Tuesday, August 31, 2021
யாருக்கோ!
Saturday, January 23, 2021
தீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்து செல்ல இயலவில்லை. “படத்தைப் படமாகப் பாரும்மா” எ ன்று அறிவுரை சொல்பவர்கள் வரிசையாக வந்து தலையில் குட்டோ, என்னிடம் திட்டோதான் வாங்குவீர்கள். ஏனென்றால் இது படமல்ல பல பெண்களின் உண்மையான வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கையைப் படமாகப் பார்க்கவும் என் போன்றவர்களுக்குப் பொறுமையுமில்லை, மனதில் தெம்புமில்லை. அப்படி என்ன படம் என்றால் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தைப் பார்க்க சொல்லி நண்பர் பரிந்துரைத்தபோது என்ன கதை, யார் நடித்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன்.
40 நிமிடம் முடிந்த பிறகும் ஒரே விதமான காட்சிகள் அலுப்பைத் தந்தாலும் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மை அவ்வளவு எளிதில் செரிமானமாவதில்லை.
ஒரு பெண்ணை - இல்லை வேண்டாம் மனைவியை - அடித்துத் துன்புறுத்துவது, குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, கேட்கக் கூசும் வார்த்தைகளால் வசைபாடுவது, அவள் அனுமதியில்லாமல் தொடுவது அல்லது அவளின் உடல்நிலை, மனநிலை தெரியாமல் நெருங்குவது மட்டுமல்ல பெண்ணுக்கெதிரான வன்கொடுமை. அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவளின் அடிப்படை தேவைகளுக்குச் செவிமடுக்காமல், நியாயமான விருப்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவளுக்கான வன்கொடுமைதானென்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் அல்லது ஆண்களால் புரிந்து கொள்ள முடியும்?
தொப்புள்கொடி உறவைத் துண்டித்து மருமகளாக உருமாறும் மருமகளை, மகளாக வேண்டாம் மனுஷியாகவாவது நடத்துகிறார்களா? இல்லை. அவளை மட்டுமல்ல அந்த வீட்டுப் பெண் அதாவது புதுமணப்பெண்ணின் கணவரின் தாயாருக்கும் அந்த வீட்டில் அதே நிலைதான்.
காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாகச் சுழல்கிறார். உணவருந்த வீற்றிருக்கும் ஆண்மகன்களுக்குச் சுடச்சுட தோசை வார்க்கும் பெண்கள் கடைசியில் உண்பதென்னவோ மீந்து விட்ட, காய்ந்த, கரிந்த தோசைதான் என்று உணரும் ஆண்கள் எத்தனை பேர்?
‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தோசையோ சமையலோ அல்லது வீட்டு வேலையோ இங்குப் பிரச்சனையில்லை. மாறாக மன ரீதியாக அவளுக்கு ஏற்படும் அதிர்வுகளைக் கேட்பாரில்லை. பெற்ற தாயும் ‘நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாய், இதெல்லாம் பிரச்சனையா?’ என்றுதான் கேட்கிறார். பெண் பார்க்க வரும் போது ஆடத் தெரியும் பாடத்தெரியும் என்றால் புளங்காகிதம் அடையும் குடும்பத்தவர்கள், நடன ஆசிரியராகப் பள்ளிக்குச் செல்ல அவள் விரும்பும்போது, 'அதெல்லாம் நம் குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது' என்றும், உன் மாமியார் முதுகலைப் பட்டதாரி அவளை வேலைக்குச் செல்ல வேண்டாமென்று என் தகப்பனார் சொன்னவுடன் நான் கட்டுப்பட்டேன், இன்று அவள் நல்ல மக்களை வளர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் சொல்வதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் மக்கள் சீரழிந்து போகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியும் தானே?
குழந்தைகளைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும்தான் மனைவி தேவைப்படுகிறாளென்றால், அதற்குரிய படிப்பை மட்டும் பெண்களுக்குக் கற்பிக்கலாமே?! படித்த பெண்கள் மனைவியாக வேண்டுமென்று விரும்புபவர்கள் தன் குழந்தையை வளர்ப்பதற்காகவா? உங்கள் மகள்களுக்கும் இதற்காகத்தான் ஓர் ஆண் கல்வியைத் தருகிறானா? எப்போது இவர்கள் யோசிக்கப் போகிறார்கள்?
வீட்டிற்கு வரும் விருந்தாளி தேநீரை குறை சொல்லி, நானும் சமைக்கிறேன் பேர்வழியென்று சமையலறையை ஒரு வழி செய்துவிட்டு, அவள் அடுப்படியில் வேலை இருக்கிறது என்று சொல்லும்போது, "அதைத்தான் நான் முடித்துவிட்டேனே இன்னுமென்ன அங்கு மிச்சமிருக்கிறது?" என்று ஏளனமாகச் சிரிக்கும்போது, அந்த மொட்டைத் தலையில் ஆணியடிக்க வேண்டுமென்றே தோன்றுகிறது.
’சட்டினியை அம்மியில் அரைக்காமல் மிக்ஸியில் அரைத்தாயா? சரி பரவாயில்லை’ என்று சலுகையைப் போல் சொல்லும் மாமனார், ஆனால் சாப்பாட்டை விறகடுப்பில் வைத்துச் சமைத்தால்தான் சுகமென்றும், துணிகளைக் கைகளில் துவைத்தால்தான் அணிவேனென்றும் புன்முறுவலோடு அன்பொழுகப் பேசுவதும் நமக்குக் கோபத்தை வரவழைத்தாலும், காலையில் எழுந்தவுடன் கையில் 'பிரஸை பேஸ்டோடு' கொண்டு தருவதிலிருந்து, வெளியில் கிளம்பும்போது செருப்பை எடுத்து மாட்டிவிடுவது வரை அவர் மனைவி அவருக்குச் செய்து பழக்கியதாலேயே அந்தக் கலாச்சாரம் அப்படியே தொடர்கிறது. இதெற்கெல்லாம் முழுக்கக் காரணம் வேறு யாருமில்லை - பெண்களேதான்.
மகனை வளர்க்கும்போது அடுப்படி பெண்ணுக்குரியது, வீட்டு வேலை பெண்ணுக்குரியது என்று காட்சிகளாகப் பதியவைத்து வளர்க்கிறாள். தண்ணீர் வேண்டுமென்றாலும் அவனுக்குக் கையில் கொண்டு தருகிறாளே தவிர ‘உன் தேவைகளை நீயே செய்ய வேண்டுமென்று’ வலியுறுத்துவதில்லை. ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டுமென்ற எழுதாத சட்டம் இன்னும் புழக்கத்தில் உள்ளது. பெண்களின் உள்ளாடையை மறைத்தே காய வைக்க வேண்டுமென்றும் அதை மற்ற ஆண்கள் பார்ப்பதே அசிங்மென்றும் சொல்லியே வளர்க்கப்படும் சமுதாயத்தில், ஏன் ஆண்கள் உள்ளாடையைப் போல்தான் பெண்களுக்கும் என்று புரியவைக்கவோ வாதிடவோ யாரும் வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் எழுதப்படாத சட்டம், இதுதான் காலம் போற்றும் கலாச்சாரம், பதிய வைத்த பண்பாடு. புல்ஷிட்!!
இந்தப் படம் வெறும் சமையலறைக் கலவரத்தையும் ஆணாதிக்கத்தைப் பற்றியும் மட்டும் பறைசாற்றவில்லை. ஒருபடி மேலே சென்று, அரசியலையும் தொட்டுச் செல்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தை உலுக்கிய மதப் பிரச்சனையைப் பேசுகிறது. ஆணாதிக்கத்தால் விளைந்த சபரிமலை பிரச்சினையையும் விவரிக்கிறது.
இந்தப் படத்தில் சில மசாலா தூவிய காட்சிகள்:
* விருந்துக்குச் சென்ற இடத்தில் ஒருவர் புதுமணப் பெண்ணிடம் ‘மாட்டுக் கறி சாப்பிடுவாயா?’ என்று கேட்பார். "வீட்டிலேயே மாட்டுக் கறி சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?’ என்றதும், ‘இல்லை, வீட்டுக்கு வெளியில் சமைக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே வீட்டில் அதைப் பரிமாறும் காட்சி.
* “மாதவிடாய் என்பதால் உங்களைச் சமையலறையில் அனுமதிப்பதில்லை, ஆனால் எனக்கு மாதவிடாய் இருந்தாலும் நான் மற்றவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறேன். அவர்களுக்குத் தெரியவா போகிறது? தினமும் வேலைக்குச் சென்றால்தான் என் பொழப்போடும்” என்று வீட்டு வேலை செய்பவர் சொல்லும் காட்சி.
* “கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று தம்பி கேட்டதும், “ ஏன் நீயே போய் எடுத்துக் குடிக்க முடியாதா? ” என்று தன் வீட்டுச் சாப்பாடு மேசையிலிருக்கும் கோப்பையைத் தட்டி விட்டு , தன் தம்பியிடம் ஆவேசமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி.
இப்படிப் பல காட்சிகள் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும். மற்றொரு காட்சியில், கணவரின் சபரிமலை நோன்பின் நடுவில் மாதவிடாயுடன் இருக்கும் மனைவி தற்செயலாகத் தொட்டுவிடுகிறார். அந்த ப் பாவத்தை எப்படித் தொலைப்பது என்று குருவிடம் கேட்கும்போது அவர் வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டி, மாதவிடாயுள்ள ஒரு பெண்ணைத் தொட்ட பாவத்தை அல்லது தீட்டை விலக்கி தூய்மையாக்குவதற்கான பரிகாரமாக மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது அல்லது மாட்டின் சிறுநீரைக் குடிப்பது என்று பரிகாரம் சொல்கிறார் . அப்படியானால் பெண்ணின் மாதவிடாயைவிட, அவளுடைய உதிரத்தைவிட, அவள் தாய்மைக்கான மாதவிடாய் சுழற்சியைவிட மாட்டு மலமும் சிறுநீரும் தூய்மையானதா?
அரசியல், மதம், ஆணாதிக்கமென்று பலவற்றைப் பேசுவதால்தானோ என்னவோ இந்தப்படத்தை நெட்பிலிக்ஸுக்கு அனுப்பினால் பதிலே வரவில்லையாம், அமேஸான் பிரைமும் இந்தப் படம் அவர்களின் அளவுகோல்களுக்குப் பொருந்தாது என்று பதில் தந்ததாம், கடைசியில் நீஸ்ட்ரீம் ஏற்றுகொண்டதால் படம் வெளிவந்திருக்கிறது.
பெண்ணைப் பற்றிப் படமெடுத்தாலும் அதைப் பற்றிப் பேசினாலும் பலருக்குப் பிரச்சனையாகிவிடுகிறது என்பதில் வியப்பில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால், சாப்பாடு மேசையின் ஒழுங்கின்மை, வேலைக்குப் போக அனுமதிக்காதது, உடலுறவின் போது கணவன் சொல்லும் சுடு சொல், முகநூலில் தோழியின் பதிவைப் பகிர்ந்ததை நீக்கச் சொல்வது என்று எல்லாமும் சிறிய விஷயங்களாகதான் தெரியும். இப்படியான ஏற்ற இறக்கங்களோடு கூடியதுதான் வாழ்க்கை என்றும் தோன்றும்.
பெண்ணுக்குச் சமையல் வேலையும், வீட்டு வேலையும்தானே பொழுதுபோக்கு என்றும் கூடத் தோன்றும்.
வயதான பிறகு ஆணுக்கான அலுவல் ஓய்வு காலத்திலும், அவர் செய்தித்தாள் வசதியாக உட்கார்ந்து வாசிக்க, அவர் மனைவியான மூதாட்டி தேநீரோடு வந்து நிற்பாள். ஆண்மகன் தினமும் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்துவிட்டு அவருடைய வழக்கமான வாழ்க்கைமுறையைத் திருமணத்திற்குப் பின்பும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர முடியும். ஆனால் பெண்ணுக்கு?
அலுவலக வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் ஆணுக்கு எல்லாத் தேவைகளையும் வீட்டில் இருப்பவர் செய்து தருகிறார். பெண் அலுவலகத்திற்குச் சென்றாலும் வீட்டுக்கும் வந்து அவள் வேலை தொடர்கிறது. ஆணுக்கு வாரத்திற்கு இரு தினமோ ஒருநாளோ விடுமுறை, பெண்ணுக்கு? இதில் என்னைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம், விதிவிலக்கெல்லாம் விதியாகிவிடுவதில்லையே?! நான் சொகுசாக இருக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் பழங்காலத்து கதை 21-ஆம் நூற்றாண்டில் இதெல்லாம் நடப்பதில்லை என்று பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமென்பது போலப் பிதற்றும் கூட்டம் உள்ளது.
இதற்காகதான் மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் வழங்குவதற்கான திட்டம் பற்றிப் பேசினார். அவர்தான் பல வருடங்களுக்கு முன்பே ‘வேல வேல ஆண்களுக்கும் வேல பெண்களா போனா ஆண்களுக்கும் வேல’ என்று ஓர் ஆண் தன் அலுவலக வேலை முடித்த பிறகு, வீட்டு வேலைகளை மிகக் கச்சிதமாகச் சுலபமாகச் செய்வதைத் தனது ‘அவ்வை சண்முகி’ படத்திலேயே காட்டியவராச்சே. ஆனால் இல்லத்தரசிகளின் வலியோ, அல்லது வீட்டு வேலை பற்றியோ தெரியாத கங்கனா ரணாவத் பணிவிடைகளுக்கு விலையில்லை என்றார். இப்படியான முட்டாள் பெண்களால்தான் இன்னும் பெண்களின் நிலை சாபக்கேடாகவே உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் குடும்பம் என்ற நிறுவனக் கட்டமைப்பின் ஆணாதிக்கத்தை இந்தப் படம் பறைசாற்றுவதால் இந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர்கள் இல்லை. சொற்ப வசனங்கள், எந்தப் பின்னணி இசையுமில்லை, பயன்படுத்திய அத்தனை ஒலிகளும் நம் வீட்டில் அன்றாடம் ஊடுருவும் இசைதான் - தாளிக்கும் ஓசை, காய் நறுக்குதல், வெட்டுதல், வறுப்பது, பாத்திரம் கழுவுதல், வதக்கல், துடைத்தல், துவைத்தல் என்று இதற்குமுன் நாம் செவிமடுக்க மறுத்த அல்லது மறந்த விஷயங்களை இயக்குநர் ஜோ பேபி வேண்டுமென்றே ஒன்றரை மணி நேரப் படமாக்கி மிக நிதானமாக நகரச் செய்து, அடுப்பங்கரையில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க வைத்துள்ளார்.
கதாபாத்திரத் தேர்வு மிக அருமை. இயக்குநருக்கு நிமிஷா மீது என்ன கோபமோ தெரியவில்லை இப்படி வேலை வாங்கியிருக்கிறார். சூரஜ் மீதும் அவருடைய தந்தையாக வரும் தாத்தா மீதும் நமக்கு வரும் கோபமே அவர்களின் நடிப்புக்குச் சாட்சியாகிறது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உங்கள் பசிக்குத் தீனியோ இல்லையோ உங்கள் சிந்தனைக்கு நிறையவே தீனியளிக்கும்.
Saturday, January 09, 2021
நாளைய பிணங்களின் அழுகை
என்னுடைய தந்தையார் இறந்து அவர்களுடைய சடலத்தைக் கிடத்தியிருந்த போது, இறுதியாக அவருடைய முகத்தைப் பார்த்து நெற்றியில் முத்தமிட உச்சி முகர உரியவர்கள் வரலாம் என்ற போதுதான் நான் கடைசியாக வாப்பாவை எப்போது முத்தமிட்டேன் என்று நினைத்து, அப்படி நிகழ்ந்ததே இல்லை என்று எண்ணியபோது தாங்க முடியாத அழுகை முட்டிக் கொண்டு வந்தது, கண்கள் நிறைந்தது. கண்ணீர் துளி அவர் மீது படக் கூடாது அதனால் அழுபவர்கள் முத்தமிட முடியாது என்றதும் வந்த அழுகை நின்றது. இறுதி முத்தமிட்டு விடையளித்தோம்.
Monday, January 04, 2021
இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே செல்கிறோம்!
நான் மிகச் சுலபத்தில் யாரையும் அண்ணன்/ அக்கா என்றெல்லாம் முறையோடு கூப்பிட்டு விட மாட்டேன், அப்படியிருக்க நான் ’வாப்பா’ என்று வாய்நிறைய அழைக்கக் காரணம் யாஸ்மின்தான். நான் வாப்பாவைச் சந்திக்கும் முன்பே அவரைப் பற்றி யாஸ்மின் நிறையவே சொல்லியிருக்கிறார்.
Wednesday, December 23, 2020
அன்புள்ள வாப்பாவுக்கு...
அன்புள்ள வாப்பாவுக்கு,
நாம் முதல்முதலாகச் சந்தித்த போது ‘காற்று வெளியினிலே’ நூலில் ‘அன்புத் தங்கை ஜெஸிலாவுக்கு’ என்றுதான் நீங்கள்
எழுதித் தந்தீர்கள். நினைவிருக்கிறதா? அதே நிமிடம் உங்களிடம் நான் “தங்கையா? நான் மகள்” என்றேன் அழுத்தமாக. அல்ஹம்துலில்லாஹ்!! அந்த உறவு இன்றும் அவ்விதமே
தொடர்கிறது.
எனக்கு உங்களை ஆசிப்பின் தந்தையாகத்தான்
அறிமுகம். நாம் சந்திக்கும் முன்பே ஆசிப்பின் வாயிலாக உங்களைப் பற்றித் தெரிந்து
கொண்டேன். உங்களை நான் சந்திக்கும் முன்பே விண் டிவி நிகழ்ச்சியை நான் நன்றாகச்
செய்வதாக, ‘அந்தப் பெண் நல்ல முகவெட்டு, நிகழ்ச்சியும் நன்றாகச் செய்கிறாள்’ என்று விண் டிவி நிறுவனத்தில் சொன்ன செய்தியை ஆசிப் மூலம்
என்னிடம் கடத்தியிருந்தீர்கள். இப்படி ஆசிப் மூலம் உங்களிடமிருந்து வரும்
செய்திகள் உங்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. எந்தவித பந்தாவும், நான் பெரியவன் அனுபவசாலி என்ற அகந்தையும் இல்லாது, உனக்கு என்ன தெரியும் என்ற தோரணை அறவே இல்லாது எவ்வித
அலட்டல்களுமில்லாததால்தான், பல வருடங்கள் பழகியவள்போல் பார்த்தவுடனே ‘வாப்பா’ என்று மனம் கொண்டாடியது.
‘உங்களுடைய கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி எல்லாரும்
சொல்கிறார்கள். நான் ஒருமுறையும் கேட்டதில்லை’ என்று நான் உங்களிடம் ஒருமுறை சொல்ல. “அப்படியா? கேட்டதில்லையா? அதற்கென்ன என்று மடைத் திறந்த வெள்ளமாக
"பந்தின் மையப் பகுதியில் ஒரு தையல் இருக்கிறது. பந்து வீசப்படும்போது இது
தரையில் எவ்வாறு படுகிறதோ அதை அனுசரித்து அதன் எழுச்சி, திசை, வேகம் எல்லாம் அமையும். மோசமாக அமைந்து
விட்டால் அது 'பவுண்டரி'யாகிப் போகும். அது பந்து வீச்சாளருக்கு நஷ்டம். அது நன்றாக அமைந்து விட்டால் 'விக்கட்' போகும் அது மட்டையாளருக்கு இழப்பு. ஆக எல்லா வில்லங்கங்களுக்கும் இந்த ‘தையல்’ தான் காரணம். இதை நான் இந்த
மகளிர் தினத்தில் சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆகவே வாழ்த்துச் சொல்வதோடு
நிறுத்திக் கொள்கிறேன்" என்று நான் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே ‘தையலை’ மகளிரோடு இணைத்து ஒரு மார்ச் 8- ஆம் தேதி நீங்கள் பேசிய வர்ணனையை அச்சுப்பிசகாமல் அப்படியே
பேசிக் காட்டி என்னைப் பிரமிக்கச் செய்தீர்கள். யாருக்கு கிடைக்கும் இப்படியான
பாக்கியம்? உலகின் மூத்த பிரபல தமிழ் ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனக்காக, எனக்காக மட்டுமே பேசிக் காட்டிய, பகிர்ந்த விஷயங்கள் ஆயிரம்.
அமீரகத் தமிழ் மன்ற மேடையில் நீங்கள் அக்பராகவும், நான் பேகம் சாஹிப்பாவாகவும், ஆசிப் சலீமாகவும் ஒப்பனை இல்லாமல், சரித்திர உடைகள் இல்லாமல், வானொலி நாடகம் போல் கையில் பிரதிகளைப்
பிடித்துக் கொண்டு நடித்தோம். ‘ஆக்ராவின் கண்ணீர்’ நாடகத்தில் இறுதிக் காட்சியில்
நீங்கள் “லாயிலாஹா…” என்று குழறக் குழற
ஒலித்து உயிர் பிரியும் சப்தத்தைத் தத்ரூபமாகச் செய்து முடித்து அரங்கம்
கைத்தட்டல்களால் நிறையும்போது உண்மையில் அந்தக் காட்சியின் என் பங்கிற்கான
விசும்பல் உணர்ச்சிப் பெருக்கால் அழுகையாக முடிந்தது. அது மறக்க முடியாத ஒரு
நிகழ்வு.
‘இறைத்தூதர் முஹம்மத்’ நூலை ஆரம்பக் காலத்தில்
நீங்கள் பகுதிப் பகுதியாக ஒலிக்கோப்பாக அனுப்புவதும், அதனை திரு.ஸதக் அவர்கள் தட்டச்சுச் செய்து தருவதும், இடையில் நானும் ஆசிப்பும் கருத்துச் சொல்வதாக ஆரம்பித்த
படலம், பின் நாட்களில் உங்களுடைய வேகத்திற்கு ஈடு
செய்ய முடியாத அளவுக்கு மிக வேகமாக 1000 பக்கங்களுக்கு மேல்
செய்து முடித்து, ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எப்படி
அர்ப்பணிப்போடும், மனமொன்றியும் முடிக்க வேண்டும் என்ற
உத்வேகத்தையும் அகத் தூண்டுதலையும் எனக்குக் கற்றுத் தந்தீர்கள். உங்களிடமிருந்து
பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறளுக்கேற்ப நான்
தூற்றினாலும் போற்றினாலும் ஒரு மகளின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு
பொறுமையாகப் பதிலளிக்கும் உங்களின் பண்பு எப்போதுமே என்னைப் வியக்கச் செய்தது. அதே போல் நீங்கள்
ஆசிப்பிற்கு தொலைபேசும் போதெல்லாம் மறக்காமல் தவறாமல் “அங்க ஜெஸிலாவும் மக்களும் நல்லா
இருக்காங்களா?” என்று அக்கறையோடு கேட்பதும் என்னை நெகிழச் செய்தது.
எந்த விஷயத்தை நீங்கள் கேட்கும்போதும் அதில்
அவ்வளவு பக்குவப்பட்ட தேர்ந்தெடுத்த வார்த்தைகளையே நான் கண்டிருக்கிறேன்.
உதாரணமாகத் தண்ணீர் வேண்டுமென்றாலும், ‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ என்று மிகத் தன்மையாகவே பேசிக் கண்டிருக்கிறேன். ஆனால்
உங்களுக்கு அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வரும் என்பதையும் நீங்கள் சொல்லியே
ஆச்சர்யத்துடன் அறிந்துள்ளேன்.
கடந்த முறை நீங்கள் துபாய் வந்திருந்தபோது, இனி நான் எங்கு இங்கு மறுபடியும் வரப் போகிறேன் என்ற
ரீதியிலேயே பேசிக் கொண்டிருந்தீர்கள், அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
உங்களுடைய சிறு வயது அனுபவம், வளர்ந்த விதம், திருமணம், மக்கள், பேரக் குழந்தைகள், தோல்விகள், வெற்றிகள், நண்பர்கள், துரோகிகள் என்று அத்துனை விஷயத்தையும் மனம்
திறந்து பகிர்ந்தபோது நான் உணர்ந்த விஷயம், என் தந்தையார் என்னிடம் இப்படியாக எதுவுமே
பகிர்ந்ததில்லை, நானும் அவர்களுக்கு இவ்வளவு நேரம்
கொடுத்ததில்லை, இவ்வகையான நெருக்கமோ அதற்கான வாய்ப்போ
எங்களுக்கு அமைந்ததில்லை. இறைவன் அவ்வகையான முழுமையான நிறைவேற்றத்தை உங்கள் மூலம்
எனக்குத் தந்திருக்கிறான் என்றே நான் உளமாற நினைக்கிறேன்.
பொதுவாகப் பெரியவர்கள் என்னை உச்சி முகர்வதை
அவர்களின் ஆசீர்வாதமாகவே நான் உணர்வேன். விமான நிலையத்தில் நீண்ட நேரம் நடக்க
வேண்டுமென்பதால் அதனைத் தவிர்க்க தள்ளுவண்டியில் நீங்கள் உட்கார்ந்தபோது நான்
உங்களுக்குப் பிரியாவிடையளிக்க நீங்களும் அனிச்சையாக என் உச்சி முகர்ந்தது என்
கண்களை நிறையச் செய்தது.
நீங்கள் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய, மொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்கள் நிறைய உள்ளது. அதற்கான
ஆற்றலையும், ஆரோக்கியத்தையும், ஆயுளையும் இறைவன் உங்களுக்குத் தந்தருள எல்லாம் வல்லோனை
இறைஞ்சுகிறேன்.
வாஞ்சையுடன் மகள் ,
ஜெஸிலா
Sunday, December 20, 2020
பிறந்த வீடு ‘பீட்டர்ஸ் காலனி’
நான் பிறந்து வளர்ந்த இல்லத்தை இடிக்கிறார்கள் என்று அறியும் போது மனது பதைபதைக்கிறது. சென்னைக்குச் சென்றாலே பத்திரிகையாளர் குடியிருப்புக்குச் சென்று இறங்கினாலும், நான் பிறந்து வளர்ந்த குடியிருப்பான 'பீட்டர்ஸ் காலனி'யைக் கடக்கும் போதெல்லாம் 'எங்க வீடு' என்று தவறாமல் அனிச்சையாகச் சொல்லி விடுவேன். என் கணவரும் 'எத்தனை முறைதான் சொல்லுவே' என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்குப் பூரிப்புடன் சொல்லி மகிழ்வேன். அந்த வீட்டை விட்டு இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பே வெளியேறி இருந்தாலும் என் கனவுகளில் வீடு என்றால் இன்னும் எனக்கு பீட்டர்ஸ் காலனி வீடே வருகிறது.
வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தது, ஈசல் பிடித்து அதற்கு ஃபாத்திமா என்று பெயர் வைத்து வளர்த்தது, அஞ்சலி நாய் இறந்தது அறிந்து அதற்குக் குழி வெட்டிப் புதைத்து அழுதது, மதுர அண்ணன் கால்வாய் திறந்து கரப்பான் பிடிப்பதை வேடிக்கைப் பார்ப்பது, வாடகை சைக்கிளில் சுற்றித் திரிந்தது, மாடியில் நின்று 'வாட்ச்மேன் காப்பாத்துங்க' என்று விளையாட்டாகக் குரலெழுப்பி எல்லோரையும் பயமுறுத்தியது, 'பைக்' ஓட்டச் சொல்லித் தருகிறேனென்று சாந்தி அக்காவைக் கீழே தள்ளியது, 'மொட்ட மாடி லவ் ஜோடி' என்று கலாய்த்து காதலர்களை மாட்டிக் கொடுத்தது - இப்படி பல நினைவுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய வளாகம்.
திமுகவின் தற்போதைய தலைவர் அப்போது ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்கு கேட்க வரும்போது வண்டிக்குப் பின்னால் ஓடியது, ஓவியத்திற்காக தொடர்ச்சியாகப் பரிசுகள் வாங்கியது - ஒருமுறை நடிகர் சிவகுமார் வந்து பரிசளித்தார், ஆச்சி மனோரமாவின் முன்பு மாறுவேடப் போட்டியில் குறத்தியாக மணி விற்றேன். வருடா வருடம் காலனி ஆண்டுவிழாவில் வெள்ளித்திரை என்று ஏதாவது படம் எடுத்து ஓட்டுவார்கள் அங்கு கும்பலில் உட்கார்ந்து படம் பார்த்தது - இப்படி பல சுவாரஸ்யமான நினைவலைகளைக் கொண்டு நிறுத்தியது 'பீட்டர்ஸ் காலனி' இடிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசிக்கும்போது.
எங்கள் வீடு 17/3, பக்கத்து வீடு 17/4-ல் தான் அதிக நேரம் இருப்பேன். அது வாசுகி அக்கா வீடு. அவர்கள் வீட்டில் சில காலம் நான் தேவகியாகி இருந்திருக்கிறேன். வாசுகி அக்காவின் அம்மாவையும் அப்பா அவினாசிமணியையும் நானும் அம்மா அப்பாவென்றே அழைப்பேன். அதனால்தான் இயக்குநர் பாண்டிய ராஜன் எனக்கு மாமா முறையாகினார்.
17/2 ஞாநி அங்கிள் வீடு. என் தம்பியும் மனோஷும் டிகிரி தோஸ்த். இருவரையும் ஒரு 'சீரியலில்' நடிக்க வைக்க அரும்பாடுபட்டு தோற்றார்கள் ஞாநி அங்கிள். ஏதேனும் பேச்சுப் போட்டியென்றால் அவரிடம் எழுதிக் கேட்டு போய் நிற்பேன். அவர், உனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வா அதை திருத்தித் தருகிறேன் என்பார். சில பேச்சுப் போட்டிக்கு மேல் வீட்டு மணிமொழியும், மூன்றாம் மாடி வக்கீல் அப்துல்லாஹ் அங்கிளும் உதவியுள்ளனர்.
ஓவியப் போட்டியென்றால் ஓவியர் ஜெகதீஷ் ஐயாவை அணுகி அவரிடம் என் கற்பனைகளைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். பச்சைக் கலரில் கையெழுத்து வாங்க சில பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வீட்டிற்கும் செல்வேன் - அவர்களுடைய பெயர்கள் நினைவில் இல்லை. கவிஞர் மு. மேத்தா அவர்களையும் இப்படித்தான் அடிக்கடி தொந்தரவு செய்வேன்.
17/1 'தினகரன்' முத்துபாண்டியன் அங்கிளின் மகள் ஷீலா அக்காதான் எனக்கு கார்ட்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்கள். 17/4 வித்யா/ நித்யா வீட்டிற்குச் சென்று மாமியிடம் உறை மோர் வாங்கி வருவேன். 17/18 என் தோழி சத்யாவுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 17/12 வெண்ணிலா அக்காவுடனும் முகநூல் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படி காலனி உறவுகளே நிறைய. அங்கிருந்த வரை ஜாதி -மத பேதமோ, இன பேதமோ அனுபவித்ததே இல்லை.
'பீட்டர்ஸ் காலனி ரவுடி' என்று பெயரெடுக்கும் அளவிற்கு எல்லா பிளாக்கிலும் எல்லாரையும் தெரிந்து வைத்திருப்பேன், பழகுவேன்.
நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து வந்த பிறகு பின் வாசல் பக்கம் இருக்கும் விளையாட்டு திடலே மறைந்து காடாக, புதராக மாறி இருந்ததையே என்னால் சகிக்க முடியவில்லை. தூங்குமூஞ்சி மரத்தில் வளரும் பண்ணி வாகை மலரைக் காண முடியாமல் அவ்வளவு தவித்திருக்கிறேன். இப்போது அந்த இடமே இல்லாமல் போக போகிறது.
நேற்று என் தம்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் நண்பர் எங்கள் பிளாக்கை, எங்கள் வீட்டைப் படம் எடுத்து அனுப்பி இருந்தார்.
போன முறை சென்னை சென்றிருந்தபோதும் 'சத்தியம் தியேட்டர்' சென்ற போது எங்கள் வீட்டருகே சென்று பக்கத்தில் நின்று கண்சிமிட்டிவிட்டே வந்தோம். இனி அந்த கொடுப்பினையுமில்லை.
கடைசியாக ஒருமுறை அங்கு சென்று உட்கார்ந்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அதற்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மரங்கள் மடிந்தாலும் இடம் அழிந்தாலும் குழந்தைகளாக கதைப் பேசி கொஞ்சி மகிழ்ந்த எங்கள் சிரிப்பொலியும் அதன் நினைவுகளும் எங்களுள் என்றும் தங்கி இருக்கும்.
Thursday, August 20, 2020
பெயரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?
நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்க்கும் போது, அது என் முதல் வேலையிடம். அங்கு 'சார்வாள்' கலாச்சாரம் அதிகமாக இருந்தது. எனக்கும் அப்படியே பழகி இருந்தது. பார்ப்பவர்களையெல்லாம் 'சார்'தான்.
அதன் பிறகு நான் எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு யாரையாவது 'சார்' என்று அழைத்தால் கோபப்பட்டார்கள், அறிவுரை தந்தார்கள், தெறித்து ஓடினார்கள். பெயரை வைத்து மட்டுமே அழைக்க வேண்டுமென்று கெஞ்சினார்கள், உத்தரவிட்டார்கள், அதட்டவும் செய்தார்கள். என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. "பெரியவர்களைப் பெயர் சொல்லி எப்படி அழைப்பது?" என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தூரத்திலிருந்து அழைப்பதையே தவிர்த்து, அருகில் சென்று பேச வேண்டியதாக இருந்தது.
மேலாளர் அழைத்து 'சார் (SIR) என்றால் 'South Indian Rascal'என்ற பொருளுண்டு தெரியுமா?" என்றார். அதிர்ந்தேன். மற்றொரு நண்பர் அழைத்து "'சார்' என்று அழைப்பதின் மூலம் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கிறாய் என்பதை அறிவாயா?'" என்றார்.
எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இன்னொருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சங்கடமாக இருந்தால் 'திரு'வுடன் அவரது இரண்டாவது பெயரை இணைத்து அழைக்கச் சொல்லி கேட்டார்.
எங்களது பக்கத்து வீடு, நான் சின்ன வயதிலிருந்தே அவர் பார்க்க வளர்ந்தவள், அவரும் அதே அலுவலகம். அவரை 'ஆன்ட்டி' என்றேன், அவ்வளவுதான் இடி விழுந்தது போல் உணர்ந்தவர், என் கையைப் பிடித்துத் 'தரதர'வென்று இழுத்துக் கொண்டு போய் "'ஆன்ட்டி', 'அங்கிள்' என்று அலுவலகத்தில் அழைத்து எங்களை அசிங்கப்படுத்தாதே. இந்த இடத்தில் நீயும் நானும் சக ஊழியர்கள் அவ்வளவுதான்" என்று மிகவும் கண்டிப்பாக, அழுத்தமாக, மிரட்டலாகச் சொன்னார்கள்.
நிறுவனரையே 'பேராசியர்' என்றும் அவரது மனைவியை 'மிஸஸ் மீனா' என்றுமே எல்லோரும் அழைத்தனர். எனக்கும் அதுவே பழகியிருந்தது. சுலபமாகவும் இருந்தது. அப்படிப் பழகியதால் வயது வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே நண்பர்களாக, சகஜமாகப் பழக முடிந்தது.
துபாய் வந்த பிறகும் இதுவே தொடர்ந்தது. முதல் முதலில் ஒரு மாதம் மட்டும் பணி புரிந்த 'ஸீனத் ரீ சைக்கிள்' நிறுவனத்தில் 'காக்கா' கலாச்சாரம் மலிந்திருந்தது. கீழக்கரை நிறுவனம். அதனால் எல்லோரும் எல்லோருக்கும் 'காக்கா'தான். எனக்கு அந்த இடமே வித்தியாசமான சூழலாக இருந்தது. நல்லவேளையாக அங்கு எனக்கு நிரந்தரப் பணி கிடைக்கவில்லை. காரணம் எனக்கு அப்போது திருமணமாகவில்லை என்பதே.
"எங்க பயலுங்க உங்க கிட்ட திறமையக் காட்ட நினைப்பாங்களே தவிர, வேலைய எவனும் பார்க்க மாட்டார்கள்" என்று வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் சொன்னதும் நல்லதாகப் போனதால், நான் வெளியேறி வேறு நல்ல இடத்தில் வேறு நல்ல வேலையும் கிடைத்தது.
சேர்ந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அங்கும் பெயர் சொல்லி அழைக்கும் முறையே தொடர்ந்தது, என்னைவிட முப்பது வயது மூத்தவரையும் பெயர் சொல்லியே அழைத்தேன், அவரும் இந்தியர்தான், ஆனால் அவரும் அதைத்தான் விரும்பினார். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதன் பிறகு நான் வேலை செய்த எல்லா நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனமென்பதால் 'சார்' என்ற சொல்லே அந்நியமானது. பெயர் சொல்லி அழைப்பதே எனக்குப் பிடித்திருந்தது. நெருக்கமில்லதவர்களை அல்லது தெரிந்தவர்களாக, அல்லது நண்பர்களாக இருப்பவர்களைப் பெயருக்காக அல்லது மரியாதை என்று நினைத்துக் கொண்டு அண்ணன், சேட்டா, அங்கிள், ஆட்டுக்குட்டி என்று அழைப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலும் அப்படி அழைப்பதைத் தவிர்ப்பேன்.
நண்பர்களின் தாய்- தந்தையர்களை மட்டும் தயக்கமில்லாமல் என்னால் 'அப்பா அம்மா' என்று அழைக்க முடிகிறது. ஆங்கிலப் படத்தில் மற்றும் சிரீஸில் நண்பர்களின் அம்மாவை 'மிஸஸ் ......' என்றே அழைப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் எல்லோரும் எல்லோரையும் முதல் பெயரை வைத்தோ நெருக்கமில்லாதவர்களைத் தலைப்போடு அதாவது திரு/ திருமிகு சேர்த்தே அழைக்கின்றனர். இதனைச் சிறப்பான முறையாகவே நான் பார்க்கிறேன். என்னை மற்றவர்கள் அக்கா, சகோதரி, ஆன்ட்டி, பாட்டி என்று எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பெயர் சொல்லி அழைப்பதே எனக்கு விருப்பம். ஆனால் நெருக்கமில்லாதவர்கள் யாரேனும் ஜெஸிலா என்ற பெயரைச் சுருக்கி ஜெஸி என்று அழைத்தால் மட்டும் எரிச்சலாகும் 'யார் அவருக்கு இதற்கு அனுமதி தந்தது?' என்று நினைத்துக் கொள்வேன். ( ஆனாலும் அவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டும் புலம்புவேன்)
சிலர் பெயர் சொல்லி அழைத்தால் திமிர் பிடித்தவளாகப் பார்க்கிறார்கள், நான் அழைப்பது அவர் பெயரை என்று அறியாமலே. பெயர் என்பது அழைப்பதற்குத்தானே?
Tuesday, August 18, 2020
குஞ்சன் சக்சேனா - உயரப் பறக்கத் துடிப்பவள்
என் தோழி ஒருத்தி சின்ன வயதிலிருந்தே 'மாடலிங்' செய்ய வேண்டுமென்று கனவு கண்டு அதற்கேற்ப தன் உடலைத் தயார் செய்து கொண்டு, வேலைக்குச் செல்ல ஆயுத்தமாகும்போது அவள் சந்தித்த பல துன்பமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள். அதில் அதி முக்கியமானது அவள் நாட்டில் விளம்பர நிறுவனங்கள் 'மாடலிங்' செய்பவர்களை விபச்சாரிகளாகப் பார்ப்பதையும், சாடையாகவும் வெளிப்படையாகவும் 'நீ மாடலிங் செய்பவள்தானே?' என்று அதனைத் தரைகுறைவாகப் பேசுவதையும், உடனுக்குடன் உடை மாற்ற வேண்டிய இடங்களில் 'உங்களுக்கெல்லாம் மறைவான இடம் எதற்கு? அப்படியே நின்று மாற்றிவிட்டுக் கிளம்பு' என்று அசிங்கமாக நடத்தியதையும் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறாள்.
Tuesday, July 28, 2020
பூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்

குழந்தைகளுக்குப் பூனை வளர்க்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை. ஆனால் அது பெரிய பொறுப்பு என்று தட்டிக் கழித்தோம். அப்படியான அர்ப்பணிப்பு நம்மால் முடியாது என்று சொல்லியும் கேட்காததால், "நிரந்தரமாகத் தத்தெடுக்க வேண்டாம். 'வீட்டிலிருந்து கல்வி' என்ற நிலை முடியும் வரை 3-5 மாதங்கள் மட்டுமே கேட்டு வளர்க்கலாம் (fostering rather than adopting)" என்று மகள் வற்புறத்தவே ஒப்புக் கொண்டோம்.
அதன்படி போன மாதம் 'அக்கிட்டோ' என்ற பூனையை வளர்க்க எடுத்தோம் Red Paw Foundation-ல் இருந்து. கணவரும் நானும் அவனைப் 'பம்சி' என்று அழைத்தோம். மகனும் மகளும் 'யுக்கி' என்று அழைத்தனர்.
'நான்கு மாதமாக அடைபட்டுக் கிடந்தான்' என்றார்கள் பூனையைக் கொடுத்தவர்கள். வந்தவுடன் எங்கள் நான்கு பேருடனும் நன்றாக ஒட்டிக் கொண்டான். வருடு என்பான், கட்டித் தழுவச் செய்வான், 'மியோவ்' என்பதை விதவிதமாகச் சொல்லி தன் வசப்படுத்துவான், அவன் மொழி எங்களுக்கும் எங்கள் மொழி அவனுக்குமாக ஒரு புரிதலோடு இருந்தோம்.
முன்பெல்லாம் நான் அலுவலகத்தில் இருந்து வந்தால், அழைப்பு மணி அடித்ததும் குழந்தைகள் ஓடி வருவார்கள், என் கால்களைக் கட்டிக் கொள்வார்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதுவுமே ஈடு செய்ய இயலாது. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அப்படி ஓடி வருவதெல்லாமில்லை. நாம் போய் நின்றால் 'சலாம்' அல்லது 'ஹாய்' அவ்வளவுதான். அந்த மகிழ்வான தருணத்தை மீண்டும் எனக்கு பம்சி தந்தான்.
நான் அலுவலகத்தில் இருந்து வந்து அழைப்பு மணி அடித்ததும், அடித்துப் புரண்டு ஓடி வருவான். குழந்தைகள் என் கால்களைக் கட்டிக் கொள்ளும் அதே உணர்வை மீண்டும் தந்தான். ஆனால் எங்களுடன் விளையாட மாட்டான்.
மற்ற பூனைகளைப் போல் விளையாடவில்லையே, என்று கேட்டபோதுதான் சொன்னார்கள் அவனுக்கு இருக்கும் வியாதியைப் பற்றி. அவன் மற்ற பூனைகளுடன் சேர்த்து வைக்க முடியாத நோய் தொற்று உள்ளது என்றர்கள். அதன் பிறகு அவன் மீது அன்பு கூடியதே தவிர குறையவில்லை. அவனை நேசிக்கும் யாரோ ஒருவரும் அவனுக்கான உணவெல்லாம் அமேஸான் வழியாக அனுப்பினார்கள். நன்றாகத்தான் சென்றது. ஒரு வாரமாக அவனுக்கு வயிற்றுப் போக்கு. சரி வெவ்வேறு உணவு வேண்டாம் ஒரே உணவாகக் கொடுங்கள் என்றார்கள்.
என் கணவரும் குழந்தைகளும் பேசுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. உட்காரு, அங்கே போகாதே என்றெல்லாம் மிரட்டுவார்கள் கேட்டுக் கொள்வான். தவறு செய்தால் தலை குனிவான். அவன் செய்யும் ஒரே தவறு வயிற்றுப் போக்கால் சமயங்களில அவன் மலம் கழிக்கும் இடத்திற்கு வெளியே தவறுதலாக வயிற்றுப் போக்கின் காரணமாக நேர்ந்துவிட்டால் சங்கடப்படுவான்.
முன் தினம் வயிற்றுப் போக்கு கூடவே வாந்தியும். ஒரு வாரம் நடப்பதையெல்லாம் அந்த நிலையத்திற்குத் தெரிவித்துக் கொண்டேதான் இருந்தேன். சரியாகும். 'Wet' உணவு வேண்டாம், வெறும் 'dry' உணவுபோதும் என்றெல்லாம் வழிநடத்தினார்கள். நேற்று அலுவலகத்திலிருந்து வந்ததும் நான் அசந்து தூங்கிவிட்டேன் (25 ஜூலை). நான் தூங்கும் போது என் அருகில் நின்று என்னையே ரொம்ப நேரம் பார்த்ததாக நான் எழுந்தவுடன் சொன்னார்கள். அமைதியாக இருந்தான். அவனுக்குப் பிடித்த உணவை ஒரே ஒரு கரண்டி மட்டும் தந்தேன், அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால். அவன் எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டால் அதுவும் ஒரே ஒரு கரண்டியென்றால் மீண்டும் வந்து மியாவ் என்பான். ஆனால் நேற்று அப்படியெல்லாம் கேட்கவில்லை. நான் போகுமிடமெல்லாம் பின்னால் வந்து உட்கார்ந்து கொண்டான் சமர்த்தாக. இரவு அவன் இடத்தில் படுக்காமல் நாங்கள் படுக்கும் கட்டிலுக்குக் கீழே படுத்திருந்தான்.
குழந்தைகள் அவனுக்கு உணவைக் காட்டி வெளி இழுத்து வந்து 'உன் இடத்திற்குப் போ' என்றதும், மறுப்பில்லாமல் போய் படுத்துக் கொண்டான்.
காலையில் முதலில் அவனை உயிரற்ற உடலாகக் கணவர்தான் பார்த்து என்னை அழைத்தார். நானும் குழந்தைகளும் கதறி அழுதோம். நிறுவனத்திற்கு அழைத்துத் தெரிவித்தோம். என் லவ் பேர்ட்ஸ்களைப் பார்த்தால் அதிலும் ஒன்று இறந்து இருந்தது. இதுவரை நான் வளர்த்த பறவைகளுக்காகவும், மீன்களுக்காகவும் இவ்வளவு அழுததில்லை. இவனுக்கு நோய், இறந்துவிடுவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் போய்ச் சேர்வானென்று நினைத்திருக்கவில்லை.
Monday, July 13, 2020
ஒரு சொல் சில மெளனங்கள்
Sunday, July 05, 2020
முரண்பாடு
தூய்மையான காற்று
நாம் முகமூடியில்.
வெறுமையான சாலைகள்
நாம் வீட்டுக்குள்.
சுத்தமான கைகள்
தீண்டாமை அமலில்.
செல்வந்தர்களுக்கு
செலவிட வழி இல்லை.
இல்லாதவர்களுக்கு
சம்பாதிக்க வழி இல்லை.
நேசத்திற்குரியவர் நோயில்
நேரில் நலம் அறியவில்லை.
அன்புக்குரியவர் இறப்பு
அருகில் அழவில்லை.
நேரான எண்ணங்கள்
எதிர்பார்ப்பில் எதிர்மறை.
விசித்திர உலகம்
விந்தை மனிதர்கள்.
-ஜெஸிலா
04 ஜூலை 2020
Thursday, June 25, 2020
சொர்க்கமே என்றாலும்
புத்தம் புதுச் சூழலில் இதமான தட்பவெப்பத்தில்
எழிலுடன் கூடிய இடத்தில் ரம்யமான மணம் தன்னைத் தொட்டுச் செல்ல, சலீம் எழுந்தான். உடலில்
எந்த வலியும் இல்லாததை உணர்ந்தான். கை, கால்களை உதறினான், தன் இளமை திரும்பி விட்டதாக
அவனுக்கே தோன்றியது. அவன் வழக்கமாக அணிந்திருக்கும் கண்ணாடி இல்லை. ஆனாலும் கண் பார்வை
மிகச் சிறப்பாகத் தெரிந்தது.
தன் பிறந்த மேனியில் வெள்ளைத் துணி
சுற்றி இருப்பதைப் பார்த்தான். அவன் அருகில் எல்லா வண்ணங்களும் கொட்டிய குடுவையில்
முக்கி எடுத்ததுபோன்ற சிறகுகளையும் அகல் போன்ற அலகையும் கொண்ட ஓர்அழகிய பறவை அவனுக்காகக்
காத்திருந்தது.
அதனுடன் புதுத் துணியைக் கண்டான், கையில் எடுத்தான். எங்கேயோ அதைப் பார்த்த நினைவு,
அதனைத் தொட்டபோது உடனே உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது. வான்
வண்ணத்தில் மேகத்தையொத்த வடிவமைப்பிலிருந்த உடையை உடுத்திக்கொண்டான். அந்த உடை அவனுக்காகவே
அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தது.
கால்களுக்குக் கீழ் இது மண் தானா என்ற
சந்தேகத்தில் கையில் எடுத்துப் பார்த்தான். வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ள வேண்டும்போல,
சிலிர்ப்பை உண்டாக்கும் அளவிற்கு அந்த மணல் வித்தியாசமான நிறத்தில் இருந்தது. அவன்
இதுவரை கண்டிருந்த தேரிகாட்டு மணல் போலவோ பாலைவன மணல் போலவோ இன்றி
புதுவித மணலாக இதமான குளிராகக்
கால் புதையாமல் அதே சமயம் பறக்காமல் தன் உயிர் இப்போது வேறு வித ஆற்றலாக மாறியிருந்ததை
உணர்ந்தான். நடக்கவும் இல்லாது பறக்கவும் இல்லாது நகர்வது சலீமுக்கு இன்பமாக இருந்தது.
‘இந்த மணலில் எப்படி இந்தப் பூ பூத்தது?’ என்ற யோசனையில் அருகில் சென்றால் வான்
நட்சத்திரம் பூவாக மலர்ந்திருந்தது அதனை மினுமினுத்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக
இருக்கும். இவனுக்கு ஒரே குழப்பம், ‘விண்மீன்கள் வாயுக்களினாலானவை, அது தரும் ஒளி,
வெப்பம் மிகுந்தவை ஆனால் இந்த வகை வகையான கண்களுக்குச் சுகமான வண்ணங்களில் தென்படும்
நட்சத்திரம் பரவசத்தை அளிக்கிறதே எப்படி?’ என்று ஆராய்ச்சியில் அங்கேயே நின்று உற்று
நோக்கினான். அருகில் குளிர்ந்த நீரோடை இருந்தது.
அதனைக் கண்டதும் அவன் எண்ணம் அங்கே குவிந்தது., நீரில் இறங்கி ஒரு குளியல் போடலாமா
என்றும் அவனுக்குத் தோன்றியது.
எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று வியக்கும் அளவிற்கு ஒவ்வொரு நுணுக்கங்களும்
புதுமையாக இருந்தன.. வானம் மட்டும் எப்போதும்போல் ஓவியமாக இருந்தது.
யாருமில்லாத புத்தம் புது இடம்தான்.
சமநிலையில் ஒரே பரப்பில், சீரான அமைப்பில் எழில் கொஞ்ச, பார்த்திராத பறவைகளின் ஒலி
சூழந்திருக்கும் அந்த ஆத்மார்த்த அமைதி அவனுக்குள் பயத்தை எழுப்பவில்லை மாறாக மனம்
சாந்தமாக மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தான். கால் போன போக்கில் அடுத்து என்னவென்று
அறியாமலே நகர்ந்தான். கொஞ்சம் தொலைவிலேயே தனக்குப் பழக்கமான ஒரு முகம் அவனை நோக்கி
புன்னகைத்தபடி வந்தது. அடுப்படியில் கரிப்பிடித்த துணியை ஒத்த உருவத்தில் இருப்பான்
சாகுல். இப்போது ஆஜானுபாகு உருவத்தில் அகன்ற மார்பு, வலிமையான புஜங்களுடன் “சலீம்”என்று
உறுமிக் கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயில் அவதிப்பட்ட சுவட்டையே காணோமே.
அவரைக் கண்ட ஆச்சர்யத்தில் ஓடிச் சென்று,
அதுதான் இளமை திரும்பிவிட்டதே அதனால் பறந்து நகர்ந்துஅவரைக் கட்டிக் கொண்டு "சாகுல்,
எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான்.
அதற்கு அவர் கம்பீரமான குரலில்
"வா சலீம். எனக்கும் நீ வருவதா எந்தத் தகவலுமே இல்ல. ஏதோ மனசு இந்தப் பக்கம் வரணும்னு
தள்ளுச்சு வந்தேன். நீ எப்போ இறந்த? நீ இறக்கப் போறதாகவோ, இங்க வரப் போவதாகவோ ஒரு துப்புமில்லயே!!"
என்று ஆச்சர்யத்துடனும் சலீமை சந்தித்த மகிழ்ச்சியும் பொங்க, முகம் மலர்ந்து கேட்டார்
சாகுல்.
சாகுலைப் பார்த்த மகிழ்ச்சி பொங்க மடை
திறந்த வெள்ளமென சலீம் பேச நினைத்தாலும் ஏதோவொரு குழப்பத்திலேயே வார்த்தைகள் வெளிவந்தன.
"நானே எதிர்பார்க்கல சாகுல் அசந்து தூங்கிட்டேன், நீண்டதூக்கம்போல அங்கிருந்து
இங்க வந்துட்டேன். ஏதோ நான் ஒரு செடி மாதிரியும் என்னை வேரோடு பிடுங்கி போட்டா ஒரு
வலி வருமே அப்படியொரு உயிர்போற வலி. அப்புறம் நான் என்னை இங்க பார்த்த போதுதான் புரியுது"
என்று நிச்சயமற்ற தன்மையோடு சொன்னான் சலீம்.
சலிப்பான நமட்டு சிரிப்போடு விளக்கினார்
சாகுல் "உயிர் போற வலின்னு சரியாதான் சொல்ற. ஆமா, உன் உயிர் போயிடுச்சு. இப்ப
நீ மறுமைக்குள்ள நுழஞ்சுட்ட. ஆனா நீ அதிர்ஷ்டக்காரன்பா எவனையும் அந்த உலகத்துல நீ சுத்தல்ல
விட்டுருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன், அதான் சட்டுன்னு என்னை பார்த்துட்ட. இங்க வந்த
பிறகு ஒருத்தரை சந்திக்கிறதுக்கு அவ்வளவு நாளாகும்.
அதுவுமில்லாம புதுத் துணி வேற உடனே
கிடச்சிட்டுது போல, இது நீ அங்க உடுக்கத் துணி கொடுத்து உதவின யாரோ உனக்காகக் கையேந்தி வேண்டியதாலதான்
அது அமஞ்சிருக்கு, சரி வா உனக்குப் போகப் போகப் புரியும்” என்றபடி பேசி கொண்டே நகர்ந்தார்கள்.
“அட! நம்ம மாத்யூ வீடா அது?” என்று
ஒரு பெரிய வீட்டைச் சுட்டிக் காட்டி வாய் பிளக்கக் கேட்டான் சலீம். “நீ வரேன்னு தெரிஞ்சி
இங்க குடி பெயர்ந்திருப்பான்” என்று சாகுல், சலீம் முகம் பார்த்தபோது, சலீம் அவநம்பிக்கையில்
சந்தேகப் பார்வை தந்தான்.
அதனைப் புரிந்து கொண்ட சாகுல் உடன்
மறுத்து, ”நெசமாத்தான் சொல்றேன், நமக்கு வேண்டிய இடத்துல நம்ம வீட்டை நகர்த்திக்கலாம்.
அவனுக்கு வந்த வாழ்வ பார்த்தியா… ஒன்னுமில்லாத பையன்” என்று சொல்லி கொண்டிருக்கும்
போது மாத்யூ, “சலீம், எப்படி இருக்க?” என்று எல்லாப் பற்களும் தெரிய புன்னகைத்தபடி
வந்தார்.
எப்போதும் ஒரு சோகத்தில் மூழ்கியது
போன்றே முகத்தை வைத்திருக்கும் மாத்யூ மிக பொலிவான, சாந்தமான முகத்துடன் தெளிவாகப்
பேசியதை பார்த்தவுடன், “மாத்யூ, உன்ன இந்த நல்ல நெலமையில பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக
இருக்குப்பா. நான் அப்பவே சொன்னேன்ல உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு”
என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் சலீம்.
“எப்பவுமே சொல்வேனே சலீம், சமமான வாழ்வுன்னு
அத நான் இங்கதான் பார்க்கிறேன். எந்தவித பாகுபாடுமில்ல, உயர்வு தாழ்வு இல்ல, நினைத்ததை
வாழ முடியுது. சக மனிதன் சந்தோஷமா இருக்கான், சுற்றுப்புறம் நல்லா இருக்கு, யாரும்
யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. களவு இல்ல, வன்மம் இல்ல, பிரிவு இல்ல, பொறுப்பு
இல்ல. விடுதலை உணர்வை முழுமையா சுவாசிக்கிறேன். தானதர்மம் செய்யணும்னு ஆசப்பட்டேன்,
ஆனா அப்ப பணமில்ல. மனசார உதவணும்னு ஆசப்பட்டதுக்கே
இப்படியான வாழ்க்க அமைந்திருக்கு. அப்ப மனசார கொடுத்து உதவுனவங்களுக்கு? இங்க எல்லாமே
இப்படித்தான். எங்க வீட்டு பக்கத்துல பார்த்தியா ஓடை, அதுல நான் நெனைக்கிற பானம் கிடச்சிடும்.
நம்மூர்ல தான் தண்ணீர்ப் பஞ்சம். ஆனா இங்க ஆசை தீர குடிச்சுக்கலாம். ம்ஹும் ஆசை அந்த
வார்த்தையே மறந்துடுச்சு சலீம்” என்று ஞானி மாதிரி பேசியவனை உடைக்கும் வகையில் சாகுல்
“ஆமாமா ஆசை இல்லாததாலதான் மாத்யூ, அப்பப்ப கனவுபிரவேசம் பண்ணி உலக ஒட்டுதலிலேயே இருக்கான்,
அதுவும் அழியா வீட்டுக்குள் வந்துட்டு இன்னும் விழிக்காம இருக்கான்” என்றார் கிண்டல்
தொனியில்.
மாத்யூ பேச்சை மாற்றும் விதமாக “என்
கதைய விடு சலீம், நம்ம மொன வீடு சேகர சந்திச்சியா?” என்றார்.
அதற்கும் சாகுல் “சேகர் எப்படித்தான்
இங்க வந்தான்னு தெரியல. ‘தான் தவறுதலா இங்க வந்துட்டேனோன்னு’ அவனுக்கே சந்தேகம் வர
அளவுக்கு நல்லாயிருக்கான்” என்று எதையோ எதிர்பார்த்தவராகப் பொறாமையின் வெளிப்பாடில்
கறுவலுடன் பேசுவதாக இருந்தது சாகுலின் பேச்சு.
‘இங்க வந்தும் சாகுலின் குணம் மாறலையே.
அப்ப குணத்திற்கேற்ற சலுகையும் வசதி வாய்ப்புமா!? இங்க பொறாமை கிடையாதுன்னு மாத்யூ
சொன்னாரே, அப்ப இது பொறாமையில் சேராதா?’ என்று சலீம் யோசித்தான்.
மூவரும் தெரிந்த நபர்களை பற்றியெல்லாம்
பேசி கொண்டே நடந்தனர். ஆனால் உறவுகள் பற்றியோ சேகருக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் மனைவியை
பற்றியோ அவர் பேசவில்லை. சலீமால் கட்டுப்படுத்த முடியாமல், “சேகர், உன் மனைவி செளமியாவ
இங்க சந்திக்கலையா!?” என்று கேட்டான்.
எந்த செளமியா என்ற முகபாவனையுடன் சேகர்
“சலீம், ஆற்றலாக மாறிய நமக்கு தெரிந்தவர்களைக் கண்டால் மகிழ்ச்சி, ஆனால் மனைவி, மக்கள்,
என்னைச் சார்ந்து அவள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற எந்தவித உறவு பந்தங்களும் இங்கு இல்ல.
இதனை ஒருவித சுதந்திரமா நான் பார்க்குறேன். நான் யாரையும் தேடி போறதுமில்ல, என்னை தேடியும்
யாரும் வருவதில்ல. வழிப்போக்கரா சந்திப்பவருடன் மகிழ்ந்து பேசி நகர்கிறோம்” என்று விளக்கம்
அளித்தார்.
சிறிது தூரத்திலேயே சலீம் என்ற பெயர்ப்
பலகை தொங்கிக் கொண்டிருந்த கடை மாதிரியான அமைப்புத் தென்பட்டது. ”இது என்ன கடை மாத்யூ?
என் பெயரில்!!?” என்று கண்கள் விரிய சலீம் கேட்டான். "ஓஹ்! கடைத் தெருவா? உன்
பெயரிலா? சரி போய்ப் பாரு, எங்க கண்களுக்குத் தெரியாத இடத்திற்குள்ள நாங்க வரவே முடியாது.
அதுக்குள்ள நீ மட்டுந்தான் போக முடியும் சலீம். நாம இறந்த புதுசுல நமக்குப் பிரியமானவங்க
செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும், மனசார நமக்குச் சொல்லும் வாழ்த்தும், நல்ல வார்த்தைகளும்
நமக்குப் பிடிச்ச தின் பொருளா மாறி இப்படிக் கடையா விரிஞ்சிருக்கும். எதுவுமே கெட்டுப்
போகக் கூடியதில்ல. எப்ப வேணும்னாலும் நீ போய் எடுத்துச் சாப்பிடலாம். பணமெல்லாமில்ல.
இங்கதான் பணமென்ற ஒரு விஷயமே இல்லையே, நாம அங்க சம்பாதிச்ச குணம்தான் இங்க எல்லாமே”
என்று தன் சரக்கில்லாத கடையை நினைத்துப் பேசினார் சாகுல்.
மாத்யூ உடனே அங்குள்ள யதார்த்ததைப்
பற்றி சலீம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, “சலீம், நம்ம மக்கள், நாம் செத்த உடனே நம்மை
நெனச்சு உருகி நமக்காகப் பிரார்த்திப்பாங்க, நம்ம பெயரில தானம் செய்வாங்க. ஆனா நாட்கள்
போகப் போக பசங்க மறந்திடுவாங்க. அவங்க உண்டு அவங்க பொறுப்புகள் உண்டுன்னு இருப்பாங்க.
அவங்கள நாம் குற்றம் சொல்ல முடியாது” சமாதானப்படுத்த முயன்றார்.
“நாம மட்டும் என்னவாம் நம்ம அம்மா அப்பாவுக்குச்
சமீபத்துல எப்பவாவது தனியா பிரார்த்தனைச் செய்திருப்போமா? இல்ல அவங்க பேருல தர்மந்தாஞ்
செஞ்சிருப்போமா?" என்ற சாகுலின் கேள்விக்குச் சலீம் பதில் சொல்லும் முன்பாகச்
சாகுல் மீண்டும் தொடர்ந்தார்.
"நாம பேரன் பேத்தி கண்ட பிறகு
நம்ம தாத்தா பாட்டியெல்லாம் நமக்கெங்க நெனவிருக்கு
சொல்லு? நான் சாகக்
கெடந்தப்ப பேரன் ஷாகிர்
வந்து, ‘உங்க பேரு என்னான்னு கேட்டான். சொன்னேன். உங்க வாப்பா பேரு என்னன்னு கேட்டான்
ரபீக்ன்னு சொன்னேன். அவங்க வாப்பா பேரு என்னான்னு கேட்டான். ஜாஹிருன்னேன். அவங்க வாப்பா
பேரு தெரியுமான்னான்.. தெரியுல தம்பின்னு சொன்னேன். பழைய வீட்டு பத்திரத்த விரிச்சி
காட்டினான். சுப்ரமணியின் மகன் ஜாஹிருன்னு இருந்துச்சு. சரி அதுக்கு இப்ப என்னடான்னு
கேட்டேன். ‘இப்ப நான் காதலிக்கிற பொண்ணோட அப்பா பேரும் சுப்ரமணிதான், வாப்பாக் கிட்ட
சொல்லி சம்மதிக்க வையுங்க’ன்னு கேட்டான். அப்ப தான் நான் இங்க வந்து சேர்ந்தேன். அப்புறம்
நான் அங்க எட்டிக் கூடப் போய்ப் பார்க்கல.
இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது இசாக்குன்னாலும்
எசக்கின்னாலும் ஐசக்குன்னாலும் ஒன்னுதான்னு. நான், போதும் போதும்னு வாழ்ந்தாச்சு இன்னும்
அந்த உலகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கப் பிடிக்கல” என்று சலீமுடன் பேசிப் பல காலமாகிவிட்டதால்
வசமாக மாட்டிக் கொண்டவனிடம் மூச்சுவிடாமல் பேசிவிட்டு இடைவெளி தராமல் தொடர்ந்தார் சாகுல்.
“எதையோ சொல்லப் போய் எங்கயோ போய்டேன்…
ம்ம் ஆமா காலப் போக்கில் நம்ம பிள்ளைங்க நம்மல மறந்திடுவாங்க. அவங்களுக்கும் பல பொறுப்புகள்னு,
உலக இன்பங்கள்னு கரஞ்சிடுவாங்க. நம்ம மாதிரிதானே நம்ம புள்ளைகளும் இருப்பாங்க?” என்று
இடை இடையில் சிரித்துக் கொண்டார்.
அப்போது அங்கு வந்து சேர்ந்த இணையப்
போராளி வேந்தன், “என்ன மாத்யூ, நட்பூக்களெல்லாம் சேர்ந்திருக்கீக போல. இப்பதான் “சிலர்
வாழ்க்கை முழுக்கச் சொர்க்கத்துக்குப் போகணும்னு விரும்புவாங்க, ஆனால் சாவுன்னா பயப்படுவாங்க.
எவ்வளவு முரண்!” அப்படின்னு ஒரு பதிவு போட்டுட்டு வரேன், என்று கடமையுணர்ச்சியோடு இளித்தார்.
நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமம், கருகருவென அலையலையான சுருள் முடியுடன் கலையான முகமுடையவரை
சலீமுக்கு யாரென்று தெரியவில்லை. மாத்யூ அவரை மதுரை வேந்தன் என்று அறிமுகப்படுத்தியதுதான்
தாமதம். “அட, நீங்கதான் வேந்தனா? நான் உங்கள் ஃபாலோவர், நீங்க எந்த பதிவு போட்டாலும்
லைக் போடுவேன்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, வேந்தன் புகைப்படத்தில் வழுக்கையாக
இருந்ததை நினைவுப்படுத்தியும் பேசினான்.
“அட ஆமங்க, இங்க வந்ததும்தான் இயற்கையாக
நான் தொலைச்சிருந்த எல்லாம் திரும்ப கெடச்சுது. முடி மட்டுமில்ல, இளமை, உடல் வலிமை,
சந்தோஷம் எல்லாந்தான்” என்று மகிழ்ச்சியில் இருந்த வேந்தன் தன் அறிவுஜீவித்தனத்தைத்
தத்துவங்களாக பொழிந்தார் “செத்த பிறகு என்னாகும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீகளா சலீம்? சில பேரு இங்க வந்த பிறகும்
உலக ஒட்டுதலிலிருந்து வெளிய வர முடியாம சிக்கித் தவிக்கிறாங்க – அது ஏன்னா, இந்த உலகத்துல
அவய்ங்களுக்கான எந்த வரவேற்புமில்ல. எப்படி இருக்குங்கிறேன்? பக்கத்து வீட்டுக்காரஞ்
சாப்பிடலானலும் எனக்கென்னானு கவலையில்லாம இருந்தவய்ங்களுக்கு
இங்க என்ன வரவேற்பு இருக்கும்ங்றேன்? தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு
சொன்ன பாரதியாரு பேச்சையும் கேக்கல பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு
இங்கு வாழும்னு சொன்ன நா முத்துக்குமார் பேச்சையும் கேட்கல” என்று வழக்கமான மற்றவர்கள்
மீதான தன் அக்கறையை பறைசாற்றினார்.
இந்த முறை சாகுல் குறுக்கிட்டு “சரி
அதவிடு, இப்ப நீ கடைக்கு உள்ள போறியா இல்ல..." என்று அவர் இழுக்கும் முன்பாகவே
சலீம். "இல்ல சாகுல் எனக்குப் பசி இல்ல. மகிழ்ச்சியில மனசு நெறஞ்சி இருக்கேன்.
எனக்காக மலையளவு பிரார்த்தனைகளான்னு மலச்சுப் போய் இருக்கேன்" என்று வராத கண்ணீரை
வரவழைத்துக் கொண்டிருந்தான்.
வேந்தன் சலீமின் வயிற்றைத் தட்டியவராக,
"பசியா? நமக்கு உயிரே இல்ல அப்புறம் எங்கிட்டிருந்துய்யா பசிக்கும்? ஆனா நம்ம
சாப்பிடுறதெல்லாம் எங்கிட்டுத்தான் மாயமா மறையுமோன்னு தெரியலப்பா. வெளியிலயே இறங்காதுய்யா
சலீமு” என்று சொன்னபோது,
சலீமுக்கு ஒன்றுமே புரியவில்லை என்று
இன்னும் விரிவாக விளக்கினார் சாகுல். “உன் ஆற்றலை இன்னுமா நீ புரிஞ்சிக்கல? ஒலியா சுற்றி
திரியலாம் சலீம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து வேந்தன், “நமக்கு
விடுதலை கெடச்சிருச்சுப்பா. நீ எத தேர்ந்தெடுக்குறீயோ
அதுவாத்தான் இருப்ப, யாதுமாய் வாழலாம். ஆனா
அதுக்கான பக்குவமும் தகுதியும் மொத உனக்கு
இருக்கணும்” என்று பக்குவத்தை சலீமின் உடல்மொழியில் தேடினார்.
கடுமையான முகத்துடன் கூர்ந்து கவனித்த
சலீமை லேசாக்கும் விதமாக மாத்யூ “அடுத்தக் கிரகத்தைப் பார்க்கணும்னு இப்பவே கிளம்பிடாத,
இங்க பார்க்க வேண்டியதே நிறைய இருக்கு” என்று நட்புணர்வுடன் பேசினார்.
எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்ற
எண்ணத்தில் சாகுல் சொன்னார் “நீ உலகத்துக்குத் திரும்பப் போகலாம்ன்னு நினைக்கலாம்,
போனாலும் அவங்களுக்கு உன்ன பார்க்க முடியாது. பார்த்தாங்கன்னா சலீம்ன்னா கூப்பிடுவாங்க?
இல்லவே இல்ல.” என்று சிரித்தார்.
அவர் எதற்காகச் சிரிக்கிறார், வேறு
நம்மை எப்படிக் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பார்த்த சலீமிடம் “உன்ன பேய்யுன்னு
ஓட ஓட விரட்டுவாங்க, நீ வராதபடி என்னலாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வாங்க."
ஏதோ அனுபவ வலியோடு பிடி கொடுக்காமல் பொடி வைத்தே கண்ணடித்தபடி பேசினார் சாகுல்.
கண்களுக்குக் குளிர்ச்சியாகவே எல்லாக்
காட்சிகளும் விரிவதாக உள்வாங்கிய சலீம் ‘இதெல்லாம் இவர்களுக்கும் தெரியுதா? இல்ல தனக்கு
மட்டுந்தானா?’ என்ற யோசனையில் இருந்த போது ஒரு மரத்தில் வித்தியாசமான கனியைக் கவனித்தான்.
"என்ன மரம் இது?" என்று கைகளுக்கு எட்டும் கனியை தடவி ’சுவைக்கலாமா கூடாதா’
என்று எண்ணிக் கொண்டே, முதல் மனிதர் ஆதாம் கதையாக ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை
உணர்வோடு கேட்டான்.
"மரமா?" என்று தங்களுக்கு
காட்சி தராத மரத்தைப் பற்றி கேட்கிறார் என்று உணர்ந்து மூன்று பேரும் சிரித்தார்கள்.
ஏதோ விளங்கி கொண்டவனாகச் சலீம், "சரி விடுங்க, உங்க வீடு ரொம்பத் தொலவா? யார்
கூடத் தங்கியிருக்கீங்க?" என்று பேச்சை திசை திருப்பினான்.
வெண்கல குண்டாவில் சில்லரையைக் கொட்டிய
சிரிப்போடு சாகுல், "சரியாப் போச்சு வீடா? வந்தவுடனே வீட்ட பத்தி கேட்குற... நான்
வந்து எவ்வளவு காலத்திற்குப் பிறகு எனக்குத் தங்குறதுக்கு இடம் கெடச்சது தெரியுமா?”
என்று அலுத்து கொண்டார்.
“என் வீட்டைத்தான் நீ பார்த்தியே, அப்படியான
வீடு உனக்கும் விரைவில் அமையும்” என்றார் மாத்யூ.
வேந்தன் வீட்டைப் பற்றி கேட்டால் தன்
முதல்நாளை நினைவுக் கூர்ந்தவராக “நான் வந்தப்ப முதல் முதலா நான் பார்த்தது, என் சீனியர்
வீராவையும் பாலாவையும்தான். அவய்ங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமான சிநேகிதய்ங்க.எல்லாரையும்
கிண்டலடிப்பாய்ங்க, புள்ளைகள கூட்டிவச்சு கத சொல்லுவாய்ங்க, பாடம் கத்துக் கொடுப்பாய்ங்க.
மாமிகளுக்கு வரிசைல நிண்டு ரேஷன் வாங்கித் தருவாய்ங்க, வயசானாலும் அவங்களால முடிஞ்ச
எல்லா உதவியும் எல்லாருக்கும் செஞ்சாய்ங்க, அவய்ங்க ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி
ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா இங்க வந்து சேர்ந்து இங்கயும் திண்ணையில உட்கார்ந்துகிட்டு
அடிக்கிற லூட்டி இருக்கே, அடேங்கப்பா. அதுமட்டுமில்ல
அன்னைக்கு பொசுக்குனு ரெண்டு பேரும் அன்பை வெளிப்படுத்துறோம்னு வாயோட வாய் வச்சு முத்தம்
கொடுத்துக்கிட்டாய்ங்க, அதைப் பாத்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிப் போச்சு… அப்படி
எனக்கானது அந்த முதல் நாள் மட்டுந்தான். அப்புறம் நான் ஒரு முழுமையான ஆற்றலாக மாறுன
பின்னாடி எந்தவித வேறுபாடும் இல்லப்பா” என்று வியந்து கூறியபடி, “உனக்கு இந்த மாதிரி
எதும் அனுபவம் இருக்கா மாத்யூ” என்று கேட்டார்.
“அந்த உலகத்துலதான் எல்.ஜி.பி.டி.ன்னு
பிரித்து பார்த்துக்கிட்டு இருந்தோம், நான் ஏற்கெனவே சலீம்கிட்ட அதான் சொல்லிட்டு இருந்தேன்.
இந்த உலகத்துல பாலினப் பிரிவுமில்ல, அதனால வர ஏற்றத் தாழ்வுமில்லன்னு. எனக்கு எந்த
வித்தியாசமும் தெரியல. இதெற்கெல்லாமா வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கோம்னு நெனச்சா எனக்கே
அசிங்கமா இருக்கு” தன் உண்மையான உள்ளார்ந்த
குமுறலை வெளிப்படுத்தினார்.
“தப்புன்னு நெனச்சதெல்லாம் இங்க தப்பே
இல்ல. இம்மையில யாருதான் தப்பு சரியெல்லாம் விதியாக்குனாங்களோ!? வாழ்க்கையை சரியாக
வாழாமல் விட்டுவிட்டோமோ?” என்று மாத்யூவின் வேதனையில் இணைந்து கொண்டார் சாகுல்.
கையையே கைப்பேசி போல் பாவித்த வேந்தன்,
தான் பார்த்து வியந்த விஷயங்களை மறுமை இணையத்தில் மட்டுமல்ல, சலீமுக்கும் புரிய வைக்கும்
முயற்சியில் தன் பங்குக்கு, “இங்க எனக்குப் பிடிச்ச விஷயமே, நம்ம ஊருல நாம் ஆன்னு பாத்த
பிம்பங்கள், எல்லாம் இங்க அவன்பாட்டுக்கு சாதாரணமாத்தான் திரிவான், நம்ம வயித்துல அடிச்ச
அரசியல்வாதிப்பயகளெல்லாம் நமக்காகச் செக்கிழுப்பான், விவசாயம் பார்ப்பான், வண்டி ஓட்டுவான்,
நம்ம சொல்ற எல்லா ஏவல் வேலையையும் செய்வான். ஏமாத்தி பொழச்ச அம்புட்டுப் பயகளும், பெட்டி
பாம்பா அடங்கி, தொடர்ச்சியா இடத்தத் தூய்மைப்படுத்திக்கிடே திரிவான், செடிக்குத் தண்ணீர்
பாய்ச்சுவான், இயற்கையைப் பராமரிப்பான், ஏதாவது ஒரு வேலையைச் செஞ்சிக்கிட்டு சுத்திக்கிட்டே
கெடப்பான். அவய்ங்கள பாக்கும் போது இதெல்லாம் தேவையாடா உனக்குன்னு சிரிப்பு சிரிப்பா
வரும். ஆனா பார்த்துக்க, இங்க சாக்கடையில்ல, இல்லாட்டி அதை இந்த அயோக்கியப்பயகதான் தூய்மைப்படுத்தி இருப்பாய்ங்க, பார்க்க கண் கொள்ளா காட்சியா இருந்திருக்கும். அப்புறம்
நீ வீட பத்தி கேட்டேல்ல, அதுக்கு நீ தகுதியாகிட்டா உன் பெயருக்கான அழியாத வீடு உனக்கே
தெரியும். சிலருக்கு வந்ததும் கெடச்சிரும் அப்படியே செட்டிலாகிடுவாங்க. உள்ள போனதும்
அவங்க மனசப் பொறுத்த எல்லாம் செமயா இருக்கும்” என்று வியக்கும் விதமாக சொல்லி வைத்தார்.
“போன வாரம் மன்னடி ஆலிம்ஸா தர்மர் சர்புதீன்
மவுத்தாகி இங்க வந்ததும் அவருக்கான வீடு வாசல் கனி வகைகள் அது இதுன்னு தடபுடலா இருந்ததுன்னு
பேசிக்கிட்டாங்க. யாரு பேசிக்கிட்டாங்கன்னு என்கிட்ட கேட்க கூடாது. அப்புறம் அந்தத்
தடபுடலையெல்லாம் நான் எதையும் என் கண்ணாலப் பார்க்கல. ம்ஹூம் இதெல்லாம் இப்படிதான்
இருக்கும்னு தெரிஞ்சிருந்தா என் சொத்த பூராம் தர்மத்துக்கே கொடுத்திட்டு, உலக மக்களுக்காகவே
உழச்சிட்டு வந்திருப்பேன்" என்று பெருமூச்சு விட்டார் சாகுல்.
’தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஊரை
அடித்து உலையில் போட்டவர்களுக்கும் இவ்வளவுதான் தண்டனையா?’ என்ற யோசனையில் தலையசைத்துக்
கேட்டுக் கொண்டிருந்த சலீம் 'இதற்கு மேல் இவர்களை தம் கேள்வியால் தொந்தரவு செய்ய கூடாது'
என்று முடிவெடுத்தான். அந்தக் கணமே அந்த மூவரும் அங்கிருக்கவில்லை. சுற்றித் தேடினான்,
யாரையும் காணவில்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த விஷயங்கள் நடக்கிறதே என்ற மயக்கத்தில்
இருக்கும் போது அவன் பூமியில் பார்த்திராத அதி அற்புதமான இயற்கை அழகுகள் கண் முன் விரிந்து
கிடந்தது. 'எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு யுகமாகும், இங்கேதானே நிரந்தரமாக இருக்கப்
போகிறோம் எவ்வளவு காலமென்றால்தான் என்ன' என்ற நினைப்பிலேயே இருந்தவனின் நெஞ்சை யாரோ
அமுக்குவது போல் இருந்தது. உடல் வலிமை இழந்து பலகீனமாக படுக்கையில் கிடத்தி இருப்பதும்.
சுற்றி மனைவி மக்கள் அழுவதும் தெரிந்து, மூச்சை இழுத்துவிட்டான்.
“தேங்க் காட், ஹி இஸ் பேக் வித் அஸ்”
என்று மருத்துவர் மகிழ்ச்சியாக கூறினார்.
சலீமின் மகிழ்ச்சிதான் முற்றும் வடிந்துவிட்டது.










