Thursday, August 20, 2015

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'.

எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் வராததால் ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு நண்பர் முரளி அதற்கான சுட்டியை அனுப்பியிருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பணியை மிகச் சிறப்பாக இயல்பாகச் செய்திருப்பதன் பின்னணி இயக்குனர் தாமிரா. படம் முழுக்கத் தெளிக்கப்பட்ட வசனங்களும், கலைகளும், ஒப்பனைகளும் அசல் இஸ்லாமிய குடும்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கவே, இது எப்படி சாத்தியம்? தாமிரா என்பவரால் எப்படிச் சிறிய தவறும் நிகழாது முழுநீளப்படத்தை இஸ்லாமை உள்வாங்கி செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை இன்று அவரைப் பற்றிப் படிக்கும் போது கிடைத்தது. தாமிரா ஒர் இஸ்லாமியர் என்று அறிந்ததும், அந்த இயல்பான விஷயத்தில் எந்த ஆச்சர்யமுமில்லை என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. வசனங்கள் எல்லாமே இயக்குனரால் பார்க்கப்பட்ட கேட்கப்பட்ட அல்லது கேட்க விரும்பியவைகளின் பிரதிபலிப்பாகவே வந்ததால் அதன் உஷ்ணத்தை உணர முடிகிறது. பணத்தைக் குறித்துச் சொல்லும் போது 'துரு பிடிக்காதுனு பணம் சேர்க்கிறான், பணம் சேர்ந்ததும் அவன் மனசு துரு பிடிச்சுப்போகுது', 'பணம் சிலருக்கு அவசியம் சிலருக்கு அலட்சியம்', 'பணம் இருக்கிறவங்க மனசு இரும்புப் பூட்டால பூட்டியிருக்கு' போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

அதே போல இயக்குனரின் பாத்திரத் தேர்வு மிக அற்புதம். கவிஞர் சல்மாவிற்குப் பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக 'மெஹர்' பேசப்பட்டிருக்காது. தாயாக சரண்யா போன்ற சிறந்த நடிகை நடித்திருந்தாலும் கூடத் தமிழ் முஸ்லிம்களின் வட்டார வழக்கை மிகச் சரியான உச்சரிப்பில், இயல்பாகப் பேசுவதற்கு ஒரு தேர்ந்த நடிகை தேவையில்லையே, மாறாக அந்த இடத்தில் மகள் யாஸ்மீனின் சூழலில் வளர்ந்த சல்மா போன்றவரே சரியென்று அறிந்து, நடிக்க வைத்திருக்கிறார். அவர் கணிப்பை சல்மாவும் உறுதி செய்யும் வகையில் ஒரு கவலை ரேகையோடு தாயின் சாயலில் மிக அமைதியாக பாத்திரப்படைப்பை உள்வாங்கி நிகழ்த்தியுள்ளார். ’ஒது’ செய்யும் முறை, தலையில் சீலை நழுவ விடாமல் தலையை வைத்துக் கொள்ளும் முறை, அதனை ஒதுக்கிவிடும் முறை என்று அமர்க்களப்படுத்தியவர், தொழுகையின்போது தலைமுடி தெரியாமல் முந்தானையைச் சுற்றிக்கட்டாமல் விட்டுவிட்டார். சல்மாவின் மகனாக வரும் ரஷீத் எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மிக அற்புதமாக உலா வந்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது இங்கு பொருந்தாமல் போய்விடும். அவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். கணுக்கால் தெரிய கட்டிய கைலி, தவறு செய்துவிட்டதால் தாயை எதிர்கொள்ள முடியாத திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி, 'அடுத்தவர் பொருளை அபகரிப்பவன் மறுமையில் கைகளை இழப்பான். என் அக்காவின் வாழ்வுக்காக என் கைகளை இழந்தாலும் பரவாயில்லை' என்று கண்களில் காட்டிய உறுதி, அவருடைய தவிப்பு, கலக்கம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா.

கதை சொல்லி கதையை முடிவில் ஆரம்பித்து, பின்னோக்கி சென்று கதையை விவரித்து அதில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் ஒற்றுமையாக தாய்- பிள்ளைகளாக வாழ்ந்த காலத்தை நினைவுப்படுத்தி, 'இல்லாதவன் புலம்பல் எல்லாமே ஒருவிதத்துல கம்பூனிசம்தான்' என்று எள்ளலாக முதலாளி- தொழிலாளி தர்மத்தைத் தொட்டு, அமைதியான மார்க்கத்தை அச்சுறுத்தல் மார்க்கமாகப் பார்ப்பவர்களுக்கு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது ஆனால் சரியான முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாதவரை இப்படியான நெறிகள் வெறும் மதக்கோட்பாடுகளாக ஏடுகளில் மட்டுமே இருக்கும் என்பதை மிக நாசூக்காகத் தெளிவுப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு. இச்சித்திரம் மார்க்கத்தை பின்பற்றாமல் ஊர் தப்பாகப் பேசுமென்று ரொக்கமும் நகையும் கேட்பவர்களைப் பார்த்து நகைக்கும்.

பெண்ணாகப் பிறந்தவளுக்கு பலநூறு கனவுகளும் ஆசைகளும் இருக்கும், ஆனால் யாஸ்மீன் போன்ற பெண்களுக்கு கனவானது, அவர்கள் சுதந்திரம் என்று விரும்புவது "பட்டபகலுல தெருவுல இறங்கி நடக்கணும், இந்த சந்தத்தாண்டி இருக்கிற உலகத்த நான் பார்க்கணும், மனசு குளிரப் பாட்டுக் கேட்கணும், சத்தமா பாடிப் பார்க்கணும்" என்பது மட்டுமே. ஆனால் அப்படியான ஆசைகள் நிறைவேற அவர்கள் வழியாக நினைப்பது திருமணம் மட்டும்தான். பூப்படைந்த பெண்களை வீட்டிலேயே வைத்து, திருமணம் நடக்கும் வரை நாலு சுவற்றைத் தவிர வேறு எதையுமே பார்க்க அனுமதிக்காமல், யாருடனும் பேச வழி வகுக்காமல், உலக அறிவும் வாசமும் தெரியாமல் முடங்கிப் போக வைக்கும் அவலம் இன்னும் நடந்தேறிக் கொண்டேயுள்ளது. அவர்களை திருமணத்திற்குத் தகுதிப் பெற செய்வது கைத்திருத்தமான சமையலும், அழகும், பிரதானமாகப் பணமும்தான். இதற்குக் காரணம் மதமில்லை, இஸ்லாமிய மார்க்கமில்லை எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்பதில் ஐயமில்லை.

இறுதிக்காட்சியில் 'இஸ்லாத்தைப் பின்பற்றி ஈமானோடு வாழ அடுத்த தலைமுறை தயாராக இருக்கு' என்பது பெண் விடுதலைக்காகவும் - பெண்களுக்குத் திருமணம் மட்டுமே விடிவு என்றில்லாமல் - அவளுக்குத் தேவையான கல்வி, உலக அறிவு, விசால சிந்தனை எல்லாமும் கிடைக்கப் பெறவும் இந்தத் தலைமுறையினரே உதவிடவும் வழிவகை செய்யத் தலைப்படுமா?
Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி