Saturday, June 28, 2014

மனம்தான் வயது | How old are you?

'இந்தப் படம் வந்தா நாம இருவரும் கண்டிப்பாக போகணும்' என்று என் தோழி கட்டளையிட, இந்தப் படம் வருவதற்காக காத்திருந்தோம். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் 'மஞ்சுவாரியார்'. அதற்காக அடித்துப் பிடித்து முதல் நாளோ அல்லது முதல் வாரமோ செல்லவில்லை. எல்லோரும் பார்த்து முடித்த திரையரங்கில் காலியான இருக்கைகளுடன் நாங்கள் இருவர் மட்டுமே பார்த்து ரசித்த படம். பின்ன அலுவலக நேரத்தில் 'கட்' அடித்துவிட்டு போக சாக்குப்போக்கு சொல்லணும்ல?

'How old are you?' கண்டிப்பா நான் உங்க வயதை கேட்கவில்லை. என்னைப் பொறுத்த வரை வயது எதற்கும் ஒரு தடையே இல்லை. அதையே தான் இந்தப் படமும் அழுத்தமாக உணர்த்துகிறது. கனவுலகத்தில் வசிக்கும் பெண்களைத் தரையிறக்குவது திருமணம்தான். பல சமயங்களில் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்றெல்லாம் நானும் நினைத்ததுண்டு. ஆனால் யோசித்துப் பார்த்தால் திருமணம் கனவுகளுக்குத் தடையல்ல மாறாக மட்டம் தட்டும் கணவர்களே அதன் பிரதான காரணம் எனலாம்.

இந்தப் படத்தில் முதல் பகுதியில் கணவராக வரும் குஞ்சாக்கோ போபன் 'ஆல் இந்தியா ரேடியோவில் பணி புரிபவர் கடுப்பாக சொல்லும் வசனம், 'என் நண்பர்களின் மனைவிகளெல்லாம் அரசியல், விளையாட்டு என்று பேசுகிறார்கள். கணவர் செய்யும் நிகழ்ச்சி பற்றியும் சொல்ல அவர்களுக்கு ஏதாவது இருக்கிறது. ஆனால் உனக்குத் தெரிந்ததெல்லாம் காய்கறிகள், சாப்பாடு இதெல்லாம்தான், இதில் அவர்கள் என்னைப் பார்த்து நீ அதிர்ஷ்டசாலி 'happily married' என்கிறார்கள் ஆனால் எனக்கு வாய்த்தது' என்று அலுத்துக் கொள்வார். பிறிதொருநாளில் மனைவியான மஞ்சுவாரியார் கேட்பார் 'வாழ்க்கை 'happily married'ஆக இருக்க வேண்டுமென்று நினைப்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான்' என்று. இதை எத்தனை ஆண்கள் உணர்கிறார்கள்?

தனக்கு என்ன வேண்டும், தனக்கு என்ன பிரச்சனை, தன்னுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்று சொல்லாமல் பலர் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தனக்கான 'ஒரே வாழ்க்கை' அதில் எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை என்று தனக்குத் தெரிந்தவிதத்தில் தலைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை அதே உணர்வுகளும், கனவுகளும் அவனைச் சார்ந்த பெண்ணுக்கும் இருக்குமென்று. பெண்களின் பிரச்சனையே சார்ந்திருப்பது தான். திருமணத்திற்குப் பிறகு தனக்கான கனவுகளும் லட்சியங்களும் என்னவென்பதை மறந்து அல்லது இப்படியான கனவுகளைக் கண்டவள் என்று கூட கணவனிடம் சொல்லாதவள். தன் குடும்பம், என் கணவன், நம் குழந்தை என்று சிறிய வட்டத்திற்குள் தன்னை மறந்து வாழ்ந்துவிட்டு. அவள் மரியாதையை இழக்கும் போதுதான் தன் சுயத்தைப் பற்றியே நினைத்துப் பார்க்கிறவள். தன்னுடைய சக்திகளை திரட்டுவதற்குக் கூட அவளுக்கு ஒரு புல்லுருவி தேவைப்படுகிறது. இந்தப் படத்திலும் இந்த மையப்புள்ளியை கொண்டுதான் முழுக்கதையும். தன்மீது எறியப்படும் கற்களைக் கொண்டு படிகளமைத்துக் கோட்டைக்குள் நுழையும், தன்னம்பிக்கை தரும் கதை இது.

'இங்கிலிஷ் விங்கிலிஷ்' எப்படி ஸ்ரீதேவிக்கு திரையுலகிற்கு ரத்தனக்கம்பளமாக அமைந்ததோ அதே விதமாக மஞ்சுவாரியாருக்கு அதே சாயலில் ஒரு படம் 'How old are you?' மஞ்சுவுக்குரிய துள்ளல், அழகு, மிடுக்கு என்று தொலைந்த எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று கூடுதலாக சாயம் பூசி, முகம் தூக்கி வித்தியாசப்படுத்தியிருப்பது அவர் நிஜ அழகை மறைத்துள்ளது கொஞ்சம் ஏமாற்றமே. இருப்பினும் அவருடைய அபார நடிப்பு அதையெல்லாம் யோசிக்க வைக்காமல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

படத்தில் முதல் பகுதியில் அப்பாவியாக ஒன்றுமே தெரியாதவளாக இருக்கும் நிரூபமா, கணவரும் மகளும் அயர்லார்ந்துக்குத் தன்னைவிட்டு இடம்பெயரும் போது, காயப்பட்டவளாக, தன்னம்பிக்கை இழந்தவளாக, தன்மானம் குறைந்தவளாக, மரியாதை தொலைத்தவளாக, அவமதிப்பில் திளைப்பவளாக இருக்கும்போது தனக்கான சக்தியை மீண்டும் அடையாளம் காட்டி திரட்டித்தரும் தோழி சூசனை பிடித்துக் கொண்டு தொலைந்து போன தனக்கான அடையாளத்தை மீட்டெடுத்து முன்னேறும் போது அதைப் பார்க்கும் நமக்குள்ளும் ஏதோ ஒரு சக்தி பிறக்கிறது. சூசனாக வரும் கனிகா இவளிடம் பேசப் பேச நிரூபமாவான மஞ்சுவின் கண்களில் தெரியும் மாற்றங்கள், உடல்மொழியில் ஏற்படும் கம்பீரமென்று தனது மூச்சுக் காற்றையும் நடிக்கச் செய்துள்ளார் மஞ்சுவாரியார். அப்படி அவரை நடிக்கச் செய்தவர் இத்திரைப்படத்தின் இயக்குனர் ரோஷன் அன்ட்ரியூஸ். இப்படியான திறமையான நடிகைகள் ஏன் திருமணத்திற்குப் பிறகு தங்களை ஒடுக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகும் தன் திறமைகளைத் தொலைத்துவிடாமல் அப்படியே மஞ்சுவாரியார் கிடைத்திருப்பது திருப்தியளிக்கிறது.

சினிமாத்தனமாக சில காட்சிகள் இருந்தாலும் கணவன் - மனைவியின் சம்பாஷனைகள், மகள் ஒரு தாயை தன்னையறியாமல் அவமதிக்கும் விதம், அலுவலகக் காட்சிகள், சமூக வலைத்தளம் ஏற்படுத்தும் மன அழுத்தமென்று பல உண்மை காட்சிகள் நிறைந்துள்ளன.

பேருந்தில் பெயர் தெரியாத, முகம் மட்டுமே பரிட்சயமான, தினம் பார்த்து சினேகித்து, அவரின் உடல்நலக் குறைவைக் கேட்டு, விசாரிக்க வீட்டுக்கே செல்லும் போது அதுவும் யாருமற்ற வயது முதிர்ந்த பெண்மணியை நலம் விசாரிக்கும் காட்சியில் அந்த உடல்நிலையற்ற வயது முதிர்ந்த பெண்மணி மனம் நெகிழும் போது நமக்குள்ளும் அப்படியான உணர்வை விட்டுச் செல்கிறார் நிரூபமா. இத்திரைப்படத்தின் காட்சிகள் நம் மனதிற்குள் நிற்கக் காரணமானது அதன் திரைக்கதையும் வசனமும். 'Too many cooks spoil the broth' என்பார்கள் ஆனால் இந்தப் படத்திற்கு பாபி- சஞ்சய் இருவரும் சேர்ந்து திரைக்கதையை தூக்கியே பிடித்துள்ளனர். இதில் எனக்கு மிகப் பிடித்த வசனம் "தோல்வியை கண்டுப் பயப்படாதவர்தான் வாழ்வின் வெற்றியை நோக்கி நடக்க முடியும்". எத்தனை சத்தியமான வார்த்தைகள் இது? அதே போல இந்தப் படத்தின் ஒளிபதிவாளர் திவாகர், சின்ன இடத்தில் கேமராக்களை வைத்து அடுக்கி சரியான வெளிச்சத்தில் 'கிரீன் ஹவுஸை' மனதை ஈர்க்கக் கூடிய வகையில் அதைப் பற்றி பேசும் முன்பே அந்த சூழலை கவனிக்கச் செய்து கலக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மஞ்சுவுக்கு ஈடுகொடுத்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கணவருக்கேயுரிய அலட்சியப் பார்வையுடன் வலம் வரும் குஞ்சக்கோ போபன் தனக்கு கொடுத்தப் பாத்திரப்படைப்பை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார்.

கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் அடிப்படையில் பல கருத்தாடல்களும், சில பகுதிகளில் எழுந்த புதிய மாற்றங்களுமென்று வரும் செய்திகள் சிலர்க்க வைக்கிறது.

பெண்மணிகள் தனக்கான கனவுகளையும் இலக்குகளையும் நோக்கி நடக்க வயதோ உறவுகளோ தடையில்லை என்பதை உணர்த்தும் படம். பார்த்துவிட்டு நீங்கள் உணர்ந்ததையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி