Tuesday, September 18, 2007

பெண்கள் போகப் பொருளா?

ந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்.

நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்பல்லாம் அந்த விளம்பரத்தை கண்டாலே வெறுப்பு வளரும் அளவுக்கு ஊடகம் வளர்ந்திடுச்சு. ஒரு பொருளோட விளம்பரம் தொலைக்காட்சியில் எதுக்கு வருதுன்னு நினைக்கிறீங்க? ஒரு பொருளை மக்கள் மத்தியில் எப்படி அறிமுகப்படுத்துவது, கொண்டு சேர்ப்பது என்பற்கான யோசனை, பல மூளைகளின் வேலை, அதன் மொத்தத் தோற்றம், இது தானே விளம்பரம் என்பது? அதைப் பார்த்து நீங்க அந்த பொருளைப் பத்தி தகவல் தெரிஞ்சக்கணும்னுதானே? பொருளைப் பரவலா அறிமுகம் செஞ்சா அதை நாம் வாங்கணும்னு தானே? விளம்பரம் என்பதன் மூலம் அது நம்மை அடையணும், நம்ம மனசுல அந்தப் பொருள் பதியணும்னுதானே? ஆனா இப்ப உள்ள விளம்பரங்களெல்லாம் அதற்காகப் போடுறா மாதிரியே தெரியலை? 'எதற்கான விளம்பரம் இது' என்று யோசிக்கும் அளவுலதான் விளம்பரப் படங்கள் எடுக்கிறாங்க.

எல்லா விளம்பரங்களிலும் ஒரு குத்தாட்டம் இல்லாம இல்ல. புடவைக்கான விளம்பரமானாலும் சரி சிமிண்ட்டுக்கான விளம்பரமானாலும் சரி அந்த காலகட்டத்து படப்பாடலையொட்டிய ஒரு ஆட்டம் கண்டிப்பா இருக்கணும்கற அளவில் தான் விளம்பரம் தயாரிப்பவர்களுடைய மூளை வேலை செய்யுது. மேலை நாட்டு கலாச்சாரம்னும் சொல்ல முடியாது ஏன்னா அவங்க விளம்பரங்களில் குத்தாட்டமெல்லாமிருக்காதே? விளம்பரப்படுத்த வேண்டிய பொருளைக் காட்டுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஒரு பெண் வலம் வந்துட்டு போய்டுவா. இது என்ன மாதிரியான போக்குன்னே (டிரெண்ட்னே) தெரியலை. விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை ஒரு நொடிதான் காட்டுவாங்க - ஆனா அந்த விளம்பரத்திற்கு வரும் பெண் மாடலை எல்லாக் கோணங்களிலும்.

பெரும்பாலான விளம்பரங்களில் பெண்கள் அதிகம் அழகுக்குத்தான் ஆர்வம் காட்டுவதாகவும், எப்படி ஆண்களை வளைத்துப் போடுவதுன்னு என்பதில்தான் முனைப்புடன் செயல்படுவதாகவும் தான் விளம்பரத்தை அமைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னு ஆகிப்போச்சு. அட்டகாசமான பனியனைத் தடவி பார்க்க விளம்பரத்தில் ஒரு பெண். சரி ஆணை இரசிப்பது பெண்கள் அதனால் அந்தக் கட்டத்தில் பெண்கள் அவசியமென்று சில ஆணாதிக்கவாத மூளை சொல்லலாம். அப்படிப் பார்த்தால் எல்லா தங்க நகை விளம்பரத்திலும் ஒரு ஆண் வேணுமா வேணாமா? ம்ஹும், அங்க ஆண் இருக்க மாட்டார். இதிலிருந்து என்ன தெரியுது? விளம்பரப்படுத்தும் அனைத்துமே ஆண்கள் பார்ப்பதற்காகத் தயாரிக்கப்படுகிறது. அவர்களைக் கவர்வதற்காகவே ஒரு பெண்ணை விளம்பரத்தில் புகுத்துகிறார்கள். பெண்கள் ஆண்கள் மீதான ஆளுமை இந்த இடத்தில்தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது எந்த மாதிரியான ஆளுமை?

ஊருக்குப் போயிருக்கும் போது பெரிய ஹோர்டிங் போர்டை பார்த்தேன் 'Definitely Catchy' என்று எழுதி ஒரு அழகான பெண்ணின் பிரம்மாண்ட புகைப்படம், என்ன விளம்பரம்னு பார்த்தா - Deccan Chronicle பத்திரிகைக்கான விளம்பரம். விளங்கிடும்னு நினைச்சுக்கிட்டேன். நேற்று பார்த்த விளம்பரம்தான் கொடுமையின் உச்சக்கட்டம் 'ஆக்ஸ்' வாசனைத் திரவியத்தின் விளம்பரம். வாசனைக்கு ஒரு ஆணை நோக்கி ஆயிரம் 'உரித்த கோழிகள்' ஓடி வருவதாகக் காட்சியமைப்பு. பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விளம்பரம். 'உரித்த கோழிகள்' என்று குறிப்பிட்டிருப்பது அரை நிர்வாண உடைகளில் இல்லை இல்லை முக்கால் வாசி நிர்வாண உடைகளில் பெண்கள் (உடைகளே இல்லை என்பது தான் பிரச்சனை). இந்த விளம்பரம் அப்பட்டமான ஆணாதிக்க மூளையின் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணுக்கு தேவை மாமிச இச்சை என்பது போலவும், மயக்கும் வாடையில் மயங்கி எவனுடனும் ஒரு பெண் அலைந்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள் என்பது போலவும், கேவலம் காசுக்காக பெண் ஒரு போகப் பொருள் மட்டுமே என்பதையும் பறைசாற்றும் விளம்பரம். பெண்கள் வெறும் கவர்ச்சி பொம்மைதான்ல? வெறும் காட்சி பொருள்தான்ல? இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று பெண்கள் சொன்னால்தான் என்ன? இந்த மாதிரியான கொடுமையான விளம்பரங்களை ஊடகங்கள் போட மறுத்தால்தான் என்ன?

வீணாப்போனவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் அதற்கு போராட்டம் நடத்தி வீண் என்பதால் சமூக ஆர்வலர்களும், மகளிர் மன்றங்களும் இருந்து விட்டனவா அல்லது பழகிப் போன அறிவுக்கு இதெல்லாம் பழகிப் போய் அறியாமையின் உச்சக்கட்டம் கண்ணில் பட்டும் காணாதவர்களாக இருக்கிறார்களா? கண்டதற்கெல்லாம் பொங்கி எழும் கூட்டமெங்கே!? ஓ! இதற்கும் காசுக் கொடுத்தால்தான் விழித்து எழுவார்களோ இவர்கள்? ஒருவேளை கற்பு, கலாச்சாரம், பண்பாடுன்னு பேசுறாங்களே அது இதுதானோ? பெண்கள் ஆண்களிடம் அடிமையாக உள்ளனர் என்பதெல்லாம் சுத்த பேத்தல் பெண்கள் அவர்களிடமே மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Thursday, September 13, 2007

ஆவியில் வந்த கிறுக்கல்கள்


ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல கிடக்கப் போற'ன்னு பயமுறுத்திட்டுப் போறாங்க. இதுல வேற நேத்து 'மெட்ரோ நியூஸ்'லயும் நம்மள பத்திப் போட்டிருக்காங்கன்னு செய்தியைப் பார்த்தேன். நம்ம இலங்கை நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் தகவலுக்கு நன்றி சொல்லி வந்தேன்.

அப்புறம் பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும், தனி மடலில் தனியா வாழ்த்தியவங்களுக்கும், தொலைபேசி வாழ்த்தியவர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. ஆனந்த விகடனில் நம்ம வலைப்பூ பத்தி வரது அவ்வளவு பெரிய விஷயமான்னு இருந்தேன், என் கவுண்டர் ஓடிய ஓட்டத்தை பார்த்துத்தான் ரொம்பப் பெரிய விஷயம்தான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

எங்க ஊருல ரமதான் இன்று ஆரம்பம் (துபாயை எப்போ உங்களுக்கு எழுதிக் கொடுத்தாங்கன்னு ஆரம்பிச்சுடாதீங்க மக்கா). எல்லா மக்களுக்கும் ரமதான் கரீம்.

Thursday, September 06, 2007

விட்டு விலகி நின்று...


உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் தாயை இழந்த சிறு வருத்தம் கூட உன்னிடம் தென்படாதது எனக்கு வியப்பாக இருந்தது. என்னளவுக்கு அந்த வயதில் உனக்கு முதிர்ச்சியில்லை என்று நான் தவறாக விளங்கிக் கொண்டதை உன்னிடம் பழகிய பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

எனக்கு நிறைய தோழிகள் உண்டு, உனக்கு நான் மட்டும்தான் தோழியாக இருந்தேன். அப்படியாக நீ ஏற்படுத்திக் கொண்டாய். யாரிடமும் எளிதில் ஒட்ட மறுத்துவிடும் உன் சுபாவம், உன் வித்தியாசமான மனப் போக்கு, விசித்திர கண்ணோட்டம், அதிசய சிந்தனை, கடிவாளமில்லாத உன் கற்பனை எல்லாவற்றிற்கும் உனக்குப் பொருத்தமான அலைவரிசையில் நான் மட்டுமே பொருந்திப் போனதாய் சொல்லிக் கொள்வாய். அதனால் உன்னையே என் நெருக்கமான தோழியென்று சொல்லச் சொல்லி அடம்பிடிப்பாய். நாம் சேர்ந்தே வளர்ந்தோம். பருவங்கள் மாறும் போது நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனதளவில் நாம் குழந்தையாகவே இருக்க விரும்பினோம். மாதவிடாயே வரக் கூடாது என்று பிராத்திக்கத் தொடங்கிவிட்டாய் நீ. அந்த மாற்றத்தில்தான் பெண்ணின் தலையெழுத்தே மாறிவிடுவதாக சொல்லி சாதித்தாய். அதெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியதல்ல என்பதை நாளடைவில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது உனக்கு. உன் தந்தையென்றாலே உனக்கு எப்போதும் அலட்சியம்தான். 'அவரைக் கண்டாலே ஏன் எரிந்துவிழுகிறாய்' என்று நான் ஒருநாள் உன் செயல் பொறுக்காமல் கேட்டதற்கு உன் தாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத தந்தையைப் பிடிக்கவில்லை என்றாய். உன் தாய்க்குப் பின் உன் தந்தை உனக்காகவே வாழ்ந்தாரே தவிர வேறு மனம் செய்துக் கொள்ளவில்லை என்று புரிய வைக்க முற்படும் போதெல்லாம் நீ பொருட்படுத்துவதில்லை. நானும் என் அறிவுரைகளைக் குறைத்துக் கொண்டேன்.

அழகாக வளர்ந்து வரும் நம்மை ஆண்கள் கண்களால் மேய்வதை உன்னால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பார்ப்பவர்களை நீ பார்க்காதே அலட்சியம் செய்' என்று எவ்வளவு சொல்லியும் யாராவது விழுங்குவது போல் பார்த்தால் போய் சண்டைக்கு நின்றாய். நான் துணையாக இருக்கும் தைரியத்தில்தான் இதையெல்லாம் செய்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டாய். நீ தனியாகப் போகும் போது எதிர்பாராத விதமாக அந்த காமுகன் நடுவீதியில் உன்னைக் கட்டியணைத்த சம்பவத்திலிருந்து உன்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதை விபரமாகச் சொல்ல முடியாமல் நீ தேம்பியதும் விம்மியதும் உன் கண்களில் நான் கண்ணீர் கண்டதும் அதுதான் முதல் முறை. இறுக்கமாக அணைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்றவனை ஒன்றுமே செய்ய முடியாமல் ஒடிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் போது அனைத்துமே தெரிந்த முகமாக இருந்தும் கேட்க ஆளில்லாமல் போனதற்குக் காரணம் அவன் புதுக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாட்டசாட்டமான பலசாலியான தாதா. அன்றிலிருந்து கனவிலும் கயவர்களுடன் சண்டையிட்டு தூக்கத்தில் பேசுவதைப் பார்த்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் உன் அப்பா. ஆண்களை வெறுக்கும் உச்சக்கட்டத்திற்கே நீ சென்றுவிட்டதை உன் பேச்சிலிருந்து அறிந்துக் கொள்ள முடிந்தது. சில நேரங்களில் நீ வெறுப்பவர்களைப் பற்றிப் பேசும் போதே உன் நிலை மறந்து விசித்திரமாக நடந்துக் கொண்டாய். சில சமயங்களில் எனக்கு பயமாகக் கூட இருந்தது. நிறைய நாட்கள் உன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் உன் அறையைத் தாளிட்டு வெளியில் இடிந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வற்புறுத்தலின் பேரில் மனநல மருத்துவரைச் சந்தித்து அறிவுரை எடுத்து வந்தது என்னை திருப்திபடுத்த மட்டுமே இருந்தாலும் பலன் இருப்பதாக நான் கருதினேன். அந்தக் காமுகன் மீண்டும் உன் கண்களில் படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

உன் முடிவே சரியென்று நினைக்கும் உன்னை யாரும் மாற்றிவிடவோ கலைத்துவிடவோ முடியாததால் ஆண்களை வெறுக்கும் உனது சுபாவத்தை மாற்ற முயற்சி செய்ததில் எனக்குத் தோல்விதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியல்ல என்று உனக்கு விளங்க வைக்க என் சில நல்ல நண்பர்களை நட்பாக இணைத்து வைத்தேன், அதில் உனக்கு ஆத்மியைத் தவிர வேறு யாரையுமே பிடிக்காமல் போனது. ஆத்மியை உனக்கு பிடிக்கும் காரணமும் அவனது கண்ணியமான சுபாவம் என்று நீயே சிலாகித்திருக்கிறாய். உன்னை ஓரளவுக்கு மாற்ற முடிந்ததில் மகிழ்ந்தேன். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு தமிழ்த்திரைப்படங்களே பிடிக்காமல் போனது. கல்லூரியில் உன்னைப் போலவே நான் மற்றவர்களுடன் சரியாக ஒட்ட முடியவில்லை காரணம் எல்லா மாணவிகளுக்கும் பேச பிடித்த தலைப்பு 'ஆண்கள்', 'காதல்', 'அந்தரங்கம்'. எல்லாவற்றையும் ஓரளவுக்கு என்னால் சகித்துக் கொள்ள முடிந்தளவுக்கு உன்னால் முடியவில்லை - கல்லூரி வாழ்வையே வெறுப்பதாகச் சொன்னாய். படிப்பு முடிந்த பிறகு எனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்து நான் செல்ல ஆயத்தமான போது எல்லோரையும் விட மிகவும் வருத்தப்பட்டது நீதான் என்று எனக்குத் தோன்றியது. நான் அங்கு சென்று சூழல் சொன்ன பிறகு நீயும் என்னுடன் வந்துவிடுவேன் என்று கூறிக் கொண்டிருந்தாய். விமான நிலையத்திற்கு என் குடும்பத்தாரை தவிர்த்து வெளியாளென்றால் அது நீ மட்டும்தான். விமான நிலையத்தில் உன்னுடன் நான் ஆத்மியைப் பார்த்து ஆச்சர்யமாவதை கவனித்த நீ அவன் உன்னுடன் வரவில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் அவன் மூத்த சகோதரனை வரவேற்க வந்திருப்பதாக எனக்கு விளக்கமளித்தாய். எப்படியோ என்னைத் தவிர உனக்கு வேறு ஒரு துணையை விட்டுச் செல்லும் எக்களிப்பில் இருந்தேன்.

நான் இந்தியாவை விட்டுப் பறந்தது அக்டோபர் 26 காலையில். அவளிடமிருந்து அழைப்பு வராததால் அவளை நான் இரண்டு நாட்களுக்கு பின் தொடர்பு கொண்டேன். என் அழைப்பிற்கு அவள் பக்கத்தில் பதில் இல்லாததால் இரு தினங்கள் விட்டு மறுபடியும் அவளை நான் அழைத்தேன் ஆனால் மறுமுனையில் அவள் இல்லை, அவள் அப்பா பேச முடியாமல் அழுதார். நான் சென்ற அதே தினம் ஆரம்பமான அவளுடைய கொலை வெறி அடுத்த தினமே முற்றியிருக்கிறது. யாரையோ தேடிச் சென்று அவன் ஆண் உடைமையை அவள் வெட்டி வந்தது அக். 28 இரவு. அவள் கைது செய்யப்பட்டது இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழிந்து. ஆத்மியின் சகோதரன் தான் அந்தக் காமுகன் என்று நான் தெரிந்து கொண்டது அவள் கைதுக்குப் பிறகு. மனநலம் சரியில்லாத காரணத்தால் அவளைச் சிறையில் வைக்காமல் சிகிச்சை தர வேண்டுமென்ற வாதத்தில் வெற்றி பெற இரண்டு வாரங்களானது. மனநல மருத்துவமனையை விட்டு அவள் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது நவம்பர் மாத இறுதியில். அவள் தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் வந்தது அவள் தப்பிக்க முயற்சி செய்த நாளுக்கு மறுநாள்.

நீ கண்டிப்பாகத் தற்கொலை போன்ற முடிவுக்கு வரமுடியாதவள் என்று உன்னை முழுதும் அறிந்த என்னால் மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் உனக்காக என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்?

Wednesday, September 05, 2007

ஆசிரியர் தின வாழ்த்து



தமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?

எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?

முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?

உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?

எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்

உன் நினைவுகளோடு....



மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி