Wednesday, October 12, 2016

Pink & Parched - இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்


இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது.

‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக மிகத் தெளிவாகத் தமது பாத்திரப்படைப்புக்கான முகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தில் ஒரு கதாநாயகி கதாநாயகன் என்றில்லை. ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் முதிர்ந்த வழக்கறிஞராகக் கலக்கியிருக்கிறார். அவரது நடையுடை பாவனை அத்துனையும் முதிர்ச்சியையும், இயலாமையும் சேர்த்து அமைத்த பிம்பமாக வருகிறார். மினலாக வரும் தாப்ஸி கதாபாத்திரத்திற்கேற்ப எந்த அதிர்வுமில்லாமல் தொலைந்து போனவராக, தனது கையாலாகத்தனத்தை உடல்மொழியில் சொல்லியிருப்பது இயக்குநர் கேட்டுக் கொண்டபடியா அல்லது இதற்கு மேல் அந்தக் கதாபாத்திரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாதா என்பது விளங்கவில்லை. 'தைரியமான பெண்மணி' என்று ஃபலக் மினலை குறிப்பிட்டாலும், அந்தத் தைரியத்தை வெளிப்படுத்தாமல் அதிர்ந்தும் பேசாமல் அடக்கப்பட்ட சமுதாயத்தால் நசுக்கப்பட்டவராய் எல்லாக் கட்டத்திலும் காட்சி தருகிறார் தாப்ஸி.

மினலாக வரும் தாப்ஸியைவிட, ஃப்லக்காக வரும் கிர்த்திக் குல்ஹரி மிக நேர்த்தியாக நடித்துள்ளார். குறைந்த வசனங்கள் என்றாலும் சரியான தருணத்தில் முறையாக, தேவைக்கேற்பப் பொருந்தி நடித்துள்ளார். அப்படியே ஆண்ட்ரியாவும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படத்தில் இம்மூன்று கதாபாத்திரங்களும் பிரதானம் என்பதை வலியுறுத்த அவர்களின் பெயருக்குப் பிறகே அமிதாப்பின் பெயர் ‘டைட்டில் கார்டில்’ வருகிறது. நம்மூர் சூப்பர் ஸ்டார்கள் இப்படியான விஷயத்திற்கெல்லாம் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். பாலிவுட்டிலிருந்து இப்படியான நல்ல விஷயங்களை எப்போது கற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

நம் நாட்டில் சக்தி வாய்ந்த இடத்தில் அல்லது பண பலத்துடன் கூடியவர்கள் பெண்களை எப்படி மடக்குகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பிடிக்காத பெண்ணை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு எளிதாக அவள் வேலையை இழக்க வைக்கிறார்கள் என்று படத்தில் காட்சிகளாகப் பார்க்கும் போதே மனம் பதறுகிறது.

ஆண்களுடன் ஒரு பெண் சகஜமாகக் கொஞ்சம் சிரித்துப் பேசினால், அவனுடன் வெளியில் சென்றால் அல்லது பார்ட்டிக்குப் போனால் அல்லது குடித்தால் அல்லது இரவு உணவகத்திற்குச் சென்றால் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் இச்சமூகம் பார்க்கிறது என்பதையும் படித்த பண்பான ஆண்களும் கூட இப்படியான கறுப்பு எண்ணங்களுடன் இருப்பதையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இயக்குனர்.

‘பிங்க்’கில் நகரத்தில், படித்த பெண்களின் குரலாக வழக்கறிஞர் இருந்து பேசுகிறார் ஆனால் ‘பார்ச்ட்’ படத்தில் வறண்ட பூமியில் வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான தேவைகளை, விருப்பங்களை அவர்களே பேசுகிறார்கள். சிக்கலின் தீர்வுகளைத் தேடுகிறார்கள், தமக்கான சந்தோஷத்திற்காகப் போராடுகிறார்கள் இறுதியில் விடுதலையும் பெறுவதாக முடிகிறது படம்.

‘பார்ச்ட்’ படத்தில் வரும் பெண்கள் ஏனோ எனக்கு இஸ்லாமியப் பெண்களையே நினைவுபடுத்தினார்கள். அதற்குக் காரணம் படத்தின் முதல் காட்சியாகவும் இருக்கலாம். இறுக்கமான தலை முக்காட்டை ஒதுக்கி தலையைப் பேருந்தின் ஜன்னலில் நீட்டி சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறார்கள் லஜ்ஜுவாக வரும் ராதிகா ஆப்தேவும் ராணியாக வரும் தனிஷ்தா சாட்டர்ஜியும். அதுமட்டுமின்றிப் பொருள் கொடுத்து பெண் எடுப்பது இஸ்லாமியர்களின் முறையென்பதாலும் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். பெண்ணை ஆட்டை விலை பேசுவதுபோல் மிகச் சரியாகவே காட்டியுள்ளனர். செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் வலியும் வலிமையும் நிறைந்து நிற்கிறது. இதில் மதிக்கப்படாத பெண்களின் உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசியுள்ளார் இயக்குனர் லீனா யாதவ். ‘பார்ச்ட்’, படத்தைத் திரையில் பார்ப்பது போலில்லை புதியதொரு உலகத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததுபோல் மனதிற்கு மிக நெருக்கமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது. யாருமே இப்படத்தில் நடிக்கவில்லை மாறாகக் கதைமாந்தர்களாக மாறியுள்ளனர். லஜ்ஜு, ராணி, பிஜ்லியுடன் நாமும் தோழமையுடன் சுற்றி திரிந்து வரும் வகையில் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் கார்பென்டர்.


இரு படங்களின் முடிவுகளும் நமக்குத் திருப்தியையும் நியாயமான தீர்ப்பையும் தந்தாலும் நிஜ வாழ்க்கையில் பொசுக்கப்படும் உண்மைகள் சுடவே செய்கின்றன.

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி