Sunday, May 20, 2018

அர்ஷியாவின் "ஸ்டோரீஸ்"

" 'ஸ்டோரீஸ்’ ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகளின் அசை" என்று வாசித்த மாத்திரத்திலேயே இந்த நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. 1987 முதல் 1996 வரைக்கும் மதுமலரன்பனாக ‘தராசு’ அரசியல் சமூக வார இதழை சமச்சீராக நிலைநிறுத்திய துலாக்கோலாகவும், ‘கழுகு’ தர்பார் அரசியல் இதழின் சிறகுகளாகவும் இருந்தவர் என்றும், அங்கிருந்த காலத்தைத் தான் தன் வாழ்க்கையில் திரும்பக் கிடைக்காத தன் பொற்காலம் என்றும் சொல்பவரின் அசையை ஒரு பத்திரிகையாளரின் மகளாக வாசிக்கும் ஆர்வம் அதிகரித்தது.
தன் மகள் அர்ஷியாவின் பெயரில் எழுதிய இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சம்பவங்கள். எனக்கென்னவோ என் வாப்பா வீட்டில் வந்து சொல்லக் கூடாத சொல்லத் தயங்கிய விஷயங்களை மென்று முழுங்கியவாறு சொல்லும் விஷயங்களாகப் பல பகுதிகளைக் கடந்தேன். அர்ஷியா அவர்களை இதற்கு முன் வாசித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு விஷயமும் என் வாப்பாவையே எனக்கு நினைவுபடுத்தியது. குறிப்பாக அவருடைய அன்பு, நேர்மை, கட்சி பேதமில்லாமல் எல்லோரும் அவரிடம் பழகியதாலேயே அர்ஷியா அவர்களின் திருமணத்திற்குக் கட்சி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார் அப்படித்தான் எனது திருமணத்திற்கும் என் வாப்பாவிற்காகக் கட்சி பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். தங்கை மகளுக்கு ஓபிசி சான்றிதழ் வாங்க அலைந்தது என் பாஸ்போர்ட் தொலைந்து அதற்காக யாரையெல்லாம் நாங்கள் சென்று பார்த்தது என்று நிறைய ஒற்றுமைகள் இருந்தது இந்நூலுடனுடன் எனக்கு நெருக்கத்தை அதிகரித்தது.

சரளமான எளிமையான மொழிநடையால் சொல்ல வந்த செய்தியைப் புரியும்படி இலகுவாகக் கடத்திவிட அவருக்குக் கைவந்திருக்கிறது. அடுத்தது எதைப் பற்றியது, என்ன சம்பவம் என்று ஒவ்வொரு பகுதியாக மூழ்கி, பக்கங்களைத் திருப்பிக் கொண்டே செல்லச் செய்தது அவருடைய தேர்ந்தெடுத்த சம்பவங்கள். அதில் சிலது இதை ஏன் சேர்த்துள்ளார், இப்படி அரைகுறையாகச் சொல்வதற்குச் சொல்லாமலே இருந்திருக்கலாமென்றும் தோன்றாமலில்லை.
ஒரு பேனாவால் என்ன செய்துவிட முடியும், என்ன கிழித்துவிட முடியும் என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது இந்நூல். பேனாவால் விளைந்த நன்மையை மட்டுமல்ல தீமையையும் சரியாகவே பதிவு செய்துள்ளார். கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்து கட்டுரை வரைந்தால் அது எதிர்மறையாகத் தொழில் முன்னேற்றம் தந்ததை வருத்தத்துடன் பதிந்துள்ளார். செய்தியை நிரப்புவதற்காகப் பாம்பு கடி செய்தி வெளியிட்டு எம்எல்ஏ கண்ணப்பன் அமைச்சரான கதை என்று எல்லாவித துணுக்குகளையும் பதிவு செய்துள்ளார். இந்த நூலுக்கு மிகப் பொருத்தமான நூல் அறிமுகத்தை அதற்கு மிகவும் தகுதி வாய்ந்த கே.என்.சிவராமன் தந்தது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

பிரபல பத்திரிகை மூலமாக அன்று செய்ததை இன்று பலர் புகைப்படச் சாட்சியங்களுடன் சமூக வலைத்தளத்தில் ஏற்றினாலும், அந்தக் காலக்கட்டத்தில் தட்டச்சில்லாமல் ‘கட் & பேஸ்ட்’ செய்யாமல், பிலிம்சுருள் இல்லாமல் மறுபடியும் சென்று படமெடுத்ததையும் பதிவு செய்தவர், தரவுகளைச் சேகரித்து, ஒரு முழுநீள கட்டுரையையும் கவர்ஸ்டோரீஸ்களையும் எழுதித் தயாரித்தது சாதாரண விஷயமாக எனக்குத் தெரியவில்லை. கண் விரியும் சம்பவங்கள் அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

சண்டியர்- கல்வி தந்தையரானதற்குச் சாட்சியானார், மனசாட்சிக்காகக் களவாடிய சைக்கிளை திருப்பித் தந்த ஏட்டையா, ஜெயலலிதாவின் வளர்ச்சி, ஜானகியம்மாவின் ஆண்டிப்பட்டி தோல்வி, ஓ. பன்னீர் செல்வம் பதவி வந்தவுடன் அணுகுமுறை மாறியது, பள்ளத்தூர் கல்லூரிக்கும் மதுரை ஆயுதப்படை வளாகத்திற்கும் விமோசனம் கிடைத்தது, மக்களின் பேராசைகளால் ‘டூன் டிரேடிங் கம்பெனி’கள் உருவாகியவை, ‘பங்களா பாலிடிக்ஸ்’ என்று பல்வேறு விஷயங்களைக் கோர்வையில்லாமல் பதிவு செய்யப்பட்ட ‘அசை’.

ஸ்டோரீஸ் புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பார், “யாரையும் புனிதப்படுத்தவோ காயப்படுத்தவோ நான் முயலுவதில்லை. அதே வேளையில் நெஞ்சத்தின் கரைகளைத் தொட்டுவிட்டுத் திரும்பும் எண்ண அலைகளில் சில சிப்பிகளையும், சில முத்துகளையும் கொஞ்சம் கடல் நுரையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வது மட்டுமே என் நோக்கம்” என்று.

இப்படியான மனிதர்களை இனி கடப்பது அரிது.

Tuesday, April 10, 2018

ஓரிதழ்ப்பூவை ஒரு பெண் எழுதியிருந்தால்?

நூலாசிரியர் அய்யனார் விஸ்வநாத் தெரிந்தவர், நெருக்கமானவர் என்பதற்காகவும், வெளிப்படையான கருத்துக்களை ஏற்க கூடியவர் என்பதாலும், அதுவும் சமீப காலமாக வீரியம் குறைந்து, கோபதாபங்கள் குறைந்து விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டதாலும், இது அவரைப் பற்றிய விமர்சனமல்ல அவர் படைப்பை பற்றியது என்பதால் மிகத் தைரியமாக ஒரு பெண்ணின் பார்வையில், ஒரு தாயின் பார்வையில் இப்புத்தகத்தை அணுக முயற்சித்துள்ளேன்.

குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வொரு பொருளின் பெயரையும் சொல்லித்தருவோம். சில வார்த்தைகளை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் கற்றுவிடுகின்றனர். என் மகள் ஏதாவது செய்வதை மறைத்தால் திரித்தால் ‘பொய்’ சொல்லாதே என்று கடிந்துக் கொள்வேன். “பொய்’ என்றால் என்னம்மா?” என்று மகள் கேட்டாள். “உண்மையை மறைப்பது, நான் திட்டுவேனென்று தவறை மறுப்பது” என்றேன். “எது உண்மை, எது தவறு” என்று திரும்பக் கேட்டாள். “நிஜம்,யதார்த்தம், நிகழ்ந்தது” என்று சொல்லி விவரிக்கப் பார்த்தேன். அதே போல ‘பயப்படாதே. தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். நல்ல விஷயங்களை, சரியானவற்றைச் செய்யும்போது தயக்கம் இருக்கக் கூடாது” என்றேன் மகனிடம். அதற்கு அவன் “நல்லது எது கெட்டது எது? எது சரி, எது தவறு? யார் அதை நிர்ணயிப்பது? எது சரி என்று எனக்கெப்படி தெரியுமென்று” மறு கேள்விகள் கேட்டான். “உன் மனதுக்குச் சரியென்று படுவது நல்லது. இல்லை தவறு, இது செய்தால் அம்மாவுக்குப் பிடிக்காது என்று நீ நினைத்து அதை மறைக்க நினைப்பது கெட்டது” என்றேன். இப்படி நாம் வளரும்போதே நல்லதையும் நல்லது அல்லாததையும் மத ரீதியாகவோ, நமது கலாச்சாரப் பண்பாடு ரீதியாகவோ, சமூகத்திற்கு மட்டும் ஏற்புடையதை வைத்துப் பிரித்துப் பார்த்து ஒரு முன் முடிவோடு இருப்பதால். நாம் சந்திக்கும் நபர்,பழகும் நண்பர், நம் சுற்றுச் சூழலில் உள்ளவர்கள், ஏன் பார்க்கும் சினிமாவிலிருந்து வாசிக்கும் நூல் வரை நல்லவை என்று நாம் நம்புபவையே அவ்வாறு இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். நமக்கு சகஜமான வார்த்தை மற்றவருக்கு ‘கெட்ட வார்த்தையாக’ இருக்கலாம்.

உதாரணமாக மலையாளிகளை நண்பர்களாகக் கொண்டவர்களுக்குத் தெரியும் அவர்கள் எவ்வளவு சரளமாக ‘தெண்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று. ‘போடி தெண்டி’ என்று சொன்ன நண்பரிடம் பல நாட்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். பிறகு “இல்லை இதை நாங்கள் மிக நெருக்கமானவர்களிடம் அப்படிப் பேசி பழகிவிட்டோம், அந்தச் சொல்லுக்கான பொருளை முன்னிறுத்தி சொல்லப்படும் வார்த்தை இல்லை” என்று விளக்கி மன்னிப்பு கேட்ட பிறகே நான் சமாதானமானேன். அப்படித்தான் ஓரிதழ்ப்பூவில் வெளிப்படையாக மனம் திறந்து யதார்த்தமாக, புனைவாக மிகு புனைவாகப் பேசியுள்ளார் நூலாசிரியர். அதைப் படிக்கும்போது அவருடைய வசீகரிக்கும் எழுத்துநடையும் இடையில் வரும் வட்டார வழக்கும் வாசிக்க விடாமல் நம்மைத் தடுப்பதில்லை.

நூலாசிரியர் உச்சத்தில் (ரொம்ப ‘ஹை’யாக) இருக்கும் போது எழுதியவை அதனாலேயே வாசிக்கும் நமக்கும் அவ்வகையான உணர்வை கடத்தியிருக்கிறார். இவ்வகையான போதையை மனம் ஏற்றாலும் அதை ஏற்கும் நம்மை இச்சமுதாயம் ஏற்குமா என்ற பயம் உள்ளூர ஏற்படாமலில்லை.

‘கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம்’ என்ற பாடலை எழுதியவர் போகரா? கம்பரா?தொல்காப்பியரா? என்று கடைசி வரை நூலாசிரியர் சொல்லவேயில்லை. ஒரு வகையான பித்துப்பிடித்த கதாபாத்திரங்களோடு வாசிக்கும் நம்மையும் மாமுனியோடு சேர்த்து,பொதிகை மலையையே சலித்து அப்பூவைக் கண்டறிய கட்டற்ற நிலையில் அலைந்து திரிந்து நம்மையும் சேர்ந்து கண்டெடுக்க வைக்கிறார். அதற்கான உந்துதலை அவர் எழுத்து நமக்குத் தருகிறது.

வாசிக்க வாசிக்கத் திருவண்ணாமலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டுமென்று ஏற்கத்தை ஏற்படுத்துகிறது அவரது விவரணை. இப்படி இடங்களை மட்டுமல்ல அவர் கதையில் வரும் ஒவ்வொரு பெண்களையும் அவ்வளவு ஆசையோடு அழகாக விவரித்து ரசிக்க வைத்த நூலாசிரியர் வர்ணித்த அந்தப் பெண்களை மட்டும் ஏன் அசிங்கப்படுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை. ஒருவர் இருவரல்ல கதையில் வரும் பிரதானப் பாத்திரங்களான அங்கையற்கன்னி, அமுதாக்கா, துர்கா, மலர்செல்வி என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. மனப்பிறழ்வு மாந்தர்களாகவே இருக்கட்டுமே, தீயாகப் பூத்த துர்கா சாமியுடன் 'இருந்தவுடன்' பெரிய அமைதியைப் பெற்றாராம். அதே துர்கா மாமுனியைப் பார்த்தவுடன் கையோடு அழைத்துச் சென்று, அமுதத்தில் விழ வைத்து அவருக்கு ஆயிரம் வருடப் பிறவி பயனை அடையச் செய்தாராம். அங்கையற்கன்னி  சங்கமேஸ்வரனைப் பார்த்த மாத்திரத்தில் தழுவிக் கொண்டதோடு, அவன் மீது பாய்ந்தாளாம். மலர்விழி,கோலப்பொடியை விட்டுவிட்டு கிடைத்தவனுடன் பைக்கில் ஏறி தொலைந்தாள். அமுதா அக்கா சாவு வீட்டுப் பூ வாசத்துடன் ஆசையோடும் தவிப்போடும் ரவியை ஏந்திக் கொண்டாளாம்.

நான் ஒரு அடிப்படைவாதியோ, கலாச்சாரம் பண்பாடு கற்பு அப்படியென்ற ‘டெம்ப்லேட்டிற்குள்’ சிலரது செயலை வைத்து ஒழுக்க மதீப்பீடு செய்பவள் அல்ல. ஆனால் மனம்பிறழ்ந்த பெண்ணுமே கண்டவுடன் கட்டுடலை அவிழ்ப்பாளா? எத்தனை சதவீதம் இது சாத்தியம்? பல வருடங்கள் சென்றும் பேசக் கூடிய ஒரு படைப்பில் பெண்களை இப்படிச் சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை.

அதே சமயம், காமம் அற்புதமான விஷயம் அதை அற்பமாக்கி விடாமல் ரசனையோடு இப்படிப் பேசியிருக்கிறார்.

“கனிகளை மட்டுமே கொண்டிருந்த பெரும் பழமரமொன்று வெளவாலை இழுத்து அணைத்துக் கொண்டது. கிளை, இலை, வேர் எங்கும் கனிகள். வெளவாலின் குருட்டுக் கண்களால் கனிகளைக் காணமுடியவில்லை. அதன் சிறு வாயால் எத்தனை கனிகளைச் சுவைக்க முடியும்?” என்பதாக விவரணை நீள்கிறது.

வாழ்வில் காமம் ஒரு பகுதிதான், ஆனால் வாழ்வே காமம் என்பதாக இந்நூல் உணர்த்துவதால் அந்த இரசனைக்கும் இறைந்து கிடக்கும் காமநெடிக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால்தான் வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறது நமக்கு கிழக்குப் பதிப்பகம்.

நான் யோசித்துப் பார்க்கிறேன் ‘ஓரிதழ்ப்பூ’வை ஒரு பெண் எழுதியிருந்தால் இவ்வளவு பேர் இங்கு கூடித்தான் இருப்பார்களா? கவிதை தொகுப்புக்கு ‘முலைகள்’னு தலைப்பு வைத்ததற்காகவே பலரது வாயில் அவலானார் குட்டி ரேவதி. ராஜாத்தி சல்மாவை இன்னும் ஏற்காத சமூகம் இது, இந்த நூலை ஒரு பெண் எழுதியிருந்தால் அவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்பது என் கணிப்பு.

ஆனால் ஒரு ஆண் எழுதும்போது படைப்பைப் படைப்பாளியோடு கலக்காமல் பார்க்க முடிகிறது நம்மால். மகிழ்ச்சி!

இந்நூலை வாசிக்கும் பெண்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக “எல்லாப் பொம்பளயும் சாமிதான” என்ற வார்த்தையைப் புகுத்தி நூலாசிரியர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.

அதேபோல லட்சுமி, சாமிநாதனை மாடு மேய்க்கும் கழியால் அடிப்பது கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை அளிக்கிறது. அந்தச் சம்பவத்தைக் காட்சிப்படுத்தும் விதம் அழகு, அங்கு மட்டுமல்ல இந்நூல் இவ்வளவு எதிர்மறையான விஷயத்திற்குப் பிறகும் பிடித்துப் போனதற்கான காரணம் அவரது விவரணை, பிரமிப்பான கனவுகள் நினைவலைகளாக நம்மைப் பின்தொடர செய்த எழுத்தின் சூட்சுமம்.

இப்படியான நல்ல எழுத்துக்குச் சொந்தமான அய்யனார் விஸ்வநாத்தை இனி வரும் படைப்புகளில் பெண்களைத் தூய்மைவாதியாகக் காட்டச் சொல்லவில்லை. இயல்பிற்கு மாறாகப் புனைய வேண்டாமென்ற வேண்டுகோளோடு அமர்கிறேன்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி