரிந்த ஒரு சகோதரமத நண்பர் மனமார உண்மையாகவே நோன்பு வைக்கிறார். அதென்ன ’மனமார’ அப்படியென்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதாவது நான் பார்த்த மற்ற நண்பர்கள் எல்லாம் சூரியன் எழும் முன்னெல்லாம் துயில் கலைந்து நோன்பு இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த நேரத்தில் எழுந்து சாப்பிட்டு, அதன் பிறகு மாலையில் அவர்களுக்குப் பிடிக்கும் நேரத்தில் நோன்பை முறிப்பது பெரும்பாலும் நாம் பார்க்கக் கூடிய நோன்பாக உள்ளது. இவரும் முதல் வருடம் அப்படிதான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களை மிஞ்சம் வகையில் சுஹூர் நேரத்திற்கு முன்பாகவே துயில் கலைந்து சாப்பிடுகிறார். ”சுஹூருக்கு என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான் ’மோர் சாதம்’ என்று. அதேபோல இஃப்தாருக்கு “என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டபோது ”பேரிச்சம்பழமும் தண்ணீரும்” என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ”வேற என்ன சாப்பிட்டீங்க?” என்றேன். ”வேற என்னங்க, இரவு உணவான மூன்று இட்லியும் சட்னியும்” என்றார் மிகவும் எளிமையாக. என் கண்கள் கலங்கியே விட்டது. கலங்கியதற்குக் காரணம் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொண்டதால். இஃப்தாரென்றாலே ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து, ஏதோ அது சாப்பிடும் சடங்காகவே மாறிப் போயிருந்த என் அகராதியில் அதுவும் தெரிந்தவர்களெல்லாம் ‘நான் இதைச் சமைத்தேன்’ என்று படம் காட்டும்போதெல்லாம் ‘ஓ இதை மறந்துட்டோமே, இதைச் செய்வோம்’ என்று அடிப்படையான இறை வணக்கதை மறந்து சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஃப்தாரை இவர் இவ்வளவு எளிமையாகச் சொல்லும்போது அது எனக்கு ஒரு திறப்பாகவே தெரிந்தது. போன வருட நோன்பில் சில வேளைகள் தொழுதார், அதில் தனக்கு ஆத்மதிருப்தி கிடைப்பதாக உணர்வதாகச் சொன்னதெல்லாம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவர் முதல் வருடம் நோன்பு இருக்கும்போது, புகைப்பிடித்தல் பழக்கத்தால் நோன்பு வைப்பது சிரமம் என்றார். ’நோன்பை காரணமாக வைத்து புகைப்பிடித்தலைக் கைவிட்டாலென்ன’ என்றேன். சிரமம் என்றார், கொஞ்சம் அறிவுரைத் தந்தேன். முயற்சி செய்கிறேன் என்றார். பல வருடக்காலப் பழக்கமான புகைப்பிடித்தலை அறவே கைவிட்டார். நட்பும் நோன்பும் வென்றது.


மத்திய பிரதேசத்தில் கல்லினாலான கட்டிடங்களை வேண்டுமென்றால் நீங்கள் தகர்க்கலாம், ஆனால் தமிழ் நாட்டவர்களின் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், நேசத்தையும் உங்களால் அசைக்கவே இயலாது. அவர்களின் நோன்பும் மாண்பும் ஒருவருக்கொருவரான அன்பும் நம்பிக்கையும் திராவிடமென்ற வலுப்பெற்ற விதையில் வளர்ந்த விருட்சம்.

Monday, May 16, 2022

ஜன கன மன - தேசியப் படம்

ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள். ஆனால் ஏன் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றி மட்டும்தான் ஊடங்கள் பெரிதாகப் பேசுகின்றன? ஊடகங்களால் உந்தப்படும் நாமும் ஒரு மரணமென்றால் ’நம் ஊரா? நம் மாநிலத்திலா? நம் சாதிப் பெண்ணா?’ என்றெல்லாம் தெரிந்த பிறகே அதைப் பற்றிப் பேசுகிறோம், பதறுகிறோம். உண்மைதானே? அதேபோல ஓர் என்கவுண்டர் நடந்தால் ’பாஸ்ட் புட்’ மாதிரி ‘இன்ஸ்டண்ட் டீ’ மாதிரி அது ஒரு ‘திடீர் தீர்ப்பு’ என்றெல்லாம் உணராமல், அவன் சாகடிக்கப்பட வேண்டியவன்தான், தூக்கில் போடப்பட வேண்டியவன்தான் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் விஷயங்களை மட்டும் உள்வாங்கி நாமும் அதற்குச் சாதகமான தீர்ப்போடு ஒத்துப்போக இணங்கிவிடுகிறோம்.

அதிகாரவர்க்கம் ஊடகங்களின் துணையோடு, காவல்துறையைக் கைப்பொம்மையாக்கி எப்படியெல்லாம் மக்களை உணர்வுப்பூர்வமாக ஆக்கிரமிக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் பேசுகிறது ‘ஜன கன மன’ திரைப்படம். 

இதனை மலையாளப்படம் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது, இது ஒரு தேசியப் படம். அனைத்துச் சமூகத்தினரும் பார்க்க வேண்டிய படம். அதனாலேயே இந்தப் படத்திற்கு ‘ஜன கன மன’ என்று பெயர் வைத்திருப்பதாக உணர்கிறேன்.


ஒரு படத்தில் நான் எப்போதும் எதிர்பாப்பது கதையையும் காட்சியமைப்புகளையும் மட்டுமேயல்ல. மாறாக, அந்தப் படத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, புதுச் சிந்தனைகளை, விரியும் எண்ணங்களை, நமக்கு முன் எழும் சவால்களை இவை எல்லாவற்றையும்தான் 

மிகவும் முக்கியமானதென எண்ணுகிறேன்.. 

வெறும் பொழுதுபோக்காகப் பார்க்கப்படும் ’கேஜிஎப்’களோடு இப்படியான படங்களும் வரவேற்கப்பட வேண்டும். படத்திற்குப் பிறகு ஏற்படும் விவாதமே இம்மாதிரியான படத்திற்கான முழு வெற்றி.

முதல்பாதி படு வேகம், விறுவிறுப்பான காட்சியமைப்பால் அடுத்து என்ன? பேராசிரியர் சபாவாக வரும் மம்தாவைக் கொன்றது யார்? அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் நிகழக் கூடாது என்று சபாவின் மாணவர்கள் போலவே நாமும் சேர்ந்து அவளுக்காகப் போராடி கொண்டிருப்போம் மனதளவில். அதுவும் சஞ்சன் குமாராக வரும் சூரஜின் நடிப்பும் கம்பீரமும் நம்மையும் போராட்ட மனநிலைக்கே தள்ளிவிடும் தந்திரத்தைச் செய்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.

அதே வழக்கைத் தலைகீழாக மாற்றுப் பார்வையில் விவாதிக்கிறது இரண்டாம் பாதி. அதுவும் காட்சியமைப்பாக இல்லாமல் வெறும் வசனமாக, நம் மனதைத் தொடும், உலுக்கும் வசனமாக மட்டுமே விரிகிறது காட்சி. நிறையப் பேருக்கு வெறும் வசனம் மட்டுமே பிடிக்காதுதான், ஒளிக்கான வேலையே இல்லாமல் ஒலியால் கலக்கியிருப்பது, அதுவும் பொதுவாகவே நீதிமன்றக் காட்சிகளில் ’விஷுவல் ட்ரீட்’ இருக்காது. ஆனால் இதில் திரை முழுக்க நிறைந்திருப்பது பிரித்விராஜ் என்பதால் 

சகித்துக் கொள்ள முடிகிறது, அவ்வளவு உணர்ச்சிப் பொங்க சிறப்பாக நடித்திருக்கிறார்.

2019இல் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் குழுவாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை வைத்துத்தான் இந்தப் படத்தைப் பின்னியிருக்கிறது திரைப்படக்குழு. ஆனால் போகிற போக்கில் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கரைப் பற்றியும், உட்கார இருக்கையும் இல்லாததொரு பள்ளிக்கூடத்திலிருந்து, அதுவும் பொதுவான குழாயிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாதென்று 

விலக்கப்படுகிற கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பெண் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு படித்துப் பட்டம் பெற்று, ஆளாகி, ஆராய்ச்சியாளராக முனைவராகப் பாடுபட்டும் முனைவர் பட்டம் பெற முடியாமல் தற்கொலை செய்வது 

என்பது அவளுடைய தோல்வியா? இல்லை, அவளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்களா? என்ற கேள்வியின் மூலம் ரோஹித் வேமுலாவின் "நிறுவனக் கொலை" பற்றியும் நினைவுப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். 

அத்தோடு நின்றுவிடாமல் வடக்கில் மாட்டிறைச்சிக்காக நடந்த கொலைகள், அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட கேரள சம்பவம், முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பதை சிலர் அவர்களில் வெளிப்புற தோற்றத்தை வைத்துப் பேசுவது, மனித உரிமையின் சார்புநிலை, நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகள், சாதி பிரிவினால் ஏற்படும் அட்டூழியங்கள் என்று எல்லாவித சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகத்திற்காகப் பேசியிருக்கிறது இந்தப் படம்.

படத்தில் பிடித்த வசனங்கள்:

”அரசியல்வாதிகள் நினைத்தால் பணத்தையும் செல்லாக்காசாக்க முடியும் ஓட்டையும் செல்லாமலாக்க முடியும், காரணம் இது இந்தியா.”

----------

சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு): ”உண்மையே வெல்லும்”

அரவிந்த் சுவாமிநாதன் (பிரித்விராஜ்): சத்தமாகச் சிரித்த பிறகு “காந்தியைக் கொன்றதிலேயே வெவ்வேறு கருத்துகள் கொண்ட நாடு சார் நம் நாடு”

இந்தப் படத்தின் ‘டீசரில்/ டிரெய்லரில்’ பார்த்து வாய்பிளந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இல்லாதது பெரிய ஏமாற்றம்.

தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் துணிச்சலான செயல்தான்.  அதற்கேற்ற தைரியமான வசனங்கள்தான் ஆனால் வேறுபட்டக் கூறுகளான துணிவும் வசனங்களும் ஒன்றிணையாமல் முழுமை பெறாமல் 

பிணைக்கப்படாமல் துண்டு துண்டாக நிற்பது எடிட்டர் சுதீப் இளமோன் மற்றும் ஸ்ரீஜித் சாரங்கின் தோல்வியா அல்லது இரண்டாம் பாகத்தில் முழுமை பெறுமா என்று தெரியவில்லை ஸ்ரீதிவ்யாவெல்லாம் 1-2 காட்சியில் வந்து செல்கிறார், எதற்கு 

என்ன பின்னணியென்று புரியவில்லை. ஒட்டுமொத்தப் படத்திற்கும் பலமென்றால் அது ஜேக்ஸ் பெஜாயின் பின்னணி இசைதான். முக்கியமாகப் படத்தின் கீதமாக வரும் வங்காள மொழிக் கலப்போடு ஒலிக்கும் பாடல் நம் உணர்வுகளைத் 

தூண்டுவதாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

குறைகளை மீறிப் பிடித்திருக்கும் படம். அவசியம் பார்த்துவிடுங்கள் விவாதிப்போம்.


#moviereview #JanaGanaMana

Friday, February 25, 2022

Jesus with Turban

 குளிர்காலத்தில் அதிகாலையில் விடியலைக் காண 'அல் குத்ரா' ஏரிக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லும்போதெல்லாம் நேரமிருந்தால் ‘லவ் லேக்’ என்ற அதன் அருகில் உள்ள மற்றொரு ஏரிக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். அன்றும் அப்படித்தான் அக்கா மற்றும் குழந்தைகளுடன் சூரிய உதயத்தை ரசித்துவிட்டு அங்கிருந்து ‘லவ் லேக்’ சென்று மீன்கள் நிறைந்த இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்துவிட்டேன்.

அங்கு நின்றிருந்த என் குழந்தைகளும் என் அக்காவும் பதறிவிட்டனர். என்ன செய்வதென்று யோசிக்கும் கணப் பொழுதில், நீச்சல் தெரியாத எனக்கு யாரோ உள்ளிருந்து வெளியில் வர உதவியது போல் இலகுவாகச் செல்பேசியுடன் மேலே வந்து முதலில் செல்பேசியை வைத்துவிட்டு ஏதோ உத்வேகத்தில் நானும் மேலே ஏறி வந்துவிட்டேன். ஆழமில்லை என்றாலும் அது பாறைகள் நிறைந்த பகுதி. அதுவும் குளிர்காலமென்பதால் நடுங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வேலை பார்ப்பவர் பதறியடித்து ஓடி வந்து தலையில் ஏதும் அடி இல்லையே என்று மீண்டும் மீண்டும் கேட்டார். வேறு எங்கும் அடிபடவில்லை என்பதைக் கேட்டு உறுதி செய்த பிறகு, அவர் சென்று தன் வாகனத்தை எடுத்து வந்தார். அதில் ’ஹீட்டரை’ இயக்கி, அணிந்திருந்த ஆடை காய்வதற்கு உதவினார், சூடாகத் தேநீரும் கொண்டு தந்தார். “இல்லை நான் காபி, டீ குடிப்பதில்லை” என்றேன். ”அதெல்லாமில்ல சூடாக ஏதாவது அருந்தினால்தான் நல்லது” என்றார் பல வருடம் பழகியவர்போல். பேசிய பிறகு நம்மூருதான் என்று அறிந்து மகிழ்ந்தோம். எதிர்பார்ப்பின்றி உதவும் மனம் சிலருக்குத்தான் என்று மகிழ்ந்து விடை பெற்றோம்.
செல்பேசி வண்ணமயமான திரையைக் காட்டியது. அது சாம்சங் 8+ அதனை அணைத்துவிட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இயக்கினேன் சரியாக வேலை செய்தது. இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. சமீபத்தில் அதே இடத்திற்கு மீண்டும் சென்றோம்.


என் அக்காவின் மகன் வந்திருந்தான். அவனிடம் நான் அங்கு அந்த ஏரியில் விழுந்த கதையைப் பற்றியும் உதவியவர் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தேன். அதே மீன் நிறைந்த பகுதிக்குச் சென்றோம் படமெடுத்தோம். பேசிக் கொண்டிருந்தபோதே ஏதோ தட்டியது போல நான் விழுந்த அதே பகுதியில் இந்த முறை என் கைப்பேசி தவறி வீசியது போல் ஏரியில் விழுந்துவிட்டது. இந்த முறை சாம்சங் 20+, என் கணவரோ வசை பாட ஆரம்பித்திருந்தார். என் அலுவல் வேலை எல்லாமே அந்த ஒற்றைச் செல்பேசியில்தான் இயங்கிக் கொண்டிருப்பதால் என்ன செய்வதென்றறியாமல் நின்றிருந்தேன். வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அங்கு வேலை செய்பவரிடம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் யாருக்கோ தன் செல்பேசியில் தொடர்பு கொண்டு வரச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கணவர் ஏசிக் கொண்டிருந்த நேரம், என் மகள் மெதுவாக மீன்கள் அருகே சென்று மீன்களிடம் உதவி கேட்டிருக்கிறாள். திடீரென்று அந்த ஏரியில் எல்லா மீன்களும் அடித்துக் கொண்டு அலையோடு ஓசையை எழுப்பியது. என் மகள் ‘மொவானா (Moana)’ இல்லைதான் ஆனாலும் அது நிகழ்ந்தது. அதற்காக மீன்கள் என் செல்பேசியைக் கையில் எடுத்துத் தருமென்றெல்லாம் நீங்கள் வீண் கற்பனை செய்யாதீர்கள்.
என் செல்பேசி இன்னும் ஏரித் தண்ணீர் மூழ்கிவிட்டிருந்தது. அரை மணி நேரத்திற்கு மேலேயே கடந்துவிட்டிருந்தது. இவ்வளவு நேரம் தண்ணீரில் கிடக்கும் செல்பேசி செத்துவிட்டது என்று உறுதி செய்ய என் எண்ணை அழைத்தும் பார்த்தோம் ‘not reachable' என்றே வந்தது. அப்போதுதான் அந்த ஆபத்பாந்தவர் வந்தார். ஒல்லியான உயரமான உருவம். சீக்கிய மரபுக்கான முண்டாசை அணிந்திருந்தார். அவரைப் பார்க்க ஏசுநாதர் தலைப்பாகை அணிந்திருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு சாந்தமான முகம். என்னைப் பார்த்தவுடன் புன்முறுவல் தந்தார். எந்த இடத்தில் விழுந்தது என்று கேட்டார். நான் கை நீட்டிக் காட்டினேன். புன்னகை மாறாமல் அப்படியே அந்தக் குளிர்ந்த ஏரியில் இறங்கினார். மீன்கள் பயந்தெல்லாம் ஒதுங்கவில்லை. அவரைச் சூழ்ந்தன. நான் ”இங்கே, அங்கே” என்று விசனத்துடன் சொன்னதைப் புன்முறுவலுடன் கடந்து மிதந்து கொண்டே தேடினார். அவர் பெரிய தாடி நனைந்துவிட்டது ஆனால் அவருடைய முண்டாசு நனையவில்லை. நனையாதவாறே மிதந்தார். கூர்மையாக என்னைப் பார்த்து ”இந்த இடம்தானா?” என்று மெல்லிய குரலில் கேட்டார். ”இன்னும் கொஞ்சம் தள்ளி” என்றேன். ஆனால் அவர் நீரில் தியானம் செய்பவர்போல் அங்கேயேதான் நின்றார். என்ன செய்தாரோ தெரியவில்லை பத்து நிமிடம்தான் இருக்கும் சட்டென்று மாயவித்தைப் போல் என் செல்பேசியை எடுத்துத் தந்தார். செல்பேசிக்கு உறை அணியும் பழக்கமில்லை - வெறும் skin wrap மட்டுமே செய்திருந்தேன். ஆனாலும் என் கைப்பேசி அணையாமல் ஒன்றுமே ஆகாமல் அப்படியே உயிரோடு, நனைந்த சுவடே இல்லாமல் இயங்கியது. கண்கள் நிறைந்து அவரை நன்றியோடு பார்த்தேன். அவர் எதையுமே எதிர்பாராதவராகத் தன் வாகனத்தில் ஏறச் சென்றவரிடம் வலுக்கட்டாயமாகச் சிறிது பணத்தை அவர் மறுத்தும் என் கணவர் திணித்தார்.
இந்த அதிசய நிகழ்வை பிரமிப்போடு, என் ஆச்சர்யங்கள் மாறாமல் சிலாகித்து நண்பரிடம் சொல்லி கொண்டிருந்தேன். அவரோ சிரித்துக் கொண்டே வடிவேலு ஸ்டைலில் “சாம்சங் ‘ஐபி68’ அதான் மொபைலுக்கு ஒன்னுமாகல. இதுல ஒரு மாயாஜாலமும் அதிசயமுமில்ல. ‘Jesus with Turban’ஆ ஹைய்யோ ஹைய்யோ”ன் என்று லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து அநாயசமாக என் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கினார்.

Saturday, September 11, 2021

கவிஜ கவிஜ...

 

நாட்கள் நீளவில்லை

தூரம் ஏதுமில்லை

விழியில் வேர்வையில்லை

நினைவுகள் அழியவில்லை

துயர் கசக்கவில்லை

காத்திருப்பும் சுகமானதே.

30.8.2021
இரவு 10.21
ஜெஸிலா


உன்னைப் பார்க்காமல்
சென்றேன் என்று நினைத்துவிட்டாய்
நீ நினைக்க வேண்டுமென்றே
நான் பார்க்காமல் சென்றேன்
பார்க்காமல் சென்றுவிட்டதால்
நான் உன்னை நினைக்கவே இல்லை என்கிறாய்
மறக்கவே இல்லாத போது
நினைக்கவேயில்லை என்பதும் உண்மைதான்
நினைத்து விட்டால் மட்டும்
என்னைப் பார்க்க வருவாயா என்ன!?

30.8.2021
இரவு 00:03
ஜெஸிலா


கடந்த காலத்தின்
ஒரு நொடியை மட்டும்
மாற்ற வாய்ப்பு தந்தார்
கடவுள்
மறக்க இயலா
அந்த நொடியை
மட்டும்
மாற்ற கேட்டேன்
மறக்க இயலா
நொடியெனும்போது
ஏன் மாற்ற வேண்டுமென்று
ஏமாற்றி சென்றார்
கடவுள்!
30.8.2021
இரவு 00:00
ஜெஸிலா



ஏன்
நான் எழுதினால் மட்டும்
யாருக்கானது என்று
என்னோடு இணைத்தே கேட்கிறீர்கள்?
பார்த்த படத்தின்
பாதிப்பாக இருக்கலாம்
கேட்ட கதையின்
கருவாக இருக்கலாம்
வாசித்த கவிதையின்
வலியாக இருக்கலாம்
இப்படி எத்தனையோ
இருக்கலாம் இருக்க
என்னை மட்டும்
ஏன் இருக்கவிடுவதில்லை!?
31.8.2021
இரவு 11:09
ஜெஸிலா

Tuesday, August 31, 2021

யாருக்கோ!


யாருக்காகவாவது
யாரோ
எங்கோ
எதையாவது
எழுதிக் கொண்டே இருக்கின்றனர்
எழுதியவற்றை வாசித்து
பாராட்டுக்கள் குவிகின்றன
தனக்கானது என்று
பலரும் கொண்டாடுகின்றனர்
எனக்கு எழுதியதென்று
இல்லாதவர்கள் நினைக்கின்றனர்
தனக்கு வந்ததாகத் தொடரச் சொல்கின்றனர்
வாசிக்க வேண்டியவர்களுக்கு மட்டும்
அது சென்று சேர்வதேயில்லை
30.8.2021
இரவு 10.00
ஜெஸிலா

Saturday, January 23, 2021

தீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து செல்ல இயலவில்லை. “படத்தைப் படமாகப் பாரும்மா” எ ன்று அறிவுரை சொல்பவர்கள் வரிசையாக வந்து தலையில் குட்டோ, என்னிடம் திட்டோதான் வாங்குவீர்கள். ஏனென்றால் இது படமல்ல பல பெண்களின் உண்மையான வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையைப் படமாகப் பார்க்கவும் என் போன்றவர்களுக்குப் பொறுமையுமில்லை, மனதில் தெம்புமில்லை. அப்படி என்ன படம் என்றால் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தைப் பார்க்க சொல்லி நண்பர் பரிந்துரைத்தபோது என்ன கதை, யார் நடித்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். 


40 நிமிடம் முடிந்த பிறகும் ஒரே விதமான காட்சிகள் அலுப்பைத் தந்தாலும்  பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை அவ்வளவு எளிதில் செரிமானமாவதில்லை. 

ஒரு பெண்ணை -  இல்லை வேண்டாம் மனைவியை - அடித்துத் துன்புறுத்துவது, குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, கேட்கக் கூசும் வார்த்தைகளால் வசைபாடுவது, அவள் அனுமதியில்லாமல் தொடுவது அல்லது அவளின் உடல்நிலை, மனநிலை தெரியாமல் நெருங்குவது மட்டுமல்ல பெண்ணுக்கெதிரான வன்கொடுமை. அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவளின் அடிப்படை தேவைகளுக்குச் செவிமடுக்காமல், நியாயமான விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவளுக்கான வன்கொடுமைதானென்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் அல்லது ஆண்களால் புரிந்து கொள்ள முடியும்?

தொப்புள்கொடி உறவைத் துண்டித்து மருமகளாக உருமாறும் மருமகளை, மகளாக வேண்டாம் மனுஷியாகவாவது நடத்துகிறார்களா? இல்லை. அவளை மட்டுமல்ல அந்த வீட்டுப் பெண் அதாவது புதுமணப்பெண்ணின் கணவரின் தாயாருக்கும் அந்த வீட்டில் அதே நிலைதான். 

காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழல்கிறார். உணவருந்த வீற்றிருக்கும் ஆண்மகன்களுக்குச் சுடச்சுட தோசை வார்க்கும் பெண்கள் கடைசியில் உண்பதென்னவோ மீந்து விட்ட, காய்ந்த, கரிந்த தோசைதான் என்று உணரும் ஆண்கள் எத்தனை பேர்?

 ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தோசையோ சமையலோ அல்லது வீட்டு வேலையோ இங்குப் பிரச்சனையில்லை. மாறாக மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் அதிர்வுகளைக் கேட்பாரில்லை. பெற்ற தாயும் ‘நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாய், இதெல்லாம் பிரச்சனையா?’ என்றுதான் கேட்கிறார். பெண் பார்க்க வரும் போது ஆடத் தெரியும் பாடத்தெரியும் என்றால் புளங்காகிதம் அடையும் குடும்பத்தவர்கள், நடன ஆசிரியராகப் பள்ளிக்குச் செல்ல அவள் விரும்பும்போது, 'அதெல்லாம் நம் குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது' என்றும், உன் மாமியார் முதுகலைப் பட்டதாரி அவளை வேலைக்குச் செல்ல வேண்டாமென்று என் தகப்பனார் சொன்னவுடன் நான் கட்டுப்பட்டேன், இன்று அவள் நல்ல மக்களை வளர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சொல்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் மக்கள் சீரழிந்து போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியும் தானே?

குழந்தைகளைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும்தான் மனைவி தேவைப்படுகிறாளென்றால், அதற்குரிய படிப்பை மட்டும் பெண்களுக்குக் கற்பிக்கலாமே?! படித்த பெண்கள் மனைவியாக வேண்டுமென்று விரும்புபவர்கள் தன் குழந்தையை வளர்ப்பதற்காகவா? உங்கள் மகள்களுக்கும் இதற்காகத்தான் ஓர் ஆண் கல்வியைத் தருகிறானா? எப்போது இவர்கள் யோசிக்கப் போகிறார்கள்?

வீட்டிற்கு வரும் விருந்தாளி தேநீரை குறை சொல்லி, நானும் சமைக்கிறேன் பேர்வழியென்று சமையலறையை ஒரு வழி செய்துவிட்டு, அவள் அடுப்படியில் வேலை இருக்கிறது என்று சொல்லும்போது, "அதைத்தான் நான் முடித்துவிட்டேனே இன்னுமென்ன அங்கு மிச்சமிருக்கிறது?" என்று ஏளனமாகச் சிரிக்கும்போது, அந்த மொட்டைத் தலையில் ஆணியடிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

 ’சட்டினியை அம்மியில் அரைக்காமல் மிக்ஸியில் அரைத்தாயா? சரி பரவாயில்லை’ என்று சலுகையைப் போல் சொல்லும் மாமனார், ஆனால் சாப்பாட்டை விறகடுப்பில் வைத்துச் சமைத்தால்தான் சுகமென்றும், துணிகளைக் கைகளில் துவைத்தால்தான் அணிவேனென்றும் புன்முறுவலோடு அன்பொழுகப் பேசுவதும் நமக்குக் கோபத்தை வரவழைத்தாலும், காலையில் எழுந்தவுடன் கையில் 'பிரஸை பேஸ்டோடு' கொண்டு தருவதிலிருந்து, வெளியில் கிளம்பும்போது செருப்பை எடுத்து மாட்டிவிடுவது வரை அவர் மனைவி அவருக்குச் செய்து பழக்கியதாலேயே அந்தக் கலாச்சாரம் அப்படியே தொடர்கிறது. இதெற்கெல்லாம் முழுக்கக் காரணம் வேறு யாருமில்லை -  பெண்களேதான்.

மகனை வளர்க்கும்போது அடுப்படி பெண்ணுக்குரியது, வீட்டு வேலை பெண்ணுக்குரியது என்று காட்சிகளாகப் பதியவைத்து வளர்க்கிறாள். தண்ணீர் வேண்டுமென்றாலும் அவனுக்குக் கையில் கொண்டு தருகிறாளே தவிர ‘உன் தேவைகளை நீயே செய்ய வேண்டுமென்று’ வலியுறுத்துவதில்லை. ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டுமென்ற எழுதாத சட்டம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெண்களின் உள்ளாடையை மறைத்தே காய வைக்க வேண்டுமென்றும் அதை மற்ற ஆண்கள் பார்ப்பதே அசிங்மென்றும் சொல்லியே வளர்க்கப்படும் சமுதாயத்தில், ஏன் ஆண்கள் உள்ளாடையைப் போல்தான் பெண்களுக்கும் என்று புரியவைக்கவோ வாதிடவோ யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் எழுதப்படாத சட்டம், இதுதான் காலம் போற்றும் கலாச்சாரம், பதிய வைத்த பண்பாடு. புல்ஷிட்!!

இந்தப் படம் வெறும் சமையலறைக் கலவரத்தையும் ஆணாதிக்கத்தைப் பற்றியும் மட்டும் பறைசாற்றவில்லை. ஒருபடி மேலே சென்று, அரசியலையும் தொட்டுச் செல்கிறது,  சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தை உலுக்கிய மதப் பிரச்சனையைப் பேசுகிறது. ஆணாதிக்கத்தால் விளைந்த சபரிமலை பிரச்சினையையும் விவரிக்கிறது.

இந்தப் படத்தில் சில மசாலா தூவிய காட்சிகள்:

* விருந்துக்குச் சென்ற இடத்தில் ஒருவர் புதுமணப் பெண்ணிடம் ‘மாட்டுக் கறி சாப்பிடுவாயா?’ என்று கேட்பார்.  "வீட்டிலேயே மாட்டுக் கறி சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றதும், ‘இல்லை, வீட்டுக்கு வெளியில் சமைக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே வீட்டில் அதைப் பரிமாறும் காட்சி.

* “மாதவிடாய் என்பதால் உங்களைச் சமையலறையில் அனுமதிப்பதில்லை, ஆனால் எனக்கு மாதவிடாய் இருந்தாலும் நான் மற்றவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறேன். அவர்களுக்குத் தெரியவா போகிறது? தினமும் வேலைக்குச் சென்றால்தான் என் பொழப்போடும்” என்று வீட்டு வேலை செய்பவர் சொல்லும் காட்சி.

* “கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தம்பி கேட்டதும், “ ஏன் நீயே போய் எடுத்துக் குடிக்க முடியாதா? ” என்று தன் வீட்டுச் சாப்பாடு மேசையிலிருக்கும் கோப்பையைத் தட்டி விட்டு , தன் தம்பியிடம் ஆவேசமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி.

இப்படிப் பல காட்சிகள் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். மற்றொரு காட்சியில், கணவரின் சபரிமலை நோன்பின் நடுவில் மாதவிடாயுடன் இருக்கும் மனைவி தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். அந்த ப் பாவத்தை எப்படித் தொலைப்பது என்று குருவிடம் கேட்கும்போது அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டி, மாதவிடாயுள்ள ஒரு பெண்ணைத் தொட்ட பாவத்தை அல்லது தீட்டை விலக்கி தூய்மையாக்குவதற்கான பரிகாரமாக மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது அல்லது மாட்டின் சிறுநீரைக் குடிப்பது என்று பரிகாரம் சொல்கிறார் . அப்படியானால் பெண்ணின் மாதவிடாயைவிட, அவளுடைய உதிரத்தைவிட, அவள் தாய்மைக்கான மாதவிடாய் சுழற்சியைவிட மாட்டு மலமும் சிறுநீரும் தூய்மையானதா?

அரசியல், மதம், ஆணாதிக்கமென்று பலவற்றைப் பேசுவதால்தானோ என்னவோ இந்தப்படத்தை நெட்பிலிக்ஸுக்கு அனுப்பினால் பதிலே வரவில்லையாம், அமேஸான் பிரைமும் இந்தப் படம் அவர்களின் அளவுகோல்களுக்குப் பொருந்தாது என்று பதில் தந்ததாம், கடைசியில் நீஸ்ட்ரீம் ஏற்றுகொண்டதால் படம் வெளிவந்திருக்கிறது.

பெண்ணைப் பற்றிப் படமெடுத்தாலும் அதைப் பற்றிப் பேசினாலும் பலருக்குப் பிரச்சனையாகிவிடுகிறது என்பதில் வியப்பில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால், சாப்பாடு மேசையின் ஒழுங்கின்மை, வேலைக்குப் போக அனுமதிக்காதது, உடலுறவின் போது கணவன் சொல்லும் சுடு சொல், முகநூலில் தோழியின் பதிவைப் பகிர்ந்ததை நீக்கச் சொல்வது என்று எல்லாமும் சிறிய விஷயங்களாகதான் தெரியும். இப்படியான ஏற்ற இறக்கங்களோடு கூடியதுதான் வாழ்க்கை என்றும் தோன்றும்.

பெண்ணுக்குச் சமையல் வேலையும், வீட்டு வேலையும்தானே பொழுதுபோக்கு என்றும் கூடத் தோன்றும். 

வயதான பிறகு ஆணுக்கான அலுவல் ஓய்வு காலத்திலும், அவர் செய்தித்தாள் வசதியாக உட்கார்ந்து வாசிக்க, அவர் மனைவியான மூதாட்டி தேநீரோடு வந்து நிற்பாள். ஆண்மகன் தினமும் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்துவிட்டு அவருடைய வழக்கமான வாழ்க்கைமுறையைத் திருமணத்திற்குப் பின்பும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர முடியும். ஆனால் பெண்ணுக்கு? 

அலுவலக வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணுக்கு எல்லாத் தேவைகளையும் வீட்டில் இருப்பவர் செய்து தருகிறார். பெண் அலுவலகத்திற்குச் சென்றாலும் வீட்டுக்கும் வந்து அவள் வேலை தொடர்கிறது. ஆணுக்கு வாரத்திற்கு இரு தினமோ ஒருநாளோ விடுமுறை, பெண்ணுக்கு? இதில் என்னைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம், விதிவிலக்கெல்லாம் விதியாகிவிடுவதில்லையே?! நான் சொகுசாக இருக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் பழங்காலத்து கதை 21-ஆம் நூற்றாண்டில் இதெல்லாம் நடப்பதில்லை என்று பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமென்பது போலப் பிதற்றும் கூட்டம் உள்ளது. 

இதற்காகதான் மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் வழங்குவதற்கான திட்டம் பற்றிப் பேசினார். அவர்தான் பல வருடங்களுக்கு முன்பே ‘வேல வேல ஆண்களுக்கும் வேல பெண்களா போனா ஆண்களுக்கும் வேல’ என்று ஓர் ஆண் தன் அலுவலக வேலை முடித்த பிறகு, வீட்டு வேலைகளை மிகக் கச்சிதமாகச் சுலபமாகச் செய்வதைத் தனது ‘அவ்வை சண்முகி’ படத்திலேயே காட்டியவராச்சே. ஆனால் இல்லத்தரசிகளின் வலியோ, அல்லது வீட்டு வேலை பற்றியோ தெரியாத கங்கனா ரணாவத் பணிவிடைகளுக்கு விலையில்லை என்றார். இப்படியான முட்டாள் பெண்களால்தான் இன்னும் பெண்களின் நிலை சாபக்கேடாகவே உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் குடும்பம் என்ற நிறுவனக் கட்டமைப்பின் ஆணாதிக்கத்தை இந்தப் படம் பறைசாற்றுவதால் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் இல்லை. சொற்ப வசனங்கள், எந்தப் பின்னணி இசையுமில்லை, பயன்படுத்திய அத்தனை ஒலிகளும் நம் வீட்டில் அன்றாடம் ஊடுருவும் இசைதான் - தாளிக்கும் ஓசை, காய் நறுக்குதல், வெட்டுதல், வறுப்பது, பாத்திரம் கழுவுதல், வதக்கல், துடைத்தல், துவைத்தல் என்று இதற்குமுன் நாம் செவிமடுக்க மறுத்த அல்லது மறந்த விஷயங்களை இயக்குநர் ஜோ பேபி வேண்டுமென்றே ஒன்றரை மணி நேரப் படமாக்கி மிக நிதானமாக நகரச் செய்து, அடுப்பங்கரையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வைத்துள்ளார். 

கதாபாத்திரத் தேர்வு மிக அருமை. இயக்குநருக்கு நிமிஷா மீது என்ன கோபமோ தெரியவில்லை இப்படி வேலை வாங்கியிருக்கிறார். சூரஜ் மீதும் அவருடைய தந்தையாக வரும் தாத்தா மீதும் நமக்கு வரும் கோபமே அவர்களின் நடிப்புக்குச் சாட்சியாகிறது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உங்கள் பசிக்குத் தீனியோ இல்லையோ உங்கள் சிந்தனைக்கு நிறையவே தீனியளிக்கும்.

Saturday, January 09, 2021

நாளைய பிணங்களின் அழுகை

என்னுடைய தந்தையார் இறந்து அவர்களுடைய சடலத்தைக் கிடத்தியிருந்த போது, இறுதியாக அவருடைய முகத்தைப் பார்த்து நெற்றியில் முத்தமிட உச்சி முகர உரியவர்கள் வரலாம் என்ற போதுதான் நான் கடைசியாக வாப்பாவை எப்போது முத்தமிட்டேன் என்று நினைத்து, அப்படி நிகழ்ந்ததே இல்லை என்று எண்ணியபோது தாங்க முடியாத அழுகை முட்டிக் கொண்டு வந்தது, கண்கள் நிறைந்தது. கண்ணீர் துளி அவர் மீது படக் கூடாது அதனால் அழுபவர்கள் முத்தமிட முடியாது என்றதும் வந்த அழுகை நின்றது. இறுதி முத்தமிட்டு விடையளித்தோம்.

நான் வாப்பா என்றழைக்கும் அப்துல் ஜப்பார் அவர்கள் துபாயிலிருந்து தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் "இனி நான் எங்கிருந்து துபாய் வரப் போகிறேன்" என்ற போது, ”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது. அதே தவறு மற்றுமொரு முறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ விமான நிலையத்தில் பிரியாவிடையளித்து உச்சி முகர்ந்தேன், வாப்பாவும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தார்கள். உச்சி முகர்வதை எப்போதும் நான் பெரியவர்களின் ஆசீர்வாதமாகவே உணர்கிறேன்.
நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் கவிஞர் யுகபாரதி அவர்கள் வாப்பாவை கட்டித் தழுவ ஆசைப்பட்டு அது நிகழலாமலே போனது பற்றிச் சொன்ன போது இந்த இரு சம்பவங்கள் நினைவில் வந்து சென்றது. நினைத்த மாத்திரத்தில் எல்லாமே செய்துவிடுவது நலம்.
'நேற்றைய சடலத்திற்கு முன் நாளைய பிணங்களின் அழுகை' என்று எங்கோ வாசித்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது!!



Monday, January 04, 2021

இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம்!

 நான் மிகச் சுலபத்தில் யாரையும் அண்ணன்/ அக்கா என்றெல்லாம் முறையோடு கூப்பிட்டு விட மாட்டேன், அப்படியிருக்க நான் ’வாப்பா’ என்று வாய்நிறைய அழைக்கக் காரணம் யாஸ்மின்தான். நான் வாப்பாவைச் சந்திக்கும் முன்பே அவரைப் பற்றி யாஸ்மின் நிறையவே சொல்லியிருக்கிறார்.

ஆசிப் - யாஸ்மினின் காதலுக்கு மரியாதை கொடுத்து அதைத் திருமணத்தில் முடியவும், யாஸ்மினைக் குடும்பத்தின் அங்கமாகவும் அவளுக்கு எந்தவித நெருடலுமில்லாமல் இருக்குமாறு அன்போடும் அக்கறையோடும் குடும்பத்தில் அவரை இணைத்துக் கொண்டவர் என்பதாலேயே நான் அவர்களைப் பார்க்கும் முன்பே அவர்கள் மீதான பிரியமும் அன்பும் நிறைந்திருந்தது.
திரு. பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் வாப்பாவுக்கும் எங்கள் அமைப்பான அமீரகத் தமிழ் மன்றத்தின் (அன்று அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள்) சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவின் முடிவில் ஆசிப் என்னை வாப்பாவிடம் "இதுதான் ஜெஸிலா" என்று அறிமுகம் செய்து வைத்தார். வாப்பா உடனே தன்னுடைய ’காற்று வெளியினிலே’ நூலில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசளித்தார்கள். உடனே நான் ‘மகள்’ என்று அடையாளப்படுத்தி எழுதி இருக்க வேண்டுமென்று முதல் சந்திப்பிலேயே உரிமையுடன் கேட்டேன். அதன்பின்னர் அது, வாப்பா மகள் உறவாக அப்படியே தொடர்ந்தது.
வாப்பாவுடன் நிறையப் பேசியிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்திலிருந்து அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து, தனிப்பட்ட பிரச்சனை, துறைசார்ந்த பிரச்சனைகள், அவர்களுடைய ஆதங்கங்கள், கோபங்கள், பிடித்தவை, பிடிக்காதவை என்று அத்தனையும் பேசி தீர்த்திருக்கிறோம்.
என்னுடைய எழுத்தில் என் குரலே கேட்பதாகவும், அப்படியே எழுதும்படியும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள், நான் பாடிய பாட்டை எங்கேயோ கண்டுவிட்டு அதில் எது சிறப்பு, எது சரிவு என்று என் தவறுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
என் ஜிமெயிலின் உட்பெட்டி அவர்களுடைய குரல் பதிவுகளால் நிரம்பி வழிகிறது. துபாயில் எங்களுடன் தங்கியிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் வெந்நீர் கேட்பார்கள், இன்னின்ன மாத்திரைகளைப் போட வேண்டும், உப்பு அதிகமில்லாத சாப்பாடு வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கும், கட்டளைகள் பிறக்கும், ஆனால் அதையெல்லாம் மீறி திருட்டுத்தனமாக நானும் வாப்பாவும் உணவகத்திற்குச் சென்று நாங்கள் இருவர் மட்டும் அவரவர்களுக்குப் பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.
அவர்களுடைய அகவை 80 விழாவில் ‘காற்றின் மொழி’ என்ற நூல் ஆசிப் அவருடைய வாப்பாவுக்குத் தந்த இன்ப அதிர்ச்சிகளில் ஒன்று. அந்த நூல் முழுக்க வாப்பாவைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவத்தின் தொகுப்பு இடம்பிடித்தது . (அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாக்கியமும் எனக்கே கிடைத்தது. )
அந்த நூலில் நானும் ‘அன்புள்ள வாப்பாவுக்கு...’ என்று ஒரு பதிவைக் கடிதம் போல் எழுதியிருந்தேன். அந்த நூலை வாசித்து முடித்த பிறகு, அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டையும் மின்னஞ்சலாகத் தந்திருந்தார்கள்.
வாப்பா அக்பராகவும், நான் பேகம் சாஹிபாவாகவும், ஆசிப் சலீமாகவும் மேடையில் ஒப்பனையில்லாமல், நாடகத்திற்கான எந்த ஒத்திகையுமில்லாமல், குரல் மட்டுமே நடிக்க வேண்டும், மகிழ்ச்சி, துயரம், ஆச்சர்யம், அதிர்ச்சி எல்லாம் குரலில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். ஒரு வானொலி நாடகம் எப்படி இருக்க வேண்டுமென்பதை மேடையில் காட்டப் போகிறோம் என்று அதனை மிக நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த நாடகத்தின் பெயர் ’ஆக்ராவின் கண்ணீர்’.
இதே ‘ஆக்ராவின் கண்ணீர்’ நாடகத்தைச் சவூதி மேடையில் திரு. பி.எச். அவர்களுடனும் வாப்பா செய்திருக்கிறார்கள். அதில் அக்பர் ‘லாஹிலாஹா இல்லல்லாஹ்’ என்று மும்முறை வெவ்வேறு குரல் மாறுபாடுகளோடு சொல்லி அவர் மூச்சு நிற்பதான இறுதிக் காட்சியில் நிறைவாக ‘இல்லல்லாஹ்....’ என்று குரல் கம்மி குழறும்போது நம் கண்களில் கண்ணீர் நிறையும்.
கடந்த பத்து நாட்கள் வாப்பா மருத்துவமனையில் இருந்துவிட்டு முன்தினம்தான் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போதும் அழைத்துப் பேச முயற்சி செய்தேன், அங்கு பணி புரிபவர் "வீடியோ காலில் மட்டுமே பார்க்கலாம் பேச இயலாது" என்று சொல்லிவிட்டார். அவர்களுடைய திருமண நாளுக்கும் அவர்களிடம் வாழ்த்துச் சொல்லவில்லை.
நேற்று காலை 6.30 மணிக்கு ஆசிப் அழைத்த போது, அந்தப் பக்கம் ஆசிப்பின் அழுகைக் குரலை மட்டும் வைத்து செய்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

வாப்பா ஓர் அழகான நிறைவான வாழ்க்கையை மிகக் கம்பீரமாக வாழ்ந்துவிட்டார்கள், அவர்கள் படுக்கையில் கிடப்பதையோ துவண்டு போவதையோ நான் விரும்பவில்லை. அதனால் அவர்களின் மறைவு அவர்களுக்கான விடுதலையாகத்தான் நான் பார்க்கிறேன். சென்று வாருங்கள் வாப்பா!! இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்திப்போம்.
நாம் இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம், இந்த உலக வாழ்வை விடச் சிறந்ததைப் பகரமாகத் நமக்குத் தருவானாக. ஆமீன்.!!

Wednesday, December 23, 2020

அன்புள்ள வாப்பாவுக்கு...

அன்புள்ள வாப்பாவுக்கு,

நாம் முதல்முதலாகச் சந்தித்த போது ‘காற்று வெளியினிலே’ நூலில் ‘அன்புத் தங்கை ஜெஸிலாவுக்கு’ என்றுதான் நீங்கள் எழுதித் தந்தீர்கள். நினைவிருக்கிறதா? அதே நிமிடம் உங்களிடம் நான் “தங்கையா? நான் மகள்” என்றேன் அழுத்தமாக. அல்ஹம்துலில்லாஹ்!! அந்த உறவு இன்றும் அவ்விதமே தொடர்கிறது.

எனக்கு உங்களை ஆசிப்பின் தந்தையாகத்தான் அறிமுகம். நாம் சந்திக்கும் முன்பே ஆசிப்பின் வாயிலாக உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். உங்களை நான் சந்திக்கும் முன்பே விண் டிவி நிகழ்ச்சியை நான் நன்றாகச் செய்வதாக, ‘அந்தப் பெண் நல்ல முகவெட்டு, நிகழ்ச்சியும் நன்றாகச் செய்கிறாள்’ என்று விண் டிவி நிறுவனத்தில் சொன்ன செய்தியை ஆசிப் மூலம் என்னிடம் கடத்தியிருந்தீர்கள். இப்படி ஆசிப் மூலம் உங்களிடமிருந்து வரும் செய்திகள் உங்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. எந்தவித பந்தாவும், நான் பெரியவன் அனுபவசாலி என்ற அகந்தையும் இல்லாது, உனக்கு என்ன தெரியும் என்ற தோரணை அறவே இல்லாது எவ்வித அலட்டல்களுமில்லாததால்தான், பல வருடங்கள் பழகியவள்போல் பார்த்தவுடனே ‘வாப்பா’ என்று மனம் கொண்டாடியது.

‘உங்களுடைய கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள். நான் ஒருமுறையும் கேட்டதில்லை’ என்று நான் உங்களிடம் ஒருமுறை சொல்ல. “அப்படியா? கேட்டதில்லையா? அதற்கென்ன என்று மடைத் திறந்த வெள்ளமாக "பந்தின் மையப் பகுதியில் ஒரு தையல் இருக்கிறது. பந்து வீசப்படும்போது இது தரையில் எவ்வாறு படுகிறதோ அதை அனுசரித்து அதன் எழுச்சி, திசை, வேகம் எல்லாம் அமையும். மோசமாக அமைந்து விட்டால் அது 'பவுண்டரி'யாகிப் போகும். அது பந்து வீச்சாளருக்கு நஷ்டம். அது நன்றாக அமைந்து விட்டால் 'விக்கட்' போகும் அது மட்டையாளருக்கு இழப்பு. ஆக எல்லா வில்லங்கங்களுக்கும் இந்த ‘தையல்’ தான் காரணம். இதை நான் இந்த மகளிர் தினத்தில் சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆகவே வாழ்த்துச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே ‘தையலை’ மகளிரோடு இணைத்து ஒரு மார்ச் 8- ஆம் தேதி நீங்கள் பேசிய வர்ணனையை அச்சுப்பிசகாமல் அப்படியே பேசிக் காட்டி என்னைப் பிரமிக்கச் செய்தீர்கள். யாருக்கு கிடைக்கும் இப்படியான பாக்கியம்? உலகின் மூத்த பிரபல தமிழ் ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனக்காக, எனக்காக மட்டுமே பேசிக் காட்டிய, பகிர்ந்த விஷயங்கள் ஆயிரம்.

அமீரகத் தமிழ் மன்ற மேடையில் நீங்கள் அக்பராகவும், நான் பேகம் சாஹிப்பாவாகவும், ஆசிப் சலீமாகவும் ஒப்பனை இல்லாமல், சரித்திர உடைகள் இல்லாமல், வானொலி நாடகம் போல் கையில் பிரதிகளைப் பிடித்துக் கொண்டு நடித்தோம். ‘ஆக்ராவின் கண்ணீர்’ நாடகத்தில் இறுதிக் காட்சியில் நீங்கள் “லாயிலாஹா…” என்று குழறக் குழற ஒலித்து உயிர் பிரியும் சப்தத்தைத் தத்ரூபமாகச் செய்து முடித்து அரங்கம் கைத்தட்டல்களால் நிறையும்போது உண்மையில் அந்தக் காட்சியின் என் பங்கிற்கான விசும்பல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகையாக முடிந்தது. அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

‘இறைத்தூதர் முஹம்மத்’ நூலை ஆரம்பக் காலத்தில் நீங்கள் பகுதிப் பகுதியாக ஒலிக்கோப்பாக அனுப்புவதும், அதனை திரு.ஸதக் அவர்கள் தட்டச்சுச் செய்து தருவதும், இடையில் நானும் ஆசிப்பும் கருத்துச் சொல்வதாக ஆரம்பித்த படலம், பின் நாட்களில் உங்களுடைய வேகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு மிக வேகமாக 1000 பக்கங்களுக்கு மேல் செய்து முடித்து, ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எப்படி அர்ப்பணிப்போடும், மனமொன்றியும் முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அகத் தூண்டுதலையும் எனக்குக் கற்றுத் தந்தீர்கள். உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறளுக்கேற்ப நான் தூற்றினாலும் போற்றினாலும் ஒரு மகளின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு பொறுமையாகப் பதிலளிக்கும் உங்களின் பண்பு எப்போதுமே என்னைப் வியக்கச் செய்தது. அதே போல் நீங்கள் ஆசிப்பிற்கு தொலைபேசும் போதெல்லாம் மறக்காமல் தவறாமல் “அங்க ஜெஸிலாவும் மக்களும் நல்லா இருக்காங்களா?” என்று அக்கறையோடு கேட்பதும் என்னை நெகிழச் செய்தது.

எந்த விஷயத்தை நீங்கள் கேட்கும்போதும் அதில் அவ்வளவு பக்குவப்பட்ட தேர்ந்தெடுத்த வார்த்தைகளையே நான் கண்டிருக்கிறேன். உதாரணமாகத் தண்ணீர் வேண்டுமென்றாலும், ‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ என்று மிகத் தன்மையாகவே பேசிக் கண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வரும் என்பதையும் நீங்கள் சொல்லியே ஆச்சர்யத்துடன் அறிந்துள்ளேன்.

கடந்த முறை நீங்கள் துபாய் வந்திருந்தபோது, இனி நான் எங்கு இங்கு மறுபடியும் வரப் போகிறேன் என்ற ரீதியிலேயே பேசிக் கொண்டிருந்தீர்கள், அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. உங்களுடைய சிறு வயது அனுபவம், வளர்ந்த விதம், திருமணம், மக்கள், பேரக் குழந்தைகள், தோல்விகள், வெற்றிகள், நண்பர்கள், துரோகிகள் என்று அத்துனை விஷயத்தையும் மனம் திறந்து பகிர்ந்தபோது நான் உணர்ந்த விஷயம், என் தந்தையார் என்னிடம் இப்படியாக எதுவுமே பகிர்ந்ததில்லை, நானும் அவர்களுக்கு இவ்வளவு நேரம் கொடுத்ததில்லை, இவ்வகையான நெருக்கமோ அதற்கான வாய்ப்போ எங்களுக்கு அமைந்ததில்லை. இறைவன் அவ்வகையான முழுமையான நிறைவேற்றத்தை உங்கள் மூலம் எனக்குத் தந்திருக்கிறான் என்றே நான் உளமாற நினைக்கிறேன். 

பொதுவாகப் பெரியவர்கள் என்னை உச்சி முகர்வதை அவர்களின் ஆசீர்வாதமாகவே நான் உணர்வேன். விமான நிலையத்தில் நீண்ட நேரம் நடக்க வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்க தள்ளுவண்டியில் நீங்கள் உட்கார்ந்தபோது நான் உங்களுக்குப் பிரியாவிடையளிக்க நீங்களும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தது என் கண்களை நிறையச் செய்தது.

நீங்கள் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய, மொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்கள் நிறைய உள்ளது. அதற்கான ஆற்றலையும், ஆரோக்கியத்தையும், ஆயுளையும் இறைவன் உங்களுக்குத் தந்தருள எல்லாம் வல்லோனை இறைஞ்சுகிறேன்.

வாஞ்சையுடன் மகள் ,

ஜெஸிலா


Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி