உறவும் பிரிவும் - A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் இப்படி? விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து நிகழலாம் ஆனால் சிமின் தன் கணவர் ஒழுக்கமானவர், நல்லவர், அன்பானவர் ஆனாலும் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றம் சென்று வலுவான காரணமில்லாததால் அந்த விவாகரத்து ரத்தாவதே ’எ செப்பரேஷன்’ (A Separation) படத்தின் முதல் காட்சி.

நாதர்- சிம்மின் ஒரு நடுத்தர படித்த ஈரானிய குடும்பம், அவர்களுக்கு ஒரு பத்து வயது மகள் தெர்மே. ஈரானை விட்டு செல்ல விசா கிடைத்திருக்கிறது போக வேண்டுமென்று துடிக்கிறார் சிமின் ஆனால் ஆல்சைமர் நோயால் அறிவாற்றல் இழந்த நிலையில் வயதான தன் தந்தையை விட்டு வர மனமில்லாமல் நாட்டைவிட்டு செல்ல மறுக்கிறார் நாதர், வழக்கமான பெண்களின் துருப்புச்சீட்டான பெற்றவர் வீட்டுக்கு பிரிந்து சென்று தன் தேவையை கணவருக்கு நிரூபிக்க பார்க்கிறார் சிமின். தந்தையைப் பார்த்துக் கொள்ளவும் பிற வீட்டு வேலைகளுக்கு மட்டுமே அவள் தேவையென்பது போல் வேலையாளாக ரஸ்யாவை நியமிக்கிறார் நாதர். கர்பினியான ரஸ்யா வறுமையின் காரணமாக அந்த முதியவரை கவனித்துக் கொள்ள தன் சிறிய மகளையும் கூட்டிக் கொண்டு வந்து வீட்டு வேலைகளையும் அந்த முதியவரின் தேவைகளையும் செய்து தருகிறார். ஒருநாள் நாதர் வீட்டிற்கு நேரத்தோடு வந்துவிடுகிறார், வீட்டில் ரஸ்யா இல்லை, தந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார் அவர் கைகள் கட்டிலில் கட்டியபடி. பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த ரஸ்யாவை திட்டி தீர்த்து, திருட்டுப் பழியும் சுமர்த்தி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். மறுநாள் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று ரஸ்யாவின் வீட்டார் சிமினுக்குத் தெரிவிக்க, கணவன் -மனைவி இருவரும் சென்று பார்க்கிறார்கள். ரஸ்யாவின் கணவர் ஹோட்ஜாத் நாதர் தள்ளியதுதான் இதற்குக் காரணமென்று சினம் கொண்டு சண்டையிடுவதோடு வழக்கும் பதிவு செய்கிறார்.

ஈரானியன் படமான ‘எ செப்பரேஷன்’ நாதர்- சிமின் இருவரின் விவாகரத்தை மையமாகக் கொண்டு அதனை சுற்றி நிகழும் ஒரு கதைக் களம். வலுவான ஐந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு மிக நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார் அஸ்கர் ஃபர்ஹாதி. அற்புதமான திரைக்கதைகள் ஆங்கிலப்படத்திற்கு மட்டுமே என்று தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஆஸ்கர் வாங்கி வந்ததைத் தகர்த்தது இந்த ஈரானியப் படம். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை என்று கிட்டத்தட்ட நூறு விருதுகள் பெற்ற படம்.

இந்த கதையின் காட்சிகள் உண்மை- பொய் என்ற இரண்டுக்கும் இடையில் ஒரு இழையாக ஓடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தேவைக்காக அல்லது பிழைப்பிற்காக எவ்வளவு சரளமாக பொய் சொல்கிறோம். இல்லை நாம் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்க மட்டுமே செய்கிறோம் அல்லது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள இடத்திற்கேற்றாற்போல் நடந்து கொள்கிறோம். இதைத்தான் இந்த படத்தில் உடைத்தெடுக்கிறார் இயக்குனர். அதுவும் குழந்தைகளுக்குப் பொய் சொல்ல கூடாது என்று கற்றுக் கொடுக்கும் நாமே இந்த இந்தக் காரணங்களுக்குத் தெரிந்தவற்றை சொல்லாமல் மறைப்பது சரியென்பதாக மறைமுகமாக சொல்லித் தருகிறோம். இதை இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குனர் அஸ்கர்.

ஈரானிய வாழ்க்கை முறையை அவர்கள் உடுத்தும் உடைகளிலும் இருக்கும் இடத்தையும் வைத்தே சித்தரித்திருக்கிறார். படித்த, மேற்கத்திய கலாச்சாரத்தில் விருப்பமுள்ளவராக சிமினை காட்ட வெறும் அவரின் இறுக்கமில்லாத உயர் ரக தலைச்சீலையையும், வெளிநாட்டுக்குச் செல்லும் விருப்பத்தையும், ஒரே ஒரு காட்சியில் அவர் படித்துக் கொடுப்பவராக காட்டும் இயக்குனர், வீட்டு வேலைக்கு வரும் இறையச்சம் நிறைந்த ரஸ்யாவை கருப்பு அங்கியால் தன்னை இறுக்கிக் கொண்டு, வயதானவரின் கழிவுகளை அகற்றவும் முதியவரின் கால் உடுப்பை கழற்றவும் கூட ஒரு மார்க்க அறிஞரை அழைத்து ’இதில் தவறில்லையே’ என்று கேட்டு அறிந்து கொள்ளும் காட்சிகள் சான்றளிக்கும் அஸ்கர் சிறந்த இயக்குனரென்று. படத்தில் வரும் இரு குழந்தைகளின் நிலைப்பாட்டை முழுநீள வசனமில்லாத அவர்களின் முகபாவங்கள் பேசிவிடுகின்றன. பெண்களை அடிப்பவர் மிருகம் அப்படியானவன் நானில்லை என்று பேசும் ஹோட்ஜாத் இறுதி கட்டத்தில் மனைவி மீதுள்ள கோபத்தை தன்னைத் தானே அடித்து வெளிப்படுத்தி விளக்கும் கட்டுப்பாட்டை நம்மூர் ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தன் மகளின் பாடத்தில் உதவும் தந்தை தம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதோடு, தமக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தையிடம் வெளிக்காட்டாது அவளுக்கு நேரத்தை ஒதுக்கும் நல்ல தந்தையென்று சின்னச் சின்ன காட்சிகள் ஹைகூ போல் உணர்த்தி நம்முள் ஒட்டிக் கொள்கிறது.

படத்தின் முடிவில் தெர்மே தம் எதிர்காலத்தை யாருடன் ஆரம்பிக்க போகிறார் தாயா தந்தையா, அதன் பின்னனி நியாயங்களை இயக்குனர் எப்படி நிரூபிக்கப் போகிறார் என்ற புதிரோடு முடிகிறது படம்.

இயக்குனர் ஒரு கவிஞராகத்தான் இருக்க முடியும் காரணம் கடைசி காட்சியில் சிமின், நாதர், தெர்மே மூவரும் கருப்பு உடை அணிந்திருப்பதை ஒரு படிமமாகக் காட்டி நாதர் தன் தந்தையை இழந்துவிட்டதை உணர்த்துவதோடு, பிரிவில் துக்கம் நீடிக்கிறது என்பதையும் உணர்த்துகிறார்.

மெய்யும்- பொய்யும் விளையாடும் வாழ்க்கை நாவலை படித்து முடித்த திருப்தியை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது ‘எ செப்பரேஷன்’.

அறம் செய விரும்பு - ‘The Blind Side'


பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’.
2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த பல விருதுகளில் 2010 சிறந்த நடிகைக்கான (Academy Award for Best Actress) ஆஸ்கர் விருது சான்ரா புல்லக்குக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை, தேர்ந்த, மிக இயல்பான, கொடுத்த கதாபாத்திரமாக மாறியதற்கான பரிசு. படத்தின் இயக்குனர் ஜான் லீ ஹன்குக் 2006-ல் வெளிவந்த புத்தகத்தைப் படிக்கும் போதே இந்தக் கதாபார்த்திரத்தில் இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைத்து சாதித்த படமா என்று தெரியவில்லை. ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலா வரச் செய்திருப்பதின் வெற்றியே இந்தப் படம். ஒரு சில படங்களில் கதையின் கரு சிறியதாக இருக்கும் அதனை நீட்டி முழக்க பல காட்சியமைப்புகளும் அதுவும் தமிழ்ப்படமென்றால் கேட்கவே வேண்டாம் 5-6 பாடல் காட்சிகள், 4-5 சண்டைக்காட்சிகள், சிரிப்பு காட்சிகள் என்ற இடைச்செருகலாக துண்டு துண்டாகக் கிடக்கும். ஆனால் உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அந்தந்த கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் புரிய வைக்கவும், நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவும் மிகவும் தேர்ந்தெடுத்த காட்சிகளை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.


நாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல் அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில், மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம் சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத் தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா?


அப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில் சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும் படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல் ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும் அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.


கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர் அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான் மற்றும் குழந்தைகள் கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.


”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும் உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன் மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான் மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக் கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த் அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில் முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.


கதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும், எனக்குப் பிடித்தது போல.

Blog Widget by LinkWithin