Monday, May 08, 2017

கடவுளின் கை - சாயிரா பானு

பொங்கி வரும் பாலை பாய்ந்து அனைக்கும் சாயிரா பானுவின் சம்பாஷனையோடு காலையில் நம் வீட்டில் நடக்கும் அதே வகையான பரபரப்புடன் தொடங்குகிறது படம். சாயிரா பேசுவது ஜோஷுவாவிடம். படத்தின் ஆரம்பத்தில் சாயிரா – ஜோ என்ன உறவு என்ற குழப்பம் எழுகிறது. ஜோஷுவா சாயிராவை எந்தக் கட்டத்திலும் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. ஒருவேளை நண்பர்களா அல்லது சகோதர சகோதரியா என்பதற்கான விடையை நேரடியாகத் தராமல் மிக நேர்த்தியாகக் கதை வழியாகவே அவர்களின் உறவை விளக்கியுள்ளார் இப்படத்தின் கதையாசிரியர் ஷான்.

மீஜோ ஜோசஃபின் இசை வழியாகப் படத்தின் முதல் பாதியை கதாபாத்திரத்தின் அறிமுகமாகக் கொண்டு சென்றுள்ளனர். படத்தின் அறிமுகக் காட்சிகளாக வரும் முன் பகுதியை மிக அழகாக இரண்டாம் பகுதியோடு இணைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி சோனி. அதே போலவே அவருடைய கதாபாத்திர தேர்வுக்காகவே, இப்படத்தைப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். காரணம் சாயிரா பானுவாக வரும் மஞ்சு வாரியார் மட்டுமல்ல ஆனி ஜான் தரவடியாக வரும் அமலாவுக்காகவும். பல வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் நல்ல ஒரு கதாபாத்திரமாக மிகப் பொருத்தமாக வக்கீலாகக் கால்பதித்துள்ளார் அமலா. இரண்டு பெண்களும் இப்படத்தைத் தம் முதுகில் சுமக்கின்றனர். படத்திற்கு வலு சேர்த்தது ஜோஷ்வாவாக வரும் ஷேன் நிகம். அலட்டல் இல்லாமல் கல்லூரி மாணவராக, தனக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்து இவரை வளர்தெடுத்த தாயின் வலிமையையும் அன்பையும் புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வலம் வருவதை மிக இயல்பாக உடல்மொழியில் பதிவு செய்துள்ளார். புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற இன்பச் செய்தியை சாயிராவிடம் பகிரும் போது அவரது தலை லேசாகச் சுவற்றில் முட்டும்போது புரிந்திருக்கவில்லை எதற்காக அப்படியான காட்சியென்று, ஆனால் அந்தத் தடங்கலிலிருந்துதான் கதையின் பாதை மாறுவதைப் பின் வரும் காட்சிகள் விளக்குகிறது.

இப்படம் முழுக்கத் தாயின் பரிதவிப்பை வெவ்வேறு வகையில் நிரல்படுத்தியிருந்தாலும் எந்த இடத்திலும் தாயைப் பற்றியோ, அவர் அன்பைப் பற்றியோ, அவர் செய்த தியாகத்தைப் பற்றியோ எந்த ‘க்ளிஷே’வுடனான நாடகத் தன்மையில்லாமல் கதையைப் பதிந்துள்ளனர் ஆண்டனி மற்றும் ஷான். அதற்காகவே அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீதி விசாரணை, வழக்குகளில் மாட்டிக் கொண்டால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தாய்- மகன் கதையாக விரிகிறது படம். பெறாத மகனுக்காகப் போராடும் தாயின் கதை இது. ஆனால் அந்தக் கதாபாத்திரம் ஏன் சாயிரா பானுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் புலப்படவில்லை. தலையில் துணி அணிவது, சமயங்களில் அவர் தொழுவதைக் காட்டியுள்ளனர் மற்றபடி அந்தப் பாத்திரப்படைப்பு ஏன் முஸ்லிம் பெண்ணாக இருக்க வேண்டுமென்று கதாசிரியர் விரும்பினார் என்று தெரியவில்லை. தற்கொலை செய்வது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அதனால்தான் புள்ளிவிரவப்படி இஸ்லாமியர்களின் தற்கொலை அரிது. ஆனால் இப்படத்தில் மகள் தலையில் துணியிடாமல் இருக்கும் மகளைக் கண்டிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் பின்னாளில் ஏதோவொரு காரணத்திற்காக ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்கும்படியாக இல்லை. ஆனால் கதையென்று வரும்போது கதையாசிரியரே கர்த்தா என்பதால் விட்டுவிடலாம்.

மஞ்சு வாரியார் ‘போஸ்ட் உமனாக’ மிக இயல்பாக அவருக்கே உரிய மிடுக்கோடு அக்கதாப்பாத்திரத்தைச் சுமந்துள்ளார். அவர் ஸ்கூட்டீயில் போகும் போது தலையிலிருந்து துணி விலகாமல் இருக்க எப்படி ஒரு முஸ்லிம் பெண் அனாயாசமாகத் தலையைச் சுற்றி முக்காடிடுவாரோ அப்படியே இவரும் இயல்பாகச் செய்வது அழகாக இருந்தது. தமிழ் முஸ்லிம்கள் வணக்கம் சொல்வதே தவறு என்று பட்டிமன்றம் நடத்தும் வேளையில், சாயிரா நன்றி சொல்ல பல இடங்களில் இரு கைக்கூப்பியது இடறியது, ஆனால் மலையாள கலாச்சாரத்தில் அது இயல்பான செயல் என்று தெரிந்து ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

அதே போல அமலாவும் என்னதான் கண்டிப்பான வக்கீலாக இருந்தாலும் ஒரு மகனுக்குத் தாயாக வரும்போது அதற்குரிய உருமாற்றத்தை மெல்லிய முக மொழியில் சொல்லியுள்ளார்.

மஞ்சு, அமலா, ஷேன் இம்மூவரைத் தவிர்த்து வரும் மற்ற கதாபாத்திரங்களும் தனக்கான பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக, பிஜு சோபனம் கையாலாகாத எளிய வக்கீலாகத் தம் பங்கை சரியாகச் செய்துள்ளார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார் ‘யதார்த்த வாழ்க்கையும் சில நேரங்களில் நாடகத் தன்மை பூண்டிருக்குமென்று’ இன்னொரு இடத்தில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஜோஷ்வாவிடம் மற்றொருவரின் அறிவுரையாக வருவது ’வலிந்து திரிந்து சூழலை ஏற்படுத்திக் கொண்டு காட்சியைப் பதியாமல், கிடைக்கும் அரிய காட்சிகளை உள்ளடக்குவதே சிறந்த புகைப்படமாக அமையுமென்று’. இந்த இரு வசனங்களை முன்னிறுத்தித்தான் முழுப்படமும் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைக் கொண்டு நிறைவுபெறும் படம் பல கேள்விகளை நம் முன்னே விட்டுச் செல்கிறது. இறுதி காட்சியில் சாயிரா, மகனுக்காகக் காத்திருக்கும் இன்னொரு தாயைப் பார்க்கச் செல்வது படத்தை முழுமைப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப் காட்’ பற்றிப் பேசப்படுகிறது. ஆண்டவனின் ஆயுதமாக நாம் மாறுவது ஹேண்ட்ஸ் ஆஃப் காட், பிறருடைய பிரச்சனைகளைப் படம் வழியாகப் பேசும் இப்படக்குழுவினரும் ‘ஹேண்ட்ஸ் ஆப் காட்’தானே?

Monday, May 01, 2017

பறந்தெழு - டேக் ஆஃப்

எடிட்டராகக் கத்தரித்துத் தேவையானவற்றையும், சரியானவற்றையையும் மட்டுமே வெட்டி விளையாடியவர் இயக்குநரானால் என்னவாகும் - 'டேக் ஆஃப்' ஆகும் என்று சொல்லும் அளவிற்கு மஹேஷ் நாராயணன் தேர்ந்த இயக்குநராக இப்படத்தின் கலை மற்றும் கதை அம்சங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். பிரியாணி சாப்பிடப் போகிறோம் ஆனால் அதன் சுவை எப்படி இருக்கப் போகிறதோ என்பதைப் போல் உலகறிந்த 2014-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை எப்படிப் படைத்து விருந்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தியுள்ளார்.

திக்ரித்தில், ஈராக்கின் உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட இந்திய செவிலியர்களை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்ட கதைதான் 'டேக் ஆஃப்'. இப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு 'ஏர்லிஃப்ட்' நினைவுக்கு வந்தது. அது பல்லாயிரம் இந்தியர்களை ஈராக்- குவைத் போரின் போது இந்திய ராணுவம் போராடி மீட்ட கதை. இரண்டுமே மீட்கப்படுவதைப் பற்றிய கதையாக இருந்தாலும் அது காப்பாற்றிய அதிகாரியின் பார்வையில் வந்த கதை, இதுவோ மிகப் புத்திசாலித்தனமாகப் பிணைக்கைதியில் ஒருவருடைய கதையை விரிவுபடுத்தி, அவருடைய பின்னணி, அவருடைய கடன் சுமை, அவருடைய குடும்பத்தின் பின்புலமென்று சமீரா என்ற பாத்திரப்படைப்பை சுற்றி நிகழும் காட்சிகளிலிருந்து தொடங்கி அவருடன் நாமும் ஈராக் வரை பயணித்து, சமீராவை நமக்குப் பிரியப்பட்ட பெண்ணாக மாற்றி, அந்தச் சமீராவிற்கு நிகழும் துயரங்களை நம் துயரமாகச் சுமக்க வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றி. திரைக்கதையை மஹேஷுடன் இணைந்து எழுதியிருக்கிறார் பி.வி. ஷாஜி குமார்.
இப்படத்தின் பலமே இயக்குநருடைய கதாபாத்திர தேர்வு எனலாம். சிறிய கதாபாத்திரத்திலிருந்து பிரதான பாத்திரப் படைப்பு வரை நடிப்பென்றே சொல்ல முடியாதபடி அடித்து ஆடி தூள் கிளப்பியிருக்கிறார்கள். சமீராவாக வரும் பார்வதி நம்மோடு ஒட்டிக் கொள்கிறார். அவர் சிரித்தால் நாம் அகம் மகிழ்கிறோம், அவர் அழுதால் நாம் விசனப்படுகிறோம், அவர் கோபம், ஏமாற்றம், எரிச்சல் என்று மாறிக் கொண்டே இருக்கும் அவர் முகபாவம், உடல்மொழி, உடை தேர்வு என்று சின்னச் சின்ன நுணுக்கங்களையும் கவனமாகக் கையாண்ட படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். ஓர் இஸ்லாமியப் பெண் தன் தாய் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்கும், கணவர் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்குமான வித்தியாசத்தைச் சிறிய காட்சியில் போகிற போக்கில் பலமாக நாம் இடறும் அளவிற்குத் தட்டிவிடுகிறார். அந்நியர்கள் வீட்டிற்குள் வந்தால் இயல்பாகத் தலை முக்காடை இட்டுக்கொண்டு வந்து நிற்பது, செவிலியாகப் பலரோடு சேர்ந்து வேலை பார்த்தாலும், ஓர் இஸ்லாமியப் பெண்ணாக அறையிலிருந்து வெளியில் வரும்போது மேலாடையெடுத்து மூடிக் கொண்டு மற்றவரிடம் வந்து அதட்டலாக, பயமின்றித் தன் தேவைகளை வெளிப்படுத்துவது என்று அந்தக் கதாபாத்திரத்தை சுவையுடன் பறிமாறியுள்ளனர். இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தைச் சரியாக அவதானித்தால் மட்டுமே இப்படியான நுணுக்கங்களைக் கையாள முடியும். இதில் படக்குழுவினரின் அர்ப்பணிப்புத் தெரிகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்தான் ஆனால் ஈராகின் மொசூல் இப்படிதான் இருக்குமென்று நம்மை நம்ப வைத்துவிடும் அளவிற்குச் சானு வர்கீஸின் ஒளிப்பதிவு காட்சிப்படுத்தியுள்ளது.

சமீரா - விவாகரத்தான பெண், எட்டு வயது குழந்தைக்குத் தாய், கடன் சுமையுடையவள், செவிலியாக இருப்பவள், பணத் தேவைக்காக ஈராக்கில் வேலைக்கு விண்ணப்பிக்கிறாள். அவள் மீது 'காதல்' என்ற காரணத்திற்காக மட்டும் செவிலியான ஷஹீதும் விண்ணப்பிக்கிறான். ஈராக் பயணத்திற்கு முன்பாகவே காதலை வெளிப்படுத்திக் கரம் பிடிக்கிறான். இரண்டாவது கணவரின் குழந்தையுடன் இரண்டாவதாகத் தாய்மை அடையும்போது தனது மூத்த மகன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான் என்ற உள்ளத் தவிப்பை ஒரு தாயாக, புது மனைவியாக, செவிலியாகச் சமநிலைப்படுத்தி அந்தந்த காட்சிக்கு தகுந்த முகபாவத்தை அழகாக வெளிப்படுத்துகிறார் பார்வதி. ஷஹீதாக வரும் குஞ்ஞாக்கோ போபனும் எங்கும் அலட்டாமல் இயல்பாக நடித்துள்ளார். இஸ்லாமின் பெயரில் செய்யும் அட்டூழியங்களை, 'தீவிரவாதம் இஸ்லாமே அல்ல' என்பதைப் பறைசாற்றும் விதமாக, ஐஎஸ்களிடம் மாட்டிக் கொண்டு அடி வாங்கி, அங்குச் சந்திக்கும் மலையாளியிடம் ஷஹீத் "எனக்குத் தெரிந்த இஸ்லாமில் வன்முறை இல்லை" என்று சொல்லும் காட்சியில் முத்திரைப் பதிக்கிறார் இயக்குநர்.

தாய்- தந்தை பிரிவின் குழப்பத்தையும், புதியவரை தன் தாயுடன் பார்க்கும்போது ஏற்படும் எரிச்சல், யுத்தபூமி ஏற்படுத்திய பயம் எல்லாவற்றையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் குழந்தையாக வரும் இப்ராஹிம். அதே போல் சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கொடுக்கப்பட்ட இடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார் ஆசிஃப் அலி. சொல்லியே ஆக வேண்டிய முக்கியக் கதாப்பாத்திரம் ஃபஹத் ஃபாசில், ஈராக் இந்திய தூதராக, கம்பீரமாக, விவேகத்துடன் செயல்படும் புத்திசாலி அதிகாரியாக, கவுரவ வேடத்தில் சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கலக்கியிருக்கிறார். அவரிடம் சமீரா தன் கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி கெஞ்சுமிடத்தில், அதனை ஓர் அதிகாரியாக எப்படி உள்வாங்கிக் கொள்கிறார் என்பதைத் தனது கண்களாலேயே நமக்கு உணர்த்திவிடும் நடிப்பாற்றல் கொண்டுள்ளார் மனோஜாக வரும் ஃபஹத்.

ஷான் ரகுமான் மற்றும் கோபி சுந்தர் இருவரின் பின்னணி இசையும் பின்னிபெடலெத்து இறுதி காட்சியில் தேசிய கொடியை பார்த்தவுடன் செவிலியர்களுடன் சேர்ந்து நாமும் ஆவலாக ஓடவில்லையென்றாலும் நம் இருக்கைக்கு முனைக்கே வந்து வாய் பிளந்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் அப்படியாகக் காதலின் வலியில் கணவரை பிரிந்த சமீராவின் அழுகையில் ஐஎஸ் ஆட்களும் உருகி ஷஹீத்தை கரம் சேர செய்யும் உணர்ச்சியூட்டும் காட்சியையும் இயல்பாக மிக நுட்பமாக மட்டுமே காட்டியிருப்பதும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்தக் காதலின் மெல்லிய இழைதான் பிணைக்கைதிகள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்ற கதைச்சொல்லலில் ஒளிந்துக் கிடக்கும் சூட்சமம்.

'நாம் எவ்வளவு பாதுக்காப்பான இடத்தில் வாழ்கிறோம்' என்ற உள்ளுணர்வை படம் பார்த்த எல்லோரிடமும் விட்டுச் செல்கிறது 'டேக் ஆஃப்'.

Wednesday, March 08, 2017

பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று
வேலி கட்டுவதில்லை
மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள்
தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை
எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு
வரையறை வகுப்பது அவர் தம் மீதான
நம்பிக்கையின்மையல்ல
கேள்விப்படும் சமூக சங்கடங்கள்
வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள்

என் போன்ற தாய்மார்கள்
பெண் பிள்ளைகளை வளர்க்கும்
பீதியிலிருந்து விடு்படும்
பாதுகாப்பான நாளே
பெண்கள் தினம்
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி